இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே அவர்களின் கல்வி!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி ! போராட்டமே மாணவர்களின் கல்வி ! சமச்சீர் பாடநூல்களை ஜூலை 22 ஆம் தேதிக்குள் விநியோகித்து முடித்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தொடங்கிவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 18 ஆம் தேதி உத்தரவிட்டது. தமிழக அரசு விநியோகிக்கவில்லை. சமச்சீர் நூல்களை விநியோகிப்பதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் கேட்டது.

“சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி சமச்சீர் பாட நூல்களை உடனே விநியோகிப்பதுடன், வகுப்புகளைத் தொடங்குவதற்கும் தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்; ஆகஸ்டு 2 ஆம் தேதிக்குள் புத்தக விநியோகத்தை முடித்து விட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் ஜூலை 21 ஆம் தேதியன்று உத்தரவிட்டது. தமிழக அரசோ இந்தக் கணம் வரை மாணவர்களுக்கு பாடநூல்களைக் கொடுக்கவில்லை.

பாடநூல்களை அடுக்கி வைத்திருக்கும் டி.இ.ஓ அலுவலகத்தின் வாசலிலேயே அமர்ந்து“எங்களுக்கு பாடநூலைக் கொடு” என்று விருத்தாசலம் மேனிலைப் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அதற்கும் அரசு அசையவில்லை. உச்சநீதி மன்றத்தின் உத்தரவைக் காட்டினாலும், எங்களுக்கு அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை என்கிறார்கள் கல்வித்துறை அதிகாரிகள்.

“ஜூலை 26 அன்று டில்லி உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடங்குகிறது. தீர்ப்பு அரசுக்கு சாதகமாகவும் அமையக் கூடும். முடிவு தெரிவதற்கு முன்னால் அவசரப்பட்டு சமச்சீர் புத்தகங்களை விநியோகிக்க வேண்டாம் என்று அம்மா எண்ணியிருப்பார்” என்று விளக்கம் கூறினார் ஒரு அதிமுக அல்லக்கை.

அம்மாவின் சிந்தனை குறித்த அல்லக்கையின் கணிப்பில் தவறேதும் இல்லை. ஆனால் தான் செய்யவிருப்பது என்ன என்ற உண்மையை அம்மா, உள்ளது உள்ளபடியே நீதிமன்றத்தில் ஏன் உரைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை.

“மை லார்ட், கேஸ் முடியும்வரை நாங்கள் புத்தகங்களை கொடுப்பதாக இல்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படையாக அறிவிக்காமல், “விநியோகிப்பதற்கு அவகாசம் வேண்டும்” என்று அங்கே ஏன் பொய்யுரைக்க வேண்டும்? இங்கே புத்தக கட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் வாசலில் உட்கார்ந்து “புத்தகத்தைக் கொடு” என்று கேட்கும் பள்ளி மாணவர்களை, போலீசை வைத்து ஏன் துரத்த வேண்டும்?

அம்மாவின் கணக்குப்படி தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வருவதாகவே இருக்கட்டும். அதற்கு முன்னால் சமச்சீர் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்பு என்ன? அவர்கள் அவற்றைப் புரட்டிப் பார்த்து விட்டால் இந்த தேசத்துக்கோ அல்லது மாணவர் சமூகத்துக்கோ ஏற்பட்டு விடக்கூடிய ஆபத்து என்ன?

அம்மா நியமித்த வல்லுநர்கள் கூட சமச்சீர் பாடப்புத்தகங்கள் “தரமானதாக இல்லை” என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். படத்தை ரிலீஸ் செய்! படம் தரமா, தரமில்லையா என்பதை மாணவர்கள் தீர்மானிப்பார்கள். படச்சுருளை மாணவர்களின் கண்ணிலேயே காட்டாமல் பெட்டியிலேயே பூட்டி வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டுவதற்கு, அது என்ன “மாமனாரின் இன்ப லீலைகள்” சினிமாவா?

அந்தப் புத்தகங்களை மாணவர்களின் கண்ணில் காட்டுவதற்கே அம்மாவின் அரசாங்கம் ஏன் அஞ்சி நடுங்குகிறது? இணைய தளத்திலிருந்து அவற்றை ஏன் அவசர அவசரமாக அப்புறப்படுத்துகிறது? “சமச்சீர் கல்வி என்ற வார்த்தையையே ஆசிரியர்கள் உச்சரிக்க கூடாது” என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் சுற்ற்றிக்கை அனுப்பி மிரட்டுவது ஏன்?

அது சமச்சீர் புத்தகமா, இல்லை, சரோஜாதேவி புத்தகமா?

தரமில்லை என்பது இந்த அரசாங்கத்தின் கருத்து. அதுவே அறுதி உண்மை அல்ல. சமச்சீர் புத்தகங்கள் தரமா தரமில்லையா என்று வல்லுநர் படித்துப் பார்ப்பார், நீதிபதி படித்துப் பார்ப்பார், எவன் வேண்டுமானாலும் பார்ப்பான், மாணவர்கள் மட்டும் அந்தப் புதுப் பாடநூல்களை ஆசையாகத் தொட்டு..முகர்ந்து பார்க்கக் கூடாதா?

அந்த நூலைத் தொட்டாலே மாணவர்களுடைய தரம் வீழ்ந்து விடுமா?

தரமில்லாத ஒரு ரூவா அரிசிச் சோற்றைத் தின்று, தரமில்லாத அரசுப் பேருந்துகளில் தொங்கி, தரமில்லாத அரசுப்பள்ளிகளில் படிக்கும் “தரமில்லாத” ஏழை மாணவர்கள், அந்த தரமில்லாத பாடநூல்களை ஒரு முறை புரட்டித்தான் பார்க்கட்டுமே! என்ன கெட்டுவிடும்?

ஒருவேளை உச்ச நீதிமன்றம் அம்மாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து விட்டால், 200 கோடி செலவு செய்து அம்மா அச்சடித்து வைத்திருக்கும் பழைய பாடத்திட்ட நூல்களையும் மாணவர்களிடம் விநியோகிக்கட்டும்!

“இனிமேல் இதுதான் பாடநூல். ஏற்கெனவே கொடுத்த சமச்சீர் பாடநூல்களை எடைக்குப் போட்டுவிடுங்கள்” என்று மாணவர்களிடம் அறிவிக்கட்டும்! அதில் என்ன நட்டம்? எல்லா புத்தகத்தையும் மொத்தமாக அரசாங்கமே பழைய பேப்பருக்குப் போடுவதற்குப் பதிலாக, தனித்தனியாக மாணவர்கள் போடப்போகிறார்கள். மேற்படி பழைய பேப்பர் விற்பனையில் கிடைக்கக்கூடிய வருவாயை அரசு இழக்க நேரிடும் என்பதைத் தவிர வேறென்ன நட்டம்?

“சமச்சீர் பாடநூல்கள் தரமற்றவை, அவை கருணாநிதியின் குடும்ப விளம்பரங்கள்” என்ற அம்மாவின் கூற்று உண்மையாயின், அந்தப் புத்தகங்களை மாணவர்களுக்கு படிக்கத் தருவதன் மூலம் தானே கருணாநிதியின் முகத்திரையைக் கிழிக்க முடியும்?

“கருணாநிதியின் முகத்திரையை மாணவர்களிடம் கிழித்துக் காட்டிய பிறகு, புத்தகங்களையெல்லாம் கிழித்து தீ வைத்துக் கொளுத்த வேண்டும்” என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டால், அவர்கள் என்ன மறுக்கவா போகிறார்கள்? வள்ளுவனின் முகத்திலேயே பசை தடவிக் காகிதம் ஒட்டக் கூசாத அந்தக் கைகள், கொளுத்துவதற்கா தயங்கும்?

சமச்சீர் பாட நூல்களைப் பற்றி அவர்கள் செய்து வரும் பிரச்சாரம் மிகைப்படுத்தப்பட்ட பொய்ப் பிரச்சாரம். அந்த நூல்கள் விநியோகிக்கப்பட்டு, அவற்றை மாணவர்கள் புரட்டிப் படித்து விட்டால், மாணவர்கள் அவற்றை விரும்பத் தொடங்கிவிடுவார்கள் என்று அரசு அஞ்சுகிறது.

அரசைப் பொருத்தவரை இது வெறும் பாடநூல் பிரச்சினை மட்டும் அல்ல. அந்தப் பாடநூல்களை மாணவர்கள் கையில் கொடுத்து விட்டால், “அம்மா கொடுத்த புத்தகமா, அய்யா கொடுத்த புத்தகமா எது சிறந்த பாடநூல்?” என்ற விவாதம் தவிர்க்க இயலாமல் தொடங்கி விடும். மாணவர்களின் முடிவு அம்மாவுக்கு சாதகமாக இருக்காது என்றும் அரசு அஞ்சுகிறது.

“அம்மா அய்யா ” பிரச்சினையோடும் இந்த விவகாரம் முடிந்து விடாது. எந்தப் பாடநூல் நன்றாக இருக்கிறது, ஏன் நன்றாக இருக்கிறது என்று யோசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் கருத்து தெரிவிப்பதற்கும் மாணவர்களுக்கு உரிமை வழங்குவது என்பது, புலிக்கு ரத்த வாடை காட்டுவதற்கு நிகரானது என்று அஞ்சுகின்றன அரசும் ஆளும் வர்க்கமும்.

பாடநூல் பற்றியும், பாடத்திட்டம் பற்றியும் விவாதிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றுவிட்டால் –

தரம், பாடத்திட்டம், பயிற்று முறை ஆகியவையெல்லாம் மாணவர்களும் பெற்றோரும் கருத்துக் கூறமுடியாத, அவர்களுடைய புத்திக்கு எட்டாத பிரம்ம ரகஸ்யங்கள் போலவும், அவற்றைப் பற்றி ஒப்பீனியன் ஷொல்லணுமானால் அவாள் மிஸஸ் ஒய்.ஜி.பி யாகவோ, மிஸ்டர் சோ ராமஸ்வாமியாகவோ இருந்தாகவேண்டும் என்றும் அவர்கள் டெவலப் பண்ணி வைத்திருக்கும் கதைகளும், கொடுத்து வரும் பில்டப்புகளும் உடைந்து விடும் என்பது இந்தக் கும்பலின் அச்சம்.

அதனால்தான் 1.25 கோடி மாணவர்களின் தலைவிதியோடு சம்மந்தப்பட்ட சமச்சீர் பாடநூல்களை மக்கள் மன்றத்தில் திறந்து காட்ட இந்த அரசு மறுக்கிறது. உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றுகிறது. ஆசிரியர்களை மிரட்டுகிறது. அறிவைப் பூட்டி வைத்து காவலுக்கு ஆயுத போலீசை நிறுத்தி வைக்கிறது.

 இந்த அரசு
தனியார் கல்விக் கொள்ளையர்களின் புரவலன்.
மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் கூட்டாளி.
இலவசக் கல்வியின் எதிரி.

“பாடநூலைக் கொடுக்க முடியாது” என்று மறுக்கும் அரசுக்கு,
“பள்ளிக்குச் செல்” என்று ஆணையிடும் உரிமை கிடையாது!

“வா” என்றால் வருவதற்கும், “போ” என்றால் போவதற்கும்
ஆடு மாடுகள் அல்ல மாணவர்கள்;

இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!

சமச்சீர் கல்வியை முடக்குவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்து,
சமச்சீர் பாடநூல்களை விநியோகிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டு விட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) தொடங்குகிறது.

பாடநூல்களை விநியோகிக்காமல் மாணவர் சமுதாயத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த அரசை திங்களன்றே (ஜூலை 25) வீதிக்கு இழுப்போம்!
இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!

____________________________________________________________

ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது.  இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும்.  இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்.

வழக்கு நிதி தாரீர் விபரங்களுக்கு

நன்றி: வினவு

5 thoughts on “இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே அவர்களின் கல்வி!!

  1. உங்க பாதக/பாலக அரசியல் நாடகத்திற்கு அளவே இல்லையா ?

  2. சமச்சீர் கல்வியை கருணாநிதி கொண்டுவந்தார் என்பதற்காகவே ஜெயலலிதா கொணர மறுக்கிறார்.அத்துடன் சோ போன்ற துரோணாச்சாரியார் சொல்வதாலும்,இந்த அளவு நீதிமன்றங்களை நாடி செல்கிறார்.நீடிமன்ற வாசல்கள் ஏறுவதும் -அதன் தீர்ப்புகளை ஏற்க மறுப்பதும் அவரின் பிறவிக்குணம்.இன்னும் சர்வதேச நீதிமன்றம்,ஐ.நா,மன்றம் பாக்கியுள்ளதே.

  3. நியாயமான கேள்விகள் புரிபவர்களுக்கு புரிந்தால் சரி

  4. வினவு, July 25, 2011

    சமச்சீர் புத்தகங்களை வழங்கு! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!!
    =====================================================

    அட!

    பாலர்வாடியில் ஆரம்பிச்ச அரசியல பச்சை பொறுக்கி காலேஜ் காம்பவுன்ட் வரை…,

    இன்னும் பஸ் எல்லாம் கொளுத்த ஆரம்பிக்கலையா ? ஜெயா கொடும்பாவி எரிக்க எடுத்த

    கொள்ளியில எவனையாவது தீக்குழிக்க வைத்து அரசியல அழகா செய் ராசா!!!

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s