சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு, மக்கள் உயிர் குடிக்கும். போராடு

சிறு வணிகத்தில் 51 நூற்றுமேனி(சதவீதம்)  அளவிற்கு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று தீர்மானித்திருப்பதாக கடந்த வாரத்தில் அரசு அறிவித்தது. அன்றிலிருந்து, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அமளித்து வருகின்றன. அதாவது, அப்படிச் செய்தால் அன்னிய முதலீட்டை அவர்கள் எதிர்ப்பதாக மக்கள் நம்புவார்களாம். மட்டுமல்லாது கருணாநிதி, மம்தா, மாயாவதி, ஜெயா உள்ளிட்டோர் தாங்களும் அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் அரசு அன்னிய முதலீட்டால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், விலைவாசி குறையும் என்றும், சூடம் அணைக்காமல் சத்தியம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இவைகளில் உண்மையில்லை என்பதே உண்மை.

 

இப்போது அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக காட்டும் அத்தனை கட்சிகளின் செயலும் நாடகமே. எதிர்க்கட்சிகளாக இருக்கும் போது போராடுவதாக காட்டிக் கொள்வதும், ஆளும்கட்சியகும் போது அதையே நடைமுறைப்படுத்துவதும் நாம் வழமையாக கண்டு வருபவைதான். பாஜக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப் படுத்துவதற்கென்றே தனியாக ஓர் அமைச்சகத்தை ஏற்படுத்தவில்லையா? போலிகள் வங்கத்தையும் கேரளாவையும் தனியாருக்கு திறந்துவிடவில்லையா? ஜெயா ஆற்றையே தாரை வார்க்கவில்லையா? கருணாநிதி நோக்கியாக்களுக்கு முதலீட்டைவிட அதிக சலுகைகளை வழங்கவில்லையா? இவர்களா அன்னிய முதலீட்டை எதிர்ப்பவர்கள்?

 

சிறுவணிகத்தின் மீது அரசு நடத்தும் முதல் தாக்குதல் அல்ல இது. ஏற்கனவே பல்முனை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. ஈ மொய்த்த பண்டங்களை, திறந்த வெளியில் இருக்கும் பண்டங்களை வாங்கி உண்ணாதீர்கள் என்று மக்களின் உடல்நலத்தில் அக்கரை கொண்டது போல் பிரச்சாரம் செய்யும் அரசு தான், சுகாதார நடவடிக்கைகளை புறக்கணித்து ஈ மொய்க்கும், கிருமிகள் பரவும் சூழலுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பெப்சி, கோக் வகைகளில் போதை மருந்துகள் உள்ளிட்டு கெடுதல் விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலக்கப்படுவது உறுதி செய்யப்பட்ட பிறகும் அவைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது. மாம்பழங்களை கல்வைத்து பழுக்க வைக்கிறார்கள் அது உடல்நலத்திற்கு தீங்கானது என்று சந்தைக்கு வந்த பழங்களை சாலையில் கொட்டி அழிக்கும் அரசு, லேஸ் உள்ளிட்ட சிப்ஸ் வகைகளில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் வேதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்ட பிறகும் அதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? பில் போடாமல் விற்பனை செய்வது நுகர்வோரை ஏமாற்றும் குற்றவியல் நடவடிக்கை என்று மக்களை பீதியூட்டும் அரசு, பில்போட்டு கோடிகோடியாக திருடிய அம்பானிகளை என்ன செய்தது?

 

சிறுவணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும் என்று விலைவாசி உயர்வு குறித்து கவலைப்படுவது போல் அரசு நாடகமாடுகிறதே, விலைவாசி உயர்வுக்கு முதன்மையான காரணம் என்ன? அத்தியாவசியப் பொருட்கள் முதல் அனைத்தையும் ஊக வணிகத்திற்கும், முன்பேர வர்த்தகத்திற்கும் திறந்து விட்டிருப்பதும், பதுக்கலை சட்டரீதியாக அங்கீகரித்திருப்பது தானே. இதை செய்து விலைகளை ஏற்றிய அரசு அன்னிய முதலீட்டை கொண்டுவந்து விலைகளை குறைக்கப் போகிறதா? அன்னிய முதலீட்டால் விலை குறையும் என்பதும் முழுப்பூசணியை கட்டுச்சோற்றில் மறைப்பதைப் போன்றது தான்.

 

அரசு கொள்முதல் செய்வதிலிருந்து விலகிக் கொண்டு தனியார் கொள்முதல் நிலையங்களை அமைக்க அனுமதித்திருப்பதால் விவசாயிகளிடமிருந்தும், சிறு உற்பத்தியாளர்களிடமிருந்தும் நேரடியாக தரகு, பன்னாட்டு நிறுவனங்கள் கொள்முதல் செய்யும். எனவே விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும், நுகர்வோருக்கும் விலை மலிவாக கிடைக்கும் என்பது அரசின் பிரச்சாரம். இன்றைய நிலையில் விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம் விவசாயிகளும், சிறு உற்பத்தியாளர்களும் போதிய விலை கிடைக்காமல் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்றால் இந்த விலை உயர்வின் பலன் போவது எங்கே? உற்பத்தியும் செய்யாமல் நுகரவும் செய்யாமல் கணிணி முன் அமர்ந்து விற்பனை விளையாட்டுகள் ஆடிக் கொண்டிருக்கும் வர்த்தகச் சூதாடிகள் தான் அதனை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை அனுமதித்துவிட்டு சிறுவணிகர்களை ஒழித்தால் விலை குறைந்து விடும் என்பது மோசடி.

 

பெரும் முதலீட்டில், குளீரூட்டி, சேமிப்புக் கிடங்கு, கணிணி, வாகனங்கள் உள்ளிட்ட வசதிகளோடு வணிகத்தை தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அன்றைய சந்தை விலையை விட 50 காசுகளோ, ஒரு ரூபாயோ குறைத்து விற்பனை செய்வது பெரிய விசயமும் அல்ல, அவர்களுக்கு அது இழப்பும் அல்ல. ஆனால் கந்து வட்டிக்கு கடன் வாங்கி குடும்பமே சேர்ந்து வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் இவ்வாறான விலைக் குறைப்பை செய்யமுடியுமா? இந்த ஒரு ரூபாயையோ, 50 காசுகளையோ தான் அரசு விலை குறையும் என்கிறதா? என்றால் அதன் நோக்கம் நுகர்வோருக்கு மலிவு விலையில் பொருட்களைக் கொடுப்பதல்ல. தொடக்கத்தில் விலையைக் குறைத்து வாடிக்கையாளர்களை ஈர்த்து, சிறுவணிகர்களை ஒழித்த பின் நினைத்த விலையில் எவ்வளவு வேண்டுமானாலும் கூட்டி விற்றுக் கொள்ளும் கொடும்புத்தி.

 

தரமான பொருட்கள் கிடைக்கும் என்கிறார்களே, தனியாக சோதனைச் சாலைகளில் தரத்தை உருவாக்கி பொருட்களில் ஏற்றுகிறார்களா? சிறுவர்த்தகர்கள் விற்கும் அதே பொருட்களை, உள்ளூர் சந்தையில் கிடைக்கும் அதே காய்கறிகளை துடைத்து பைகளில் அடைத்துக் கொடுப்பது தான் தரம் என்றால், அது ஏமாற்று இல்லையா? மட்டுமல்லாது இவர்களிடம் சிறுவர்த்தகம் சென்றால் மக்களிடம் இருக்கும் பல்வேறு ரகங்களை அழித்து, அவர்களுக்கு லாபம் தரும் ஒற்றை ரகத்தையே மக்களுக்கு பழக்கப்படுத்துவார்கள் என்பதற்கு கண்முன்னே சான்றுகள் இருக்கின்றன. மாணிக்க வினாயகர், காளிமார்க் உள்ளிட்ட எண்ணற்ற உள்ளூர் சோடா வகைகள் மறைந்து கோக் பெப்ஸிக்கு மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். சிப்ஸ் தயாரிப்புக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பஞ்சாபில் பல உருளைக் கிழங்கு வகைகள் அழிக்கப்பட்டு ஒரே வகை உருளைக் கிழங்குகளை பயிரிட விவசாயிகளை ஒப்பந்த விவசாயம் மூலம் நிர்ப்பந்திக்கிறார்கள். இவைகளை மறைக்கவோ, மறுக்கவோ முடியுமா?

அன்னிய முதலீட்டை சிறுவணிகத்தில் அனுமதிப்பது வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் என்பதும் கடைந்தெடுத்த பொய்தான். இந்தியாவில் சில்லரை வணிகம் ஆண்டொன்றுக்கு 12லட்சம் கோடி ரூபாய்க்கு நடக்கிறது. இதை கபளீகரம் செய்வது தான் அன்னிய முதலீட்டின் நோக்கமேயன்றி விலையைக் குறைப்பதோ வேலைவாய்ப்பை அளிப்பதோ அல்ல. இன்றைய நிலையில் நாட்டில் நான்கு கோடிக்கும் அதிகமானோர் சில்லரை விற்பனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது 20 கோடி மக்கள் இந்த சில்லரை வணிகத்தின் மூலம் பிழைத்து வருகிறார்கள். நூறு குடும்பங்கள் சில்லரை வணிகத்தின் மூலம் வாழ்ந்துவரும் ஒரு சிறுநகரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று சில்லரை வணிகத்தில் ஈடுபடுவதாக கொண்டால் 25 பேர் வேலைவாய்ப்பை பெறுவதாக கொள்ளலாம். அதேநேரம் ஏற்கனவே இருந்துவரும் நூறு குடும்பங்களும் சில்லரை வணிகத்திலிருந்து படிப்படியாக வெளியேறி வேலையிழந்து வாழ்வதற்கு வழியற்ற நிலை உருவாகும். இன்று சில்லரை விற்பனையில் ஈடுபட்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்க பங்கினர் விவசாயத்திலிருந்து ஏனைய தொழில்களிலிருந்தும் இப்படி விரட்டப்பட்டவர்கள் தாம். 25 பேருக்கு வேலை கொடுத்து விட்டு நூறு குடும்பங்களை வேலையிலிருந்து விரட்டும் இந்த அன்னிய முதலீடு வேலை வாய்ப்பை கூட்டுமா? குறைக்குமா?

 

அன்னிய முதலீடு என்பது தவிர்க்க முடியாத ஒன்று, நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமானது என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டு திரிகிறார்கள். அன்னிய முதலீடென்றால் இன்னொரு நாட்டிலிருந்து பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு இங்கு வந்து தொழில் தொடங்குவதா? இந்திய வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் மக்கள் பணத்தை கொண்டே தொழில் தொடங்குகிறார்கள். பின்னர் லாபம் என்றும், பல்வேறு சலுகைகளின் மூலமும் இங்குள்ள பணத்தை நாட்டுக்கு வெளியே கொண்டு செல்கிறார்கள். இதற்கு அப்பட்டமான எடுத்துக்காட்டு என்ரான். இந்திய வங்கிகள் 40%க்கு மேல் நிதியுதவி செய்து அமெரிக்க என்ரான் நிறுவனம் மகாராஷ்டிராவில் தபோல் மின் நிலையத்தை தொடங்கியது. சிறிது காலத்திற்குள் என்ரான் நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் நடத்திய மோசடியின் காரணமாக திவாலாகி விடவே, தபோல் மின் உற்பத்தி நிலையமும் இழுத்து மூடப்பட்டது. என்ரானுக்கு நிதியளித்த இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட கடன் வாராக்கடன் என்று தள்ளுபடி செய்யப்பட, அதனை இந்திய மக்கள் தங்கள் தலையில் சுமந்தார்கள். வளர்ச்சி என்பதன் பொருள் இது தானா? இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் அன்னிய முதலீடு என்ற பெயரில் வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளை சுரண்டிக் கொழுக்கின்றன. உள்நாட்டு வங்கிகளில் இருக்கும் பணத்தைக் கொண்டு தொழில் தொடங்கும் அன்னிய நிறுவனங்கள் காப்புரிமைத் தொகை, இலாப ஈட்டுத் தொகை, தொழில்நுட்பக் கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் என பல்வேறு வகைகளில் உள்நாட்டுப் பணத்தை கடத்திச் சென்று விடுகின்றன.

 

போஸ்ட்வானா நாட்டில் 1995-2003 ல் போடப்பட்ட அன்னிய முதலீடு 4243 கோடி. ஆனால் வெளியேறிய உள்நாட்டு மூலதனமோ 25,294 கோடி. காங்கோவில் அன்னிய முதலீடு 7,303 கோடி. வெளியேறியதோ 12,478 கோடி. 1993 ல் பிரேசிலை விட்டு வெளியேறியது ரூ. 148 கோடி. இதுவே 1998ல்  28,000 கோடியாக உயர்ந்தது. இந்தியாவிலும் உள்வந்த முதலீட்டைவிட வெளிச்சென்ற அன்னியச் செலாவணி அதிகம் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. மட்டுமல்லாமல் இந்த நிறுவனங்கள் நட்டக்கணக்கு காட்டியும், லாபத்தை குறைத்து மதிப்பிட்டும் எல்லாவிதங்களிலும் வரி ஏய்ப்பு செய்து வருகின்றன. இதை நாட்டின் வளர்ச்சி என்பதா? நாட்டை சுரண்டிக் கொழுப்பவர்களின் வளர்ச்சி என்று கூறுவதா?

 

மக்கள் குடிநீர் வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்துகிறார்கள். நல்ல சாலை வசதி வேண்டும், மருத்துவ மனைகள் வேண்டும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தினம் தினம் பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. அவசியமான இவைகளை செயல்படுத்த மறுக்கிறது அரசு. காய்கறிகளோ மற்ற பொருட்களோ கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது என்று மக்கள் போராடினார்களா? சந்துக்கு மூன்று கடைகள் இருக்கும் நாட்டில் அன்னிய நிறுவங்கள் நடத்தும் அங்காடிகள் வேண்டும் என்று கேட்டது யார்? மக்கள் கேட்பதை கொடுக்க மறுக்கும் அரசு கேட்காததை திணிக்கிறது என்றால் அதன் பின்னே இருப்பது மக்கள் நலனா? பன்னாட்டு முதலாளிகளின் நலனா?

 

சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு என்பது இருக்கும் கடைகளோடு இன்னுமொரு கடை என்பதல்ல. உள்ளிருந்து மெல்லக் கொல்லும் கொடிய நோயைப் போல உள்நாட்டு சிறுவணிகர்களை அழிப்பதுடன் மக்களை வாழத் தகுதி இல்லாதவர்களாக ஆக்கும் தனியார் மயம் தாரளமயம் உலகமயத்தின் மற்றொரு கொடுங்கரம். அது நம் கழுத்தை நெரிப்பதற்கு முன் நாம் ஒன்று திரண்டு போராடவேண்டியது அவசியம், அவசரம்.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

One thought on “சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு, மக்கள் உயிர் குடிக்கும். போராடு

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s