அண்மையில் இந்திய ஊடகங்கள் ஊழலுக்கு எதிராக வெகுண்டெழுந்தன. இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி என்றன, அதாவது இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே நடக்கும் போர் என்றன. போராட்டம் என்றாலே முகஞ்சுழிக்கும்; வாழ்வின் அனைத்து சொகுசுகளையும் அனுபவிக்கும் கணவான்களெல்லாம் மெழுகுதிரி ஏந்தி ஊழலுக்கு எதிரான தங்கள் பங்களிப்பை செய்தார்கள். இத்தனைக்கும் தொடக்கம் கதர் குல்லா அணிந்து காட்சியளிக்கும் அன்னா ஹசாரே.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சட்ட வரைவு நாடாளுமன்ற பரணில் முடங்கிக் கிடக்கிறது. உயர் பதவியில் இருப்பவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும், விசாரிக்கும் அதிகாரம் இருக்க வேண்டும் எனும் அறிமுகத்துடன் கொண்டுவரப்பட்ட லோக்பால் மசோதா எனப்படும் அது, ஒவ்வொரு முறை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் போதும் கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களாலும் தாலாட்டுப்பாடி எழவிடாமல் தூங்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மசோதாவுக்கு சில மேல்பூச்சு நகாசுகள் செய்து ஜன் லோக்பால் மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அன்னா ஹசாரே என்பவர் தில்லியில் உண்ணாவிரதமிருக்கத் தொடங்கினார். வெள்ளையனை எதிர்த்து(!) காந்தி அவ்வப்போது பூச்சி காட்டிய உண்ணாவிரத ஆயுதத்தை இரண்டாம் காந்தி அன்னா ஹசாரேவும் கையிலெடுக்க, ஐந்தாவது நாள் அரசு பணிந்தது. கொண்டாடி, வெடி வெடித்து ஊழலுக்கு எதிராக மக்கள் பெற்ற வெற்றிக் களிப்புடன் நாடகம் முடிந்தது.
ஜன் லோக்பால் மசோதா சட்டமாகி, அது தன் கடமையைச் செய்வது ஒருபுறமிருக்கட்டும், இந்த மசோதா ஊழலை ஒழிக்கும் வீரியத்தை தன்னுள் கொண்டுள்ளதா?
நீதி மன்றம், தேர்தல் ஆணையம் போல் தன்னிச்சையான அமைப்பாக இருக்க வேண்டும்.
அரசு உறுப்பினர்களுக்கு ஈடாக சமூக ஆர்வலர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்
அதிகபட்சம் இரண்டாண்டுகளுக்குள் எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகளை முடிக்க வேண்டும்.
நடப்பிலிருக்கும் ஊழல் ஒழிப்பு அமைப்புகள் னடுவண் விழிப்புணர்வு ஆணையம், சிபிஐயின் ஊழல் ஒழிப்புப் பிரிவு போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு லோக்பால் அமைப்பின் கீழ் இயங்குதல் வேண்டும்.
நீதிபதிகள், தூய்மையான நடத்தையுள்ள அரசு ஊழியர்களிலிருந்து இதன் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்
தகவல் தருபவர்களை காக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்கவும் முழு அதிகாரம் வேண்டும்
போன்றவை ஜன் லோக்பால் மசோதாவின் முக்கியமான சில குறிப்புகள். இவைகளைத்தான் ஊழலை இந்தியாவிலிருந்தே இல்லாமலாக்கப் போகும் மந்திரங்கள் என ஜபித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த அமைப்பு ஊழலை தக்கவைத்துக் கொண்டிருக்கிறதோ அந்த அமைப்பை தாக்கி அழிக்காமல் அதனிடமே ஊழலை ஒழிக்கும் பொறுப்பையும் சுமத்துவது, ஊழலை ஒழிக்குமா? வளர்க்குமா?
