பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !
போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!
கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!


அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு

23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் தேதி தொலைக்காட்சியில் அச்செய்தியை கவனித்த பலரின் எண்ணங்களில் உதித்தவை மேலே கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்கும்.
ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா?

மேலே வெளிப்பட்ட வார்ர்த்தையின் வடிவத்தை மட்டுமே மாற்றியமைத்து ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ” குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்”. கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.

இப்போது 23-ம் தேதிக்குச் செல்வோம், எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து “பஸ் டே” விழாவை கொண்டாட வந்தவர்கள் ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள் திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன்திட்டத்தோடு(preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத்தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள்சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

ஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் “லத்தி சார்ஜ்” ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது.

கலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக்கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது,ரத்தக்கணக்குச் சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.

தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் “தம்பி” என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.

அவர் அந்த ஆசிரியர் மதிப்பெண் போடமாட்டார், அவர் எப்போதும் ஆப்செண்ட் போடுவார் , என்ற எண்ணங்கள் எல்லாம் மறைந்து போய் உண்மையாக மாணவர்களாக களமிறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். மதியம் 2.15க்கு தொடங்கிய வெறியாட்டம் 3.30 வரை நீடித்தது.

இணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் “ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க?” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா? நான் நிறுத்துறேன்?” என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல பதிலளித்து இருக்கிறார் இணைஆணையர் சாரங்கன். மாணவர்கள் மீது வழக்கு பதியப்படாதென அவர் உறுதியளித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

காவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது, அவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூடாது என நிர்வாகத்தை நிர்பந்தித்தது. ஒவ்வொரு வருடமும் பீஸ் கூட கட்ட வக்கற்ற அந்த ஏழை மாணவர்கள் ரத்தம் சிந்தியபடி அலைந்தார்கள். ஆறாத ரத்தத்துடன் அலைந்தபடியே வேறுவழியின்றி வீடுகளுக்கு சென்றார்கள்.

இதோ காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டிருக்கிறது மாணவர்களுக்கு மட்டும், வேலை நாளாக கணக்கு காட்டிவிட்டு கல்லூரியில் கையெழுத்து போட்டுவிட்டு வெதுப்பிக்கிடக்கிறார்கள் ஆசிரியர்களும், அலுவலர்களும். 170 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை , எளிய மாணவர்களுக்காக திறந்திருந்த அக்கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. விடுதிகளில் இனி இடம் கிடைக்குமா என தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள் மாணவர்கள். வெளியே ரத்தவெறியோடு காத்திருக்கிறது போலீசு.

ஆம் உண்மைதான், தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாணவர் சமூகம், ஆறாத செங்குருதியோடு உலாவிக்கொண்டிருக்கிறது.

***********************************************************

ஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன் கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது? ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது? எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது? ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.


நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன்

எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர்? இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம். மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.

பேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம் பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத்தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.

பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள்ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப்போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.

இந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச்சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் யாருக்காக? ஏழை எளிய மக்களுக்காகவா? அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா? இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே! ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.

அன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.

காசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம்? நோக்கம் ஒன்று தான் !. இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. ” சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா? ” என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப்போகின்றதா என்ன?

ஈராண்டுகளுக்கு முன்புவரை “ரூட்” பிரச்சினைக்காக அடித்துக்கொண்ட மாணவர்கள் தற்போது வேறுபாடுகளை மறந்து கல்லூரியைக்காக்க களத்தில் நிற்கிறார்கள். அதனால்தான் தங்களினுடைய ஆசிரியர்களின் கதறல்களை பொறுக்கமுடியவில்லை அவர்களால். தாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய கல்லூரி மைதானத்தை, சோற்றுக்கே வழியின்றி இருந்த தங்களுக்கு வாழ்வளித்த கல்லூரி நொறுக்கப்படுவதை, தாங்கள் சாய்ந்திருந்த இருக்கைகள், எழுதி கிறுக்கிய மேசைகள் எல்லாம் உடைக்கப்படுவதை அவர்களால் பொறுக்கமுடியாது கிளர்ந்தெழுந்து பேராசிரியர்களையும், கல்லூரி அலுவலர்களையும் காத்தார்கள் மாணவர்கள்.

உடைக்கப்பட்டது பச்சையப்பன் சிலை மட்டுமல்ல அது நம் வாழ்வுரிமையை உடைப்பதாய் உணர்கிறார்கள் மாணவர்கள். சிலையுடைப்பின் தொடர்ச்சி கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள்.

அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.

இது ஏதோ “பஸ் டே” பிரச்சினை என்று மட்டும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. இது பஸ்டே பிரச்சினை அல்ல என்பது மற்றவர்களை விட இணை ஆணையர் சாரங்கனுக்கு நன்றாகவே தெரியும். இதே பச்சையப்பன் கல்லூரியில் 81-ம் ஆண்டுப்பிரிவில் படித்த அவர் எத்தனை பேருந்துகளை உடைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. தாங்கள் மாணவர் பருவத்தில் செய்த சிறுசிறு தவறுகளைத்தான் இப்போதைய மாணவர்களும் செய்கிறார்கள். அப்போது இனித்தது, இப்போது கசக்கிறது. இழுத்துப்போட்டு மாட்டைப்போல் அடிப்பதால் மட்டும் இப்பிரசினை தீர்ந்து விடப்போவதில்லை. மாணவர்களை கலாச்சார ரீதியிலேயே மாற்ற வேண்டியிருக்கிறது. ஆக ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புலனாகிறது பஸ்ஸிலே ரூட் அடிப்போருக்கும் , கல் விடுவோருக்கும் எந்த வேலை கிடைக்கிறதோ இல்லையோ இணை ஆணையர் பதவி கண்டிப்பாய் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.

NDTVக்கு பேட்டியளித்த இணை ஆணையர் சாரங்கன் ” மாணவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டுறங்கன்னா உள்ள ஏதோ சக்தி அவங்கள இயக்குது” என்றார். அவருக்குத்தெரியுமோ தெரியாதோ நமக்குத் தெரியாது. அந்த சக்திக்குப்பெயர் “மாணவர் சக்தி “. தன் கல்லூரி ஆசிரியர்கள் தாக்கப்படுகையில், தன் கல்லூரி அடித்து நொறுக்கப்படுகையில், தன்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்காக அது எரிமலையாய் வெடித்துக்கிளம்பும்.

மாணவர்களுக்காக ஆசிரியர்களும், ஆசிரியர்களுக்காக மாணவர்களும், இருவரும் கல்லூரிக்காக போராடும் தருணம் வந்து விட்டது. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கையிலே அத்தருணத்திலே கூட போராடும் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் போராடினார்கள்-போராடுகிறார்கள்-போராடுவார்கள்.

நிகழ்காலத்தின் நிகழ்வுகள் தான் வரலாறாய் மாறுகின்றன. இந்தி எதிர்ப்புப்போரில் முக்கியக் களமாய் நின்ற பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர் வரலாறு மீண்டும் திரும்புகிறது.

மாணவர்களாக, முன்னாள் மாணவர்களாக, பேராசிரியர்களாக, அலுவல பணியாளர்களாக, மனசாட்சியுள்ள மனிதர்களாக, உழைக்கும் மக்களாக ஒன்று சேர வேண்டிய நேரமிது. ராணி மேரிக்கல்லூரி மாணவிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைவு கூர்வோம். ” கடந்த நேரமும், தவறவிட்ட வாய்ப்பும்” மீண்டும் கிடைப்பதில்லை. இந்த நல்ல’ நேரத்தைப் பயன்படுத்தி மாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு இறந்த காலமாகிவிடும்.

இதோ !!!!

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம்
நாம் ?

பு.மா.இ.மு

சென்னை

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

இந்திய துணைக்கண்டத்தின் புதிய மதம் கிரிக்கெட்

ஒரு விளையாட்டுக்கு இத்தனை முக்கியத்துவமா? என்றாலோ, கிரிக்கெட்டின் மீது இப்படி காதல் கொண்டலைவது சரிதானா? என்றாலோ நம்மை புழுவை விடவும் கீழாய் கருதத்துணியும் மக்களிடையே இருந்து கொண்டிருக்கிறோம். ஊன், உறக்கம், பணி என அனைத்தையும் கடந்த பக்தி போதையின் பரவசத்தைத்தரும் ஒன்றாக கிரிக்கெட் ஆகிவிட்டது. சாதாரணமாக இரண்டு நாடுகள் ஆடும் போதுகளிலேயே இது தான் நிலமை எனும்போது உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும்போது கேட்கவும் வேண்டுமோ. உற்சவம் தான்.

 

ஆனால், நம்மைச் சூழ நடக்கும் அனைத்தையும் விட ஒரு விளையாட்டு நம் கவனத்தை விழுங்கிவிட முடிவது எப்படி நம்முள் இயல்பாய் ஏற்பட்டிருக்க முடியும்? மகிழ்வாய் வாழ்வது, சொகுசாய் வாழ்வது எனும் இரண்டின் வேறுபாட்டையும் பிரித்தறிய முடியாதபடி ஒன்றாய் கருதிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் இந்தக் கேள்வியின் பொருளைச் செரிப்பது சற்றுக் கடினம் தான். காரணம், நம்முடைய விருப்பங்கள் நம்மீது திணிக்கப்படுபவை என்பதை நாம் இன்னும் முழுமையாய் அறிந்துகொண்டிருக்கவில்லை. விளையாட்டு என்பது நம்முடைய உற்பத்தித் திறனைச் சார்ந்து அதனை மேம்படுத்திக்கொள்ள நாம் ஈடுபடும் ஒரு கலைவடிவம் என்பது மாறி தொழில்நுட்பமும் சந்தை வணிகமும் அதில் கலந்து விளையாட்டு என்பது உற்பத்திப் பொருளான போது நாம் அதன் நுகர்வு அடிமையாகிப் போனோம்.

 

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆடப்படும் கால்பந்து விளையாட்டு இங்கு எந்தக் கவனத்தையும் ஈர்க்காத ஒன்றாக இருக்கிறது. பல நாடுகளில் கிரிக்கெட் என்ற ஆட்டமே அறிமுகமாகியிருக்கவில்லை. இந்த இரண்டு இடங்களின் மக்களையும் பொதுவான ஒரு ஒப்பீடு செய்து பார்த்தாலே அந்தத்தப் பகுதிகளில் குறிப்பிட்ட விளையாட்டுகள் எப்படி மக்களிடம் திணிக்கப்பட்டு கொள்ளை லாபமீட்டும் தொழிலாக நடந்துவருகிறது என்பது புரியும். இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தின் விளைவாக உலகின் எந்தப்பகுதியில் விளையாடினாலும் நேரடியாகக் க்காணும் வசதி முதலாக‌, அனைத்து செய்தி ஊடகங்களும் தொடர்ச்சியாக இது குறித்த செய்திகளை வெளியிட்டு மக்களின் நினைவெல்லையிலிருந்து அகன்றுவிடாதவண்ணம் இருத்திவைப்பது ஈறாக அத்தனை வழிகளிலும் இது மக்களின் மனதில் பதியவைக்கப்படுவதினாலேயே சாத்தியப் படுத்தப்பட்டிருக்கிறது. ஆழமான புரிதல் இல்லாத யாரும் இதில் தனிப்பாட்ட விருப்பம் எதையும் கொண்டுவிட முடியாது.

