கடந்த பத்து நாட்களாக நடைபெற்றுவந்த உண்ணாவிரதப் போராட்டம் ஜெயாவின் வாக்குறுதிகளை நம்பி முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அரசுசாரா அமைப்புகள் அணு உலைகள் ஆபத்தானவை என்று கூடங்குளம் பகுதிகளில் மக்களிடையே செயல்பட்டு வந்திருக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அதனைத் தொடந்து அணு உலைகள் வெடித்துச் சிதறியதும் அந்த மக்களிடையே மிகுந்த பய உணர்வை தோற்றுவித்தது. அதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் இங்கும் நடந்தால் என்ன நடந்தது என்பதை உணர்வதற்குக் கூட நாம் மிச்சமிருக்க மாட்டோம் எனும் அச்ச உணர்வே அவர்களை போராட்ட உணர்வுக்குள் உந்தித் தள்ளியிருக்கிறது.
அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மைய அரசுக்கு அனுப்பிவைத்தால் அதற்கு என்ன மதிப்பிருக்கும் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இரண்டு நாட்களுக்கு முன்னர் அணு உலை பாதுகாப்பாகவே இருக்கிறது, மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அறிக்கைவிட்ட ஜெயாவை உள்ளாட்சித் தேர்தல் ஞாபகங்களே தீர்மானம் நிறைவேற்றும் உணர்வுக்குள் உந்தித் தள்ளியிருக்கும் என்பதில் யாருக்கும் ஐயமிருக்கப் போவதில்லை. மட்டுமல்லாது தினம் ஒரு ஓட்டுக் கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதமிருந்த மக்களை பார்த்து முழக்கமிட்டதிலும் இந்த உணர்வைத்தவிர வேறு ஒன்றும் தொழிற்பட்டிருக்காது என்பதிலும் ஐயமொன்றுமில்லை.
வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் என்று உலக நாடுகளை மூன்றாக பிரித்திருக்கிறார்கள். இதில் வளர்ச்சியடைந்த வல்லாதிக்க நாடுகள் எதிலும் கடந்த முப்பது ஆண்டுகளில் புதிதாக எந்த அணு உலையும் தொடங்கப்படவில்லை. உலகிலேயே யுரேனிய வளம் அதிகம் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலை கூட கிடையாது. வளரும் நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளிலுமே மின்சார பற்றாக்குறையை சமாளிக்க என்று காரணம் கூறிக் கொண்டு தொடர்ச்சியாக அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க, ரஷ்ய ஏகாதிபத்தியங்கள் பனிப்போரின் போட்டியால் உருவாக்கி குவித்து வைத்திருக்கும் அணு ஆயுத அழிவுச் சமன்பாடுகளை உலகிற்கு விற்பதற்காக மின்சாரத்தை காரணமாகக் காட்டி உலக நாடுகளின் தலையில் அணு தொழில் நுட்பங்களை இறக்கி வருகின்றன. வல்லரசு கனவில் இந்த நாடுகளும் மின்சாரம் எனும் திரை மறைவில் அணு ஆயுதங்களை பிரசவிக்கின்றன.
மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணுத் தொழில் நுட்பம் சிறப்பான பங்களிப்பைச் செய்யும் என்று எந்த அறிவியலாளரும் ஒப்புக் கொண்டதில்லை. உலகம் முழுவதிலிருக்கும் மொத்த அணு உலைகளும் அவற்றின் மொத்தத் திறனில் சிக்கலின்றி மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும், மொத்த உலகத் தேவையில் 17 நூற்றுமேனியை (சதவீதம், விழுக்காடு) மட்டுமே நிறைவு செய்திருக்கும். ஆனால் அந்த 17 நூற்றுமேனி மின்சாரத்தை உற்பத்தி செய்ய; மரபுசார்ந்த தொழில்நுட்பங்களின் மூலம் 70 நூற்றுமேனி மின்சாரத்தை உற்பத்தி செய்ய எவ்வளவு செலவு செய்திருக்க் வேண்டுமோ அந்த அளவுக்கு செலவு செய்தாக வேண்டும். மட்டுமல்லாது, அணுநுட்பத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதினால் ஏற்படும் கழிவுகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பாதுகாத்தாக வேண்டும். அணுநுட்பத்தை ஆதரிக்கும், ஏகாதிபத்தியங்களுக்கு அடிவருடும் எந்த அயோக்கியர்களும் இந்தக் கழிவுகளைப் பாதுகாக்க என்ன வழிமுறையை வைத்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாக மக்களுக்கு அறிவித்ததில்லை. இதற்காக ஆகும் செலவுகளையெல்லாம் கொண்டு கூட்டிப்பார்த்தால் இந்தியா போன்ற நாடுகள் மின்சாரத்திற்காக அணுநுட்பத்தை பயன்படுத்துவது, வெளிச்சம் இல்லை என்பதால் கூரையை எரிப்பதைவிட படு முட்டாள்தனமான செய்கை.
அமெரிக்காவின் மூன்றுமைல் தீவு விபத்தும், ரஷ்யாவின் செர்னோபில் விபத்தும், ஜப்பானின் புக்குஷிமா விபத்தும் நிகழ்வதற்கு முன்னர் மிக்குயர் திறன் கொண்ட பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்தி வருகிறோம் என்று தான் உலகிற்கு கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நிகழ்ந்த பின்போ, எதிர்வரும் தலைமுறைகளும் கதிர்வீச்சின் கோரத்தில் சிக்கிக் கொண்டிருப்பதை மீட்க எதுவும் செய்ய இயலாமலிருக்கிறார்கள், முயலாமலுமிருக்கிறார்கள். மக்களின் இருப்பையே அசைத்துப் பார்க்கும் இதில் பாதுகாப்பு அமைப்புகளில் இவர்கள் காட்டும் அலட்சியம் எந்த எண்ணத்தில் இருந்து முளைக்கிறது? எந்த எல்லை வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும் கட்டுப்படுத்த முடியாத இந்த நுட்பங்களை உலகெங்கும் ஏற்றுமதி செய்யத் தூண்டிய அடிப்படை என்ன? பிரதமரோ, முதல்வரோ அல்லது யாரோ சில அதிகாரிகளோ தந்து செல்லும் சில உறுதி மொழிகளால் அமைதியடைந்துவிட முடியுமா? ஆபத்து எனும் அச்சம் மட்டும் இது போன்ற போராட்டங்களுக்கு உரமாயிருக்க போதுமா? ஆனால், இடிந்தகரையில் தன்னார்வக் குழுக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு, 127 பேர் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாவிரதமும் ஆயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரதமும் பாதுகாப்பு பயங்களைத் தாண்டி மேலெழுந்து வரவே இல்லை.
1986 ல் நடந்த செர்னோபில் விபத்தின் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே 1988ல் கோர்பசேவ் ராஜிவ் காந்தி இடையே அதே அணுநுட்பத்தில் கூடங்குளம் அனு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அணு தொழில் நுட்பத்திலும் கணநீர் பயன்பாட்டிலும் ஏற்றுமதி செய்யும் தகுதியுள்ள நாடாக இருந்தும், காலாவதியான தொழில்நுட்பம் அணு ஆற்றல் ஒப்பந்தம் எனும் பெயரில் இந்தியாவின் மீது திணிக்கப்படுகிறது. போபால் நச்சுவாயு கசித்து கொத்துக் கொத்தாய் மக்கள் மடிந்து விழுந்து கொண்டிருக்கும் போது அதற்கு காரணமானவனை பாதுகாப்பாக தப்பிக்க வைத்த நாடு இது. அதே அடிச்சுவடியில் அணு விபத்து நடந்தால் அந்த தொழில்நுட்பத்தை தந்தவர்கள் இழப்பீடு எதுவும் தரவேண்டியதில்லை என்று சட்டம் வகுக்கிறார்கள். இவைகளின் பின்னாலிருக்கும் அரசியல் காரணங்களை வரித்துக் கொள்ளாமல், அழிந்து விடுவோம் எனும் அச்சம் மட்டும் பேரளவான நிதித் திட்டமிடலுடன் நடத்தப்படும் இது போன்ற திட்டங்களுக்கு எதிரான ஆயுதங்களைத் தந்துவிடுமா?
மின்சாரம் எனும் இன்றியமையாத தேவையின் பின்னே மறைந்து வரும் மறுகாலனியாக்கத்தை நிகழ்விலிருந்தே கண்டு கொள்ளலாம். இருக்கும் மின்சாரத்தை மக்களுக்கு வெட்டி விட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொட்டிக் கொடுப்பதை தொழில் வளர்ச்சி என்று நம்பச் சொல்கிறார்களே, அதன் மீது கேள்வி எழுப்பாத யாருக்கும் மின்சாரத்தின் பின்னிருப்பதை அறிவதில் துல்லியமிருக்காது. அதனால் தான் அணு உலைகளின் பாதுகாப்பு மட்டுமே முதன்மைப்படுத்தப் படுகிறது. கடந்த பத்து நாட்களில் ஒருமுகப்பட்ட மக்கள் ஓட்டுக் கட்சிகளின் வாக்குறுதிகளில் ஒதுங்கிவிடலாகாது. அடுத்த சுற்றுக்கு ஆயத்தமாவோம். அப்போது உண்ணாமல் அமர்ந்துவிடாமல் நம் அரசியலைக் கூர்தீட்டி எழுந்து நிற்போம், அதிகார ஆயுதம் வைத்திருப்போரை பதில் கூறவைப்போம்.
One thought on “கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?”