முதலில் ஊழல் என்றால் என்ன? எது ஊழல்? என்பவை குறித்து தெளிவான புரிதல்கள் இருக்க வேண்டும். தற்போது நடப்பில் இருக்கும் சட்ட விதிமுறைகளை மீறிச் செயல்படுவது மட்டும் தான் ஊழலா? அல்லது சாராம்சத்தில் மக்களின் வாழ்வாதாரத்தில் தீயகுறுக்கீடு செய்யும் அனைத்தும் ஊழலா? எடுத்துக்காட்டாக தற்போது பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்போது மொத்த முதலீட்டைவிட அதிகமான அளவில் சலுகைகளும் வரி விலக்குகளும் அரசால் அளிக்கப்படுகின்றன. நியாயப்படி இந்த ஒட்டுமொத்த அனுமதியே ஊழலாக கருதப்பட வேண்டும். ஆனால், அரசு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் ஷரத்துகளில் ஏதேனும் விதிமீறல்கள் நடந்திருக்கிறதா என கண்காணித்து நடந்திருக்கும் பட்சத்தில் அதை மட்டும் ஊழல் என்பதா? சந்தை விலையில் 7000 மதிப்புள்ள இரும்புத்தாதுவை வெறும் 27 ரூபாய்க்கு எடுத்துச் செல்ல அனுமதிப்பது ஊழலா? அல்லது அந்த ஒப்பந்தத்தில் ஏதாவது விதிமீறல் செய்யப்பட்டிருந்தால் அது மட்டும் ஊழலா? எது ஊழல் என்பதின் ஆதாரப் பார்வையே மக்களுக்கும் அரசுக்கும் மாறுபடுகையில் அரசு நியமிக்கும் ஒரு குழுவால் ஊழலை என்ன செய்துவிட முடியும்?
இந்த மசோதாவை நிறைவேறுவதன் மூலம் ஊழலுக்கு எதிராக அதிகபட்சம் என்ன செய்துவிட முடியும் இந்த மசோதாவால்? விசாரிக்கும், வழக்காடும், தண்டனை வாங்கித்தர முயலும். இதை இப்போதிருக்கும் சட்டங்களால் செய்துவிட முடியாதா? இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்கவேண்டும் என்பதற்கு என்ன வழிமுறை இருக்கிறது அந்த மசோதாவில்? அதிக பட்சம் ஊழலுக்கென்று தனிநீதிமன்றம் அமைப்பதை ஒத்ததுதான். அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு ஊழல் எனது பிறப்புரிமை என்று கூறும் அதிகாரவர்க்கத்தையும், அரசியல்வியாதிகளையும் தனி நீதிமன்றங்களைக் கொண்டு எதாவது செய்துவிட முடியும் என்று குழந்தைகள் கூட ஏற்காது.
தற்போதைய நிலையில் இந்த லோக்பால் மசோதா ஊழலை ஒழிக்கப் பிறந்த அவதாரம் போல நம்பப்படும் நிலையில், அதன் ஆதரவாளர்கள் இடையே, இதை ஒரு தொடக்கமாக கொள்ளலாமே ஏன் எதிர்க்க வேண்டும் எனும் கேள்வி எழுவது இயல்பு. ஆனால் இவர்கள் எதை ஊழல் எனக் கொள்கிறார்கள் எனும் கேள்விக்கான பதிலைக் கொண்டுதான் இதை பரிசீலிக்க முடியும். இதுவரை எத்தனையோ பொதுத்துறை நிறுவனங்கள், லாபம் தந்து கொண்டிருக்கும் நிறுவனங்கள் உட்பட தனியாரிடம் விற்கப்பட்டிருக்கின்றன. விற்கப்பட்டிருக்கும் அனைத்து நிறுவனங்களுமே அடிமாட்டு விலைக்கு, அரசுக்கு மிகுந்த நட்டத்தை ஏற்படுத்தும் வண்ணம் விற்கப்பட்டிருக்கின்றன. இப்படி அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டும் என்றாலே அது அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலமே சாத்தியப்படும். இப்படி அடிமாட்டு விலைக்கு விற்பதை ஊழல் எனக் கருதாத ஒரு அமைப்பு அதன் மூலம் பிறப்பெடுக்கும் ஊழலை மட்டும் எப்படி தடுத்துவிடும்? நேற்று நாம் ஊழல் என கருதிக்கொண்டிருந்தது இன்று ஊழல் பட்டியலிலிருந்து விலக்களிக்கப்பட்டு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது, நாளை இன்னும் விலக்களிக்கப்படும். இந்த நிலையில் ஒப்பந்த மீறலை மட்டுமே ஊழல் எனக் கொள்வது யாருக்கு நன்மை பயப்பது?
ஐரோம் ஷர்மிளா தொடங்கி மேதா பட்கர் வரை எத்தனையோ உண்ணாவிரதப் போராட்டங்கள் இங்கு நடந்திருக்கின்றன, நடந்து கொண்டிருக்கின்றன. எதையும் இந்த அரசுகள் கண்டுகொண்டதில்லை, மாறாக ஒடுக்கியிருக்கின்றன. ஆனால் அன்னா ஹசாரே உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்ததும் அரசு பதறுவதாய் காட்டிக் கொள்கிறது, கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கிறது என்றால் அதன் பின்னுள்ள காரணம் என்ன?
ஆதர்ஸ் ஊழல், அலைக்கற்றை ஊழல், இராணுவ நிலபேர ஊழல், எஸ் பேண்ட் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று அடுக்கடுக்காக தினம் ஒரு ஊழலாக வெளிவந்து மக்களிடம் இந்த அரசமைப்பு அம்பலப்பட்டு நிற்கிறது. தீர்க்கமான விழிப்புணர்வு இல்லாவிடினும் மக்கள் ஊழலுக்கெதிரான மனோநிலையில் இருக்கிறார்கள். இதை இப்படியே விட்டால், மக்கள் கிளர்ந்தெழுந்து ஊழலுக்கெதிரான போராட்டங்களை கட்டியமைத்து விட்டால்அது தமக்கும் தம் எஜமானர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். அதை தணித்தேயாகவேண்டிய தேவையுடன் இருக்கிறார்கள். அதனால்தான் உண்ணாவிரதம், மெழுகுதிரி ஏந்துதல் போன்ற உப்புமா போராட்டங்களை ஆதரித்து ஊடகங்கள் வழியே ஊழல்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெறுவதைப் போல சித்தரிக்கிறார்கள். இதன் மூலம் மக்களின் உணர்வுகளுக்கு ஒரு வடிகால் தேடித்தருகிறார்கள். இதோ கல்லெறிந்து விட்டோம் மாங்காய் விழவேண்டியது தான் மிச்சம் என்று பசப்புகிறர்கள்.
ஆக்டோவியன் ஹ்யூம், அன்னிபெஸண்ட் ஆகிய இரண்டு வெள்ளையர்கள் உருவாக்கிய காங்கிரஸ் கட்சி தான் சுதந்திரத்தையும் கடலை மிட்டாயையும் வாங்கித்தந்தது என்று உருப்போட்டு நம்ப வைத்திருப்பது போல் அன்னாவின் ஐந்து நாள் உண்ணாவிரதம் ஊழலை ஆவியாக்கி இல்லாமல் செய்துவிடும் என்று நம்பச் சொல்கிறார்கள். தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த காந்தியைக் கொண்டு மக்கள் போராட்டம் மிகைக்கும் போதெல்லாம் அகிம்சை சத்தியாக்கிரகம் ஒத்துழையாமை போன்ற கூத்துகளை அரங்கேற்றி கைதாகி சிறையில் இருந்து கொண்டு மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க வைத்த காந்தியைப் போலவே இந்த இரண்டாம் காந்தியும் ஊழலுக்கெதிரான மக்களின் உணர்வை மழுங்கடிக்க முயன்றிருக்கிறார்.
எது ஊழலை ஒழிக்கும்? பொழுது போகாமல் மெழுகுதிரி ஏந்துவதா? சமரசமற்று மக்களைத் திரட்டி போராடுவதா? இதோ விருத்தாச்சலத்தில் தோழர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள், இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். மெய்யாகவே நீங்கள் ஊழலை ஒழிக்க விரும்பினால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
அன்னா ஹசாரேவின் ஐந்து நாள் உண்ணாவிரதமோ, லோக்பால் மசோதாவோ ஊழலை ஒழித்துவிடும் என்று யாரும் நம்பத் தயாராக இல்லை. பின்னணியில் தோழர் பகத் சிங்கின் படத்தை பயன்படுத்தியிருக்கிறார்களே என்பதைத் தவிர இந்த காமெடிக் கூத்தில் ஒரு வருத்தமும் இல்லை.
மெழுகுவர்த்தி ஏந்தியவர்களில் ஊழல் செய்யாதவர் எத்தனை பேர்? இந்தியா பாகிஸ்தான் கிரிகெட்டை பார்க்க பதினைந்தாயிரம் ரூபாய் டிக்கட்டை பத்து லட்ச ரூபாய் கொடுத்து வாங்கி ஒருவர் தனது தேசபக்தியை வெளிபடுத்தினாராம்.ரஜினி போன்ற நடிகர்கள் பரந்தும் பாய்ந்தும் தங்களது தேச பக்தியை காட்டினார்கள்.வருமானவரி ஏயப்பு செய்து தேசத்தை ஏமாற்றி கிடைத்த மித மிஞ்சிய காசில் தங்களது தேச பக்தியை கிரிக்கெட் மூலம் வெளிபடுத்தியது போல் இல்லாமல் இவர்களது மெழுகுவர்த்தி மற்றும் sms ஆதரவையும் ஹசாரே ஏற்று கொள்ளாமல் இருந்தால் சரி
ஊழல் முடைநாற்ற முதலாளித்துவ அரசியலுக்கு புதி ய புனிதர் முகம் தேவை.கசாரே அகப்பட்டுள்ளார்.வியாபர ஊடகங்களும் தூக்கிவைத்து முதல் பக்கச் செய்தி வெளியிட்டு வருகின்றன.ஆனால் பன்றியை குளுப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் ,,,,கசாரே மோடி புகழாரம் மூலம் தான் எப்படி பட்டவர் என அடிக்கோடிட்டு விட்டார்.
//இதை இப்படியே விட்டால், மக்கள் கிளர்ந்தெழுந்து ஊழலுக்கெதிரான போராட்டங்களை கட்டியமைத்து விட்டால்அது தமக்கும் தம் எஜமானர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். அதை தணித்தேயாகவேண்டிய தேவையுடன் இருக்கிறார்கள். அதனால்தான் உண்ணாவிரதம், மெழுகுதிரி ஏந்துதல் போன்ற உப்புமா போராட்டங்களை ஆதரித்து ஊடகங்கள் வழியே ஊழல்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெறுவதைப் போல சித்தரிக்கிறார்கள். // எனக்கென்னவோ மக்கள் அமைதி வழியில் போராடி ஜனநாயகத்தை சீர்படுத்திவிட்டால் எங்கே உங்களால் வன்முறை வெறியாட்டமிக்க செம்புரட்சியை கொண்டுவரமுடியாதோ என்று நீங்கள் அஞ்சுவதாகவே படுகிறது.
இன்னொரு மகாத்மா உருவாகலாம். இன்னொரு கொலைகார மாவோ, ஸ்டாலின்கள் தான் உருவாககூடாது.
ராபின் நீங்கள் சொல்லுவதும் சாத்தியமில்லை.செங்கொடியும் சாத்தியமில்லை மனிதர்கள் வாழும் காலமெல்லாம் லஞ்சமும் ஊழலும் வஞ்சகம் இல்லாமல் வாழும்.
காந்தி என்றால் துரோகிஎன்று காந்தியும் காங்கிரசும் என்ற புத்தகத்தில் ஆதாரமாக எழுத
பட்டுள்ளது.அப்படியென்றால் இன்னொரு துரோகி வருகிறாரா அல்லது உருவாக்கப்படுகி
றாரா???
அன்னா ஹசாரே என்ற பெரியவரின் போராட்ட உணர்வுக்கு மதிப்பளித்து வணங்குகிறேன்..
அதேவேளையில் ஊழல், லஞ்சலாவண்யம்,வன்முறை வெறியாட்டக் கும்பலைக் கையில்கொண்டு செயல்படும் ஆதிக்கசக்திகள் என்று
முற்றிலும் புரையோடிக்கிடக்கும்
இந்தியாவைக்கண்டு வருத்தம் அடைவதைத்தவிர வேறொன்றும் செய்யமுடியுமா என்றகேள்விதான் எழுகிறது..
ராகுல்காந்தி சொல்லியிருக்கும் விஷயம் போல இந்த சட்டமசோதா தாக்கலினால் மட்டுமே ஊழலை ஒழித்துவிடமுடியுமா என்ற கேள்வி
சிந்திக்கவேண்டிய கேள்வி..
ஊழலை இன்றுவரை வேடிக்கைபார்த்து வளர்த்துவிட்ட மக்களும் இந்த அரசியல்கட்சிகளின் பின்னே இன்றுவரையிலும் மவுனசாட்சியாகப்
பயணித்திருக்கின்றனர்
என்பதுதானே உண்மை..
‘ஊழல் ரேசைத் துவங்கி அதிலே ஆழமாக கருத்தூன்றி ஜெயிப்பவருக்குத்தான் வெற்றிமாலை’ என்ற கொள்கையை அடிப்படையாய்க்
கொண்டு செயல்பட்ட கட்சிகள்
ஆதிக்கத்தில் மதிமயங்கிக்கிடக்கும் மக்கள் இன்று ஊழல் ரேசில் வெற்றிபெற்றவரை குற்றவாளி என்று தீர்ப்பு எழுதுவதுதான் வேடிக்கையாக
இருக்கிறது..
எதிராளிகள் என்னமோ உத்தமர்கள் போலே..கணக்கிட்டுப்பார்த்தால் இந்தியாவிலே ஊழலற்ற தலைவர்கள் என்று தேடினால்
விரல்விட்டுத்தான் எண்ணமுடியும்..
இப்படி ஒன்றிரண்டு தலைகளை வைத்து இந்தியா போன்ற பெரிய நாட்டை நிர்வகிக்கத்தான் முடியுமா?
வீண் ஜம்பம்தான்..இந்த ஜாம்பவான்கள் லிஸ்டிலே இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்திப்பிடிக்கும் கம்பெனி முதலாளிவர்க்கம்
முழுமுதலாக நிற்கிறதே?
இவர்களை ஊழல்குற்றத்திலே கைதுசெய்துவிட்டு இந்தியா எங்கே போகும்?
ஸ்விஸ்வங்கிப்பணத்தை வெளியில்கொண்டுவந்து யார்யார் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால்
இந்தியப் பொருளாதாரமும் அரசியல் ஸ்திரத்தன்மையும் ஆட்டங்கண்டுவிடாதா?
பெயர்களை வெளியிடாவிட்டாலும் குறைந்தபட்சம் ஸ்விஸ்வங்கிப்பணத்தை வெளியில்கொண்டுவந்து இந்திய சேமிப்பில் சேர்க்குமா இந்திய
அரசாங்கம்?
உதாரணத்துக்கு இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை எடுத்துக்கொள்வோம்..
ஊழலை முன்னின்று நடத்தியவர்கள் என்ற அடிப்படையில் ராசா கைதுசெய்யப்பட்டதுடன் பின்புலமாக இருந்து செயல்படத்தூண்டிய
நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டதா?
நிறுவன அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்களே ஒழிய அதனால் லாபமடைந்த முதலாளிகளைத் தண்டிக்க முடியுமா?
நிறுவனங்கள் அடைந்த லாபங்களை இந்திய அரசாங்கம் மீட்டுக்கொடுக்குமா?
The Comptroller and Auditor-General of India (CAG) சொன்னபடி கிட்டத்தட்ட ஒன்னேமுக்கால் லட்சம்கோடி இந்திய ரூபாயை
மீட்டுத்தருமா?நடைமுறையில் முடியுமா?
எல்லாம் நடக்கும் முன்பே தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரம் படைத்த பிரதமர் கடைசியில் துறைமந்திரியை கைதுசெய்துவிட்டு
விஷயத்தைக் கிடப்பில்போட்டிடுக்கும் அவலநிலையை என்னவென்று சொல்வது?
சீனாவோ,பாகிஸ்தானோ இந்தியாவின் பகுதிக்குள் இன்னும் ஊடுருவி இடங்களைப் பிடித்தபின்
பாதுகாப்புமந்திரியை காரணம் சொல்லி அவரைக் கைது செய்து விட்டால் இழந்த பகுதிகள் இந்தியாவுக்குக் கிடைத்துவிடுமா?
அதுபோலத்தான் இது..
முதுகெலும்பில்லாத தலைவர்களைக் கொண்ட இந்தியாவைப் பற்றிய அவநம்பிக்கைதான் மென்மேலும் வளர்கிறது..
பாவம் இந்தியா..பாவம் தமிழன்..பாவம் காந்தி..பாவம் அன்னா ஹசாரே..
மைனர்வாள்