சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!

மச்சீர்கல்வி பற்றிய விவாதங்களில் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. சமச்சீர் கல்வி வேண்டாம் எனச் சொன்னவர்கள் ‘சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் தரம் குறைவானது’ எனச் சொன்னார்கள். குறைந்தது 10 பேராவது இதனை என்னிடம் சொல்லியுள்ளனர். அவர்களிடம் அந்த நூல்களை வாசித்தீர்களா எனக்கேட்டேன். ஒருவரும் இல்லை என்றார்கள். மேலும் தரம் குறைவானதென எல்லோரும் சொல்கின்றனர் என்பதால் அவர்களும் அவ்வாறு சொல்வதாக ஒப்புக் கொண்டனர். அப்படி என்றால் சமச்சீர் கல்விப்பாட நூல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை அறிவதுதான் முதன்மையானதெனக் கருதி அரசின் இணையதளத்தில் போய்ப் பார்த்தேன். அதிலிருந்து பாடநூல்கள் எடுக்கப்பட்டு விட்டன. கூகிளில் தேடி ஒரு தனிநபரது இணையதளத்தில் இருந்து 5,7,8,9,10 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை மட்டுமே எடுத்துப் படிக்க முடிந்தது. அவற்றில் கணக்குப் பாடங்களைத் தவிர பிறநூல்கள் அனைத்தையும் வாசித்ததில் இருந்து சில அம்சங்களைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.

பாடத்திட்டங்களை அனைத்துத் தரப்பினரின் பங்கெடுப்போடுதான் நூல்களாக்கி உள்ளனர். மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்துதான் நூல்களை உருவாக்கி உள்ளனர். பல நூல்களின் ஆசிரியர் குழுக்களில் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளின் பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு அறிவியல் நூலுக்கு தலைமை வகித்தவர் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆவார்.

பாடப்புத்தகங்கள் மனப்பாடம் செய்ய என இல்லாமல் சிந்திக்க, கலந்துரையாட, சுகமான வாசிப்புக்கு எனும் நோக்கில் வண்ணப்படங்கள், எளிய வரைபடங்கள் மூலம் அழகிய லே-அவுட்டில் அருமையாக இருந்தது.

பாட வாரியாக அவற்றில் நான் கண்ட நிறை குறைகளை இனி பார்ப்போம்.

அறிவியல்பாடம்:

1) ஐந்தாம் வகுப்பு:

ஆசிரியர் குழு: லயோலா கல்லூரி பேராசிரியர், சென்னை புனித பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன்பள்ளி ஆசிரியர், மதுரை எஸ் பி ஓ ஏ மெட்ரிக் பள்ளி ஆசிரியர்.

 • பசுமை உலகம் பற்றிய பாடம், உரையாடல் வடிவில் உள்ளது. விதை பரவுதலின் வகைகள் வண்ணப்படங்களால் மனதில் பதியும்வண்ணம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
 • நாம் இன்று உண்ணும் சில காய்கறிகளின் பூர்வீகம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. (தர்பூசணி, வெண்டை- ஆப்ரிக்கா, தக்காளி,கொய்யா – தென் அமெரிக்கா)
 • விலங்குகளின் வாழ்விடமான காடு சுருங்குவதே விலங்குகள் ஊருக்குள் வரக்காரணம் என்பதை ஆழ நெஞ்சில் பதியவைத்துள்ளனர்.
 • எளிதில் அனைவரும் செய்து பார்க்கும் சோதனை: பாட்டில் ஒன்றில் முட்டையுடன் கூடிய எருக்கிலையைப் போட்டு அது புழு,கூட்டுப்புழு, பட்டாம்பூச்சி என வளர்ச்சியடவதைப் பார்க்கச் செய்தல்.
 • விண்வெளிப்பயணம் கட்டுரையில் அண்மையில் ஏவப்பட்ட இந்தியாவின் சந்திராயனும் இடம்பெற்றுள்ளது.
 • நீர் எந்த ஒரு தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. அது பொது உடமையானது என ஒரு பாடம் வலியுறுத்துகிறது.

2) ஏழாம் வகுப்பு:

ஆசிரியர் குழு: பெரியார் பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர், எத்திராஜ் கல்லூரி இயற்பியல்பேராசிரியர், சென்னை புனித ஜான் மெட்ரிக் பள்ளி ஆசிரியர், மதுரை மகாத்மா மாண்டிசோரிமெட்ரிக் பள்ளி ஆசிரியர்.

 • முன்பு +1 இல் இடம்பெற்றிருந்த வகைப்பாட்டியல், சுற்றுச்சூழலியல் இப்போது 7ஆம் வகுப்பில்.
 • விலங்குகளால் மனித சமூகத்துக்குக் கிட்டும் பயன்களோடு விலங்கியல் பாடம் ஆரம்பமாகிறது.
 • லெக்ஹான் முட்டைக்கும் நாட்டுக்கோழிக்கும் உள்ள வேறுபாடு, நல்லமுட்டையை அழுகிய முட்டையில் இருந்து வேறுபடுத்தும் எளிய முறை ஆகியவை படிப்பை சுவாரசியமாக்குகின்றன.
 • நீரின் வணிகமயமாக்கம், ஆற்றுமணல் கொள்ளை போன்றவற்றால் நீர்வளம் சிதைக்கப்படுதல் விளக்கப்படுகிறது. கடல்நீர் எவ்வாறு குடிநீராக்கப்படுகிறது என்பதும் விளக்கப்படுகிறது.
 • ஒவ்வொரு பாட முடிவிலும், கூடுதலாக வாசித்துத் தெரிந்துகொள்ள உசாத்துணை நூல்கள், பதிப்பக விவரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. இணையதள முகவரிகளும் தரப்பட்டுள்ளன.
 • அணுக்கள்->மூலக்கூறுகள்->செல்கள்->திசுக்கள்->நுண்ணுறுப்புகள்->உறுப்புமண்டல்லங்கள்->உயிரினம் என்று விளக்கும் காட்சிப்பட விளக்கம், செல்களைப்பற்றிய புரிதலை எளிதாக்குகிறது.
 • மனிதன் ஓடும்போது அவனுடைய எலும்புகள் எந்த நிலையில் இருக்கும் எனும் படமும் அறிவியலோடு அன்றாட நிகழ்வை இணைத்து சிந்திக்க வைக்க உதவும்.
 • சித்தவைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, நீரிழிவு நோய் பற்றிய அறிமுகம் புதிதாக 7ஆம் வகுப்பிலேயே இடம்பெற்றுள்ளது.
 • வண்ணப்படங்களாலும் விளக்கச் சித்திரங்களாலும் வாசிப்பைத் தூண்டுகிறது, லே அவுட்.

3) எட்டாம் வகுப்பு:

ஆசிரியர் குழு:

அண்ணா பல்கலை இயற்பியல் பேராசிரியர், கோவை எஸ் ஆர் எம் வி கல்லூரி, சென்னைபச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள், சென்னை புனித மேரி மெட்ரிக் பள்ளி, சென்னை டொன்போஸ்கோ, புனித பிரான்சிஸ் சேவியர் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள்

 • நெல்சாகுபடி ஆரம்பம் முதல் அறுவடை வரை விளக்கப்பட்டுள்ளது.நெல் சந்தைப்படுத்தப்படுவதும் உணவு பதப்படுத்தும் முறைகளும் விளக்கப்படுகின்றன.
 • கூடுதல் வாசிப்புக்குத் தரப்பட்டுள்ள ஒரு இணையதளம்: எம் எஸ் சுவாமிநாதன்.காம்
 • நாளமில்லாச்சுரப்பி, ஆண் பெண்கள் வளரிளம்பருவம் அடைதல், பால் நிர்ணய குரோமோசோம்கள், ஹார்மோன் குறைபாட்டால் வரும் முன்கழுத்துக் கழலை, குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதிலிருந்து எவ்வாறு தற்காத்தல், புகைத்தல், குடி போன்றவை உருவாக்கும் சீர்கேடுகள், நச்சுக்காளான்களை இனம் காணும் முறை – நன்கு எழுதப்பட்டுள்ளன.
 • சைகஸ், பைனஸ் ஆகிய மரங்களை 20 ஆண்டுகளுக்கு முன் +2 பாடத்தில் பார்த்தபோது கறுப்புவெள்ளைப் படத்தில் அது என்ன மரங்களென்றே தெரிந்துகொள்ள இயலவில்லை. இப்போது தெளிவான வண்ணப்படங்களால் 8ஆம்வகுப்பிலேயே அவற்றைப் பார்க்கமுடிகிறது.
 • எலுமிச்சை கேன்கர், வெள்ளரி பலவண்ணநோய் – வைரஸ்களால் உருவாகின்றன என அப்போது படித்தபோது அது என்ன நோய் என ஆசிரியரால் விளக்க முடிந்ததில்லை. இந்நூலில் அந்நோய் பாதித்த எலுமிச்சை, வெள்ளரிக்காய்கள் படங்களோடு தரப்பட்டுள்ளன.
 • வலசை போகும் ஆமை, உயிப் பன்மத்திற்கு அச்சுறுத்தல்கள், நமது பாரம்பரிய அறிவு இப்பன்மத்தைப் பாதுகாத்த தன்மை, காற்று நிலம் நீர் மாசுபடுதல் பற்றிய பாடங்களும் செறிவாக உள்ளன.
 • கழிவுநீர் சுத்திகரிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என்பது 8ஆம் வகுப்பில் விளக்கப்படுகிறது. இதனை எஞ்சினியரிங் கெமிஸ்ட்ரியில் கல்லூரியில்தான் முன்பு படித்தார்கள்.
 • உயிரி பிளாஸ்டிக் தயாரிக்கும் முறை இடம்பெற்றுள்ளது. இது உணவில் இருந்து பிளாஸ்டிக் போன்ற பொருள் தயாரிக்கும் முறை. இது உணவுப்பற்றாக்குறைக்கு இட்டுச் செல்லும் என்ற விழிப்புணர்வு இங்கே இடம் பெறவில்லை.

4) ஒன்பதாம் வகுப்பு:

ஆசிரியர் குழு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபணு மாற்றியல் துறையின் தலைவர்,கோவை ராமகிருஷ்ணாமிஷன் கல்லூரி இயற்பியல் துறை தலைவர், சென்னை புனித ஜோசப்ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சென்னை புனித மேரி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள்.

 • நகர்மயமாதலைப் படத்துடன் (ஒப்பீடு 1990 & 2010 ஒரே நிலப்பரப்பு எவ்வாறு மாறியுள்ளது எனப் புலப்படுத்தும் படம்) புரியவைத்து, இந்நகர்மயமாதல் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஆனதென்றும், இதனால் விளைச்சல் நிலம் குறைந்ததென்றும், மக்கள் மீதே பழிபோடும் விளக்கம் இடம்பெற்றுள்ளது J
 • பயிர் மேம்பாட்டுப்பாடம், இயற்கை உரங்களின் அவசியத்தையும் பேசுகிறது. பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப் பரிந்துரைக்கும் இப்பாடம் உதாரணமாக டி.டி.ட்டி ஐ பரிந்துரைக்கிறது  (இது பல ஆண்டுகளுக்கு முன்பே பல நாடுகளில் தடை செய்யப்பட்ட நஞ்சாகும்)
 • முன்னரெல்லாம், பயிர்களுக்கு வரும் நோய் பற்றிய குறிப்புகள் வெறுமனே எழுத்தில்தான் இருக்கும். இப்பாடநூலில் நிலக்கடலைக்கு வரும் இலைப்புள்ளி நோயை விளக்க வண்ணப்படம் இடம்பெற்றுள்ளது.
 • பயிர்ப்பாதுகாப்புப் பாடத்துக்கான உசாத்துணையில் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் இணையதள முகவரி இடம்பெற்றுள்ளது.
 • புகைத்தல், மது அருந்துதல் போன்றவற்றிற்கு அடிமையாவதற்கான காரணிகள், அவை உருவாக்கும் நோய்கள் ஆழமாக விளக்கப்பட்டுள்ளன.
 • அதேபோல உடல்பருமன், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுபட வழிமுறைகளும் சொல்லித்தரப்பட்டுள்ளன.
 • எலும்புமண்டலம், நரம்புமண்டலம் போன்றவற்றில் கண்டுபிடிப்பாளர்களின் படங்களுடன் அவர்கள் செய்த ஆய்வு, ஆய்வு முடிவுகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. இதே போல அனைத்துத் துறைகளிலும் பின்பற்றப்பட்டுள்ளன. (உதாரணம் பெஞ்சமின் ப்ராங்ளின் சாவிக்கொத்தை பட்டத்தின் நூலில் கட்டி இடிதாங்கியைக் கண்டுபிடித்தது படத்துடன் உள்ளது)
 • மாசுபடுதலும் ஓசோன் படல ஓட்டையும் எவ்வாறு நிகழ்கின்றது எனும் பாடம் உள்ளது. இதில் சென்ற ஆண்டு மெக்சிகோ வளைகுடாவில் நடந்த எண்ணெய்க் கசிவு உட்பட பல ஆதாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
 • வேதியியல் சமன்பாடுகளைப் புரிந்துகொள்ள விளக்கப்படத்துடன் கூடிய சமன்பாடு உதவுகிறது. கந்தக ட்ரை ஆக்சைடு எவ்வாறு கந்தக டை ஆக்சைடிலிருந்து ஆக்சிஜன் ஏற்றமுறுகிறது என்பதை யாவரும் எளிதில் புரியும்படி சமன்பாடு புதுவகையில் தரப்பட்டுள்ளது.
 • தனிமவரிசை அட்டவணை உருவாக்கிய மென்டலீபின் புகைப்படத்தை முதன்முறையாக இப்புத்தகத்தில்தான் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.
 • நேனோ தொழில்நுட்பம் என்பது விளக்கப்பட்டிருக்கிறது.
 • வேதிப்பிணைப்புகள் முன்பெல்லாம் +1இல் சொல்லித்தரப்பட்டது., இப்போதோ அது 9ஆம் வகுப்பில்.
 • கெல்வின், ஜேம்ஸ் வாட், டாப்ளர் போன்றோரின் வரலாறும் அறிவியலில் இவர்கள் செய்த பங்களிப்பும் இதற்காக ஊலகில் இவர்கள் பெயர் நிரந்தரமாக்கப்பட்டமை எல்லாம் சொல்லப்பட்டுள்ளது (திறனின் அலகு வாட், வெப்பநிலையின் அலகு கெல்வின்)
 • ஒன்பதாம் வகுப்பில் இருந்து செய்முறைப்பயிற்சி இடம்பெறுகிறது.

5) பத்தாம் வகுப்பு:

ஆசிரியர் குழு: சென்னை ஐ ஐ டியின் இயற்பியல் பேராசிரியர், திருச்சி தேசிய தொழில்நுட்பநிறுவனத்தின் வேதியியல் பேராசிரியர், சேலம் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி, சென்னைசெயின்ட் பேட்ரிக் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள்

 • · மரபியல் 10ஆம் வகுப்பில் ஆரம்பமாகிறது.
 • · கிரிகர் ஜோஹன் மென்டல், டார்வின், ஜென்னர் எனப்பலரின் ஆய்வுகளோடு விவாதிக்கும் இப்பாடம் இரட்டைக்குழந்தைகள், குளோனிங் ஆட்டுக்குட்டி, ஸ்டெம் செல் சிகிச்சை வரை விளக்குகிறது.
 • · நோய்த்தடுப்பு முறை எனும் பாடம் சமகால நோய்களையும் பேசுகிறது. (இன்புளுயென்சா, ஊட்டக்குறைவு நோய்கள், ஹெச்1என்1 )
 • · செடி,மரங்களின் தாவரப்பெயர் அட்டவணை, அத்தாவரப்பெயரின் வட்டாரவழக்கிற்கும் ஒரு இடம் கொடுத்துள்ளது. உதாரணமாக ‘ஆர்டோகார்பஸ் இன்டக்ரிபோலியா’ என்பது பலாவைக் குறிக்கும். பலாவை சில வட்டாரங்களில் சக்கை என்றே அழைப்பது வழக்கம்.
 • · விலங்குகளின் நடத்தை பற்றிய அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து செந்நாய்களின் கூட்டு வேட்டைப்பழக்கம் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. (இவற்றைப்பற்றி சிறுபத்திரிக்கைகளில் தியோடர் பாஸ்கரன் ஏற்கெனவே எழுதி இருந்தார்)
 • · ரயில் பயணங்களின்போது தேநீரை தூக்கி எறியும் குவளைகளில் வழங்குகின்றனர். முன்பு மண்குவளையில் வழங்கிப் பார்த்தனர். இதனால் வளமான மண் வீணானது..இப்போது லட்சக்கணக்கில் தூக்கி எறிகிறோம்..இது நல்ல முறையா? சிந்தித்துப் பார் என்கிறது ஒரு பெட்டிச் செய்தி.
 • · கழிவுநீர் மேலாண்மை எனும் பாடம் இடம்பெற்றுள்ளது.
 • · சந்திராயன் திட்டம் பற்றிய பாடம் மயில்சாமியின் பங்களிப்போடு விளக்கப்பட்டிருக்கிறது.
 • · செய்முறைப்பயிற்சி இடம்பெறுகிறது.

ஆங்கிலப்பாடம்:

1) வகுப்பு 5:

பாடத்திட்டத்தை வகுத்தவர்களில் மதுரை டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவரும்,அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதல்வர்கள் இருவரும்,பொறியியற்கல்லூரியைச் சேர்ந்தவர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

 • · ஆங்கிலத்தை வாசிப்பதற்கும், கேட்பதற்கும், எனத் தனித்தனிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாத்திலும் பேச்சுவழக்கு ஆங்கிலம் (ஸ்போக்கன் இங்கிலீஸ்) இடம் பெற்றுள்ளது. வார்த்தைகளை வைத்து விளையாடுதலும், அகராதியில் இருந்து கொடுக்கப்படும் பொருள்களும் அக்கம் பக்கமாக பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் பயிற்சியும் ஒவ்வொரு பாடத்திலும் தரப்பட்டிருக்கின்றன. வொக்கபுலரியை மேம்படுத்தவும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. மனப்பாடம் செய்து கற்பதைத் தவிர்த்து படங்கள், உரையாடல்கள் மூலமும் வார்த்தை விளையாட்டுகள் மூலமும் நடைமுறை ஆங்கிலம் பயில வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
 • · படங்கள் மூலம் ஆங்கில இலக்கணப் பயிற்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக சில பயிற்சிகள்:

Supply the missing letters:

1) C_nso_e 2) mo_es_ly

3) F_n_ly

4)Con_ra_ul_te

2) ஏழாம்வகுப்பு:

பாடத்திட்டத்தை வகுத்தவர்களில் இடம்பெற்ற ஆசிரியர்கள், தூத்துக்குடி ஹோலிகிராஸ்ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சென்னை அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி, சென்னை ஹோலிஏஞ்ஜெல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். மாநிலக்கல்லூரியின்ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியரும் இதில் அடக்கம்.

 • · இப்பாடத்திட்டத்தில் ஆங்கிலம் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தப்படுகிறது. வாசிப்புக்கு நிறைய வரிகளும், படித்ததில் கவனித்தவற்றை எழுதவும், அகராதி பார்த்துப் படிக்கும் பயிற்சிகளும், சில ஆங்கில வார்த்தைகளை எந்த சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம் போன்ற விவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இலக்கணத்தைப் பொறுத்தளவில் வாசகனுக்கு சுதந்திரம் தரும் போக்கில் கற்றுக்கொள்ள பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்னொட்டு பின்னொட்டு மூலம் ஆங்கில வேர்ச்சொல்கள் எவ்வாறு வெவ்வேறு வார்த்தைகளாகின்றன என்பதை படம் மூலம் விளக்கியுள்ளனர்.
 • · இறந்த காலம் / நிகழ் காலம் போன்ற இலக்கணவிதிகள் கற்பது எளிதில் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.

3) எட்டாம் வகுப்பு:

பாடத்திட்ட ஆசிரியர்கள் : சென்னை லயோலா கல்லூரி, சென்னை புனித பால் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி பேராசிரியர்கள், கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி முதல்வர், ஆங்கிலோ இந்தியபள்ளிகள்: சென்னை புனித ஜோசப் பள்ளி, சென்னை ஹோலி ஏஞ்ஜெல்ஸ்.

நிபுணர் குழுத் தலைவர்: தி ஸ்கூல் சென்னை

 • · குழு விவாதங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் உரையாடுவதன் மூலம் மொழிப்பயிற்சி, இலக்கணவிதிகளும் கூட்டு விவாதம் மூலம் பயிலுதல், வார்த்தை விளையாட்டுகள், பெட்டிச் செய்திகள் மூலம் முக்கியமாக நினைவில் வைக்க வேண்டியவை, உரையாடல்கள் நடித்துக் காட்டுதல். சமீபத்திய இந்தியக் கவிஞர் கமலாதாஸின் ஆங்கிலக் கவிதை பாடமாக உள்ளது. கேள்விக்குறிய பதில்கள் ஆப்ஜெக்டிவ் டைப் வகையில் தரப்பட்டுள்ளன.
 • · தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பயிற்சி உள்ளது.

4) ஒன்பதாம்வகுப்பு:

ஆசிரியர் குழு: சென்னை கிறித்துவ கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர், ராணி மேரிக் கல்லூரிபேராசிரியர், எஸ்பிஓஏ மெட்ரிக் பள்ளி முதல்வர், அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முதல்வர்.

 • · ஒன்பதாம் வகுப்பின் பாடத்திட்டத்தின் இலக்கு மாறுகிறது. வளரிளம்பருவ மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்தும் வண்ணம் பாடங்களும் துணைப்பாடங்களும் அவர்களின் இலக்கு, இலட்சியம் போன்றவற்றை வரையறுக்கும்படி சிறப்பான மேடைப்பேச்சுக்கள், சிறுகதைகள், உரைநடைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை காக்கும் விழிப்புணர்வை மையப்படுத்தியும் பாடம் உள்ளது. எட்டாம் வகுப்பை விட இந்த வகுப்பில் பாடத்தின் செறிவு அதிகரிப்பு. அதே நேரத்தில் துணைப்பாடங்கள் இலக்கிய ரசனையை உருவாக்கும் வகையில் உள்ளன. ஆங்கிலத்தில் மேடைப்பேச்சு நடத்தவும், சுயமாகக் கட்டுரை எழுதவும் பயிற்சிகள் உள்ளன.
 • · ஆங்கிலப்பிழைகளைக் கண்டறியும் மொழிப்பயிற்சி நன்கு உள்ளது. ஆங்கிலத்தில் விளம்பரம் / நிகழ்ச்சி நிரல் தயாரிக்க / சுலோகன் உருவாக்கி போஸ்டர் தயாரிக்க என ப்ராஜெக்ட் ஒர்க் களும் உள்ளன. க்ராஸ் வோர்ட் பஷில்ஸ் இருக்கிறது.
 • · வாசிக்கவும் கேட்கவும் பயிற்சிகள் உள்ளன. (இதில் அரசியலும் உள்ளது. சுய உதவிக்குழுக்களைப் பற்றிய அறிமுகம். களஞ்சியம் சின்னப்பிள்ளை பற்றிய வாசிப்புப் பயிற்சி இருக்கிறது).
 • · பேச்சுப் பயிற்சியில் கல்பனாசாவ்லா பற்றி பேசச் சொல்கின்றனர்.
 • · ‘பெண்களுக்கு கல்வி தரவேண்டுமா?’ எனும் பொருளில் ஆங்கில விவாத மேடைப் பயிற்சி உள்ளது.
 • · இறந்த பின் உடல் உறுப்பு தானம் செய்த ஹிருதயனின் அம்மா கொடுத்த பேட்டியை அனைவரும் வாசிக்கச் செய்யும் பயிற்சி உள்ளது.
 • · ஆங்கிலப் பத்திரிக்கைக்கு செய்தி எழுதுதல் எனும் பயிற்சி உள்ளது. ஈ மெயில் எழுதி அனுப்பும் பயிற்சி உள்ளது.
 • · மாணவர் தன்னை பீர்பாலாகக் கருதிக் கொண்டு தன் கதையை அனைவர் முன்னிலையிலும் நடிப்போடு சொல்லும் பயிற்சி.

5) பத்தாம் வகுப்பு:

சென்னை  ஐ டி வளாகத்துள் இருக்கும் வனவாணி மெட்ரிக் பள்ளியின் முதல்வர்தலைமையில் மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பள்ளி, மாம்பலம் அஹோபில மடம்ஓரியன்டல் பள்ளி ஆசிரியர்கள் எழுதிய பாடநூல்.

 • இப்பாடநூலில் தனியொரு மாணவன் தனது கற்பனை வளத்தை, சிந்திப்பதை எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தவும், கம்யூனிகேசன் ஸ்கில்ஸ் வளர்க்கவும் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
 • புகுந்திருக்கும் அரசியல்: வாரன் பப்பெட்டையும் பில்கேட்ஸையும் புகழ்ந்து சில பாராக்கள் எழுதப்பட்டுள்ளன.
 • கேட்கும் பயிற்சி & குழுவிவாத நடவடிக்கைகள் பாடத்திட்டத்தில் உள்ளன. ஆங்கில சொலவடைகளும் பழமொழிகளும் பயன்படுத்த வேண்டிய இடங்கள் விளக்கம். சூழ்நிலையைச் சொல்லி அச்சூழலில் இடம் பெற வேண்டிய ஆங்கில உரையாடல்களை எழுதுதல்.
 • உலக இசை மேதைகள் பற்றிய பாடம் ஒன்றில் இளையராஜாவின் சிம்பனி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. இரட்டை கோபுர தாக்குதல், நாசி வதை முகாம்கள் பற்றிய பத்திகள் இடம்பெற்றுள்ளன.
 • பிரிட்டிஷ் ஆங்கிலத்துக்கும் அமெரிக்க ஆங்கிலத்துக்கும் உள்ள வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
 • ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பயிற்சி. (அரசு இசைக்கல்லூரி, சென்னை குறித்த கட்டுரை) அதே போல தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பயிற்சியும் உள்ளது.
 • உலகளாவிய தண்ணீர்ப்பிரச்சினை பற்றிய பாடம் உள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் தொழிலில் இருப்பது பற்றிய பாடம் உள்ளது.

தமிழ்பாடம்

1) 5ஆம்வகுப்பு:

 • · குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கடவுள் வாழ்த்து யாவர்க்கும் பொதுவாக்கப்பட்டு வெறும் வாழ்த்தாக மாற்றப்பட்டுள்ளது. கவிமணி பாடிய ‘திருவடி தொழுகின்றோம்’ என்ற சமதர்ம வேட்கைப்பாடல்தான் இனி இறைவணக்கம்.
 • · காட்டின் வனப்பையும், சுற்றுச்சூழலையும் மய்யப்படுத்தி ஒரு பாடம். தமிழின் தொன்மை குறித்த பாடம் ஒன்றில் நடுகல் கல்வெட்டுகளின் வண்ணப்புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது.
 • · செயல்திட்டம்: மாணவர்களே கூடி பள்ளிவிழாவிற்கு அழைப்பிதழ் உருவாக்குதல்
 • · உங்கள் ஊரில் வழங்கும் கதைப்பாடல் (விளையாட்டுகள்) தொகுத்துத்தா..சிறுவர் இதழ்களின் கதைகளைத் தொகுத்துத்தா..
 • · பேச்சுத்திறனை வளர்க்கும் பயிற்சிகளும் உள்ளன.
 • · கலைவாணர் பற்றிய பாடம், தலைவாரிப் பூச்சூட்டி உன்னை எனத் தொடங்கும் பெண்கல்வி குறித்த பாரதிதாசன் பாடல், பாரம்பரிய உணவுகள் பற்றிய கட்டுரை (கம்பு, கேப்பை) உணவுத்திருவிழா பற்றிப் பேசுகிறது..அது நடைபெறும் இடம் பாரதிதாசன் குடியிருப்பு J
 • · பாரதியின் ‘பட்டங்கள் ஆள்வதும்’ பெண்கல்வி குறித்த பாடல்,
 • · *விளம்பரங்கள், அறிவிப்பு பலகைகள், வரைபடங்கள் போன்றவற்றை வாசித்து உள்வாங்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 • · *குடும்பம் பற்றிய பாடங்களுக்கு வரையப்பட்டுள்ள படங்களில் அனைவரும் வீட்டில் மேசையில் அமர்ந்து உண்கின்றனர். ஷூ மாட்டியபடி தாத்தா பேரனோடு வாக்கிங் போகிறார். (இப்படங்கள் ஏழை மாணவர்களின் மனதில் என்ன விளைவை உருவாக்கும்?)
 • · பெரியார், புராணக்கதைகளை சிறுவயது முதலே விமர்சித்த விசயம் எழுதப்பட்டு அது பயிற்சிக்கேள்வியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
 • · நூல் முழுக்க வரும் சிறுவர் சிறுமியர் பெயரெல்லாம் தூய தமிழ்ப்பெயர்களாக உள்ளன. (யாழினி, எழிலரசன், பாவை)
 • · அகரமுதலி என்பதை அறிமுகம் செய்யும் பாடம் அருமையாக உள்ளது. அதில் அபிதான கோசம் பற்றியும் அபிதான சிந்தாமணி பற்றியும் குறிப்பு உள்ளது. பெ.தூரன் தொகுத்த சிறுவர் கலைக்களஞ்சியத்தில் இருந்து சில பக்கங்கள் தரப்பட்டுள்ளன. அகரமுதலியில் இருந்தும் சில பக்கங்கள் தரப்பட்டுள்ளன.

2) ஏழாம்வகுப்பு:

 • இந்த வகுப்பிலும் எம்மதத்தையும் சாராத ஒரு வாழ்த்துப்பாடல் திருவிக வால் எழுதப்பட்டுள்ளது.
 • ஊர்ப்பெயர் ஆய்வு எனும் நுட்பமான பாடம், மதிப்புக் கல்வி எனும் தலைப்பில் ஆளுமைத்திறனை மேம்படுத்தும் பயிற்சி (முடிவெடுக்கும் திறன், சுயகட்டுப்பாடு), பெருஞ்சித்திரனாரின் ஒரு பாடல், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றிய பாடம், கணிதமேதை ராமானுஜன், தாய் மொழிக்கல்வியை வலியுறுத்தும் காந்தி பற்றிய பாடம், அதில் காந்தியின் தமிழ்க் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.
 • இலக்கணம் பற்றிய பாடங்கள் அனைத்தும் உரையாடல் வடிவில் எளிதில் புரியும்படி எழுதப்பட்டுள்ளது.
 • சிறுபத்திரிக்கையில் மட்டும் பேசப்படும் ந.பிச்சமூர்த்தியின் கவிதை இடம்பெற்றுள்ளது.
 • சுயமரியாதை இயக்கத் தலைவி ராமாமிர்தம் பற்றிய வரலாறு,
 • ஆங்கிலம் கலந்த தமிழ் பேசும் தொலைக்காட்சி உரையாடலைப் பிரசுரித்து அதைக் கண்டித்து தமிழிலேயே பேசுவோம் என்பதை உணர்த்தி உள்ளனர்.
 • கழியூரன் தொகுத்த ‘தாத்தா பாட்டி சொன்ன கதைகள்’ தொகுப்பில் இருந்து ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.
 • வீட்டுக்குள் தந்தை மகன் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் சித்திரத்தைத் தந்து அதனை எவ்வாறு களைவது, தனித்தமிழில் பேசுவதன் அவசியம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

திட்டம்: ஏழாம் வகுப்பு மாணாக்கர் கூடி ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை தயாரித்தல் (அரும்புகையெழுத்துஇதழ்)

3) எட்டாம் வகுப்பு:

 • செம்மொழி மாநாடு பற்றிய விவரணை ஒரு பாடமாக உள்ளது. தமிழறிஞர் ஜி.யு.போப் பற்றிய கட்டுரை, ஈழக்கவிஞர் சச்சிதானந்தனின் பாடல், தமிழ் அகராதிகளின் வரலாறு, கணினி உருவாக்கப்பட்ட வரலாறு பல அபூர்வமான படங்களுடன் பிரசுரமாகி உள்ளது. வேலுநாச்சியார் உள்ளிட்ட தமிழச்சிகளின் சுதந்திரப்போராட்ட வரலாறு புது முயற்சி. அதில் கதர் கோஷ்டி பார்ப்பனப் பெண்களும் கூச்சம் ஏதுமின்றி இடம்பெற்றுள்ளனர்.
 • பிறமொழிச்சொற்களுக்குரிய தமிழ்ச்சொல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. (பஞ்சாயத்து என்பது உருதாம். அதன் இணைச்சொல் ஐம்பேராயம். பதில், கச்சேரி, பேட்டி, குமாஸ்தா அனைத்தும் உருதுச்சொற்களே. ஜமீன், பஜார் – பார்சி; பேட்டை, கில்லாடி – மராட்டி, மிட்டாய் – அரபு)
 • தன்னை குற்றவாளியைப் போலத்தூக்கிலிடாமல் போர்க்கைதியைப் போல சுட்டுக்கொல்லச் சொன்ன பகத்சிங் பற்றிய குறிப்புகள் உள்ளன.
 • சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து அறிமுகமாகி உள்ளது.
 • தேவநேயப்பாவாணர் பற்றிய பாடம் நன்கு அமைந்துள்ளது.

திட்டம்: குருத்து கையெழுத்து இதழ் தயாரித்தல்

4) ஒன்பதாம் வகுப்பு:

 • இதில் கருணாநிதியின் செம்மொழி வாழ்த்தும், ஆசிரியர் பற்றிய குறிப்பில் ‘தோன்றிற்புகழொடு தோன்றுக எனும்குறட்பாவுக்கு சான்றாக இவரைக் காட்டலாம்’ எனக் கரைந்துள்ளனர்.
 • தெருவில் பொருட்களை எப்படிக் கூவி விற்கின்றனர் என ஆசிரியர் கேட்கிறார். மாணவர்கள் ‘பூவோஒ பூவு’, பழமோ ஒபழம்’ எனக் கூவி விற்பதைச் சொல்கின்றனர். சொல்வதை அழுத்தமாகச் சொல்லி மனதில் பதியவைக்கும் இம்முறைதான் அளபெடை என மிகவும் எளிதில் விளக்கியுள்ளனர்.
 • மணிக்கொடி, எழுத்து, வானம்பாடி இதழ்கள் புதுக்கவிதை இயக்கம் போன்ற விசயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 • ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் பற்றிய கட்டுரை அந்நாட்குறிப்புகளின் அருமையை சிறப்புறப் பேசுகிறது. அக்குறிப்பிலிருந்து சில பகுதிகளும் தரப்பட்டுள்ளன.

திட்டம்: கையெழுத்து இதழாக ‘உடல்நலச் சிறப்பிதழ்’ தயாரிக்க வேண்டும். அதில் சிறுகதைக்கானதலைப்பு “108 காப்புந்து அல்லது கலைஞர் காப்பீட்டு திட்டம்”.

 • ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான பழமொழிகளைக் கண்டறியும் பயிற்சி உள்ளது.
 • மீனவர்கள் பாடும் தொழிற்பாட்டு ‘ஐலசா’வுடன் பிரசுரமாகி இருப்பது நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.
 • ராணி மங்கம்மாவின் வரலாறும் சிறப்பாகவே உள்ளது.
 • பொங்கல் பண்டிகையைப் புகழ்ந்து ஒரு கட்டுரை. அதில் வண்ணப்படத்தில் பொங்கல் பானையை ஒரு வெள்ளைக்காரி கும்பிட்டபடி இருக்கிறாள். வெள்ளைக்காரி சொன்னாத்தானே பொங்கலின் மகிமை நம்மவங்களுக்குப் புரியும்னு நினைத்தார்களோ என்னவோ?
 • உழைப்பால் உயர்ந்த உத்தமர் கல்லிடைக்குறிச்சி ஈஸ்வரன் (என்பீல்டு) கதை இடம் பெற்றுள்ளது J
 • பெருஞ்சித்திரனாரின் சுயமுன்னேற்றப் பாடல் ஒன்று உள்ளது
 • புவி வெம்பலுக்கு காரணிகளை விளக்கி ஒரு கட்டுரை நன்றாக உள்ளது. அதில் ஏ.சி. சாதனங்கள் உமிழும் நச்சுக்கள் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.

5) பத்தாம் வகுப்பு:

 • பல பக்கங்களில் அபூர்வமான புகைப்படங்கள் – உதாரணமாக 1812இல் பதிப்பிக்கப்பட்ட திருக்குறளின் முகப்புப் படம் – இடம்பெற்றுள்ளன.
 • இதுவரை பெரியார் என்றால் பள்ளிப்பாட நூல்களில் 500 தென்னைமரங்களை வெட்டிய செய்தியைத் தாண்டி ஏதும் சொல்லப்பட்டதில்லை. இந்நூலில் பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்’ எனும் நல்லதொரு கட்டுரை உள்ளது. அதேபோல அம்பேத்கரின் வரலாற்றிலும் அவரின் வட்டமேசை மாநாட்டுப் பங்களிப்பு கூட இடம் பெற்றிருக்கிறது.
 • வங்கி, அஞ்சலகம், ரயில்வே நிலையங்களில் விண்ணப்பங்கள் நிரப்பும் பயிற்சி முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.
 • பிசிராந்தையார் வடக்கிருந்து உயிர்நீத்த நிகழ்வை விளக்குபவர் கருணாநிதிதான் J படித்தல் திறனை மேம்படுத்த கொடுக்கப்பட்டிருக்கும் பத்தியும் அவருடையதே..’இதைப் போன்றநயமிக்கஉரைகளைத் தேடிப் படித்து, அவற்றைப் போன்று எழுதவும் பேசவும் பழகினால்உலகம் உங்களைநோக்கி வரும்’ என்று அறிவுரை வேறு இலவசமாகக் கிடைக்கிறது J
 • சுவீடிஷ் மொழிக்கதை ஒன்றின் மொழிபெயர்ப்பு துணைப்பாடத்தில் இடம்பெற்றுள்ளது.
 • தாழ்த்தப்பட்டோர் நலனுக்குப் பாடுபட்ட அயோத்திதாசப் பண்டிதர் வரலாறும் உள்ளது. அதில் அவர் நடத்திய ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையின் புகைப்படமும் உள்ளது.
 • சிலி தங்கச்சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளர் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.

சமூக அறிவியல் பாடம்

5ஆம் வகுப்பு:

உருவாக்கியவர்கள்: யுனிசெப்பிற்கான ஆலோசகர் ஒருவர், சென்னை குட்ஷெப்பர்டு மெட்ரிக்பள்ளி ஆசிரியர், எஸ் பி ஓ ஏ, சங்கரா வித்யாலயா ஆகிய மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும்இடம்பெற்றிருந்தனர்.

 • இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் பற்றிய பாடம் அவர்களின் படங்களுடன் இடம்பெற்றுள்ளது.
 • வாசிக்க ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் லே அவுட் பல வண்ணங்களில் ஏராளமான படங்களுடன் அமைந்துள்ளது. தீபகற்பம், வளைகுடா, பாலைநிலம், தீவு போன்றவற்றிற்கு சரியான படங்கள் வைத்து புவியியல் விளக்கப்பட்டுள்ளது.
 • இந்திய நிலப்பரப்பின் மண்வகைகள், சுரங்கங்கள், கனிமங்கள் போன்றவை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
 • செயற்கைக்கோள்கள் கட்டுமானத்தில் இருந்து ஏவுதல் வரை தக்க படங்களுடன் இடம்பெற்றுள்ளன.
 • இந்திய அரசமைப்பு, சார்க் நாடுகள், உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய பாடம் 5 ஆம் வகுப்பிலேயே தொடங்குகிறது.

திட்டம்: வகுப்பில் மாதிரி தேர்தல் நடத்திடுதல்.

 • சாலைப்போக்குவரத்து விதிகள் பாடமாக உள்ளது.

7ஆம் வகுப்பு:

 • ராஜபுத்திரர்கள் என்பவர்கள் எங்கிருந்து இந்தியாவுக்கு வந்தனர் என்பதும் அவர்களின் வரலாறும் தனியாக விளக்கப்பட்டிருப்பது தமிழக வரலாற்றுப் பாடத்தில் புதிய விசயம்.
 • சூஃபி இயக்கம் பற்றிய பாடமும் புதிதுதான்.
 • புவியில் மாறிக்கொண்டிருக்கும் மேற்பரப்பு பற்றியும், நிலநடுக்கத்தின் காரணிகள் பற்றியும் உயிரோடு இருக்கும் எரிமலைகள் பற்றியும் தெளிவான கண்ணோட்டம் கிடைக்கின்றது.
 • அருவி இதிலும் நீர்வீழ்ச்சி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது 

8ஆம் வகுப்பு:

 • காரன்வாலிஸ் பிரபு அறிமுகப்படுத்திய நிலச்சீர்திருத்தம் – ஜமீன் தாரி முறை எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது.
 • சிப்பாய்க்கலகம் இதில் மாபெரும் புரட்சி எனக் குறிக்கப்பட்டுள்ளது.
 • முன்பெல்லாம் இல்லாதிருந்த ‘தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி’ இதில் இடம்பெற்று, அப்பாடம் தெளிவாக அக்காலகட்டத்தை விளக்குகிறது. அதேபோல தஞ்சை மராட்டியர் ஆட்சியும் தனியாக விளக்கப்பட்டிருக்கிறது.
 • மருதுபாண்டியரும் தென்னிந்திய லீக் பற்றிய வரலாறும் வேலூர் புரட்சியும் இடம் பெற்றிருக்கிறது.
 • பொருளாதாரம் சமூக அறிவியலில் தனி அலகாக எட்டாம் வகுப்பில் இருந்து சொல்லித் தரப்படுகின்றது. தொழில்வகைகளும் பல்வகைத் தொழிலாளர்களும் பற்றிய வரையறைகள் உள்ளன.
 • பல்வகைப் பயிரிடல்களும், பலவகை தொழிற்சாலைகளும் பகுதிவாரியாக விளக்கப்பட்டுள்ளன.
 • வணிகத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் விளக்கப்பட்டுள்ளன.
 • குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, காரணிகள், சாதியப் பிரிவினை, மனித உரிமைகள் குறித்த ஐ.நா. தீர்மானங்கள், இந்திய மனித உரிமை அமைப்புகள் போன்றவை அலசப்பட்டுள்ளன.
 • பணம் சேமிப்பு முதலீடு பண்டமாற்று போன்ற அடிப்படை வரையறைகள் விளக்கப்பட்டுள்ளன.

9ஆம் வகுப்பு:

 • ரோமானியப் பேரரசு வீழ்ந்து போப்பாட்சி வந்ததும், அதற்கான பொருளாதார சமூகக்காரணிகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
 • ஐரோப்பாவில் நடந்த தொழிற்புரட்சியின் விளைவாக உருவான வர்க்கப் பிரிவினை, அத்துடன் விளைந்த வேலை இல்லாத்திண்டாட்டம், முதலாளித்துவ வளர்ச்சி, ராபர்ட் ஓவன்போன்றோரின் அரசியல், மார்க்சியக் கோட்பாடுகள் உருவாதல், எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
 • பிரெஞ்சுப் புரட்சிக்குத் தனி அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 • புவியியலில் தமிழகத்தின் மழைப்பரவலும் காடுகளின் பரவலும் மண்பரவலும் மேப் மூலமாக விளக்கப்பட்டிருப்பது எளிதாக இருக்கிறது.
 • சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் இருப்பிடங்கள் குறித்த மேப் உள்ளது.
 • சூழல் மாசுபடுதல் பற்றிய விழிப்புணர்வுக்கட்டுரை உள்ளது.
 • தமிழால் அறியப்படும் பல்வேறு பறவை, விலங்குகளின் ஆங்கிலச் சொற்கள் பட்டியலில் தரப்பட்டுள்ளன.
 • குடிமையியலில் நாம் எவ்வாறு ஆளப்படுகிறோம், அரசியல் சட்டம் நமக்கு வழங்கி இருக்கும் உரிமை & கடமைகள், நாடாளுமன்றம் நீதிமன்றம் அமைச்சரவை, மாநில அரசு ஆகியவற்றின் அதிகாரங்கள் விளக்கப்பட்டுள்ளது.
 • தமிழகத்தின் தற்கால சமூகச் சிக்கல்கள் எனும் பாடத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு, பிராமணர்ஆதிக்கம், நீதிக்கட்சி வரலாறு போன்றவை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.
 • இடம்பெயரும் தொழிலாளர், திருநங்கையர் நிலைமை விளக்கப்பட்டிருக்கின்றது.
 • பொருளாதாரம்: சப்ளை, டிமான்ட் (அளிப்பும் தேவையும்), மார்ஷலின் தேவை விதி விளக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு:

 • ஏகாதிபத்தியத்தின் தன்மை என்ன? ராணுவ ஏகாதிபத்தியம், பொருளாதார ஏகாதிபத்தியம், 1870 வரை கடைப்பிடிக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் தன்மை, காலனி ஆதிக்கமும் ஏகாதிபத்தியமும், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அடிப்படை விளக்கப்பட்டுள்ளன.
 • முதல் உலகப்போர், ரஷ்யப் புரட்சி, அதனை அடுத்து வந்த பொருளாதாரப் பெருமந்தம், பாசிசம் நாசிசம் தோன்றி வளர்ந்தது..இரண்டாம் உலகபோர் போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதை விளக்கி நேர்க்கோட்டில் விளக்கி உள்ளனர்.
 • சீனாவில் ஏகாதிபத்தியங்கள் நடத்திய அபினிப்போர்கள், சன்யாட்சென்னின் புரட்சி, வரை விளக்கப்பட்டுள்ளன.
 • ஐரோப்பிய ஒன்றியம், யூரோ நாணயம், போன்ற அண்மைய வரலாறுகளும் விளக்கப்பட்டுள்ளன.
 • நீதிக்கட்சி ஏன் தோன்றியது? தியாகராயர், டி எம் நாயர் போன்றோரின் 
 • ங்களிப்புகள்,நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள், சுயமரியாதை இயக்கம், அதன் நோக்கங்கள்,சாதனைகள், பெரியார் நீதிக்கட்சித்தலைவராகி திராவிடர் கழகமாக்கியது, அண்ணா,முத்துலட்சுமி ரெட்டி, தர்மாம்பாள், ராமாமிர்தம் போன்றோரின் தொண்டுகள் எனவிரிவாக திராவிட இயக்கத்தின் தேவையையும் பங்களிப்பையும் அலசியுள்ளனர்.
 • இமயமலை உருவான புவியமைப்பு வரலாறு சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.
 • ஜிபிஎஸ், செயற்கைக்கோள் பயன்பாடு, இணையம், மென்பொருள் பூங்கா, விளக்கப்பட்டுள்ளன.
 • ஒருகட்சி ஆட்சிமுறை, இருகட்சி ஆட்சிமுறை, பலகட்சி ஆட்சிமுறை ஆகியவற்றின் சாதக பாதகங்கள் விளக்கப்பட்டுள்ளன.
 • நுகர்வோர் உரிமை ஒரு பாடமாக உள்ளது.
 • பொருளாதாரத்தில் நாட்டின் வருமானம், நிகர நாட்டு உற்பத்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், இவற்றைக் கணக்கிடும் முறை, 1947க்கு முன்னும் பின்னும் பொருளாதார நிலைகள், தனியார்மயம், தாராளமயம் – விளக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக

சமச்சீர் கல்விப் பாடங்களில் திருமதி பார்த்தசாரதி போன்ற கல்வியாளர்கள் கண்டறிந்த தவறுகளை, அச்சிடப்பட்டிருக்கும் சமச்சீர் கல்விப் புத்தகங்களில் தேடினோம். அறிக்கை கூறுவதை கருப்பு எழுத்துக்களிலும் நமது குறிப்புகளை நீல எழுத்துக்களிலும் தந்திருக்கின்றோம்.

1) Touching on factual incorrectness of the content, the committee cited the example of Social Science textbook for class VII. In the lesson on “Changing face of Earth’s surface” (pg no 75), a statement is given as “the continuous freezing and melting of water.” It is a factual error because water cannot melt, only ice can, the report said.

 உறைபனி சிதைவு பற்றிய இந்தப் பத்தி:

 சிலநேரங்களில் விரிசல் உள்ள பாறைகளின் மழைப்பொழிவின் காரணமாக நீரானது நிரம்புகிறது. இரவு நேரங்களில் நிலவும் வெப்பநிலை காரணமாக இந்த நீரானது உறைந்து பனிக்கட்டியாக மாறும் மற்றும் பகல் நேரங்களில் உருகும்.பனிக்கட்டியானது திடப்பொருளாக இருப்பதால் பாறைகளின் உடைபட்ட பகுதிகளில் அது அதிக அழுத்தத்தை உருவாக்கும்.

 
SCIENCE

2)   Content is too heavy. In Class 8, unit 10 of the book deals with atomic structure and concepts such as laws of chemical combination, electrical nature of matter, discovery of fundamental particles, properties of cathode rays and discovery of protons

இதெல்லாம் ரொம்ப ஓவர்..1980களில் படித்தபோதும் இதே பருண்மைமாறாவிதியையும், டால்ட்டனின் அணுக் கொள்கையையும் 9ஆம் வகுப்பில் இதே அளவுதான் படித்தோம்..இப்போது அவை 8ஆம் வகுப்பில்..

 ரொம்ப கொஞ்சமா படிக்கிறாங்க ஸ்டேட் போர்டுல..அப்படின்னு சொல்லி மெட்ரிக் வியாபாரிகள் தங்கள் சரக்கை உயர்ந்ததென்று கடைகட்டிக் கொண்டிருந்தாங்க…பெரிதாக மாற்றம் ஏதும் இல்லாத இந்த அத்தியாயத்தை முன்வைத்து, சிலபஸ் ரொம்ப அதிகம்னு புளுகுறாங்க..

 

 

சமச்சீர் கல்விஇவற்றில் என்ன பாடச்சுமை இருக்கிறது

  
3) Syllabus has no analytical activities. In Class 9, students could have been given the opportunity to study the unit ‘Matter’ through experiential learning rather than by rote

இது அப்பட்டமான பொய். பருப்பொருள் பற்றிய இப்பாடத்தில் இடம்பெற்றுள்ள செய்முறைகள் பின்வருவன. (பக்கம் 152 முதல்)

சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்விசமச்சீர் கல்வி

சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்வி

 4)  Syllabus does not integrate life skills with contents or activities. In Class 1, in the unit ‘Science in Everyday Life’,
everyday practices such as ‘not to spit or litter in public places’, ‘respecting others’ and ‘solving problems’ have not been considered

 இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்ல அவங்களுக்கே கூச்சமா இருந்திருக்காதா?

 
SOCIAL SCIENCE

5)   Syllabus deals with concepts that are too complex for a student of that age group. Ideas such as the Universe, stars and the solar system are dealt in the lesson ‘Wonders in the Sky’ in Class 3

 இதில் என்ன விந்தை இருக்க முடியும்? சூரியக்குடும்பம், விண்மீன்கள் பற்றி எல்லாம் சென்ற தலைமுறை மாணவர்கள் கூட 4ஆம் வகுப்பில் படித்தவைதானே..1980களின் ஆரம்பத்திலேயே இவை ஸ்டேட் போர்டில் இப்படித்தான் இருந்தன.. எவருக்கும் புரிதலில் சிக்கல் எல்லாம் இல்லை.

Instead of introducing chapters on the Union government and the state government before human rights and the United Nations, the chapters are introduced the other way round in Classes 8 and 9

எட்டாம் வகுப்பில் சொல்லித்தரப்பட்டிருப்பது மனித உரிமைகளும், மனித உரிமைகள் பற்றிய ஐ.நா.தீர்மானங்களும். இவை தவிர பெண்கள் உரிமைகள் என பன்னாட்டு அமைப்புகள் வரையறுத்தவையும், மனித உரிமை ஆணையங்கள் இந்தியாவில் செயல்படுவதும், அவற்றின் அதிகாரங்களும் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

ஒன்பதாம் வகுப்பில் சொல்லித்தரப்பட்டிருப்பவையோ, எவ்வாறு மத்திய மாநில அரசுகள் இயங்குகின்றன, தேர்தல் முறை என்ன போன்றவைதான்.

மனித உரிமைகள் பற்றிய ஐ.நா.தீர்மானங்களுக்கும் மத்திய மாநில அரசமைப்புகளுக்கும் முன் பின் எனும் தொடர்ச்சி தேவையே இல்லை..

இந்த பாடங்களைப் படிக்காமலேயே, தலைப்புகளை மட்டும் பார்த்துவிட்டு மாநில அரசு->மத்திய அரசு -> ஐ நா சபை எனும் கற்பனைப் புரிதலோடு இந்த விமர்சனத்தை வைத்துள்ளனர்.

6) There is no meaningful link between the history units as they are not logically arranged. The Class 8 history syllabus begins with a unit on the ‘Advent of Europeans’ and ends with ‘Indian Independence’

இதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் ராஜபுத்திரர்களின் வரலாறு தொடங்கி விஜயநகரப் பேரரசு வரை விளக்கி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக 16ஆம் நூற்றாண்டின் முகலாயர் ஆட்சியில் தொடங்கி, மராத்தியர் ஆட்சி, ஐரோப்பியர் வருகை, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி, அதன் தொடர்ச்சியாக இந்திய சுதந்திரப் போரை விளக்கி உள்ளனர். இதில் தொடர்ச்சி ஏதும் அறுபடவில்லை..அதுவரை மத்திய, வட இந்திய வரலாறு விளக்கப்பட்ட பின், தமிழ்நாட்டில் நாயக்கர், மராட்டியர் ஆட்சியும் அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் நடந்த வேலூர் புரட்சியும் தொடர்ச்சியாகத்தானே எழுதப்பட்டிருக்கின்றது?

________________________________________________________________________

– இரணியன்

________________________________________________________________

 

சமச்சீர் கல்வி குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்திரவுப்படி தமிழக அரசு அமைத்த ‘நிபுணர்’ குழு உயர்நீதிமன்றத்திடம் அறிக்கையை அளித்து விட்டது. சாரமாகச் சொன்னால் முந்தைய அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தரமற்றது என்று கூறிவிட்டது. இந்த மூன்று வாரத்தில் அதிலும் நான்கு முறை மட்டும் கூடி 10,000த்திற்கும் மேற்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் பக்கங்களை இவர்கள் படித்திருக்க வாய்ப்பே இல்லை. எல்லாம் ‘அம்மாவின்’ விருப்பத்திற்கேற்ப எழுதப்பட்ட திரைக்கதைதான். இனி இதை வைத்து சென்னை உயர்நீதிமன்றம் அம்மாவின் விருப்பத்தையே நடைமுறைப்படுத்த நிறைய வாய்ப்பிருக்கிறது.

உண்மையில் இந்த சமச்சீர் கல்வி எப்படி தயாரிக்கப்பட்டிருக்கிறது, அதில் என்ன இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. இங்கு தோழர் இரணியன் சமச்சீர் கல்வி குறித்த பாடத்திட்டங்களை விரிவாக படித்து விட்டு தனது கருத்துக்களை இங்கே பகிர்ந்திருக்கிறார். இதிலிருந்து சமச்சீர் கல்வி தரமற்றது என்று மூடநம்பிக்கை போல பரப்பப்படும் கருத்துக்களை வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

– வினவு

முதல் பதிவு: வினவு

3 thoughts on “சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!

 1. well said. good research.But what can we do? our people fate is like that due to negative approach of present Govt. and its vengenece against old schemes.kavignar Thanigai.

 2. அருமையான , மக்களுக்கு விழிப்புணர்வு வரவைக்கும் பதிவு

 3. சமச்சீர்கல்வி பாடநூல்களை எங்கு தரவிறக்கம் செஞ்சீங்க ,இணைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கிறேன் .அல்லது உங்கள் வலையிலேயே நூல்களை பதிவிடவும் .

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s