திருப்பூர்: மிரட்டும் சாயப்பட்டறை முதலாளிகள்

அண்மையில் சுத்திகரிப்பு முறையை செயல்படுத்தாத திருப்பூர் சாயப்பட்டறைகளை மூடச்சொல்லி உத்தரவிட்டது நீதிமன்றம். அதனையடுத்து திருப்பூரில் போராட்டம் கடையடைப்பு என தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நீதிமன்றம் சரியாக உத்தரவிட்டிருக்கிறது என்றும், தொழிலாளர்கள் வேலை இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் இருவேறு விதமாய் பேசி விவாதித்து வருகிறார்கள். ஆனால் இது திருப்பூர் மட்டுமே சார்ந்த விசயம் என்றோ, மாசுகட்டுப்பாட்டுத்துறையின் அலட்சியம் மட்டுமே காரணம் என்றோ இதை குறுக்கிவிடமுடியாது. உலக அளவில், குறிப்பாகச் சொன்னால் மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் இருக்கும் இந்தப் பிரச்சனையின் இந்திய தமிழக வடிவம் திருப்பூர். சாயப்பட்டறைகளின் கழிவு நீரை ஆற்றில் கலந்துவிட்டார்களாம் என்று இந்தப் பிரச்சனையைப் பார்ப்பது அல்லது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துவிட்டார்களே என்று மட்டுமே இதைப்பார்ப்பது இந்தப் பிரச்சனையின் நீள ஆழ‌ங்களை உள்வாங்காத மேலோட்டக் கோணமாகும்.

 

இந்தியாவைப் பொருத்தவரை முன்னேற்றம், வளர்ச்சி என்று கூறப்படுவது தொழில்துறை சார்ந்துதான். ஆனால் அந்த தொழில்துறையின் வள‌ர்ச்சி இந்திய விவசாயத்தின் அழிவில்தான் சாத்தியப்பட்டிருக்கிறது. இதற்கு சிற‌ப்பான குறியடையாளமாக திருப்பூரைக் கொள்ளலாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரத்தப்பாளையம் அணை திறக்கப்பட்டபோது நானூறுக்கும் அதிகமான தென்னந்தோப்புகள் பாதிக்கப்பட்டன. அந்த நீரைக் குடித்த நூற்றுக்கணக்கான கால்நடைகள் செத்துவீழ்ந்தன. அதன்பிறகு அந்த அணை திறக்கப்படவே இல்லை. அணையை ஒட்டியுள்ளவர்கள் எங்கள் விவசாய நிலங்கள் பாழாகிவிட்டன அணையைத் திறந்துவிடுங்கள் என்கிறார்கள். பிறபகுதி மக்களோ எங்கள் விவாசாய் நிலங்கள் பாதிக்கப்படும் எனவே அணையை திறக்காதீர்கள் என்கிறார்கள். அந்த அளவுக்கு சாயக் கழிவுகளால் நிறைந்திருக்கிறது அந்த அணை. குறுகிய காலத்தில் பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கும் திருப்பூர் வளர்ச்சியின் மறுபக்கம் இது. விவசாய நிலங்கள் பாழ்பட்டுப்போனது, கால்நடைகளின் இழப்பு, புற்றுநோய் உள்ளிட்டு பலவிதமான தோல்நோய்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், சுத்தமாக துடைத்தெறியப்பட்ட நிலத்தடிநீர், குடிநீர் வளம் இவைகளோடு ஒப்பிட்டால் வந்திருக்கும் நீதிமன்ற ஆணை கொசுறு.

 

தொன்னூறுகளிலிருந்தே அந்தப்பகுதி விவசாயிகள் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யலாற்றில் கலந்துவிடப்படுவதற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது ஆற்றில் கலப்பதற்கு எதிராக ஏதாவது பரிந்துரைகளைச் செய்வதும் அது மாசுக்கட்டுப்பாட்டுத் துறையின் உதவியுடன் சாயப்பட்டறை முதலாளிகளால் அப்பட்டமாக மீறப்படுவதும் தொடர்ந்து நடந்துவந்திருக்கிறது. இந்த தேதிக்குள் சுத்திகரிப்பு முறைகளை முழுமையாக செயபடுத்தவேண்டும் என்று பலமுறை நீதிமன்றம் கெடு விதித்திருக்கிறது. அத்தனையும் மேல்முறையீடு என்ற பெயரிலும் பல்வேறு சதிகளினாலும் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக காமன் எப்ளூயண்ட் ட்ரிட்மெண்ட பிளான்ட் (செப்ட்) எனும் பொதுவான சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டது. இதன்படி சாயப்பட்டறைகள் தங்கள் சாயக்கழிவுகளை இந்த செப்டிடம் கொடுத்துவிட்டால் அவர்கள் அதை சுத்திகரித்து போதுமான அளவில் வேதி அபாயங்களை நீக்கி வெளிவிடுவார்கள். ஆனால் இதையும் சாயப்பட்டறை முதலாளிகள் புறக்கணித்தார்கள். காரணம், ஒரு லிட்டருக்கு 12 காசு சுத்திகரிப்பு கட்டணமாக செப்ட்டிற்கு கொடுக்கவேண்டியதிருந்தது. லாபத்தில் மட்டுமே குறியாக இருந்த‌ முதலாளிகள் திருட்டுத்தனமாக நொய்யலாற்றில் கலந்தார்கள். இவைகளையெல்லாம் கடந்து தான் சாயப்பட்டறைகளை மூடும்படி நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிற‌து.

 

ஆனால் இவைகள் எல்லாவற்றையும் வசதியாக மறைத்துவிட்டு இன்று தொழிலாளர்கள் வேலையிழந்துவிட்டார்கள் என்று பிரச்சனையை வேறுவிதமாய் மடைமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளையெல்லாம் பணத்தாலும், அதிகாரத்தை வளைத்தும் செல்லாக்காசாக்கியவர்கள் இன்று ஒட்டுமொத்தமாய் பட்டறைகளை அடைத்து தொழிலாளர்களை வெளியில் நிறுத்தி அரசை மிரட்டியிருக்கிறார்கள். அதற்குத் தோதாக மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியுடன் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து தற்காலிகமாக பிரச்சனையை தீர்க்கமுனைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது முதலாளிகள் லாபத்தை தங்கள் பைகளில் திணித்துக்கொள்வார்கள், பிரச்சனைகளையும் செலவுகளையும் அரசு தாங்கிக் கொள்ள வேண்டும்.

 

இது ஏதோ திருப்பூர் சாய்ப்பட்டறை முதலாளிகளின் தனிப்பட்ட இயல்பாக நினைத்துவிட முடியாது. உலகம் முழுவதிலும் முதலாளிகளின் முதலாளித்துவத்தின் இயல்பு இதுதான். சந்தைப் பொருளாதாரம், சுதந்திரமான போட்டி என்று கூறிக்கொண்டு எந்த விதத்திலும் அரசின் தலையீடு இருக்கக்கூடாது, அதுதான் வளர்ச்சிக்கு அடிப்படை என்பவர்கள், நெருக்கடி என்று வந்துவிட்டால் அரசு தங்களை கைதூக்கி விடவேண்டும் என்கிறார்கள். அமெரிக்காவில் சப் பிரைம் லோன் நெருக்கடியின் பிறகு சீட்டுக்கட்டு கோபுரங்களைப்போல் சரிந்துவிழுந்த நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு மக்கள் பணத்தை கோடிக்கணக்கான டாலர்களை வாரி வழங்கியது. புழுத்த அரிசியைக் கூட ஏழைகளுக்கு வழங்கமுடியாது என திமிரோடு கூறும் மன்மொகன் அரசு கடந்த ஓரிரு ஆண்டுகளில் மட்டும் ஐந்துலட்சம் கோடியை வரிச்சலுகையாக வழங்கியிருக்கிறது. பிரச்சனைகளை அரசின் தலையில் கட்டிவிடும் முதலாளிகள் மக்களைச் சுரண்டி அடிக்கும் கொள்ளையில் தங்களை நிறைத்துக்கொள்கிறார்கள். திருப்பூரின் பின்னணியும் இதுதான்.

