இந்திய துணைக்கண்டத்தின் புதிய மதம் கிரிக்கெட்

ஒரு விளையாட்டுக்கு இத்தனை முக்கியத்துவமா? என்றாலோ, கிரிக்கெட்டின் மீது இப்படி காதல் கொண்டலைவது சரிதானா? என்றாலோ நம்மை புழுவை விடவும் கீழாய் கருதத்துணியும் மக்களிடையே இருந்து கொண்டிருக்கிறோம். ஊன், உறக்கம், பணி என அனைத்தையும் கடந்த பக்தி போதையின் பரவசத்தைத்தரும் ஒன்றாக கிரிக்கெட் ஆகிவிட்டது. சாதாரணமாக இரண்டு நாடுகள் ஆடும் போதுகளிலேயே இது தான் நிலமை எனும்போது உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும்போது கேட்கவும் வேண்டுமோ. உற்சவம் தான்.

 

ஆனால், நம்மைச் சூழ நடக்கும் அனைத்தையும் விட ஒரு விளையாட்டு நம் கவனத்தை விழுங்கிவிட முடிவது எப்படி நம்முள் இயல்பாய் ஏற்பட்டிருக்க முடியும்? மகிழ்வாய் வாழ்வது, சொகுசாய் வாழ்வது எனும் இரண்டின் வேறுபாட்டையும் பிரித்தறிய முடியாதபடி ஒன்றாய் கருதிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் இந்தக் கேள்வியின் பொருளைச் செரிப்பது சற்றுக் கடினம் தான். காரணம், நம்முடைய விருப்பங்கள் நம்மீது திணிக்கப்படுபவை என்பதை நாம் இன்னும் முழுமையாய் அறிந்துகொண்டிருக்கவில்லை. விளையாட்டு என்பது நம்முடைய உற்பத்தித் திறனைச் சார்ந்து அதனை மேம்படுத்திக்கொள்ள நாம் ஈடுபடும் ஒரு கலைவடிவம் என்பது மாறி தொழில்நுட்பமும் சந்தை வணிகமும் அதில் கலந்து விளையாட்டு என்பது உற்பத்திப் பொருளான போது நாம் அதன் நுகர்வு அடிமையாகிப் போனோம்.

 

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆடப்படும் கால்பந்து விளையாட்டு இங்கு எந்தக் கவனத்தையும் ஈர்க்காத ஒன்றாக இருக்கிறது. பல நாடுகளில் கிரிக்கெட் என்ற ஆட்டமே அறிமுகமாகியிருக்கவில்லை. இந்த இரண்டு இடங்களின் மக்களையும் பொதுவான ஒரு ஒப்பீடு செய்து பார்த்தாலே அந்தத்தப் பகுதிகளில் குறிப்பிட்ட விளையாட்டுகள் எப்படி மக்களிடம் திணிக்கப்பட்டு கொள்ளை லாபமீட்டும் தொழிலாக நடந்துவருகிறது என்பது புரியும். இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தின் விளைவாக உலகின் எந்தப்பகுதியில் விளையாடினாலும் நேரடியாகக் க்காணும் வசதி முதலாக‌, அனைத்து செய்தி ஊடகங்களும் தொடர்ச்சியாக இது குறித்த செய்திகளை வெளியிட்டு மக்களின் நினைவெல்லையிலிருந்து அகன்றுவிடாதவண்ணம் இருத்திவைப்பது ஈறாக அத்தனை வழிகளிலும் இது மக்களின் மனதில் பதியவைக்கப்படுவதினாலேயே சாத்தியப் படுத்தப்பட்டிருக்கிறது. ஆழமான புரிதல் இல்லாத யாரும் இதில் தனிப்பாட்ட விருப்பம் எதையும் கொண்டுவிட முடியாது.

 

இந்த உலகக் கோப்பை போட்டியைப் பொருத்தவரை, கடந்த போட்டியில் முதலாளிகளுக்கு ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக எச்சரிக்கையுடன் முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் கூட ஆயிரக்கணக்கான கோடிகள் இதற்காக செலவிடப்பட்டுள்ளன. விளையாடுபவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் உட்பட இதில் செலவு செய்யப்படும் அனைத்திற்கும் பகரமாக பலமடங்குகளில் லாபமீட்டாவிட்டால் இந்த விளையாட்டு சீந்துவாரின்றிப் போகும். ஆனால் அவ்வாறில்லாமல் மேலும் மேலும் இதில் கொட்டப்படுவதிலிருந்தே இது எந்த அளவுக்கு வெற்றிகரமான தொழிலாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 

கிரிக்கெட் விளையாட்டில் கோடிகளைக் கொட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபமென்ன? இந்தியச் சந்தையைக் கைப்பற்றுவதுதான். உலக அளவில் கிரிக்கெட்டிலிருந்து கிடைக்கும் மொத்த வருவாயில் 70 விழுக்காடு இந்தியாவிலிருந்து கிடைக்கிறது. பெப்சி, கோக், நைக் ஷூ உள்ளிட்ட பல நிறுவனங்கள் கிரிக்கெட்டைப் பயன்படுத்தி தங்கள் சந்தையை விரிவுபடுத்திக்கொண்டதன் மூலம் பல்லாயிரம் கோடிகளை லாபமாக ஈட்டியிருக்கின்றன. இந்தியாவில் இந்த உலகக் கோப்பை போட்டியை மட்டும் 30லிருந்து 40 கோடி பேர்வரை காண்பார்கள் என கணிக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் தங்கள் உற்பத்திப் பொருட்களை விளம்பரங்களாக மீண்டும் மீண்டும் காட்டி பதியவைக்கப்படுவதன் மூலமே இந்த விற்பனை சாத்தியப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆக, பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை தொடர்ச்சியாக பார்க்கவைப்பதற்காகவே கிரிக்கெட் பயன்படுத்தப்படுகிறது. சரி, இந்த விளம்பரங்களுக்காக செலவிடப்படும் பணத்தை அந்த நிறுவனங்கள் உற்பத்திச் செலவுகளாகத்தான் வகைப்படுத்துகின்றன. அதாவது உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையில் கிரிக்கெட்டிற்காக செலவிடப்படும் தொகையும் அடக்கம். அதையும் உள்ளடக்கித்தான் விலை தீர்மானிக்கப்படுகிறது. என்றால் அந்தப் பணத்தைச் செலுத்துவது யார்? சந்தேகமென்ன மக்கள் தான். சுற்றிவளைத்து மக்களிடம் இருக்கும் கிரிக்கெட் மோகம் மக்களைச் சுரண்டி முதலாளிகளிடம் சேர்க்கும் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் விருப்பப்பட்டு தேர்ந்தெடுக்கிறோம் என்றோ, தேசபக்தியின் அடையாளம் என்றோ கூற முடியுமா?

 

லட்சக்கணக்கான விவசாயிகள் செத்து வீழ்ந்தபோது ஏற்படாத‌ சோகமும், கோபமும் ஒரு போட்டியில் தோற்கும்போது ஏற்படுகிறது என்றால் எந்த விதத்தில் இது தேசபக்தி? ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் அதிகம் வாழும் நாடு எனும்போது ஏற்படாத அவமானம் ஒரு போட்டியில் தோற்கும்போது ஏற்படுகிறது என்றால் எந்த அடிப்படையில் இது தேசபக்தி? இந்தியர்கள் விளையாடினால் எதிரில் யாராக இருந்தாலும் தோற்க வேண்டும் என நினைப்பது எப்படி தேசபக்தியாகும்? ஐ.பி.எல் போட்டிகளின் போது எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தன்னைச் சார்ந்த அணியாக இருந்தால் ஏற்றுக்கொண்டு அதே விளையாட்டு வீரன் அவ‌னுடைய நாட்டு அணியில் விளையாடும் போது எதிரியாக பார்ப்பது விளையாட்டா? வெறியா? இதை எப்படி தேசபக்தி என்பது?

இதில் இந்திய அணி விளையாடுகிறது, இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள் என்பதே மோசடியானது. விளையாடுவது அரசு தேர்ந்தெடுத்து அனுப்பும் அணியல்ல அது. பிசிசிஐ எனும் தனியார் அமைப்பு தேர்ந்தெடுத்து, அதனுடைய கட்டுப்பாட்டிலிருந்து ஆடும் அணி என்பதே சரியானது, தவிரவும் விளையாடுபவர்கள் பணத்திற்காகவே விளையாடுகிறார்கள். இதன் மீது தேசியம் வெளிப்பூச்சாக பூசப்பட்டிருக்கிறது. நமக்கு கிரிக்கெட் மீதான மோகம் வற்றிவிடக்கூடாது என்பதற்காக பூசப்பட்ட வெளிப்பூச்சு தான் இந்திய அணி என்பது

 

மட்டுமல்லாது, வெளியில் தெரியும் அத்தனை பகுதிகளிலும் விளம்பரங்களை எழுதி நடமாடும் விளம்பரத்தட்டியாக நின்று ஆடுபவனை நாட்டுக்காக விளையாடுபவன் என்பது எந்த வகையில் பொருந்தும்? மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்ஸிங் தொடங்கி அனைத்து ஊழல்களிலும் ஈடுபட்டு விளையாட்டின் முடிவை முன்கூட்டியே தீர்மானிக்கும் அளவுக்கு சென்றுவிட்ட பிறகும் நாட்டுக்காக விளையாடுகிறார்கள் என்பதா? வெளிப்படையாக ஒப்பந்தம் போட்டு மட்டையிலிருக்கும் நிறுவனந்த்தின் பெயரை கேமராவில் காண்பித்தால் அதற்கு தனியே காசு என விளையாட்டை அவர்கள் தொழிலாக்கி விட்டிருக்க, சொந்த வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட் பார்க்கும் இரசிகனை என்னவென்பது?

 

கல்வி, மருத்துவம் போன்றவற்றை மக்களுக்கு வழங்குவதற்காக அரசு மக்களிடம் சேவை வரி விதிக்கிறது. ஆனால் இந்த கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது சேவை என்று கூறி பிசிசிஐ எனும் தனியார் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அரசு வரிவிலக்கு அளித்திருப்பதை கிரிக்கெட் இரசிகன் என்னவென்று புரிந்து கொள்வான்?

 

கிரிக்கெட் எனும் விளையாட்டைச் சூழ்ந்திருக்கும் இவை எதும் எந்த விதத்திலும் சலனப்படுத்தாது, அதில் அடிக்கப்படும் ஃபோர்களும் சிக்ஸர்களும் மட்டும் பரவசத்தைத்தரும் எனக் கூறும் ஒரு ரசிகன் மனிதனாக இருக்கமுடியுமா என்பதை சிந்தித்துப் பார்க்க இதைவிட பொருத்தமான தருணம் வேறு இருக்க முடியாது.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

5 thoughts on “இந்திய துணைக்கண்டத்தின் புதிய மதம் கிரிக்கெட்

 1. என்னமோ கிரிக்கெட் பற்றி பேசினால்
  பெரிய அறிவு வளர்ச்சி இருப்பதாக
  இவனுங்களா நினைத்து கொள்கிறானுங்க…..

  இதை படித்துவிட்டு கிரிக்கெட் பயித்தியம் தெளிந்தால் நல்லதுங்க…

 2. /////// இதில் இந்திய அணி விளையாடுகிறது, இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள் என்பதே மோசடியானது. விளையாடுவது அரசு தேர்ந்தெடுத்து அனுப்பும் அணியல்ல அது. பிசிசிஐ எனும் தனியார் அமைப்பு தேர்ந்தெடுத்து, அதனுடைய கட்டுப்பாட்டிலிருந்து ஆடும் அணி என்பதே சரியானது,////////

  most of the indians doesn’t know this information.
  thanks to senkodi…….

 3. போனதடவை இரண்டு டீம்களையும் லீக் போட்டியிலே வெளியேறும் வகையில் மேட்ச் பிக்சின்க் பண்ணியிருந்தார்கள் .சூதாட்டக்காரர்கள் நல்ல காசு பண்ணினார்கள் .
  இந்த தடவை இரண்டு டீம்களை செமி பைனலில் மோதும்வகையில் மேட்ச் பிக்சிங் காசை அள்ளப்போவது சூதாட்டக்காரர்களும் கிரிகேட்டர்களும் .

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s