சில நாட்களுக்கு முன் சிறகுகள் வலைப்பக்கத்தை நடத்துபவர்களில் ஒருவரான நண்பர் முகம்மது ரஃபி கேள்வி ஒன்றை மின்னஞ்சலில் கேட்டிருந்தார். அதற்கு பதில் எழுதிவிட்டு பார்த்தால் சற்று நீளமாக இருந்தது. எனவே, அதை இன்னும் சற்று விரிவுபடுத்தி பதிவாக இட்டால் என்ன எனும் எண்ணமே இந்த பதிவு. மட்டுமல்லாது, வழக்கமாக கேள்வி பதில் பகுதியில் கேள்விகளை கேட்கும் அவர் எனக்கு ஏதும் சங்கடம் நேரக் கூடும் எனும் எண்ணத்தில் இந்த முறை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கலாம் எனகருதுகிறேன். அவ்வாறான தயக்கமோ, சங்கடமோ யாரும் கொள்ளத் தேவையில்லை என்பதை வெளிப்படுத்துமுகமாகவும், நண்பரின் அனுமதியுடன் இது பதிவிடப்படுகிறது.
அன்புள்ள செங்கொடி,
பொதுவுடமைக் கொள்கையைப் போற்றுபவர்கள் சுரண்டப்படும் மக்களுக்காகப் போராடினாலும் கூட ஒருவகையில் வரட்டுத்தனமானவர்கள் என்கிறார் எனது உறவினர் ஒருவர். எப்போதோ ஏற்படுத்தப்படப்போகும் பொதுவுடமைச் சமூக அமைப்பு வரும் வரை இப்போதுள்ள வாழ்க்கையில் (யாருக்காகப் போராடுகிறீர்களோ அந்த மக்கள் கூட அனுபவித்துக் கொண்டிருக்கும்) எந்த ஒரு சிறந்த விடயத்தையும் நீங்களெல்லாம் முழுமையாக இரசித்துக் கொள்ள மாட்டீர்கள் என்கிறார் அவர்.
உதாரணமாக ஒரு இனிய குரலையுடைய பாடகரின் திறமையை சாதாரண ஒரு ஏழை ஏதாவது ஒரு நேரத்தில் தன் வாழ்க்கைச் சுமையை தற்காலிகமாக மறந்து இரசிப்பான். ஆனால் நீங்களோ குரல் இனிமையாக இருந்தாலும் அவர் பாடுவதெல்லாம் எதிர்ப்புரட்சிக் கருத்துக்களுள்ள பாடலைத்தானே என்பது போன்ற ஏதாவது ஒருவிடயத்தைக் கூறி விமர்சித்து விட்டு ஒதுங்கி அல்லது ஒதுங்கி விடுவீர்கள். ஒரு நடிகன் ஒரு திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் அதை சிலாகிக்காமல் சில வருடங்களுக்கு முன் அவர் வேறு ஒருவிதமான கருத்தை முன்னிறுத்தியவர்தானே என்று சொல்லிவிட்டு நழுவ விடுவீர்கள் அல்லது நழுவிவிடுவீர்கள்.
நல்ல ருசியான உணவைத் தந்தால் ஒருவேளைச் சோற்றுக்கு இல்லாத ஏழைகளுள்ள நாட்டில் இப்படி ஆடம்பரமாகச் சமைக்கத்தான் வேண்டுமா? என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா? என்பீர்கள். அழகான பூந்தோட்டத்தை ரசிக்காமல் பணவிரயம் என்பீர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். இதற்குரிய உங்கள் பதில் என்ன?
நண்பர் ரஃபி,
இது போன்ற குற்றச்சாட்டுகள் ஒரு உத்தியாக கையாளப்படுபவைகள். இது போன்ற குற்றச்சாட்டுகள் எப்போதெல்லாம் எழுப்பப்படுகின்றன? வைக்கப்பட்ட விமர்சனத்தின் மீது அவர்களின் கருத்து என்ன? இந்த இரண்டு அடிப்படைகளிலிருந்து ‘அந்த வரட்டுத்தனத்தை’ நாம் மதிப்பிடலாம்.
முதலில், கலை என்பது மக்களுக்காகவேயன்றி வேறெதற்காகவும் அல்ல என்பது உணரப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் கலை என்பது வணிகமாகவும், மக்களை அரசியலிலிருந்து விலக்கி வைக்கவும் அல்லது மக்களுக்கான அரசியலிலிருந்து அவர்களை திசை திருப்பவுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நல்ல திரைப்படம் அல்லது ஒரு நல்ல இசைப்பாட்டு என்பது என்ன ஒப்பீடுகளிலிருந்து நல்லவை என மதிப்பிடப்படுகிறது? பொழுது போக்கு அம்சத்திலிருந்தும், உழைப்பின் கடுமையிலிருந்து ஒருவித போதைத்தனமான மாற்றிலிருந்தும் தான் மதிப்பிடப்படுகிறது. எதையுமே இந்த முதலாளித்துவ உத்திகளிலிருந்து அணுகுவது தான் இயல்பானது யதார்த்தமானது என்று உலகம் திட்டமிட்டு பயிறுவிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் (உங்கள் உறவினர்) கூறுவதின் சாராம்சமான பொருள் இது தான்,
முதலாளிகளுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் இயல்பானது, மக்களுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் வரட்டுத்தனமானது. இது தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழில் வெளிவந்த அர்ஜுன், விஜயகாந்த் வகைப்பட்ட போலீஸ் சூரத்தனங்களைக் காட்டும் படங்கள் தொடங்கி ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட், ராம்போ வரை தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படுகின்றன. இப்படி தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படும் அதே நடப்பு காலத்தில் யதார்த்தத்தில் காவல்துறை மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருப்பதும், சொந்த நாட்டு மக்கள் எனும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் அவர்களைச் சிக்க வைப்பதும், சுட்டுக் கொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக யதார்த்தத்தில் என்ன நடக்கிறதோ அதை பிரதிபலிக்காமல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உண்மையை மறைப்பதுதான் கலையாக இருக்கிறது. இதை மறுத்து, கலை எப்படி திட்டமிட்டு உண்மையை மறைத்து மலிவான ரசனையில் மக்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடமே திணிக்கிறது எனும் உண்மையை எடுத்துக் கூறினால் அது வரட்டுத்தனம் எனப்படுகிறது. ஆக, முதலாளித்துவத்திற்கு ஆதரவான மனோநிலையை உண்மையை மறைத்து வெளிப்படுத்தினால் அது ரசனை, இயல்பு. அதை விமர்சித்து உண்மையை பேசினால் அது வரட்டுத்தனம், இயல்புக்கு மாறானது. இது தான் வரட்டுத்தனம் என்று கூறுபவர்களின் பார்வையாக இருக்கிறது.
ஒரு கலை வடிவம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்றால், அந்த விமர்சனம் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? தவறாகவா? என்று பார்ப்பது தான் சரியான பார்வையாக இருக்க முடியும். அந்த விமர்சனத்தை வரட்டுத்தனம் என்று கூறப்படும் இடங்களையெல்லாம் கூர்ந்து கவனித்தால், அங்கு செய்யப்பட்ட விமர்சனத்திற்கான பதிலோ அல்லது மாற்றுப் பார்வையோ வைக்கப்பட்டிருக்காது. தெளிவாகச் சொன்னால் எந்த இடத்தில் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அந்த இடங்களிலேயே வரட்டுத்தனம் என்பது முன்வைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு விமர்சனத்தை வரட்டுத்தனம் என்றே கூறக்கூடாது என்பதல்ல. வைக்கப்படும் விமரசனம் வரட்டுத்தனமானது என்றால், இன்னின்ன விதங்களில் அது வரட்டுத்தனமாக இருக்கிறது என்று மீள்விமர்சனம் செய்யலாம். அதை யாரும் குறைகூற முடியாது. ஆனால் இங்கு வரட்டுத்தனம் என சுட்டப்படுவது மக்களின் விருப்பம் எனும் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளிலிருந்து கூறப்படுகிறது. வரட்டுத்தனம் என உங்கள் உறவினர் கூறுவதை அது எப்படி வரட்டுத்தனமாக இருக்கிறது என்பதை விளக்குமாறு கேளுங்கள். அப்போது உங்களுக்கு புரியும் அவர் வரட்டுத்தனம் என்று கூறுவது விமர்சனத்தை அல்ல, மாறாக விமர்சிப்பதையே வரட்டுத்தனம் என்கிறார் என்பது.
இன்னொன்றையும் கூறலாம். ஒரு திரைப்படத்தையோ, ஒரு கலை வடிவத்தையோ பார்க்ககூடாது, கேட்கக்கூடாது என்று யாரும் தடைபோட முடியாது. விமர்சனம் செய்வதன் பொருள் யாரும் அந்த கலை வடிவத்தை ரசிக்காதீர்கள் என்று தடை போடுவதல்ல. ஒரு தவறுக்கு எதிராக எது சரியானது என்று புரியவைப்பதற்கான ஒரு முயற்சி. பொதுவெளிக்கு வரும் ஒன்றை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் உண்டு. ஆனால் விமர்சிக்காமல் முத்திரை குத்தினால் அதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதே பொருள். அதேநேரம், கலை என்ற பெயரில் செய்யப்படும் நச்சுத்தனங்களை தடுத்தாக வேண்டும்.
அண்மையில் ’டேம் 999’ என்ற திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்தும் விமர்சனம் எழுந்தது. அதாவது, ஒரு கலை வடிவத்தை மக்கள் பார்க்கக் கூடாது என தடை செய்யலாமா? எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா? படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா? அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும்? என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நாகசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா? கூடங்குளத்தில் விபத்து மட்டும் பிரச்சனையல்ல. வெறுமனே பயங்காட்டி கருத்தை திணிப்பதைவிட அதிலிருக்கும் அரசியல், அடிமைத்தனம், மறுகாலனியாக்க சுரண்டல்கள், மின்சாரம் அதில் பொருட்டல்ல போன்றவை உள்ளிட்ட அனைத்தையும் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுவதனூடாக அணிதிரட்டுவதே சரியானதும் சிறப்பானதுமாக இருக்கும். ஆனால் டேம் 999 திரைப்படம் நடந்த நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை பயங்காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. மட்டுமல்லாது அத்திரைப்படம் உண்மையின் அடிப்படையிலான பயங்காட்டலல்ல, அரசியல் பொய்யின், தொழில்நுட்ப பொய்யின் அடிப்படையிலான பயங்காட்டல். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கேரள அரசு இது போன்ற பொய்ப் பரப்புரையை குறுந்தட்டுகள் வாயிலாக செய்து கொண்டிருக்கிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டியதே. ஆனால் அதே கருத்தை கேரளாவுக்கு வெளியிலுள்ள மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் நரித்தனமாக எடுக்கப்பட்டிருப்பது தான் அந்த திரைப்படம். கலை என்ற பெயரில் அதை அனுமதிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
ஒரு வகையில் டேம் 999 திரைப்படமும், வெளிவந்த, வெளிவந்து கொண்டிருக்கும் தேசபக்தி திரைப்படங்களும் ஒரே அடிப்படையிலானவை தாம். ஆளும்வர்க்கங்களுக்கு ஆதரவான கருத்தை நேர்மையற்ற முறையில் பொழுது போக்கு, ரசனை என்று பின்வாயில் வழியாக திணிப்பவை தாம் என்றாலும் டேம் 999 உடனடி விளைவை எதிர்நோக்கி திரையிடப்படுவதால், விமர்சித்து விழிப்புணர்வை எட்டும் காலம் இல்லாததால் தடை செய்வது அவசியமாகிறது.
அடுத்து, ஒரு கலை வடிவத்தின் மீதான மக்கள் ரசனை எப்படி இருக்கிறது? அல்லது எப்படி இருக்க வேண்டும்? கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா? அழகியல் உணர்ச்சியா? இருவர், ஒரு பொருள் குறித்து தமக்குள் உரையாடிக் கொள்கிறார்கள் என்றால் எதிரிலிருப்பவர் என்ன பேசுகிறார் என்பது தான் இன்னொருவருக்கு முக்கியமேயன்றி அப்படி பேசும்போது என்ன உடையணிந்திருந்தார்? அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது? நளினமாக கைகளை அசைத்தாரா? என்பதெல்லாம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாதவைகள். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. ஒரு திரைப்படம் என்றால் நடித்தவர்களின் நடிப்புத்திறன் அலசப்படுகிறது, அமைக்கப்பட்ட இசையின் இசைவு தரப்படுத்தப்படுகிறது, பாடியவர்களின், பேசியவர்களின் ஒலியின் குழைவு இனிமையாக பொருத்தமாக இருக்கிறதா என்பது ஒப்புநோக்கப்படுகிறது, ஒளிப்பதிவின் தரமும், ஒளியின் பாங்கும் கணிக்கப்படுகிறது, காட்சியின் பின்னணி கவனிக்கப்படுகிறது, இயக்குனரின் நெறியாள்கையின் நேர்த்தி மதிப்பிடப்படுகிறது. ஆனால், மறந்தும் கூட அத்திரைப்படம் மக்களுக்கு என்ன கூற முனைகிறது என்பதை எடுத்துக் கொள்வதில்லை. இங்கு தான் அரசியல் இருக்கிறது. ஒரு உள்ளடக்கத்தின் புறத்தன்மைகளை மட்டுமே ரசிப்பதற்கு மக்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அகத்தன்மை குறித்து வாளாவிருக்குமாறு வழக்கப்படுத்தப்படுகிறார்கள். பார்வையாளனுக்கு புறத்தன்மை சில நாட்களில் மறந்து போகும் அகத்தன்மையோ உள்ளுக்குள் மறைந்திருக்கும். ஒரு கலை வடிவத்தில் ஒருவன் காணும் அகத்தன்மைகளே பிறிதொரு நேரத்தில் அவனுடைய விருப்பமாக வெளிப்படுகிறது.
இந்த இடத்தில் இன்னொன்றையும் பேசியாக வேண்டும். வரட்டுத்தனம் என்று கூறுபவர்கள் அதை மட்டுமா சொல்கிறார்கள், பிரச்சாரம் என்றும் சிலவற்றை மதிப்பிடுகிறார்கள். இதை நுணுக்கமாக பார்த்தால் கண்டு கொள்ளலாம். ஒரு இயக்குனர் மக்களுக்கு நல்ல விசயங்களை(அவரின் கோணத்தில்) கூற வேண்டும் என எண்ணி ஒரு படம் எடுத்தால் அதை பிரச்சரப் படமாக இருக்கிறது என்றும் கூறக் கேட்டிருக்கலாம். ஆக, விமர்சனத்தை வரட்டுத்தனம் என ஒதுக்குகிறார்கள், எதிர்மறையான படங்களை பிரச்சாரம் என ஒதுக்குகிறார்கள். என்றால் அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவது எதை? மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை? எனவே, வரட்டுத்தனம் என்பன போன்ற முத்திரை குத்தல்களை மக்களைச் சிந்திக்கும் கம்யூனிஸ்டுகள் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.
இந்த நயவஞ்சகமான அரசியல் கலைகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் ஊடாடி நிற்கிறது. அவற்றில் ஒன்று தான் பூ. அழகு என்பதை விடுத்து பூந்தோட்டத்தில், பெண்கள் பூச்சூடுவதில், பூக்களின் வேறு பயன்பாடுகளில் என்ன இருக்கிறது? மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன? பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும்? வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா? மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது?, மக்களை மடமையில் நீடிக்க வைப்பதைத் தவிர. அன்றாட வாழ்வில் மலர்களின் பயன்பாட்டின் பின்னே மறைந்திருக்கும் பொருளை அறியவிடாமல், மலர் என்றால் அழகு என திசைதிருப்பப் பட்டிருப்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?
மறுபக்கம், ஏகாதிபத்தியங்களின் நிர்ப்பந்தங்களால் அரசுகள் விவசாயத்திற்கு எந்த ஆதரவையும் வழங்குவதில்லை. விவசாயிகளிடமிருந்து உணவு தானிய விவசாயத்தை அப்புறப்படுத்தி அதை பெருநிறுவங்களிடம் ஒப்படைக்க, அரசு பணப்பயிரை ஊக்குவிக்கிறது. இந்த அடிப்படையில் தான் மலர் விவசாயமும் வருகிறது. ஆக, உணவு தானிய விளைச்சலை பெருநிறுவனங்களிடம் வாரிக்கொடுக்க வழிகாணும், மனித குலத்திற்கு எந்த பயனும் இல்லாத, மடமைகளிலும், ஆணாதிக்கத்திலும் உழன்று கிடக்க ஏதுவாக்கும் பூக்களின் பயன்பாட்டை விமர்சித்தால் அதை வரட்டுவாதம் என்று ஒதுக்குவதும்; இவைகளை எல்லாம் மறைத்து அழகு என்பதாக முன்னிருத்தினால் அதை இயல்பு என்றும் கூறப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?
”நல்ல உணவைத்தந்தால் ஆடம்பரம் என்பதும், சரியில்லாத உணவைத்தந்தால் மறுப்பதும்” என்பது புரிதலின்றி வைக்கப்படும் குற்றச்சாட்டு. உணவை தேவைக்காக உண்பதும், ருசிக்காக உண்பதும் இருவேறு வகைப்பட்டவை. ருசியை முன்வைத்து உணவை வீணாக்குவதும், லாபத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சத்துக்குறைவான உணவை வழங்குவதும் தான் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படும். கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்திருக்கும் நாட்டில் தங்கள் பணத்திமிரை காட்ட விருந்துகளாகவும் கேளிக்கையாகவும் வீணாக்கப்படும் உணவு குறித்து விமர்சனம் வைக்கப்படுமேயன்றி; மக்கள் பட்டினி கிடக்கும் நாடு என்பதால் தனியொரு மனிதன் தனக்கு விருப்பமான உணவு வகையை உண்பது விமர்சிக்கப்படாது. மாணவர் விடுதிகள், உணவுக்கூடங்களில் லாபநோக்கில் திட்டமிட்டு செய்யப்படும் பற்றாக்குறைகளை, அலட்சியம் செய்யப்படும் கலோரிகளின் அளவை முன்னிட்டு போராட்டம் நடத்தப்படுமேயன்றி, ருசியை மட்டும் முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி ஒப்பீடு செய்ய முடியும்?
பொதுவாக, மக்கள் ரசனையாக, விருப்பமாக இருப்பதெல்லாம் முதலாளித்துவ விழுமியங்களுக்கு உட்பட்டே அமைந்திருக்கும். அவர்களின் நலனுக்கு வெளியே எதையும் மக்கள் தங்களின் சொந்த விருப்பமாகவோ, நாகரீகமாவோ, முன்னேற்றம் என்ற பெயரிலோ கொண்டிருக்க முடியாது. சமூகம் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் முதலாளித்துவம் தங்களின் சுரண்டலை பெரும்பான்மை மக்களின் கவனத்திற்கு வரமலேயே செய்து கொண்டிருக்க முடிகிறது. இது தான் வரட்டுத்தனம் எனும் சொல்லின் பின்னே மறைந்துள்ள அரசியல்.
ஒவ்வொருவரின் சொல்லின் செயலின் பின்னேயும் அவரின் வர்க்கம் மறைந்திருக்கிறது என்பது ஆசானின் கூற்று.
தொடர்புடைய பதிவுகள்
பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்
இந்தப் பதிவையும் வறட்டுத்தனமானது என்று கூறவும் வாய்ப்புண்டு!.
மிக விழிப்புடன் இருக்க வேண்டும்.
நன்றி செங்கொடி.
Simply superb…
அன்புள்ள செங்கொடி,
முதலில் உங்களது பதிலில் இருந்த நேர்மையும் துணிச்சலும் போற்றுதலுக்குரியது. உங்களது பதிலை எளிமைப் படுத்தி எனது உறவினருக்கு எடுத்துக்கூறினேன். அவர் அதைப் பகுதியாகத்தான் ஏற்றுக் கொண்டார். அது அவரது உரிமை. ஆனாலும் ஒரு மாற்றுக் கருத்தை நீங்கள் எதிர்கொண்ட விதத்திலிருந்த துணிச்சலையும் நேர்மையையும் என்னைப் போலவே சிலாகித்தார். அவரது விடயம் இருக்கட்டும்.
உங்களது கருத்துப் பற்றிய எனது பார்வையைத் தெளிவாகக் கூறி விடுகின்றேன்.
சுரண்டும் வரக்கத்தினர் தங்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுரண்டப்படும் உழைக்கும் மக்களின் (அரசியல், பொருளாதார) அறிவுக்கண்கள் முழுமையாகத் திறந்து விடாமலிருக்க உலகின் யதார்த்தத்தை எப்படியெல்லாம் மழுப்ப முடியுமோ அப்படியெல்லாம் மழுப்பிக் கொண்டிருப்பதற்கு அறிந்தோ அறியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நீங்கள், நான் உட்பட நாம் எல்லோருமே ஏதோ ஒருவகையிலே துணைபோய்க் கொண்டுதானிருக்கின்றோம். துணைபோகும் அளவுதான் வேறுவேறு. இதுபற்றி நீங்கள் சொல்லப்போவது என்ன?
நண்பர் ரஃபி,
ஒரு திருத்தத்துடன் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். முதலாளித்துவ சமூகத்தில் வாழும் அனைவரும், ஒரு சிறு அளவிலேனும் அதற்கு ஆட்படுவதினின்று முழுமையாக தவிர்க்க முடியாது. ஆனால், அளவு வேறுபாடுகளைக் கடந்து அதை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதில் துல்லியமான வேறுபாடு இருக்கிறது.
அன்புள்ள செங்கொடி.
மீண்டும் உங்களது பதிலின் நேர்மைதான் என்னைப் பெரிதும் வசீகரிக்கின்றது. உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு தைரியமும் பரந்த உள்ளமும் வேண்டும். அது உங்களிடம் நிறையவே இருக்கிறது. தவிர்க்கவே முடியாமல் உங்களது கருத்துக்களின் ரசிகனாகவே ஆகிவிட்டேன். இதைத் தனிமனித துதி என்று நினைக்காமல் உங்கள் பதில் கூறும் திறமைக்குக் கிடைத்த எனது அங்கீகாரம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். நீங்கள் கடைசியில் கூறியுள்ளதுதான் எல்லோருக்குமுரிய சரியான பதில். மிக்க நன்றி!