மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 3

ஆழ்மனதில் உறைந்து கிடப்பதும் பொதுப்புத்தியும்

மாவோயிச வன்முறை 3

ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையின் மூன்றாவது பகுதியை இப்படி முடித்திருக்கிறார். “இதை ஊகிக்கப் பெரிய கோட்பாட்டு வாசிப்போ அரசியல் ஞானமோ ஒன்றும் தேவையில்லை. கொஞ்சம் பொதுப்புத்தி இருந்தாலே போதும்” அதாவது அவர் எடுத்துவைத்திருக்கும் அந்தக் கோணத்தை புரிந்துகொள்வதற்கு உள்வாங்கிக் கொள்வதற்கு பரந்த படிப்பனுபவம் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, மக்களிடம் படிந்திருக்கும் பொதுப்புத்தியே போதுமென்கிறார். சரிதான், பொதுப்புத்தியை தட்டியெழுப்பும் வகையில் ஆழ்ந்த ஆய்வு போன்ற தோற்றத்தில் குறிப்பிட்ட ஒரு உள்நோக்கோடு எழுதப்படுகையில், அந்த எழுத்தாளுமையின் மயக்கத்தோடு இணைந்துகொள்ள பொதுப்புத்தி போதுமானது தான்.

கம்யூனிசம் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றது எனும் அதரப்பழையதான அவதூறைக் கொண்டே தொடங்குகிறார். இந்த பலகோடி மனித உயிர்களை கண்டுபிடித்துச் சொன்னவர்களே தற்போது முதலில் கூறிய எண்ணிக்கையை பாதிக்கும் கீழாக குறைத்துக் கொண்டார்கள் தெரியுமா? நாங்கள் தான் பணம் கொடுத்து எழுதச் சொன்னோம் என்று பிரிட்டன் உளவுத்துறையே ஒப்புக்கொண்டது தெரியுமா? அல்லது இவைகளை மறுத்து புள்ளியியல் தரவுகளுடன் பல நூல்கள் வெளிவந்துள்ளனவே தெரியுமா? மீண்டும், மீண்டும் கோடிக்கணக்கான மக்கள் கொலை என்பவர்கள் குறைந்தபட்சம் இவைகளை இவர்கள் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை எனும் விளக்கத்தையாவது தரலாமே, அவ்வாறன்றி மீண்டும் மீண்டும் அவதூறுகளை அள்ளிப் பூசிக்கொண்டிருப்பது என்ன நோக்கத்திற்காக? வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் கூட அவர் எழுதியிருப்பதே அவரின் எண்ணத்தை சுமந்து சொல்கிறது, “லெனினும் மாவோவும் அவர்களைக் கொலைகாரர்களாக ஆக்க முடிந்தது” ஆகவே, கம்யூனிச எதிர்ப்பு என்பதைத்தாண்டி அதில் உய்த்தறிய ஒன்றுமில்லை.

மாவோயிச பூதம் குறித்து அவர் வரைந்து காட்டும் ஓவியம் கவர்ச்சியாகவே இருக்கிறது. ஆனால் கவர்ச்சியாக இருப்பனவெல்லாம் மெய்யாக இருக்கும் என்று அறுதியிடமுடியாதல்லவா? 1947க்குப் பிறகு இந்தியாவின் பிற பகுதிகளில் ஏற்பட்ட முன்னேற்றம் இன்று மாவோயிசம் இருக்கும் பகுதிகளில் ஏற்படவில்லை. பிறபகுதிகளில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சி மக்களின் மனதில் முதலாளித்துவத்திற்கு ஆதரவான பொருளியல் ரீதியில் முன்னேறும் உந்துதலை ஏற்படுத்தி அதுவே வளர்ச்சிக்கான காரணியாகியது. ஆனால் மாவோயிசம் இருக்கும் பகுதிகளில் மக்களின் மனதில் இந்த முன்னேறும் உந்துதல் இல்லாததால் அதாவது நிலப்பிரபுத்துவ மனோநிலையிலேயே இருப்பதால் அந்தப்பகுதிகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இது ஒரு மாதிரியான சுழற்சி போல் வறுமை இருப்பதால் மாவோயிசம்; மாவோயிசம் இருப்பதால் வறுமை. இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அவர் கூறியிருக்கும் சொல். இது அப்படியே இன்னும் விரிந்து கம்யூனிசம் மக்களின் முன்னேறத்திற்கு பயன்படாது. அது சிக்கலைத்தான் தீவிரப்படுத்தும், இருக்கும் முதலாளித்துவ அமைப்பையே கொஞ்சம் சீர்திருத்தி பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது என்பது அவர் கூற விரும்பும் பொருள். இதற்காகத்தான் சமூகத்தை மாற்றியமைக்கும் கம்யூனிச கூறுகளெல்லாம் குறியடையாளமாக முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

நேரடி ஆங்கிலக் காலனியாக இந்தியா இருந்தபோது, இந்திய முன்னேற்றம் எந்த அடிப்படையில் இருந்தது? இன்றும் கூட சில பழம் பிண்டங்கள் “வெள்ளைக்காரன் இல்லையின்னா ஏது ஓய் ரயிலு, தபாலு?” என்று சிலாகிப்பது போல்; காலனிய நலன்களுக்கு தேவைப்பட்ட மாற்றங்களும் நுட்பங்களும் அவர்களுக்கு உகந்த இடங்களில் ஏற்படுத்தப்பட்டதே முன்னேற்றமாக இருந்தது. 47க்குப் பிறகும் அதுதான் நடந்தது இன்னும் சற்றே விரிவாக. முதலாளிகளுக்கு இருக்கும் சந்தை வாய்ப்புகள், உற்பத்திச் செலவை குறைப்பதற்குத் தேவையான மூலவளங்கள் செரிவாகக் கிடைப்பது இன்னும் பலவாறான காரணங்களால் குறிப்பிட்ட பகுதிகள் தனிக்கவனம் செலுத்தப்பட்டு அரசின் முனைப்பினால் முதலாளிகளுக்குத் தேவையான அளவில் வளர்ச்சி உண்டாக்கப்பட்டது. 47க்குப் பிறகு இந்தியாவில் பல பகுதிகள் அப்படியான் வாய்ப்புகளின்றி சீண்டுவாரற்று கிடந்தன என்றால் அதன் பொருள் முதலாளிகள் தங்கள் லாபங்களை அந்தப் பகுதியில் கண்டடையவில்லை என்பதாகத்தான் இருக்க முடியும். பெரிய பெரிய அணைத்திட்டங்கள் பாசன வசதிகளை பெருக்கி விவசாய முன்னேற்றத்தைக் கொண்டுவந்தன, அதேநேரம் அந்த திட்டங்களுக்காக தங்கள் நிலங்களை இழந்த வரிய மக்கள் தங்கள் இழப்பீடுகளுக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்களே. இதை எப்படி எடுத்துக்கொள்வது? ”இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் அப்படி திட்டமிட்ட முன்னேற்றம் வந்துவிடவில்லை, விதி விலக்குகளும் உண்டு” என்று போகும்போக்கில் குறுக்கிக் கொண்டுவிட முடியுமா? தெளிவாகச் சொன்னால் அன்றைய நிலையில் முதலாளிகள் தங்களுக்கு தேவையில்லை என ஒதுக்கிய நிலப்பகுதிகளே எந்த வாய்ப்புகளும் தரப்படாமல் நிலப்பிரத்துவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்த மக்கள் வரிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டிருந்தார்களென்றால் அதன் முழுப் பொறுப்பும் அரசின் மீதல்லவா சுமத்தப்பட்டிருக்க வேண்டும்?

ஆனால் ஜெயமோகனோ இயல்பாக வந்தடையும் சாதாரண வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்கள் என்கிறார். அதாவது ஏனைய பகுதிகளில் நகர்ந்ததைப் போல பிந்தங்கிய பகுதிகளில் நகராதது மக்களின் தவறு என்கிறார். அதனால் தானே மாவோயிஸ்டுகள் அந்தப் பகுதிகளில் காலூன்றும்படி நேர்ந்துவிட்டது என அங்கலாய்க்கிறார். இந்த தேக்க மனோநிலையும் அதன் விளைவாக ஏற்பட்ட வறுமையும் இடதுசாரி தீவிரவாதத்திற்கு காரணமாகியது என்கிறார். இது அப்பட்டமாக அரசின் பார்வையா இல்லையா?

இன்றும் வடகிழக்கு மாநிலங்களில் கொட்டிக்கிடக்கும் கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காகத்தானே அந்தப் பகுதி மக்களை வாழவைக்க திட்டம் தீட்டுவதாக அரசு பரப்புரை செய்கிறது. ஆனால் மக்கள் அந்த திட்டங்களை பசப்பு வார்த்தைகளை ஏற்க மறுக்கிறார்கள் என்பதால் தானே அவர்கள் மீது சல்வாஜுடும் குண்டர்படையை ஏவி விட்டது. அது தவிர்க்கவியலாமல் அம்பலப்பட்டுப் போனதால் தானே பசுமை வேட்டையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இவைகளை மறைத்துவிட்டு மக்கள் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறவில்லை என்றும் மாவோயிஸ்டுகள் செயல்படும் பகுதிகளில் அந்த முன்னேற்றத்தை(!) வரவிடாமல் தடுத்தார்கள் என்பது போன்றும் எழுதுவது எந்த அடிப்படையில்? அல்லது யாருடைய விருப்பத்திற்காக?

ஜெயமோகனின் இந்த தொடர் கட்டுரையின் நோக்கம் மாவோயிஸ்டுகளை விமர்சிப்பது, அதனூடாக கம்யூனிசத்தை குற்றம் சாட்டுவது. தன்னை நேர்மையாளனாக (பின்நவீனத்துவவாதியாக) காட்டிக்கொள்வதற்காக முதலியத்தின் குணங்களை லேசாக கோடிட்டுக் காட்டும் ஜெயமோகன்; எதிரெதிர் நிலைகளான இரண்டின் குறை நிறைகளைகளையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? ஆனால் இந்தத் தொடர்கட்டுரை முழுவதும் அவர் மாவோயிஸ்டுகளின் குறைகளையும், முதலாளியத்தின் நிறைகளையுமே ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொண்டு பொருத்திக் காட்டுகிறார்.

கடந்த சில பத்தாண்டுகளில் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போனது எதனுடைய விளைவு? மாவோயிஸ்டுகளின் போராட்டங்களினால் தானே அந்த மக்களுக்கு அரசின் வெகுசில சலுகைகளேனும் கிடைத்திருக்கிறது. தனக்குத் தேவையான பக்கங்களை மட்டும் புரட்டிப் பார்த்துவிட்டு விளம்புவது மதவாதிகளின் இலக்கணம். எழுத்தாளர்களுக்கும் அதுதான் போலும்.

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 1

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


13 thoughts on “மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 3

  1. //தனக்குத் தேவையான பக்கங்களை மட்டும் புரட்டிப் பார்த்துவிட்டு விளம்புவது எழுத்தாளர்களின் இலக்கணம் போலும்//

    058:018.  thinking that they actually are right! Indeed, they are the liars.

    002:11.  And if they are told: “Do not publish evil in the land,” they Say: “But we are the reformist writers.!”

    026:152. ”The ones who publish evil / corrupt in the land and are not reformist writers..”

    quranist@aol.com

  2. செங்கொடி அவர்களே,
    உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக,
    நீங்கள் இஸ்லாத்தை பற்றி சில நாட்களாக இஸ்லாத்தை பற்றியும் அதன் கொள்கைகளை பற்றியும் விமர்சித்து வருகிறீர்கள்.நேரடி விவாதத்திற்கு வர மறுக்கிறீர்கள்.உங்களுக்கு அதில் அச்சம் இருப்பது போல் தோன்றுகிறது.பரவா இல்லை,எனக்கு எழுது விவாதத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும் நான் இறைவன் மீது பாரத்தை போட்டு உங்களை அழைக்கிறேன்.முதலில் இறைவன் இருக்கிறானா என்ற தலைப்பின் கீழ் ஒரு விவாதம் நடத்த அழைக்கிறேன்.உங்கள் அடுத்த பதிவிலேயே அதற்கென்று ஒரு பகுதியை உண்டாக்குங்கள்.அந்த விவாதத்தில் யாருடைய த்ளைஈடாவது இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எயர் கருத்துக்காக அதே தலைப்பில் வேறு ஒரு பகுதியை உண்டு பண்ணுங்கள்.இந்த அமைப்பிலே நம் விவாதத்தை அமைத்து கொள்ளலாம்.
    உங்கள் பதிலை நாளையே எதிர்பார்க்கிறேன்.

  3. நண்பர் அப்துல்லா

    மீண்டும் ஒரு விவாதத்தை நடத்த விரும்புகிறீர்கள். மகிழ்ச்சி, ஆனால் விவாதம் நடத்திச் செல்வது குறித்து என்னிடம் சில நிபந்தனைகள் உண்டு. முன்னர் நடந்த விவாதங்களிலிருந்து இந்த முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். உங்களுக்கு விவாதத்தை எப்படி நடத்துவது என்பதில் யோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம், பின்னர் நானும் தெரிவிக்கிறேன். அதில் உடன்பாட்டுக்கு வந்த பின்னர் விவாதத்தைத் தொடங்கலாம்.

    நீங்கள் எழுதியதில் \\அந்த விவாதத்தில் யாருடைய த்ளைஈடாவது இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எயர் கருத்துக்காக அதே தலைப்பில் வேறு ஒரு பகுதியை உண்டு பண்ணுங்கள்.இந்த அமைப்பிலே நம் விவாதத்தை அமைத்து கொள்ளலாம்// இந்தப் பகுதி சரியாக புரியவில்லை, சற்று விளக்கமாக எழுதவும்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள தலைப்பிலேயே விவாதம் செய்யலாம், மறுப்பொன்றுமில்லை.

  4. தாரளமாக உங்கள் விவாத வழிமுறைகளை கூறலாம்.நியாயமான வழிமுறைகளாக இருக்கும் பட்சத்தில் அதை நிச்சயம் ஏற்று கொள்வோம்.பின்பு
    நீங்கள் புரிய வில்லை என்று கூறிய பகுதி இதுதான்.’இந்த விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போது இடையில் கருத்து தெரிவிப்பவர்களுக்காக தனியாக ஒரு பகுதியை ஒதுக்கினால் நம் விவாதத்தை தெளிவாக நடத்தி செல்ல எதுவாக இருக்கும்.
    உங்கள் விவாத வழி முறைகளை கூறி விரைவில் விவாதத்தை தொடக்கி வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் .

  5. சென்கொடியாரே ,
    நண்பர் அப்துல்லாஹ்வுடனான புதிய விவாதத்தில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் !
    “”இறைவன் இருக்கிறானா”” என்ற தலைப்பின் கீழ் ஒரு விவாதம் மிகவும் கூர்மையற்றதாக இருக்கும் என்றே தோன்றுகிறது.!
    இறைவன் என்ற பதத்தில் “முஹம்மதின் அல்லாஹ்”வை மட்டும் விவாத பொருளாக்குகிரீர்களா?
    இல்லை ஜீசஸ் ,யஹோவா, சிவபெருமான், பரிசுத்த ஆவி , சுடலை மாடசாமி , மாரியம்மா , அராபிய பாகன் கடவுள்கள் , ரோமானிய இறைவன்களான ரேமுஸ் , லுபெர்கால்,திபர் , ட்ரோஜான், கிரேக்க இறைவன்களான ஒலிம்புஸ் , சுயுஸ் , எதனா , ஹதேஸ் மற்றும் பல பல., ஆகியனவும் உண்டா ?
    இருக்கிறானா என்ற பொருள் , தங்குமிடம் குறித்த தேடலா இல்லை அதன் தன்மை குறித்தா ?
    இறைவன் இருக்கிறானா, இல்லையா என்ற முடிவு எதனை சார்ததாக இருக்கும் ?
    விவாத பொருள் விளங்க முடியாத தன்மையில் உள்ளதால் அதனை வரையறை செய்ய வேண்டியது அவசியமாகிறது.
    இந்த வரையறை முறையில் நீங்கள் அனுமதித்தால் நானும் பங்கேற்பேன்.

  6. செங்கொடி அவர்களே,அஸ்ஸலாமு அலைக்கும்.

    விவாதம் தொடங்கும் முன்னமே அதற்க்கான குறுக்கீடுகள் ஆரம்பித்து விட்டன.இது ஆரோக்கியமான குறுக்கீடாக இருந்தாலும் இதற்க்கெல்லாம் பதில் அளிப்பது என்றால் அது உங்கள் கேள்வியாக இருக்க வேண்டும்.நான் விவாத முறையையே இப்படிதான் அமைத்து கொள்ள விரும்புகிறேன்.நம் விவாதம் முடியும் வரை இந்த தலைப்பு சம்மந்தமாக யாருடைய கேள்விக்கும் நாம் இருவருமே பதில் அளிக்க கூடாது என்று ஒப்பந்தம் போட்டால் அது மிக சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
    நான் சில விவாத வழி முறைகளை குறிப்பிடுகிறேன்,அதில் உங்களுக்கு சம்மதம் இல்லாதவைகளை நீங்கள் சுட்டி காட்டலாம்.
    ௧.விவாதத்தில் நாம் குறிப்பிடும் அனைத்து விஷயங்களும் நாம் நமது நம்பிக்கைக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.
    எடுத்துகாட்டாக நான் இறைவனுக்கு உருவம் உண்டு என்று நம்புபவன்.ஆனால் நீங்கள் இறைவனுக்கு உருவம் இல்லை என்று மற்ற முஸ்லிம்கள் சொல்வதை ஆதாரமாக காட்டி இஸ்லாம் சொல்வதாக சித்தரிக்க கூடாது.
    அது போல நானும் உங்கள் நம்பிக்கைக்கு மாற்றமான கருத்துகளை கூற கூடாது.ஏன் நம்பஈகை தவறு என்று நீங்கள் நிரூபிப்பதற்கும் அல்லது உங்கள் நம்பிக்கை தவறு என்று நான் நிரூபிப்பதற்கும் இந்த நிபந்தனையானது மிக அவசியமாய் இடுக்கிறது.
    ௨.ஏதாவது அறிவியல் ஆதாரங்களை நாம் வைக்கும் போது அதில் அறிவுபூர்வமான கேள்விகள் எழும்பும் என்றால் அதை புறம் தள்ள கூடாது.
    ௩.மிக முக்கியமாக நாம் இங்கே குறிப்பிட விரும்புவது என்னவென்றால் நாம் நம்முடைய விவாதத்திற்கான கால அளவை நிர்ணயிக்க வேண்டும்,அது அதிக பட்சமாக ஒரு மாதத்திற்குள் இருந்தால் நல்லது.ஏன் என்றால் நேரடி விவாதத்தில் உள்ள ஈர்ப்பை விட எழுத்து வடிவ விவாதத்தில் உள்ள ஈர்ப்பு பல காரணங்களால் மக்களிடையே குறைவாகத்தான் இருக்கும்.ஒரு வேலை நம்மக்கு வேண்டுமானால் வாசிப்பது என்பதும் பிடித்தமான விஷயமாக இருக்கலாம்.ஆனால் பொது மக்களை பொறுத்தவரை அப்படி நாம் கூறி விட முடியாது.இப்போது எல்லா கருத்துகளும் ஒன்றை விட இன்னொன்று வேகமாக சென்றடைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    ஆக நமக்கு தேவை பக்கம்,பக்கமாக எழுத வேண்டியது அல்ல.சுருக்கமாக சொன்னால்தான் மக்கள் கேட்பார்கள் என்றால் அப்படி சொல்ல நாம் தயங்க கூடாது.நிறைய விஷயங்களை வைத்து விவாதிக்க வேண்டும் என்ற ஆசையை விட உண்மை மக்களை சென்றடைய வேண்டும் என்பதே முக்கியமானது.
    ஆக ஒரு மாத காலத்தில் எந்த அளவுக்கு நம்மால் நம் தரப்பில் உள்ள இறைவனை பற்றிய வாதத்தை எடுத்து வைக்க முடியுமோ அந்த அளவிற்கு எடுத்து வைத்து விட வேண்டும்.அதன் பிறகு அதை வாசிக்கும் மக்கள் அதை பார்த்து விளங்கி கொள்வார்கள்.

    ஆனால் இந்த தலைப்பிர்க்குதான் ஒரு மாத காலமே தவிர அடுத்த அடுத்த தலைப்புகளில் இது போல குறிப்பிட்ட கால அளவோடு விவாதங்கள் செய்யலாம்.
    இதற்க்கு உங்கள் பதிலை விரைவில் எதிர் பார்க்கிறேன்.

  7. நண்பர் அப்துல்லா,
    நமக்கிடையில் நடக்கும் விவாதத்தை தொடர்பவர்களின் கருத்துக்களை பதிவுசெய்வதை தடுக்கவியலாது, அதற்கென தனிப்பகுதி ஒதுக்குவதும் பொருத்தமற்றது. காரணம் விவாதங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதனால் எந்த இடத்தில் கருத்து கூறுகிறார்களோ அந்த இடத்தில் அவர்களின் கருத்து பதிவு செய்யப்படுவது தான் சரியாக இருக்கும். அவ்வாறு கூறப்படும் கருத்துகள் உங்களை பாதிக்கும் என நீங்கள் கருதினால் ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். எழுதப்படும் கருத்துகளில் எதை நீங்கள் பரிந்துரைக்கிறீர்களோ அதற்கு மட்டுமே நான் பதில் கூறுவேன், அவ்வாறே நீங்களும் செய்யலாம்.
    உங்களின் விவாத வழிமுறைகள் குறித்து,
    1) நம்பிக்கைக்கு உட்பட்டு என்பதில் குழப்பம் தெரிகிறது. என்னுடைய வாதங்களை நான் குரான், புஹாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலிருந்தே வைப்பேன்.
    2) இதில் மறுக்க ஒன்றுமில்லை, ஏற்கிறேன்.
    3) ஒருமாத காலம் என்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. கால அளவை நாம் தீர்மானிப்பதை விட நம்முடைய வாதம் தீர்மானிப்பதே சரியாக இருக்கும். எடுத்துக்கொள்ளும் தலைப்பில் ஒரு முடிவை எட்டிய பின்னர் அடுத்த தலைப்பை எடுத்துக்கொள்வோம். தேவையற்ற விபரங்களை தவிர்த்து விட்டு தங்கள் தரப்பு வாதத்தை கூர்மையாகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துவைக்கலாம். அதே நேரம் தேவைப்படும் இடங்களில் விரிவாக விவாதம் செய்வது அவசியம் எனில் அப்போது விரிவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்
    என்னுடைய வழிமுறைகளையும் விவரித்து விடுகிறேன்.
    1) விவதத்திற்கு தொடர்பற்ற, தேவையற்ற விபரங்களையோ தகவல்களையோ கூறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
    2) ஒருவர் வாதத்தை வைத்தபின் மூன்று நாட்களுக்குள் அதற்கான பதிலை தந்துவிடவேண்டும் தவிர்க்கவியலாத நேரத்தில் மூன்று நாட்களுக்குள் இன்னும் எத்தனை நாட்கள் அவகாசம் தேவை என்பதை காரணத்துடன் கூற வேண்டும்.
    3) கேட்கப்படும் கேள்விகளை உள்வாங்கி சரியான பதிலை திசை திருப்பலின்றி கூற வேண்டும். கூடியவரை விவாத நேர்மையுடன் இருக்க வேண்டும்.
    இதற்கான உங்களின் பதில் கண்டு இன்னும் ஓரிரு நாட்களில் விவாதத்திற்கென தனிப்பகுதி தொடங்குகிறேன்.

  8. செங்கொடி அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் ,
    நீங்கள் போட்ட விவாத ஒப்பந்த முறையை நான் ஏற்று கொள்கிறேன்.அதே நேரத்தில் நான் போட்ட ஒப்பந்தத்திற்கு நீங்கள் அளித்த பதிலில் ஒரு கண்டு கொள்ளாதனம் தெரிகிறது.அதாவது நான் விவாதத்திற்கு கால அளவை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறியது நம் திருப்திகாக அல்ல.மாறாக இந்த விவாதத்தை பார்க்கும் மக்களுக்கு அலுப்புத்தட்டி விட கூடாது என்பதற்காக.பொது மக்களும் இந்த விவாதத்தை பார்க்க வேண்டும் என்று நீங்கள் ஆசை பட்டால் நிச்சயம் இதற்க்கு கால நிர்ணயம் என்பது தேவை.அது ஒருவேளை ஒரு மாதம் என்று இல்லாவிட்டால் வேறு எதனை மாதங்கள் என்பதை நீங்களே கூறிவிடுங்கள்.
    அது மிக நீண்ட கால அளவாக இல்லாமல் இருக்க வேண்டும் அவ்வளவுதான்.இது போக நேயர் பதில்கள் தனி பகுதியில் நிச்சயம் உங்களால் போட முடியும்.அதற்க்கு நீங்கள் மறுத்து உள்ளது வருத்தம் அளிக்கிறது.நம் விவாதம் ஒழுங்காக நடப்பதற்கு அது எவ்வளவு முக்கியம் என்பதை கூட சிந்திக்காமல் அதை மறுத்து உள்ளீர்கள்.
    சரி,இறைவனின் மீது பாரத்தை போட்டு விவாதத்தை தொடங்கியதை போல இறைவனின் மீது பாரத்தை போட்டு சில விட்டு கொடுத்தல்களையும் செய்துதான் ஆக வேண்டும்.நீங்கள் என்னுடைய ஒப்பந்தங்களை எர்த்தாலும் ,ஏற்காவிட்டாலும் சீக்கிரமே அதை தொடக்கி விட்டால் நாட்கள் கடத்தபடாது .சீக்கிரமே விவாத பகுதியை ஆரம்பியுங்கள்.அது நாளையே இருந்தாலும் சரியே.

  9. இன்னும் ஒரு செய்தியையும் இங்கே பதிய வைக்க வேண்டி இருக்கிறது.நாம் இந்த விவாதத்தில் ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்று நீங்கள் நினைப்பது சிறு பிள்ளை தனமானது.அந்த எண்ணம் நல்ல எண்ணமாக இருந்தாலும் நாம் இருவருமே மனிதர்கள் என்ற முறையில் முடிவுகள் வர விடாமல் நாம் பிடிவாதம் பிடிக்க கூடும்.ஆனால் இந்த விவாதத்திற்கு இன்னொரு வகையில் முடிவு எட்ட படும்.அது நாம் வைக்கும் வாதங்கள் நியாமா இல்லையா என்ற அடிப்படியிலே பொது மக்கள் எட்டும் முடிவு.இதுதான் இங்கே முக்கியம்.ஒரு வேளை நம்மில் இந்த விவாதத்தின் வழியாக மாற்றங்கள் வந்தால் அது மகிழ்ச்சிக்குரியதுதான்.
    ஆனால் அது மட்டும் நோக்கம் அல்ல.எனவே இந்த அடிப்படையுளும் கால அளவின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிவீர்கள் என்று நம்புகிறேன்.

  10. நண்பர் அப்துல்லா,

    நீங்கள் யார் மீதோ பாரத்தைப் போட்டு விவாதத்தைத் தொடங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தெளிவான புரிதலுக்கு வந்தபின்னர் தொடங்குவதே சரியாக இருக்கும்.
    நானும் நீங்களும் நடத்தப்போகும் இந்த விவாதம் ஒரு இலக்கை நோக்கியதாக இருக்க வேண்டும். இலக்கின்றி வெறுமனே இரண்டு தரப்பு கருத்துக்களையும் கொட்டிவைத்துவிட்டுச் செல்வதில் பலனொன்றும் இருக்காது.
    மக்களுக்கு அலுப்புத் தட்டிவிடும் என்று ஒரு மாத காலஅளவு வைக்கச் சொல்கிறீர்கள். வைக்கப்படும் வாதங்களில் கூர்மையில்லையென்றால் ஓரிரு நாட்களிலேயே அதன் வாசகர்களுக்கு அலுத்துவிடக்கூடும், அதுவே கூர்மையும் தெளிவும் கொண்ட வாதமாக இருந்தால் நீண்ட காலமானலும் வாசகர்கள் ஆர்வத்துடன் தங்கள் பங்களிப்பைச் செய்வர். எனவே தான் கால அளவை நம்முடைய வாதங்கள் தீர்மானிக்க வேண்டுமேயன்றி நாம் தீர்மானிக்க வேண்டாம் என்கிறேன்.
    அடுத்து வாசகர்களின் கருத்துப் பங்களிப்பை தனியே பிரிக்க முடியாது. நூலகம் பகுதியில் கடந்த விவாதங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, அவற்றைப் பார்வையிடுங்கள். எந்த இடத்தில் கருத்து கூறப்பட்டதோ அந்த இடத்தில் இல்லாமல் தனியாக அவற்றை தொகுத்துத்தருவது பொருத்தமானதாக இருக்காது. வாசகர்களின் பங்களிப்பை குறுக்கீடாகவோ தொந்தரவாகவோ கருத முடியாது. விவாதத்திற்கு அவை இடையூறாக இருப்பதாக நீங்கள் கருதக்கூடாது என்பதற்காகத்தான் இருவருமே பரிந்துரைப்பதற்கு மட்டும் பதில் கூறினால் போதும் எனக் குறிப்பிட்டிருந்தேன். எனவே அவைகளை தடை செய்வதோ தனிப்பகுதியில் வெளியிடுவதோ தேவையற்றது.
    அடுத்து, விவாதத்தில் எடுத்துக்கொள்ளும் தலைப்பில் ஒரு தீர்வை எட்டுவதை நோக்காக கொண்டுதான் விவாதம் நடத்தப்படவேண்டும். வாசகர்கள் தனித்தனியே தீர்மானித்து கொள்வதை குறிவைத்து தனிப்பட்ட இருவர் விவாதம் நடத்த வேண்டிய தேவையென்ன? தங்கள் நிலைபாட்டை தெளிவான முறையில் நிருவ இயலாமல் பிடிவாதம் பிடித்தால் அது அவர்களின் வாதத்தில் வெளிப்படும். அப்போது அதை வாசகர்கள் கண்டு கொள்வார்கள். அதன் மூலம் முடிவுக்கும் வருவார்கள். எனவே எடுத்துக் கொள்ளும் தலைப்பில் தீர்வை எட்டுவதை நோக்கியே விவாதம் நகர வேண்டும். தீர்வை எட்டிய பின் அதை ஏற்று நடைமுறைப் படுத்துகிறார்களா இல்லையா என்பது அவர்களின் கொள்கை பின்பற்றத்தக்கதாக இருக்கிறதா? மூடநம்பிக்கையாக இருக்கிறதா? என்பதைப் பொருத்தது. ஆகவே தீர்வை நோக்கியே விவாதம் பயணிக்க வேண்டும் அவ்வாறில்லாத விவாதத்தில் பலன் எதுவும் இருக்காது.
    உங்கள் மறுப்பு குறித்த என்னுடைய கருத்தை எடுத்து வைத்துள்ளேன். உங்களின் மறுப்பில் காரணங்கள் இருக்கிறது என நீங்கள் கருதினால் அதை தெளிவாக எடுத்துவையுங்கள் அவை சரியாக இருப்பின் பரிசீலிப்போம். அதன் பிறகு விவாதத்தை தொடங்கலாம்.

  11. செங்கொடி அவர்களே,அஸ்ஸலாமு அலைக்கும்,
    நான் இறைவனின் மீது பாரத்தை போட்டதை பற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள்.அது என் உறுதியான நம்பிக்கை.அதை உங்கள் மீது திணிபதர்க்கு கூறவில்லை.
    இதில் நகைச்சுவை என்னவென்றால் உங்களை பொறுத்தவரை இல்லாத இறைவன் இப்போது மட்டும் யாரோ ஆனது எப்படி?

    சரி போகட்டும்,நான் அவ்வாறு கூறியதற்கு காரணம் விவாத ஒப்பந்தமே விவாத களமாக மாறுவதை நான் விரும்ப வில்லை.ஆனால் நீங்கள் அதற்குதான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள்.
    அடுத்து “மக்களுக்கு அலுப்புத் தட்டிவிடும் என்று ஒரு மாத காலஅளவு வைக்கச் சொல்கிறீர்கள். வைக்கப்படும் வாதங்களில் கூர்மையில்லையென்றால் ஓரிரு நாட்களிலேயே அதன் வாசகர்களுக்கு அலுத்துவிடக்கூடும், அதுவே கூர்மையும் தெளிவும் கொண்ட வாதமாக இருந்தால் நீண்ட காலமானலும் வாசகர்கள் ஆர்வத்துடன் தங்கள் பங்களிப்பைச் செய்வர். எனவே தான் கால அளவை நம்முடைய வாதங்கள் தீர்மானிக்க வேண்டுமேயன்றி நாம் தீர்மானிக்க வேண்டாம் என்கிறேன்”.என்று எழுதி இருக்கிறீர்கள்.

    இதை அப்படியே மாற்றியும் கூற முடியும்.எதனை அழகாக விவாதம் நடத்தினாலும் நாட்கள் நீண்டு கொண்டு போனால் மக்களுக்கு அலுப்புதட்டதான் செய்யும்.என் என்றால் எந்த விவாதத்திலும் விவாதம் செய்தவர்கள் திருப்தி அடைந்ததாக சரித்திரம் இல்லை.மாறாக அதை பார்பவர்களே முடிவு செய்வார்கள்.அந்த வகையிலும் குறிகிய காலகட்டத்தில் விவாதம் நடத்தினால்தான் மக்களுக்கு அலுப்பும் தட்டாது நம்முடைய வாதங்களின் வீரியங்களை வைத்து அவர்கள் சத்தியத்தை புரிந்தும் கொள்வார்கள்.

    அது போல் நேயர்களின் கருத்துகளுக்கு தனி பகுதி ஒதுக்குவது மிக எளிதான விஷயம்.இதே தலைப்பை அந்த பகுதிக்கு கொடுத்து அதை ஒரு தனி பகுதியாக நடத்தலாம்.என் அனுமதி இல்லாமல் நீங்களும்,உங்கள் அனுமதி இல்லாமல் நானும் அந்த பகுதியிலேயே கருதும் தெரிவிக்கலாம்.நம் விவாத களமும் அழகாக செல்லும்.

    இதற்க்கு நீங்கள் அடம்பிடிக்கும் பட்சத்தில் என்னுடைய பதில் உங்கள் விருப்ப படியே விவாத ஒப்பந்தங்களை அமைத்து கொண்டு விவாதத்தை ஆரம்பியுங்கள் என்பதுதான்.

  12. நண்பர் அப்துல்லா

    எந்த ஒன்றிலும் சரியான புரிதல் இருக்க வேண்டும் இல்லாவிடின் குழப்பமே மிஞ்சும். இங்கு கருத்துக்கள் கூறப்படுவது விவாதம் செய்வதற்காக அல்ல. விவாதம் செய்யுமுன் சரியான புரிதலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். இதை நீங்கள் நான் விவாதக்களமாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால் மெய்யாக விவாதம் செய்திருப்பது நீங்கள் தான். இறைவன் மீதோ அல்லது வேறு யார் மீதோ பாரத்தைப் போட்டு அதாவது அதாவது விவாத ஒப்பந்தங்கள் மீது தெளிவில்லாத போதும் எப்படியோ விவாதம் தொடங்குவதாக நீங்கள் குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை குறிப்பதற்காக \\யார் மீதோ பாரத்தைப் போட்டு// எனக் குறித்திருந்தேன். இதை எனக்கு நம்பிக்கையில்லாத ஒன்றை யாரோ என இருப்பது போல் குறிப்பிட்டதாக விவாதக் கருத்தை வைத்திருக்கிறீர்கள். விவாதம் செய்திருப்பது நீங்கள் ஆனால் குற்றச்சாட்டு என் மீதா?

    \\கண்டு கொள்ளாதனம், சிந்திக்காமல் அதை மறுத்து உள்ளீர்கள், சிறு பிள்ளை தனமானது, நீங்கள் அடம்பிடிக்கும் பட்சத்தில் // இவைகளெல்லாம் உங்கள் பின்னூட்டங்களில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சொல்லாடல்கள். இவைகளெல்லாம் சரியாக கையாளப்பட்ட சொற்கள் எனக் கருதுகிறீர்களா? நீங்கள் ஒரு கருத்தை வைக்கிறீர்கள் அதற்கு நான் மாற்றுக் கருத்தொன்றை வைக்கிறேன். இதை எதிர்கொள்வதற்கு மேற்கண்ட சொற்பிரயோகங்கள் இல்லாமலேயே அழகான சொற்களால் குறிப்பிட்டிருக்க முடியும். எனவே இதுபோன்ற நடைகளை தவிர்ப்பது நல்லது.

    விவாதம் என்பதன் பொருளே விவாதிக்கப்படும் தலைப்பில் முடிவை நோக்கி வாதங்களால் நகர்த்திச் செல்வது என்பது தான். இதை காலஅளவை முடிவு செய்து விவாதிக்க முடியுமா? நீண்ட காலமாக விவாதம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையல்ல. நீண்ட காலமோ குறைந்த காலமோ அதை நம்முடைய வாதம் தீர்மானிக்கட்டும் என்று தான் கூறுகிறேன்.

    வாசகர்களின் கருத்துகளுக்கு ஏன் தனிப்பகுதியை ஒதுக்கமுடியாது என்பதற்கான காரணத்தைக் கூறிய பின்னரும் மீண்டும் கூறியுள்ளீர்கள். விவாதத்தை ஆவணப்படுத்துவதற்கு எந்தப்பகுதியில் கருத்து கூறப்பட்டதோ அந்த இடத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காகவே உங்கள் கோரிக்கையை மறுக்கிறேனேயன்றி அது கடினமானது என்பதற்காகவல்ல. தனிப்பகுதி அமைப்பது சுலபமானதுதான், ஆனால் ஆவணப்படுத்துவதற்கு குழப்பமானது.

    போகட்டும். நீங்கள் விரைந்து விவாதத்தை தொடங்கிவிட வேண்டும் என்பதில் கருத்தாக இருக்கிறீர்கள். நாளையே விவாதப் பகுதியை தொடங்கிவிடுகிறேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s