கல்விக்கான மக்களின் உரிமை:-விருத்தாசலத்தில் நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கை

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலூர் மாவட்டத்தில்  உள்ள ஊர் சிறுநெசலூர். இவ்வூரில் உள்ள அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்கள்.1926-ல் வெள்ளையன் ஆட்சியிலேயே போராடி தொடக்கப்பள்ளியை கொண்டு வந்தார்கள் இவ்வூர்மக்கள்.இதனால் இவ்வூரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ளனர். 2006 தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்தபோது,சாலையின் கீழ்ப்புறம் ஊரும், மேற்புறம் பள்ளியும் இரண்டாக துண்டாடப்பட்டது. இவ்வூர் மக்களின் மேம்பால கோரிக்கையை நிராகரித்த தேசியநெடுச்சாலை துறையினரை தமது அலட்சியத்தின் மூலம் மாநில அரசு அதிகாரிகளும் ஆதரித்ததால், தொடக்கப்பள்ளி பாழடைந்து போனது
இதனால் தமது குடியிருப்புப் பகுதியிலேயே பள்ளிக் கட்டிடம் கட்டித்தருமாறு மக்கள்கோரினர். ஆனால் அரசுஅதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை. இறுதியாக சென்ற ஆண்டு ஊருக்கு அருகே உள்ள அய்யனார் கோவில் தரிசுநிலத்தில் பள்ளிக்கூடம் கட்டித்தருமாறு மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் மக்களின் இக்கோரிக்கையை ஆதிக்கச்சாதி வெறியர்கள் எதிர்த்தனர். மக்கள் போராடிய பிறகு ஆதிதிராவிட நலத்துறை மூலம், கோவில் தரிசு நிலத்தில் 20 செண்ட் இடத்தை அறநிலையத் துறையிடமிருந்து விலைக்கு வாங்கி பள்ளிக்கட்டிடம் கட்டுவதென, மாவட்டஆட்சியர் மக்களிடம் வாக்குறுதி தந்தார். அதன்படி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலமதிப்பீடு பெற்றுத்தரப்பட்டது. இந்த நிலமதிப்பீட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டவருவாய்துறை அலுவலர் ஆகியோரும் ஏற்றுக்கொண்டு, அதை இந்து அறநிலையதுறைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்து அறநிலையத்துறை,பத்திரப்பதிவு துறை மதிப்பீட்டை ஏற்கமுடியாது என்றும், சந்தை மதிப்பீட்டின் படி தான் நிலம் விற்பனைக்கு தரமுடியும் என்றும் கூறி ஆதிக்கச்சாதி வெறியர்களுக்கு ஆதரவாக, சட்டத்துக்கு புறம்பாக மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையை நிராகரித்தது. இதனால் இம்முறையும் மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக பள்ளி கட்டிடம் இல்லாததால் 200 மாணவர்களின் படிப்பு முற்றாக பாழடிக்கப்பட்டு விட்டது. ஐம்பது குழந்தைகள் மட்டுமே அமரக்கூடிய அங்கன்வாடிக் கட்டிடத்தில், மேலும் 200 மாணவர்களுக்கும் மதிய உணவு மட்டும் தரப்பட்டது. ஐந்து ஆண்டுகளாய் மக்கள் மனுக்கள், உண்ணாவிரதம், பிள்ளைகளை மதிய உணவு வாங்காமல் நிறுத்துதல், தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவிக்கும் போதெல்லாம், மக்களை அதிகாரிகள் தமது வெற்று வாக்குறுதிகள் மூலமே ஏமாற்றி வந்துள்ளனர். பல ஆண்டுகளாய், பல வழிகளில் போராடியும் தீர்வு ஏதும் கிடைக்காததால் மக்கள் சோர்ந்து போனார்கள். இதனால் ஆண்டுக்கு, ஆண்டு போராட்டங்களில் மக்களின் பங்கேற்பு குறைந்து வந்தது. ஒரளவிற்கு வசதி உள்ளோர் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளிலும், வேறு சிலர் வேப்பூர் அரசு பள்ளியிலும் சேர்த்தனர். கோமா நிலைக்கு தள்ளப்பட்ட சிறுநெசலூர் தொடக்கப்பள்ளியை, ஆதிதிராவிடர் நலத்துறையோ தமது பதிவேடுகளில் மட்டும் ஆரோக்கியமாக உயிர் வாழ வைத்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைத்தது . மேற்கண்ட தமது செயலின் மூலம் இனி சிறுநெசலூரில் பள்ளிகூடமே வராது என்ற அவநம்பிக்கையை மக்களிடையே விதைத்தது.
இப்படிப்பட்ட சூழலில், தான் இந்த அநீதியைக் கண்டு சகிக்க முடியாத கல்வித்துறை ஊழியர் ஒருவரின் மனசாட்சி, விருத்தாசலம் வட்டார விசாயிகள் விடுதலை முன்னணிக்கு இத்தகவலை கொண்டுவந்து சேர்த்தது. இச்செய்தியை கேட்டு ஒருகனம் அதிர்ந்து போன தோழர்கள், மறு கனமே களத்தில் இறங்கினர். சிறுநெசலூர் சென்று மக்கள் இடையே தகவல்களை சேகரித்தனர் . தாம்சேகரித்த தகவல்களை ஆய்வு செய்து, பிரச்சனைக்கான தீர்வை தீர்மானித்தனர். ஊரில் உள்ள முன்னணியாளர்களை அடையாளம் கண்டு, அவர்களோடு உரையாடி இப்பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிமுறையை விளக்கினர்.
ஆலிச்சிக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடந்த முறைகேடு, அதற்கு எதிராக மக்களை திரட்டி தாம் நடத்திய போராட்டம், ஆகியவற்றை முன்னணியாளர்களுக்கு விளக்கி, மாபெரும் மக்கள் சக்தி மூலம் மட்டுமே நாம் நமது கோரிக்கையில் வெற்றி பெற முடியும் என்பதை விளக்கி, புரியவைத்து ஏற்க வைத்தனர். விவிமு-வின் நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் நடந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றி நாளிதழ்கள் மூலம் தெரிந்து வைத்திருந்த முன்னணியாளர்கள், விவிமு- வின் வழிகாட்டுதலை படிப்படியாக ஏற்றுக் கொண்டனர். இவர்கள் மூலம் ஒரு சில தினங்களில் இளைஞர்களின் கூட்டம் கூட்டப்பட்டு, அவர்களும் ஏற்கும் வகையில் தீர்வு முன்வைக்கப்பட்டது. முன்னணியாளர்கள்,  இளைஞர்கள் நம்பிக்கை அடைந்தவுடன்,உடனடியாக போராட்டக்குழு அமைக்கப்பட்டது. போராட்டக்குழு கூட்டத்தில் ஐந்தாண்டு காலப் போராட்டம், அதில் கிடைத்த படிப்பினைகள், அதற்கான காரணங்கள், ஆகியவற்றை விவிமு செயளர் விளக்கி புதிய போராட்ட முறையை கையாள வேண்டியதின் தேவையை, அவசியத்தை புரியவைத்தார். அதன்படி விவிமு முன்மொழிந்த, அரசு அதிகாரிகள் மூடியப் பள்ளியை நாம் திறப்போம்! அடிக்கல் நாட்டுவிழா!  என்ற போராட்டம், போராட்ட குழுவில் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தை  10.06.2011 அன்று நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மறு நாளே இம் முடிவு கடுமையான முயற்சிகளுக்கு பின்னர் கூட்டப்பட்ட ஊர்கூட்டத்தில் பிரச்சனைக்கான தீர்வு பற்றி விவாதிக்கப்பட்டது. மக்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும், மக்கள் ஏற்கும் வகையில் விளக்கம் தந்து, நம்பிக்கை ஊட்டி, மக்களிடம் போராட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. மறுநாளே விளக்கப்பிரசுரம் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே வினியோகித்து, பரப்புரை செய்யப்பட்டது. சுவரொட்டி தயாரிக்கப்பட்டு போராட்டத்திற்கு இரு தினங்களுக்கு முன்னர் சிறுநெசலூர், வேப்பூர், விருத்தாசலம், கடலூர் ஆகிய ஊர்களில் பரவலாக ஒட்டப்பட்டது. விளம்பரத்தட்டி தயாரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்ற இடத்திலும், வேப்பூர் பேருந்து நிலையத்திலும் வைக்கப்பட்டது. சிறுநெசலூரில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டங்களில், தமது எழுச்சி மிக்க உரையின் மூலம் மக்களை உணர்வூட்டினார்விவிமு செயலர். இதன் காரணமாக ஐந்தாண்டுகால தயக்கம்,உற்சாகமின்மை ஆகியவை மக்களிடையே படிப்படியாக குறைந்து போராட்டத்திற்கு ஆதரவு பெருகியது. விவிமு தோழர்களின் தன்னலமற்ற உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை தமது சொந்த பாதிப்பாக உணர்ந்து, மக்களின் உணர்வோடு ஐக்கியமாகியது ஆகியவை, இதற்கு முன்னர் இக்கிராம மக்களிடையே விவிமு தோழர்களுக்கு அறிமுகம் ஏதும் இல்லாவிட்டாலும், மக்கள் அவர்களை தம்மில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர்.
இவ்வளவு நடவடிக்கைகள்,செயல்பாடுகளுக்கு பின்னரும் கூட அரசுத்தரப்பில் இருந்து பிரச்சனையை தீர்ப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளைப் போலவே இப்போதும் மக்களின் போராட்டம் பிசு,பிசுத்துவிடும் என்று அரசு அதிகாரிகள் இருமாந்திருந்தனர். தமது இடத்தில் கிராம மக்கள் அத்துமீறி நுழைந்தால் நடவடிக்கை எடுக்குமாறு இந்து அறநிலையத்துறை போலீசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. இக்கடிதத்தை காட்டி முன்னணியாளர்களை மிரட்டியது போலீசு.  தமது கையாட்கள் மூலம் மக்களிடையே கைது, தடியடி, வழக்கு, சிறை என பயபீதியூட்டியது. இவை அனைத்திற்கும் எதிராக தமது போர்க்குணமான பரப்புரை மற்றும் நுட்பமான தமது செயல்பாடுகள் மூலம் போரட்டக்குழு பதிலடிக்கொடுத்தது.
          போராட்டத்திற்கு முந்தைய நாள் 09.06.2011 மாலை 07 மணியளவில் விருத்தாசலம் வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஊருக்குள் நுழைந்து அங்கன்வாடி கட்டிடத்தை பார்வையிடுவது என்ற போர்வையில் மக்களின் தயார் நிலையை வேவு பார்த்தது. தமக்கு அருகில் நின்ற மக்களிடம் “அங்கன்வாடி இடம் தான் வசதியாக உள்ளதே! பின் எதற்காக பிரச்சனை செய்கிறீர்கள்” என வட்டாட்சியர் திமிர்த்தனமாக பேசிவிட்டு, நெடுஞ்சாலைக்கு மறுபுறம் உள்ள மூடப்பட்ட பள்ளியை பார்வையிடச் சென்றார். இதைக் கேள்விப் பட்ட போராட்டக்குழுவினர், வட்டாட்சியர் தலைமையிலான குழுவினரை சந்தித்து தமது ஐந்தாண்டுகால போராட்டத்தை பற்றி விளக்கிக் கூறினர். இதைக் கேட்ட வட்டாட்சியர் ஐந்தாண்டுகளாக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க பிரச்சனை ஏதும் இன்றி விட்டுக்கொடுத்ததைப் போன்று இம்முறையும் தனக்காக விட்டுக்கொடுக்குமாறும், போராட்டத்தை கைவிடுமாறும் கோரினார். இப்போது இடைமறித்த விவிமு செயலர் கடந்த ஐந்தாண்டுகளாய் நாங்கள் ஏமாந்தது போதும், இனியும் நாங்கள் அதிகாரிகளின் வெற்றுவாக்குறுதிகளை நம்பி எமது போராட்டத்தை கைவிட தாயாரில்லை. உங்களை நாங்கள் நம்பவேண்டுமானால், பள்ளி திறப்பு நாளான 15.06.2011 அன்றைக்குள் கட்டிடம் கட்டுவதற்கான இடத்திற்கு ஒப்புதல் பெற்றுத் தரமுடியமா? என்று கேட்கும் போதே, இடைமறித்த வட்டாட்சியர் ”அது தன்னால் முடியாது”, என்று திட்டவட்டமாக கூறினார். இடத்திற்கு ஒப்புதல் பெற்றுத் தர உங்களால் முடியாது என்றால், எங்களால் போராட்டத்தை கைவிடவும் முடியாது. நாங்கள் திட்டமிட்டபடி போராடுவோம். நீங்கள் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, எங்களை கைது செய்துகொள்ளுங்கள்”, என்றார் விவிமு செயலர். இதனால் ஆத்திரம் அடைந்த வட்டாட்சியர் “என்ன நீ எங்கிட்ட கை நீட்டி, நீட்டி பேசர?” என்றும் ”லூஸ் டாக் பன்ற”,என்றும் வாய்கொழுப்பெடுத்து பேசினார். இதற்கு பதில் தந்த விவிமு செயலர் ”நாங்கள் என்ன உங்களுக்கு அடிமைகளா? கைநீட்டி பேசாமல் வேற எத நீட்டி பேச சொல்ர? உனக்குமட்டுந்தான ஆங்கிலத்தில் திட்டத்தெரியுமா? அது எங்களுக்கும் தெரியும். யார் லூஸ் டாக்ஸ் பன்றது? ஏய்யா, நீ அதிகாரின்னு, நாங்க மரியாத கொடுத்து பேசுனா நீ வாய்க்கு வந்தபடியேல்லாம் பேசர? இடியட், நான்சென்ஸ் இனியும் நீ இங்கு நின்ன உருப்படியா போய்சேர மாட்ட. ஒழுங்கா இங்கருந்து ஓடிப்போயா” ,என்று கடுமையான வார்த்தைகளில் எச்சரித்தார். இதனால் உற்சாகம் அடைந்த இளைஞர்கள் தமது பங்கிற்கு வட்டாட்சியருக்கு அர்ச்சனை செய்தனர். இவை அனைத்தையும் தனது மடியில் கட்டிக்கொண்ட வட்டாட்சியர் தன்னை மாவட்ட ஆட்சியர் தான் அனுப்பினார், என்னையா திட்டுறீங்க உங்களை நான் பார்த்துகிறேன் என்று சொல்லிக்கொண்டே பின்னங்கால் பிடரியில் பட தனது குழுவினருடன் ஓட்டம் பிடித்தார்.
உடனடியாக இது பற்றி போராட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இருந்து நாளை போராட்டத்தின் போது போலிசை பெருமளவில் குவிக்க வாய்ப்புள்ளது. ஆகவே நாளை போராட்டத்தின் போது நாம் போட தீர்மானித்திருந்த கொட்டகையை, இன்று இரவே போட்டுவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இம்முடிவின் படி கொட்டகை அமைப்பதற்கான பொருட்கள் உடனடியாக சேகரிக்கப்பட்டு இரவு 11.30 மணியளவில் போராட்டக்குழு தலைமையிலான 50 பேர் கொண்ட குழு கொட்டகை போடும் இடத்திற்கு விரைந்தது. இதை தமது கையாட்கள் மூலம் தெரிந்து கொண்ட போலிசு கொட்டகை போடும் முயற்சியை தடுத்தது. இப்போது கொட்டகை போட முடியாது என்பதை புரிந்து கொண்ட போராட்டக்குழு தமது முயற்சியை கைவிட்டு திட்டமிட்ட படி போராட்டத்தை நாளையே செய்வது என முடிவு செய்து பின் வாங்கியது. 10.06.2011 பொழுது விடிந்ததும் மக்களை திரட்டும் பணியில் போராட்டக்குழு தீவிரமாக இறங்கி செயல்பட்டது. காலை 09.30 மணியளவில் ஊரின் நடுப்பகுதியில் கூடிய 500 க்கும் மேற்பட்ட மக்களிடையே உணர்ச்சி பொங்க பேசி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் விவிமு செயலர். விவிமு தோழர்களின் உணர்ச்சிமிக்க,விண்ணதிரும் முழக்கங்களுடன் ஊர்வலம் தனது இலக்கை நோக்கி விரைவாய் முன்னேறியது.
 மக்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக வருவார்கள். அப்போது அவர்களை,பள்ளிக்கென தீர்மானிக்கப்பட்ட திடலுக்குள் நுழைவதை தடுத்து கைது செய்துவிட வேண்டும் என்ற திட்டத்தோடு போலிசு காத்திருந்தது. போலிசின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் ஊரின் பின் புற வழியாக ஊர்வலம் வழிநடத்தி செல்லப்பட்டது. ஊர்வலம் தமக்கு பின்புறம் வருவதை கண்ட போலிசு அதை தடுத்து நிறுத்த தனது நடையை விரைவு படுத்தியது. அவர்கள் ஊர்வலத்தை நெருங்குவதற்குள், கண்ணிமைக்கும் நேரத்தில் திடலுக்குள் நுழைந்து போலிசின் திட்டத்தை முறியடித்தனர் மக்கள். பள்ளிக்கென தீர்மானிக்கப்பட்ட இடத்தில் மக்கள் அமர்ந்து முழக்க மிட்டனர். இதனால் செய்வதறியாது தவித்த போலிசு முன்னணியாளர்களை கோட்டாட்சியரிடம் பேசுமாறு அழைத்தது. பேச்சு வார்த்தைக்கு என்று தீர்மானிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு கோட்டாட்சியரிடம், பிரச்சனையை தீர்க்கும் அதிகாரம் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் மட்டுமே நாங்கள் பேசுவோம்,உங்களிடம் பேசமாட்டோம் என்று கூறிவிட்டு மீண்டும் திடலுக்கு வந்து விட்டனர். கடுமையான வெய்யலில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க சாமியானா பந்தல் வரவழைக்கப்பட்டது. இதைப் போடக்கூடாது, போட்டால் கைது செய்வோம் என்று போலிசு மிரட்டியது. முடிந்தால் செய்து பார் என்று ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் போலிசுக்கு சவால் விட்டனர்.”போலிசு நம்மை மிரட்ட ஆரம்பித்த பின்னர் இனியும் நாம் சும்மா இருக்க முடியாது.உடனடியாக பள்ளிக்கு கொட்டகைப் போடுங்கள்”, என போராட்டக் குழுத் தலைவர் உத்தரவிட்டார். இதற்காகவே காத்திருந்த மக்கள் துள்ளிக்குதித்து தமது வேலையை தொடங்கினர். உற்சாகமும்,போர்க்குணமும் கரைபுரண்டு ஓடியது. கொட்டகைப் போடும் முயற்சியை தடுக்க விரைந்த போலிசு மக்களின் கோபாவேசத்தைக் கண்டு பின்வாங்கியது. போலிசின், ’கைது செய்வோம்’, என்ற மிரட்டல் மக்களிடையே நகைப்பிற்குரியதாகியது.
திறமையான பந்தல் அமைப்பாளர்களால் சுமார் 10 மணி நேரத்தில் போடப்படும் கொட்டகையை இங்கே வெறுமனே ஒரு மணிநேரத்தில் கட்டி முடித்தனர் மக்கள் . நிலைமையின் தீவிரத்தை தத்தமது உயர் அதிகாரிகளுக்கு போலிசு துணை கண்காணிப்பாளரும், கோட்டாட்சியரும் நேர்முக வர்ணனை செய்தனர். கொட்டகை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்ததும் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இருவரும் போராட்டக்குழுவிடம்,”மாவட்ட ஆட்சியர் குறிஞ்சிப்பாடியில் மக்கள் குறைதீர்க்கும்! முகாமில் உள்ளதால் அவரால் இங்கு வரமுடியவில்லை, உங்களை அவர் அங்கு அழைத்து வரச்சொன்னார்”,என்று தகவல் தந்தனர். இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழு மாவட்ட ஆட்சியரை சந்திக்க குறிஞ்சிப்பாடி சென்றனர். போராட்ட குழுவின் மற்றொரு உறுப்பினரான விவிமு செயலர் கொட்டகை அமைக்கும் பணி முழுமை அடைந்த பின், மக்களை அழைத்துக் கொண்டு ஊருக்குள் சென்றார். மாலை 07 மணியளவில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்ற குழுவினர் ஊர் திரும்பினர். சூலை 15 க்குள் பள்ளிக்கட்டிடம் கட்ட இடம் வாங்கித்தருவதாக மாவட்ட ஆட்சியர் தங்களுக்கு வாக்குறுதி தந்ததாகவும், அதுவரை போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்கள். நீங்கள் உங்கள் வாக்குறுதிப்படி சூலை 15க்குள் உத்தரவு பெற்றுத்தராவிட்டால் சூலை 16 அன்று நாங்கள் கொட்டகை அமைத்த இடத்தில் பள்ளியை நடத்துவோம் என்று போராட்டக்குழுவில் தீர்மானித்தப்படி மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் உடனான மேற்கண்ட உரையாடல்,வாக்குறுதி மற்றும் போராட்டத்தின் வெற்றிக்கு காரணமான மக்களின் பங்கேற்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்து, அப்போதே ஊரில் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது.    
