ஏழாம் அறிவா? ஏய்க்கும் அறிவா?

இன்றைய பொழுதுகளில் ஒரு திரைப்படத்தின் முதன்மையான கணம், அதற்கு செலவு செய்யப்படும் தொகையும், அது மடைமாற்றித் தரப்போகும் தொகையும் தான். கலை, சமூக விழிப்புணர்வு, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஏனைய பிறவெல்லாம் பின்னர் தான். இந்த வகையில் எல்லாவற்றையும் விட ஒரு திரைப்படத்திற்கு பார்வையாளர்களை ஈர்ப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இதற்கு பலவாறான உத்திகள் ஒவ்வொரு திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழாம் அறிவில் இதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்தி தமிழர் பெருமை, தமிழ் தேசியம்.

 

கிபி ஆறாம் நூற்றாண்டில் காஞ்சியில் பல்லவ மன்னர் வழிமுறையில் தோன்றிய போதிதர்மர் சீனாவுக்குச் சென்று மருத்துவ நுணுக்கங்களையும், தற்காப்புக் கலையையும் போதித்தார். அதுவே குங்ஃபூ வுக்கும், ஜென் தத்துவத்திற்கும் தொடக்கமாக இருந்தது. ஆனால் தமிழர்கள் இன்று அவைகளை மறந்துவிட சீனர்கள் தமிழரிடம் பெற்ற கலையை தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்துகிறர்கள். இதுதான் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மையக் கரு.

 

சர்கஸில் வேலை செய்துயும் கதாநாயகன் இடையிடையே காதாநாயகியை காதலித்து பலநாடுகளின் கடற்கரைகளில் பாட்டுப்பாடி கடைசியில் வில்லனை அடித்து நொறுக்கி வெற்றிக் கொடிகட்டும் ஒரு சராசரி திரைப்படத்தினை பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகன் தமிழன் என்பதால் பெருமித உணர்வு கொள்கிறான். இதற்கு திரைப்படக் குழுவினருக்கு கை கொடுத்திருப்பது, வரலாற்றிலிருந்து உருவப்பட்ட ஒரு வரியும், ”தமிழன் மலேசியாவில் அடிபட்டான், இலங்கையில் அடிபட்டான், இப்போது தமிழ்நாட்டுக்குள்லேயே வந்து அடிக்கிறான்” ”ஒன்பது நாடுகள் சேர்ந்து தமிழன அடிச்சா அதுக்குப் பேரு வீரமில்லை, துரோகம்” ”மஞ்சளை விளைவிக்காத நாடுகளெல்லாம் மஞ்சளுக்கு காப்புரிமை வாங்கியிருக்கிறது, ஆண்டாண்டு காலமாக விளைவித்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் நாமோ ஏமாந்து நிற்கிறோம்” என்பது போன்ற சில வசனங்களும். ஒருவேளை திமுகவும் கருணாநிதியும் இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு தூரோகமிழைத்து விட்டதாக எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழர்களிடம் தன்னுடைய படத்தின் மூலம் இப்படி தமிழுணர்வை ஏற்படுத்துவது அரசியல் ரீதியாக உதவும் என்று கூட இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எண்ணியிருக்கக் கூடும்.

 

சீனா இந்தியா மீது நுண்ணுயிர் போர் (பயோ வார்) நடத்துவதாக சித்தரிக்கப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் சீனா மீது கொண்டிருக்கும் கோபம். அதாவது ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள இனவழிப்புப் போரில் இலங்கை ராணுவத்திற்கு சீன செய்த உதவிகளால் சீனா மீது தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தை திரைப்படத்திற்கான ஆதரவாக திருப்பிக் கொள்ளும் நோக்கத்துடனேயே சீனா அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விசயத்தில் இந்தியா குறித்து திரைப்படம் கொண்டிருக்கும் கருத்து என்ன? இந்தியாவின் போரையே நான் நடத்துகிறேன் என்று ராஜபக்சே கூறியிருந்தது குறித்து, போரில் இந்தியாவின் பங்களிப்பின் ஆதாரங்கள் குறித்து திரைப்படம் மவுனம் சாதிப்பது ஏன்?

 

தெளிவாகக் கூறினால் இந்தியாவின் பங்களிப்பு குறித்து திரைப்படம் மவுனம் சாதிக்கவில்லை, மறைக்கிறது. மறைப்பதோடு மட்டுமின்றி ஆதரவாக திரிக்கிறது. போதிதர்மரின் அறிவை இன்றைய தமிழர்கள் மீளப் பெறவேண்டும் என்று திரைப்படத்தில் போதிக்கப்படுவது எதற்காக? சீனா இந்தியா மீது தொடுத்திருக்கும் நுண்ணியிர் போரை எதிர்கொள்வதற்காக, சீனாவின் திட்டத்தை இந்தியா முறியடிக்க வேண்டும் என்பதற்காக. ஆக, ஈழத்தமிழர்களை கொன்றழித்த போருக்கு திட்டமிட்டு உதவிய இரண்டு நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வைத் தூண்டிவிட்டு அதை ஒரு நாட்டுக்கு ஆதரவாகவும் இன்னொரு நாட்டுக்கு எதிராகவும் திருப்புவதைத்தான் திரைப்படம் தமிழர்களிடம் கோருகிறது. இது அப்பட்டமான மோசடித்தனம் என்பதில் ஐயமொன்றுமில்லை.

 

பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களை, அதுவும் திரைப்படத்தின் சிறிய பகுதியாக வருவதை மட்டும் முழுமையாக எடுத்துக் கொண்டு இது போன்று அரசியல் நோக்கில் விமர்சிப்பது தேவையற்றது என்று கருதப்படலாம். ஆனால் திரைப்படம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அந்த சிறிய பகுதியை மட்டுமே முதன்மைப்படுத்தி விளம்பரங்களும், செவ்விகளும் செய்யப்பட்டன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மட்டுமல்லாது படத்தின் மையக் கருவே இது தான். படத்தைப் பார்த்துத் திரும்பும் ரசிகனிடம் அந்தப் படத்தின் அதிகான பகுதியாக வரும் பொழுதுபோக்கு மசலாத்தன காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட பழந்தமிழர் பெருமை தான் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறது. ஒரு திரைப்படத்தின் விமர்சனம் என்பது அந்த திரைப்படம் பார்வையாளரிடம் என்ன சொல்கிறது என்பதைத்தான் முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நேர்த்தியான படத்தொகுப்பு, திறமையான ஒளிப்பதிவு, அழகான இடங்கள், பாத்திரங்களின் நடிப்புத்திறன், உணர்வுபூர்வமான இசை போன்றவைகளை முதன்மைப்படுத்துவது, சொல்லவரும் செய்தியை தெளிவாக புரியவைக்க உதவும் அம்சங்களை எடுத்துக் கொண்டு, செய்தியை கண்டு கொள்ளாமல் விடுவது போன்றது.

அறிவியல் புனைவை கதைக் களமாக கொண்டிருக்கும் ஒரு கதையில் நோக்கத்திற்கு உதவியாக இணைந்து வரும் தொழில்நுட்ப அம்சங்கள் எவ்வளவு உயர்வானதாகவும் நேர்த்தியுடன் பயன்படுத்தபட்டிருந்தாலும் புரட்டுத்தனமான நோக்கத்தைக் கொண்டிருந்தால் அவைகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. அறிவியல் புனைவு என்றாலே தர்க்க மீறல்களை கண்டு கொள்ளக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருக்கும். என்றாலும் வெறும் நுண்ணோக்கியை வைத்துக் கொண்டு மரபணு ஏணியை பார்வையிடலாம் என்பதும், தனிப்பட்ட ஒருவர் பெற்றிருக்கும் அறிவு மரபணு வழியாக கடத்தப்படும் என்பதும், ஓரிரு நொடிகள் ஒருவரை பார்ப்பதாலேயே ஒருவரின் மூளையிலிருக்கும் சிந்தனைத் தூண்டுதல்கள் இன்னொருவர் மூளைக்குள் புகுந்து கொள்ளும் என்பதும் ’டூ மச்’சாக மட்டுமில்லை, ’ஃபோர் மச்’சையும் தாண்டியிருக்கிறது.

 

இறுதியாக இயக்குனர் பார்வையாளர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுக்கிறார். மஞ்சள் பூசுவதை ஒரு சடங்காக, கலாச்சாரமாக பரப்பாதீர்கள் அதை நச்சுக் கொல்லி எனும் அறிவியாலாக கற்றுக் கொடுங்கள் என்கிறார். அதாவது மெய்யானதை சொல்லாமல் சடங்காக, மரபாக செய்தால் காலப்போக்கில் அது மறைந்து விடும். மெய்யான பயன்பாட்டை புரியவைத்தால் மட்டுமே அது நீடித்து நிற்கும் என்று நமக்கு வகுப்பெடுக்கிறார். ஆனால் இதை அவர் பின்பற்றியிருக்கிறாரா?

 

தற்காப்புக் கலைகளிலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய தமிழன் இன்று எல்லா இடங்களிலும் அடி வாங்குகிறான் என்பது மெய்யான அரசியலா? மேலெழுந்தவாரியான உணர்ச்சியைத் தூண்டிவிடும் செயலா? ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலைக்கு ஏகாதிபத்தியங்களின் அரசியல், பொருளியல் நலன், விடுதலைப்புலிகளின் அரசியல் தவறுகள் உள்ளிட்டு பல மெய்யான காரணங்கள் இருக்கும்போது, அவைகளைப் பற்றி மறந்தும் பேசிவிடாமல், பண்டைய தமிழனின் வீரத்தையும் கலைகளையும் மறந்ததுதான் காரணம். அவற்றை தமிழன் மீண்டும் கைக்கொண்டால் திருப்பி அடிப்பதோடு மட்டுமன்றி தமிழன் என்றால் உலகிற்கு ஒருவித பயம் எழும் என்று கூறுவது மெய்யான அரசியலை மறைப்பதோடு மட்டுமன்றி, அதை அறிந்து எழுச்சி பெறவிடாமல் தடுக்கும் செயலாகவும் இருக்கிறது.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

8 thoughts on “ஏழாம் அறிவா? ஏய்க்கும் அறிவா?

  1. படத்தில் எடுத்து கொண்ட போதி தர்மர் வரலாறே ஆதாரம் அற்றது.போதி தர்மர் சீனாவில் இருந்து இங்கு வந்தவர் என்றும் ஒரு கருத்து உண்டு. இதெற்கெல்லாம் வலுவான ஆதாரங்கள் கிடையாது .போதி தர்மரால் பயிற்ருவிக்க பட்ட கலை shaolin quan (18 hands fist ) என்பது மட்டுமே. அதற்க்கும் களரி பையதுவிர்க்கும் நிறைய ஒற்றுமைகள…் உள்ளது உண்மையே. தற்காப்பு கலைகளை பொறுத்தவரை இது ஒரு சாதாரண கலையே. இதைவிட அபாரமான நுட்பங்கள் நிறைந்த தற்காப்பு கலைகள் நூற்று கணக்கில் இருக்கிறது சீனாவிலும் ஜப்பானிலும். எல்லாமே இங்கிருந்து போனது என்பது அடிப்படை அறிவில்லாதவர்களின் புரிதல். தற்காப்பு கலைகளின் அடிப்படை தெரியாதவன் எல்லாம் தற்காப்பு கலை வரலாறாக படம் எடுப்பது எல்லாம் அபத்தம்.

  2. தேவையான கட்டுரை, நான் ஒரு தற்காப்புக்கலை பயிற்சியாளர் தற்காப்பு கலையின் அடிப்படையே தெரியாத சினிமா கழிசடைகள் போதி தருமரையும், சீன தற்காப்புக்கலை வல்லுனர்களையும் இழிவுபடுத்தியிருக்கிறார்கள், சூத்திரனான போதி தருமர் அடிப்படையில் பார்ப்பன எதிர்ப்பு கொள்கையை கொண்ட அன்றை புத்த மதத்தை பரப்ப காஞ்சிவரத்திலிருந்து சீனா சென்றுள்ளார் என்ற வரலாற்றை பாதுகாத்தவர்கள் சீனர்கள் அல்லவா? அவர்கள் தானே டாமோ வின்(போதி தருமர்) உருவத்தை சரியாக தமிழனாகவே ஓவியமாகவும், சிற்பமாகவும் வடித்து வைத்துள்ளனர், இந்த டுபாக்கூர் படத்தில் சொல்லுவது போல சீனர்கள் போதி தருமரை விசம் வைத்துக் கொள்ளவேண்டிய அவசிய என்ன? போதி தருமர் சக மனிதராய் சீனர்களுக்கு போதித்தார் சீனர்களும் அவரை எந்த பாகுபாடும் பார்க்காமல் குருவாய் ஏற்றுக்கொண்டு இன்று வரை போற்றுகின்றனார் வரலாற்றை மறைக்காமல், சீனர்கள் இல்லையென்றால் போதி தருமர் என்ற ஒருவரை பற்றியே நமக்கு தெரியாது, ஒரு வேளை தமிழக்த்தலேயே போதி தருமர் வாழ்ந்து தற்காப்புக் கலைகளை பரப்பியிருந்தால் அவரை பார்ப்பனனாக மாற்றியிருப்பர், (புத்தர் சிலை வெங்கடாஜபதியாக மாறியது போல்)இப்போதும் கூட பாரதிய ஜனதா பன்றிகள் போதி தருமரை பாப்பானாக சித்தரிக்கின்றனர், வள்ளுவரையே மயிலாப்பூர் பாப்பானாக மாற்றும் பர்ப்பன பாசிஸ்டுகளுக்கு போதி தருமர் எம்மாத்திரம், ஆனால் ஒன்றை மட்டும் தமிழ் சினிமா கழிசடைகள் புரிந்து கொள்ளவேண்டும், நம்மூரில் எப்போதும் சீனாவுக்கு கிராக்கி அதிகம் உணவு, செல்போன், சந்தைபொருட்கள் மற்றும் சீன திரைப்படங்களுக்கு வரும் கூட்டம் ஆலிவுட் படங்களுக்கு வருதில்லை,

  3. வணக்கம். இக்கட்டுரையை எனது வலைப்பதிவில் பதிவேற்றியிருக்கிறேன். நன்றி.

    சங்கர் சீனிவாசன்

    http://olirumpaadhai.blogspot.com

  4. சீனாவச் சொன்னதும் பொத்துகினு வருது பார் கோவம்……..

  5. அமெரிக்கா சீனா மீது தாக்குதல் நடத்த தனது படை தளத்தை அமைக்கும் நோக்குடந்தான் தமிழர்களுக்கு இலங்கையில் ஆயுத உதவி செய்தது. இது தமிழர்கள் மட்டும் சம்மந்தபட்ட பிரச்சினை என்றால் சீனாவின் நிலைப்பாடு வேறாக இருந்திருக்கும். இந்தியா அமெரிக்காவின் கைக்கூலியாக மாறியதே சீனாவின் இந்த செயல்பாட்டிற்கு காரணம். தமிழர்களின் இழப்பிற்கும் இதுவே காரணம். நமது நாட்டிலேயே நம்மால் வாழ முடியாத போது அன்னிய நாட்டில் தமிழர்கள் படும் துயர் பற்றி என்ன பேசுவது. இலங்கைக்கு சீனா ஆயுதம் வழங்கியது என்றால், விடுதலைப்புலிகலுக்கு ஆயுதம் வழங்கியது யார்? நமது நாட்டிலிருந்து ஆயுதங்களும், ஆதரவுகளும் இலங்கை அரசுக்கு சென்றதை இந்த உலகமே அறியும் அதை மறந்தும் மறைத்ததும் ஏன்? சீன துரோகம் இருக்கட்டும் சொந்த மண்ணின் துரோகத்தை நாற்றம் என்று மூக்கை பொற்றிக்கொண்டு சீனாவை உமிழ்வது ஏன். தமிழர்கள் வாழ்ந்த யாழ்பானம் யாருக்கு தேவைப்பட்டது? யோசித்தால் இதற்கும் காரணம் அமெரிக்காதான் என்று புரியும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s