ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா?

அடுத்தடுத்து கரையில் மோதும் அலைகளைப்போல், ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மனதில் தைத்து உறைந்து கிடக்கும் கோபத்தை உசுப்பிவிடும் தகுதியை ஊழல்கள் என்றோ இழந்துவிட்டன. காரணம், கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளுமே தமக்குள் ஊழல் வரலாறுகளைக் கொண்டிருக்கின்றன. ஊழலுக்காக கட்சியோ, கட்சிக்காரர்களோ தண்டிக்கப்படுவதில்லை. மட்டுமல்லாது உள்ளுறையாக மக்களே ஊழல்மயப்படுத்தப்பட்டுவிட்டனர். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று சந்தர்ப்பவாதமாக ஓட்டுக்குப் பணம் தொடங்கி, சுயநலமாக, காரியவாதமாக தமக்கு என்ன லாபம்? எனும் கேள்வியில் தொங்கிக் கொண்டு வாழும்படி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஊழலே சர்வரோக நிவாரணியாகிவிட்ட அரசியல்வியாதிகளை யாரும் தண்டித்துவிட முடியாது எனும் இயலாமையினால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டார்கள். இப்போதைய பரபரப்பு சலசலப்பெல்லாம் அடுத்து யார்? எவ்வளவு தொகை? என்பனபோனற ஆர்வங்களின் விளைவுகளே.

மராட்டிய கார்கில் வீரர்களுக்கான குடியிருப்பு ஊழல், இராணுவ நிலபேர ஊழல், அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், கன்னட நிலம் வாங்கிய ஊழல்….. என்று தொடராக வந்துகொண்டிருக்கிறது. எந்த அரசாக இருந்தாலும் அவைகள் மக்கள் நலன்களுக்காக செயல்படப்போவ‌தில்லை என்றாலும், இந்த ஊழல் பணங்கள் முறையாக அரசுக்கு கிடைத்திருந்தால், குறைந்தபட்சம் ஓட்டுப் பொறுக்குவதற்காகவேனும் சில இலவசத் திட்டங்களேனும் வந்திருக்காதா? வேறு வழியின்றி மாட்டிக் கொண்டவை மட்டும்தான் இவை. கருப்பு நிறத்தில் சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்பட்டிருக்கும் பணம் கூட கடந்த ஆண்டு ஒரு செய்தியாய் வந்து போனது. எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்ல இவை என்ன வெள்ளத்தில் அடித்துவரப்படும் ஊதிப்போன பன்றிப் பிணங்களா? நாம் உழைத்த, நமக்காக பயன்படத்தக்க பணமல்லவா? முதுகில் வலிக்கும்வரை காத்திருக்க வேண்டுமா?

மத்திய அமைச்சர் பதவி விலகி விட்டார், மராட்டிய முதல்வர் பதவி விலகி விட்டார், கன்னட முதல்வர் பதவி விலகப் போகிறார் என்றவாறு வரும் பதவி விலகல் நாடகங்கள் ஊழல் செய்ததற்கான தண்டனையா? அல்லது தவறிழைத்துவிட்டோம் எனும் தார்மீகங்களின் உந்துதலா? நிச்சயம் இல்லை. செய்தியறிந்து கொண்ட மக்களை ஆற்றுப்படுத்தச் செய்யும் வினையாடல்கள். நாளை மக்கள் மறந்ததும் வேறு பதவிகளில் அமர்ந்து கொண்டு தாம் செய்ததை கூடுதல் கவனத்துடன் தொடர்வார்கள்.

பதினோரு நாட்களாக நாடாளுமன்றம் அமளிகளால் செயல்படாமல் முடங்கிவிட்டது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்தே தீருவது என விடாப்பிடியாக நிற்கின்றன. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளாக நாளிதழ்களால் விளம்பப்படும் இது என்ன விதமான பயனைத் தரும்? இன்னும் சில நாட்கள் நாடாளுமன்றம் கூச்சலைச் சந்தித்தால், காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம் அல்லது குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படலாம். அடுத்து நாடாளுமன்றம் தொடங்கும் போது வேறு விதமான பிரச்சனைகள், வேறு விதமான சவடால்கள், அதோடு மறந்துவிடும். நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்தால் ஊழல் செய்த பணம் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுமா? திருடர்கள் ஒன்று சேர்ந்தால் திருட்டுப் பொருட்கள் மீட்கப்படுமா? இந்த ஆட்சிக்காலத்தை மட்டும் விசாரிக்கலாம் என்கின்றன எதிர்க்கட்சிகளின் கூட்டு. பழைய ஆட்சிக்காலத்திலிருந்து பார்க்கலாமா? என்கிறது ஆளும்கட்சிக்கூட்டு. இந்த‌ பல்லவி எதிர்ப்பல்லவியையா ஊழலுக்கான எதிர்வினையாக மெய்மறந்து கேட்டுக்கொண்டிருப்பது?

நாடாளுமன்றம் முறையாக நடந்தால் எதையாவது செய்துவிடமுடியுமா? அது ஒரு அரட்டை மன்றம் என்பதைத்தவிர என்ன நடந்திருக்கிறது இதுவரை? என்ன அதிகாரம் இருக்கிறது அந்த பன்றித் தொழுவத்திற்கு? நாட்டை நடத்திச் செல்வதற்கும் இந்த தொழுவத்தின் அரட்டைகளுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? அரசு என்ன செய்ய வேண்டும்? அதை எப்படிச் செய்ய வேண்டும்? எதை நோக்கிச் செல்ல வேண்டும்? எந்த திசையில் செல்லவேண்டும்? என்பன போன்ற அனைத்தையும் தீர்மானிப்பது உலக வர்த்தகக் கழகம், பன்னாட்டு நிதியம் ஊடாக பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகளல்லவா? ஊழல்கள் என்பதென்ன? இந்த முதலாளிகளுக்கு இயற்கை வளங்களையும், சலுகைகளையும் அள்ளிக் கொடுப்பதனால் வீசப்படும் எலும்புத்துண்டுகளல்லவா ஊழல்கள். எலும்புத்துண்டுகளை கவ்விக்கொண்டவர்கள் அதை வீசியவர்களுக்கெதிராய் நடவடிக்கை எடுப்பார்களா? வாலாட்டுவார்களா?

எல்லா மாற்றுகளிலும் இந்த அயோக்கியத்தனங்களையே கலையாக நேர்த்தியாகச் செய்யும் அதிர்ச்சியைக் கண்டு கண்டு மக்களிடம் படர்ந்த‌ நொதித்துப்போன அலட்சியங்களையே தம் செயலுக்கான அங்கீகாரமாய் மடைமாற்றுகிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கிகள். தேர்தல் நேரங்களில் ஓட்டுக்கு பணமாய், ஆட்சிக் காலங்களில் இலவசத்திட்டங்களாய் மக்களை பின்னோக்கிய பரிணாமத்தில் தள்ளிக்கொண்டு சென்ற காரணத்தினால்தான் மக்கள் இவைகளை செய்திகளாய், பொழுதுபோக்கு அறிதல்களாய் கடந்து போகிறார்கள். அதுதான் அவர்களுக்கும் தேவையாய் இருக்கிறது.

இந்த ஊழல்களின் பணத்தை பறிமுதல் செய்து மக்கள் பணிக்காக பயன்படுத்த வேண்டும் என மக்களால் அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க முடியாதா? இந்த ஊழல்வாதிகளையும், அதற்கு காரணமானவர்களையும், இதன் மூலம் பலனடைந்தவர்களையும் இப்போதே விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்ய முடியாதா?

தண்ணீர் வரவில்லை என்று காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்ய முடிகிறபோது, இலவசங்கள் முறையாக கிடைக்கவில்லை என்று நகராட்சி அலுவலகங்களை முற்றுகையிட முடிகிறபோது, விலைவாசி உயர்வினை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்ய முடிகிறபோது, ஊதிய உயர்வு வேண்டும் எனக்கோரி போராட முடிகிறபோது, இதுபோன்ற அனைத்திற்கும் ஒட்டுமொத்தக் காரணமாய் இருக்கும், ஊழலை விதை போட்டு வளர்க்கும் தனியர்மயம், தாராளமயம், உலகமயத்தை எதிர்த்து போராடமுடியாதா? முடியும். அரசியலை அதன் மெய்யான பொருளில் நாம் புரிந்துகொள்ளும்போது, நம் துன்பங்களும் துயரங்களும் இங்கிருந்தே பிறப்பெடுக்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் போது, அனைத்து மாய்மாலங்களையும் கடந்து பாட்டாளிகளாய் நாம் களத்தில் நிற்கும் போது நம்மால் நிச்சயம் முடியும்.

 

மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌

6 thoughts on “ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா?

 1. we are like minded personalities. With the same sub. and content I have published a post at:marubadiyumpookkum.wordpress.com title: Indian , for your consideration.thank you.vanakkam.

 2. எனக்கு தெரிந்தவரை மக்களும் மனதளவில் ஊழலை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்றே நினைக்கிறேன். நேர்மை என்பது தேவையற்ற ஒன்றாக சமூகம் கருதத்தொடங்கி விட்டது. ஒரு நியாயமான கோபம் எழுவதற்கு பதில் சிறு அங்கலாய்ப்புடன் பொதுமக்கள் முடித்துக்கொள்கிறார்கள் அல்லது ஊடகங்களால் மறக்கடிக்கப்படுகிறார்கள். இந்த மகாத்தூ..மா காந்தி தேசத்தில் புதிய ஜனநாயகப்புரட்சி என்பதெல்லாம் பகல் கனவுதான். கோவணத்தை உருவிவிட்டு முதுகில் கத்தியை சொருகினாலும் ராகுல் காந்தியை பார்க்க முட்டிமோதி கையசைக்கும் மாக்கள் நிறைந்த நாடு இது.
  எனக்கு முன்னால் இருப்பது இரண்டு வழிகள்.
  ஒன்று எதிர்த்து நின்று இன்றே இறப்பது.
  இரண்டு, ஒதுங்கி நின்று நாளை இறப்பது. அவ்வளவுதான்.

 3. முதல் பரவில் இருக்கும் வேகம் கடைசி பாராவில் இல்லையே.நாம் களத்தில் நிற்கும்போது நம்மால் முடியும் என்று முடியும் பாராவில் தெளிவு இல்லையே.உறுதி இல்லையே.ஊழலை எதித்து போராட தெருவில் இறங்குங்கள்,என்றோ,இந்த இடங்களில் மறியல் செய்யுங்கள் என்றோ சொல்லவில்லையே.மேலோட்டமாக இருந்தால் எப்படி நடைமுறைக்கு வரும்.ஊழல்வாதிகளுக்கு அமைப்பு உள்ளது.மக்களுக்கு அமைப்பு இல்லை.கோர்ட் இருக்கிறது.சுப்பிரமணி யசாமி போன்ற ஆட்கள் வழக்கு போடுகிறார்கள்.மக்கள் வேலைக்கு போகிறார்கள்.இதுதானே நடக்கிறது.????தீர்வு எங்கே?அமைப்பு எங்கே?எப்படி போராடுவது திட்டம் எங்கே?

 4. நண்பர் சுகுமார்,

  முதலில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு தேவை. விழிப்புண‌ர்வு என்றால் ஊழல் தீங்கானது என தெரிந்துவைத்திருப்பது மட்டுமன்று, அதற்கு மேற்பட்டு ஊழலின் ஊற்றுக்கண் எது என்பதையும், நடப்பு அமைப்பு முறைகளால் அதை தீர்க்கமுடியாது என்பதையும் தெளிந்திருக்க வேண்டும். அதைத்தான், அந்த விழிப்புணர்வுக்கான தேவையைத்தான் கட்டுரை கோருகிறது. அதன்பிறகுதான் போராட்ட அறிவிப்பும், எப்படி போராடுவது என்பதும் வரும்.

  உங்களின் ஆர்வம் நல்லது. அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்களும் முயலுங்கள்.

  செங்கொடி

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s