நாங்கள் சிறுநெசலூர் சென்றபோது எங்களை வரவேற்றது அவ்வூரில் எஞ்சிவிடப்பட்டிருந்த அவநம்பிக்கை மட்டுமே! கடந்த ஐந்து ஆண்டுகால போராட்டம், மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து விட்டதால், அதை மீண்டும் உருவாக்க வேண்டிய மிகக்கடுமையான பணியை, சவாலை விவிமு தோழர்கள் எதிர்கொண்டனர். கடந்த ஐந்தாண்டுகால போராட்டங்கள், அவற்றின் தன்மை, அதில் இருந்த பலவீனங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஒருமாத கால அவகாசத்தில் படிப்படியாக மக்களிடையே நம்பிக்கை உருவாக்கப்பட்டது!
விவிமு செயலரின் போர்க்குணமான,உணர்வூட்டும் உரைகள், தோழர்களின் தன்னலமற்ற அற்பணிப்பு மிக்க உழைப்பு ஆகியவையே தங்களை இப்போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டியதாக மக்கள் போரட்டத்திற்கு முன்னரும் பின்னரும் தெரிவித்தனர்.
மக்களுக்கு நேர்மையை,போர்க்குணத்தை வெளியில் இருந்து யாரும் அவர்களுக்கு வழங்க தேவையில்லை. அது அவர்களின் உழைப்போடும், உயிரோடும் இரண்டர கலந்துள்ளது. இதை முன்னணியாளர்கள் அடையாளம் கண்டு,அதை தனது அற்பணிப்பு, தியாகம், போர்க்குணம், மக்கள் மீதான மாளாக்காதல், மக்களின் உணர்வை தமது உணர்வாக்கிக் கொள்ளுதல் ஆகியவற்றை கொண்டு மக்களை அமைப்பாக்கி, நம்பிக்கை ஊட்டி ,தளராமல் வழிநடத்துவது மட்டுமே நமது வேலை. நமது இந்தப்பணிக்கு இறுதி வெற்றித் தேடித்தருபவர்கள் மக்களே! மக்களின் சக்தியே மகத்தானது! மக்களின் சக்தியை மறுத்து அவர்களை ஆக்க மற்றவர்களாக காட்டி,சித்தரித்து சமூகத்தில் சில கதாநாயகர்களே அனைத்தையும் சாதிப்பதாக ஆளும் வர்க்க கழிசடைகள் காலம்,காலமாக நம்மை ஏய்க்கின்றனர்.
ஆளும்வர்க்கம் தனது வர்க்க நலனை – மக்களின் உழைப்பை சுரண்டி கொழுக்கும் – பாதுகாக்க வன்முறை, அடக்குமுறை ஆகியவற்றை மட்டுமே ஆயுதமாக காலம், காலமாக பயன்படுத்துகிறது. இனியும் பயன்படுத்தும், ஆனால் தமது சுரண்டலுக்கு எதிராகப் போராடும் உழைப்பாளிகள் மீது பிணத்திற்கு ஒப்பான,  உண்ணாவிரதம்  போன்றவற்றை காந்தி, அன்னாஹசரே, பாபாராம்தேவ் போன்ற கோமாளிகளை வைத்து, வித்தை காட்டி, இக்கோமாளிகளையே மக்களின் கதாநாயகர்களாகவும் தூக்கி வைத்துக்கொண்டு கூத்தாடுகிறது. இதன் மூலம் ஆளும்வர்க்கம் தாம் சாகாவரம் பெற்றுவிடலாம் (அய்யோ பாவம்) என மனப்பால் குடிக்கிறது.
ஊழலை ஒழிக்க திடீரென அவதாரம் எடுத்த அன்னாஹசாரேவின் உண்ணாவிரதம், வெறுமனே நாடகம் என்பதையும்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடந்த ஊழலுக்கு எதிராக, தாம் நடத்திய மக்கள் திரள் போராட்டமே, ஊழலை ஒழிப்பதற்கானப் பாதை என்பதையும் நிரூபித்தது, விவசாயிகள் விடுதலை முன்னணியின் அன்றையப் போராட்டம்!
மக்களின், கல்வி கற்பதற்கான உரிமையை, தனியார் கல்விக் கட்டண கொள்ளையை, சமச்சீர் கல்வியை உண்ணாவிரதம் இருந்தே, வாங்கித்தரப் போவதாக (விலை பேசிகொண்டிருக்கிறார்களா அல்லது பேசி முடித்துவிட்டார்களா? புரோக்கர் கமிசன் எவ்வளவு இது பற்றி நீரா ராடியாவிடம் ஆலோசனை பெற்றார்களா? இதைப்போன்ற விடயங்களுக்கெல்லாம் CBI –யை வைத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும்!)  தற்போது புறப்பட்டுள்ள கோமாளிக் கும்பலின் முகத்திரையை கிழித்து இவைகளை சாதிப்பதற்கான பாதை உண்ணாவிரதம் அல்ல நக்சல்பரி போராளிகள் தலைமையிலான மக்கள்திரள் போரட்டமே என்பதை சிறுநெசலூர் போராட்டத்தின் மூலம் மீண்டும் நிருபித்துள்ளது விவசாயிகள் விடுதலை முன்னணியின் இன்றைய போராட்டம்…!

தகவல்:- போராட்டக்குழு சிறுநெசலூர் ,விருத்தாசலம் வட்டம். 

முதல் பதிவு: சூறாவளி

3 பதில்கள்

  1. கட்டுரை, நேர்த்தியான முறையில் நடந்தவற்றை அப்படியே மனத்திரையில் படம்பிடித்துக் காட்டியது.
    நன்றி தோழரே!

  2. மக்களை ஒருங்கிணைத்து போராடுவதே முழுமையான வெற்றிக்கான பாதை என்பதை உணர முடிகிறது.தோழர்களுக்கும் ,சிறுநெச நல்லூர் மக்களுக்கும் வாழ்த்துக்கள்.

  3. கல்வி “பலமாதிரி” களில் புகட்டப்பட்டும் திணிக்கப்பட்டும் கடைவிரிக்கப்பட்டும் வருவது நடப்பில் அறிவுபெற்றவர் அறிவர்.முதலில் ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்றனர்.பின்பு வேலையில்லா நிலை கண்டதும் தொழிற்கல்வி பற்றி எழுதி பக்கம் நிரப்பினர்.பின்பு தாராளமாயம் உலகமயம் என்ற பதம் திணிக்கப்பட்டபோது உலகின் வேகத்திற்கு ஈடு கொடுக்கவும் கல்வியின் உலகத்தரம் பற்றி ஊடக பத்திகளில் பேசினர்.பயன் சற்று இருப்பினும் அனைவருக்கும் இலவசக்கல்வி என்ற பம்மாத்து அரசியல்வாதிகளால் ஓட்டுப்பொறிக்கிகளால் முன்வைக்கப்பட்டது. ஒவ்வொரு இன மத தேச கல்வியும் தன் தேசியத்தை கட்டியமைக்க இட்டுக்கட்டப்பட்டது எனில் மிகையாகாது.தன்மக்களை தனது பூகோளத்திற்கு எந்த ஆபத்தும் தாக்கமும் இல்லாமல் இருக்கவும் வடிவிக்கப்பட்டு மக்களை தனக்கு அவர்களை அறியாமலே அடிமைப்படுத்த விஞ்ஞானம் தொழில்நுட்பம் என்ற பதத்தில் உட்செலுத்தி அதற்கேற்றார்போல் மக்களை மாக்களாக தயாரிக்க திட்டமிட்டு அதனில் வெற்றியும் கண்டுவிட்டனர்.ஆக இன்றைய மக்களால் கொண்டாடப்படும் கல்வி புவியை துண்டாட கருத்துகுருடர்களான கபோதிகளால் பரப்பப்பட்டுவிட்டது.இயற்கையை அறியாத அதனிலிருந்து சிந்தனை பெறாத எக்கல்வியும் மானுடம் தழைக்க உதவாது.மாறாக ஏற்றத் தாழ்வை மேலும் விசாலமாக்கும் என்பதில் மறுப்பதற்கில்லை.ஆகவே மனித சிந்தனைக்கும் அனைத்துலக சமுக போக்கிற்கும் ஏற்றாற்போல் கல்வியை ஒற்றைக் குடையின் கீழ் கொணர வடிவமைப்பது கல்வியாளர்களின் கடமையாகும்.இறுதியாக “சமச்சீர்” அதன் எதிர்ப்பு எல்லாம் ஊடக நாடகமேயாகும்.மக்கள் உஷார்..,

    quranist@aol.com

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: