சில நாட்களாக கருப்புப்பண விவகாரம் மீண்டும் பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறது. “நாட்டின் பொருளாதரமே கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதில் அரசின் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஈடுபட்டவர்களை வெளிப்படுத்த அரசு ஏன் மறுக்கிறது?” என்பதுபோன்ற கேள்விகளை அள்ளிவீசி நீதிமன்றம் தன் வீரியத்தை(!) நிரூபித்திருக்கிறது.
கடந்த பாரளுமன்ற தேர்தல் நேரத்தில் சுவிஸ் வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் 70 லட்சம் கோடி குறித்த தகவல் வெளியாகி, அரசியல்வியாதிகள் அதைக் கொண்டு சவடால்கள் அடித்து பொழுது போக்கினார்கள். உச்சகட்டமாக, நாங்கள் ஆட்சியமைத்தால் நூறு நாட்களில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் பணத்தை திருப்பிக்கொண்டுவர நடவடிக்கை எடுப்போம் என்று அத்வானி தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். பின்னர் எல்லோருக்கும் மறந்து போனது. தற்போது ஜூலியஸ் பேயர் எனும் ஒரு சுவிஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ருடால்ப் எல்மர் தனக்குத்தெரிந்த விபரங்களை விக்கிலீக்ஸுக்கு கொடுத்திருக்கிறார். இதையடுத்தே கருப்புப்பணம் மீண்டும் சுற்றுக்கு வந்திருக்கிறது.
ராம்ஜெத்மலானி உள்ளிட்டோர் லிச்சன்ஸ்டைன் வங்கியில் போட்டு வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட மறுப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணையில் தான் மேற்கண்டவாறு உச்ச நீதிமன்றம் தன் கேள்விகளை மத்திய அரசை நோக்கி வீசியிருக்கிறது. இதனை இந்த விசயத்தில் செயலற்றிருக்கும் அரசை உச்ச நீதிமன்றம் தன் கேள்விகளால் செயல்படத் தூண்டியிருக்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியுமா? தன் குரூரமான விளக்கங்களை வெளிப்படுத்த மத்திய அரசுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது என்பதைத்தவிர இதில் வேறு எதுவும் நிகழ்ந்து விடப்போவதில்லை. இது கேள்வி கேட்ட அமைப்புக்கும் பதில் கூறும் அமைப்புக்கும் தெளிவாய் தெரிந்த ஒன்று தான். ஏனென்றால் யார் அரசை வழி நடத்துகிறார்களோ அவர்களுக்கு அரசு நிர்வாகமும், நீதிமன்றமும் இருவேறு கருவிகள் அவ்வளவு தான்.
மக்களைப் பாதிக்கும் பல நடவடிக்கைகளில் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று பட்டவர்த்தனமாக பலமுறை அறிவித்திருக்கிறது நீதிமன்றம். அரசின் வரிக்கொள்கைகள் பதுக்கல்காரர்களுக்கும், கருப்புப்பண கில்லாடிகளுக்கும் உடந்தையாக பலமுறை திருத்தப்பட்டுள்ளதை சிறு முனகலும் இல்லாமல் மௌனமாக அங்கீகரித்திருக்கிறது நீதிமன்றம். திடீர்ச்சலுகைகளாக கருப்புப் பணத்தை சிறிய அளவு வரிவசூலித்து வெள்ளையாக்கிக் கொள்ள பலமுறை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதை எதிர்த்து சிறு துரும்பையேனும் கிள்ளிப்போட்டதில்லை நீதிமன்றம். என்றால் இப்போதையை கேள்விகளின் பொருள்தான் என்ன? வஞ்சிக்கப்பட்ட மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள் என்பது ஒரு கற்பிதம் போல மக்கள் மனதில் ஏற்றி வைக்ப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு இயல்பாக இருக்கும் எதிர்ப்புணர்ச்சியை வாக்குறுதிகளை அள்ளித்தெளித்து தமக்கான ஆதரவாக மாற்றிக்கொள்ளும் ஓட்டுப் பொறுக்கிகளைப்போல, ஊழல், நிர்வாகச் சீர்கேடு, விலைவாசி உயர்வு போன்றவைகளால் அரசின் மீது நம்பிக்கையிழக்கும் மக்களை இதுபோன்ற சவடால் கேள்விகளை வீசுவதன் மூலம் இந்த அமைப்பின் மீதான நம்பிக்கையை தக்கவைப்பது. இதைத்தவிர இந்தக்கேள்விகளால் மக்களுக்கு யாதொரு பயனும் இல்லை.
கருப்புப் பணம் என்பதென்ன? கணக்கில் காட்டாமல், அரசிடம் வரி கொடுக்காமல் மறைத்து வைத்திருக்கும் பணம். அரசு தன் வரிக்கொள்கையை தளர்த்திக்கொண்டே வருகிறது. ஒருவருக்கு அதிகபட்சமாக இவ்வளவு சொத்துகள் தான் இருக்கலாம் எனும் வரம்புகளெல்லாம் நீக்கப்பட்டு பழங்கதைகளாகி விட்டன. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு, உணவுக்கு எந்த உத்திரவாதத்தையும் கொடுக்காத அரசு, முதலாளிகளின் லாபத்திற்கு எல்லாவித உத்திரவாதத்தையும் கொடுத்திருக்கிறது. மக்களின் உயிர்வாழும் உரிமையையே மதிக்காமல் பசுமை வேட்டை நடத்தி துரத்தியடிக்கும் அரசு, முதலாளிகளின் தொழில்நடத்தும் உரிமைக்கு எந்தவித பங்கமும் நேர்ந்திடாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறது. மக்களைச் சுரண்டி பணம் சேர்க்கும் அத்தனை வழிகளையும் உருவாக்கிக் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு தடையாக இருக்கும் அனைத்தையும் நீக்கிவிட்டு கொள்ளையடிக்கும் பணத்திற்கு என்னிடம் கணக்கு மட்டும் காட்டிவிடு என்பது மட்டும் தான் அரசு விதிக்கும் ஒரே நிபந்தனையாக இருக்கிறது. அதையும்கூட இந்த மலைமுழுங்கி மகாதேவன்களால் செய்ய முடியவில்லை. இதற்குப் பெயர் தான் கருப்புப்பணம்.
1985ல் நாடு முழுவதும் கணக்கில் வராமல் எவ்வளவு கருப்புப்பணம் புழங்குகிறது என்பதை கணக்கிட நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பப்ளிக் பைனான்ஸ் அண்ட் பாலிசி என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் 36 ஆயிரத்து 786 கோடி கருப்புப்பணம் நாடுமுழுவதும் புழங்குவதாக கணக்கிடப்பட்டது. ஆனால் இன்று சுவிஸ் எனும் ஒரு நாட்டிலுள்ள வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணம் மட்டும் 70 லட்சம் கோடி. என்றால் கடந்த 25 ஆண்டுகளில் எந்த அளவுக்கு நாட்டின் வளங்களும், மக்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனர் என்பதை விளங்கிக் கொள்லலாம். இந்த அளவுக்கு கருப்புப் பணத்தின் அளவு அதிகரித்துச் செல்வது மெய்யாகவே அரசுக்கு கவலையளிக்கிறது, அதனால் தான், அவ்வப்போது வரிச்சலுகை வழங்கி கருப்புப்பணத்தை கட்டுக்குள் வைக்க முயல்கிறது. வரிக்கொள்கை தொடர்பான சட்டங்களை தளர்த்தியும், உள்விதிகளை நீக்கியும் கருப்புப்பணத்தின் அளவை அதிகரித்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இவைகளை மீறி அதிகரித்துவிடும் கருப்புபணத்தை அவ்வப்போது வெள்ளையாக்கும் மேளாக்களை நடத்தி சிறிதளவு வரிவிதித்து அத்தனையையும் வெள்ளையாக்கிக்கொள்ள அனுமதிக்கிறது.
விவசாயம் நொடித்துபோய் வழியற்று இருக்கும் விவசாயி வீட்டுவரி கட்டவில்லை என்றால் கதவை கழட்டிக்கொண்டுபோகும் நாட்டில் தான் இத்தனையும் நடந்திருக்கிறது. ஆனாலும் முதலாளித்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள், வரி அதிகமாக இருப்பதினால்தான் குறைவாக கணக்குக் காட்டி கருப்புப்பணமாக்கி மறைக்கும் எண்ணம் முதலாளிகளுக்கு ஏற்படுகிறது, வரியைக் குறைத்துவிட்டால் ஏன் அரசிடம் மறைக்கப்போகிறார்கள். எனவே கருப்புபணம் பெருகுவதற்கு அரசும் அதன் வரிவிதிப்பு முறையும்தான் காரணம் என்கிறார்கள். அதாவது வெளிப்படையாக அவர்கள் கூறவருவது இதுதான், தேவையில்லாமல் வருமானவரி என்ற ஒன்று எதற்கு? யாரும் எவ்வளவும் சேர்த்துக்கொள்லலாம் அரசிடம் கணக்கு காட்டும் கட்டுப்பாட்டை நீக்கிவிடலாம். அப்படிச் செய்துவிட்டால் கருப்புப்பணம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். ஆனால் அரசு அப்படித்தான் நடந்துகொண்டு வருகிறது என்பதுதான் உண்மை. 80களில் எவையெல்லாம் ஊழல் என்று கருதப்பட்டதோ அவையெல்லாம் இன்று சட்டபூர்வமாகவே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஊழல் மறைந்துவிட்டதா என்ன? கருப்புப்பணமும் ஓரளவுக்கு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுத்தான் இருக்கிறது. பங்குச் சந்தையில் வெளிநாட்டிலிருந்து யார் எனும் அடையாளமில்லாமல் முகவரி கொடுக்காமல் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறையை நீக்கவேண்டும் என்று கோரப்பட்ட போது பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா மறுத்துவிட்டார், இன்றுவரை காங்கிரஸும் இதுபற்றி வாய்திறக்க மறுக்கிறது.
இப்படி அனைத்து வகைகளிலும் அரசின் அனுமதியோடு நடந்துவரும் கருப்புப்பணத்தைத்தான் அரசை அம்பலப்படுத்தச்சொல்லி கேள்வி கேட்கிறது நீதிமன்றம். அரசை எதிர்த்து நீதிமன்றம் கேள்வி கேட்பதும் கருத்துக்கூறுவதும் இது முதல் முறையும் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நீதிமன்றம் கேள்வி கேட்டது. மத்திய அமைச்சர்களே ஊழலே நடக்கவில்லை என்று விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். புழுத்துப்போகும் உணவு தானியத்தை ஏழைகளுக்கு கொடுத்தால் என்ன? என்றது நீதிமன்றம் முடியாது என்றார் பிரதமர். நீதிமன்றம் செய்ததென்ன? இதோ நீதிமன்றத்தின் இந்த கிடுக்கிப்பிடி(!) கேள்விகளுக்கும் பிரதமர் பதிலளித்துவிட்டார். “கருப்புப் பணம் தொடர்பாக அரசிடம் உள்ள தகவல்களை சுப்ரீம் கோர்ட்டுக்குத் தெரிவிப்போம். அதேசமயம், இதை பகிரங்கமாக அனைவருக்கும் தெரியப்படுத்த முடியாது. அதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன” என்று. இனி நீதிமன்றம் என்ன செய்யும்? என்ன செய்துவிட முடியும்?
ஆனால் மக்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இதுபோன்று உலகம் முழுவதிலும் வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணமும், சட்டவிரோதமாக செய்யப்பட்டிருக்கும் முதலீடுகளும் நாட்டிற்கு திருப்ப கொண்டுவரப்படவேண்டும். இதைச் செய்தவர்கள் அனைவரின் அனைத்துவிதமான சொத்துக்களும் எந்தவிதமான நட்டஈடுமின்றி பறிமுதல் செய்யப்படவேண்டும். அவர்களுக்கு வீதிகளில் மக்கள் மன்றங்களால் தண்டனை வழங்கப்படவேண்டும். மக்கள் அதைச் செய்தே தீர்வார்கள்.
அன்பு நண்பர்க்கு: இது குறித்த கட்டுரைகள்: இன்டியன் டெமாக்ரஸி என்ற பேரில் டான் பேஜஸ் ஆங்கில தளத்திலும்; அரசி(ய)ல் ப(ய)ணம் என்ற பேரில் மறுபடியும் பூக்கும். இரண்டும் . (வேர்டு பிரஸ்) தளத்திலும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. தங்களின் மேலான கவனத்திற்கு. மேலும் இது சார்பான கட்டுரை ஒன்று பி.ஸி. அலெக்ஸாண்டர் ஜன.5. டெக்கான் கிராணிக்கல் இதழில் எழுதியுள்ளார். அதன் படி: 2006 ஆம் ஆண்டின் கணக்கின் படி: இந்திய ப் பணம் ஸ்விஸ் வங்கியில் 1456 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள்.இது மற்ற பிரதான 4 நாடுகளின் : சீனா; யுஸ்பெகிஸ்தான்; போன்ற நாடுகளின் வைப்பை விட அதிகம்