 

இந்த உலகக் கோப்பை போட்டியைப் பொருத்தவரை, கடந்த போட்டியில் முதலாளிகளுக்கு ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக எச்சரிக்கையுடன் முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் கூட ஆயிரக்கணக்கான கோடிகள் இதற்காக செலவிடப்பட்டுள்ளன. விளையாடுபவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் உட்பட இதில் செலவு செய்யப்படும் அனைத்திற்கும் பகரமாக பலமடங்குகளில் லாபமீட்டாவிட்டால் இந்த விளையாட்டு சீந்துவாரின்றிப் போகும். ஆனால் அவ்வாறில்லாமல் மேலும் மேலும் இதில் கொட்டப்படுவதிலிருந்தே இது எந்த அளவுக்கு வெற்றிகரமான தொழிலாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 

கிரிக்கெட் விளையாட்டில் கோடிகளைக் கொட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபமென்ன? இந்தியச் சந்தையைக் கைப்பற்றுவதுதான். உலக அளவில் கிரிக்கெட்டிலிருந்து கிடைக்கும் மொத்த வருவாயில் 70 விழுக்காடு இந்தியாவிலிருந்து கிடைக்கிறது. பெப்சி, கோக், நைக் ஷூ உள்ளிட்ட பல நிறுவனங்கள் கிரிக்கெட்டைப் பயன்படுத்தி தங்கள் சந்தையை விரிவுபடுத்திக்கொண்டதன் மூலம் பல்லாயிரம் கோடிகளை லாபமாக ஈட்டியிருக்கின்றன. இந்தியாவில் இந்த உலகக் கோப்பை போட்டியை மட்டும் 30லிருந்து 40 கோடி பேர்வரை காண்பார்கள் என கணிக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் தங்கள் உற்பத்திப் பொருட்களை விளம்பரங்களாக மீண்டும் மீண்டும் காட்டி பதியவைக்கப்படுவதன் மூலமே இந்த விற்பனை சாத்தியப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆக, பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை தொடர்ச்சியாக பார்க்கவைப்பதற்காகவே கிரிக்கெட் பயன்படுத்தப்படுகிறது. சரி, இந்த விளம்பரங்களுக்காக செலவிடப்படும் பணத்தை அந்த நிறுவனங்கள் உற்பத்திச் செலவுகளாகத்தான் வகைப்படுத்துகின்றன. அதாவது உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையில் கிரிக்கெட்டிற்காக செலவிடப்படும் தொகையும் அடக்கம். அதையும் உள்ளடக்கித்தான் விலை தீர்மானிக்கப்படுகிறது. என்றால் அந்தப் பணத்தைச் செலுத்துவது யார்? சந்தேகமென்ன மக்கள் தான். சுற்றிவளைத்து மக்களிடம் இருக்கும் கிரிக்கெட் மோகம் மக்களைச் சுரண்டி முதலாளிகளிடம் சேர்க்கும் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் விருப்பப்பட்டு தேர்ந்தெடுக்கிறோம் என்றோ, தேசபக்தியின் அடையாளம் என்றோ கூற முடியுமா?

 

லட்சக்கணக்கான விவசாயிகள் செத்து வீழ்ந்தபோது ஏற்படாத‌ சோகமும், கோபமும் ஒரு போட்டியில் தோற்கும்போது ஏற்படுகிறது என்றால் எந்த விதத்தில் இது தேசபக்தி? ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் அதிகம் வாழும் நாடு எனும்போது ஏற்படாத அவமானம் ஒரு போட்டியில் தோற்கும்போது ஏற்படுகிறது என்றால் எந்த அடிப்படையில் இது தேசபக்தி? இந்தியர்கள் விளையாடினால் எதிரில் யாராக இருந்தாலும் தோற்க வேண்டும் என நினைப்பது எப்படி தேசபக்தியாகும்? ஐ.பி.எல் போட்டிகளின் போது எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தன்னைச் சார்ந்த அணியாக இருந்தால் ஏற்றுக்கொண்டு அதே விளையாட்டு வீரன் அவ‌னுடைய நாட்டு அணியில் விளையாடும் போது எதிரியாக பார்ப்பது விளையாட்டா? வெறியா? இதை எப்படி தேசபக்தி என்பது?

இதில் இந்திய அணி விளையாடுகிறது, இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள் என்பதே மோசடியானது. விளையாடுவது அரசு தேர்ந்தெடுத்து அனுப்பும் அணியல்ல அது. பிசிசிஐ எனும் தனியார் அமைப்பு தேர்ந்தெடுத்து, அதனுடைய கட்டுப்பாட்டிலிருந்து ஆடும் அணி என்பதே சரியானது, தவிரவும் விளையாடுபவர்கள் பணத்திற்காகவே விளையாடுகிறார்கள். இதன் மீது தேசியம் வெளிப்பூச்சாக பூசப்பட்டிருக்கிறது. நமக்கு கிரிக்கெட் மீதான மோகம் வற்றிவிடக்கூடாது என்பதற்காக பூசப்பட்ட வெளிப்பூச்சு தான் இந்திய அணி என்பது

 

மட்டுமல்லாது, வெளியில் தெரியும் அத்தனை பகுதிகளிலும் விளம்பரங்களை எழுதி நடமாடும் விளம்பரத்தட்டியாக நின்று ஆடுபவனை நாட்டுக்காக விளையாடுபவன் என்பது எந்த வகையில் பொருந்தும்? மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்ஸிங் தொடங்கி அனைத்து ஊழல்களிலும் ஈடுபட்டு விளையாட்டின் முடிவை முன்கூட்டியே தீர்மானிக்கும் அளவுக்கு சென்றுவிட்ட பிறகும் நாட்டுக்காக விளையாடுகிறார்கள் என்பதா? வெளிப்படையாக ஒப்பந்தம் போட்டு மட்டையிலிருக்கும் நிறுவனந்த்தின் பெயரை கேமராவில் காண்பித்தால் அதற்கு தனியே காசு என விளையாட்டை அவர்கள் தொழிலாக்கி விட்டிருக்க, சொந்த வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட் பார்க்கும் இரசிகனை என்னவென்பது?

 

கல்வி, மருத்துவம் போன்றவற்றை மக்களுக்கு வழங்குவதற்காக அரசு மக்களிடம் சேவை வரி விதிக்கிறது. ஆனால் இந்த கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது சேவை என்று கூறி பிசிசிஐ எனும் தனியார் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அரசு வரிவிலக்கு அளித்திருப்பதை கிரிக்கெட் இரசிகன் என்னவென்று புரிந்து கொள்வான்?

 

கிரிக்கெட் எனும் விளையாட்டைச் சூழ்ந்திருக்கும் இவை எதும் எந்த விதத்திலும் சலனப்படுத்தாது, அதில் அடிக்கப்படும் ஃபோர்களும் சிக்ஸர்களும் மட்டும் பரவசத்தைத்தரும் எனக் கூறும் ஒரு ரசிகன் மனிதனாக இருக்கமுடியுமா என்பதை சிந்தித்துப் பார்க்க இதைவிட பொருத்தமான தருணம் வேறு இருக்க முடியாது.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

மாவோயிச வன்முறையும், ஜெயமோகன் வன்முறையும் 1

அண்மையில் நண்பர் வெள்ளை, பினாயக் சென் பற்றிய கட்டுரையில் ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் மாவோயிசம் பற்றிய கட்டுரை எழுதியிருப்பதாகவும், அதை மறுக்க முடியுமா? என்றும் வினா எழுப்பியிருந்தார். பொதுவாக நான் ஜெயமோகன் தளத்தை தொடராக பார்க்கும் பழக்கமுள்ளவன் அல்ல. தனிப்பட்ட காரணம் என்று வேறொன்றுமில்லை, கதைகள் புதினங்கள் என படிக்கும் பழக்கமில்லையாதலால் தான். மாவோயிச வன்முறை என்ற தலைப்பில் நான்கு பகுதியாக அவர் எழுதியிருக்கும் நீள் கட்டுரைக்கான மறுப்பாகவே இப்பதிவு எழுதப்படுகிறது. தேவை ஏற்படின் அவரின் வேறு சில கட்டுரைகளையும் உள்ளடக்கி இது சில இடுகைகளாக நீளும். நண்பர் வெள்ளை அவர்களுக்கு நன்றி.

 

உண்மையில் எது பீர் புரட்சியாக இருக்கிறது?

 

ஒருவரின் சொல், செயல் அனைத்தின் பின்னாலும் தொழிற்படுவது அவரது வர்க்கமே. வர்க்கத்தை, வர்க்க அரசியலை விலக்கிவிட்டு யாராலும் செயல்பட்டுவிட முடியாது. வெகுமக்களின் செயல்களிளூடான வர்க்க அரசியலை அடையாளம் கண்டுகொள்வது எளிதாக இருக்கும். ஏனென்றால் அது அவர்களிடம் மரபாக, பழக்கமாக, கருத்தாக இருந்துவருவதன் தொடர்ச்சியாக இருக்கும். ஆனால் சிலரின் செயல்பாடுகளில் அதைப் பிரித்தறிவது நுணுக்கமான அணுகல் தேவைப்படும் ஒன்றாக இருக்கும். அந்தவகையில், ஜெயமோகன் அவர்களின் “மாவோயிஸ வன்முறை”யும் அவரின் வர்க்க அரசியலை மறைக்கும் எழுத்து எத்தனங்களோடு அமைந்திருக்கிறது. நான்கு பகுதிகளாக அவர் எழுதியிருக்கும் அந்த நீள் கட்டுரையை சாதாரணமாக படிக்கும் அவரின் வாசகர்கள், அவரே கூறியிருப்பது போல, மனித மனங்களை உய்த்துணரக்கூடிய எழுத்தாளனுக்குறிய கோணத்தில், இந்திய வரலாற்றை தொடர்ச்சியாக கற்றுவரும் அடிப்படையில், மண்ணைச் சுற்றிவந்த பயணியின் அனுபவத்தில் மாவோயிச பிரச்ச‌னையை பல்வேறு தளங்களில் அலசி எழுதப்பட்ட ஒன்றாகவே எண்ணுவர். ஆனாலும் அவரின் விரிவான அந்த அலசலில் ஊடாடியிருக்கும் அவரின் நோக்கம் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவே செய்கிறது.

 

கம்யூனிசம், பொதுவுடமை எனும் சொற்களை பயன்படுத்துவனின்று கவனமாக தவிர்க்கப்பட்டிருக்கும் அந்த கட்டுரையின் ஒட்டுமொத்த நோக்கம் கம்யூனிச எதிர்ப்பே. அதற்கு மாவோயிசம் ஒரு குறியீட்டு மையமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இடதுசாரி ஊடகவியலாளர்களிலிருந்து தொடங்கி மாவோயிஸ்டுகளின் மீதான விமர்சனமாக பயணித்து மார்க்சிய மேற்கோள்களின் உதவியுடன் முதலாளித்துவத்திற்கு மார்க்சியம் மாற்றாக முடியாது என முடிக்கப்பட்டிருக்கிறது.

 

அரசியல் நோக்கில் கருத்தாடும் வழக்கமும், நேரமும், உழைப்பும் எனக்கில்லை, அதனால் அரசியலை தவிர்த்துவிட்டு அனுகியிருக்கிறேன், எனக்கூறிக்கொண்டே தன்னுடைய மார்க்சிய எதிர்ப்பு அரசியலை நெய்து தந்திருக்கிறார். அதாவது எரியும் ஒரு பிரச்சனையின் அடிக்கொள்ளியை தவிர்த்துவிட்டு நெருப்பின் சாதக பாதக விளைவுகளை பார்க்கிறேன் எனக் கூறிக்கொண்டே அந்த நெருப்புக்கு தன்னுடைய கொள்ளியைத் தருகிறார்.

 

மாவோயிச அரசியலைப் பற்றி எழுதப்புகுமுன் தன்னுடைய வாசகர்களின் உளப்பாங்கை சாதகமாக வளைக்கும் மனப்பாங்குடன் பீர்கோப்பை புரட்சி எனும் உருவகத்தில் ஊடகவியலாளர்கள் பற்றிய சித்திரத்தை முன்வைக்கிறார். ஊடகவியலாளர்கள் குறித்து அவர் வரைந்திருக்கும் சித்திரத்தை முழுமையாக மறுக்க முடியாது. ஒட்டுமொத்தத் தன்மையில் அது அப்படித்தான் இருக்கிறது என்றாலும், எதை எங்கு பொருத்த வேண்டும் என்பதில் தான் அவரின் எழுத்தாள அனுபவத்தை பயன்படுத்தி மெய்யேபோன்ற சித்திரத்தை வரைந்து காட்டுகிறார்.

 

நாட்டின் பெருமப்பான்மை மக்கள் நாளொன்றுக்கு எழுபது ரூபாய் வருமானத்தில் வாழ்க்கையைக் கடக்கிறார்கள், ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கும் சிறுபான்மை மக்கள் பீர்க்கோப்பை புரட்சி செய்கிறார்கள். இதில் அவர் தன்னை எங்கு இருத்திக்கொள்கிறார்? தன்னுடைய ஒரு மாத ஊதியம் அவர்களின் ஒருவேளைக் குடிப்பணம் என்பதன் மூலமும், அவர்கள் ஆயுதப் புரட்சியை ஆதரிக்கிறார்கள் நான் எதிர்க்கிறேன் என்பதன் மூலமும் நாளொன்றுக்கு 70 ரூபாய் வருமானம் பெறும் பெரும்பான்மை மக்களுடனும் இல்லாமல் மாதம் ஐம்பதாயிரம் வாங்கும் சிறுபான்மையினருடனும் இல்லாமல் தனக்கென ஒரு சிம்மாசனத்தை (ந‌டுநிலைமை(!)) தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். ஏனென்றால் 70 ரூபாய் தினக்கூலியில் நாட்களை கடத்திக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றி அவர் கவலைப்படப் போவதில்லை, ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களின் பேச்சளவிலான அம்மக்களின் ஆதர‌வையும் சரியில்லை என காட்ட‌ வேண்டியதிருக்கிறது.

 

அலைக்கற்றை ஊழலின் போது, ஊடகவியலாளர்கள், அந்த‌ பாவனை தரும் வசதியை பயன்படுத்தி அதிகாரத்தரகு வேலை செய்திருப்பது அம்பலமானது. செய்தி ஊடகங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதும், தம் வர்க்க நலன் சார்ந்த கருத்துக்களை மக்களிடம் பரப்புவதற்கும், அல்லாதவற்றை மக்களிடமிருந்து மறைப்பதற்கும் எந்த எல்லைக்குச் செல்லவும் தயாராக இருக்கும் என்பதும் யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. அவர்களின் ‘லாபியிங்’ வேலைகள் திசையை மறைத்து நடப்பனவும் அல்ல.

 

அதேபோல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் ரசனையுடன் மதுவை ருசித்துக்கொண்டே, சாலைகளில் படுத்துறங்கும் மக்களின் துயரம் குறித்து கவலைப்படும் ‘தன்னார்வப்’ பிதாமகர்களின் கவலை, அவர்கள் அள்ளிவிடும் பணம், இதெல்லாம் எந்த நோக்கில் வழிகின்றன, பாய்கின்றன என்று பலமுறை அம்பலப்பட்டிருக்கிறது, படுத்தப்பட்டிருக்கிறது.

இவர்களின், இவர்களை ஒத்தவர்களின் கவலையும், பரிவும்; ஊடகவியலாளர்களின் கட்டுரைகளில் தெரித்து விழும் சிவப்பும் எத்தகைய உள்ளீடுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை பாமரர்களுக்கு சற்றுமேல் விழிப்புடனிருப்பவர்களுக்கு எளிதில் விளங்கக்கூடியவை தாம். ஆனால் இந்த பீர்க்கோப்பை புரட்சியை எதற்கு எதிராக முன்னிருத்துகிறார் அல்லது இந்த பீர்க்கோப்பை புரட்சியை எதனுடன் தொடர்புபடுத்துகிறார் என்பதில் தான் அவரது அரசியல் இழையாடுகிறது.

 

இணையத்தில் புரட்சிகரமாக எழுதுபவர்களில், ஊடகங்களில் அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துபவர்களில் களத்தில் செயல்படாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் களத்தில் செயல்படாதவர்கள் என்பதினாலேயே அவர்களின் கருத்துகள் பீர்க்கோப்பை நுரையில் காணாமல் போய்விடுமா? எளிமைப்படுத்திப் பார்த்தால் யதார்த்தத்தை விரித்துக்காட்டி உண்மையை மறைப்பது. அதாவது, ஊடகவியலாளர்களின் லாபி, அவர்கள் சுயம் கருதி வெளிப்படுத்தும் அரசுக்கு எதிரான தன்மைகள் எனும் யதார்த்தத்தை விரித்துக்காட்டி, மெய்யாகவே கொள்கைப்பிடிப்புடனும், அரசின் பயங்கரவாதத்தை, அதன் ஒதுக்கல்வாதத்தை அருகிருந்து கண்ட வலியுடன் எழுதுபவர்களையும் கூட மறைத்துவிடுவது அல்லது அந்தக் கும்பலில் இவர்களையும் சேர்த்துவிடுவது. குறிப்பாக அருந்ததிராய், சாய்நாத், பினாயக் சென் போன்றவர்களின் எழுத்தும் செயல்பாடும் பீர்நுரையில் அடங்குவதுதான் என்று குறிப்பிட்டுக் காட்டாமல் குறிப்பால் உணர்த்துகிறார்.

 

ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? அதன் தேவை என்ன? நீள்கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள் அவருடைய அனுபவத்தினூடாக கட்டுரையில் பயணிக்க வேண்டுமேயல்லாது, தங்களுடைய சொந்த வாசிப்பனுபவத்தினூடாக, மெய்யான நிலைகளின் அறிதல்களினூடாக கட்டுரையில் பயணப்பட்டு விடக்கூடாது என்பது தான். அவருடைய நோக்கமான கம்யூனிச எதிர்ப்பை உறையிட்டுக்காட்டுவதற்கு அவருடைய சொந்தப்பார்வைதான் பயன்படுமேயன்றி, வாசகனின் விழிப்புணர்வை தூண்டுவது பயன்படாது. அதனால் தான் அரசியல் நோக்கராக சொல்லவில்லை என்றும் எழுத்தாளன் என்ற தகுதியில் நின்று சொல்வதாகவும் தன்னுடைய ‘ஹோதா’வை தொடக்கத்திலேயே கடை பரப்பிவிடுகிறார்.

 

இப்போது சொல்லுங்கள் எது மெய்யான பீர்க்கோப்பை புரட்சி?

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

அரபுலக எழுச்சி: தேவை அரசை மாற்றுவதா? ஆளை மாற்றுவதா?

மொசாம்பிக்கில் புகையத் தொடங்கி, துனீசியாவில் பற்றி எரிந்து, எகிப்தின் வழியாக ஏமன், ஈரான், பஹ்ரைன் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது மக்கள் கிளர்ச்சி எனும் நெருப்பு. துனீசியாவின் பென் அலியும், எகிப்தின் ஹோஸ்னி முபாரக்கும் தப்பியோடிவிட்டனர். ஒரு வழியாக மக்கள் சீற்றம் தணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் எதற்காக மக்கள் கிளர்ந்தெழுந்தனரோ, எந்த நிலமை மக்களை போராடத்தூண்டியதோ அவை தக்கவைக்கப்பட்டிருக்கின்றன. இதில் வென்றது யார்? போராடிய மக்களா? திரை மறைவில் ஆடப்பட்ட சதுரங்கங்களினால் மக்கள் வெற்றியின் நாற்காலிகளில் அமரவைக்கப்பட்டிருப்பதைப் போன்ற மாயையில் தோல்வியின் அருகாமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முகம்மது எனும் வேலையற்ற ஒரு இளைஞனின் தற்கொலையிலிருந்து தொடங்கியிருந்தாலும், துனீசிய மக்களின் எழுச்சிக்கான காரணங்கள் பல ஆண்டுகளாகவே அங்கு மக்களைச் சூழ்ந்திருந்தன. வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கான சலுகைகள், பிரான்சின் மறுகாலனியாக்கத் திணிப்புகள் என மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் அத்தனை அம்சங்களும் துனீசியாவில் மையம் கொண்டிருந்தன. அன்றைய அதிபர் போர்கிபாவை விட உளவுத்துறை தலைவராக இருந்த பென் அலி தங்களுக்கு சிறப்பாக உதவுவார் என ஏகாதிபத்தியங்கள் தீர்மானித்தபோது துனீசியாவில் இராணுவக் கலகம் நடந்து பென் அலி அதிபரானார். ஆனால் இன்றைய மக்கள் எழுச்சி ஏகாதிபத்தியங்கள் தீர்மானித்து நடந்ததில்லை என்றாலும், அதன் முடிவை ஏகாதிபத்தியங்கள் தீர்மானித்துக்கொண்டிருக்கின்றன. பென் அலி கலவரங்களை(!) கட்டுப்படுத்திவிடுவார் என நம்பி அமைதிகாத்த அமெரிக்கா, வேறுவழியில்லை என்றானபோது, பென் அலி இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் தவறிவிட்டார் என்றாலும் மக்கள் வன்முறை செய்வதும் தவறுதான் என்பதுபோல் கருத்துக்களை உமிழ்ந்தது.

பென் அலி வெளியேறிய பின் ஃபுஆத் மெபாஸா தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. இரண்டு மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தாலும்; பென் அலியை தாங்கிப்பிடிப்பதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதி என மேற்குலகம் யாரைத் தூற்றியதோ அந்த ஷெய்க் ராஷித் அல் கனூசி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வேலைகள் ஏகாதிபத்தியங்களால் செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்காக கடந்த இருபது ஆண்டுகளாக லண்டனில் வசித்துவந்த ராஷித் அல் கனூசி துனீசியா திரும்பியுள்ளார். அவரின் கட்சியான ‘அன்னஹ்தா’ புதுப்பிக்கப்படுகிறது.

துனீசியாவுக்கு முகம்மது போல், எகிப்துக்கு கிடைத்த முகம்மது, காலித் செய்த். போலீஸால் காலித் செய்த்

காலித் செய்த்

கொல்லப்பட்ட செய்தி மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தினாலும் அதற்கான களம் ஏற்கனவே எகிப்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. சற்றேறக் குறைய எட்டு கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் எட்டு க்னீ (எகிப்திய நாணயம் தோராயமாக இரண்டு டாலர்) வருமானத்தில் பொழுதைக் கழிக்கிறார்கள் என்று ஐநாவின் அறிக்கை தெரிவிக்கிறது. உலக அளவில் மக்களை தாக்கும் அத்தனை முதலாளிய கொடூரங்களும் எகிப்திலும் உண்டு. ஆங்காங்கே உணவுக்கலகங்கள் நடைபெற்றுவந்தன. தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அரசை நிலைகுலைய வைத்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குப்ரா நகரில் ஏப்ரல் 6 அன்று நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 6 எனும் பெயரில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு தொடர்ந்து அது போராட்டங்களை நடத்திவந்தது.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்து மக்களைத் திசை திருப்ப வகுப்புக் கலவரங்கள் தூண்டி விடப்பட்டன. கிருஸ்தவ ஆலயங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டு, அல் கொய்தா செய்ததாக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. தொடர்து சில மத மோதல்கள் நடந்தன. மதமோதல்களுக்கு எதிராக அரசின் ஆதரவுடன் மதநல்லிணக்க இயக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு மனிதச் சங்கிலி போன்றவைகள் நடத்திக் காண்பிக்கப்பட்டன. ஆனாலும் இவையனைத்தையும் மீறி எகிப்திய போலிஸ் தினமான ஜனவரி 25ல் கெய்ரோவின் மையமான தஹ்ரீர் சதுக்கத்தில் மக்கள் ஒன்றுகூடி அரசுக்கெதிராக கிளர்ந்தனர்.

துனீசியாவைத் தொடர்ந்து எகிப்திலும் கிளர்ந்த மக்கள் எழுச்சியைக் கண்டு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் அதிர்ந்தன, குறிப்பாக இஸ்ரேல். எகிப்தின் போராட்டம் தங்களுக்கு எதிராக மக்கள் கைகளில் தொடர்ந்து இருப்பது ஆபத்து என உணர்ந்த ஏகாதிபத்தியங்கள் களத்தில் இறங்கின. முபாரக்கை பதவி விலகுமாறு அமெரிக்கா கோரியது. போராட்டத்திற்கு தலைமைதாங்கும் உத்தியுடன் எல்பராதே ஐநாவிலிருந்து எழுந்தருளினார். தொடக்கத்தில் இந்தப் போராட்டங்களிலிருந்து விலகியிருந்த முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி மக்கள் ஆதரவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் எண்ணத்துடன் மக்களுடன் இணைந்தது. பதவி விலக முடியாது என்றும் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் கூறிவந்த முபாரக் போராட்டம் தொடரவே, முடிவில் பதவி விலகினார். தற்போது இராணுவம் அரசை நடத்துகிறது. தேர்தல் நடத்தப்பட்டால் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் நிலையிலிருக்கிறது எகிப்து.

ஆனால், துனீசிய எகிப்திய மக்கள் இந்த மாற்றங்களைத் தான் விரும்பினார்களா? ஆள்பவர்களை மாற்றுவதற்காகத்தான் அவர்கள் போராடினர்களா? ஊடகங்கள் அப்படித்தான் சொல்லி வருகின்றன. சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி என குதூகலிக்கின்றன. சர்வாதிகாரிகளுக்கு எதிரான எச்சரிக்கை என்பதாக முன்தள்ளுகின்றன. ஆனால் மக்கள் சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராடவில்லை. ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவே போராடினார்கள். அந்த ஏகாதிபத்தியத்தின் உள்நாட்டு முகம் எனும் உள்ளடக்கத்திலேயே சர்வாதிகளுக்கு எதிரானதாக போராட்டம் இருந்தது. சர்வாதிகளை பதவி விலகச் சொல்லித்தான் முழக்கங்களை முன்வைத்தனர், ஆனால் அதன் காரணம் விலைவாசி உயர்வு உள்ளிட்ட முதலாளித்துவத்தின் விளைவுகள். இதை விரிவான பொருளில் மக்கள் உணர்ந்திருந்தார்களா என்பது வேறு. ஆனால் அதைக் கொண்டு சர்வாதிகாரத்திற்கெதிரான போராட்டமாக மட்டும் இதை குறுக்கிவிட முடியாது.

இப்போது துனீசியாவிலும் எகிப்திலும் நடந்திருப்பது என்ன? தங்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்படுமா? அவைகள் மக்களின் வளத்தை நோக்கி திருப்பிவிடப்படுமா? எனும் கேள்விகளுக்கு அவர்களிடம் விடையில்லை. ஆனால் அந்தக் கொள்கைகளின் விளைவுகளுக்கு ஆட்சியாளர்களை மட்டுமே காரணமாக கூறுவதன் மூலம் மக்களை வாட்டும் பொருளாதாரக் கொள்கைகள் மறைந்துகொண்டன. எத்தனை முபாரக்குகளை மாற்றினாலும், எத்தனை பென் அலிகளை துரத்தியடித்தாலும் அந்தக் கொள்கைகள் நீடித்திருக்கும் வரை மக்களின் துன்பங்கள் தீரப்போவதில்லை.

வரலாறு படைக்கும் அளவுக்கு மக்கள் எழுச்சி நடைபெற்றிருக்கிறது. அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், இராணுவக் கொலைக்கருவிகளுக்கு அஞ்சாமல் லட்சக்கணக்கில் மக்கள் வீதிகளில் திரண்டிருக்கிறார்கள். ஆனாலும் எதை நோக்கி அவர்கள் கிளர்ந்தெழுந்தார்களோ அந்த இலக்கை அவர்களால் அடையமுடியவில்லை. காரணம் இந்த மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கி புரட்சியாக அதை வழிநடத்திச் செல்ல புரட்சிகரக் கட்சிகள் எதுவும் அந்நாடுகளில் இல்லை. இருந்திருந்தால் மக்களை விழிப்புணர்வூட்டி, அன்னியக் குறுக்கீடுகளை புறந்தள்ளி, நாட்டின் அனைத்து வளங்களையும் கைப்பற்றி மக்கள் அரசை உருவாக்குவதை நோக்கி நகர்ந்திருக்கும். அப்படி எதுவும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஏகாதிபத்தியங்கள் துடிக்கின்றன.

உலகில் ஜனநாயகம் பேசும் எந்த நாடானாலும் அரசின் நடப்பு அமைப்பை ஏற்றுக்கொண்டு அதற்குள்ளிருந்து போட்டியிடும் அரசியல் கட்சிகளைத்தான் விரும்புகின்றன. மாறாக அந்த அமைப்பை மாற்றியமைக்க விரும்பும் கட்சிகளை அனுமதிப்ப‌தில்லை. தீவிரவாத முத்திரை குத்துகின்றன, வன்முறையாளர்கள் என்கின்றன, கமுக்கமான சதிச் செயல்கள் மூலம் கொன்றழிக்கின்றன. ஏனென்றால் ஜனநாய‌கம், மக்களாட்சி எனும் பெயர்களில் ஜனநாயகமற்ற மக்கள் விரோத ஆட்சிகளையே அரசுகள் நடத்திவருகின்றன. ஆட்சியின் போக்கால் மக்கள் கிளர்ந்தெழுந்தாலும் அது இந்த அமைப்பை மாற்றுவதை நோக்கி நகரக் கூடாது என்பதால் தான் புரட்சிகரக் கட்சிகள் ஏற்பட்டுவிடாதவாறு தடுக்கின்றன. ஏற்பட்டுவிட்டாலோ சிதைத்தழிக்க முயல்கின்றன.

சோவியத்துக்கு எதிராக பதினான்கு நாடுகள் ஒன்றிணைந்து போர் தொடுத்ததும், சிலி தொடங்கி இந்தோனேசியா வரை கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடியதும், சாதாரண மாநில அரசியல் கட்சிகளே தங்கள் பகைவர்களை தீர்த்துக்கட்ட ஆர்டிஎக்ஸ் பயன்படுத்துகையில் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தும் மாவோயிஸ்டுகளை நாட்டுக்கே அபாயம் என்பதும் அவர்கள் அந்த அமைப்பை மாற்ற முற்படுகிறார்கள் என்ற காரணத்திற்காகவேயன்றி வேறில்லை.

ஆட்களை மாற்றுதல் எனும் சோள‌ப்பொரியை போட்டு அரசுகளுக்கு எதிராக கிளர்ந்தெழுதல் எனும் மக்களின் யானைப்பசியை நீண்டநாள் அடக்கிவைக்க முடியாது. மாற்றப்படும் பொம்மைகளிடமும் அதே கோரமுகத்தை சந்திக்கும் மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவார்கள், புரட்சிகர இடதுசாரி இயக்கங்களை தங்களுக்குள் கட்டியமைத்து வெகு சீக்கிரம் அதை புரட்சியாக்கி வென்றும் காட்டுவார்கள்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 13

ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்?: பகுதி 13


1932 இல் “ஸ்டாலினை பலாத்காரமாக தூக்கியெறிய” முனைந்தாக 4ம் அகிலத்தின் வாக்குமூலம்

 

மார்க்சியத்துக்கு விரோதமான டிராட்ஸ்கியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், லெனின் தலைமையிலான சோசலிச புரட்சி மீதே இருந்து வந்ததுதான். இதை லெனின் போதுமான அளவு பண்பாடு வளர்ந்திராத ஒரு நாட்டில் சோசலிசத்தை நிலைநாட்டுவதை மேற்கொள்வதில் நாம் மிகவும் அவசரப்பட்டு விட்டோம் என்று நமது எதிர்ப்பாளர்கள் திரும்பத் திரும்ப நம்மிடம் கூறியிருக்கிறார்கள். தத்துவத்தில் – எல்லாவகைப் பண்டிதர்களின் தத்துவத்திலும் – குறிப்பிடப்பட்டுள்ள முடிவுகளுக்கு நேர்மாறான முடிவிலிருந்து நாம் தொடங்கியதால் அவர்கள் இந்த தவறான கருத்துக்கு வருகிறார்கள். நமது நாட்டில் அரசியல் மற்றும் சமூகப்புரட்சி, பண்பாட்டுப் புரட்சியை முந்தி விட்டது. ஆயினும் அதே பண்பாட்டுப் புரட்சி இப்போது நம்மை எதிர்கொள்கின்றது” என்றார். இதைத் தான் பின்னால் தனிநாட்டு சோசலிசம் என்று கூறி டிராட்ஸ்கியம் எதிர்த்தது. கோட்பாட்டு ரீதியாகவே டிராட்ஸ்கியம் சோசலிச கட்டுமானங்கள் அனைத்தையும் எதிர்த்தது. சோசலிச நிர்மாணம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தேசிய அரசின் கட்டுமானத்தினுள், எல்லாவற்றுக்கும் மேலாக பின்தாங்கிய ரஷ்யாவில் முடியாது” என்று கூறி டிராட்ஸ்கி சோசலிச கட்டுமானங்களை எதிர்த்தான். இதை நான்காம் அகிலம் ஸ்டாலினுக்கு எதிராக முன்வைக்கின்றது. சோவியத்யூனியனில் நீடித்த முதலாளித்துவ உற்பத்தி சார்ந்த இடைகால பொருளாதாரத்தை முடிவுக்கு கொண்டு வருதல், தனியார் விவசாயம் என்பதற்கு பதில் கூட்டுடைமையாக்கலை உருவாக்கல் என்ற தொடர்ச்சியான இடைவிடாத வர்க்கப் போரட்டத்தினூடான சோசலிச கட்டுமானங்களை டிராட்ஸ்கி எதிர்த்தான். இதற்கு எதிராக பல சதிகளை தொடர்ச்சியாக செய்தான். தனிநாட்டில் சோசலிசம் சாத்தியமில்லை, எனவே ஸ்டாலின் சோசலிச கட்டுமானங்களை நடைமுறைப்படுத்துவது அனுமதிக்க முடியாது என்றான்.

 

இதற்கு மாறாக ஸ்டாலின் 1931 இல் நாம் வளர்ச்சியடைந்த நாடுகளில்; இருந்து ஐம்பது அல்லது ஒரு நூறாண்டுகள் பின்தாங்கியுள்ளோம். இந்த இடைவெளியை நாம் பத்தாண்டுகளில் நிரப்ப வேண்டும். ஒன்று நாம் இதைச் செய்தாக வேண்டும் அல்லது நாம் வீழ்ந்தாக வேண்டும்” என்றார். இதைச் செய்யாமல் வீழ்ந்தாக வேண்டும் என்பதை, டிராட்ஸ்கி மற்றைய எதிர்ப்புரட்சிக் கும்பல்களும் மனமாற விரும்பினார். அதற்கான சதிகளையே தன்னுடைய‌ சொந்த அரசியலாக கொண்டான். ஸ்டாலின் இதற்கு மாறாக இதன் முக்கியத்துவத்தை விளக்கும் போது “…சோசலிசம் எவ்வளவுக் கெவ்வளவு கூடுதலான செழுமையாக முதலாவது வெற்றியடைந்த நாட்டில் கெட்டிப் படுத்தப்படுகிறதோ, இந்த நாடு ஏகாதிபத்தியத்தை மேலும் சிதைவுறச் செய்வதற்கு ஒரு நெம்புகோலாக, உலகப் புரட்சியை மேலும் அருகில் கொண்டு வருவதற்கு ஒரு தளப்பிரதேசமாக எவ்வளவுக் கெவ்வளவு வேகமாக மாற்றப்படுகின்றதோ, அந்த அளவுக்கு உலகப் புரட்சியின் வளர்ச்சி, பல்வேறு புதிய நாடுகள் எகாதிபத்தியத்திடமிருந்து அறுத்துக் கொண்டு போகும் நிகழ்ச்சிப் போக்கு மிகவும் துரிதமாகவும் செழுமையாகவும் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை” என்றார். 1917ம் ஆண்டு சோவியத்தில் நடந்த புரட்சி, உலகை எந்த அளவுக்கு உலுக்கி ஏகதிபத்தியத்தையே நிலைகுலைய வைத்ததோ, அந்தளவுக்கு சோசலிச கட்டுமானங்களும் உலகை உலுக்குவதை டிராட்ஸ்கி மறுத்தான். சோசலிச கட்டுமானமே தவறு என்றான். மாறாக முதலாளித்துவத்துக்கு திரும்பி போக விரும்பினான். அதனடிப்படையில் டிராட்ஸ்கியம் சோவியத்தில் அரசிலும் கட்சியிலும் கிடைத்த உயர் பதவிகளையும், அதிகராத்தையும் முழுமையாக பயன்படுத்தி, சோசலிச கட்டுமானத்தை எதிர்த்து பல்வேறு வழிகளில் செயல்பட்டது.

 

ஸ்டாலின் கோட்பாட்டு ரீதியாக இதை எதிர் கொண்டு அம்பலப்படுத்தும் போது சோசலிசப் புரட்சியும், சோசலிச நிர்மாணமும் இடைத்தட்டு சக்திகளை குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரை படிப்படியாக இல்லாதொழிக்கிறது. பாட்டாளி வர்க்கத்தினராக மாறும்படி நிர்ப்பந்திக்கிறது. எனவே பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தின் ‘ஆட்சியை’ அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தமது அழிவைத் தவிர்த்துக் கொள்வதற்காக ஒரே தாண்டில் சோசலிசத்திற்குள் குதித்து விடவோ அல்லது அது சாத்தியப்படவில்லை என்றால் சிந்தனைக்குப் படுகிற ஒவ்வொரு சலுகையையும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு வழங்கவோ இவ் வர்க்கம் சரணாகதிக் கொள்கையை உருவாக்குகிறது” என்பதை தெளிவாகவே ப்படுத்தி, ஸ்டாலின் சோசலிசத்தை நிர்மாணம் செய்தார். சோசலிசம் என்பது பொருளாதார கட்டுமானத்தை மட்டும் பிரதிபலிப்பது அல்ல. மாறாக, பிரதானமாக வர்க்கப் போராட்டத்தை தொடர்வதையே குறிக்கின்றது. சமுதாயத்தை மேல் நோக்கி நகர்த்தும் பணியிலான முன்னேற்றம் என்பது, சமுதாயத்தில் நடக்கும் தொடர்ச்சியான வர்க்க போராட்டங்களையே குறிக்கின்றது. இங்கு பழையது அழிகின்ற போது, புதியது படைக்கப்படுகின்றது. இது தொடாச்சியாக தொடர்கின்ற நிகழ்வாக இருக்கும் போதே, சோசலிசமாக முன்னேறுகிறது. வர்க்கங்களை ஒழிக்கும் நிகழ்ச்சி போக்கை உள்ளடக்கிய நீடித்த நிகழ்ச்சியே சோசலிசமாக உள்ளது. இது நிலையான ஒன்றை தொடாச்சியாக பாதுகாப்பது அல்ல. இதை மறுத்து, தனிநாட்டில் மாற்றம் செய்யக் கூடாது எனும் டிராட்ஸ்கியத்தின் கோட்பாட்டு அடிப்படையில் வர்க்கப் போராட்டம் தொடர்வதை எதிர்த்து, அது சதிகளில் இறங்கியது.

 

இந்த சதியில் முரண்பாடுகளை களைவதற்காக இரகசிய சதிக் கூட்டங்களை நடத்தினர். இதை நான்காம் அகிலம் வாக்கு முலமாக முன்வைத்து பெருமையாக பீற்றுவதைப் பார்ப்போம். “…..தனது இடது வலது எதிர்ப்புக் குழுக்களுடனான அரசியல் சித்தாந்த முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக… 1932ம் ஆண்டளவில் இடது வலது எதிர்ப்பாளர்களிடம் இருந்த முரண்பாடுகள் விலக்கப்பட்டிருந்தன அல்லது ஒரளவு சுமூகமாயிருந்தன. முக்கிய புரட்சிகர எழுத்தாளரான வீக்டர் சேர்ஜி நாடு கடத்தப்பட்டு ஐரோப்பாவிற்கு வந்த பின்னர் தான், பல முன்னாள் வலது எதிர்ப்பாளர்களை சந்தித்ததாகவும் புக்காரின் ஆதரவாளர்கள் அப்போது அவர்கள் லியோன் டிராட்ஸ்கி தொடர்பாயும் இடது எதிர்ப்பாளர்கள் தொடர்பானதுமான அவர்களது அணுகுமுறை கணிசமான அளவு மாறியுள்ளதாக கூறியதாகவும் குறிப்பிடுகின்றனர்” 4ம் அகிலம் முன்னாளைய வலதுகளுடன் கூடி நடத்திய சதியை உள்ளடக்கிய வாக்கு மூலத்தை இப்படி முன்வைக்கின்றனர். ஸ்டாலின் பிரயோகித்த சில நடவடிக்கையே வலதையும் இடதையும்,  1932 இல் ஒன்றினைத்தது என 4ம் அகிலம் குறிப்பிடுகின்றது. 1932லும், 32க்கு முன்பும் கட்சியில் இருந்த குழுக்கள் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் சதி செய்த போதும், ஸ்டாலின் அதை பகை முரண்பாடாக மாறாத எல்லைவரை கடுமையான தத்துவார்த்த போராட்டங்களையே நடத்தினார். மார்க்சிய தத்துவத்தை சோசலிச நிர்மாணம் மீது வளர்த்த போது, இவர்களால் ஸ்டாலினை எதிர்த்து நிற்க முடியவில்லை. மாறாக‌, இவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள‌, சதிகள் மூலம் ஆட்சியை கைப்பற்ற முனைந்தனர்.

 

இவர்கள் கட்சியின் பல பிரிவுகளில் முன்னணிப் பொறுப்புக்களில் இருந்து இதைச் செய்தனர். இந் நிலையில் சதிகள் அம்பலமான போது அவர்களின் பதவிகளில் இருந்து விலக்கப்பட்டனர். தவறை உணர்ந்து திருந்தியவர்கள், தமது தவறை ஒத்துக்கொண்டவர்கள் மீள கட்சியில் சேர்க்கப்பட்டனர். அதைவிட தொடர்ந்து அப்பட்டமான எதிர்ப்புரட்சியைச் செய்தவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் 4ம் அகிலம் தனது அரசியல் சதிகளையும் அதன் அடிப்படையையும் நியாயப்படுத்த, ஸ்டாலின் பூச்சாண்டி தேவையாக இருப்பதால் தான், தமது நடத்தைகளை மூடிமறைக்கின்றனர். தமது கொள்கைகளை பகிரங்கமாக வைப்பதை மறுக்கின்றனர். வலது, இடது இணைப்பிற்கிடையில் என்ன அரசியல் உண்டு எனப்பார்ப்பின், தொடரும் வர்க்கப் போராட்டத்தின் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை புறந்தள்ளுவது மட்டுமே ஒரு பொது வேலைத்திட்டமாக இருந்தது. ஸ்டாலின் காலத்தில் கட்சி முன்னெடுத்த பொதுவான பாட்டாளி வர்க்க திசைமார்க்கத்தை மறுத்தது நிங்கலாக‌இவர்கள் முன் இருந்தது முதலாளித்துவ மீட்சி நோக்கிய பாதை ஒன்று மட்டுமேயாகும்.

 

4ம் அகிலம் தனது கட்டுரையில் ‘புரட்சிகர எழுத்தாளர்’ வீக்டர் சேர்ஜி பல முன்னாள் வலது எதிர்ப்பாளர்களை சந்தித்து இடதுடன் ஒன்றிணைத்தார் என்கின்றனர். ஒரு புரட்சிகர எழுத்தாளர் முன்னாள் வலதுகளைச் சந்தித்து, ஒன்றிணைக்கும் அந்தப் புரட்சிகரத் திட்டம் தான் என்ன? எல்லாம் முதலாளித்துவ மீட்சிக்கான திட்டமேயாகும். இங்கு புரட்சிகரம் என்பது எதிர் புரட்சிகரமே. அவரின் எழுத்து என்ன என்பதை, அவரின்  முன்னாள் வலதுகளின் கூட்டு அத்தாட்சிப்படுத்துகிறது. மேலும் எப்படி சதியைத் திட்டமிட்டனர் என்பதை, 4ம் அகில வாக்கு மூலத்தில் இருந்தே ஆராய்வோம்.

 

“1932ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் புகாரின் ஆதரவாளர்கள் மாஸ்கோவில் ஒரு மாநாடு கூட்டி ஸ்டாலினை எவ்வாறு எதிர்ப்பது என்பது தொடர்பாக ஆராய்ந்தார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் இளமையான மிகப் பிரபல்யம் அற்ற புகாரின் ஆதரவாளரான இப்போது 95 வயதுடைய வலன்ரீன் அஸ்ரோவ்வினை  (2000ம் ஆண்டில் உயிருடன் இருந்தார்) சந்திக்கக் கூடியதாக இருந்தது. முதலாவது இளம் வயது எதிர்ப்பாளர்களின் கூட்டம் இவரது வீட்டில் நடந்தது. அத்துடன் அவர்கள் ஸ்டாலினை பலாத்காரமாக துக்கியெறிய வேண்டியது தொடர்பாக பகிரங்கமாக கலந்துரையாடிதை மிகவும் ஞபகத்தில் வைத்திருந்தார். அவர் தனது தோழர்களுக்கு ஸ்டாலினுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை எனக் கூறியதால், அடுத்த கூட்டம் வேறு ஒரு இடத்தில் அவர் கலந்து கொள்ளாமலேயே நடந்தது. பின்னர் வலன்ரீன் அஸ்ரோவ் சோவியத் உளவுத்துறையால் கைது செய்யப்பட்ட போது, இந்த இடங்களில் அவ்வப்போது நடந்த கூட்டங்களில் என்ன விவாதிக்கப்பட்டது என விசாரனையாளர்கள் கேட்ட போது, வலன்ரீன் அஸ்ரோவ் தனக்கு இப்படியான கூட்டங்கள் தொடர்பாக எதுவும் தெரியாது என பதிலளித்தார்” அன்றைய சதிகளில் நேரடியாக ஈடுபட்ட ஒருவரின் வாக்கு மூலத்தை, இன்று பெருமையாக நியாயப்படுத்தி டிராட்ஸ்கியம் எடுத்து வைக்கின்றது. ஸ்டாலினை பலாக்காரமாக அகற்றல் என்பது திட்டமிட்ட படுகொலைகளை நடத்துவதன் மூலம் தான் என்பதை, அவர்களின் தொடர்ச்சியான வாக்குமூலமும் சதிகளும் எடுத்துக் காட்டின. இதற்கு எதிராக ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தையே, இன்று எடுத்துக் காட்டி தூற்றுகின்றனர். கட்சி மற்றும் அரசின் உயர் பதவிகளில் இருந்தபடி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் ஸ்டாலினை அகற்றுவதைப் பற்றி சதிகார இரகசிய கூட்டம் நடத்துவதை, ஜனநாயக மத்தியத்துவம் என அங்கிகாரிக்க கோருவது மார்க்சியத்தை கொச்சைப் படுத்துவதற்காகத்தான். ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசுக்கு எதிராக, சதிகளை மேல் இருந்து நடத்தியவர்கள் தோற்ற போது, அவர்கள் ஸ்டாலினை தூற்றுவது இன்று வரை தொடர்கிறது. அன்றைய சதிகளை எப்படி தொடர்ந்து செய்தனர் என்பதற்கு அவர்கள் இன்று பெருமையாக பீற்றும்  சொந்த வாக்கு மூலத்தில் இருந்து மேலும் பார்ப்போம்.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

 

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


திருப்பூர்: மிரட்டும் சாயப்பட்டறை முதலாளிகள்

அண்மையில் சுத்திகரிப்பு முறையை செயல்படுத்தாத திருப்பூர் சாயப்பட்டறைகளை மூடச்சொல்லி உத்தரவிட்டது நீதிமன்றம். அதனையடுத்து திருப்பூரில் போராட்டம் கடையடைப்பு என தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நீதிமன்றம் சரியாக உத்தரவிட்டிருக்கிறது என்றும், தொழிலாளர்கள் வேலை இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் இருவேறு விதமாய் பேசி விவாதித்து வருகிறார்கள். ஆனால் இது திருப்பூர் மட்டுமே சார்ந்த விசயம் என்றோ, மாசுகட்டுப்பாட்டுத்துறையின் அலட்சியம் மட்டுமே காரணம் என்றோ இதை குறுக்கிவிடமுடியாது. உலக அளவில், குறிப்பாகச் சொன்னால் மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் இருக்கும் இந்தப் பிரச்சனையின் இந்திய தமிழக வடிவம் திருப்பூர். சாயப்பட்டறைகளின் கழிவு நீரை ஆற்றில் கலந்துவிட்டார்களாம் என்று இந்தப் பிரச்சனையைப் பார்ப்பது அல்லது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துவிட்டார்களே என்று மட்டுமே இதைப்பார்ப்பது இந்தப் பிரச்சனையின் நீள ஆழ‌ங்களை உள்வாங்காத மேலோட்டக் கோணமாகும்.

 

இந்தியாவைப் பொருத்தவரை முன்னேற்றம், வளர்ச்சி என்று கூறப்படுவது தொழில்துறை சார்ந்துதான். ஆனால் அந்த தொழில்துறையின் வள‌ர்ச்சி இந்திய விவசாயத்தின் அழிவில்தான் சாத்தியப்பட்டிருக்கிறது. இதற்கு சிற‌ப்பான குறியடையாளமாக திருப்பூரைக் கொள்ளலாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரத்தப்பாளையம் அணை திறக்கப்பட்டபோது நானூறுக்கும் அதிகமான தென்னந்தோப்புகள் பாதிக்கப்பட்டன. அந்த நீரைக் குடித்த நூற்றுக்கணக்கான கால்நடைகள் செத்துவீழ்ந்தன. அதன்பிறகு அந்த அணை திறக்கப்படவே இல்லை. அணையை ஒட்டியுள்ளவர்கள் எங்கள் விவசாய நிலங்கள் பாழாகிவிட்டன அணையைத் திறந்துவிடுங்கள் என்கிறார்கள். பிறபகுதி மக்களோ எங்கள் விவாசாய் நிலங்கள் பாதிக்கப்படும் எனவே அணையை திறக்காதீர்கள் என்கிறார்கள். அந்த அளவுக்கு சாயக் கழிவுகளால் நிறைந்திருக்கிறது அந்த அணை. குறுகிய காலத்தில் பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கும் திருப்பூர் வளர்ச்சியின் மறுபக்கம் இது. விவசாய நிலங்கள் பாழ்பட்டுப்போனது, கால்நடைகளின் இழப்பு, புற்றுநோய் உள்ளிட்டு பலவிதமான தோல்நோய்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், சுத்தமாக துடைத்தெறியப்பட்ட நிலத்தடிநீர், குடிநீர் வளம் இவைகளோடு ஒப்பிட்டால் வந்திருக்கும் நீதிமன்ற ஆணை கொசுறு.

 

தொன்னூறுகளிலிருந்தே அந்தப்பகுதி விவசாயிகள் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யலாற்றில் கலந்துவிடப்படுவதற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது ஆற்றில் கலப்பதற்கு எதிராக ஏதாவது பரிந்துரைகளைச் செய்வதும் அது மாசுக்கட்டுப்பாட்டுத் துறையின் உதவியுடன் சாயப்பட்டறை முதலாளிகளால் அப்பட்டமாக மீறப்படுவதும் தொடர்ந்து நடந்துவந்திருக்கிறது. இந்த தேதிக்குள் சுத்திகரிப்பு முறைகளை முழுமையாக செயபடுத்தவேண்டும் என்று பலமுறை நீதிமன்றம் கெடு விதித்திருக்கிறது. அத்தனையும் மேல்முறையீடு என்ற பெயரிலும் பல்வேறு சதிகளினாலும் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக காமன் எப்ளூயண்ட் ட்ரிட்மெண்ட பிளான்ட் (செப்ட்) எனும் பொதுவான சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டது. இதன்படி சாயப்பட்டறைகள் தங்கள் சாயக்கழிவுகளை இந்த செப்டிடம் கொடுத்துவிட்டால் அவர்கள் அதை சுத்திகரித்து போதுமான அளவில் வேதி அபாயங்களை நீக்கி வெளிவிடுவார்கள். ஆனால் இதையும் சாயப்பட்டறை முதலாளிகள் புறக்கணித்தார்கள். காரணம், ஒரு லிட்டருக்கு 12 காசு சுத்திகரிப்பு கட்டணமாக செப்ட்டிற்கு கொடுக்கவேண்டியதிருந்தது. லாபத்தில் மட்டுமே குறியாக இருந்த‌ முதலாளிகள் திருட்டுத்தனமாக நொய்யலாற்றில் கலந்தார்கள். இவைகளையெல்லாம் கடந்து தான் சாயப்பட்டறைகளை மூடும்படி நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிற‌து.

 

ஆனால் இவைகள் எல்லாவற்றையும் வசதியாக மறைத்துவிட்டு இன்று தொழிலாளர்கள் வேலையிழந்துவிட்டார்கள் என்று பிரச்சனையை வேறுவிதமாய் மடைமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளையெல்லாம் பணத்தாலும், அதிகாரத்தை வளைத்தும் செல்லாக்காசாக்கியவர்கள் இன்று ஒட்டுமொத்தமாய் பட்டறைகளை அடைத்து தொழிலாளர்களை வெளியில் நிறுத்தி அரசை மிரட்டியிருக்கிறார்கள். அதற்குத் தோதாக மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியுடன் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து தற்காலிகமாக பிரச்சனையை தீர்க்கமுனைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது முதலாளிகள் லாபத்தை தங்கள் பைகளில் திணித்துக்கொள்வார்கள், பிரச்சனைகளையும் செலவுகளையும் அரசு தாங்கிக் கொள்ள வேண்டும்.

 

இது ஏதோ திருப்பூர் சாய்ப்பட்டறை முதலாளிகளின் தனிப்பட்ட இயல்பாக நினைத்துவிட முடியாது. உலகம் முழுவதிலும் முதலாளிகளின் முதலாளித்துவத்தின் இயல்பு இதுதான். சந்தைப் பொருளாதாரம், சுதந்திரமான போட்டி என்று கூறிக்கொண்டு எந்த விதத்திலும் அரசின் தலையீடு இருக்கக்கூடாது, அதுதான் வளர்ச்சிக்கு அடிப்படை என்பவர்கள், நெருக்கடி என்று வந்துவிட்டால் அரசு தங்களை கைதூக்கி விடவேண்டும் என்கிறார்கள். அமெரிக்காவில் சப் பிரைம் லோன் நெருக்கடியின் பிறகு சீட்டுக்கட்டு கோபுரங்களைப்போல் சரிந்துவிழுந்த நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு மக்கள் பணத்தை கோடிக்கணக்கான டாலர்களை வாரி வழங்கியது. புழுத்த அரிசியைக் கூட ஏழைகளுக்கு வழங்கமுடியாது என திமிரோடு கூறும் மன்மொகன் அரசு கடந்த ஓரிரு ஆண்டுகளில் மட்டும் ஐந்துலட்சம் கோடியை வரிச்சலுகையாக வழங்கியிருக்கிறது. பிரச்சனைகளை அரசின் தலையில் கட்டிவிடும் முதலாளிகள் மக்களைச் சுரண்டி அடிக்கும் கொள்ளையில் தங்களை நிறைத்துக்கொள்கிறார்கள். திருப்பூரின் பின்னணியும் இதுதான்.

 

அரசுக்கு பலகோடி அன்னியச் செலவாணியை ஈட்டித்தரும் திருப்பூர் பின்னலாடைத் தொழில் முடங்கினால் அதுவும் மக்களை பாதிக்கும் ஒன்றுதானே என்றும் சிலர் நினைக்கலாம். ஆனால் விவசாயத்தை அழித்து இதை எட்டியிருக்கிறோம் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அரசு ஏன் விவசாயத்தை அழிக்கிறது? என்பதும் அன்னியச் செலவாணியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. திருப்பூர் பின்னலாடைத்தொழில் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டே இயங்கிவருகிறது. பின்னலாடைகளை நெய்யப் பயன்படும் அதி நவீன இயந்திரங்கள் முதல் சாயப்பட்டறை இயந்திரங்கள் சுத்திகரிப்பு முறைகள் என அனைத்தும் வளர்ந்த நாடுகளில் தயாராகி இறக்குமதி செய்யப்படுகிறது. துணிகளுக்கு நிறமேற்றப்பயன்படும் சாயப் பொருட்கள், வேதியல் கலவைகள் அனைத்தும் வளர்ந்த நாடுகளிலிருந்தே தருவிக்கப்படுகின்றன. இதில் இன்னோன்றையும் கவனிக்க வேண்டும். இங்கு நிறமேற்றப் பயன்படும் பொருட்களில் பெரும்பாலானவை வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டவைகள். எல்லாவற்றையும் தொடர்புபடுத்திப் பார்த்தால்; கனரக நவீன இயந்திரங்களைத் தயாரிப்பது அவர்கள், வேண்டிய வண்ணத்திற்கு மாற்ற இரசாயணப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் அவர்கள், இவைகளின் மூலம் நெய்யப்படும் ஆடையை அணிவதும் அவர்கள், எல்லாவற்றையும் செய்யும் அவர்கள் துணிகளுக்கு சாயமேற்றுவதையும் ஏன் அவர்கள் செய்யக் கூடாது?

 

உடலுழைப்பு அதிகம் தேவைப்படும், உற்பத்திச்செலவு அதிகமாக இருக்கும், ஆபத்து நிறைந்த, சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் அனைத்துவகைத் தொழில்களையும் வளரும் நாடுகளிடம், மூன்றாம் உலக நாடுகளிடம் தள்ளிவிட்டு உற்பத்தியை மட்டும் தருவித்துக்கொள்வது வளர்ந்த நாடுகளின் கொள்கையாக இருக்கிறது. இதைத்தான் அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் தொழில்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இந்தத் தொழிகளுக்காகத்தான் இன்னும், நாட்டின் பெரும்பாலானவர்களுக்கு வேலைவாய்ப்பளித்து உயிராதாரமாய் இருக்கும் விவசாயத்தை அழித்து வருகிறார்கள். இதைத்தான் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயர்களால் குறிப்பிடுகிறார்கள்.

இதை வணிகம் என்றோ, உலகமே கிராமமாக சுருங்கியிருக்கும் நிலையில் ஒரே இடத்திலேயே எல்லாவற்றையும் தயாரிக்க முடியுமா என்றோ புரிந்து கொள்ள முடியாது. எப்படியென்றால், வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் அனைத்து நாடுகளையும் கடன் வலையில் சிக்க வைத்திருக்கின்றன. ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையையே தீர்மானிக்கும் அளவுக்கு இந்தக் கடன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. உதவி எனும் பெயரின் கடன்களைத் தந்து தங்களுக்கு தேவையான வசதிகளை, கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.  தங்கள் நாடுகளில் அதிக செலவுபிடிக்கும் உற்பத்திகளை ஏழை நாடுகளில் செய்யவைப்பதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்கிறார்கள். உலகளாவிய சந்தையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மூலப்பொருட்களுக்கு அதிக விலையையும், உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்த விலையயும் நிர்ணயம் செய்து, ஏழை நாடுகளை மொத்தமாகச் சுரண்டுகிறார்கள். உலகமயம் என்ற பெயரில் ஏழை நாடுகளை சுரண்டிக் கொழுக்கும் வேலையைத்தான் வளர்ந்த நாடுகள் செய்து வருகின்றன. இதை வணிகம் என்றோ, தொழிலகலின் பரவல் என்றோ குறிப்பிடமுடியாது. மறுகாலனியாக்கம் என்பதே பொருத்தமான பெயர்.

 

ஆக, அன்னியச் செலவாணி ஈட்டித்தரும் தொழில்கள் என்று கூறிக்கொண்டு நாம் சுற்றுச் சூழலை இழந்திருக்கிறோம், விவசாயத்தை இழந்திருக்கிறோம், மக்களின் வாழ்வாதாரத்தை, குடிநீர் வளத்தை அனைத்தையும் இழந்திருக்கிறோம். இதுவரை திருப்பூர் பின்னலாடைத்தொழில் மூலம் கிடைத்த அத்தனை அன்னியச் செலவாணி டாலர்களைக் கொண்டுவந்து கொட்டினாலும் ஒரத்தப்பாளையம் அணையை சுத்தம் செய்ய முடியுமா? அதனால் மலடாகிப்ப்போன நிலங்களை சரி செய்ய முடியுமா? பாதாளத்துக்கு இறங்கிவிட்ட நிலத்தடி நீரை உயர்த்திக் கொண்டுவர முடியுமா? எனவே சாயப்பட்டறைக் கழிவுகள் என்பது திருப்பூரை மட்டுமே சார்ந்த பிரச்சனை அல்ல. உலகளாவிய முதலாளித்துவ கோரத்தின் திருப்பூர் முகம்.

 

தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு சாயப்பட்டறைகளிலும் சுத்திகரிப்பு முறைகளை செயல்படுத்துவது ஒன்றும் சாத்தியமில்லாத திட்டமல்ல. 40 லிருந்து 60 விழுக்காடு வரை லாபம் தரும் சாயப்பட்டறைகளுக்கு சுத்திகரிப்பு செலவினங்கள் லாபத்தில் குறைவைக்கொண்டுவருமேயன்றி ஒருபோதும் நட்டத்தைக் கொண்டுவராது. மட்டுமல்லாது ஒரத்தப்பாளையம் அணையை கொஞ்சமேனும் சீர்செய்ய வேண்டுமென்றால் ‘ஸீரோ டிஸ்சார்ஜ்’ முறையைத் தவிர வேறதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போது சாயப்பட்டறைக் கழிவில் அங்கீகரிக்கப்பட்ட அளவு குறித்து பேசுபவர்கள், நேரடியாக ஆற்றில் கலந்தபோது அங்கீகரிக்கப்பட்ட அளவுகுறித்து எந்தக்கவலையும் பட்டவர்களில்லை. தவிரவும் தண்ணீர் அதிகம் தேவைப்படும் இந்தத்தொழிலில் கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்தச் செய்யவேண்டியதும் அவசியமாகும்.

 

இப்போது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள் என்று கூறி போராடுவது சாயப்பட்டறை முதலாளிகள் இதுவரை செய்துவந்த அயோக்கியத்தனத்தை மறைக்கும் விதத்திலேயே அமையும். திருப்பூரில் மட்டுமா இந்தியாவெங்கும், உலகெங்கும் மக்கள் வேலையிழந்து வருகிறார்கள். அந்த வேலையிழப்புக்கு மையமான காரணம் என்ன என்பதை கூர்ந்து நோக்காமல், முதலாளிகளால் திசைதிருப்பாக முன்தள்ளப்படும் வேலையிழப்பு சார்ந்த போராட்டங்கள் முதலாளிகளின் லாபத்திற்கு பயன்படுமேயன்றி தொழிலாளர்களுக்கல்ல. மத்திய மாநில அரசுகள் சுத்திகரிப்புப்பணிகளை கைக்கொண்டாலும் அதுவும் மக்கள் தலையிலேயே விடியும். இப்போது வேலையிழப்பை முன்வைப்பவர்கள் இந்த முதலாளிகள் வேறு காரணங்களுக்காக தொழிலாளிகளை வேலை நீக்கம் செய்யமாட்டார்கள் என்பதை உத்திரவாதப்படுத்த முடியுமா?

 

சாயப்பட்டறைகள் மூடப்பட்டிருப்பது தொழிலாளர்களுக்கு இழப்பு என்றாலும், முதலாளிகளுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுப்பது தவறான முன்னுதாரணமாக இருக்கும் அதேநேரம், சாயப்பட்டறைகள் தொடர்ந்து மூடிக்கிடப்பதையும் அனுமதிக்க முடியாது. எனவே அரசு கெடு விதித்து, அதற்குள் சுத்திகரிப்பு முறைகளை அமைத்து திறக்காத சாயப்பட்டறைகளை அரசே ஏற்று நடத்தவேண்டும். இதை அரசு செய்யும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்த திசையில் மக்கள் ஒன்றிணைந்து சமரசமற்ற போராட்டங்களை நடத்தி அரசை பணியவைப்பது தான் இந்தப்பிரச்சனைக்கான சரியான தீர்வாக இருக்கும்.

 

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௪

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௪

அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

அல்லாவின் ஆற்றலிலிருக்கும் இடர்பாடுகள் குறித்த விளக்கங்களில் புகுமுன் ஒன்றை தெளிவுபடுத்திவிடலாம் என கருதுகிறேன். \\யாருடைய நம்பிக்கையை விமர்சிப்பதாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கை எத்தகையது என்பதை புரிந்து அதில் நின்று தான் விமர்சிக்க வேண்டுமே தவிர அவர்கள் நம்பாத வேறு கிரவுண்டில் இருந்து விமர்சிக்கக் கூடாது// என்று நண்பர் எழுதியிருக்கிறார். அதில் இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு வெளியில் எந்த விமர்சனமும் இடம்பெற்றிருக்கவில்லை. இஸ்லாம் குறித்த விமர்சனத்தை, இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு வெளியிலிருந்து வைக்கவும் முடியாது. எது அவர்களின் நம்பிக்கையோ அதில் தான் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் நம்பாத ஒன்றை விமர்சனமாக வைத்தால் “இது இஸ்லாமல்ல” எனும் ஒற்றைச் சொல்லில் அதைக் கடந்துவிட முடியும். ஆனால் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடையளிக்க அவர் முயன்றிருக்கிறார் என்பதே இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு வெளியே கேள்வியேதும் எழுப்பப்படவில்லை என்பதற்கு போதுமானதாகும்.

 

குரானில் சொல்லப்பட்டிருக்கும் சுயபாராட்டல்களின் அளவு அதிகம் என்பதை ஒரு தகவலுக்காக குறிப்பிட்டிருந்தேன். ஒரு வார்த்தை கூட தேவையில்லாமல் இருக்காது என இறும்பூறெய்தலாக குறிப்பிடப்படும் ஒரு வேதத்தில், அதன் அளவே பாதியாக குறைந்துவிடும் அளவுக்கு அந்த சுயபாராட்டல்கள் இருக்கின்றன. இதற்கு பகரமாக நண்பர் \\குர்ஆன் இறைவனுடைய வேதம். அதில் அவனைப்பற்றி அவனுக்கே உரிய வேறு யாருக்குமே இல்லாத அவனுடைய வல்லமைகளை கூறுகிறான். அது சில இடங்களில் விரிவாகவும் பல இடங்களில் சுருக்கமாகவும் உள்ளன// என்பதாக கூறுகிறார். அவனுடைய வல்லமைகளை, தன்மைகளை ஒவ்வொன்றையுமேகூட ஓரிரு முறை கூறினால் போதுமானது. ஆனால், சற்றேறக் குறைய‌ எல்லா வசனங்களின் பின்னாலும் ஒரு வாலைப்போல் அது ஒட்டியிருக்கிறது. எனவேதான் சோர்வடையவேண்டாம் என்று ஈறொட்டாக குறிப்பிட்டிருந்தேன்.

 

முதல் இடர்பாடாக நான் குறிப்பிட்டிருந்தது, எல்லாமே எழுதப்பட்ட ஏட்டில் இருப்பது தான் எனும்போது அது மனிதனுக்கு சிந்தனை இருக்கிறது என்பதை மறுக்கிறது என்பதை. அதை தெளிவாக கேள்வியாக எழுப்பியிருந்தேன், \\ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும்// இந்த முரண்பாடான தன்மையை நண்பர் விதிக்கொள்கை என கடந்து செல்கிறார். ஒருவனுக்கு இழப்பு ஏற்பட்டால் விதியின் தொழிற்படுதலால் அவன் ஆறுதலடையவும், செருக்கு கொள்ளாமலிருக்கவும் விதிக்கொள்கை பயன்படுகிறது என அதற்கு விளக்கமும் தருகிறார். இது மேம்போக்கானது. தனிப்பட்ட ஒருவனுக்கு இழப்பு என்பது தனியுடமையிலிருந்து எழுகிறது, வணிகர்களின் நலைனைப் பாதுகாக்க எழுந்த ஒரு கொள்கையால் இப்படித்தான் சிந்தித்திருக்க முடியும். தனக்கு ஏற்பட்ட இழப்பு எதனால் ஏற்பட்டது?, செயலின் பிழைகள் என்ன? என்னென்ன தாக்கங்கள் அந்த செயலில் வினையாற்றின? அவைகளின் எதிர்வினை என்ன? என்பதைக் கண்டுணர்ந்து அடுத்தமுறை அந்த தவறு மீள ஏற்படாமலிருக்க ஆவன செய்யவேண்டுமென்றால் அவன் விதிக்கொள்கையை மறுத்தாக வேண்டும். அல்லா எழுதிவைத்தபடி தான் தமக்கு நேர்ந்திருக்கிறது என ஒருவன் ஆறுதல் கொள்வானாயின், அவனிடம் தேடல் இருக்காது. தேடலிருக்கிற, வெற்றிகரமாக செயல்பட விரும்புகிற, எதிர்வினையாற்ற ஆவலுருகிற‌ எவரும் (முஸ்லீம்கள் உட்பட) சாராம்சத்தில் விதிக்கொள்கையை மறுக்கவே செய்கின்றனர், நம்பிக்கையளவிலேயே அவர்களிடம் விதிக்கொள்கை இருக்கிறது. இதை உணர்ந்துதான் இஸ்லாமும்; விதி இருக்கிறதா? எனும் கேள்விக்கு ஆம் என பதிலளிக்கிறது, அதேநேரம் பின்பாதியை நம்பு முன்பாதியை நம்பாதே என இரட்டை நிலையை மேற்கொள்கிறது.

 

\\விதி உள்ளதெனில் நான் நல்லவனாக,கெட்டவனாக நடப்பதற்கு நான் எவ்வாறு பொறுப்பேற்பது என்ற கேள்வியும் விதி இல்லையெனில் நான் என்ன செய்வேன் என்று தெரியாதவன் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழும்// கடவுளை நம்புபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை இது. கடவுளின் இருப்பையே அசைத்துப்பார்க்கிற இந்தக் கேள்விக்கு விடைகூற முடியாது என்பதாலேயே முகம்மது இதுபற்றி தர்க்கிக்காதீர்கள் என அறிவுறுத்தியிருக்கிறார். அங்கும் இல்லாத, இங்கும் இல்லாத இரட்டை நிலையை மேற்கொண்டிருக்கிறார். இஸ்லாத்தை நம்புகிறவர்களுக்கு விதிக்கொள்கை போதுமானது. ஆனால் அதை எதிர்த்து விமர்சனம் செய்பவர்களுக்கும் அந்த நம்பிக்கையையே பதிலாக கூறுவீர்களென்றால், அது எல்லாருக்கும் பொதுவான மனிதனின் தோல்வியாக இருக்காது. மதத்தை கடவுளை நம்புகிறவர்களின் தோல்வியாக இருக்கும். முரண்பாடான இருவேறு நிலையை புரிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு இல்லை என்றெல்லாம் நீட்டிமுழக்க முடியாது.

 

பொதுவாக இந்த இடர்பாட்டை விதிக்கொள்கை என கடந்து செல்வதும், சரியானதாக இருக்காது. விதிக்கொள்கை என்பது மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கக் கூடியது. மனிதன் மூளை எனும் பொருளைக்கொண்டு சிந்தித்து செயல்படுகிறான் என்பது அதன் எல்லாவித கூறுகளாலும் நிரூபிக்கப்பட்டிருக்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மூளையின் செயல்பாடு, அதன் வேதியியல் மாற்றங்கள், இருமடி ரீதியான அதன் நினைவுத்திறன் என அனைத்தும் ஐயந்திரிபற விளக்கப்பட்டிருக்கிறது. கேள்வி எளிமையானது. நிரூபிக்கப்பட்டிருக்கும் மனிதன் சிந்திக்கிறான் என்பதை ஏற்கிறீர்களா? அதை மறுக்கும் விதிக்கொள்கையை ஏற்கிறீர்களா? என்பதுதான். இரண்டையும் ஏற்கிறோம் என்றெல்லாம் பசப்ப முடியாது. ஏனென்றால் ஒன்றை மற்றொன்று மறுக்கக்கூடியது.

 

இரண்டாவது இடர்பாடு, தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் படைப்புகள் எனும் நிலையில், எதனையும் படைத்திருக்காதபோது முதல் படைப்பை அல்லா எங்கிருந்து செய்திருக்க முடியும்? என்பது. நண்பர் இதை அல்லாவிடம் கேள்வியாக கேட்கும் அதிகாரம் மனிதனுக்கு இல்லை என எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியிருக்கிறார். அல்லாவின் இருப்பை ஏற்று இந்தக்கேள்வியை அல்லாவிடம் நாம் கேட்கவில்லை. மாறாக அல்லாவின் இருப்பை மறுக்கும் விதமாக மனிதர்களிடம் கேட்கிறோம். அல்லா எங்கிருந்தான் என இடம்சார்ந்த கேள்வியாக மட்டும் இதை கேட்கவில்லை, முழுமையான சாத்தியப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கேள்வி கேட்க்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் இடர்பாடுகள் குறித்த பதிவில் தெளிவாகவே விளக்கப்பட்டிருக்கிறது. \\எங்கு இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வியின் மையம். மாறாக நம்பர் 24 படைத்தோன் வீதி, நியூரோபிக்டஸ், ஆண்ரோமீடா. என முகவரி கேட்பதாக நினைத்துக்கொள்ளவேண்டாம்// ஆனால் நண்பரோ வெறும் இடம்சார்ந்து முகவரி கேட்பதாக நினைத்துக்கொண்டே பதில் கூறியிருக்கிறார்.

 

அல்லா என்பது பொருளா? கருத்தா? பொருள் என்றால் அது இடம் சார்ந்தே இருந்தாக வேண்டும். கருத்து என்றால் ஒரு பொருளைச் சாராமல் கருத்து மட்டும் தனித்து உலவமுடியாது. இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டு வேறொன்று என்றால் அது என்ன? எப்படி? என விளக்கும் கடமை நண்பருக்கு உள்ளது. மனிதனைப்போல் அல்லாவை அற்பமாக நினைக்கிறீர்களா? என நண்பர் விசனப்பட்டு கேள்வி எழுப்புகிறார். நண்பர் மறந்துவிட வேண்டாம், அல்லா என்ற ஒன்று இல்லை என்ற நிலையிலிருந்தே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அல்லாவின் இருப்பே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் \\அவன் எப்படியும் இருக்க முடியும். எந்தப் பொருளீன் துனையும் இல்லாமல் இருக்க முடியும்// என தன் நம்பிக்கையை பதிலாக கூறுகிறார் நண்பர். உங்கள் நம்பிக்கையே போதுமானதாக இருக்கமுடியும் என்றால், இஸ்லாம் கற்பனை எனும் இந்த கட்டுரைத் தொடரே அவசியமில்லை.

 

இரண்டாவது இடர்பாட்டை எளிமையாக ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம், ஒருவர் ஒரு பேனாவை உருவாக்குகிறார் எனக் கொள்வோம். ஒருவர் அந்த பேனாவுக்குள் உட்கார்ந்துகொண்டு அந்த பேனாவை உருவாக்க முடியுமா? எந்த மூலப்பொருளுமின்றி ‘குன்’ ஆகுக என்று கூறியே அந்தப் பேனாவை உருவாக்கும் வல்லமை அந்த ஒருவருக்கு இருக்கிறது என்றே கொண்டாலும், பேனாவுக்குள் இருந்துகொண்டே பேனாவை உருவாக்க முடியுமா? இது கட்டுரையில் தெளிவாகவே விளக்கப்பட்டுள்ளது, \\ஒரு பொருளைப் படைப்பதற்கான முக்கியமான நிபந்தனையே படைப்பவன் படைக்கப்படும் பொருளுக்கு வெளியில் இருந்தாக வேண்டும் என்பது// என்று. தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் தன்னுடைய படைப்பு என்று எந்த ஆற்றலாலும் கூறமுடியாது. தன்னை மட்டுமே சுயம்பு என கூறிக்கொள்ளும் ஒன்று இடமில்லாத ஒரு இடத்தில் எப்படி இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வி. அதை அறிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு இல்லை என இதை ஒடுக்கிக் கொள்ளமுடியாது. ஏனென்றால், இடம்சார்ந்து மட்டுமே இந்தக் கேள்வி கேட்க்கப்படவில்லை. அப்படி இருக்கும் சாத்தியமில்லை என்பதே அந்தக் கேள்வியில் உள்ளார்ந்து இருப்பது.

 

இதை விளக்க நண்பர் அறிவியலையும் துணைக்கழைத்திருக்கிறார். பெருவெடிப்புக்கு முன்னர் என்ன நிலை இருந்தது என்பதை மனிதன் அறிந்து கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார். தவறு. பெருவெடிப்புக்கு முந்திய கணம் வரை மனிதன் கண்டறிந்திருக்கிறான். அதற்கு முன்னர் என்ன? என்பது இன்றைய நிலையில் மனிதனுக்கு தெரியாது அவ்வளவுதான். நாளை கண்டறியப்படலாம். இதுதான் அறிவியலின் நிலை. ஆனால் அல்லாவின் நிலை இப்படியல்ல, என்றும் அதற்கு விடைகாண முடியாது என்பதே இஸ்லாத்தின் நிலை. அல்லது, முதல்படைப்பை அல்லா எப்படி படைத்தான் என்பது இன்று தெரியவில்லை, நாளை தெரிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது என்பதை நண்பர் விளக்கட்டும். அப்போது இந்தக்கேள்வியை திரும்பப்பெற்றுக்கொண்டு தெரிந்து கொள்ளும் அந்த நாளுக்காக காத்திருக்கலாம். இன்னொன்றையும் நண்பர் தெரிந்துகொள்ள வேண்டும் பெருவெடிப்புக் கொள்கை என்பது அறிவியல் யூகம் தான், அறுதியான உண்மையல்ல. நாளை பெருவெடிப்புக் கொள்கையேகூட காணாமல் போகலாம்.

 

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

%d bloggers like this: