கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்

நாளை 61 வது குடியரசு தினமாம். பாதுகாப்பு ஏற்பாடுகள், பய பீதிகள் என கடந்த வாரம் முதலே பரபரப்பு காட்டப்படுகிறது. ஒரு கொண்டாட்ட மனோநிலைக்கு மக்கள் ஆயத்தப்படுத்தப்படுகிறார்கள். கொண்டாட்டங்களை நுகர்வைக்கொண்டே அள‌க்கமுடியும் என்பதால் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் விழாக்கால தள்ளுபடியை குடியரசு தினத்திற்கும் நீட்டுகின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் ‘தேசபக்த’ நடிகைகளை “வந்தே மாட்றோம்” என்று கூறவைத்து நம்மை கொண்டாட தூண்டுகின்றன. இதையே இன்னும் விரிவான அளவில் யாராவது வெளிநாட்டு தலைவர்களை அழைத்துவந்து இராணுவ தளவாடங்களை ஓடவிட்டுக் காட்டி பெருமிதமாய் கொண்டாடுகிறது அரசு. இருக்கட்டும், எதற்காக இந்த கொண்டாட்டங்கள்? முடியரசாக இருந்தபோதும், காலனியரசாக இருந்தபோதும், இப்போதும் எந்த அரசும் குடிமக்களுக்கான அரசாக இருந்ததில்லை. என்றால் இந்த கொண்டாட்டங்களின் பொருள்?

 

முதலில் இதை சுதந்திரமான அரசு என்று கூறுவதே தவறான கூற்று. நாட்டு மக்களின் மீது அனைத்து அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்த பொருளாதார கொள்கைகளிலேயே தனிப்பட்டு செயல்படமுடியாமல் அன்னிய ஆதிக்க நாட்டின் நலன்களுக்கு உதவிடும் வகையிலும், சொந்த நாட்டின் நலன்களுக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும் திணிக்கப்படும் கொள்கைகளால் செயல்படும் ஒரு நாட்டின் அரசை சுதந்திரமான அரசு என்று எப்படி கூறமுடியும்? தனக்குத்தானே சுதந்திரமாக இல்லாத ஒரு அரசை தன்னுடைய மக்களுக்கான அரசு என்று எந்த அடிப்படையில் கூறுவது?

 

நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு வேலைவாய்ப்பாகவும் வாழ்வாகவும் இருக்கும் விவசாயத்தை முற்றாக துடைத்தொழிப்பதற்கு நாள் குறித்துக் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது அரசு. பசுமைப்புரட்சி எனும் பெயரில் விளை நிலங்களில் இரசாயண உரங்களைக் கொட்டி மலடாக்கி, நீர் ஆதாரங்களை பராமரிக்க மறுத்து விவசாயிகளின் சொந்தச் செலவில் நிலத்தடிநீரை பயன்படுத்தவைத்து; அதிக மகசூல் தரும் விதைகள் என்று அதிக வளத்தையும், அதிக தண்ணீரையும் இறைத்தெடுக்கும் விளைமுறைகளை திணித்து; பணப்பயிர்கள் என்று ஆசை காட்டி உணவுப்பயிர்களை விட்டு விலக்கி கடைசியில் லட்சக்கணக்கான விவசாயிகளைக் கொன்று குவித்து, வெற்றிகரமாக விவசாயத்தை கருவறுத்து வீசியிருக்கும் இந்த அரசை, குடிமக்களுக்கான அரசு என்று கூறுவதெப்படி?

 

நாட்டின் கனிம வளங்களையெல்லாம் அற்ப விலைக்கு விற்று, சொற்ப வேலைவாய்ப்பை உண்டாக்குவதால் சலுகை எனக்கூறி எல்லாவித வரிகளையும் விலக்கி, லாப உத்திரவாதம் என்று சுற்றுச்சூழலை, நீர்நிலைகளை, விவசாய நிலங்களை, காற்றை மாசுபடுத்த அனுமதித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பது என்ற பெயரில் தொழிலாளர்களை கசக்கிப்பிழிவதை கண்டும்காணமலும் இருந்து, வேலையிழப்பு பயம்காட்டி தொழிலாளர்களின் உழைப்பாளிகளின் எல்லவித உரிமைகளையும் பரித்தெடுத்து, இயல்பாக இவைகளை எதிர்த்துக் கிளர்ந்தெழும் போராட்டங்களை அடக்க அடக்குமுறைச் சட்டங்களை இயற்றி, அனைத்து வகையிலும் முதலாளிகளின் லாப வெறிக்காக உழைக்கும் மக்களை வதைக்கும் இந்த அரசை குடிமக்களுக்கான அரசு என்று கூறுவதெப்படி?

 

வணிகர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என எந்தப்பிரிவு மக்களையாவது விட்டுவைத்திருக்கிறதா இந்த அரசும் அதன் கொள்கைகளும். பின் எந்த அடிப்படையில் குடிமக்களுக்கான அரசுமுறையாக இந்த அரசை கொண்டாடுவது? நாட்டு மக்களின் நலன்களுக்கான திட்டம் என விளம்பரப்படுத்தப்பட்டு தொடங்கப்படும் எந்தத்திட்டமும் அதன் உள்நோக்கில் மக்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. எல்லாத்தட்டு மக்களுமே அரசின் திட்டங்களினால் பாதிப்படையவே செய்கிறார்கள். கடவுள் என்ற ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை எனும் ஆன்மீக நம்பிக்கையையும், நடப்பில் நாம் முனைந்து உழைக்காமல் எதுவும் நடப்பதில்லை எனும் யதார்த்தத்தையும் தனித்தனியாக புரிந்துகொண்டு எப்படி மக்கள் செயல்படுகிறார்களோ, அதுபோலவே குடி மக்களுக்கான அரசு என்பதையும், அரசு நமக்கு எதிராகவே செயல்படுகிறது என்பதையும் தனித்தனியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். முன்னது கற்பிதமாகவும், பின்னது நடைமுறையாகவும் கடைப்பிடிக்கப்படுவதனால் தான் அவர்களால் ஒரு கொண்டாட்டமாக குடியர‌சு தினம், சுதந்திர தினம் போன்றவற்றை கொண்டாடமுடிகிறது.

ஒரு போதையான மயக்கத்தைப் போல் நாட்டு மக்களிடம் மந்தை மனோநிலையை உருவாக்கி கொண்டாட்டத்தைத் திணிப்பதையே தேசபக்தியாக உருவகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நாடு என்பது அனைத்து வகையிலும் அதன் மக்களை எதிரொலிப்பது, அனைத்து வகையிலும் அந்த மக்களை மறுதலித்துவிட்டு அதையே நாட்டுப்பற்று என்பது உச்சகட்ட மோசடி. இந்த மோசடியின் குறிய‌டையாளமாகத் தான் கொடியேற்றிக் கொண்டாடுவது.

 

ஆனால் பாஜக கும்பல் இந்த கொடியேற்றுவதில் கூட தங்கள் பாசிச அரசியலை காட்டிக்கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வாதார உரிமைகள் பறிக்கப்படுவதற்கு துணை நிற்கும் ஒரு கட்சி கொடியேற்றுவதை உரிமையாக முன்வைக்கிறது. காஷ்மீரின் சிரிநகரில் லால்சௌக் பகுதியில் கொடியேற்றுவதற்கு நாட்டின் பல பகுதியிலிருந்தும் பேரணியாக செல்வது என்று அறிவித்திருக்கிறது. இதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஆளும் காங்கிரஸ் கும்பல் அனுமதிக்க மறுக்கிறது. நாட்டின் எந்தப் பகுதியிலும் குடியரசு தினத்தன்று கொடியேற்றுவது மக்களைன் உரிமை என்றும், அதைத்தடுப்பது தீவிரவாதிகளை, பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் செயல் என்றும் விளக்கம் சொல்லி போலியான நாட்டுப்பற்றை விசிரிவருகிறது.

 

அயோத்தி ராமர் கோவில் விவகாரம், கட்டைப்பஞ்சாயத்திற்குப் பிறகு உ.பி.யில் கூட பா.ஜ.க.வுக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பது நிச்சய‌மில்லை; குஜராத் படுகொலை போல ஒரு கலவரத்தை நடத்தினால், அதற்கு எதிர்வினையாகக் குண்டு வெடிக்கும் உத்தரவாதம் உண்டே தவிர, நாடெங்கும் வாக்குகளை அள்ள முடியுமா என்பது ஐயம்தான். அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்தால், அமெரிக்க முதலாளிகளுக்கு கோபம் வந்து, முதலுக்கே மோசமாகப் போய் விடும். விலைவாசி உயர்வினால், தற்பொழுது பா.ஜ.க. ஆளுங்கட்சியாக உள்ள மாநிலங்களிலும் அதிருப்தி தலைவிரித்தாடுகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை மறைப்பதிலும், கூட்டுக்குழுவை தீர்வாக காட்டி கூச்சலிட்டு முடக்கியதிலும் கொஞ்சம் பலன் கிடைத்திருப்பதாய் தெரியவே அதே வழியில் இந்த கொடியேற்றலை பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது.

 

காஷ்மீர் இந்தியாவின் பகுதி, அங்கு கொடியேற்றுவதை தடுக்க நினைப்பது பிரிவினைவாதம், தேசவிரோதம் என நினைப்பவர்களுக்கு, அந்த மக்கள் தாங்கள் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இருப்பதாக கருதப்படுவதை எதிர்க்கிறார்கள் என்பது நினைவுக்கு வருவதேயில்லை. பிரிவினைவாதம் என்பவர்கள் அந்த மக்களுக்கு விரோதமாக அவர்களின் நிலத்தை இந்தியாதான் தன் இராணுவ பலத்தினால் பிடித்து வைத்திருக்கிறது என்பது நினைவுக்கு வருவதேயில்லை. அந்த மக்களிடமே வாக்கெடுப்பு நடத்துகிறோம் என்று ஐநாவிடம் வாக்குறுதி கொடுத்திருந்தும் இன்றுவரை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது நினைவுக்கு வருவதேயில்லை.

 

இதுபோல் உண்மைகளை மக்களிடமிருந்து மறைத்து போலியான, போதையான நாட்டுப்பற்றை மக்களிடம் ஊட்டுவதன் மூலம் தங்களின் கோரமுகத்தை மறைத்து வருகிறார்கள். இவற்றினின்று விடுபட்டு மக்கள் உண்மையை உணரும் நாள் தான் கொண்டாட்டத்திற்கு போராட்டத்திற்கு உரிய நாளேயன்றி, நாளை (ஜனவரி 26) எந்தவிதத்திலும் கொண்டாட்டத்திற்கு உரியதல்ல‌.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

8 thoughts on “கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்

 1. இந்திய ஜனநாயகம் என்பது தலை வெட்டப்பட்ட கோழி மாதிரி. அது இன்னும் சில தூரம் ஓடலாம், ஆனால் அதற்கு உயிரில்லை என்பதே உண்மை.

 2. குடிமக்களை வதைத்து அவர் பெயராலே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துகொண்டு கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு வேண்டுமானால் கொண்டாட்டமாயிருக்கலாம். குடிமக்களுக்கு இல்லையே. எதற்காக குடியரசு கொண்டாட்டம் அவர்களுக்கு?

 3. ஆடு(மா(க்)கள்) நனையுதேன்னு கம்யூனிச ஓநாய் அழுததாம் !!!

 4. செங்கொடி கூறிற்று!

  சேற்றுக்குழந்தாய்!

  நீ மூவர்ணக்கொடியோ

  (அ)

  காவிக்கொடியோ

  (அ)

  சமாதானக்கொடியோ

  (அ)

  செங்கொடி ஏந்தினும்

  எம்மைப்போன்ற

  ஓநாய்கட்கு இறையாவது உறுதி !!!

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s