குற்றவாளிகளைப் போல் மக்களை உளவும் அரசுகள்

சில நாட்களுக்கு முன்னர் ஒரு வாரம் இருமுறை இதழில் ஒரு செய்தி வந்திருந்தது. சென்னை தரமணியில் நுண்ணலை பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சமீர்) மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செல்லிடப்பேசி, மின்னணுவியல் பொருட்களை மிகச்சிறிய அளவில் தயாரிக்கும் இதில் நடந்த 20 கோடி ரூபாய் ஊழல் குறித்து அந்தச் செய்தி தொடர்கிறது. நீங்களும்கூட இந்தச் செய்தியை படித்து கடந்திருக்கக் கூடும். ஆனால், மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமும் ஒரு அமெரிக்க நிறுவனமும் இணைந்து செல்லிடப்பேசி மின்னணு கருவிகளை மிகச் சிறிய அளவில் தயாரிக்க வேண்டிய அவசியமென்ன?

 

இந்தியா மட்டுமல்ல, பாதுகாப்பு நிறுவனங்கள் என்ற பெயரில் இது போன்ற நிறுவனங்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஏராளம் இயங்குகின்றன. அமெரிக்காவின் s.s.8, blue coat, பிரான்சின் vupen, செக் குடியரசின் phonexia,  ஜெர்மனியின் ipoque போன்ற நிறுவங்கள் அரசுகளின் உதவியுடன் கணிணி நச்சு நிரல்களை பரப்புவது தொடங்கி, மக்கள் செல்லிடப்பேசிகளில் எடுக்கும் புகைப்படங்கள், பேச்சுக்களை அரசுக்கு விற்பது வரை அனைத்தையும் செய்கின்றன. அரசுகள் ஏன் இவைகளை செய்கின்றன?

 

நாட்டு மக்களை கண்காணிப்பது என்பது தொடக்க காலம் முதல் அரசுகள் செய்து வருவது தான். மக்களின் பாதுகாப்பு, எச்சரிக்கை என பல காரணங்கள் இதற்காக கூறப்பட்டாலும், அரசு குறித்து மக்கள் என்ன கருத்துக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிவது தான் ஆதார நோக்கம். தொழில்நுட்ப அறிவும், பொருட்களும் அதிகரிக்க, அதிகரிக்க அரசுக்கு தெரியாமல் மக்கள் எதையும் செய்ய முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தனி மனித உரிமை குறித்து மக்களுக்கு வகுப்பெடுக்கும் அரசுகள், அவர்களின் படுக்கையறை வரை கண்களை நுழைத்து வேவு பார்க்கின்றன. அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடிநீர், சாலை வசதிகளை செய்து தர மறுக்கும், பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் அற்ப மானியங்களைக் கூட வெட்டும் அரசு இது போன்ற கண்காணிப்புகளுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டியிறைக்கின்றன.

 

இந்தியாவில் உலகமயம் தீவிரமாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயிருக்கிறார்கள், பல லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டு துரத்தப்பட்டிருக்கிறார்கள். கைத்தறி நெசவின் சிறப்பு ரகங்கள் நீக்கப்படுகின்றன என்ற ஒற்றை உத்தரவினால் பல்லாயிரக் கணக்கான கைத்தறி நெசவாளர்கள் நெசவுத்தொழிலை விட்டு துரத்தப்பட்டார்கள். சிறு குறுவீத உற்பத்தியாளர்கள் அரசின் பல்வேறு திட்டங்களினால், அறிவிப்புகளினால் அவர்களின் தொழில்களிலிருந்து விரட்டி விடப்பட்டிருக்கிறார்கள். சில்லரை விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள் நேரக்கணக்கின்றி உழைப்பதின் மூலம் தங்கள் வாழ்வை நகர்த்துவதைக் கூட அன்னிய முதலீட்டை கொண்டு வந்து அழிக்கத்துடிக்கிறது அரசு. மட்டுமல்லாது நாட்டின் கனிம வளங்களை சிலர் கொள்ளையடிப்பதற்காக தலைமுறை தலைமுறையாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை பச்சையாக வேட்டையாடுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்களால் செயல் படுத்தப்பட்டுவரும் மறுகாலனியாக்கத்தினால் மக்கள் தொழில்களை இழந்து வாழ்விழந்து வெறுமை சூழ்ந்த இயலாமையில் வெதும்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எங்கு எப்போது என்ன செய்வார்களோ என்று எல்லா அரசுகளுமே அஞ்சிக் கிடக்கின்றன. அவர்களை கட்டுக்குள் வைக்க துடிக்கின்றன.

 

அண்மையில் துனீசியாவில் தொடங்கி லிபியா ஈறாக அரேபிய ஆப்பிரிக்க நாடுகளிலும், கிரேக்கம், இங்கிலாந்து முதலான ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க வால் ஸ்ட்ரீட் முற்றுகையுமாய் உலகெங்கும் அரசுக்கெதிராக வெடித்துக் கிளம்பி கலவரம் செய்து வருகிறார்கள் மக்கள். அதை முளையிலேயே கண்டுபிடித்து கிள்ளி எறிவதற்காக மக்கள் யாருடன் பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? அவர்களின் செயல்பாடு என்ன? சிந்தனை என்ன? பொழுபோக்குகள் எப்படி? என அவர்களின் ஒவ்வொரு அசைவையும் அறிவதற்காக  எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக இருக்கின்றன அரசும் ஆளும் வர்க்கமும்.

 

அதேநேரம் இது வெளிப்படையாக மக்களுக்கு தெரிந்தால் அதுவே எண்ணெய் வார்க்கும் என்பதால் தொழில்நுட்ப ஆராய்ச்சி என்ற போர்வையிலும், தனியார் நிறுவனங்களைக் கொண்டும் அதையும் மீறி மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களாகவும் செயல் படுத்தப்படுகின்றன. அப்படியான ஒரு திட்டம் தான் இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை திட்டம். கடந்த ஆண்டில் இந்த தேசிய அடையாள அட்டை வழங்கலை தொடங்கிவைத்த மண்மோகன் சிங் இந்த அட்டையின் பயன்களை விளக்கினார். பொது விநியோகத்தில் நடந்து வரும் முறைகேடுகள் களையப்படும், கிராமப்புற வேலை உறுதித் திட்ட நிதி மக்களைச் சென்றடையும், அனைவருக்கும் கல்வி கிட்டும், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு ஓர் அடையாளம் தரப்படும், அரசின் நலத் திட்டங்கள் மக்களை முறையாகச் சென்றடையும், அதிகாரிகளின் ஊழல்-முறைகேடுகள் கட்டுப்படுத்தப்படும், நாட்டுக்கு பாதுகாப்பு கிடைக்கும், …. என்று தண்டவாளத்தில் பயணிக்கும் தொடர்வண்டி போல் நீட்டிக் கொண்டு சென்றார். ரேசன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை, அதிகாரிகளின் ஊழல்களை இந்த அட்டை விசயகாந்து போல காலால் எகிறி அடித்து தடுக்குமோ? 

 

இந்த அட்டைக்கு மக்கள் தங்கள் பத்து விரல்களின் கை ரேகைகள், கண்ணின் விழித்திரை ரேகை, புகைப்படம், பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர்களின் விபரம், தொழில் குறித்த விபரங்கள் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். பின்னர் இந்த அட்டை புகைப்படம், 12 இலக்க எண், தகவல்கள் அடங்கிய மின்னணு சில் போன்றவற்றை உள்ளடக்கியதாக வழங்கப்படும். மட்டுமல்லாது, இந்த தகவல்கள் வங்கி, காவல் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட ஏனைய வெளித்தகவல்களுடன் ஒன்றிணைக்கப்பட்டு கணிணி சேமிப்புக் கிடங்குகளில் சேமிக்கப்படும்.  இந்த திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் அனைவரும் இந்த அட்டையை கண்டிப்பாக உடன் வைத்திருந்தே ஆக வேண்டும் என்பதால் தில்லியில் இருந்து கொண்டே திருக்கணாம்பட்டி அய்யாவு எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறார் என்பதை அறிய முடியும். நாகரீகம், வசதி, முன்னேற்றம் என்ற பெயரில் செல்லிடப் பேசி உள்ளிட்ட மின்னணுவியல் பொருட்களை கைகளில் திணித்து வருவதால், திடீரென உங்கள் முன் காவல்துறையினர் தோன்றி கடந்த ஞாயிறு மாலை 6.15.28 மணி நேரத்தில் மன்மோகன் சிங் என்பதற்குப் பதிலாக மண்மோகன் சிங் என்று உச்சரித்தீர்கள் எனவே நீங்கள் காவலில் எடுக்கப்படுகிறீர்கள் என்று கூறலாம். சில நாட்களுக்கு முன்னர் தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கப் படுவதால் ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களுக்கு கட்டுப்படுகள் விதிப்பது குறித்து அரசு விவாதித்து வருகிறது என்று மண்மோகன் சிங் கூறியதை இதனுடன் இணைத்துப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

 

அரச வன்முறை வெறியாட்டங்களை பொது வெளியில் கூற முனைந்தால் போலி மோதல்களில் துப்பாக்கிக் குண்டுகள் பரிசாக கிடைக்கும் என்பது நடைமுறையாகி வருகிறது. காஷ்மீர் என்று இந்தியாவுடன் இருந்தது என்று கேட்டதற்காக அருந்ததி ராய் போன்றவர்கள் குறிவைக்கப் பட்டார்கள். சத்திஸ்கர் பழங்குடியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக மருத்துவர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மக்களைத் திரட்டி போராடினால் தீவிரவாதிகளாய் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சில நாட்களுக்கு முன் மக்கள் தலைவர் தோழர் கிஷன் ஜியை சித்திரவதை செய்து கொன்று வீதியில் வீசினார்கள்.

 

அரசு அமைப்புக்கு எதிராக சுட்டுவிரல் நீட்டினாலும் கொன்று குவிப்பது ஒருபுறமென்றால்,மறுபுறம் மக்கள் அரசியலை நோக்கி திரும்பும் அத்தனை வழிகளையும் அடைத்து வருகிறார்கள்.  உழைக்கும் மக்களின் ஒரே பிரச்சார உத்தி, சுவரொட்டி ஒட்டுவதும் தெருமுனை கூட்டங்கள் நடத்துவதும் தான். நகரின் அழகு குலைகிறது என்று சுவரொட்டி ஒட்டுவதை தடுக்கிறார்கள்.  யார் பேசுவார்கள் என்ன பேசுவார்கள் என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் உள்ளூர் காவல் நிலையத்தில் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். ஆக மக்கள் எந்த அரசியல் உணர்வும் இல்லாத, தங்களுக்கு தலையசைக்கும் மந்தைகளாக இருக்க வேண்டும் என்று தான் ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன. மீறினால் கழிப்பறை செல்லும் நேரங்களையும் விட்டுவைக்காமல் கண்காணித்து வாய்ப்புக்காகவும், தருணத்திற்காகவும் அலைகிறது.

 

நடக்கும் அனைத்தும் மக்களை அரசியலை நோக்கியே தள்ளிக் கொண்டிருக்கிறது. சேவாக்கின் இருநூறுக்காக கொண்டாடுவதும், கொலைவெறி பாடலை வெறிபிடித்து ரசிப்பதும் போதுமானது அல்ல என்பதை உரத்து உணர்த்திக் கொண்டிருக்கிறது.

 

தொடர்புடைய இடுகைகள்

புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன் ஹண்ட், புரியாதவர்களுக்கு…?

கொடியேற்று, கொண்டாடு, குடியரசு தினம்

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

4 thoughts on “குற்றவாளிகளைப் போல் மக்களை உளவும் அரசுகள்

  1. ‘ஆதார்’ ஐ அறியத்தந்ததில் மகிழ்ச்சி தோழர்.

    அரசின் நோக்கத்தைப் படம் பிடித்து வெளிக்காட்டியமைக்கு நன்றி செங்கொடி.

  2. அரசு அமைப்புக்கு எதிராக சுட்டுவிரல் நீட்டினாலும் கொன்று குவிப்பது ஒருபுறமென்றால்,./////

    உங்களை கொன்றுவிட்டார்களா? ரெம்ப அளக்காதிங்கய்யா.

  3. ஸ்டூலின்,

    இவ்வளவு பெரிய கட்டுரையில், மிகமுக்கியப் பகுதியை எவ்வளவு அருமையாக கோடிட்டுக் காண்பித்துள்ளீர்!

    பிரமித்துவிட்டேன்!

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s