மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

பரிணாமமா? படைப்பா? இதை அறிவியலுக்கு எதிரான மனநிலையில் இருந்துகொண்டு; அவ்வாறு இருப்பதையே சரியானதென்று மதப் பிடிப்போடு இருப்பவர்கள் தங்களின் புரிதல்களை மீளாய்வு செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் தான் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு தொடர்வது என முடிவு செய்திருந்தேன். ஆனால் கடந்த கட்டுரையின் எதிர்வினைகளில் காத்திரமான கேள்விகள் எதுவும் எழுப்பப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனாலும் தொடர்கிறேன்.

குரங்கிலிருந்து பரிணமித்தவன் மனிதன் என்றால் குரங்கு தான் மனிதனுக்கு நெருக்கமான விலங்காக இருக்க வேண்டும். ஆனால் பன்றி தானே மனிதனுக்கு நெருக்கமான விலங்காக கூறுகிறார்கள்.

ஒரு மூன்றாம் தர அரசியல் வியாபாரி தன்னுடைய நிலை தவறானது என தெரிந்த பின்னரும் வீம்புக்காகவும் வறட்டுத்தனமாகவும் வாதம் செய்வதைப் போன்றது இது. மற்றெந்த விலங்குகளையும் விட மனிதனுக்கு நெருக்கமாக இருப்பது சிம்பன்சிகள் தான். 97 விழுக்காடு மரபணு ஒற்றுமைகளைக் கொண்டதாக மனிதனும் சிம்பன்சியும் இருக்கின்றன. எளிமையாகச் சொன்னால் சற்றே மனநலம் பிறழ்ந்த ஒரு மனிதனைக்காட்டிலும் சிம்பன்சிகள் புத்திக் கூர்மை உடையவை. உருவத்தில், உள்ளுறுப்புகளில், செயலில், உள்வாங்கும் திறனில், சமூக குடும்ப அமைப்புகளில் மனிதனுக்கு சிம்பன்சியைப் போல நெருக்கமான விலங்கு வேறொன்று இல்லை. இவை அனைத்தும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மனிதனின் இதய வால்வுகள் மாற்று அறுவைச் சிகிச்சையின் போது பன்றி இதயத்தின் வால்வுகள் பயன்படுத்தப்படுகின்றன. 99 விழுக்காடு ஒற்றுமை எங்கே? ஒரு விசயத்தில் இருக்கும் ஒற்றுமை எங்கே? இந்த ஒன்றைக் கொண்டு மனிதக்கு பன்றியே நெருக்கம் என்று கூறுவார்களாயின், அவர்கள் அறிவியல் பார்வை ஏதுமற்ற வறட்டுவாதிகள் என்பதைத்தவிர வேறு பொருளொன்றுமில்லை.

குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பரிணாம உயிரிகள் இருக்கின்றனவா?

இப்போது வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, ஆனால் பூமியில் வாழ்ந்திருக்கின்றன என்பதற்கு ஆதாரமான தொல்லுயிர் எச்சங்கள் பலவுண்டு. ஆண்ட்ரோபிதஸின், ஹோமோ எரக்டஸ், ஹோமோ செபியன்ஸ், ஹோமோ செபியன் செபியன்ஸ், நியாண்டர்தாலிஸ்ட், க்ரோமாக்னன் இதுதான் மனிதர்கள் பரிணமித்து வந்த பாதை. இதில் க்ரோமாக்னன் என்பது தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மனித இனம், அதாவது நாம். இன்றைக்கு 30000 ஆண்டுகளுக்கு முன்புவரை நியாண்டர்தால்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எல்லா மனித இனங்களின் எலும்புகளும் தொல்லுயிர் எச்சங்களாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தனிமம் ஒருசெல் பலசெல் என‌ படிப்படியாக நடந்தேறியதா? அல்லது

தனிமம் உயிரினம் அப்படியே வார்த்தெடுக்கப்பட்டதா? உயிரி பல்கிப் பெருகும்போது தனிமங்களின் இனப்பெருக்கம் சாத்தியமா?

பரிணாமம் என்பது ஒருவகை உயிர் இன்னொரு வகை உயிராக மாறிச் செல்வது குறித்து விளக்குவதாகும். முதல் உயிர் எப்படி தோன்றியது என்பது குறித்து பரிணாமம் விளக்குவதில்லை. ஆனால் சூழலின் தாக்கத்தால் தான் செல்கள் ஒன்றிணைந்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த செல்களே எளிய உயிர்களாகவும், அதுவே சிக்காலான கட்டமைப்பு கொண்ட உயிர்களாகவும் மாறின. நேரடியாக தனிமத்திலிருந்து உயிரினங்கள் வந்துவிடவில்லை. தனிமங்கள் இனப்பெருக்கம் செய்வதில்லை. உயிர்களுக்கும் தனிமங்களுக்கும் உள்ள வித்தியாசமே அது தான். ஆனால் இனப்பெருக்கம் எனும் பண்பு உயிரிங்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. இனப்பெருக்கம் வேறு வடிவங்களில் தனிமங்களில் இருக்கிறது. ஒரு பண்புடைய தனிமங்கள் புற வினைப்பாடுகளுக்கு உள்ளாகி தங்கள் பண்புகளை மாற்றிக் கொள்கின்றன. தனியாக இருக்கும்போது ஆக்ஸிஜனுக்கு இருக்கும் பண்பு நீரில் இல்லை அதுவே ஓஸோனில் அதனிலும் வேறுபடுகிறது. இந்த புதிய பண்புகளை அத்தனிமங்கள் எங்கிருந்து பெற்றன? குளோரின், சோடியம் இரண்டின் பண்புகளும் இல்லாமல் புதிதாக இருக்கிறது உப்பு. இது ஒருவகையில் எளிமையான இனப்பெருக்கம் போன்றது தான். இது உயிர்களிடம் நீடித்து இருந்தாக வேண்டிய தேவையுடன் இணைந்து மேம்பட்டதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் ஆகியிருக்கிறது.

குரங்குதான் மனிதனாக மாறியது என்றால் இப்போது ஏன் எந்த குரங்கும் மனிதனாக மாறுவதில்லை?

ஏற்கனவே இதற்கு சுருக்கமாக பதிலளித்திருந்தாலும், இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். ஒரு விலங்கு பரிணமித்து இன்னொரு விலங்காக மாறுகிறது என்றால் அதற்கு மிக நீண்ட கால அவகாசம் தேவைப்படும். எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்க்கலாம். காலில் இரண்டு குளம்புகளுடைய எருது ஒன்று இருக்கிறது. இந்த எருதுக்குப் பிறந்த குட்டி ஒன்றுக்கு டி.என்.ஏ படிகளில் பிரதியெடுப்புப் பிழையால் குழப்புகள் பிளவு படாமல் ஒட்டி பிறக்கிறது. இப்படியான பிழைகளை உலகில் அனேகமனேகம் பார்க்கலாம். இரட்டைக் குழம்புகளுடன் விரைந்து ஓடுவதற்கு சிரமப்படும் எருதுக்கூட்டத்தில் பிழையாக ஒட்டிய குழம்புடன் பிறந்த எருது அதன் உயிர் வாழும் தன்மைக்கு பாதகமில்லதிருக்கும் பிழையுடன் தொடர்ந்து உயிர் வாழ்கிறது. இந்த எருதுக்கு பிறக்கும் குட்டிகளுக்கு ஒட்டிய குழம்புடன் எருது பிறக்கும் என உறுதியாக கூற முடியாது. ஆனால் அதன் சந்ததிகளில் மீண்டும் பிறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் முதலில் ஒட்டிய குழம்புடன் பிறந்தது பிழைச் செய்தியென்றால் மீண்டும் பிறப்பது டி.என்.ஏ ஏணிகளில் பதியப்பட்ட செய்தியாகும். ஆக பல தலைமுறை கடந்து மீண்டும் ஒட்டிய குழம்புடன் பிறக்கும் எருது பிற எருதுகளைவிட பரிணாமத்தில் ஒரு எட்டு முன்னேறியதாக இருக்கும். எப்படியென்றால் பிளவுபட்ட குழம்புள்ள எருதைவிட பிளவுபடாத குழம்புள்ள எருது விரைந்து ஓடும் தன்மை கொண்டதாக இருக்கும். இப்போது இந்த எருதின் குட்டிகள் குழம்பு பிளவுபடாமல் பிறக்கும் என உறுதி கூற முடியாது. பிளவுபடாத குழம்பின் தன்மை டி.என்.ஏ செய்திகளில் தெளிவாக பதிவாகிவிடுவதால் தலைமுறைகளினூடாக தொடர்ந்து பிறக்கும் குட்டிகள் பிளவுபடாதா குழம்புடன் பிறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். இதன்படி கோடிக்கணக்கான ஆண்டுகள் கடந்து பார்த்தால் அந்த இடத்தில் காலில் இரட்டைக் குழம்புடன் இருக்கும் எருதுகளும், ஒற்றைக் குழம்புடன் இருக்கும் எருதுகளும் தனித்தனியே இருக்கும். மட்டுமல்லாது ஒற்றைக் குழம்பு எருது இரட்டைக் குழம்பு எருதைவிட தாக்குவதிலும் தாக்கப்படுவதிலிருந்து காத்துக் கொள்வதிலும் விரைந்து செயல்பட முடிவதால், அந்த விரைந்த தன்மை அதன் உருவ அமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி மாறுதலுக்குத் தூண்டும். இறுதியில் இன்னொருவகை எருதாக தனித்த விலங்காக இருக்கும். இப்போது இரட்டைக் குழம்பு எருதிலிருந்து பரிணமித்து வந்தது தான் ஒற்றைக் குழம்பு எருது என்பதற்கு என்ன ஆதாரம்? தப்பித் தவறி தொடக்கத்தில் ஒட்டிய குழம்புடன் பிறந்த எருது எதோ வகையில் தொல்லியிர் எச்சமாக கண்டெடுக்கப்பட்டால், அதை இரட்டைக் குழம்பு எருதுகளின் எச்சங்களுடன் ஒப்பிட்டு உயிருடன் இருக்கும் எருதுகளுடன் ஒப்புநோக்கி ஆய்வுகள் செய்து இரட்டைக் குழம்பு எருதிலிருந்து கிளைத்து ஒற்றைக் குழம்பு எருது வந்தது என்று கூறினால் அதை யூகம் என்று ஒதுக்குபவர்களை என்ன சொல்வது? அவர்கள் தங்கள் வாதங்களை நிரூபிப்பதாய் நினைத்துக் கொண்டு இப்போது ஏன் இரட்டைக் குழம்பு எருதுகள் ஒற்றைக் குழம்பு எருதுகளாக மாறவில்லை? என்று கேட்டு புளகமடையவும் வைப்பார்கள்.

அடுத்து நண்பர் ஆஷிக் தன்னுடைய பதிவின் சுட்டிகள் இரண்டைக் கொடுத்து இதற்குப் பதிலென்ன என்று கேட்டிருந்தார். இதைவிட அவர் கேள்விகளாக கேட்பது சிறப்பாக இருக்கும். தங்கள் கேள்விகளாக கேட்பது கூர்மையாக பதில் கூறுவதற்கும் உதவியாக இருக்கும். அந்த இரண்டு சுட்டிகளிலுமே பரிணாம மரம் தவறு என்று சில அறிவியலாளர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதைக் கொண்டு பரிணாமக் கோட்பாடே தவறு உணர்த்தும் விதமாக தன்னுடைய கட்டுரையை நகர்த்திச் செல்கிறார். மட்டுமல்லாது படைப்புக்கொள்கையே சரியானது என்று மறைபொருளாக உள்ளாடியிருக்கிறார்.

பொதுவாக மத நம்பிக்கையுடையவர்கள் மனிதனின் தோற்றம் குறித்து பேசுகையில் பரிணாமக் கோட்பாட்டில் இருக்கும் சின்னஞ்சிறு பிழைகளையும் கூட விடாமல் துருவி பாருங்கள் அங்கே ஒரு தவறு இருக்கிறது எனவே பரிணாமமே தவறு என்று வாதிடுவார்கள். ஆனால் படைப்புக் கொள்கையைப் பற்றி எந்த ஒரு மீளாய்வோ சிந்தனையோ செய்வதில்லை. வேதத்தில் இருக்கிறது ஆகையினால் அதுதான் சரி என்பதைத்தாண்டி எதையும் செய்வதில்லை. நண்பர் ஆஷிக்கும் இதில் விலக்கில்லை.

இது என்றென்றைக்குமானது எனவே இதில் ஒரு எழுத்தோ காற்புள்ளியோ கூட மாறுவதில்லை எனும் வேத ஜம்பத்தைப் போலவே அறிவியலையும் கருதிக் கொள்கிறார்கள். அறிவியல் தொடர் ஆய்வுகளுக்கு உட்பட்டது. பரிணாம விசயத்தில் டார்வினே, “நான் அமைதியுறும் அளவிற்கு சான்றுகள் எனக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து இதில் ஆய்வு செய்பவர்கள் முனைப்புடன் அவற்றை கண்டடையட்டும், தவறு களைந்து திருத்தட்டும்” என்கிறார். அந்த வகையில் பரிணாமவியலில் திருத்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன. புதிய சான்றுகள் கண்டடையப்பட்டிருக்கின்றன. விமர்சனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. சில அறிவியலாளர்கள் பரிணாமவியலுக்கு எதிர்க் கருத்து கொண்டிருக்கிறார்கள். இவைகளெல்லாம் அறிவியலுக்கு உட்பட்டவை. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் பரிணாம்வியலை விமர்சிக்கும் எந்த அறிவியலாளராவது படைப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? என்பது தான்.

இப்போது சொல்லப்பட்டிருக்கும் பரிணாம மரம் தவறு என்றால் சரியான தகவல் பெற்று திருத்தம் செய்து புதிய பரிணாம மரம் அமைக்கலாம் தவறில்லை. பரிணாமக் கொள்கையே தவறு என்று நாளை புதிய கொள்கை வரலாம், அது பரிணாமக் கொள்கையைவிட சிறப்பாக இருப்பில் அறிவியல் உலகம் அதை ஏற்றுக் கொள்ளும் அதிலும் தவறில்லை. ஆனால் இப்போது பரிணாமக் கொள்கையைவிட சிறப்பாக மனிதனின் தோற்றத்தை விளக்கும் வேறொரு கொள்கை உலகில் இல்லை. மட்டுமல்லாது இதுவரை செய்யப்பட்டிருக்கும் ஆய்வுகள் பரிணாமக் கொள்கை சரி என்பதையே நிரூபிக்கின்றன. அலோபதி மருத்துவ முறை பரிணாமவியலை அடிப்படையாக கொண்டது தான். மனித உடற்கூறியல் உள்ளிட்டு மருந்தாய்வு நிறுவனங்கள் வரை பரிணாமவியலை ஆதாரமாகக் கொண்டே செயல்படுகின்றன. ஜார்ஜ் நடால் தொடங்கி பல்வேறு உயிரியல் ஆய்வாளர்கள் பரிணாமவியல் சரிதான் என்பதை நிரூபித்திருக்கின்றனர். மரபணு செய்திப் பரிமாற்றப் பிழைகளால் ஊனத்துடனோ கூடுதல் உறுப்புடனோ பிறக்கும் குழந்தைகளும் விலங்குகளும் பரிணாமவியலின் சான்றுகளே. எளிமையாக சொல்வதென்றால் உழைக்காமல் இருப்பவன் கை மென்மையாய் இருப்பதும் உழைப்பாளியின் கைகளில் காய்ப்பேறிக் கிடப்பதும் கூட பரிணாமவியல் சரி என்பதற்கான எல்லோருக்கும் தெரிந்த சான்று.

இதற்கு நேர் எதிராக படைப்புக் கொள்கை சரிதான் என்று எந்த அறிவியலாளன் கூறியிருக்கிறான்? என்னென்ன ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன அந்தத்துறையில்? எதாவது நிரூபணம் உண்டா படைப்புக் கொள்கை சரிதான் என்பதற்கு? ஒன்றுமில்லை. மதவாதிகள் செய்வதெல்லாம் பரிணாமவியலில் நேரும் பிழைகளை சுட்டிக் காட்டுவதைத்தான். அதன் மூலமே படைப்புக்கொள்கையை தக்கவைத்துக் கொண்டதாய் ஒரு சுய ஆறுதல். வேறொன்றுமில்லை. 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

வெற்றி அதிமுகவிற்கு பரிசா? தோல்வி திமுகவிற்கு தண்டனையா?

இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்திருப்பது குறித்து பலரும் எழுதியும் பேசியும் முடித்து விட்டனர். ஜெயலலிதா கூறியிருப்பது போல் அவர்களே எதிர்பாராத அளவில் அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. திமுக தான் வெல்லும், அதிமுக தான் வெல்லும் என்று ஆரூடம் கூறிய கருத்துக் கணிப்புகள் அனைத்துமே கூட இரண்டு கூட்டணிக்கும் இடையிலான வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும் எனத் தெரிவித்திருந்தன. எதிர்க்கட்சி எனும் தகுதி(!)யைக்கூட திமுக இழந்து போகும் என எவரும் நினைத்திருக்கவில்லை. ஆனாலும் இருநூறு இடங்களுக்கும் மேல் வென்று அதிமுக ஆட்சியமைத்திருக்கிறது.

“ஓட்டுப் போடாதே, புரட்சி செய்” எனும் இயக்கம் கடந்த தேர்தல்களைப் போலவே இந்தத் தேர்தலிலும் சற்றேறக் குறைய அனைத்து பெரு சிறு நகரங்களிலும், கிராமப் பகுதிகளிலும் வீச்சாக செய்யப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் கடந்த தேர்தல்களைவிட அதிக விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. என்றாலும் கூட தோராயமாக 25000 வாக்குகள் 49ஓ வில் போடப்பட்டிருக்கிறது. ஓட்டுப் போடுவது ரகசியமானது என பிரம்பெடுத்து பாடம் நடத்திய தேர்தல் கமிசன், 49ஓ வை அப்படி ரகசியமாக எளிய முறையில் போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. மட்டுமல்லாது, 49ஓ போட்டவர்களை மிரட்டிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. மாறாக ஓட்டு போடும் இயந்திரத்திலேயே 49ஓ வுக்கும் ஒரு பொத்தானை அமைத்திருந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் சில மடங்குகள் உயர்ந்திருக்கக் கூடும்.

49ஓ போட்டவர்களும் கூட இந்த அமைப்புமுறை நமக்கு எந்த நன்மையையும் செய்து விட இயலாத ஒரு பொம்மை அமைப்பு என்பதை உணர்ந்து அதற்கான எதிர்ப்பாக இதை வெளிப்படுத்தி விடவில்லை. உள்ளூர் பிரச்சனைகள், கோரிக்கைகள் மீது உறுப்பினர்கள் காட்டிய அலட்சியத்திற்கு எதிரான கோபமாகவே 49ஓ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ”ஓட்டுப்போடாதே புரட்சி செய்“ எனும் முழக்கமும் 49ஓ வும் ஒன்றல்ல. இந்த அமைப்புமுறை நம்மை ஏமாற்றுவதற்காக கட்டமைக்கப்பட்ட ஒன்று, இதைத் தகர்த்து புதிய அமைப்புமுறையை நிர்மாணிக்கும் வரை நமக்கு விடுதலை இல்லை என உணர்ந்து அதற்கான அறைகூவலை விடுப்பது ”ஓட்டுப்போடாதே புரட்சிசெய்” என்பது. வேட்பாளர்கள் மீது வாக்காளர்களுக்கு இருக்கும் அதிருப்தியும் கோபமும் இந்த அமைப்புமுறைமீது திரும்பிவிடக் கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஒரு வடிகால் முறைதான் 49ஓ.

திமுகவும் காங்கிரசும் பரிதாபகரமான தோல்வியை சந்தித்திருப்பதற்கு தங்களின் பிரச்சாரம் தான் காரணம் என தமிழீழ ஆதரவு இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள் மகிழ்ந்து கொள்கின்றன. அவர்கள் அப்படி சொல்லிக்கொள்வதற்கு ஏதுவான வெற்றி என்று கொள்ளலாமே தவிர தங்களின் பிரச்சாரம் தான் காரணம் என கூறிக் கொள்ள முடியாது. இலங்கையில் இனப் படுகொலை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அது எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை மறந்துவிட முடியுமா?

இந்தத் தோல்வி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கான தண்டனை என்கிறார்கள். மின்தடை, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு எதிரான மக்களின் தீர்ப்பு என்கிறார்கள். இதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் அதன் முழுப்பொருளில் அப்படியான காரணமாக கருத முடியாது. தேர்தலில் ஒரு அணி வெல்வதையும் தோல்வியடைவதையும் தீர்மானிக்கும் காரணிகளில் பெரும்பங்கு வகிப்பது கூட்டணி சேர்வது தான். இந்தத் தேர்தலில் ஏதோ காரணங்களுக்காக தேமுதிகவும் காங்கிரசும் கூட்டணியமைத்து போட்டியிட்டிருந்தால் திமுக எளிதாக வென்றிருக்கும் அல்லது அதிமுக இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்காது. அப்போது ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு, மின்தடை போன்றவற்றை மக்கள் பொருட்படுத்தவில்லை என்று காரணம் கூறினால் அது எவ்வளவு அபத்தமாக இருந்திருக்குமோ அவ்வளவு அபத்தம் தற்போது ஊழலுக்காக திமுகவை மக்கள் தண்டித்து விட்டார்கள் என்பது.

கட்சி சார்ந்து வாக்களிக்கும் மக்களை விடுத்து பொதுவாக தேர்தல் நேர மனநிலையைப் பொருத்து வாக்களிக்கும் மக்கள் தேர்தல் முடிவுகளில் செலுத்தும் தாக்கம் சிறிதளவுதான். எதிர்ப்பு அலை ஆதரவு அலை போன்ற விதிவிலக்கான நேரங்களைத் தவிர்த்தால் இது தான் உண்மை. ஊழல் என்றாலும், விலைவாசி உயர்வு உள்ளிட்டு என்னென்ன சீர்கேடுகள் என்றாலும் கட்சித்தலைமை கூறும் சப்பைக் கட்டுகளை ஏற்றுக் கொண்டு, அதை மெய்யென நம்பி தன் உறவினர்களிடம் பிரச்சாரம் செய்யும் கட்சித் தொண்டர்கள், அனுதாபிகள் இருக்கும் வரை கட்சிகள் கூட்டணிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துவிட முடியாது. இல்லாவிட்டால் 63 தொகுதிகளிக் கொடுத்து காங்கிரசை கூட்டணியில் இறுத்திக் கொள்ள வேண்டிய தேவையென்ன? தன்னுடைய பார்ப்பனிய புத்தியை தணித்துக்கொண்டு விஜயகாந்தை சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டிய தேவை என்ன?

ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி கூட்டணி சேர்ந்து உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும், அதன் மூலம் ஆட்சியமைத்துக்கொள்ளும் வசதி இருக்கும் வரை ஊழலோ விலைவாசி உயர்வோ பாரிய முக்கியத்துவம் எதையும் பெற்றுவிடாது. இன்றைய நிலையில் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுவதைத் தவிர வேறெதற்கும் தொண்டர்களின் ஆதரவாளர்களின் அவசியமில்லை என்பதே யதார்த்தம். பரப்புரை செய்வதிலிருந்து கொடிகட்டுவது வரை ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் செய்து கொள்ளும் வசதி கிடைத்திருக்கும் போது ஒரு கட்சிக்கு அதன் ஆதரவாளர்களை பிரச்சனை சார்ந்து சிந்திக்க வைப்பதோ கொள்கைகளை பயிற்றுவிப்பதோ அவசியமற்றதாகி விட்டது. தேர்தல் சமயங்களில் மட்டும் காசை விட்டெறிந்து ஓட்டுக்களை பெற்றுக்கொள்ளும் இன்றைய நிலையில் சமூகப்பிரச்சனைகளின் தாக்கத்தை தேர்தல் முடிவுகளில் எதிர்பார்ப்பது சிந்திக்கும் திறனுள்ளவர்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியுமா?

ஆனால் சிந்திக்கும் திறனுள்ளவர்களுக்கு வேறு செயல்கள் காத்திருக்கின்றன. கடந்த இரண்டு வாரங்களாக அதிமுக தலைமையிலான அரசாங்கம் அமைந்திருக்கிறது. திமுகவின் சமச்சீர் கல்வித் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கட்டப்பட்டது என்பதால் சட்டசபை வளாகம் மீண்டும் கோட்டைக்கே மாற்றப்பட்டிருக்கிறது. இவைகளில் இவ்வளவு கவனம் செலுத்தும் புதிய அரசு, கடந்த அரசு பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையாவது திருத்தம் செய்யவோ அல்லது நீக்கவோ செய்யுமா? மின்தடையை நீக்குவதற்கு முன்னுறிமை அளிப்போம் எனக்கூறும் அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை மறுபரிசீலனை செய்வோம் எனக் கூறுமா? கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது போலவே இந்த ஆட்சியிலும் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளும் ஊக்குவிப்புகளும் அவர்களுக்கான லாபக் காப்பீடும் தொடர்ந்து வழங்கப்படும் என்றால், எந்த அடிப்படையில் இதை புதிய ஆட்சி என்பது?

கண்துடைப்பு திட்டங்களைத்தவிர மக்களை மேம்படுத்த மெய்யான அக்கரையுடன் மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப்படுமா? அல்லது கருப்புச் சட்டங்கள், உத்தரவுகள் வாயிலாக மக்கள் துன்புறுத்தப்படுவார்களா? இரண்டில் யார் வந்தாலும் இது தான் நடக்குமென்றால் இதில் யாருக்கு பரிசு? யாருக்கு தண்டனை?

முந்திய அதிமுக ஆட்சியில் சசிகலாவின் மிடாஸ் சாராய ஆலையில் கொள்முதல் செய்ய வேண்டுமென்பதற்காக டாஸ்மாக் தொடங்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் மிடாஸிலிருந்து சாராயம் வாங்குவது நிறுத்தப்பட்டதா? திமுக ஆட்சி என்பதால் அதிமுகவினரின் மணல் கொள்ளை நிறுத்தபட்டதா? இதோ அதிமுக ஆட்சியேறியதும் கல்வி கட்டணச் சீர்திருத்தத்தை நீர்த்துப் போகவைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதில் திமுக கல்வி வள்ளல்களுக்கு பங்கு ஏதும் இருக்காதா? இதனால் அவர்கள் பலனடைய மாட்டார்களா? என்றால் இதை என்ன பொருளில் ஆட்சி மாற்றம் என்றோ தண்டனை என்றோ கூறமுடியும்?

ஜெயலலிதாவோ, கருணாநிதியோ என்ன செய்தார்கள் என்பதைப் பேசுவதல்ல அரசியல், அதை அவர்கள் என்ன அடிப்படையில் செய்தார்கள் என்பதைப் பேசுவதில் தான் அரசியல் அடங்கியிருக்கிறது. வாக்கைச் செலுத்திவிட்டு ஜனநாயகக் கடமையை நிறைவு செய்துவிட்டோம் என களிப்பில் இருப்பவர்கள் இங்கிருந்து தான் தங்கள் சிந்தனையைத் தொடங்கியாக வேண்டும்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 3

ஆழ்மனதில் உறைந்து கிடப்பதும் பொதுப்புத்தியும்

மாவோயிச வன்முறை 3

ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையின் மூன்றாவது பகுதியை இப்படி முடித்திருக்கிறார். “இதை ஊகிக்கப் பெரிய கோட்பாட்டு வாசிப்போ அரசியல் ஞானமோ ஒன்றும் தேவையில்லை. கொஞ்சம் பொதுப்புத்தி இருந்தாலே போதும்” அதாவது அவர் எடுத்துவைத்திருக்கும் அந்தக் கோணத்தை புரிந்துகொள்வதற்கு உள்வாங்கிக் கொள்வதற்கு பரந்த படிப்பனுபவம் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, மக்களிடம் படிந்திருக்கும் பொதுப்புத்தியே போதுமென்கிறார். சரிதான், பொதுப்புத்தியை தட்டியெழுப்பும் வகையில் ஆழ்ந்த ஆய்வு போன்ற தோற்றத்தில் குறிப்பிட்ட ஒரு உள்நோக்கோடு எழுதப்படுகையில், அந்த எழுத்தாளுமையின் மயக்கத்தோடு இணைந்துகொள்ள பொதுப்புத்தி போதுமானது தான்.

கம்யூனிசம் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றது எனும் அதரப்பழையதான அவதூறைக் கொண்டே தொடங்குகிறார். இந்த பலகோடி மனித உயிர்களை கண்டுபிடித்துச் சொன்னவர்களே தற்போது முதலில் கூறிய எண்ணிக்கையை பாதிக்கும் கீழாக குறைத்துக் கொண்டார்கள் தெரியுமா? நாங்கள் தான் பணம் கொடுத்து எழுதச் சொன்னோம் என்று பிரிட்டன் உளவுத்துறையே ஒப்புக்கொண்டது தெரியுமா? அல்லது இவைகளை மறுத்து புள்ளியியல் தரவுகளுடன் பல நூல்கள் வெளிவந்துள்ளனவே தெரியுமா? மீண்டும், மீண்டும் கோடிக்கணக்கான மக்கள் கொலை என்பவர்கள் குறைந்தபட்சம் இவைகளை இவர்கள் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை எனும் விளக்கத்தையாவது தரலாமே, அவ்வாறன்றி மீண்டும் மீண்டும் அவதூறுகளை அள்ளிப் பூசிக்கொண்டிருப்பது என்ன நோக்கத்திற்காக? வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் கூட அவர் எழுதியிருப்பதே அவரின் எண்ணத்தை சுமந்து சொல்கிறது, “லெனினும் மாவோவும் அவர்களைக் கொலைகாரர்களாக ஆக்க முடிந்தது” ஆகவே, கம்யூனிச எதிர்ப்பு என்பதைத்தாண்டி அதில் உய்த்தறிய ஒன்றுமில்லை.

மாவோயிச பூதம் குறித்து அவர் வரைந்து காட்டும் ஓவியம் கவர்ச்சியாகவே இருக்கிறது. ஆனால் கவர்ச்சியாக இருப்பனவெல்லாம் மெய்யாக இருக்கும் என்று அறுதியிடமுடியாதல்லவா? 1947க்குப் பிறகு இந்தியாவின் பிற பகுதிகளில் ஏற்பட்ட முன்னேற்றம் இன்று மாவோயிசம் இருக்கும் பகுதிகளில் ஏற்படவில்லை. பிறபகுதிகளில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சி மக்களின் மனதில் முதலாளித்துவத்திற்கு ஆதரவான பொருளியல் ரீதியில் முன்னேறும் உந்துதலை ஏற்படுத்தி அதுவே வளர்ச்சிக்கான காரணியாகியது. ஆனால் மாவோயிசம் இருக்கும் பகுதிகளில் மக்களின் மனதில் இந்த முன்னேறும் உந்துதல் இல்லாததால் அதாவது நிலப்பிரபுத்துவ மனோநிலையிலேயே இருப்பதால் அந்தப்பகுதிகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இது ஒரு மாதிரியான சுழற்சி போல் வறுமை இருப்பதால் மாவோயிசம்; மாவோயிசம் இருப்பதால் வறுமை. இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அவர் கூறியிருக்கும் சொல். இது அப்படியே இன்னும் விரிந்து கம்யூனிசம் மக்களின் முன்னேறத்திற்கு பயன்படாது. அது சிக்கலைத்தான் தீவிரப்படுத்தும், இருக்கும் முதலாளித்துவ அமைப்பையே கொஞ்சம் சீர்திருத்தி பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது என்பது அவர் கூற விரும்பும் பொருள். இதற்காகத்தான் சமூகத்தை மாற்றியமைக்கும் கம்யூனிச கூறுகளெல்லாம் குறியடையாளமாக முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

நேரடி ஆங்கிலக் காலனியாக இந்தியா இருந்தபோது, இந்திய முன்னேற்றம் எந்த அடிப்படையில் இருந்தது? இன்றும் கூட சில பழம் பிண்டங்கள் “வெள்ளைக்காரன் இல்லையின்னா ஏது ஓய் ரயிலு, தபாலு?” என்று சிலாகிப்பது போல்; காலனிய நலன்களுக்கு தேவைப்பட்ட மாற்றங்களும் நுட்பங்களும் அவர்களுக்கு உகந்த இடங்களில் ஏற்படுத்தப்பட்டதே முன்னேற்றமாக இருந்தது. 47க்குப் பிறகும் அதுதான் நடந்தது இன்னும் சற்றே விரிவாக. முதலாளிகளுக்கு இருக்கும் சந்தை வாய்ப்புகள், உற்பத்திச் செலவை குறைப்பதற்குத் தேவையான மூலவளங்கள் செரிவாகக் கிடைப்பது இன்னும் பலவாறான காரணங்களால் குறிப்பிட்ட பகுதிகள் தனிக்கவனம் செலுத்தப்பட்டு அரசின் முனைப்பினால் முதலாளிகளுக்குத் தேவையான அளவில் வளர்ச்சி உண்டாக்கப்பட்டது. 47க்குப் பிறகு இந்தியாவில் பல பகுதிகள் அப்படியான் வாய்ப்புகளின்றி சீண்டுவாரற்று கிடந்தன என்றால் அதன் பொருள் முதலாளிகள் தங்கள் லாபங்களை அந்தப் பகுதியில் கண்டடையவில்லை என்பதாகத்தான் இருக்க முடியும். பெரிய பெரிய அணைத்திட்டங்கள் பாசன வசதிகளை பெருக்கி விவசாய முன்னேற்றத்தைக் கொண்டுவந்தன, அதேநேரம் அந்த திட்டங்களுக்காக தங்கள் நிலங்களை இழந்த வரிய மக்கள் தங்கள் இழப்பீடுகளுக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்களே. இதை எப்படி எடுத்துக்கொள்வது? ”இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் அப்படி திட்டமிட்ட முன்னேற்றம் வந்துவிடவில்லை, விதி விலக்குகளும் உண்டு” என்று போகும்போக்கில் குறுக்கிக் கொண்டுவிட முடியுமா? தெளிவாகச் சொன்னால் அன்றைய நிலையில் முதலாளிகள் தங்களுக்கு தேவையில்லை என ஒதுக்கிய நிலப்பகுதிகளே எந்த வாய்ப்புகளும் தரப்படாமல் நிலப்பிரத்துவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்த மக்கள் வரிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டிருந்தார்களென்றால் அதன் முழுப் பொறுப்பும் அரசின் மீதல்லவா சுமத்தப்பட்டிருக்க வேண்டும்?

ஆனால் ஜெயமோகனோ இயல்பாக வந்தடையும் சாதாரண வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்கள் என்கிறார். அதாவது ஏனைய பகுதிகளில் நகர்ந்ததைப் போல பிந்தங்கிய பகுதிகளில் நகராதது மக்களின் தவறு என்கிறார். அதனால் தானே மாவோயிஸ்டுகள் அந்தப் பகுதிகளில் காலூன்றும்படி நேர்ந்துவிட்டது என அங்கலாய்க்கிறார். இந்த தேக்க மனோநிலையும் அதன் விளைவாக ஏற்பட்ட வறுமையும் இடதுசாரி தீவிரவாதத்திற்கு காரணமாகியது என்கிறார். இது அப்பட்டமாக அரசின் பார்வையா இல்லையா?

இன்றும் வடகிழக்கு மாநிலங்களில் கொட்டிக்கிடக்கும் கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காகத்தானே அந்தப் பகுதி மக்களை வாழவைக்க திட்டம் தீட்டுவதாக அரசு பரப்புரை செய்கிறது. ஆனால் மக்கள் அந்த திட்டங்களை பசப்பு வார்த்தைகளை ஏற்க மறுக்கிறார்கள் என்பதால் தானே அவர்கள் மீது சல்வாஜுடும் குண்டர்படையை ஏவி விட்டது. அது தவிர்க்கவியலாமல் அம்பலப்பட்டுப் போனதால் தானே பசுமை வேட்டையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இவைகளை மறைத்துவிட்டு மக்கள் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறவில்லை என்றும் மாவோயிஸ்டுகள் செயல்படும் பகுதிகளில் அந்த முன்னேற்றத்தை(!) வரவிடாமல் தடுத்தார்கள் என்பது போன்றும் எழுதுவது எந்த அடிப்படையில்? அல்லது யாருடைய விருப்பத்திற்காக?

ஜெயமோகனின் இந்த தொடர் கட்டுரையின் நோக்கம் மாவோயிஸ்டுகளை விமர்சிப்பது, அதனூடாக கம்யூனிசத்தை குற்றம் சாட்டுவது. தன்னை நேர்மையாளனாக (பின்நவீனத்துவவாதியாக) காட்டிக்கொள்வதற்காக முதலியத்தின் குணங்களை லேசாக கோடிட்டுக் காட்டும் ஜெயமோகன்; எதிரெதிர் நிலைகளான இரண்டின் குறை நிறைகளைகளையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? ஆனால் இந்தத் தொடர்கட்டுரை முழுவதும் அவர் மாவோயிஸ்டுகளின் குறைகளையும், முதலாளியத்தின் நிறைகளையுமே ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொண்டு பொருத்திக் காட்டுகிறார்.

கடந்த சில பத்தாண்டுகளில் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போனது எதனுடைய விளைவு? மாவோயிஸ்டுகளின் போராட்டங்களினால் தானே அந்த மக்களுக்கு அரசின் வெகுசில சலுகைகளேனும் கிடைத்திருக்கிறது. தனக்குத் தேவையான பக்கங்களை மட்டும் புரட்டிப் பார்த்துவிட்டு விளம்புவது மதவாதிகளின் இலக்கணம். எழுத்தாளர்களுக்கும் அதுதான் போலும்.

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 1

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


நொய்டா விவசாயிகளும் ராகுலின் போராட்டமும்

கடந்த சில தினங்களாகவே உத்திரப்பிரதேசத்திலுள்ள நொய்டா விவசாயிகள் கலகம் செய்துவருகிறார்கள். இதை காவல்துறையை இறக்கிவிட்டு முறியடிக்க முயன்றதில் இரண்டு விவசாயிகள் உட்பட நான்குபேர் கொல்லப்பட்டனர். ஆனாலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.

யமுனா எக்ஸ்பிரஸ் வே என்ற பெயரிலான நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக உத்திரப்பிரதேச அரசு விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இதற்காக கொடுக்கப்படவிருக்கும் இழப்பீட்டுத் தொகை, சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே அதை அதிகப்படுத்தித் தரவேண்டும். நெடுஞ்சாலை பயன்பாடு போக மீதமிருக்கும் நிலத்தை விவசாயிகளிடமே திருப்பித்தரவேண்டும். இதுதான் விவசாயிகள் வைத்திருக்கும் கோரிக்கைகள். இந்த கோரிக்கைகளை வலியிறுத்தி கடந்த ஜனவரியிலிருந்து அந்தப் பகுதி விவசாயிகள் அமைதியான முறையில் போராடிவருகிறார்கள்.

ஆனால் இதுவரை உபி அரசு விவசாயிகளை அழைத்துப் பேசி இழப்பீட்டை அதிகரிப்பது குறித்து எதுவும் செய்யவில்லை. மட்டுமல்லாது மேலதிகமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தரகு முதலாளிகளிடம் கொடுத்து கேளிக்கை, நட்சத்திர சொகுசு விடுதிகளை கட்டும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறது. இதுகண்டு ஆத்திரமடைந்த விவசாயிகள் தங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

விவசாயிகளின் கோரிக்கைகளில் இருக்கும் நியாயம் குறித்து எந்தக் கவலையும் கொள்ளாத அரசு, அதை ஒடுக்குவதற்காக காவல்துறையை ஏவி விட்டது. விவசாயிகளின் தாக்குதலில் இரண்டு காவலர்களும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு விவசாயிகளும் கொல்லப்பட்டனர். நான்கு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடியபோது கண்டுகொள்ளாத செய்தி ஊடகங்கள் தற்போது பரபரப்பிற்காக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

உத்திரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளாக இருக்கும் அனைத்தும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. எல்லோருமே இழப்பீட்டுத்தொகையை அதிகரித்து வழங்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்களே தவிர சந்தை விலைக்கு நிகராகவோ, அதிகமாகவோ வழங்கப்பட வேண்டும் என்பதை கூற மறுக்கிறார்கள். மட்டுமல்லாது விவசாயிகளிடம் பறித்து தரகு முதலாளிகளிடம் வழங்குவது குறித்து மறந்தும் கூட மூச்சுவிட மறுக்கிறார்கள். என்றால் விவசாயிகளின் போராட்டத்திற்கான இவர்களின் ஆதரவு எத்தன்மையது?

தொழில்வளர்ச்சி என்று காரணம் கூறி பல்வேறு வழிகளில் அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளிடமிருந்து நிலப்பறிப்பு நடந்துகொண்டு தான் இருக்கிறது. அடிமாட்டு விலையில் பெறப்படும் நிலங்கள் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் கைகளுக்கு மாறிக்கொண்டிருக்கின்றன. ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி எந்த ஓட்டுக் கட்சியும் இதில் விதிவிலக்கு இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களுக்கு ஆதரவாக வசனம் பேசுவதும், ஆளும்கட்சியாகிவிட்டால் நிலத்தைப் பறிப்பதும்தான் வாடிக்கை. அந்த வகையில் ஓட்டுக்காகத்தான் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பதாக நாடகமாடுகின்றனவே தவிர நிலப்பறிப்புக்கு எதிராகவோ அவற்றின் அடிநாதமான தனியார்மயம் தாரளமயத்திற்கு எதிராகவோ எந்த ஓட்டுக்கட்சியும் கிடையாது.


காங்கிரசின் இளவரசரான ராகுல் காந்தி இன்னும் ஒருபடி மேலேறி இருசக்கர வண்டியில் சென்று நாடகம் ஒன்றையும் நடத்திக்காட்டியிருக்கிறார். பொதுவாகவே மன்மோகன் சிங் அரசு அணு ஆற்றல் ஒப்பந்தம், அணுவிபத்து இழப்பீட்டு மசோதா, காட்டுவேட்டை, விக்கிலீக்ஸ் அம்பலங்கள் உள்ளிட்டு அனைத்திலும் தனியார்மய் தாசராக, அமெரிக்க அடிவருடியாக இருப்பது இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனும் அளவுக்கு வெளிப்பட்டு நாறியிருக்கிறது. இதற்கு மாற்றாக முடிசூடக் காத்திருக்கும் ராகுலை ஏழைப் பங்காளனாக முன்னிருத்துவது சில காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவரும் குடிசையில் படுத்துறங்குகிறார், மண் சுமக்கிறார், ரயிலில் சாதரண பெட்டியில் பயணிக்கிறார். இப்போது இருசக்கர வண்டியில் வந்து சாலையில் அமர்ந்து போராடினார் என்று கைதாகி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மற்றப்படி, மக்களுக்கு எதிராக நாடு தனியார்மயத்தில் ஊறிக்கொண்டிருப்பதோ, அமெரிக்காவின் கலனி நாடாக மாறிக்கொண்டிருப்பதோ அவருக்கு கவலைக்குறிய விசயங்களல்ல. மாறாக பட்டம் தரிக்குமுன் மக்களிடம் அறிமுகம் வேண்டும் என்பதற்காகவும், கிளர்ந்து எழும் மக்கள் போராட்டங்களை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தி திசை திருப்புவதற்காகவும் இவை அரங்கேறுகின்றன.

இதற்கிடையே ராஷ்ட்ரிய லோக்தள கட்சித்தலைவர் அஜித்சிங் மன்மோகன் சிங்கை சந்தித்துவிட்டு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக விரைவில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார். அதாவது லோக்பால் நிறைவேறினால் ஊழல் ஒழிந்துவிடும் என நம்பச் சொல்வது போல, இந்த மசோதா நிறைவேறினால் மக்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்துவிடும் என நம்பச் சொல்கிறார்கள். இந்த மசோதா இழப்பீடு வழங்குதல் எனும் போர்வையில் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை சட்டவிரோதமாக்கும் காரியத்தைத்தான் செய்யப்போகிறது. இதுவரை கொண்டுவரப்பட்ட அத்தனை மக்கள்விரோதச் சட்டங்களும் மக்களின் நலனை முன்னிட்டு இயற்றப் படுவதாகக் கூறித்தான் கொண்டுவரப்பட்டன.

விவசாயிகளின் இந்தக் கிளர்ச்சி, இழப்பீடு கேட்பதோடு முடிந்துவிடக் கூடாது. சாராம்சத்தில் இது இந்த நாட்டின் பொருளாதாரக் கொளகையோடு பின்னிப் பிணைந்தது என்பதை உணர்ந்து அதை நோக்கித் திரும்பும் போது தான் இந்தப் போராட்டம் முழுமையடையும்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௬

இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 6

மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

குரான் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

குரானின் பாதுகாப்பு குறித்து எழுதப்பட்டிருந்த இரண்டு கட்டுரைகளுக்கும் நண்பர் ஒன்றாக பதிலளிக்க முயன்றிருக்கிறார். நண்பரின் மறுப்புக்குள் புகுமுன் அவர் முரண்பாடு என குறிப்பிட்ட ஒன்றை சரி செய்துவிடலாம். இறுதி செய்யப்பட்ட குரானின் காலத்தை தவறுதலாக முகம்மது இறந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கால் நூற்றாண்டுக்குப் பிறகு என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறானது தான். 15 ஆண்டுகளுக்குப்பிறகு என்பதே சரியானது. பதினைந்து ஆண்டுகள் என்பதையும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தாலும் 25 ஆண்டுகள் என எழுதியிருப்பது என்னுடைய கவனக்குறைவினால் நேர்ந்தது தான்.

பிரச்சனை என்று வந்துவிட்டால் ஒப்பிட்டுப்பார்க்க முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை அழிக்கப்பட்டுவிட்டது என நான் குறிப்பிட்டிருந்ததை என்னுடைய அறியாமை என நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து நண்பருக்கு அறியாமை ஏதும் இல்லை என்பதில் அவர் உறுதியுடன் இருப்பாராயின், முகம்மது முன்னின்று தொகுத்த குரான் எங்கிருக்கிறது என்பதை தெரிவிக்கட்டும்.

இதுகுறித்து நான் கட்டுரையில் இப்படி குறிப்பிட்டிருந்தேன், “முகம்மதின் மரணத்திற்குப்பிறகான 15 ஆண்டுகளில் குரான் மாறவில்லை என்பதற்கு அப்போது இருந்தவர்கள் நேர்மையானவர்கள் இறை பக்தியுள்ளவர்கள் எனவே தவறு செய்திருக்க மாட்டார்கள் என்று ‘நம்பு’வதை தவிர வேறு ஆதாரம் இருக்கிறதா?” ஆனால் நண்பர் மீண்டும் அவரின் நம்பிக்கையையே பதிலாக கூறியிருக்கிறார். எங்கள் நம்பிக்கை என்று முடித்துவிட்டால் அதில் கேள்வி எழுப்ப ஒன்றுமில்லை. ஆனால், அதுதான் சரியானது அதுமட்டுமே சரியானது எனும் போது தான் அதில் கேள்விகள் எழுப்பவும் ஐயப்படவும் தேவை எழுகிறது. இது ஏதோ நமக்கு புரியவில்லை என்பதுபோல் எண்ணிக்கொண்டு எடுத்துக்காட்டு கூறியிருக்கிறார். ஆனால் இதில் புரியாமல் நின்று கொண்டிருப்பது யார்?

ஒரு எழுத்தாளர் சில கதைகளை எழுதுகிறார். அவரின் காலத்திற்குப் பிறகு அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது. நூலாக வெளிவந்தபின் கவனமாக கையெழுத்துப் பிரதி எரித்து அழிக்கப்படுகிறது. ஆனால் எழுத்தாளருக்கு மிக நெருங்கியவர் ஒருவர் அவர் எழுதியது பதினோரு கதைகள், அவர் உயிருடன் இருக்கும் வரையில் பதினோரு கதைகளும் படிக்கப்பட்டு வந்தன என்கிறார். மற்றொருவரோ அவரின் கதைகளை படித்த ஒருவர்தான் தொகுத்தார் எனவே பத்து கதைகள் தான் என்கிறார். இந்த இரண்டில் எது சரியானது என்பதற்கு வெறும் நம்பிக்கை மட்டும் போதுமா? வேறு ஆதாரங்கள் வேண்டாமா?

பொதுவாக குரான் தொகுக்கப்பட்டதற்கு கூறப்படும் காரணங்களிலேயே சில குழப்பங்கள் இருக்கின்றன. குரானைப் பாதுகாப்பது என்னுடைய பொறுப்பு என்று அந்த குரானிலேயே அல்லா உறுதிகூறுகிறான். அதை அனைத்து முஸ்லீம்களும் நம்புகின்றனர். ஆனால் முகம்மது தன்னுடைய முயற்சியிலேயே அதாவது மனித முயற்சியிலேயே குரானை பாதுகாக்க முயற்சிக்கிறார். தொழுகையின்போது குரான் வசனங்களை ஓதுவதற்கு ஏற்பாடு செய்ததும், அந்த நேரத்து வசதிகளின்படி எழுதி வைத்ததும் மனித முயற்சியினால்தான். ஒருவேளை அல்லா பாதுகாப்பேன் என்று உறுதியளித்தது முகம்மதுவின் இந்த மனித முயற்சியைத்தான் என்றால் தொகுப்பதற்கு கூறப்படும் காரணமான மனனம் செய்தவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது அல்லாவின் உறுதிமொழிக்கு மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட மதிப்பேதும் இல்லை என முகம்மதின் தோழர்கள் கருதினார்கள் என பொருள் வருகிறது. மற்றொரு பக்கம் முகம்மது ஏற்பாடு செய்து எழுதிவைத்திருந்த குரான் வசனங்கள் இருக்கும்போது மனனம் செய்திருந்தவர்கள் இறந்துவிட்டனர் எனும் காரணமே மாற்றுக் குறைவானாதாக ஆகிவிடுகிறது.

அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குரான் இருக்கும்போது உஸ்மான் மீண்டும் தொகுக்க வேண்டிய அவசியமென்ன? பல இடங்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமென்றால் அபுபக்கர் தொகுத்த குரானையே படிகள் எடுத்து அனுப்பியிருக்க முடியும் எனும் நிலையில் உஸ்மான் மீண்டும் தொகுக்க முற்பட்டது ஏன்? வெறுமனே அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல் எனும் காரணத்தை முகம்மது ஏற்பாடு செய்து தொகுத்த குரானும் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதோடு பொருத்திப் பார்த்தால் போதுமானதாக இல்லை.

அடுத்து, எழுதுகோல் காகிதம் மை குறித்து நண்பரின் மறுப்பைப் பார்த்தால், நான் கேட்டது ஒரு கோணத்திலும் அவர் மறுத்திருப்பது வேறொரு கோணத்திலும் இருக்கிறது. நான் கேட்டிருப்பது என்ன? வேத வசனங்கள் இறங்கும் போது அதை பாதுகாப்பதற்கு முகம்மது எழுதிவைக்கச் சொன்னபோது பேரீத்தம் மட்டைகளிலும், எலும்புகளிலும் எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே காலகட்டத்தில் இறங்கிய(!) வசனமோ எழுதுகோலையும் மையையும் பற்றி பேசுகிறது. இந்த முரண்பாட்டை சுட்டித்தான் இந்த வசனம் ஏன் இடைச் செருகலாக இருக்கக்கூடாது எனும் பொருளில் ஐயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு நண்பரின் மறுப்பு என்ன? முகம்மது காலத்தில் மை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான். ஆம், முகம்மதின் கடைசி காலகட்டத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் மையைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைந்தபிறகு. மேற்படி வசனமோ மக்கீ வசனம் அதாவது மக்காவில் இறங்கிய வசனம். வெளிப்படையாக கேட்டால், நடப்பில் மட்டைகளில் எழுதிக்கொண்டிருந்தபோது கனவு வசனங்கள் மையை பயன்படுத்தி எழுதச் சொல்வது எப்படி?

அடுத்து, குரானின் பாதுகாப்பில் மிகப்பெரிய கேள்வியை கேள்வியை எழுப்பியிருக்கும் ஒரு ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் தொகுப்பான முஸ்லீமில் இடம்பெற்றிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தேன். முகம்மதுவிற்கு மிகவும் விருப்பமான மனைவியான ஆய்சாவினால் அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த ஹதீஸ் முகம்மது இருக்கும்வரை அந்த வசனம் குரானில் ஓதப்பட்டு வந்தது என்பதையும் பின்னர் நீக்கப்பட்டுவிட்டது என்பதையும் தெளிவாகவே விளக்குகிறது. ஆனால் நண்பரோ இது ஆதாரபூர்வமற்ற ஹதீஸ் எனவே இதற்கு பதில் கூறுவது தேவையற்றது என்று கடந்து செல்கிறார். முஸ்லீமில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஹதீஸை ஆதாரமற்றது என யார் தீர்ப்பளித்தது? எந்த அடிப்படையில் இது ஆதாரமற்ற ஹதீஸ்? புஹாரியிலும், முஸ்லீமிலும் இடம்பெற்றிருக்கும் ஆதாரமற்ற ஹதீஸ்களின் பட்டியலை தந்தால் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும். பிரச்சனை எழுந்தவுடன் அதாரமற்றது என போகிறபோக்கில் சொல்லிச் செல்வது நேர்மையானவர்களின் செயல் அல்ல. தவிரவும், \\இது தொடர்பான மேலதிகவிபரங்களை அடுத்த தொடரில் எதிர்பாருங்கள்// என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதுவரை அந்த ஹதீஸ் குறித்த விளக்கம் எதையும் அவர் அளிக்கவில்லை.

அடுத்து, நான் எழுதியிருந்தவைகளில் முரண்பாடு என சிலவற்றைச் சுட்டியிருக்கிறார். அவற்றில் முதலாவது, இதுதான் மெய்யான குரான் என பல விதங்களில் உலவத்தொடங்கியது எப்போது? இதில் அபூபக்கர் காலத்திலா, உஸ்மானின் காலத்திலா என்று நுணுகிப் பார்க்கும் அளவுக்கு இதில் பொருள் வேறுபாடு ஒன்றுமில்லை. மனனம் செய்தவர்கள் குறைந்துவிட்டார்கள் என்பதால் முதல்முறையும், வேறுபாடுகள் வந்துவிட்டன என்பதால் இரண்டாம் முறையும் தொகுக்கப்பட்டது என்றால்; முதல் முறை தொகுக்கப்பட்டபோதே முகம்மது ஏற்பாட்டில் தொகுக்கப்பட்ட குரான் இருந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே முகம்மதுவின் மரணத்திற்கு பின் என பொதுவாக எழுதுவது போதுமானது.

அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று பெரிய மசூதியாக பாதுகாக்கப்படுகிறது. இதுவும் நுணுகிப் பார்க்கும் அளவுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லாதது. முதலிலிருந்தே மசூதியாக்கப்பட்டாலும், பிறகு விரிவாக்கத்தில் உள்வாங்கப்பட்டாலும் இது இஸ்லாத்திற்கு தேவையில்லாதது என்று விலக்கப்படவில்லையே. மட்டுமல்லாது இது எதற்காக கூறப்பட்டது என்பதை பார்க்க வேண்டாமா? முகம்மது அடக்கம் செய்த இடம் பாதுகாக்கப்படுகிறது, அவர் அணிந்திருந்த செருப்பு பாதுகாக்கப்படுகிறது, அவர் பயன்படுத்திய வாளுறை பாதுகாக்கப்படுகிறது. ஆனால் அவர் முன்னின்று தொகுத்த குரான் மட்டும் எரிக்கப்பட்டுவிட்டது. அந்த குரானை விடவா செருப்பும் மற்றவையும் முக்கியமாய் ஆகிவிட்டது? அல்லது செருப்பும் வாளுறையும் குரானைவிட இஸ்லாத்திற்கு நெருக்கமானதா?

இன்றைய குரான் பிரதிகளுக்கிடையில் வசன எண்களில் வித்தியாசம் இல்லையா? இருக்கிறது ஜான் டிரஸ்ட் வெளியீட்டுக்கும், பிஜே வெளியீட்டுக்கும் இடையில் வசன எண்களில் வித்தியாசம் இருக்கிறது. வசன எண்கள் அடையாளத்திற்குத்தான் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. இப்போது வசன எண்களும் வரிசையும் அவசியமானதல்ல எனக்கூறும் நண்பர் தான் வரிசை சரியாக இருக்காது என்பதால் முகம்மதின் முயற்சியிலான குரான் அழிக்கப்பட்டதையும் சரிகாண்கிறார்.

கடைசியாக தவறுகள் நிறைந்துள்ள கம்யூனிசத்தில் என்றொரு உருவத்தையும் காட்டுகிறார். கம்யூனிசத்தில் தவறுகள் நிறைந்திருக்கிறது என்பது நண்பரின் நம்பிக்கை என்றால் அதில் குறுக்கிடுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் அவரின் நம்பிக்கை சரியாக இருக்க வேண்டும் என அவசியமில்லை. மாறாக அது சரியானது என அவர் நினைத்தால், கம்யூனிசத்தின் தவறுகள் குறித்து ஒரு தனிப்பதிவு எழுதட்டும், பதிலளிக்க நாம் தயார்.

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


மே நாளில் சூளுரை ஏற்போம்

அடிமைகளின் எழுச்சி! ரோமானிய கனவான்கள், பிரபுக்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. ரோமானியப் பேரரசு ஆறாயிரத்திற்கு மேற்பட்ட அடிமைகளை சிலுவைகளில் அறைந்து, உயிரோடு சித்திரைவதை செய்து, நரமாமிசத்தினை தின்று தீர்த்தாலும் நிம்மதியாக தூங்கவில்லை.

நித்தம் கனவில் அடிமைகளின் உரமேறிய கைகள். எத்தனை நாளைக்குத்தான் செத்து செத்து பிழைப்பது. ஆயிரக்கணக்கான அடிமைகளின் உழைப்பில் உல்லாசமாக வாழ்ந்த சொர்ணபுரியின் கனவான்கள் அதை எளிதில் இழக்க விரும்புவார்களா? ஆனால் காலம் அதை தொடராக அனுமதித்துதான் விடுமா? ஆண்டைகள் விரும்பித்தான் ஆகவேண்டும். அடிமைகள்! இனியும் அவர்களை அடிமைகளாக இருத்துவது தமக்குத்தாமே தோண்டிக் கொள்ளும் சவக்குழிகள் என்பதை உணர்ந்தனர். எழுச்சியுற்ற அடிமைகள் சுதந்திரக் காற்றை சுவாசித்தனர்.

தமது உழைப்பை கூலிக்கு விற்று வயிறு வளர்த்தாலும் இன்று அவர்கள் சுதந்திரமானவர்கள். ஓரளவு தமது விருப்பத்தின் அடிப்படையில் தமது வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரமானவர்கள். உழைப்பிற்கு, உற்பத்திக்கு கூலி கொடுக்கவேண்டிய நிலையானாலும் “உயிர் பயமற்ற” நிம்மதி கனவான்களை முதலாளியாக மாற்றியது. கிடைப்பது சொற்பமே என்றாலும் சுதந்திரத்தை சுவாசித்த அடிமைகள் முதளாலிகளின் பக்கம் திரண்டனர். எச்சசொச்ச நில பிரபுக்களும், அவர்களின் மன்னர்களும் முதலாளித்துவ மாற்றத்தால் தாம் இற்று விழுந்து கொண்டிருப்பதை தடுக்க முடியாமல் திணறித் தவித்தனர்.

காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்றுவது முடியாத காரியமல்லவா! உலகை உருவாக்கும் உற்பத்தியின், உழைப்பின் மூலமான அந்த உழைப்பாளி இன்று முதலாளிகள் பக்கம். மன்னரகள் முதலாளிகளின் அரசாங்கங்களாக மாறினர். மாறாதவர்கள் முதலாளிகளின் படைகளால் துடைத்தெரியப்பட்டனர்.

அதுபோல மதங்களின் மூடநம்பிக்கைகளும் தகர்க்கப்பட்டு அறிவியல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏறக்குறைய 1000, 1500 ஆண்டுகளுக்கு முன் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட முதலாளித்துவ எழுச்சிகள் இந்தியா போன்ற கீழைநாடுகளில் 200, 300 ஆண்டுகளுக்கு முனபுதான் தலைகாட்டத் தொடங்கியது. இங்கு அடிமைகளின், குடியானவர்களின் எழுச்சிகூட ஏற்படவில்லைதான்.

மேற்கத்திய முதலாளிகள், தங்களின் சந்தைக்கான தேடலில் உலகையே தமது ஆளுகைக்கு கீழ் அடிபணியச் செய்ய ஆசைப்பட்டது, கீழை நாடுகளிலும் முதலாளித்துவத்தை கொண்டுவந்தது. அதன் வளர்ச்சி தரகு முதலாளிகளையும் ஏகாதியபத்தியங்களையும் உருவாக்கியது. கூடவே 500, 1000 ஆண்டுகளுக்குப் பின் தங்கியிருந் கீழை நாடுகளையும் 20ஆம் நூற்றாண்டின் அறிவியல் உலகில் இணையாக நிறுத்தியது. இது முதலாளிதுவத்தின் மிகப் பெரும் சாதனைதான். இவ்வுலகம் தங்களின் சொர்க்க பூமியாக காலங்காலத்திற்கும் நிலைக்கும் என்பது முதலாளிகளின் கனவு. முதலாளித்துவ புரட்சியின் வளர்ச்சியினூடாக எகிரிப்பாய்ந்த அறிவியல் வளரச்சி, எந்திரங்களின் வரவு, தவிர்க்க இயலாத முதலாளித்துவத்தின் பொருளாதார விதி, தன்னை வாழவைத்த, தன்னை நம்பிவந்த பாட்டாளி வர்க்கத்தை கழித்துக்கட்டத் தொடங்கியது. வேலையில்லா பட்டாளத்தை உருவாக்கியது.

முதலாளித்துவத்தின் தோற்றம் முதல், தொழிலாளிகளை 16 மணிநேரம் கசக்கிப் பிழிந்தனர். அதற்கு எதிரான போராட்டங்களில் தன்னுயிரை தியாகம் செய்த அமெரிக்க பாட்டாளிகள் தமது வாரிசுகளுக்கு 8 மணி நேரவேலையை பரிசாகத் தந்தனர். இன்று அதற்கு 125 ஆம் ஆண்டு. இந்த நூற்றாண்டில், உலகை உருவாக்கும் தொழிலாளர்களின் எழுச்சி குறிப்பாக பிரான்ஸ், ருஷ்யா, போன்ற நாடுகளில் நடந்த எழுச்சிகள் அக் கனவையும் கலைக்கத் தொடங்கியது. அலறினர். சதி செய்தனர். மதங்கள் மற்றும் நிலபிரபுக்களுடனும் கைகோர்த்துக்கொண்டு பிற்போக்காளர்களின் பிரதிநியாக மாறினர்.

அந்தோ பரிதாபம்! மதங்களுக்கும் சதிகளுக்கும் பலியானான் தொழிலாளி. 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யமாட்டேன் என்று போராடிய தொழிலாளி, இன்று “எவ்வளவு நேரவேண்டுமானாலும் வேலை செய்கிறேன். வேலை கொடு. கூலியைக்கூட உன் விருப்பம்போல் கொடு” என்று முதாளிகளிடம் மண்டியிடும் அவலங்கள். கணிணித்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் இதை நிறையவே காண்கிறோம். ஏன் இந்த அவலம்?

அன்று அவர்கள் கல்வியறிவற்ற அடிமைகள். ஆனால் சுதந்திரக்காற்றை சுவாசிப்பதை விரும்பினார்கள். இன்று இவர்கள் சுதந்திரமானவர்கள். கல்வியறிவில் உச்சானிக் கொம்புகள். ஆனால் எதையும் நுகரத்துடிக்கும் மண்புழுக்கள். இன்றைய இவர்களின் இந்த வாழ்க்கை பலரின் தியாகத்தில் விளைந்த கனிகள் என்பதை அறிந்தும் சமூக அக்கறையற்ற சுயநலமிகள். தான், தான்மட்டும், தனது திறமை என்ற மாயையில் வாழும் இவர்கள் அந்த மாயையிலிருந்தும், அதனை போதிக்கும் மதங்களின் கோரப் பிடியிலிருந்தும் விடுபடாதவரை, விடுவிக்கப்படாதவரை தொழிலாளி வரக்கத்தின் விடுதலை என்பது கானல்நீர்தான்.

மண்ணை தனியுடமையாக்கினோம். நிலத்தை இழந்தோம். கடலையும், நீரையும்கூட தனியுடமையாக்க துணை போனோம். அதனையும் இழந்துகொண்டிருக்கிறோம். காற்றையும் தனியுடமையாக்கி காசுக்கு விற்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதனால் ….

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருவோம்!

புரட்சி செய்வோம்!

மடமையில் ஆழ்த்தும் மதங்களை ஒழிப்போம்!

இருப்பது அனைத்தையும் பொதுவிலாக்குவோம்!

எல்லாமும் எல்லோருக்கும் என்ற புது உலகைப் படைப்போம்!

நன்றி: தோழர் சாஹித்

தமிழ்மணம் திரட்டியில் இந்தவார நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பரையோசை பதிப்பகம் தோழர்கள் சாஹித், குருசாமி மயில்வாகனன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: