காவிரி மீண்டும் சுற்றுக்கு வந்திருக்கிறது. எதை எப்போது கிளப்பிவிட்டு திசை திருப்பி தம்மை மறைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் வியாதிகளுக்கும் முனைவர் பட்டம் தந்துவிடலாம். கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு குருதி அழுத்தத்தை எகிரவைத்த கணக்குகள் பேரங்கள் முடிந்து ஒரு ஓய்வு தேவைப்பட்டது. தமிழகத்தில் வரிசையாக கட்சிமாறிக்கொண்டிருந்த பலவீனத்திலிருந்து மீண்டு அதிமுக கூட்டங்களின் மூலம் பலம் காட்டிக்கொண்டிருந்ததை மறைத்து போக்குக்காட்ட கருணாநிதிக்கு மக்களை பேசவைக்க ஒரு பிரச்சனை தேவைப்பட்டது. அவ்வளவு தான் இவர் வழக்கம்போல் கடிதம் எழுத, அவர் கூட்டம் கூட்டி தண்ணீர் இல்லை என்று அறிவிக்க, சுபம். மக்களுக்கு துரோகம் செய்வதில் விஞ்சி நிற்பது நீயா நானா என்று கருணாவிற்கும் ஜெயாவிற்கும் இப்போது அறிக்கைப்போர். மக்களுக்கோ அக்கப்போர்.
1800களின் பிற்பகுதியிலிருந்தே காவிரியின் தண்ணீரை பகிர்ந்துகொள்வதில் தொடங்கிய சிக்கல் இன்னும் நீடிக்கிறது. அன்டை நாடுகளுடனான ஆற்று நீர் ஒப்பந்தங்களே சிக்கலின்றி செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது நாட்டிற்குள் ஓடும் ஆற்று நீரை பகிர்வதில் அப்படி என்ன தீர்க்கமுடியாத சிக்கல்? கன்னடப் பகுதியில் தொடங்கி தமிழகப்பகுதியில் கடலில் கலக்கும் இந்த ஆற்று நீருக்கு இரு மாநிலங்களும் முழு உரிமை கோருவதால் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் கன்னடத்தில் காவிரியின் தலைப்பகுதி அமைந்திருப்பதால் தனக்கு மிஞ்சியதுதான் தமிழகத்திற்கு என கன்னடம் அடாவடியாக நடந்துகொள்வது சிக்கலை தீவிரப்படுத்துகிறது.
1892, 1924 ஆண்டுகளில் ஆற்று நீரைப் பகிர்வதில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டிருந்தும் தீர்க்கப்படாமல் காவிரிப்பிரச்சனை தொடர்ந்துகொண்டிருப்பதில் முக்கியப்பங்கு காங்கிரஸுக்கு உண்டு. தேசியக் கட்சியான காங்கிரஸ் மாநில ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் கன்னடத்திலும் எதிரெதிரான நிலைப்பாட்டைக் கொண்டு பிரச்சனையை இழுத்தடித்து வளர்த்தது. மொழிவாரி மாநில பிரிவினைக்குப் பிறகு இரண்டு மாநிலங்களுமே ஒப்பந்தத்தை மதிக்காமல் தங்கள் மாநில பாசனப்பரப்பை அதிகரித்துக்கொண்டே சென்றன. 1924 ஒப்பந்தத்தில் 50 ஆண்டுகளுக்குப்பிறகு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட மதிப்பீட்டைவிட அதிகமாக கிடைக்கும் தண்ணீரை எந்த விகிதத்தில் பகிர்ந்துகொள்வது என்பதை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும் எனும் விதியும் இடம் பெற்றிருந்தது. ஆனால் 1965க்குப் பிறகு 90 விழுக்காட்டுக்கும் அதிகமான நீர் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் மாறுபரிசீலனை எனும் பேச்சுக்கே இடமின்றிப் போனது. நீர் பற்றாக்குறை பெரிதாக உருவெடுத்ததும் இரு மாநிலங்களும் ஒவ்வொரு திட்டத்திற்கும் எதிரெதிரான நிலைப்பாட்டைக் கொள்ள ஆரம்பித்தன.
இந்தச் சிக்கலைத்தீர்ப்பதற்கென்று 1990ல் காவிரி நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது. அது இடைக்கால தீர்ப்பாக ஆண்டுக்கு 205 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தும், கன்னடம் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் வெளியேறும் நீரை கணக்கிட்டு தீர்ப்பின்படி நீர் வழங்கிவிட்டதாக ஏய்த்துவந்தது. இந்த நிலையில் தான் நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு 2007ல் இறுதித்தீர்ப்பு வந்தது. இதில் கன்னடத்தின் அடாவடிக்கு சம்மட்டி அடி கொடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் கொடுக்கவேண்டிய நீரின் அளவைக்குறிப்பிட்டு மொத்தமாக அளவிடுவதை மறுத்திருந்தது. ஆனாலும் வழக்கம் போலவே ஒப்பந்தங்களையும் தீர்ப்பையும் புறந்தள்ளிவிட்டு அந்தந்த நேரத்து ஓட்டு அரசியல் நிலமைகளுக்கு ஏற்ப செயல்பட்டுக்கொண்டிருப்பதால் சிக்கல் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது காவிரி நீர்ப்பிரச்சனை முன்னணிக்கு வந்திருந்த ஒரு நிலையில் மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதமிருந்தார். இரண்டு முறையாக ஜெயலலிதா ஆட்சியிலிருந்த பத்தாண்டுகளில் ஓரிரு ஆண்டுகளைத்தவிர ஏனைய ஆண்டுகளில் இடைக்காலத்தீர்ப்பான 205 டிஎம்சி நீருக்கும் குறைவாக தண்ணீர் வந்திருந்தும் அதற்காக கன்னடத்தை நிர்ப்பந்திக்கவோ நீரைப் பெறவோ முயலாத ஜெயலலிதா, அதே பிரச்சனைக்கு இன்று கருணாநிதியை குற்றம் சாட்டுகிறார். மத்திய அரசுக்கு உண்ணாவிரதமிருந்தவர் இன்று மறந்தும் கூட மத்திய அரசை கைநீட்ட மறுக்கிறார், ஏன்?
இன்று தான் பிறப்பதற்கு முன்பிருந்தே காவிரி சிக்கலுக்காக தான் செய்தவற்றைப் பட்டியலிடும் கருணாநிதி, புள்ளம்பாடி கால்வாய்த்திட்டம் உள்ளிட்ட பாசனத் திட்டங்களுக்கு உபரி நீரைத்தான் பயன்படுத்துவோம், அதிக நீர் கோரமாட்டோம் என்று மைய அரசின் திட்டக்கமிசனிடம் உறுதியளித்ததை குறிப்பிட மறந்ததேன்? ஜெயலலிதாவின் அறிக்கைகளுக்கு பதில் சொல்ல செலுத்தும் கவனத்தை இறுதித்தீர்ப்பை அமல்படுத்த கன்னடத்தை வற்புறுத்தவைக்க மைய அரசிடம் முயற்சியெடுக்காததேன்? இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை விடுத்துக்கொள்கிறார்களேயென்றி, இதில் மைய அரசுக்குண்டான பொருப்பை செயல்படுத்த மறந்தும் கோரவில்லை. காரணம், எதிர்வரும் தேர்தலில் இருவருமே காங்கிரஸின் தயவை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இதுதான் இருவருக்கும் முக்கியமானதேயன்றி காவிரி நீரோ விவசாயிகளோ அல்ல.
காவிரியின் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யமுடியாமல் பாதிக்கப்படும் பரப்பைவிட ஏரி குளங்கள் கால்வாய்களை தூர்வாரி பராமரிக்காததால் வெள்ளக்காலங்களில் நீரில் மூழ்கி அழுகும் பயிர்களின் பரப்பு அதிகம். இதற்கு யாரைக் குறை சொல்வது? விவசாயிகளின் இரட்சகர்களைப்போல் அறிக்கைவிடும் இருவரும் தத்தமது ஆட்சிக்காலங்களில் விவசாயிகளை ஊடறுக்கும் தனியார்மய தாரளமய கொள்கைகளை தலையிலேற்று செயல்படுத்தியவர்கள்தானே, செயல்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தானே. விவசாயிகள் மீது இப்போதென்ன அக்கரை? இவர்களின் லாவணிக் கச்சேரியை ரசித்துக்கொண்டிருப்பது தமிழர்களின் பிறப்புரிமையா என்ன?
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் பிரச்சனைகளை பயன்படுத்திக்கொள்வார்களேயன்றி ஒருபோதும் அதை தீர்ப்பதற்கு முனையமாட்டார்கள். அதற்கு விவசாயிகள் ஒன்றிணைய வேண்டும். மாநிலங்களுக்கு பிரிந்து போகும் அதிகாரத்துடன் கூடிய சுய நிர்ணய உரிமையுள்ள கூட்டிணைவு வேண்டும். அப்போதுதான் தீர்வை நோக்கிய திசையில் நகரமுடியும்.
// மாநிலங்களுக்கு பிரிந்து போகும் அதிகாரத்துடன் கூடிய சுய நிர்ணய உரிமையுள்ள கூட்டிணைவு வேண்டும். அப்போதுதான் தீர்வை நோக்கிய திசையில் நகரமுடியும் //
மெல்ல மெல்ல தமிழகம் இந்த முடிவை நோக்கித்தான் தள்ளப்படுகிறது.
அவசியமான ஒரு படைப்பு. ஏறக்குறைய இதே தொனியில் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட கட்டுரையினை பார்க்கவும். நன்றி.
http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/10/blog-post_29.html
—
இன்றுதான் நீர் உருப்படியான கட்டுரை எழுதி இருக்குறீர்கள் நன்றி.
எனக்கென்னவோ கர்னாடகா தண்ணீரைத் திறந்து விட முடிவெடுத்தாலும் கருணாநிதி வேண்டாம் என்றே கெஞ்சுவார் போல தோன்றுகிறது. மணல் கொள்ளை பாதிக்கப்படலாம் அல்லவா?மேலும் விவசாய புறக்கணிப்பு மூலம் பேரன்களின் ரியல் எஸ்டேட் வியாபாரமும் தங்கு தடையின்றி
நடைபெறும். டெல்லி ஓட்டுப்பொறுக்கிகளுக்கு பாகிஸ்தான்,காஷ்மீர் பிரச்சனை எப்போதும் தேவைப்படுவதுபோல தமிழ்நாட்டு ஓட்டுப்பொறுக்கிகளுக்கு காவிரிப்பிரச்சனை தேவை.
தீர்வு நீங்கள் கூறிய சுய நிர்ணய உரிமையில்தான் கிடைக்கும்.ஆனால் இதைப்பார்த்து சில தேசபக்தி இந்தியத்தமிழர்கள்(??) சாமியாடக்கூடும்.
joining rivers in india is the only solution for all this water crisis prevailing in India ; regarding with this matter I wrote a essay many years back. It is in Tamil and published by Thamizhaga ILatchiyak kudumbangkal ; I will post it in my blog as early as possible for your perusal.At that time I will inform to you my friend. vanakkam. thank you. kavignarThanigai. http://www.marubadiyumpookkum.wordpress.com.www.dawnpages.wordpress.com
ஒபாமா இந்தியா வருகை ! வரவேற்க சொல்கிறார் வைகோ !!
http://sivappumalli.wordpress.com/2010/11/06/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87/