பொதுப்பாடத்திட்டம் – சில வினாக்களும் விளக்கங்களும்

பிரச்சனை பள்ளிப் பொதுப்பாட நூல்களைப் பற்றியதுதானே, பிறகு ஏன் இதனை சமச்சீர் கல்வியுடன் இணைத்துப் பேச வேண்டும்? மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போதும், பொதுப்பாட நூல்களை அகற்றிவிட்டு பழைய பாடநூல்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதன் விளைவுகளை ஆராயும் போதும் இந்த பிரச்சனையுடன் சமச்சீர் கல்வி எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பது புரியும்.

முந்தைய பாடநூற்கள் நான்கு வகையானவை, நான்கு விதமான பள்ளிக் கல்வி வாரியங்களுக்கு உரியவை; அதாவது மாநில வாரியம்- மெட்ரிக் கல்வி வாரியம் – ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கல்வி வாரியம் – ஓரியண்டல் வாரியம் என நான்கு பிரிவுகளாக உள்ளவை.

பொதுப்பள்ளிப் பாடத்திட்டம் – பொதுப்பள்ளிப் பாட நூல்கள் என்பவை சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஒரே பாடத்திட்டம் என்ற அடிப்படையில் வந்தவை. எனவே பழைய பாடத்திட்டம்-பழைய பாடநூல்கள் என்பவை தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு மெட்ரிக்  போன்ற தனியார் பள்ளிப்பாட அமைப்புகளுக்கான தனித்துவத்தை தனிச்சிறப்பு என்ற ஒன்று இருப்பதாகக் கூறுவதை ஏற்பவை. எனவே பழைய பாடப்புத்தகங்களை மீண்டும் தொடருவது என்பது சமச்சீர்க் கல்வியின் முதல் முயற்சியான பொதுப்பாடத்திட்டம் – பொதுப்பாடநூல்களை முறியடிப்பதாகவே அமைந்துவிடுகிறது. இதனைக் கருத்திற்கொள்ளும் போது பொதுப்பாட நூல்கள்  விஷயத்தை சமச்சீர் கல்வியுடன் தொடர்புபடுத்தியே காண வேண்டியுள்ளது.

நான்கு விதமான கல்வி வாரியங்கள்  பாடத்திட்டங்கள் பாடநூல்கள், இவற்றை ஏன் சமச்சீர் கல்வி மறுக்கிறது?

கல்விக் கூடங்களை அரசினரும் நடத்தலாம், தனியாரும் நடத்தலாம், அதோடு அரசின் நிதி உதவி பெற்று தனியாரும் நடத்தலாம் என்ற நிலை இன்றுள்ளது. இதில் தனியார் பள்ளிகளுக்காக தனித்தனியாக பாடத்திட்டங்கள் பாடநூற்கள் என இருப்பது எனபது இந்திய அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்படும் சமத்துவம் சமுக நீதி ஆகியவற்றிற்கு எதிரானது என்பதால்தான் ஒரே பாடத்திட்டம் பொதுப்பள்ளிப் பாடத்திட்டம் – பொதுப்பள்ளிப் பாட நூல்கள் என்பது இன்றியமையாதவை ஆகின்றன. இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தனியார் பள்ளிகள் நடக்கின்றன. அங்கெல்லாம் இல்லாத தனிவாரியங்கள் – தனிபாடத்திட்டங்கள்-தனி பாடநூல்கள் தமிழகத்தில் மட்டும் இருப்பது விந்தையானது, வேதனையாது, விபரீத விளைவுகளை  உருவாக்குவது. எனவே ஒரு ஜனநாயக அமைப்பில் பொதுப்பள்ளி அமைப்பு என்பது பொதுப்பள்ளிப் பாடத்திட்டம் – பொதுப்பள்ளிப் பாட நூல்கள் என்ற அடிப்படையில் தான் இருக்க முடியும்.

பொதுப் பாடத்திட்டம் – பொதுப் பாட நூல்களே சமச்சீர்க் கல்வியாகி விடாது; சமச்சீர்கல்வியின் நோக்கத்தை நிறைவு செய்துவிடாது என்பதை ஒப்புக்கொள்கின்ற அதே வேலையில் பொதுப்பாடத்திட்டம் – பொதுப்பாட நூல்கள் என்பவைதான் சமச்சீர்கல்வியின் அஸ்திவாரமும், முதல் தேவையும் என்பதை உணரவேண்டும். கடந்த அரசு அந்த முதல் தேவையை மட்டும்தான் நிறைவேற்றியுள்ளது. சமச்சீர்கல்விக்கான பிற நடவடிக்கைகள் தொடரவேண்டியுள்ளன. இந்த நிலையில் சமச்சீர் கல்வி என்னும் இலக்கை நோக்கி இன்று இருக்கின்ற ஒரே செயல்திட்டமான பொதுப்பாடத்திட்டமான பொதுப்பாட நூல்களையும் ஏதோ ஒரு காரணம் காட்டி நீக்கிவிடுவது என்றால் அது சமச்சீர் கல்விக்கு சமாதி கட்டுவது என்றல்லவா ஆகிவிடும்.

சமச்சீர் கல்வியை எதிர்க்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்? உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பொதுப் பாடத்திட்டத்தை நிராகரிக்க மறுத்துவிட்ட பிறகு, வெளிப்படையாக சமச்சீர் கல்வியை மறுப்பதால் ஏற்படும் சமூக அரசியல் விளைவுகளுக்கு அஞ்சி, இன்று சமச்சீர் கல்வியை எதிர்க்கவில்லை என்று கூற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சமச்சீர் கல்வியை கொண்டு வருவதில் உண்மையான இருக்கிறார்களா, நேர்மையாக இருக்கிறார்களா என்பதை அவர்களது செயல்கள் மூலமாகத்தான் மதிப்பீடு செய்ய வேண்டும்.

உலகத்தரதிற்கு, தேசிய தரத்திற்கு உகந்த அளவில் பொதுப்பாடநூல்கள் இல்லை என்கிறார்களே?

கடந்த ஆண்டு முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பிற்கான பொதுப்பாட நூல்கள் வந்துவிட்டன. கடந்த கல்வியாண்டில் ஆசிரியர்களோ, மாணவர்களோ, பெற்றோர்களோ, கல்வியாளர்களோ, பாடத்துறை வல்லூநர்களோ அப்புத்தகங்களை தரக்குறைவானது என்று கூறியதில்லை. ஒரு சில பிழைகள், சிறுசிறு குறைகள் இருந்தாலும் அதற்கு முந்தைய பாட நூல்களை விட வடிவமைப்பிலும், உள்ளடக்கத்திலும், வண்ணப்படங்களிலும், துணுக்குச் செய்திகளிலும், சிந்தனையைத் தூண்டும் சிறுசிறு வினாக்களிலும் எளிதாகவும் தெளிவாகவும் செய்திகளைப் புரியவைக்கும் மொழிநடையிலும் பொதுப்பாட நூல்கள் பழைய பாடநூல்களைவிட பலமடங்கு உயர்ந்தவை என்று ஒப்புக்கொள்ளப்படுகின்றன.

இன்று பொதுப்பாடநூல்களின் தரங்களைக் குற்றம் காண்பது யார்? குரல் எழுப்பியவர்கள் யார்?

ஆசிரியர்களோ, மாணவர்களோ, பாடத்துறை வல்லூநர்களோ அல்ல. சுயநீதிப்பள்ளிகள் மூலமாக கொள்ளை லாபம் ஈட்டுபவர்கள்; எதையும் குறுகிய கட்சிக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள், சமத்துவம், சமதர்மம், சமூகநீதி, சமச்சீர் என்ற கருத்துக்களையே தீண்டத்தகாத தீட்டுக்களாக வெறுப்பவர்கள், பழைமைவாத மதவெறியர்கள், வர்க்க-வர்ண வேறுபாடுகளை ஆதரிப்பவர்கள். இவர்கள் தரம் என்ற போலியான உறுதியற்ற வாதத்தை வைத்து பொதுப்பாட நூல்களை அகற்றிவிட முற்படுகின்றன.

சமச்சீர் கல்வியை வலியுறுத்துவோ தரத்தைப் பற்றிக் கவலைப்படவில்லையா? பொதுப்பள்ளிக் கல்வியின் தரம் உயர்ந்திருக்க வேண்டுமென்பதில் எந்த முரண்பாடும் இல்லை.

ஆனால் தரம் என்று எதனை குறிப்பிடுகின்றனர்? எந்த அலகுகளைப் பயன்படுத்தி தரத்தை மதிப்பீடு செய்யலாம்?

உலகத்தரம் பற்றி பேசுவதில் ஆழம் இருக்கவில்லை. எதனை உலகத்தரம் என்கிறார்கள்? அமெரிக்கத்தரமா? இங்கிலாது தரமா? ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பியத்தரமா? ஜப்பான் – சீனா உள்ளிட்ட கீழை நாடுகளின் தரமா? அங்குள்ள பாடத்திட்டங்களையும், பாடப் புத்தகங்களையும் ஒப்பு நோக்கியா தரம் பற்றிய பிரச்சனையை எழுப்புகின்றனர்?

தரம் என்பது ஓர் ஒப்பீட்டுக் கருத்தியல். தரம் என்பது தனியான நிலையான எதுவுமில்லை. வேறு ஒன்றுடன் ஒப்பிடும்போது, இது செம்மையாக உள்ளதா? நவீன மாற்றங்களை தற்கால செய்திகளை சமகால சமூகநெறிகளை, சமகால மேம்பட்ட கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கின்றதா? மொழியும் நடையும், பாடங்களைப் புரிய வைக்கும் முறையும் மேம்பட்டிருக்கிறதா என்பவை தான் தரம் பற்றிய முடிவிற்கான அலகுகள்.

இன்று புதுபொதுப்பாட நுற்களை அகற்றி பழைய பாடநூற்களை தொடர முனைபவர்கள், அவை இரண்டினையும் கல்வி வல்லுநர்களைக் கொண்டு ஒப்பீட்டு மதிப்பீடு செய்துள்ளனரா? தேசிய அளவில் பள்ளிக்கல்வித்தரத்தை அலகிடுவது NCERT யின் பணி. 2005-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு (National Curriculum Frame Work)  என்பதுதான் இன்றுள்ள நிலையில் நவீன தேசிய பள்ளிக்கல்வி தர நிர்ணய அலகாக உள்ளது.

2009,10,11 –ஆண்டுகளில் வல்லுநர்களால் விரிவாக விவாதிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட பொதுப்பாடத்திட்டம் – பொதுப்பாட நூல்கள் இவற்றை உள்வாங்கி உருவாக்கப்பட்டவை.

இவர்கள் தொடர விரும்பும் பழைய பாடநூல்கள் 2001-ஆம் ஆண்டு அளவில் உருவானவை. காலத்தால் பழையவை; 2005 ஆம் ஆண்டு வெளியான தேசிய தரத்திற்கு முற்பட்டவை; பாடங்களைத் தரும் முறையும், கேள்வி முறைகளும், புத்தக அமைப்பும் பழையவையே.

எனவே இன்றைய தேசிய தரத்திற்கு பழைய பாடநூகள் எப்படிப் பொருந்தும்?

தரம் என்பதுதான் உண்மையான அக்கரையாக இருந்தால் பழைய பாடநூல்களைத் தொடர முடியாது. அவற்றைவிட நவீனமான பொருத்தமான பொதுப்பாட நூல்களையே ஏற்க வேண்டிருக்கும். குறைந்த பட்சம், இன்றைய பொதுப்பாட நூல்களை விட மேம்பட்ட புதிய பொதுப்பாட நூல்கள் உருவாக்கப்படும் வரையிலாவது இப்போதுள்ள பொதுப்பாட நூற்களை அனுமதிக்க வேண்டியயிருக்கும்.

பொதுப்பாட நூல்களில் குறைகள்-பிழைகள் இல்லையா? அரசியல் சாயம் கலந்திருக்க வில்லையா?

குறைகளும் பிழைகளும் இருக்கக்கூடும். சில அரசியல் நோக்கக்குறிப்புகளும் இருக்கக்கூடும். ஆனால் இவை பழைய பாடப்புத்தகங்களிளும் இருக்கவில்லையா? அன்றைய புத்தகங்கள் அன்றைய ஆட்சியாளர்களை குறிப்பிடவில்லையா? இவற்றையெல்லாம் நீக்குவது தவறு என யாரும் சொல்லவில்லை. ஆனால் இவற்றைக் காரணம் காட்டி, பொதுப்பாட நூல்களை அகற்றுவது எப்படி நியாயமாகும்?

குறைகளை- பிழைகளை-தேவையற்ற குறிப்புகளைக் கண்டுபிடிப்பதும் அகற்றுவதும் பாடத்துறை வல்லுநர்கள் பொறுப்பு. கல்விக்குத் தொடர்பில்லாத கட்சிக்காழ்புகளுக்கும், மதசார்புகளுக்கும் இதில் இடமில்லை. பாடங்களில் இடம் பெற்றே ஆக வேண்டிய சூரியனும், இலைகளும், தாமரையும், நிறங்களும், நாட்டுப்புறக்கலைகளும் அரசியலாக்கப்பட வேண்டியதில்லை. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று உழவை முதன்மைப்படுத்திய, முதன்மைபடுத்துகின்ற சமூக மரபில் ‘தை’யை முதன்மைப்படுத்தும் பாடலை அகற்ற வேண்டியதில்லை. காலத்திற்கு ஒவ்வாதவற்றை, அறிவுக்கு முரண்பட்டவற்றை, அறிவியல் கண்ணோட்டத்திற்கும், உயர் மனித விழுமியங்களுக்கும் முரண்பட்டவற்றை அகற்றுவதுதான் அவசியம். பொதுப்பாடநூல்களையே அகற்றுவது என்ற நோக்கில் ‘குறைகளை’ப்  பயன்படுத்துவது ஏற்கத் தக்கதல்ல.

பெரியார் நூற்களில் ‘பெரியார் பார்வை’ இருப்பதாகச் சொல்கிறார்களே?

இதைச் சொல்பவர்களது சமூகத்தளத்தையும், தத்துவ அடிப்படையையும் பார்க்க வேண்டும்.

‘பெரியார் பார்வை’ என்பது பொதுக்கல்வியில் தவிர்க்க முடியாதது. அந்த பெரியார் பார்வையால்தான் உயர்கல்விநிலையங்களில் இட ஒதுக்கீட்டை மறுதலித்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி எழுந்து சமூகத்தில் நலிந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் இட ஒதுக்கீடு போன்றவற்றை அனுமதிக்கும் முதல் சட்டதிருத்தம் வந்தது. சாதி வேறுபாடுகளை நியாயப்படுத்திய சேரன்மாதேவி குருகுலத்திற்கு எதிரான போராட்டம் வெடித்தது. தொழிற்கல்வி என்ற போர்வையில் வந்த ‘குலக்கல்வி’த்திட்டம் தவிர்க்கப்பட்டது. காமராஜர் காலத்தில் பள்ளிகள் எண்ணிக்கை பல மடங்கு பெருகியதும், சீருடை வந்ததும், மதிய உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டதும், கட்டணச் சலுகைகள் மூலம் கல்வி பரவலாக்கப்பட்டதும் பெரியார் பார்வைதான்.

அண்ணாவின் காலத்தில் புதுமுக வகுப்பு வரையிலும், சென்ற ஆட்சியில் பட்டப்படிப்பு வரையிலும் கல்விக்கட்டணம் நீக்கப்பட்டதும் பெரியார் பார்வையின் விளைவுதான்.

கல்வியைப் பரவலாக்குவது, பொதுவையாக்குவது, விஞ்ஞான அடிப்படையாக்குவது, மதச்சார்பற்றதாக்குவது என்பதெல்லாம் பெரியார் பார்வைதான்.ஆதிசங்கரரும், இராமானுஜரும் மத்தவாச்சாரியாரும் இடம் பெறுகின்ற பாடப்புத்தங்கள் புத்தரும், சித்தரும் இடம் பெறுவதும் அரசியல் விடுதலை போராட்டத்துடன் சமூக விடுதலை இயக்கங்களைக் குறிப்பிடுவதும், ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண பரமானம்சர், சவாமி விவேகானந்தா ஆகியோருடன், ஜோதிபா பூலே, ராமலிங்க வள்ள்லார் , வைகுந்தசாம், நாராயணகுரு, சாருமகராஜ், பெரியார், அம்பேத்கார் ஆகியோர்களைக் குறிப்பதும் காந்தி, திலகர், கோகலே போன்றவ்ர்களுடன் சிங்கார வேலர், முத்துலட்சுமி ரெட்டி, ஜீவா போன்றோர் இடம் பெறுவதும் காந்தீயத்துடன் பொது உடமையை விளக்குவதும் பெரியார் பார்வைதான்.

வர்க்க-சாதி ஆதிக்க உணர்வுடன் சிலவற்றை மிகைப்படுத்துவதும் சிலவற்றை இருட்டடிப்பு செய்வதும் சமூக அறிவியலாகாது, சமூகச் சதியாகும். வெறுப்புணர்வுக்கு அல்ல, விழிப்புணர்வுக்கு சமூக அறிவியல் பயன்பட வேண்டும். அதனால்தான் பொருளாதாரம் சமூக அறிவியலில் இணைக்கப்படுகிறது. சமகால பிரச்சனைகளும், மகளிர் சமத்துவம், மனித உரிமை, குழந்தைகள் உரிமை, விவசாயம், போன்றவறவையும் பொதுப்பாட சமூக அறிவியலில் இடம் பெறுகின்றன. இது எதையும் இருட்டடிப்பு செய்யவில்லை. இடைவெளிகளை நிரப்புகிறது. ஆகவே சமூக அறிவ்யல் இங்கே மனிதனை, அடிப்படை மனிதக் குழுக்களை மய்யப்படுத்தியுள்ளது. மனிதனை, மனித சமூகத்தை மய்யப்படுத்தும் அனுகுமுறைக்கு ‘பெரியார் பார்வை’ என்ற பெயரென்றால் அது குற்றச்சாட்டல்ல, பாராட்டுரையாகவே கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் கூற்றுப்படி , தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவைக் குறித்து ஏன் விமர்சனம்?

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தையும் போன்று சமசீர் கல்வியை பொதுப்பாடத்திட்டத்தை – பொதுப்பாட நூல்களை நிராகரிக்கவில்லை. தமிழக அரசினால் எழுப்பப்பட்ட ‘புத்தகங்களின் தரம்’ பற்றி ஆய்வு செய்யவே ஒரு குழுவை அமைக்குமாறு குறிப்பிட்டது.

மாநிலத் தலைமைச் செயலர், பள்ளிக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்விச் செயலர் உள்ளிட்ட ஒன்பதுபேர் குழுவில் மற்றவர்கள் ஆறுபேர் பாடநூற்கள் தரமற்றவை என்று குற்றம் சுமத்தியவர்களின் தலைமையில் ஒரு ஆய்வுக்குழு, அதிலுள்ள பிறரில் நான்கு பேர் குற்றம் சுமத்திய அரசினால் நியமிக்கப்படுபவர்கள். மீதமுள்ள இரண்டு பேர் கணிதம் – சமூக அறிவியல் தொடர்பான NCERT நபர்கள். ஆனால் தமிழறியாதவர்கள்; தமிழ் வரலாறு மரபு அறியாதவர்கள், தமிழ்பாட நூற்களை மதிப்பீடு செய்யவோ, ஆங்கில நூல்களுடன் சுதந்திரமான ஒப்பீடு செய்யும் வாய்ப்பில்லாதவர்கள்.

மீதமுள்ள நான்கு பேரில் ஒருவர் CBSE ஐ சேர்ந்தவர். மற்ற மூவர் மாநில பொதுவாரியத்திற்கு உட்படாத உயர்கட்டணங்களை வசூலிக்கும் சுயநிதிப் பள்ளி நிர்வாகிகள். சமூக நீதியிலும், சமூக பொதுக்கல்விலும் ஈடுபாடில்லாதவர். ஒரு கல்வி உரிமைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்திடுமாறு பெற்றோர்களிடம் வற்புறுத்துபவர். இவர்களை பாடத்துறை வல்லுநர்களாக ஏற்க முடியுமா? நடுநிலைமையாளர் யாருமில்லை. இரு தரப்பு வாதங்கள் ஏதுவுமில்லை. ஒரு தலைப்பட்சமான குழு. தமிழறியாத NCERT வல்லுநர்களால் இரண்டு வாரங்களில் 40 தமிழ் பாட நூற்களை மதிப்பீடு செய்ய இயலுமா?

தமிழ்க அரசிடம் நேர்மையான, திறந்த மனத்துடன் நடந்து கொள்ளும் என்று நம்பிக்கை வைத்து குழு அமைக்கும் பொறுப்பை உச்சநீதிமன்றம் அதற்கு தந்தது. ஆனால் பொதுப்பாடத்திட்டத்திற்கு முரண்பட்ட சுயநீதிப்பள்ளி நிர்வாகிகள் மூன்று பேரை உறுப்பினர்களாக நியமித்ததின் மூலமாகவும், மாநிலபள்ளி வாரியத்தின் அனுபவமிக்க ஆசிரியர்களைப் புறக்கணித்ததின் மூலமாகவும் தமிழ்க அரசு ‘ஆய்வுக் குழு’ வை தான் ஏற்கனவே ஆய்வின்றி எடுத்த முடிவிற்கு அங்கீகாரம் பெறும் வகையில் பயன்படுத்த முற்படுவதாக அய்யம் ஏற்படுகின்றது.

இன்று உருவாகியுள்ள பிரச்சனைக்குத் தீர்வு என்ன?

இது உருவாக்கப்பட்டுள்ள பிரச்சனை. எந்தப்பாட நூல்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபரிசீலனைக்கும் மாற்றத்திற்கும் உட்பட்டவை. எதுவானாலும் காலாவதியானவற்றை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. புதிய ஒரு பொதுப்பாடத்திட்டம் – புதிய பொதுப்பாடநூல்கள் வெளிவரும் வரை இப்போதைய பொதுப்பாட நூற்களையே நடைமுறைப்படுத்த வேண்டும். இப்புத்தகங்களில் இப்போதைய அரசிற்கு நியாயமான, அறிவுபூர்வமான நெருடல்களை இடம் பெற்றிருந்தால் அவற்றை மாநில அரசு நீக்கிவிடலாம். ஆனால் அத்தகைய நீக்கங்கள், இருட்டடிப்புகள், வள்ளுவரையும், குறளையும், பாரதிதாசனையும் மறைப்பதாக இருக்கக்கூடாது.

சுருக்கமாக சொன்னால் சமச்சீர் கல்விக்கு இனியும் என்ன கூடுதலாக தேவைகள் என்று ஆராயட்டும்; இருப்பதை அழிப்பதில் ஈடுபடாமலிருக்கட்டும்.

ஒன்பது பேர் குழுவின் அறிக்கை குறித்து:

ஜீலை 5, 2011 அன்று தலைமைச் செயலர் தலைமையிலான ஒன்பது பேர் குழுவின் அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போலவே அக்குழு தமிழக அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையிலும், வலுப்படுத்தும் வகையிலும் ‘சமச்சீர் பாடத்திட்டங்களும் – பாடப்புத்தகங்களும் தரமற்றவை, குறைகளே நிறைந்தவை, அவசரகோலத்தில் உருவாக்கப்பட்டவை. அவற்றைப் பள்ளிகளின் இவ்வாண்டு ஏற்க இயலாது’ என்பன போன்ற கருத்துக்களை தனது ‘ஆய்வு’ முடிவாகத்தந்துள்ளது. இத்தகைய கருத்துக்கள்-முடிவுகள்தான் அறிக்கையில் இடம்பெறும் என்பதைக் கல்வியாளர்கள் & சமச்சீர் கல்வியில் அக்கரை கொண்ட அனைவரும் அறிந்ததுதான், எதிர்பார்த்ததுதான். எனவே இந்த அறிக்கையில் யாரும் ஆச்சிரியமடையவில்லை, அதிர்ச்சியடையவில்லை.

 எது அவசர கோலம்?

கடந்த ஆட்சியில் போது சமச்சீர் கல்வியை குறித்து முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைக்குப்பின் பொதுப்பாடத்திட்டம் உருவாக ஓராண்டு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசால், கல்வித் துறையால் வெளியிடப்பட்ட நகல் பாடத்திட்டத்தைப் பற்றி கல்வியாளர்கள் விமர்சனங்களை எழுப்பினர்; விவாதங்கள் தொடர்ந்தன. நகல் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதைத் தொடர்ந்து பாடநூல்களைத் தயாரிக்கும் பணி தொடங்கியது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடங்களே 2010-ஆம் ஆண்டு நிறைவுற்று பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டன. மற்ற வகுப்புகளுக்கான பாடநூற்களை தயாரித்து முடிக்க மேலும் ஓராண்டு பிடித்தது. இந்த நூற்களை தயாரிப்பதில் அரசுப் பள்ளி- அரசு மானியம் பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி, ஓரியண்டல் பள்ளிகளின் அனுபவமிக்க ஆசிரியர்கள், அந்தந்தத் துறைகளில் தேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பல்களைக் கழகம்-கல்லூரிகள்-மாத் சயன்ஸ் போன்ற சிறப்பு உயர்கல்வி அமைப்புகளின் பாடத்துறை வல்லுநர்களின் ஆலோசனைகளும், பங்கேற்புகளும் பெறப்பட்டன.

ஆகவே சமச்சீர் பாடத்திட்டமும், பாடப்புத்தகங்களும் ‘மாயா பஜார்’ போன்று ஓரிரு நாட்களில் உருவானவை அல்ல. சமச்சீர் கல்வித்திட்டம் ஏற்கப்படுவதும், அமல்படுத்துவதும் இவ்வளவு காலம் தாமதம் ஆயிற்றே எனத்தான் குற்றம் காண முடியுமே தவிர , சமச்சீர் பாடத்திட்டம்- புத்தகங்கள் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக சில குறைகளை வைத்து மட்டுமே கூறுவது உள்நோக்கம் கொண்ட போலியான குற்றச்சாட்டாகும்.

அவசரப்படுவது யார்? அவசரகோலத்தில் செயல்பட்டது யார்?

 எட்டுவகுப்புகளுக்கான பாடத்திட்டம், தமிழ்வழிப் பாடநூல்கள் எட்டு வகுப்புகளுக்குமான 40 நூல்கள், ஆங்கிலவழிப் பாடநூல்கள் 32, மொத்தம் 72 நூல்கள், ஏறக்குறைய 7000 பக்கங்கள் ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டும். இதைத் தவிர பழைய நூல்கள் மாநில வாரிய்ப் புத்தகங்கள் 7000 பக்கங்கள் மெட்ரிக் பாடநூல்கள் 7000 பக்கங்கள் பிற இரண்டு வாரியப் புத்தகங்கள் 7000 பக்கங்கள் என மொத்தம் 28000 பக்கங்கள் அலச வேண்டும்.

ஒன்பது பேர்குழு மொத்தம் 13 நாட்களில் 4 முறை கூடினர்.

முதல் கூட்டம் 17-6-2011 அன்று கூடியது ‘தரம்’ என்பதை முடிவு செய்யும் அலகுகள் குறித்து ‘விவாத்த்தனர்’.

22-6-2011 அன்று முதற்கட்ட விவாதங்கள் நடந்தன.

23-6-2011 –அதாவது மறுநாள் முதல் (நகல்) அறிக்கையை பள்ளிக்கல்வி அதிகாரி குழுவில் விநியோகிக்கிறார். சில கருத்துக்கள், சில பரிந்துரைகள் பேசப்படுகின்றன.

29-6-2011 அன்று இறுதி அறிக்கையை கல்வித்துறைச் செயலர் முன்வைக்கிறார். அதனை 5-7-2011 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது என்ற முடிவு அறிவிக்கப்படுகிறது.

மூன்று அரசு அதிகாரிகள் மூன்று சுயநிதிப்பள்ளி நிர்வாகிகள் ஒரு CBSE யின் முன்னாள் அதிகாரி, இரண்டு NCERT பிரதிநிதிகள்; தமிழ்மொழி அறியாத அவர்களுக்கு கணிதம் மற்றும் சமூக அறிவியலில் தான் அறிமுகமுண்டு.

சில மெட்ரிக் பள்ளி அமைப்புகள் தந்த ‘புகார்’ கடிதங்களை மட்டும் வைத்துக் கொண்டு மறுதரப்புக் கருத்துக்களுக்கு பெயரளவுக்குக் கூட இடம்தராமல் அரசின் பள்ளித்துறை அதிகாரியால் வைக்கப்பட்ட இந்த அறிக்கை, நியாயமான எந்த முறையில் பார்த்தாலும் ஓர் ஆய்வு அறிக்கையாக இருக்க முடியாது. ஒரு தொகுப்பு அறிக்கையாகத் தான் இது இருக்க முடியும். பொதுப்பாடதிட்டத்திற்கும், பாடநூற்களுக்கும் எதிராக, ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கைகளைத் தொடங்கி விட்ட மாநில அரசின் தொகுப்பு அறிக்கை.

2001 ஜீன் 22 ஆம் தேதி விவாதம். மறுநாள் (23-6-2001) முதற்கட்ட அறிக்கை கல்வித்துறை அதிகாரி குழுவில் வைக்கிறார். ஆறாவது நாள் (29-6-2011) இறுதி அறிக்கையை அதே அதிகாரி குழுவில் வைக்கிறார்.

அதாவது அரசு அதிகாரி வைத்த அறிக்கையை ஒப்புக்கும் பார்த்துவிட்டு கையெழுத்திடும் பணியைத்தான் இக்குழு செய்துள்ளதாகத் தோன்றுகிறது.

இரண்டாண்டுகள் பலவேறு ஆசிரியர்கள் பலமுறை விவாதித்து உருவாக்கிய பாடத்திட்டத்தையும் 7000 பக்கங்கள் கொண்ட 72 பாட நூற்களையும் ஒரே இரவில் ஆய்வு செய்து முடிவுகளை எடுத்துவிட்டதாக அறிக்கையில் தரப்பட்டுள்ள குழு நடவடிக்கை விவரங்கள் தெரிவிக்கின்றது. எது அவசரக்கோலத்தில் நடந்தது?

முன்னரே எடுக்கப்பட்டுவிட்ட ஒரு தலைப்பட்சமான முடிவை செயல்படுத்துவதற்காகவே, அதாவத்யு சமச்சீர் புத்தகங்களை மறுப்பதற்காகவே தவறுகளைமட்டும் தேடியிருக்கின்றனர். குறைகளை மட்டும் தேடித்தேடிப் பார்த்துள்ளனர். சில தவறுகளை பூதாகரமாக்கியுள்ளனர்.

திருத்த வேண்டிய தவறுகளை, திருத்த வேண்டிய முறைகளைக் கூறாமல் சமச்சீர் புத்தகங்கள் மட்டுமல்ல சமச்சீர் பொதுப்பாடத் திட்டமே தேவையில்லையென்றும் கூச்சமின்றி பலமுறை குறிப்பிட்டுள்ளன. அரசு  மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியான் அணுகுமுறையை வலியுறுத்திகின்றனர் (அறிக்கை பக்கம் 38, பக்கம் 81)

பக்கம் 81-ல் 92 பாரா எண்ணில் குறிப்பிட்டவை கீழே தரப்படுகிறது:

It is a question to be answered whether implementation of a common syllabus and text books for all schools will achieve the real purpose of providing equality in education. Samacheer kalvi can be rather achieved by providing equal opportunities to all the students to get quality education in the school as mandated by the right of children to free and compulsory Education Act 2009.

சமச்சீர் கல்வி நோக்கத்தை பொதுப்பாடத்திட்டத்தால் அடைய முடியாதாம்.

சமூகத்தின் வேறுபாடுகளை பாடநூல்கள் பிரதிபலிக்க வேண்டும் (பக்கம் 58) என்று கூறுகின்ற அறிக்கை கிராமப்புற மாணவர்காளுக்கு பளுவானவை என்று பல அறிவியல், புவியியல் பகுதிகளைக் குற்றம் சாட்டுகின்றன. மாணவர்களுக்கு கடினமானது என்பது வேறு. கிராமப்புற மாணவர்களுக்குக் கடினமானவை என்பது வேறு; மாணவர்களை என்றென்றுமே கிராமப்புறம், நகர்ப்புறம் என்ற வேறுபாட்டில் பாகுபாட்டைத் தொடர குழுவின் அறிக்கை துடிப்பது தெளிவாகின்றது.

உதாரணமாக

ஏழாவது வகுப்பிற்கு பூமி கோள்களின் தோற்றம் Big bang Theory, பூமியின் உள்வெப்பம் போன்றவை கிராமப்புற மாணவர்களுக்குப் பொருந்தாதாம். அதே போன்று ஆறாவது வகுப்பில் (இது உயர் நீதிமன்ற தீர்ப்பின் வரையறைக்கு அப்பாற்பட்டது) தீவிபத்தைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான பாடம் கிராமப்புற மாணவர்களுக்கும் பொருந்தாதாம். பள்ளிகளில் ஏற்பட்ட தீவிபத்துகளின் பாதிப்புக்குறித்து பத்மசேஷாத்திரிகளுக்கும், டி.ஏ.வி களுக்கும், ஆண்டாள்களுக்கும் அக்கரையிருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியுமா?

பாடச்சுமை அதிகம் என்று கூறுகின்ற அறிக்கை அதே வேளையில் மெட்ரிக் புத்தகங்களில் இருக்கும் பாடங்கள் சில ஏன் சமச்சீர் பாடங்களில் இல்லை என்று குற்றம் சாட்டுகிறது. மெட்ரிக் பாடத்திட்டத்தில் இருப்பவையெல்லாம் இடம் பெற வேண்டுமென்றால் மற்ற பாடத்திட்டங்கள் எதற்கு? அப்படி இருக்க வேண்டும் என்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

‘மெட்ரிக்’ புத்தகங்களில் இல்லாதவை சமச்சீர் புத்தகங்களில் இருப்பதைப் பற்றி கண்டு கொள்ளாமல் தேவையற்ற முறையில்  National Curriculum Frame Word 2005 தேசிய கலைத்திட்டம் வடிவமைப்பின்  ஆலோசனைகளை அபத்தமாகக் குறிப்பிடுகின்றது. சுற்றுச்சூழல் பாடல்கள் 3வது வகுப்பிற்கு மேல் அதிகமாக இடம் பெறுவதைத் தவிர்த்து பொதுஅறிவியலில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் என்பதை, 3வது வகுப்புக்கு மேல் சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகள் சில, அறிவியல்,குடிமையியல், புவியியல் பகுதிகளில் இடம் பெறுவதை NCFக்கு முரணானது என மறுக்கிறது.

பொது அறிவியலைச் சிதைக்காமல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான சில குறு செய்திகளை ஆங்காங்கே தருவது குற்றமா? இந்த பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் தனிப்பாடமாக இல்லை. அத்துடன் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சுற்றுச்சூழல் அறிவியல் கட்டாய பாடமாக இளங்கலை வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளதை இக்குழு அறியவில்லையா?

ஒன்பதாம் வகுப்புப் பாடத்தில் இந்திய அரசியலமைப்பு மத்திய-மாநில அரசு பற்றிய பாடங்கள் இருக்கலாம். பிறகு எப்படி எட்டாம் வகுப்பு பாடத்தில் மனித உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபை இடம் பெற முடியுமா? என புத்திசாலித்தனமாக குற்றம் சாட்டுகிறது குழு அறிக்கை. அப்படித்தான் தர வேண்டுமென NCF கூறுகிறதா?

ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றமும், மனித உரிமைகள் பிரகடணமும் இந்திய சுதந்திரத்திற்கு முன்பே, இந்திய குடியரசு அரசியலமைப்பிற்கு முன்பே உருவானவை என்பதை இந்த வல்லுநர்கள் (Experts) அறியவில்லையா?

தேச வரைபடங்களில் அளவுகள் (Scales) திசைகள் (Directions)  இடம் பெறாத குறையும் குற்றமாக்கப்படுகிறது. வரலாறு – புவியியல் பாடங்களில்  மாணவர்களை தேச வரைபடம் வரையக் கூறுவதில்லை. அளவு-திசை வைத்து நாடுகளின் –உலகின் –வட்டாரங்களின் படங்களை வரைவதைக் கற்றுக் கொள்வது தனித்துறை (cartography). இங்கு தரப்படுகின்ற வரைபடங்களில் கேட்கப்படுகின்றவற்றை குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய திறனைத் எதிர்பார்க்கிறோம். அளவும்-திசையும் தேவையில்லை என்பதல்ல. இருப்பதுதான் உசிதம், இல்லாதது குறையே, குற்றமல்ல, அவை திருத்தப்படக் கூடியவையே.

மெட்ரிக்குடன் ஒப்பிட்டே குற்றங்களை சுமத்துகிற அறிக்கை சமச்சீர் பாடங்களை, அதற்கு முந்தைய மாநிலப் பள்ளி வாரியப் புத்தகங்களுடன் ஒப்பிடுவதில்லை.

பொருளியல் பாடங்கள் மெட்ரிகைவிடக் குறைவு என்கிற அறிக்கை இதற்கு முந்தைய மாநில வாரிய (State Board) பாடத்திட்டத்தில் இடம் பெறாத பொருளியல் பாடங்கள் முதன்முறையாக சமச்சீர் புத்தகங்களில் இடம் பெறுகின்றன என்பதைக் கண்டு கொளவதில்லை.

சமச்சீர் புத்தகங்கள் குறைகளற்றவை, ISI அக்மார்க் முத்திரைகளுக்கு உரியவை என்று கூறவில்லை. குறைகளைக் களைந்தோ, கூடுதல் பகுதிகளை இணைத்தோ சமச்சீர் புத்தகங்களை சமச்சீர் கல்வி என்ற நோக்கத்திற்காக பயன்படுத்த முடியும். ஆனால் சமச்சீர் – பொதுப்பாடதிட்டம் குழிதோண்டிப் புதைக்கப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்திற்காகவே சமச்சீர் புத்தகங்களை தரமற்றவை என்று புதைத்துவிட முற்படுவதை ஏற்க முடியுமா? மூன்று முகாம்கள் – 100 ஆசிரியர்கள் – 5 நாட்கள் நடந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆய்வில் சமச்சீர் புத்தகங்கள், முந்தைய புத்தகங்களை விட தரமானவை, எளிமையானவை, வாழ்க்கைத் தொடர்புடையவை NCF-ன் பரிந்துரைகளுக்கு இணக்கமானவை என்று தெரிவித்துள்ளதை மறுக்க முடியுமா?

சமூக வேறுபாடுகள் நிறைந்துள்ள போது ஒரே பாடத்திட்டம் பொதுப்பாடத்திட்டம் சரிவருமா என்ற கேள்வியைக் கேட்கின்ற அறிக்கை, மெட்ரிக் பாடங்களை தரம் குறைவு என்று சாடுகின்ற அறிக்கை, தனக்குதானே முரண்பட்டுக் கூறுகின்றது:

“ ……… The development of syllabus keeping Matric Board as model would be different or onerous for the students of government and government aided schools to immediately shift to higher level syllabus”

(பக்கம் 38)

மெட்ரிக்கை விட தரத்தில் குறைந்த பாடங்களே அரசு-மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளுக்குப் போது என்று கூச்சமின்றி கூறுகின்ற குழுவை, அவ்வாறு கூற வைத்த அரசை, சமச்சீர் கல்வியில் அக்கரையுள்ளவர்கள் என்று நம்ப முடியுமா?

கிராமப்புற மாணவர்களுக்காக கண்ணீர் வடித்து அவர்களுக்கென தனியாக பளுக்குறைந்த பாடத்திட்டத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது ஏன்?

பஞ்சமனும் பிராமணனும் ஒரே பள்ளியில் ஒரே பாடத்தைப் படிக்கக்கூடாது என்பதற்காகவா?

நகரத்து வசதிபடைதோனும், கிராமத்து ஏழையும் ஒரே கல்வியை பெறக்கூடாது என்பதற்காகவா?

பணக்கார முதலாளி குழந்தையும், பாட்டாளியின் குழந்தையும் ஒரே சீரான கல்வியைப் பெறக் கூடாது எனபதற்கா?

பொதுப்பாடத்திட்டம் என்பது கல்விக் கொள்ளையிக்கு பாதிப்பை உருவாக்கிவிடும் என்பதற்கா?

ஒன்பது பேர்க் குழுவின் மூலமாக பொதுமைக்கு எதிரானவர்கள் மெட்ரிக் முதலாளிகளது பேராசைகள் ஆய்வுகளாக திரிக்கப்படுகின்றன.

இந்த ‘வல்லுநர்’ குழுவின் தந்திரங்களை

குறைகளை மட்டுமே தேடுவதை

குறைகளை குற்றங்களாக சித்தரிப்பதை

மெட்ரிக்-கிராமப்புறம் முரண்பாடுகளை நியாயப்படுத்துவதை,

மிகைப்படுத்தல்களை, தேவையற்ற பொருந்தாத அலகுகளை

பொதுக்கல்வித்திட்டதிற்கு எதிரான சதி என்பதை நீதிமன்றம் உணர்ந்து நல்ல தீர்ப்பை வழங்கும் என எதிர்ப்பாக்கிறோம்.

ஆனால், இது வெறும் புத்தகப்பிரச்சனையல்ல, சட்டப்பிரச்சனையல்ல, அரசியல் காழ்ப்புப் பிரச்சனையல்ல,வன்ம அரசியல் மட்டுமல்ல

வர்க்க அரசியல்,

சாதி அரசியல்

கல்வி வணிக அரசியல்

அனைத்திற்கும் மேலாக

சமச்சீர் கல்வி – பொதுப்பாடத்திட்டம் – பொதுப்பாட நூல்கள்

என்பவையெல்லாம்

சமூக நீதிப்பிரச்சனை,

மக்கள் பிரச்சனை!

மக்களது விழிப்பும், துடிப்பும், முனைப்பும்தான் மக்கள் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வளிக்கும்!

அ.கருணானந்தன்

வரலாற்றுத்துறைத் தலைவர்(ஓய்வு)

விவேகானந்தா கல்லூரி

சென்னை

நன்றி: புமாஇமு

One thought on “பொதுப்பாடத்திட்டம் – சில வினாக்களும் விளக்கங்களும்

  1. பல நியாயமான கருத்துகளைக்கொண்ட மக்களை விழிப்படைய செய்யும் அருமையான பதிவு உங்களது பணி தொடரட்டும்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s