மக்கள் ஆயுதம் ஏந்துவது வன்முறையா?

கடந்த சில நாட்களாக ஓட்டுக்கட்சி அரசியல் வியாதிகள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒருவர் மாற்றி ஒருவராக கண்டன அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி தில்லியிலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்கிறார். இந்திய இளைஞர்கள் எங்கே போகிறார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார் பிரணாப் முகர்ஜி. அந்த இளைஞரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்கிறர் முலாயம். ஊழல் பஜனைவாதி ஒருவர் ஒரு அறைதானா என்று அடக்க முடியாமல் கேட்டு வைத்திருக்கிறார். இப்படி அறிக்கை மேல் அறிக்கையாக விட்டு இதை எல்லோருக்கும் தெரியும்படி விளம்பரப் படுத்துகிறார்களே என்று கவலைப்பட்டிருக்கிறார் மண்மோகன் சிங். பவார் கட்சியினரோ புனேயில் ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

 

கோபப்பட்ட பஞ்சாப் இளைஞன் ஹர்வீந்தர் சிங் சுக்ராமை அறைந்த சூட்டோடு பவாரையும் கொஞ்சம் பதம் பார்த்திருக்கிறார். அதற்குத்தான் இத்தனை பாடுகளும். ஓட்டுப் பொறுக்கிகளைத் தவிர மக்களிடம் கேட்டால் ஒரே குரலில் அடித்ததற்கான கோபம் சரி என்றுதான் கூறுவார்கள். ஆனால் அடித்த செயல் சரியா? தப்பா? என்று தான் இரண்டு விதமாக பேசுகிறார்கள், அதுவும் காந்தீய அடிப்படையில். அகிம்சையால் வென்றவர்கள் நாம், வன்முறை கூடாது என விளம்புகிறார்கள். நமக்குத் தான் எதால் சிரிப்பது என்று குழப்பம் வருகிறது.

 

இது புதியதொன்றும் அல்ல. அமெரிக்க புஷ் தொடங்கி இந்திய சிதம்பரம் வரை செருப்படியிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதற்கு டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள் தாம். துடைப்பக்கட்டை தொடங்கி மாட்டு மலம் வரை தேர்தல் காலங்களில் கண்டு வருவது தான். ஆனாலும், ஒவ்வொரு முறையும் வன்முறை, வன்முறை என்று புதிதாய் ஒச்சமிடுகிறார்கள். மக்களுக்கு எதிராக வன்முறை செய்வதையே தம் கொள்கையாய் கொண்டிருப்பவர்கள், அந்த வன்முறை தமக்கெதிராய் திரும்பும் போது மட்டும் அச்சம் கொள்வது ஏன்?

 

எது வன்முறை என்பதை எந்த அடிப்படையில் தீர்மானம் செய்வது? கன்னத்தில் அடித்தது வன்முறை என்றால் பவார் கோடிக்கணக்கான மக்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறாரே அதை என்னவென்று அழைப்பது? விவசாயிகள் தினம் தினம் செத்து மடிந்து கொண்டிருப்பது தற்கொலையா? அவை இந்த அரசு செய்யும் கொலைகளல்லவா? இதற்கு என்ன பெயர் சூட்டுவது?

 

ஒருவிதத்தில் அதை தவறு என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மக்களைத் திரட்டி மொத்தமாக அடித்து நொறுக்காமல் கன்னத்தில் மட்டும் அடித்தானே அது தவறு தான். ஓட்டுப் பொறுக்கிகள் நிறைந்திருக்கும் நாட்டில் தனியாக ஒருவனை மட்டும் அடித்தானே அது தவறு தான்.

 

எல்லா ஆயுதங்களும் தம் மீது கூர் பார்க்கப்படுவதை சகித்துக் கொண்டிருக்கும் மக்கள், வன்முறை எனும் வார்த்தை கூட தம்மீது ஆயுதமாய் இறக்கப்படுகிறது என்பதை உணராமலிருக்கிறார்கள். உணர்ந்து விட்டால் வன்முறை என்று உச்சரிக்க ஒரு வாயும் மிச்சமிருக்காது.

 

தொடர்புடைய பதிவுகள்

சு.சாமி மீது முட்டையடித்தால் சட்டம் ஒழுங்கு நாறும்

புஷ் க்கு செருப்படி

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

%d bloggers like this: