ராக்கெட் விட்டவர்களின் ராக்கெட்

கடந்த 25 ம் தேதி இஸ்ரோ கடவுள்கள் ஏவிய ஜிஎஸ்எல்வி ராக்கெட் சிவகாசி ராக்கெட்டாகிப் போனதில் கடவுளர்களுக்கு மட்டுமல்லாது பக்தர்களுக்கும் ஏக வருத்தம். ஏனென்றால் முன்பு உள்ளூர் தயாரிப்பு என்று ஏழுமலையானையெல்லாம் ஏவலுக்கு கூப்பிட்ட பிறகும் அவன் அழுத்தமாக போட்ட கோவிந்தாவின் இழுப்பு ஏப்ரலிலிருந்து டிசம்பர் வரை நீண்டுவிட்டதே. ஒரு செயற்கைக்கோள் ஏவல் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும்போது அது ஒரு செய்தியாக முடிந்துவிடுகிறது. ஆனால் அதுவே தோல்வியில் முடியும்போது அதனுடன் தேசபக்தியும் கலந்துவிடுவதால் அதன் பரப்பெல்லை செய்தி என்பதையும் தாண்டி விரிந்து விடுகிறது. இந்த முறையும் அது நடந்திருக்கிறது. சிலநூறு கோடிகள் வீணாகி விட்டதே என்று ஒரு பக்கமும், நம்முடைய அறிவியலாளர்கள் விரைவிலேயே அடுத்ததற்கு ஆயத்தமாகிவிடுவார்கள் என்று மறுபக்கமும், ரஷ்யாவிலிருந்து வாங்கிய ஏழு பொறிகளில் ஒன்று மட்டுமே மீதமிருக்கும் நிலையில் சந்திராயன் 2 தடைபட்டு விடுமோ என்று இன்னொரு பக்கமுமாக விசாரிப்புகள், விவாதிப்புகள்.

 

இதற்கு முன்னரும் பலமுறை இதுபோன்ற திட்டங்கள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. ஆனால் இப்போது நடந்திருக்கும் இந்தத்தோல்வியை அறிவியலாளர்களே சற்று ஆச்சரியத்துடன் தான் பார்க்கிறார்கள். ஏனென்றால் இதற்கு முன்னர் நிகழ்ந்த தோல்விகள் இரண்டாம் மூன்றாம் நிலைகளில் ஏற்பட்ட சிக்கல்களினால் நிகழ்ந்தவை. தற்போது முதல் நிலையிலேயே சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது தான் அறிவியலாளர்களைக் கவலையுறச் செய்திருக்கிறது. ஏவப்பட்ட சில நொடிகளிலேயே தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கும் ராக்கெட்டுக்குமான தொடர்பு அறுந்துவிட்டது. பிறகு வேறு வழியில்லை என்பதால் சிதறடிக்கப்பட்டு கடலில் வீழ்த்தப்பட்டிருக்கிறது.

 

ஏப்ரலில் நடந்த தோல்விக்குப் பிறகு, ஒரு குழு அமைக்கப்பட்டு தோல்விக்கான காரணங்களை அலசி அந்தக்குறை தற்போதைய ஏவுத‌லில் சரி செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது புதிதாக வேறொரு குறைபாடு ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இதைக்கொண்டு நாட்டின் மீது அக்கரைகொண்ட(!) சில நாளிதழ்கள் தங்கள் கவலைகளை வெளியிட்டிருக்கின்றன. அதாவது தற்போதைய கல்வி முறை எப்படி சிறந்த ஊதியத்தைப் பெறுவது எனும் அடிப்படையில் இருக்கிறது. பொறியாளர்களாக வருபவர்கள் எங்கு அதிக ஊதியம் கிடைக்கிறதோ அதற்குத் தேவையான சிறப்பம்சங்களைக் கற்பது எனும் நோக்கில் செயல்படுகிறார்கள். நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணிசெய்ய முன்வருபவர்கள் மிகவும் அரிதாகவே இருக்கிறார்கள் என்பதாகப் போகின்றன அந்தக் கவலைகள். ஆனால் இந்தப் போக்கிற்கு எது அடிநாதமாய் இருக்கிறது என்பது குறித்து அந்தக் கவலைகள் கவலைப்படவில்லை.

 

தற்போதைய சூழலில் கல்வி என்பது அறிதல் எனும் தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. பெருநிறுவனங்களுக்கு என்ன விதமான தேவை இருக்கிறதோ அந்த விதத்தில் தெளிந்து கொள்வதே கல்வியாக இருக்கிறது. உடலுழைப்பிலிருந்து, அறிவுசார் உழைப்புவரை நிறுவனங்களுக்கு என்ன தேவை என்பதே முதன்மைப்படுத்தப்படுகிறது. நுகர்வுக் கலாச்சாரத்தில் மக்களை சுரண்டிக்கொழுக்க முதலாளிகளுக்கு என்ன தொழில்நுட்பம் தேவையோ அந்த தொழில்நுட்பத்தை கற்று வைத்திருப்பதற்குப் பெயர்தான் கல்வி. எடுத்துக்காட்டாக, செல்லிடப்பேசியில் நாள்தோறும் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, இப்படி அறிமுகப்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் முதலாலிகள் லாபமீட்டுவதற்குப் பயன்படும் வரையில்தான் அது கல்வியாக நடப்பிலிருக்கும். குறிப்பிட்ட அந்த தொழில்நுட்பத்தால் இனி லாபமீட்ட முடியாது எனும் நிலையில் அந்தக் கல்வி வேறொரு தொழில்நுட்பக் கல்வியால் இடம்பெயர்க்கப்பட்டிருக்கும். மட்டுமல்லாது, தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கே பெருநிறுவனங்களும் முதலாளிகளும்தான் நிதியளிக்கிறார்கள். முதலாளிகள் நிதியளித்து நடத்தப்படும் ஆய்வுகள் முதலாளிகளின் லாபத்தை நோக்கமாகக் கொண்டிருக்குமா? மக்களின் நலவாழ்வை நோக்கமாகக் கொண்டிருக்குமா? ஆக கல்வி என்பதே முதலாளிகளுக்கு சேவை செய்வதற்கு என்றானபிறகு, அந்தக் கல்வியைக் கற்றவர்கள் முதலாளிகளுக்கு சாதக‌மாக தங்கள் கல்வியை பயன்படுத்தியே தீர‌வேண்டும் என்றான பிறகு, அர்ப்பணிப்புடன் நாட்டுக்கு சேவை செய்ய முன்வரவேண்டும் என அறிவுரை கூறுவதில் என்ன பொருள் இருந்துவிட முடியும்?

 

பொருளற்ற இதுபோன்ற கவலைகளையும் அறிவுரைகளையும் விட வேறொரு கவலை நமக்கு முதன்மையானதாக இருக்கிறது.

 

இந்தத்திட்டம் வெற்றியடைந்திருந்தால் என்ன சாதிக்கப்பட்டிருக்கும்? அதிக எடையும் தொழில்நுட்பமும் கொண்ட ஜிசாட் செயற்கைக்கோள் தகவல் தொடர்பில் மிகச்சிறந்த இடத்தை இந்தியாவுக்கு பெற்றுத்தந்திருக்கும், 2500 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள் செலுத்தும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியிலில் இந்தியாவுக்கும் இடம் கிடைத்திருக்கும். இதனால் செயற்கைக் கோள்களை அனுப்ப பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவையிருக்காது என்பதுடன் வணிக நோக்கிலும் இந்தியாவுக்கு சாதகங்களை ஏற்படுத்தித்தந்திருக்கும். சந்திராயன் ஒன்று, இரண்டு போன்ற திட்டங்களினால் கிடைக்கும், கிடைக்கப்போகும் பலன்களென்ன? நிலவில் நீர்வளம் இருக்கிறதா என ஆராயலாம். நிலவின் தரையில் என்னென்ன கனிவளங்கள் மறைந்துகிடக்கின்றன? அவைகளை எப்படி பூமிக்கு கொண்டுவரலாம்? இவைகள் தானே. இவைகளினால் யாருக்கு பயன்? இந்தியாவுக்கு சாதகம், இந்தியாவின் பெருமை என்பதன் பொருள் என்ன? எந்த இந்தியா? இந்த ஆய்வுகளினால் பலனடைபவர்களின் இந்தியாவா? யாருக்கு எதிராக பயன்படப்போகிறதோ அவர்களின் இந்தியாவா? டாடா, அம்பானிகளின் இந்தியாவுக்கா? சோற்றைக்கூட திருடி உண்ணும் நிலையில் இருப்பவர்களின் இந்தியாவுக்கா?

உலகின் நீர்வளம் யாருக்கு சாதகமாய் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது? யாருக்கு பாதகமாய் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது? பூமியின் மொத்த நீர்வளத்தில் 99 விழுக்காடு கடல் நீர். மிதமிருக்கும் ஒரு விழுக்காட்டிலும் பெரும்பகுதி துருவப்பகுதிகளில் பனிப்பாறைகளாய் உறைந்துகிடக்கிறது. இவைபோக பயன்பட்டுக்கொண்டிருக்கும் நீர்வளத்தில் கால் பங்கிற்கு மேல் பெப்சி, கோக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எஞ்சியிருப்பவைகளைக்கூட அந்நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வேகவேகமாய் கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. உலகின் அனைத்து நாடுகளையும் இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உலகமயத்தின் மூலம் மக்களுக்கு நீர் வழங்குவதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி லாபம் சம்பாதித்து வருகின்றன. நீர் நிலைகள், ஏரிகுளங்களை பராமரிக்கக்கூடாது என்று நிர்ப்பந்தம் செய்கின்றன. ஆக பூமியில் இருக்கும் நீர்வளமே முதலாளிகளுக்கு சாதகமாகவும், மக்களை தண்ணீருக்கு விலை கொடுக்க வைத்திருப்பதன் மூலம் அவர்களுக்கு பாதகமாகவும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுபோன்றே கனிம வளங்களும். இந்தியாவின் மத்திய கிழக்குப் பகுதிகளில் கிடைக்கும் கனிமப்பொருட்களை அற்பமான விலையில் முதலாளிகள் கொள்ளையிட்டுச் செல்ல வசதியாக இந்தப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களை அரசே வேட்டையாடி அப்புறப்படுத்துகிறது. உலகின் எந்தப்பகுதியில் புதிதாக கனிமவளங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது முதலாளிகளுக்கு சாதகமாகவும் மக்களுக்கு பாதகமாகவும் முடிகிறது. பூமியில் கிடைக்கும் வளங்களையே முதலாளிகள் தங்களின் லாபத்திற்காக மக்களை வதைக்கப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது, நிலவிலும் இன்னும் வேறுபல கோள்களிலும் கண்டுபிடிக்கப்படும் வளங்கள் மக்களின் நன்மைக்காக நலனுக்காக பயன்பட்டுவிடுமா?

 

நாடு என்பதை தங்களுக்கானது எனும் பொருளில் பயன்படுத்துபவர்கள், அதை வெளிப்படையாகச் சொல்வதில்லை, செய்வதில்லை. ஏனென்றால் அந்த நாட்டிலிருந்து நாட்டு மக்களிடமிருந்து தங்களுக்குத் தேவையானதை அவர்கள் பறித்தெடுக்க வேண்டியதிருக்கிறது. அதனால் அதை அவர்கள் பொதுவாகவே முன்னிருத்துகிறார்கள். இந்தியாவின் பெருமை, இந்தியாவின் வளர்ச்சி, இந்தியாவின் சுத‌ந்திரம் என்பதெல்லாம் இந்தப்பொருளில் வருபவைகள் தாம். ஆனால் இதை பிரித்தெடுத்துக்காட்டும் போது அதை எதிர்கொள்வதற்காக வேறொரு கேள்வியை முன்வைப்பார்கள். அறிவியலை எதிர்க்கிறார்கள், அறிவியல் முன்னேற்றத்திற்கு தடை போடுகிறார்கள், அறிவியலை விலக்கிவிட்டு கற்காலத்தில் போய் வாழமுடியுமா? என்பதுதான் அந்தக் கேள்வி.

 

அறிவியல் என்பது இயற்கையை புரிந்துகொண்டு, மனிதகுல வாழ்வுக்கு எதிராக இருக்கும் இயற்கையின் தடைகளை மாற்றுவதற்காகப் போராடுவது. இதை மறுக்கமுடியாது. ஆனால் அறிவியல் இந்த திசையில் பயணப்படுகிறதா என்பதே முக்கியமான கேள்வி. 250 ஒளியாண்டுகள் தூரத்தில் சூரியனைவிட ஆயிரம் மடங்கு பெரிய ஐ.ஆர்.எஸ்5 எனும் கோள் இருக்கிறது என விண்ணை உளவி கண்டுபிடிக்க முடிந்த அறிவியலை பாதாளச் சாக்கடையில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துளவி கண்டுபிடிக்கவைக்காமல் மனிதனை மூழ்கி கண்டுபிடித்து அடைப்பெடுக்க நிர்ப்பந்திக்கிறதே, இதை அறிவியலின் பிழையாகக் கொள்வதா? அதை கையில் வைத்திருக்கும் முதலாளியத்தின் பிழையாகக் கொள்வதா? நவீன செயற்கைக்கோள்கள் துணையுடன் எந்த இடத்தில் என்ன வகை மீன்கள் தற்போது அதிகம் கிடைக்கும் என கண்டறிந்து சொல்லி ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களை அனுப்பி கடல்வளத்தை கொள்ளையடிக்க பயன்படுத்தும் அறிவியலை பகலென்றும் இரவென்றும் பாராமல் வலையிழுத்தே வாழ்வைக்கடக்கும் மீனவர்களை எல்லை தாண்டினான் என்று ஆண்டுக்கணக்கில் சிறைவைக்க நிர்ப்பந்திக்கிறதே இது அறிவியலின் பிழையா? முதலாளியத்தின் பிழையா? எண்பதுகளைத் தாண்டிய கொழுத்தவர்களின் பழுத்த இதயத்தை ஈரிதழ் வால்வு என்றும் ஃபேஸ் மேக்கர் என்றும் துள்ளவைக்கும் அறிவியல் ஓட்டை விழுந்த இதயத்துடன் பணமில்லை என்பதால் பத்திலேயே பாடை கட்ட நிர்ப்பந்திக்கிறதே இது அறிவியலின் பிழையா? முதலாளியத்தின் பிழையா? அறிவியலை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அது யாருடைய கைகளில் இருக்கிறதோ அவர்களை மறுக்கமுடியும். ஏனென்றால் அவர்கள் உலகின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக அறிவியலை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். எனவே அவர்களை எதிர்க்க வேண்டும்.

 

இவைகளை உணராமல் சந்திராயனை அனுப்பிய‌தற்காக பெருமைப்படுவதும், சிவகாசி ராக்கெட் வெடித்துப்போனதற்காக சோகப்படுவதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். அறிவியலை அனைவருக்குமானதாய் மாற்றியமைக்க போராடத்துணிவதே நாம் முன்னிற்க வேண்டிய‌ இன்றைய அவசியம்.

 

Advertisements

6 பதில்கள்

 1. A meaningful expressions. A good article with outstanding look and vision to be useful for downtrodden. Yes ; science should be to uplift the world entirely not only for upperclass.Govt. is first and primarily for poor class then only to other sections of the society.

 2. /இந்தப் போக்கிற்கு எது அடிநாதமாய் இருக்கிறது என்பது குறித்து அந்தக் கவலைகள் கவலைப்படவில்லை////.
  போட்டாவில் உள்ள விஞ்சானிகள் அனைவரும் ஆண்களாகவே இருக்கிறார்கள்.ஆணாதிக்கமும் தனியுடமையும் ஒழிக்கப்பட்டு விட்டால் சிவகாசி ராக்கெட்டே நாசா ராகெட்டாக வளம் வந்திருக்கும்..

 3. கவிஞர் தணிகை,
  ஏன் தமிழில் பின்னூட்டம் இடுவதை நீங்கள் விரும்புவதில்லை?

 4. //250 ஒளியாண்டுகள் தூரத்தில் சூரியனைவிட ஆயிரம் மடங்கு பெரிய ஐ.ஆர்.எஸ்5 எனும் கோள் இருக்கிறது என விண்ணை உளவி கண்டுபிடிக்க முடிந்த அறிவியலை பாதாளச் சாக்கடையில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துளவி கண்டுபிடிக்கவைக்காமல் மனிதனை மூழ்கி கண்டுபிடித்து அடைப்பெடுக்க நிர்ப்பந்திக்கிறதே, இதை அறிவியலின் பிழையாகக் கொள்வதா? அதை கையில் வைத்திருக்கும் முதலாளியத்தின் பிழையாகக் கொள்வதா? நவீன செயற்கைக்கோள்கள் துணையுடன் எந்த இடத்தில் என்ன வகை மீன்கள் தற்போது அதிகம் கிடைக்கும் என கண்டறிந்து சொல்லி ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களை அனுப்பி கடல்வளத்தை கொள்ளையடிக்க பயன்படுத்தும் அறிவியலை பகலென்றும் இரவென்றும் பாராமல் வலையிழுத்தே வாழ்வைக்கடக்கும் மீனவர்களை எல்லை தாண்டினான் என்று ஆண்டுக்கணக்கில் சிறைவைக்க நிர்ப்பந்திக்கிறதே இது அறிவியலின் பிழையா? முதலாளியத்தின் பிழையா? எண்பதுகளைத் தாண்டிய கொழுத்தவர்களின் பழுத்த இதயத்தை ஈரிதழ் வால்வு என்றும் ஃபேஸ் மேக்கர் என்றும் துள்ளவைக்கும் அறிவியல் ஓட்டை விழுந்த இதயத்துடன் பணமில்லை என்பதால் பத்திலேயே பாடை கட்ட நிர்ப்பந்திக்கிறதே இது அறிவியலின் பிழையா?//

  சிறப்பாக முன்வைக்கப்பட்டுள்ளது.

  அதுமட்டுமல்ல…..195 நாடுகளும் தத்தமது அறிவு வளர்ச்சியைக் காட்டுவதற்காக சந்திரனின் 195 இடங்களில் பொத்தல் போடுகிறார்கள். ஒவ்வொருவரும் இலட்சக்கணக்கான கோடிகள் வேறு அதற்கு செலவு செய்வார்கள்… உலகை எல்லாம் வலம் வந்தவர்கள் தான் உள்ளூர் கடந்தறியாத மக்களுக்கு “தேசப்பற்றை” பிரசங்கம் செய்வார்கள்.

 5. இல்லாதவன் இருப்பவனை தூற்றும் வசைமொழி.

  தீர்வு வேண்டுமா?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: