பினாயக் சென் தேசத்துரோகி என்றால் தேசபக்தனாகும் தகுதி யாருக்குண்டு?

கடந்த 24/12/2010 வெள்ளியன்று ராய்ப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மருத்துவர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. நாட்டின் மீதும் மக்கள் மீதும் நேசம்கொண்டு உழைக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது இந்தத்தீர்ப்பு. அதேநேரம் இந்த அரசு யாருக்காக இருக்கிறது, யாரின் நலன்களுக்காக செயல்படுகிறது என்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. தேசத்துரோக குற்றச்சாட்டின்கீழ் குற்றம் நிருப்பிக்கப்பட்டதாகக் கருதி இந்தத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். அதாவது மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டின் கீழ் இந்த தண்டனையை வழங்கியிருக்கிறது.

 

இந்த தண்டனையின் ஆழம் புரியவேண்டுமென்றால் சத்திஸ்கர் மாநிலம் குறித்தும் சல்வா ஜுடும் குறித்தும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். மத்திய, வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான கனிமவளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவைகளை கொள்ளையடிக்க பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொண்டிருக்கிறது இந்திய அரசு. இந்த கனிம வளங்களை வெட்டியெடுக்க வேண்டுமென்றால் முதலில் அங்கு வாழும் மக்களை அப்புறப்படுத்தியாக வேண்டும். ஆனால் மக்கள் மறுக்கிறார்கள், இந்திய அரசின் நைச்சியத் திட்டங்கள் அவர்களிடம் எடுபடவில்லை. காரணம், நதிகளின் குறுக்கே கட்ட்ப்பட்ட‌ அணைகள் தொடங்கி மிகப்பெரிய திட்டங்களிலெல்லாம் அரசு மக்களிடம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் எந்த லட்சணத்தில் நிறைவேற்றப்பட்டன என்பதை அவர்கள் கண்டுவருகிறார்கள். அம்மக்களிடம் மாவோயிஸ்டுகள் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்கள். விட்டுக்கொடுக்க மறுக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கு சத்திஸ்கர் அரசு கண்டுபிடித்த வழிதான் சல்வா ஜுடும் எனும் அமைப்பு. பயங்கரவாதிகளான மாவோயிஸ்டுகளின் கொடுமை தாங்காமல் பழங்குடியின மக்கள் தங்களுக்குள்ளே ஏற்படுத்திக்கொண்ட அமைப்புதான் சல்வா ஜுடும் என்று அரசு பிரச்சாரம் செய்தாலும், அந்த அமைப்பிற்கு நிதியுதவி வழங்கி வருவது மாநில அரசு தான் என்பது அம்பலமாகியிருக்கிறது. மட்டுமல்லாது பாஜக ஆளும் சத்திஸ்கரின் எதிர்க்கட்சியான காங்கிரஸின் எம்.எல்.ஏ மகேந்திர கர்மா என்பவனின் தலைமையில்தான் அந்த அமைப்பு இயங்கிவருகிறது.

 

மாவோயிஸ்டுகளை ஒழிப்பதையும், பழங்குடியினரை அப்புறப்படுத்துவதையும் சல்வா ஜுடும் நோக்கமாக கொண்டிருக்கிறது. இதற்காக வன்முறையின் எந்த எல்லைக்கும் இறங்கத்தயாராக இருக்கிறது. நாட்டின் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் சல்வா ஜுடும் செய்யும் கொலைகளையும், சட்டமீறல்களையும் அம்பலப்படுத்தி கண்டித்திருக்கின்றன. ஆனாலும் அந்த அமைப்புக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க மறுக்கின்றன. மாவோயிஸ்டுகளின் செல்வாக்குள்ள‌ பகுதி என்பதால் எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்துதர மறுத்து வருகின்றன. இந்நிலையில், இந்தப்பகுதியில் செயல்பட்டுவரும் குழந்தை நல மருத்துவரான பினாயக் சென், அங்குள்ள குழந்தைகள் சத்துக்குறைவினால் அவதிப்படுவதை எடுத்துக்காட்டி அம்பலப்படுத்தி மாநில அரசுக்கு எதிராக போராடத்தொடங்குகிறார். பல்வேறு மருத்துவ ஆய்வுகள் மூலம் ஊட்டச்சத்துக் குறைவினால் பல்வேறு நோய்கள் பரவியிருப்பதையும் வெளிப்படுத்துகிறார். தொடர்ந்து அவர், சல்வா ஜுடும் அங்கு செய்துவரும் கொடூரங்களையும் வெளியுலகுக்கு கொண்டு வந்து மனித உரிமை அமைப்புகள் மூலம் போராட்டங்களை தொடர்கிறார்.

 

இதைத்தொடர்ந்து 2007 மே 14ம் தேதி “சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டம் மற்றும் சட்டீஸ்கர் சிறப்பு பாதுகாப்பு சட்டம் 2005” எனும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார். இந்தைக் கைதை எதிர்த்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள், அறிவுஜீவிகள், எழுத்தாளர் அமைப்புகள், நோபல் பரிசு பெற்றவர்கள் அமைப்புகள் என உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து எதிர்ப்புக் குரல்கள் போராட்டங்கள் நடக்கின்றன. இவைகள் எதையும் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்பதுடன், எதிர் வழக்கு தொடுத்த அவர் மனைவி உட்பட பலரையும் மிரட்டுகிறது. இதற்கிடையில் 2008 ஏப்ரலில் உலகளாவிய சுகாதார கவுன்சில் அவருக்கு ‘ஜொனாதன் மான்’ எனும் விருதை அறிவிக்கிறது. இந்த விருதைப் பெறுவதற்காவது அவரை பிணையில் விடுமாறு பன்னாட்டு அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் இந்திய அரசு செவி சாய்க்கவில்லை. கடைசியில் அவருடைய இதய நோய் மோசமடைந்ததைத் தொடர்ந்து ஓய்வும் சிகிச்சையும் அவசியம் என்பதால் வேறு வழியில்லாமல் மே 25 2009 ல் பிணையில் விடப்பட்டார். இந்த வழக்கில் தான் இப்போது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

 

அவர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார், மாவோயிஸ்டுகளுக்கு சாதகமாய் செயல்பட்டார் என்பதற்கு அரசு காட்டும் ஆதாரங்களென்ன?

௧) மாவோயிஸ்ட் தலைவர்  நாராயண் சன்யாலால் என்பவரை சிறையில் முப்பதற்கும் அதிகமான முறை சந்தித்தார்,

௨) அவருடைய கணிணியிலிருந்து சில ஏகாதிபத்திய எதிர்ப்புக் கட்டுரைகள் கிடைத்தது,

௩) நாராயண் சன்யாலுக்கு மருத்துவ உதவிகள் செய்யுமாறு கோரி மதன்லால் பானர்ஜி எழுதிய கடிதத்தில் பிரியத்திற்குறிய காம்ரேட் என குறிப்பிட்டிருந்தது.

இவைதான் மதிப்புமிக்க, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்ற ஒரு மருத்துவருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த தேசத்துரோக வழக்கின் ஆதாரங்கள். தாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பகுதியில் தாங்கள் போராடும் அதே நோக்கத்தில் மக்களுக்காக மருத்துவ ஆய்வுகளைச் செய்து மக்களைக் காக்க போராடிவரும் ஒரு மருத்துவரை சிறையில் இருக்கும் தங்கள் தலைவருக்கு மருத்துவ உதவிகள் செய்யுமாறு மாவோயிஸ்டுகள் ‘தோழரே’ என அழைத்து  கோரிக்கை வைக்கிறார்கள். அதை ஏற்று அவர் முறைப்படி அரசிடம் அனுமதி பெற்று சிறையிலிருக்கும் மாவோயிஸ்ட் தலைவரை சிறைத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் பரிசோதித்து சிகிச்சையளிக்கிறார். முறைப்படி அனுமதி பெற்று அதிகாரிகளின் முன்னிலையில் சந்தித்திருக்கும் போதுமுப்பது முறை சந்தித்தால் என்ன? மூவாயிரம் முறை சந்தித்தால் என்ன? தன்னுடைய கணிணியில் ஒருவர் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கட்டுரைகளையும், அரசு எதிர்ப்பு பிரசுரங்களையும் வைத்திருக்கக்கூடாதா?

 

அரசை எதிர்த்து யார் போராடினாலும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு, சதித்திட்டம், தலைவர்களை கொல்வதற்கு முயற்சி என்று பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி கைது செய்து சிறையில் அடைத்து முடக்கிவிட நினைப்பது அரசுகளின் இயல்பாகவே இருக்கிறது. இது போன்ற தேசத்துரோக வழக்குகளில் பிணையில் வெளியில் வர முடியாது என்பதுடன் மக்கள் ஆதரவும் கிடைக்காது என்று அரசு கருதுகிறது. மக்களுக்காக, அவர்களின் ஊட்டச்சத்துக்குறைவை ஆய்வுகள் மூலம் வெளிக்கொண்டுவந்ததும், ஜல்வா ஜுடும் கொடூரங்களுக்கு எதிராக போராடியதுதான் தேசத்துரோக வழக்கு அவர் மீது பாய்ந்ததன் காரணம் என்றால், எது தேச பக்தி? எது தேச துரோகம்? அன்னிய நாட்டு நிறுவனங்கள் சொந்த நாட்டு கனிம வளங்களை கொள்ளையடிப்பதை அனுமதிப்பது தேச துரோகமா? அதை எதிர்த்துப் போராடுவது தேச துரோகமா? அப்படி போராடும் மக்களை அரசே கூலிப்படைகளை அமைத்து ஆயுதங்கள் வழங்கி கொன்று குவிப்பது தேச துரோகமா? அதை அம்பலப்படுத்திப் போராடுவது தேச துரோகமா?

 

இது அப்பட்டமாக ஆங்கிலேய ஆட்சியை நினைவுபடுத்தவில்லையா? அன்று ஆங்கிலேயன் விடுதலை வேண்டிய போராடியவர்கள் மீது தேசதுரோக வழக்கைச் சுத்தித்தான் தூக்கில் தொங்கவிட்டான். இன்றும் அது தொடர்கிறது. அது நேரடியான காலனியாட்சி. இன்றோ சுதந்திரம் என்ற பெயரில் மறைமுகமான கால‌னியாட்சி மறுகாலனியாட்சி. விடுதலைப் போராட்டங்கள் முடிந்துவிடவில்லை, அடுத்த விடுதலைப் போர் தொடங்கவேண்டிய நேரம் நெருங்கி விட்டதை முன்னறிவிப்பதுதான் பினாயக் சென்னின் தண்டனை.

 

 

23 thoughts on “பினாயக் சென் தேசத்துரோகி என்றால் தேசபக்தனாகும் தகுதி யாருக்குண்டு?

  1. தோழரே,

    சுவர்க்கச்சுவர் எழுப்ப முனைபவரே,

    எவ்வளவு நாள்தான்கட்டுரை எழுதிக்கொண்டிருப்பீர்.

    செங்கொடி தாங்கி சிகப்பு திலகமிட்டு

    ருஷ்ய ஆதரவுடன் சுதந்திரப்போராட்டத்தை

    உடனே ஆரம்பம் செய்வீராக !

    “நான் இறந்தபின் என்மேல் செங்கொடி போர்த்தப்படுமாயின் அதுவே இவ்வுலகில் நான் வாழ்ந்ததன் அடையாளமாய் இருக்கும்”

    எனும் உமது ஆசை நிறைவேற

    கம்யுனிச கடவுள் வாழ்த்துப்பாட

    புரட்சிகர மார்க்ஸிய பாமாலையுடன்

    நாஸ்திக நக்ஸல்பாரி நண்பர்களுடன்

    மாவோயிஸ மந்தைகளை சந்திப்பீராக!

    தம்பி சங்கரபரிவாரத்தையும் மறவாது துணைக்கழைத்துக்கொள்ளும்!

    கருப்பு மற்றும் சிகப்பு சட்டைகார கலப்பின கணவான்கள்

    செஞ்சதுக்கத்தில் உம்பெயர் பொறிப்பர்.

  2. காலத்தோடு வந்திருக்கும் பதிவு இவர் பற்றி மக்களிடம் கொண்டு செல்ல இவர் பற்றிய செய்திகளை துலாவிக்கொண்டிருந்தேன் நீங்கள் அந்த பளுவை குறைத்தீர்கள் நன்றி

  3. இன்றைய தேச பற்றாளர்கள்..
    சச்சின் டெண்டுல்கர், டோனி , ஏ ஆர் ரகுமான், அப்துல் கலாம், மணிரத்னம், அத்வானி., rss பார்பன அம்பிகள்.. ….
    மற்றவர்கள் எல்லோரும் தேச துரோகிகள்.

  4. அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  5. அரசு மக்கள் நலன் காக்க என்று நம்புவது கடவுள் வருவார், தவறு செய்பவர்களின் கண்களைக் கொத்திவிடுவார் என்று குழந்தைகள் நம்புவது போன்றதாகும்.

    காலம் காலமாக முதலாளி ஜன (ங்களின்) நாயகத்தைக் காக்கவே செயல்படும் அரசானது மனித உரிமை மீறல்கள் பற்றிக் கவலை கொள்ளாததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பழங்குடி மக்களுக்கு மருத்துவ உதவி செய்த Dr. Binayak Sen க்கு ஆயுள் தண்டனைக் கொடுத்திருப்பது, அவரை விடுவிக்க மறுப்பதற்கும் காரணம் அவரும் மூலதனமற்றவர், அம் மக்களும் மூலதனமற்றவர்கள் என்று சொல்லவும் வேண்டுமோ.

    உங்கள் பதிவு அவசியமான ஒன்று. வாழ்த்துக்கள்.

  6. தவறான ஜனநாய‌கம் பேசுவது

    ஆதரித்து ஓட்டுபோடுவது

    போராட்டம் என்ற பெயரில்

    சாலை மறியல்

    சைக்கிள் ஊர்வலம்

    சேவை எனக்கூறி

    இரத்த தான முகாம்

    அறவழியில் உண்ணாவிரதம் என

    பம்மாத்து நாடக‌ம் நடத்திவிட்டு

    திருடர்களுடன் ரகசிய கூட்டுவைத்துக்கொண்டு

    அரசியல் செய்ய பூமியில்

    ஓர் இடம் இந்தியா !!

  7. தேச‌த்தை கொள்ளை அடிப்ப‌வ‌ர்க‌ளின் ஆட்சியில்
    ம‌னித‌நேய‌ர்க‌ள் குற்ற‌வாளியாய் தான் ஆக்க‌ப்படுவார்க‌ள்.
    பேய்க‌ள் அர‌சாள, பிணம் தின்னும் சாத்திர‌ங்க‌ள்.
    சென் அவ‌ர்களின் அள‌ப்ப‌றிய சேவைக்கு சிறையும்,
    ச‌ல்வா சூட‌ங்க‌ளின் அக்கிர‌ம‌ங்க‌ளுக்கு அங்கீகார‌மும்
    த‌ந்து த‌ரும‌ம் மீறும் இந்த‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை,
    அர‌சுக் கட்டிலுக்கு தூக்கிச் செல்லும் ம‌க்க‌ளின்
    ம‌ட‌மை அழிவ‌துதான், இதற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வு.
    ம‌க்க‌ளின் அறிவு தெளிவு பெற வேண்டும்.

  8. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு மருத்துவம் பார்த்தவரை இந்திய அரசு தேசபக்தர் என்றா அழைக்கும் ?

  9. ///மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு மருத்துவம் பார்த்தவரை இந்திய அரசு தேசபக்தர் என்றா அழைக்கும் ?///

    நாசாவுடன் இணைந்து பணியாற்றிய கல்பனா சாவ்லாவிற்கு விருது கொடுக்கும்போது….

  10. தோழர் செங்கொடி,
    உங்கள் கட்டுரை பொட்டு தெரித்தாற்போல் இருக்கிறது…அரசியலில் சுயநலவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள் …பத்திரமாக இருந்துகொள்ளுங்கள் உங்களையும் எதாவது சொல்லி உள்ளே தள்ளிவிட போகிறார்கள்…

  11. சுவர்க்கச்சுவர் எழுப்ப முனைபவரே,
    எவ்வளவு நாள்தான்கட்டுரை எழுதிக்கொண்டிருப்பீர்.
    செங்கொடி தாங்கி சிகப்பு திலகமிட்டு
    ருஷ்ய ஆதரவுடன் சுதந்திரப்போராட்டத்தை
    உடனே ஆரம்பம் செய்வீராக !
    இந்தியன் ,சும்மா ஒரு எழுத்து நடைக்காக எழுதியதை நீங்கள் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது .எங்கள் கோட்பாடு எல்லாமே இணையதளத்தோடு சரி

  12. சிகப்புஅரசு காண மக்களை ஒன்று திரட்ட (கவிப்)பொய்யர்களின் துணையுடன் எழுப்பும் சுரண்டல் நாதம் நண்பரே !

  13. rafi, on ஜனவரி4, 2011 at 8:36 AM said:
    அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    சர்வதேசியவாதி செங்கொடியின் புதுவருடமும் ஜனவரி முதல் நாள்(அன்று) ?!

    The New Year by the Julian calendar is still informally observed, and the tradition of celebrating the coming of the New Year twice is widely enjoyed: January 1 (New New Year) and January 14 (Old New Year).

  14. ///Matt, on ஜனவரி4, 2011 at 8:27 AM said:
    இன்றைய தேச பற்றாளர்கள்..
    சச்சின் டெண்டுல்கர், டோனி , ஏ ஆர் ரகுமான், அப்துல் கலாம், மணிரத்னம், அத்வானி., rss பார்பன அம்பிகள்.. ….
    மற்றவர்கள் எல்லோரும் தேச துரோகிகள்.///

    ஆக அத்தனை M.L.A & M.P – களையும் தேச‍‍______ கள் என்றா சொல்றீங்க

    திரு.மட்டு

  15. கம்யூனிஸ்ட்டு புத்தகம் வைத்திருந்ததற்காக கைதாம்?!!!! மாவோயிஸ்டுகள் பினாயக் சென் ஐ விடுதலை செய்யக்கோரி வன்முறை வெறியாட்டம் ஆடிவருகிறார்கள். இப்பாடி இவர்களோடு தொடர்பற்றவர்கள் எத்தனை பேருக்காக இப்படி ஆடியிருக்கிறார்கள். jeyamohan.in தளத்தில் மாவோயிஸ்ட்டு வன்முறையைப் பற்றி தொடராக நான்கு கட்டுரைகள் எழுதியுள்ளார். முடிந்தால் அவரை பற்றி விமர்சிப்பதை விடுத்து அவற்றிக்கான தத்துவ மறுப்புகளை முன்வையுங்கள் பார்ப்போம் உங்கள் தரப்பை….. அக்கட்டுரைகளின் அனைத்து கருதுகோள்களையும் முரணின்றி உங்களால் மறுக்க இயலுமா? முன்முடிவுகள் அற்று உங்கள் விளக்கத்தை எதிர்நோக்க தயார்….

  16. ஏன் என்னுடைய முந்தைய கருத்திற்கு இன்னும் பதில் கூறவில்லை. விளக்கம் தேவையில்லை வெறும் வசவுகள் மட்டும் போதும் என்று நினைக்கின்றீர்களா?

  17. நண்பர் வெள்ளை,

    மருத்துவர் பினாய்க் சென்னுக்கு தண்டனை அளித்திருப்பது சரியானது எனக் கருதுகிறீர்களா? ஆம் என்றால் அது எப்படி என விளக்குங்கள். எது வன்முறை என்பதற்கு நீங்கள் என்ன இலக்கணம் வைத்திருக்கிறீர்கள் என்பதற்கு \\பினாயக் சென் ஐ விடுதலை செய்யக்கோரி வன்முறை வெறியாட்டம் ஆடிவருகிறார்கள்// உங்களின் இந்த வாக்கியமே சான்று.

    மாவோயிஸ்டுகள் குறித்த எங்களின் கருத்துகளை நூலகத்தில் இருக்கும் ஒரு வெளியீட்டை படித்து தெரிந்து கொண்டு பின் உங்களின் கேள்விகளைக் கேழுங்கள்.

  18. மாவோயிஸ்ட்டுகள் பற்றிய உங்கள் கருத்தை அறிவேன். மாவோயிஸ்ட்டுகள் பற்றிய பல விஷயங்களுக்கும் ஜெயமோகன் அவர்கள் பதிவில் பதில் இருப்பதாக கருதுகிறேன். எனவே தான் அவற்றிற்கான தத்துவ மறுப்புகளை கேட்டேன். உங்களை போன்ற பலரும் அந்த பதிவிற்கு பிறகு அவரை விமர்சித்திருக்கிரார்களே தவிர சரியான மறுப்புரைகள் ஒன்றையும் காணோம். இஸ்லாமிய அடிப்படைவாத பதிவுகளை எதிர்த்து தொடராக விளக்கமளிக்க தயாராக இருக்கும் நீங்கள் கம்யூனிசம் பற்றிய புரிதல் குழப்பங்களுக்கும் விளக்கம் அளிக்கலாமே? அவற்றிக்கான மறுப்புகள் அல்லது விளக்கங்களில் இருந்தே தொடங்க விரும்புகிறேன்….
    (இணைய வசதி இல்லாததால் உடனுக்குடன் கருத்திட இயலாது…)

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s