இன்றைய தேதியில் இந்தியாவில் ஊழல் தான் செல்லுபடியாகும் சரக்கு. அதனால் தான் அன்னா ஹஸாரே முதல் அத்வானி வரை அதைக் கொண்டு கல்லா கட்ட துடிக்கிறார்கள். இவர்களின் ஊழல் ஒழிப்பு நாடகங்களில், ஊழல் ஒழிப்பைத் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது. ஏற்கனவே அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்ட ரத யாத்திரை நடத்தி பலருக்கு கல்லறை கட்டிய அனுபவம் இருப்பதால் இப்போது ஊழலுக்கு கல்லறை கட்ட ரத யாத்திரை நடத்தி அதற்கு கோவில் கட்டி எழுப்புவார் என எதிர்பார்க்கலாம்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப் பயணம் நடத்தி சில ஊர்களில் பேசிவிட்டால் அது ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாகிவிடும் என்றால், இந்தியாவில் ஊழல் என்ற வார்த்தையே யாருக்கும் தெரியாதவாறு அழிந்து போயிருக்கும். அந்த அளவுக்கு எந்தவித பேதமும் இல்லாமல் அனைத்து ஓட்டுக் கட்சி அரசியல் வியாதிகளும் பாகம், பாகமாக ஊழல் ஒழிப்பு குறித்து பேசியிருக்கிறார்கள். ஆனால் நாற்பதுகளில் சில ஆயிரங்களில் இருந்த ஊழல் இன்று பல லட்சம் கோடிகளாக வளர்ந்திருக்கிறது. இந்த ஜன் சேத்னா ரத் யாத்ரா தன் 38 நாள் உழவை முடித்ததும் ஊழல் பயிர் எவ்வளவு மகசூல் காணுமோ.
இப்போதே இந்த யாத்திரைக்கு பாஜக தலைவர்கள் அதிக அக்கரை காட்ட வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ் உத்தரவு போட்டிருக்கிறது. ஏற்கனவே ஊழல்களால் காங்கிரஸ் சரிவை கண்டிருக்கும் வேளையில், மோடி மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன்னை தேசிய அளவில் உயர்த்தி காட்ட முயன்றிருக்கிறார். செய்தி ஊடகங்கள் குஜராத்தை உள்நோக்கத்துடன் கொண்டாடி வருகின்றன. இந்தநிலையில் தாம் ஏதாவது செய்யாவிட்டால் பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் தம் கனவுகள் திரிசங்கு வானத்தில் தான் மிதக்கும் என்று தெரியாதவரா அத்வானி. அதனால் தான் கிளம்பிவிட்டர் ரதத்திலேறி. ஆனால் மக்கள் முட்டாள்களல்லவே.
என்ன சொல்ல வருகிறார்கள் இந்த ரத யாத்திரை மூலம்? சில நாட்கள் ரத யாத்திரை நடத்தி ஊழலை ஒழித்து விடுமளவுக்கு ஊழல் என்பது சதாரணமானது தான் என்கிறார்களா? அல்லது ஊழல் குறித்து மக்களுக்கு என்ன விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறார்கள்? ஊழல் செய்து கொண்டிருக்கும் ஊழல்வாதிகள் அந்த ஊழல்களால் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து நிற்கும் மக்களிடம் ஊழலுக்கு எதிராக என்னவிதமான பரப்புரை செய்வார்கள்? ரதமாக மாற்றப்பட்டபேருந்தில் லிப்ட் உதவியுடன் கூரையில் ஏறி நின்று ஸ்விஸ் வங்கிகளில் இருக்கும்பணத்தை கொண்டுவந்தால் இந்தியக் கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தலாம், சாலை போடலாம், பள்ளிக் கூடம் கட்டலாம். ஆனால் இன்றைய காங்கிரஸ் அரசு ஆதர்ஸ், காமன்வெல்த், 2ஜி என ஊழல் செய்து கொண்டிருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார். சரி, பாஜக ஆளும்போது என்ன செய்தது? சவப்பெட்டி ஊழல் தொடங்கி எதியூரப்பாவின் நிலபேர ஊழல் வரையான கல்வெட்டுக்களை என்ன செய்வது? மைய அரசிலோ, மாநிலங்களிலோ ஊழல் செய்யாத ஆட்சி எது? ஊழல் செய்யாத கட்சி என்று ஏதாவது உண்டா? இங்கு இருப்பதெல்லாம் இரண்டே வகை. ஒன்று, ஊழல் செய்து மாட்டியவர்கள், இன்னொன்று, இன்னும் மாட்டாதவர்கள். இதில் யாருக்கு யார் படம் காட்டுவது?
2ஜி, ஆதர்ஸ், காமன்வெல்த், சவப்பெட்டி, போபர்ஸ் இவை மட்டும் தான் ஊழலா? இது வரை ஊழலுக்காக தண்டிக்கப் பட்டவர்கள் எத்தனை பேர்? கையூட்டு பெற்றதாய் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அதை ஊழலாக கொள்வதற்கு நமக்கு கற்றுத் தருகிறார்கள் இவர்கள். பொதுச் சொத்தை கொள்ளையடிக்கும் அத்தனையும் ஊழல் தான். அந்த வகையில் இந்த அரசும், இந்த அரசின் கொள்கையுமே ஊழல்தான். தமிழகத்தில் நோக்கியா நிறுவனத்திற்கு, குஜராத்தில் நானோ கார் தொழிற்சாலைக்கு தொழில் தொடங்க அந்தந்த நிறுவனங்கள் முதலீடாக போட்ட தொகையைவிட அதிகமாக மக்கள் வரிப்பணம் சலுகையாக கொட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை முன்னேற்றம் என்பவர்கள் திட்டம் போட்டோ, சட்டம் போட்டோ, ரதயாத்திரை நடத்தியோ ஊழலை என்ன செய்வார்கள்? 2ஜியில் நாட்டுக்கு இரண்டு லட்சம் கோடி இழப்பு என்று கூறியவர்கள் இதுவரை இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டதில் எத்தனை லட்சம் லட்சம் கோடிகள் நாட்டிற்கு இழப்பு என்பதை கணக்குப் பார்க்கட்டும். இவைகளை ஏன் ஊழலாக காண மறுக்கிறார்கள். கடந்த ஓரிரு ஆண்டுகளில் மட்டும் நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளபடி ஐந்து லட்சம் கோடி முதலாளிகளுக்கு சலுகையாக கொடுத்திருக்கிறார்கள். இவைகளை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
இன்னும் சாலை காணாத கிராமங்களுக்கு, மின்சாரம் பாயாத கிராமங்களுக்கு, கல்விக் கூடங்கள் நுழையாத கிராமங்களுக்கு ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை கொண்டுவந்தால் தான் முடியும் என்றால் தனியார் கல்லூரிகளும், தொழிற்சாலைகளும் மின்சாரத்தில் குளித்து பளபள சாலைகளில் தலை வாருவது எப்படி? ஸ்விஸ் வங்கிகளில் பணத்தை கருப்பாக பதுக்கி வைத்திருப்பவர்கள் யாவர்? நாட்டின் வளங்களை சுரண்டிக் கொள்ளையடிக்கும் தனியார் முதலாளிகளும், அவர்கள் வீசி எறிவதற்காய் காத்துக் கொண்டிருக்கும் ஓட்டுப் பொறுக்கிகளும் தானே. இவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் சேர்த்து வைத்திருப்பது கருப்பு வண்ணமென்றால் இங்கு குவித்து வைத்திருப்பதை என்ன வண்ணம் என்பது? நினைவிருக்கிறதா, கணக்கில் வராமல் வைத்திருக்கும் பணத்திற்கு கணக்கு காட்டுங்கள்,உங்கள் அபராதம் தள்ளுபடி செய்யப்படுவதோடு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என அறிவித்ததற்காக ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்று போற்றப்பட்டார் சிதம்பரம். ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பெயர்களை அறிவித்தால் சட்டச் சிக்கல் வரும் என்றார் மன்மோகன் சிங். பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பதற்காகவே தனி அமைச்சரவையை ஏற்படுத்தியது பாஜக. பங்குச் சந்தையை வீழச் செய்வோம் என்று லேசாக மிரட்டியதற்கே வைப்பு நிதியை சந்தையில் கொட்டினார் வாஜ்பாய். இவர்கள் ஊழலை ஒழிப்போம் என்று கூறினால், நாம் எந்த வாயால் சிரிப்பது?
இந்த ஓட்டுப் பொறுக்கிகள் பொழுதுபோகாமல் நடத்தும் கூத்துகளில் ஊழல் ஒழிந்துவிடும் என நம்பினால் இருக்கும் கோமணமும் களவாடப்படுவது தெரியாமல் போய்விடும். இவர்களை ஓட்டுப் போடாமல் தண்டித்துவிட்டால் திருந்தி விடுவார்கள் என்று நம்பினால் அது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் கொள்ளி. இவர்களை ஓடுமொத்தமாய் விரட்டியடிக்காதவரை ஊழல் ஒழியப் போவதும் இல்லை. மக்களுக்கான வாழ்வு மலரப் போவதும் இல்லை.
ஊழலின் அடிமட்டத்தைப் புரியவைத்து உதவியதற்கு நன்றி.
நரேந்திரமோடி, அத்வானி ஹிட்லரின் வாரிசுகள்!
மரணவியாபாரிகள்!