வாச்சாத்தியைக் குதறிய வெறிநாய்களை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிப்போட உத்தரவு

மறந்து போய்விட்ட வாச்சாத்தி வழக்கு கடந்த சில நாட்களாக மீண்டும் வலம் வரத் தொடங்கியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டிய தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது.  தீர்ப்பை கேட்கத் திரண்டிருந்த வாச்சாத்தி மக்களில் ஒருவர் கூறினார், “இருபது ஆண்டுகள் காத்திருந்து விட்டோம் இரண்டு நாட்கள் காத்திருப்பதில் ஒன்றும் பிரச்சனையில்லை” இத்தனை ஆண்டுகள் கடந்து வந்தாலும் அனைவரையும் குற்றவாளிகள் என அறிவித்திருப்பதில் பலர் அமைதி கொள்ளலாம். ஆனால் இந்த தீர்ப்பில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முதன்மையான அம்சம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

அய்யா ஆட்சியில் செய்ததை அம்மா நீக்குவதும்,  அம்மா ஆட்சியில் செய்ததை அய்யா நீக்குவதும் இங்கு வழக்கமானது. ஆனால் 1992ல் அம்மா ஆட்சியில் நடந்த இந்தக் கோரத்தை மறைக்கவும், வழக்கை நீர்த்துப் போகச் செய்யவும் அம்மாவும் அய்யாவும் ஒற்றுமையாய் செயல்பட்டிருக்கிறார்கள்.  அதிகாரவர்க்கமும் ஆட்சியாளர்களும் ஒன்றாய் கைகோர்த்து மக்கள் மீது பாய்ந்து பிராண்டுவது தான் ஆட்சியாக, நிர்வாகமாக, அரசியலாக பய்ணப்பட்டு வந்திருக்கிறது.  நீதிமன்றத்தில் புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்துவதென்றாலும், பரமக்குடியில் தாண்டவமாடுவது என்றாலும், நிகழ்வுகள் வேறாக இருந்தாலும், ஆட்சியாளர்கள் வேறாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான். அரசை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் தான்.  இதுதான் வாச்சாத்தியிலும் நடந்திருக்கிறது எனும் போது, அம்மாவாக இருந்தாலும், அய்யாவாக இருந்தாலும் ஒன்றுதான்.

தொன்னூறுகளில், வீரப்பன், சந்தன மரம் போன்ற சொற்களெல்லாம் நாளும் உச்சரிக்கும் சொற்களாக இருந்தன.  காடுகளில் மறைந்து திரிந்த வீரப்பன் எனும் கொள்ளையனுக்கு கோடிகோடியாய் கொட்டிக் கொடுக்கும் சந்தன மரக் கடத்தலும், யானைத் தந்தங்களும் ஏன் தேவைப்பட்டது? எனும் கேள்வி எழுப்பப்படாமலேயே அவனை திட்டமிட்டுக் கொன்றதுடன் முடிந்துவிட்டது. பழங்குடி மக்கள் காடுகளில் இருந்தவரை வீரப்பன்கள் உருவாகவில்லை.  காடுகளின் ஓர் அங்கமாகவே இருந்த பழங்குடியினர் காடுகளை விட்டு துரத்தப்பட்டது தான் வீரப்பன்களுக்கு பலனில்லாத்போதும் வீரப்பன்களை உருவாக்கியது.

47ல் 40 நூற்றுமேனியாக இருந்த காடுகள் வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்ததும் 17 நூற்றுமேனியாக சுருங்கிப் போனது.  வாச்சாத்தியும் இதனுடன் இணைந்தது தான். தர்மபுரி மாவட்டத்தின் சித்தேரி மலையடிவாரத்தில் இருப்பது தான் வாச்சாத்தி கிராமம். விவசாயமும், காடுகளில் சுள்ளி பொறுக்குதலும், கூலி வேலையுமே அந்த பழங்குடிகளின் வாழ்வாதாரம்.  இவர்களைத்தான் சித்தேரி காடுகளின் சந்தன மரங்களை வெட்டிக் கடத்த வனத்துறையினரும் காவல் துறையினரும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  பணம் அதிகமாக கிடைத்தாலும் நமக்கு இது பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த அவர்கள் ஒரு கட்டத்தில் மரத்தை வெட்டிக் கடத்த மறுக்கிறார்கள். 1992 ஜூன் 19 ல் வனத்துறையினர் சமாதானம் பேச ஊருக்குள் செல்கிறார்கள் என்றாலும் மக்கள் உறுதியாக மறுத்துவிடவே, மறுநாள் ஜூன் 20ம் தேதி வாச்சாத்தி மக்கள் சந்தன மரத்தை கடத்துவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், சோதனை போடும் அதிகாரத்துடன் வந்திருப்பதாகவும் கூறிக் கொண்டு வனத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை மூன்றும் வாச்சாத்தியை சுற்றி வளைக்கிறது.

அன்றிலிருந்து மூன்று நாட்கள் வாச்சாத்தி அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.  அனைவரையும் ஒன்று திரட்டி ஒரே இடத்திற்கு கொண்டு வந்தார்கள். ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரும் அடித்து நொறுக்கப்பட்டார்கள். சேமித்து வைத்திருந்த தானியங்கள் வீதிகளில் கொட்டப்பட்டன.  சேர்த்து வைத்திருந்த பணம், தங்கம் போன்றவை திருடப்பட்டன.  குடிநீர் கிணற்றில் பெட்ரோலும், மண்ணெண்ணையும் கலந்து பாழக்கப்பட்டது.  ஆண்களை நிர்வாணப்படுத்தி ஒருவர் சிறுநீரை மற்றவர் குடிக்குமாறு துன்புறுத்தப்பட்டனர். எல்லாவற்றுகும் மேலாக 18 பெண்கள் கூட்டாக வன்புணர்ச்சி செய்யப்பட்டார்கள். அவர்களின் ஆடு கோழிகளை அடித்து சாப்பிட்டு விட்டு அமைதியாக சந்தனக் கட்டைகளை அடுக்கிவைத்து அதன் முன் ஊர் மக்களை நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டு வன்புணர்ச்சி செய்யப்பட்ட 18 பெண்கள் உட்பட 90 பெண்களையும், 15 ஆண்களையும்,  28 குழந்தைகளையும் கைது செய்து அழைத்துக் கொண்டு அந்த அரச பயங்கரவாத வெறிநாய்கள் வெளியேறிபோது 34 பேர் கொல்லப்பட்டிருந்தனர், 28 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.

ஜூலை ஏழு வரை இப்படி ஒன்று நிகழ்ந்ததாக யாருக்கும் தெரியாது.  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மூலமாக அறைகுறையாக செய்திகள் வெளிவருகிறது.  அன்றைய சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை அரூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுக்க புகார் பதிவு செய்யப்படவே இல்லை.  பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம் தலைமையில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இது குறித்து விசாரணை கமிசன் அமைத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அரசைப் பணித்தது.  இதனால் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையாளர் பாமதி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி நீதி மன்றத்திடம் அறிக்கை சமர்ப்பித்த பிறகே நீதி மன்றம் வழக்கை பதிவு செய்யுமாறு ஆணையிட்டது. ஆனாலும் வழக்கை நடத்தவே வாச்சாத்தி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.  தமிழ்நாடு காவல்துறை வழக்கை நீர்த்துப்போக வைக்கும் முயற்சிகளில் இறங்க சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று போராடினார்கள்.  கிருஷ்ணகிரி நீதி மன்றத்திற்கும் தர்மபுரி அமைர்வு நீதிமன்றத்திற்கும் மாற்றி மாற்றி இந்த வழக்கு பந்தாடப்பட்டது, மட்டுமல்லாது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளும் தொடர்ந்து மாற்றப்பட்டனர். ஆனாலும் பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்கள் ஒவ்வொருமுறை நீதிபதி மாறும் போதும் தங்கள் கூலி வேலை செய்தே வாழமுடியும் என்ற நிலையிலும் தயங்காமல் வந்து நடந்ததைக் கூறி போராடினார்கள்.  அதிகாரிகள் தரப்பிலிருந்து வழக்கை இழுத்தடிக்கும் அத்தனை முயற்சிகளையும் எதிர்கொண்டே இந்த தீர்ப்பு வந்திருக்கிறது.

 

12 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்

269 நபர்களில், வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே மரணமடைந்து விட்ட 54 பேர் தவிர ஏனையவர்களுக்கு அவரவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக 3 ஆண்டுகளும், குறைந்தபட்சமாக 9 மாதங்களும் கடுங்காவல் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். குமரகுரு தீர்ப்பளித்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தாலும், பத்து ஆண்டு, ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட17 பேர் மட்டுமே சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.  மீதமுள்ள 198 பேருக்கும் 3 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை என்பதால் பிணை வழங்கப்பட்டு வெளியில் விடப்பட்டுள்ளார்கள்.

அனைவரும் தண்டனை அடைந்து விட்டனர் என்பதோடு முடிந்துவிடும் விசயமல்ல இது. இப்போது வழங்கப்பட்டிருக்கும் தண்டனை அவர்கள் செய்த வன்கொடுமைக்கும், வன்புணர்ச்சிக்கும், தாகுதலுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் திடீரென அவர்கள் ஊருக்குள் புகுந்து அத்துமீறி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் முக்கியமான கேள்வியே அவர்கள் அதை ஏன் செய்தார்கள் என்பது. அதை நீதிமன்றம் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறது.  அதாவது, அந்த பழங்குடி மக்கள் சந்தன மரம் கடத்தினார்கள், அதை தடுக்கப் போன அதிகாரிகள் கொஞ்சம் வரம்பு கடந்து விட்டார்கள் அவ்வளவு தான். இது தான் நீதி மன்றத்தின் பார்வை. இவ்வளவு பெரிய அநீதி நடந்திருக்கிறது என்பதை விசாரிக்கும் போது இது ஏன் நடந்தது எனும் கேள்வியே எழாமல் தண்டனையளிக்க முடியும் என்றால், அந்த மக்களைப் பற்றி நீதி மன்றத்தின் பார்வை என்ன?  சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை சிபிஐ எடுத்து நடத்தக் கோரும் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பத்மினி ஜோசுதுரை சொன்ன காரணம் ”பொறுப்புள்ள அரசு அதிகாரிகள் இதுபோன்ற நடந்திருக்க வாய்ப்பில்லை“ என்பது.  இரண்டு நீதிபதிகளின் பார்வையிலும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.  தொடக்கத்தில் இது மக்கள் கவனத்திற்கு செல்லாது எனும் நிலையில் பொறுப்புள்ள அதிகாரிகள் இப்படி நடக்கமாட்டார்கள் என்று கூறிய நீதிபதி, எல்லா ஆதாரங்களும் அம்பலப்பட்டுவிட்ட நிலையில் வேறு வழியின்றி இன்னொரு நீதிபதி தண்டனை அளித்திருக்கிறார்.

அரசு அதிகாரிகளின் அரசின் குணமாகவே இது இருக்கிறது. மக்களைப்பற்றி யாதொரு கவலையும் இன்றி நாட்டின் வளங்களை கொள்கை ரீதியிலும் தனிப்பட்ட முறையிலும் தனியாருக்கு வாரிக் கொடுப்பது.  அதற்கு உடன்பட மறுத்தாலோ, எதிர்த்தாலோ தீவிரவாத முத்திரை குத்தி பசுமை வேட்டை போல இராணுவத்தை ஏவி கொன்றொழிப்பது, அல்லது போலி மோதல் கொலைகளில் சுட்டுக் கொல்வது. வாச்சாத்தி போல வெகுசில வழக்குகளிலேயே உண்மை வெளிவருகிறது. ஏனையவைகளில் தேசபக்தி முழக்கங்களில் குளிக்க வைத்து ஊடகங்கள் மக்களின் எதிர்ப்புணர்வில் மஞ்சள் பூசி விடுகின்றன.

என்ன சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்கும், ஒன்றிணைந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தெளிவிப்பதற்கும் மீண்டுமொரு வாய்ப்பாக இந்த வழக்கு வாய்த்திருக்கிறது.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

4 thoughts on “வாச்சாத்தியைக் குதறிய வெறிநாய்களை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிப்போட உத்தரவு

  1. செய்திகளை அருமையாக தொகுத்து, அரசையும், அதிகார வர்க்கத்தையும் அம்பலப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  2. என்ன சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்கும், ஒன்றிணைந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தெளிவிப்பதற்கும் மீண்டுமொரு வாய்ப்பாக இந்த வழக்கு வாய்த்திருக்கிறது.
    —————————————————————————————–

    Evolution of Revolution:

    வரலாறு படைக்கும் “புரட்சி” உருவாக்க :

    028:004.Pharaoh became mighty in the land, and he turned its people into factions; he oppressed a group of them by killing their children and raping their women. He was of those who corrupted.

    028:005.And We wanted to help those who were oppressed in the land, and to make them leaders, and to make them the inheritors.

    quranist@aol.com

  3. அதிகார வர்க்கம் இருக்கும் வரை,வாச்சாத்திகளும் இருக்கும்!

    http://suraavali.blogspot.com/2011/09/blog-post_30.html

    இவ்வளவு பெரிய பயங்கரவாத, பாலியல் தாக்குதலை இந்த அளவுக்கு திட்டமிட்டு,இவ்வளவு பேரை திரட்டி செய்ய முடிகிறது என்றால்,இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுதான் இது பற்றி தெரியுமா? இவர்களின் மேலதிகாரிகளுக்கு இது பற்றி எதுவுமே தெரியாதா? அப்போது இருந்த அரசுக்கும் தெரியாதா?இவர்களுகெல்லாம் தெரியாமல்தான்,இவர்களுக்கு உடன்பாடு இல்லாமல்தான்,இவர்களின் அனுமதி இல்லாமல்தான் இப்பயங்கரவாத பாலியல்தாக்குதல் நடத்தப்பட்டது என்றால் இவர்களை பாதுகாக்க இவர்களின் உயர் அதிகாரிகளும்,அரசாங்கமும் முயன்றது எதற்காக? இப்படி இவர்களை பாதுகாக்க முயன்றது குற்ற நடவடிக்கையா இல்லையா? இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை, யார் கொடுப்பது?
    இப்படிப் பட்ட சம்பவங்கள் வாச்சாத்தியோடு முடிந்துவிட்டதா அல்லது முடிந்துவிடுமா? அண்மையில் பரமக்குடியில் இதே போன்ற திட்டமிட்ட தாக்குதல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்டதே! அது எந்த வகையான தாக்குதலாம்?

  4. தோழர் செங்கொடி ,
    அருமையான ஆய்வு, உண்மையில் வாச்சாத்தி வழக்கு அதன் காரணம் ஆகியவற்றை அனைவருக்கும் புரியும் வகையில் அளித்திருக்கிறீர்கள். இந்த வாச்சாத்தி தீர்ப்பு என்பது நீதிமன்றம் அம்மக்கலுக்கு அளித்த அநீதி. குற்றம் நிரூபிக்கப்படாத அப்சல்குரு, பேரறீவாளான், சாந்தன் முருகன் ஆகியோருக்கு தேசத்தின் மனசாட்சியை காக்க தூக்கு. அதே தேசத்தின் மனசாட்சியை காக்க 17 பேருகு மட்டும் கடுங்காவல், 198 பேருக்கு உடனடி பிணை. என்ன ஒரு அயோக்கியத்தனம். அரசின் உறுப்புக்களான போலீசு ராணுவம் நீதிமன்றம் என அனைத்தும் உழைக்கும் மக்களுக்கு எதிராக இருப்பதை இத்தீர்ப்பு தெளிவாக்கியிருக்கிறது.

    பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 15000 வழங்கிய நீதிபதியின் மேன்மை யாருக்கு வரும், இதே பாப்பாத்திகளோ, அம்பானி புதல்விகளுக்கோ இச்சம்பவம் நடந்திருந்தால் உடனே குற்றவாளிகளை தூக்கில் போட உண்ணாவிரதம் இருப்பார்கள் காந்தியின் தவப்புதல்வர்கள்.

    ஆம் பாதிக்கப்பட்டது இந்த தேசத்தின் புதல்வர்கள் அல்லவா

    தோழமையுடன்

    கலகம்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s