முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்

நீறு பூத்து கனன்று கொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை கேரளாவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் விசிறிவிட்டு வெடித்துப் பரவச் செய்திருக்கிறது. எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் சம எண்ணிக்கையில் இருக்கும் கேரள சட்டமன்றத்தில் வரப்போகும் ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் அவைகளுக்கான இழுபறியை வாழ்வா சாவா நிலைக்கு கொண்டு வந்து விட, இரண்டுக்குமே முல்லை பெரியாறு ஆயுதமாகி இருக்கிறது. ஓட்டுக்கட்சி பன்றித் தொழுவத்தில் களறியிடுவது என்று ஆனபின் கம்யூனிஸ்டுகள் என்று பெயரை மட்டும் தாங்கியிருப்பதால் கட்சி நிலைபாடு குறித்து பரிசீலனை ஏற்பட்டுவிட முடியுமா? தங்கள் பங்குக்கு அள்ளிப் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

முல்லை பெரியாறு குறித்து கேரளா எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களும் உண்மைக்கு மாறானவை என்பதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தினால் முறியடிக்கவும் பட்டிருக்கின்றன. நீதிமன்ற தீர்ப்பு உட்பட தமிழகத்தின் முயற்சிகளையும், முன்னேற்றங்களையும் கேரளா அநீதியான முறையிலேயே மீறிவந்திருக்கிறது. என்றாலும் கூட இன்றைய நிலையில் முல்லை பெரியாறு குறித்து கேரள மக்களிடம் இருக்கும் உணர்வு தமிழக மக்களிடம் இல்லை. தேனி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே மக்கள் போராடி வருகிறார்கள், ஏனைய பகுதிகளில் இன்னமும் இது செய்தியாகவே பார்க்கப்படுகிறது. ஊடகங்களும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும் கேரளாவில் செய்ததைப் போன்ற ஒருங்கிணைந்த பரப்புரையை தமிழக ஊடகங்களோ, இங்குள்ள ஓட்டுக்கட்சிகளோ செய்யவில்லை.

கொந்தளிப்பான இன்றைய நிலையிலும் கூட, கேரளா தண்ணீர் தர மறுக்கிறது என்பது போன்று தான் இங்கு பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக புதிய அணை கட்டி தண்ணீர் தருகிறோம் என்று தானே கூறுகிறோம் மறுக்கவில்லையே என்று கேரளாவிலும் பேசப்பட்டு விருகிறது. ஆனால் இது தண்ணீர் பற்றாக்குறை குறித்த பிரச்சனையல்ல, அணையின் உரிமை யாருக்கு எனும் பிரச்சனை. இது புரியவைக்கப்படாததால் தான் அவர்கள் தான் தண்ணீர் தருகிறோம் என்று கூறுகிறார்களே எனும் எண்ணம் தமிழகத்தின் பிறபகுதிகளில் நிலவுகிறது.

1979ல் தொடங்கிய இந்தப் பிரச்சனையில் அடாவடி செய்யும் கேரளத்திற்கு சாதகமாக பல்வேறு கட்டங்களில் தமிழக ஒட்டுக் கட்சிகளால் விட்டுக் கொடுப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் வசம் இருந்த இந்த அணையின் பாதுகாப்பு பணியை 1980ல் கேரள காவல்துறைக்கு மாற்ற அனுமதித்தார் எம்.ஜி.ஆர். தொடர்ந்து அணையை பலப்படுத்த எடுத்த முயற்சிகளுக்கு கட்டுமான ஊழியர்களை தாக்குவது, பொறியாளர்கள் மீது வழக்கு தொடுத்து கைது செய்வது, வாகனங்களை கைப்பற்றுவது என்று ஆண்டுக்கணக்கில் கேரள அரசுகள் செய்து வந்த இடையூறுகளுக்கு எதிராக தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி அரசுகள் சிறு முணுமுணுப்பைக் கூட காட்டியதில்லை. அவ்வளவு ஏன், ஒரு சட்டமன்ற தேர்தலின் போது கேரளாவில் போட்டியிட்ட ஜெயா தலைமையிலான அதிமுக தேர்தல் வாக்குறுதியில் முல்லை பெரியாறு அணையில் நீரை தேக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியே ஓட்டுக் கேட்டது. 2006ல் நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என நீதி மன்ற தீர்ப்பு வந்தபோது ஆட்சியில் இருந்த ஜெயா, அதை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீர்ப்புக்குப் பிறகு, கேரளா அளித்த வரைவுத் திட்டத்தை ஏற்று ஐவர் குழுவை நீதிமன்றம் ஏற்படுத்தியபோது அதை எதிர்த்திருக்க வேண்டிய கருணாநிதி ஏற்றுக் கொண்டார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அணையின் மீதான தமிழகத்தின் உரிமைகளை கேரளா கபளீகரம் செய்தபோது ஒற்றுமையாய் ஆதரித்த ஓட்டுக் கட்சிகள், இன்று கேரளத்திற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நிற்பதாக படம் காட்டுகின்றன.

நீதிமன்றங்களும் பலமுறை நியாயமற்று கேரள சார்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. உச்சநீதி மன்றம் தான் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுத்து, கேரளா செய்த மேல்முறையீட்டு மனுவை தானே விசாரித்தது எந்த சட்ட அடிப்படையில் வரும்? உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய சில நாட்களில் புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து தீர்ப்பை செல்லாக் காசாக்கியது கேரளா. இதை எதிர்த்து தமிழ்நாடு அந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கையும், அதாவது கேரள சட்டமன்றத்தில் செய்யப்பட்ட சட்டத் திருத்தத்தை ஏற்கலாமா? கூடாதா? என்று தீர்ப்பளிக்க வேண்டிய இந்த வழக்கையும், ஏற்கனவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்ப்பை எதிர்த்து கேரளா தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவையும் ஒன்றாக இணைத்து ஐந்து நீதிபதிகள் கொண்ட சட்ட அமர்வுக்கு மாற்றியது எந்த சட்ட அடிப்படையில் சரியானது? இரண்டு வேறு வேறு வழக்குகளை ஒன்றாக இணைத்ததன் மூலம் உச்சநீதி மன்றம் தான் வழங்கிய தீர்ப்பை தானே குப்பைக் கூடைக்கு அனுப்பியது. இத்தனைக்கும் மேலாக வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையிலேயே, அந்த இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை நடத்த கேரளாவுக்கு அனுமதி வழங்குகிறார் காங்கிரஸ் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். ஆக கேரள அரசு, உச்சநீதி மன்றம், மத்திய அரசு ஆகிய மூன்றும் இணைந்து தான் முல்லை பெரியாறு பிரச்சனையை இன்று கொதி நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றன.

திமுக வழக்கம் போல உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என்று போராட்டங்களையும்(!) இந்த விசயத்தில் தமிழக அரசுடன் ஒத்துழைப்போம் என்று அரசியல் நாகரீகத்தையும்(?) காட்டிக் கொண்டிருக்கிறது. ஜெயாவோ தானே உண்ணாவிரதம் இருந்துவிடலாமா? அல்லது ஒரு நாள் பந்த் நடத்தலாமா? என்று சோதிடர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். தமிழ்வாதக் கட்சிகளோ மலையாளிகளை அடி, மலையாளக் கடைகளை நொறுக்கு என்று இனவாதத்தை தொடங்கி விட்டார்கள். வைரமுத்து போன்ற உலக மகா கவிஞர்களுக்கு சோவியத் யூனியன் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, போலிகள் மாநிலத்திற்கு ஏற்றார்ப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் ’சவுண்டு’ மட்டுமே விடும் இளங்கோவன் இப்போதும் உம்மன் சாண்டியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதை ஏன் அவர் சோனியா காந்தியிடம் கூறக் கூடாது? அணையை உடைக்க கம்பிகளுடன் வெறித்தனத்தைக் காட்டிய கேரள பாஜகவை தண்டிக்கக் கோரி பாஜக தலைமையிடம் தமிழக பாஜக வற்புறுத்தலாமே, இந்தப் பிரச்சனையை தோற்றுவித்து எண்ணெய் ஊற்றி வளர்த்து வரும் கேரள தோழர்(!)களிடம் இங்குள்ள சீபீஎம் மேடையில் சர்வதேசியம் பேசிக் கொண்டும் மக்களிடம் பிராந்திய இனவெறியை கிளப்பியும் கம்யூனிச வித்தை காட்டுவது குறித்து விமர்சனம் வைக்கலாமே. அதைவிட்டு கேரளாவில் அணையை உடை என்றும் தமிழ்நாட்டில் அணையை பாதுகாப்போம் என்றும் இந்தக் கட்சிகள் வசனம் பேசுவது அப்பட்டமான மோசடி அல்லவா?