 

அரசுக்கு பலகோடி அன்னியச் செலவாணியை ஈட்டித்தரும் திருப்பூர் பின்னலாடைத் தொழில் முடங்கினால் அதுவும் மக்களை பாதிக்கும் ஒன்றுதானே என்றும் சிலர் நினைக்கலாம். ஆனால் விவசாயத்தை அழித்து இதை எட்டியிருக்கிறோம் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அரசு ஏன் விவசாயத்தை அழிக்கிறது? என்பதும் அன்னியச் செலவாணியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. திருப்பூர் பின்னலாடைத்தொழில் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டே இயங்கிவருகிறது. பின்னலாடைகளை நெய்யப் பயன்படும் அதி நவீன இயந்திரங்கள் முதல் சாயப்பட்டறை இயந்திரங்கள் சுத்திகரிப்பு முறைகள் என அனைத்தும் வளர்ந்த நாடுகளில் தயாராகி இறக்குமதி செய்யப்படுகிறது. துணிகளுக்கு நிறமேற்றப்பயன்படும் சாயப் பொருட்கள், வேதியல் கலவைகள் அனைத்தும் வளர்ந்த நாடுகளிலிருந்தே தருவிக்கப்படுகின்றன. இதில் இன்னோன்றையும் கவனிக்க வேண்டும். இங்கு நிறமேற்றப் பயன்படும் பொருட்களில் பெரும்பாலானவை வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டவைகள். எல்லாவற்றையும் தொடர்புபடுத்திப் பார்த்தால்; கனரக நவீன இயந்திரங்களைத் தயாரிப்பது அவர்கள், வேண்டிய வண்ணத்திற்கு மாற்ற இரசாயணப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் அவர்கள், இவைகளின் மூலம் நெய்யப்படும் ஆடையை அணிவதும் அவர்கள், எல்லாவற்றையும் செய்யும் அவர்கள் துணிகளுக்கு சாயமேற்றுவதையும் ஏன் அவர்கள் செய்யக் கூடாது?

 

உடலுழைப்பு அதிகம் தேவைப்படும், உற்பத்திச்செலவு அதிகமாக இருக்கும், ஆபத்து நிறைந்த, சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் அனைத்துவகைத் தொழில்களையும் வளரும் நாடுகளிடம், மூன்றாம் உலக நாடுகளிடம் தள்ளிவிட்டு உற்பத்தியை மட்டும் தருவித்துக்கொள்வது வளர்ந்த நாடுகளின் கொள்கையாக இருக்கிறது. இதைத்தான் அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் தொழில்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இந்தத் தொழிகளுக்காகத்தான் இன்னும், நாட்டின் பெரும்பாலானவர்களுக்கு வேலைவாய்ப்பளித்து உயிராதாரமாய் இருக்கும் விவசாயத்தை அழித்து வருகிறார்கள். இதைத்தான் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயர்களால் குறிப்பிடுகிறார்கள்.

இதை வணிகம் என்றோ, உலகமே கிராமமாக சுருங்கியிருக்கும் நிலையில் ஒரே இடத்திலேயே எல்லாவற்றையும் தயாரிக்க முடியுமா என்றோ புரிந்து கொள்ள முடியாது. எப்படியென்றால், வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் அனைத்து நாடுகளையும் கடன் வலையில் சிக்க வைத்திருக்கின்றன. ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையையே தீர்மானிக்கும் அளவுக்கு இந்தக் கடன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. உதவி எனும் பெயரின் கடன்களைத் தந்து தங்களுக்கு தேவையான வசதிகளை, கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.  தங்கள் நாடுகளில் அதிக செலவுபிடிக்கும் உற்பத்திகளை ஏழை நாடுகளில் செய்யவைப்பதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்கிறார்கள். உலகளாவிய சந்தையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மூலப்பொருட்களுக்கு அதிக விலையையும், உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்த விலையயும் நிர்ணயம் செய்து, ஏழை நாடுகளை மொத்தமாகச் சுரண்டுகிறார்கள். உலகமயம் என்ற பெயரில் ஏழை நாடுகளை சுரண்டிக் கொழுக்கும் வேலையைத்தான் வளர்ந்த நாடுகள் செய்து வருகின்றன. இதை வணிகம் என்றோ, தொழிலகலின் பரவல் என்றோ குறிப்பிடமுடியாது. மறுகாலனியாக்கம் என்பதே பொருத்தமான பெயர்.

 

ஆக, அன்னியச் செலவாணி ஈட்டித்தரும் தொழில்கள் என்று கூறிக்கொண்டு நாம் சுற்றுச் சூழலை இழந்திருக்கிறோம், விவசாயத்தை இழந்திருக்கிறோம், மக்களின் வாழ்வாதாரத்தை, குடிநீர் வளத்தை அனைத்தையும் இழந்திருக்கிறோம். இதுவரை திருப்பூர் பின்னலாடைத்தொழில் மூலம் கிடைத்த அத்தனை அன்னியச் செலவாணி டாலர்களைக் கொண்டுவந்து கொட்டினாலும் ஒரத்தப்பாளையம் அணையை சுத்தம் செய்ய முடியுமா? அதனால் மலடாகிப்ப்போன நிலங்களை சரி செய்ய முடியுமா? பாதாளத்துக்கு இறங்கிவிட்ட நிலத்தடி நீரை உயர்த்திக் கொண்டுவர முடியுமா? எனவே சாயப்பட்டறைக் கழிவுகள் என்பது திருப்பூரை மட்டுமே சார்ந்த பிரச்சனை அல்ல. உலகளாவிய முதலாளித்துவ கோரத்தின் திருப்பூர் முகம்.

 

தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு சாயப்பட்டறைகளிலும் சுத்திகரிப்பு முறைகளை செயல்படுத்துவது ஒன்றும் சாத்தியமில்லாத திட்டமல்ல. 40 லிருந்து 60 விழுக்காடு வரை லாபம் தரும் சாயப்பட்டறைகளுக்கு சுத்திகரிப்பு செலவினங்கள் லாபத்தில் குறைவைக்கொண்டுவருமேயன்றி ஒருபோதும் நட்டத்தைக் கொண்டுவராது. மட்டுமல்லாது ஒரத்தப்பாளையம் அணையை கொஞ்சமேனும் சீர்செய்ய வேண்டுமென்றால் ‘ஸீரோ டிஸ்சார்ஜ்’ முறையைத் தவிர வேறதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போது சாயப்பட்டறைக் கழிவில் அங்கீகரிக்கப்பட்ட அளவு குறித்து பேசுபவர்கள், நேரடியாக ஆற்றில் கலந்தபோது அங்கீகரிக்கப்பட்ட அளவுகுறித்து எந்தக்கவலையும் பட்டவர்களில்லை. தவிரவும் தண்ணீர் அதிகம் தேவைப்படும் இந்தத்தொழிலில் கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்தச் செய்யவேண்டியதும் அவசியமாகும்.

 

இப்போது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள் என்று கூறி போராடுவது சாயப்பட்டறை முதலாளிகள் இதுவரை செய்துவந்த அயோக்கியத்தனத்தை மறைக்கும் விதத்திலேயே அமையும். திருப்பூரில் மட்டுமா இந்தியாவெங்கும், உலகெங்கும் மக்கள் வேலையிழந்து வருகிறார்கள். அந்த வேலையிழப்புக்கு மையமான காரணம் என்ன என்பதை கூர்ந்து நோக்காமல், முதலாளிகளால் திசைதிருப்பாக முன்தள்ளப்படும் வேலையிழப்பு சார்ந்த போராட்டங்கள் முதலாளிகளின் லாபத்திற்கு பயன்படுமேயன்றி தொழிலாளர்களுக்கல்ல. மத்திய மாநில அரசுகள் சுத்திகரிப்புப்பணிகளை கைக்கொண்டாலும் அதுவும் மக்கள் தலையிலேயே விடியும். இப்போது வேலையிழப்பை முன்வைப்பவர்கள் இந்த முதலாளிகள் வேறு காரணங்களுக்காக தொழிலாளிகளை வேலை நீக்கம் செய்யமாட்டார்கள் என்பதை உத்திரவாதப்படுத்த முடியுமா?

 

சாயப்பட்டறைகள் மூடப்பட்டிருப்பது தொழிலாளர்களுக்கு இழப்பு என்றாலும், முதலாளிகளுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுப்பது தவறான முன்னுதாரணமாக இருக்கும் அதேநேரம், சாயப்பட்டறைகள் தொடர்ந்து மூடிக்கிடப்பதையும் அனுமதிக்க முடியாது. எனவே அரசு கெடு விதித்து, அதற்குள் சுத்திகரிப்பு முறைகளை அமைத்து திறக்காத சாயப்பட்டறைகளை அரசே ஏற்று நடத்தவேண்டும். இதை அரசு செய்யும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்த திசையில் மக்கள் ஒன்றிணைந்து சமரசமற்ற போராட்டங்களை நடத்தி அரசை பணியவைப்பது தான் இந்தப்பிரச்சனைக்கான சரியான தீர்வாக இருக்கும்.

 

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

2 thoughts on “திருப்பூர்: மிரட்டும் சாயப்பட்டறை முதலாளிகள்

  1. essay is excellent. But final portion is still need more concentration; If it should be explained still more with action plans ; it will be more better. thank u. vanakkam.kavignar.Thanigai.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s