இவைகளுக்கு மாறாக, தேனி பகுதியிலுள்ள விவசாயிகள் புதிய எழுச்சி மிகுந்த வரலாற்றை படைத்திருக்கிறார்கள். எழுபதாயிரம் விவசாயிகள் வரை திரண்டு, ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து அணையைக் கைப்பற்ற கிளம்பி விட்டார்கள். குமுளி வழியான கேரள எல்லையை அடைத்து போக்குவரத்தையும், கேரளாவுக்கு அனுப்பப்படும் பொருட்களையும் தடை செய்தது கேரளாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவைப் பொருத்தவரை ஓட்டுக் கட்சிகளின் நச்சுப் பரப்புரைகள் ஊடக பலத்தினாலும், தொடர்ச்சியான முனைப்பினாலும் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்திருக்கிறது. மட்டுமல்லாது, அணை உடைந்து பல லட்சம் மக்கள் செத்து மடிவதைப் போன்ற குறுந்தகடுகள் வரைகலை உத்திகளுடன் தயாரிக்கப்பட்டு திட்டமிட்டு பரப்பப்பட்டதால் பீதியடைந்திருக்கும் மக்கள் இயல்பாகவே கேரள ஓட்டுப் பொறுக்கிகளின் கோரிக்கைகளுடன் ஒன்றிப் போய்விட்டார்கள். இந்த மக்கள் ஆதரவு எனும் பலம் இருப்பதுதான் கேரள ஓட்டுக் கட்சிகளின் சண்டித்தனங்களுக்கு தடமேற்படுத்தித் தந்திருக்கிறது. ஆனால் அவர்களின் தேவையற்ற பயமும், புரிதலற்று ஓட்டுக் கட்சிகளின் பின்னே அணிவகுப்பதும், தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடையது என்பது அவர்களுக்கு உணர்த்தப்பட்டாக வேண்டும். அவ்வாறு உணர்த்துவதற்கும், கேரள ஓட்டுப் பொறுக்கிகளுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கும் பயன்படுமாயின் குமுளி, களியக்காவிளை, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்தை நிறுத்தி காய்கறி உள்ளிட்டு பொருட்களின் தடையை ஏற்படுத்தலாம். ஆனால், அது ஒருபோதும் இனவாத அடிப்படையில் பயன்படுத்தப்படக் கூடாது. கேரளாவுக்கு அனுப்பப்படும் பொருட்களை உற்பத்தி செய்வதற்கே 500 டி.எம்.சி க்கு மேல் தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்.

பிரச்சனை என்று வந்தால் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறுவதையும், கமிட்டி அமைத்து ஆறப் போடுவதையும் வழமையாக வைத்திருக்கும் மத்திய அரசு, அதை மீறிப்போகும் மாநிலத்தை வழிக்கு கொண்டுவர என்ன செய்திருக்கிறது இதுவரை? அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை பேச்சு வார்த்தை நடத்தி பின் வழக்கு தொடுத்து தீர்ப்பு வந்தபின் அதையும் செயல் படுத்தாமல் மீறும் மாநிலத்தை ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்தால், பாதிக்கப்பட்ட மாநிலம் என்ன செய்வது? முன்னர் வந்த தீர்ப்பை கழிப்பறை காகிதமாக்கியது போல் கேரளா இனியும் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்? புவியியல் ரீதியாக கடைமாநிலத்தில் வாழும் மக்கள் தண்ணீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டுமா? மாநிலங்களிடையேயான பகிர்வில் பொது ஒழுங்கை மீறும் அரசுகள் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் கேரளாவைக் கண்டிக்குமாறு கோரிக்கை விடுக்கக் கூட தமிழ்நாட்டல் முடியவில்லையே ஏன்? ஏனென்றால், தேவையான உரிமைகள் மாநிலங்களுக்கு இல்லை. பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது வெறுமனே பிரிந்து போகும் உரிமையல்ல. எந்த மாநிலமும் எல்லை மீறாதிருக்கவும் மீறும் போது அதை ஒழுங்கிற்குள் கொண்டுவர தேவையான ஏற்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்கும்.

தேனி பகுதியில் விவசாயிகளிடம் ஓட்டுக்கட்சிகளை புறந்தள்ளி ஏற்பட்டிருக்கும் இந்த எழுச்சி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவ வேண்டும். அது பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை நோக்கி நகர வேண்டும். இப்போதே பிற பகுதிகளில் வணிகர்கள் உள்ளிட்ட அமைப்புகள் கடையடைப்பு போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றன. இவைகளை ஆதரிப்பதும், அதை இலக்கு நோக்கி வளர்த்தெடுப்பதுமே நம்முன் உடனடிக் கடமையாக இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

முல்லைப் பெரியாற்றின் சிக்கல்களுக்கு அணை கட்டுவது எப்போது?

முல்லை பெரியாறு அணை பிரச்சனையும் தீர்வும் – ஆவணப்படம்

நெய்யாறு: கேரள அடாவடியும், சிபிஎம்மின் எடுபிடியும்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

2 பதில்கள்

  1. மகிழ்ச்சி என்பது போராட்டம்.

  2. பூதாகரமான பிரச்சனை ஆகிவிட்டது முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை. கேரளா அரசு தனது சைடில் சில விசயங்களை மக்களின் முன் வைத்து புதிய அணை கட்ட முயற்சிக்கிறது. முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான கட்டத்தில் இருக்கிறதாகவும், அது உடைந்தால் , அணையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு, சுனாமியை விட பேராபத்து ஏற்படும். அதனால் இலட்சணக்கணக்கில் உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்படும் என்று பீதியைக் கிளப்பி விடுகின்றது. அது உடைந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைதான் “டேம்999” என்ற படம் வேறு பயங்கரமாகக் காட்டியிருப்பதாக சொல்லுகின்றனர். ஒரு வேளை இப்படியும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில்தான் கேரள மக்கள் உள்ளனர். இது இப்படி இருக்கையில் தமிழக அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள், அணையைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து அரசுக்கு ரிப்போர்ட் தந்திருக்கின்றனர். அதில் 1886ம் ஆண்டு இந்த அணையை சுண்ணாம்பு மற்றும் சிமெண்டு கொண்டு கட்டியிருப்பதாகவும், இது ஒரு புவியீர்ப்பு விசையினால் செயல்படும் அணையென்றும் சொல்லியிருக்கின்றனர். மேலும் அணையின் பாதுகாப்பிற்காக குறுகியகால பாதுகாப்பு திட்டம் மற்றும் நீண்ட கால பாதுகாப்பு திட்டம் என்ற வகையில் அணையைச் சுற்றி பாதுகாப்பிற்காக என்னென்ன செய்திருக்கின்றனர் என்றெல்லாம் தெளிவாக சொல்லியிருக்கின்றனர். தேவையான பாதுகாப்பில்தான் அணை உள்ளது, அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற முடிவையும் அதிகாரிகள் சொல்லியிருக்கின்றனர்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: