வரிசையான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இன்னுமொரு பண்டிகையாக வந்திருக்கிறது குடியரசு தினம். ஆனால் ஏனைய பண்டிகைகளை விட இந்த பண்டிகைக்கு அரசு காட்டும் முனைப்பு மக்களிடையே பீதியூட்டுவதாக இருக்கும். தொடர்ந்து அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கான அரசு இது அதை குலைப்பதற்காக தீவிரவாதிகள் முயல்கிறார்கள், அவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கவே இத்தகைய கெடுபிடிகள் என்பது வழக்கமாக அரசு கூறும் காரணம். சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 800 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவெங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் இப்படியான கைதுகளும், சித்திரவதைகளும், பொதுமக்களுக்கு சிரமங்களும் செய்யப்பட்டு வருகின்றன. மட்டுமல்லாது ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதுகாப்பு கெடிபிடிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குடிமக்களுக்கான அரசை அதன் குடிகளில் சிலரே ஏன் தகர்க்க நினைக்கிறார்கள்?
இந்தக் கேள்வி இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. உலக நாடுகள் அனைத்திலும் பரிசீலிக்கப்பட வேண்டியதும், பரிசீலிக்கப் படாமல் ஒதுக்கப்படுவதுமான கேள்வி. குடிமக்களில் பெரும்பாலானோர் அரசுகளின் மீது கோபமாகவும் வெறுப்பாகவுமே இருக்கிறார்கள். ஏனென்றால், அரசின் திட்டங்களும், செயல்பாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களை பாதிக்கிறது. அவர்களை தங்கள் வாழ்நிலைகளிலிருந்து கீழிறக்குகிறது. அதனால், தனித்தனி குழுக்களாக வெவ்வேறு பிரச்சனைகளுக்காக அரசை எதிர்த்து தினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையான மக்களை போராடத் தூண்டும்படியாக நடந்து கொண்டிருக்கும் அரசை குடி மக்களுக்கான அரசு என்று கூற முடியுமா? ஆனால், பலர் அப்படி கூறிக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால் தான் குடியரசு தினம் இன்னும் கொண்டாட்டமாய் நீடிக்கிறது. அரசின் திட்டங்களும் செயல்களும் அதன் பொருட்டே மக்களுக்கானதாக விளம்பப்படுகிறது. ஆனால் மெய்யில் அப்படி இருக்கிறதா?
இதை தற்போது மக்களிடையயே கொதிப்பில் இருக்கும் மீனவர் பிரச்சனையினூடாக பார்க்கலாம். கடந்த கால் நூற்றாண்டாக தோராயமாக 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக தன் சொந்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா செய்ததென்ன? எல்லா முதலாளித்துவ நாடுகளும் தம் சொந்த மக்களை தன்னுடைய நோக்கத்திற்கு இடையூறாக இருப்பதாக கருதும் போது கொன்று குவிக்க தயங்குவதில்லை. ஆனால் பிற நாடுகள் தம் குடிமக்களை கொல்லும் போது தன் பிம்பத்தை காத்துக் கொள்ள கொஞ்சமாவது எதிர்ப்பை காண்பிக்கும். ஆனால், ஐநூறுக்கும் அதிகமானோர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருந்தும், அதற்கு எதிராக எதுவும் செய்யாமல் கிடப்பது தான் ஒரு குடியரசின் இலக்கணமா?
இதை இன்னும் அணுகிப் பார்த்தால் இந்திய குடியரசின் லட்சணம் என்ன என்பது வெளிப்படையாகிவிடும். மீனவர்கள் தொடர்ந்து தனித்தனியான பல அடையாள போராட்டங்களை நடத்தி சோர்ந்து நீதிமன்றத்தை அணுகினார்கள். நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்திருக்கும் பதிலில் மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் கொல்லப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறது. தொடக்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்று கூறிக் கொண்டு இலங்கை இதைச் செய்தது. தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும் இது தொடர்கிறது, மட்டுமல்லாது அதிகரித்திருக்கிறது. என்றால் அதன் நோக்கம் காரணங்களுக்கு அப்பாற்பட்டு அந்தக் கடல் பகுதியில் மீனவர்கள் நடமாட்டத்தை இரண்டு அரசுகளுமே தடுக்க நினைக்கின்றன என்பதாகத் தான் இருக்க முடியும்.
90களில் நரசிம்மராவ் தொடங்கிய வெளிப்படையான மறுகாலனியாக்கத்தில் இந்திய இலங்கை கடற்பகுதியில் பன்னாட்டு மீன்பிடி நிறுவங்களுக்கு மீன்பிடித்துக் கொள்ளும் அனுமதியை வழங்கியது. பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித்தல் என்பது மீன்வளத்தை அழிக்கும் தன்மை கொண்டதல்ல மாறாக தகவமைதலை பயன்படுத்தி மீன்வளத்தை காக்கும். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் மீன்பிடித்தல் என்பது முட்டைகள் குஞ்சுகள் தொடங்கி கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் ஒட்ட வழித்தெடுப்பதால் மீன்வளத்தை அழிக்கிறது. உலகமயமாக்க சூரையாடல்களால் உயர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளை ஈடுகட்டவும், பன்னாட்டு மீன்பிடி கப்பல்களை எதிர்கொள்ள முடியாமையும் இணைந்து மீனவர்களை எல்லை தாண்டவும், தடுக்கப்பட்ட வலைகளை, மீன்பிடி முறைமைகளை பயன்படுத்த தூண்டுகிறது. இந்த காரணங்களால் இலங்கை மீனவர்களுக்கும், தமிழக, இலங்கை மீனவர்களுக்கிடையேயும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது போன்ற பிரச்சனைகள் இந்திய மாநிலங்களுக்கிடையேயும், உலகமெங்கும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
இதை மீனவர்களை கொல்வதன் மூலமும், தொடர்ச்சியாக படகுகளை வலைகளை தாக்கி சேதப்படுத்துவதன் மூலமும் அச்சத்தையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்தி அந்த கடற்பகுதியிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்தும் வேலையை இலங்கை செய்கிறது. அதற்கு முழுமையான ஆசியையும், ஆதரவையும் இந்தியா வழங்குகிறது. இதை மறைப்பதற்கு இந்தியா எல்லை தாண்டுவதையும், இலங்கை மீனவர்களிடையேயான பிரச்சனைகளையும் முன்னிருத்தி திசை திருப்புகின்றன.
இந்தியா பெயரில் மட்டுமல்ல தன்மையிலும் குடியரசாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? இரு தரப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து பிரச்சனைகளை ஏற்படுத்தும் பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 40 கிலோமீட்டர் கொண்ட குறுகிய கடற்பரப்பை இரு தரப்பு மீனவர்களும் பயன்படுத்தும் வண்ணம் எல்லை கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும். எந்த மாதிரியான மீன்பிடி முறையை பாவிப்பது என்பது குறித்து இரு தரப்பு மீனவர்களும் உகந்த இணக்கமான முடிவை எடுப்பதற்கு அரசு உதவ வேண்டும். குடிகளுக்கான அரசாக இருந்தால் இதைத்தான் செய்திருக்க வேண்டும்.
ஆனால் இந்தியா செய்திருப்பதென்ன? பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி வழங்கி அதனை பாதுகாக்கிறது. எல்லையை வறையறை செய்யாமலும், அதேநேரம் எல்லை தாண்டாதே என்றும் குழப்புகிறது. மீன்பிடியை ஒழுங்கு செய்வதற்கு என்று சட்டம் கொண்டு வந்து பாரம்பரிய மீனவர்களுக்கு ஏற்க முடியாதபடி பலவிதமான கட்டுப்பாடுகளைச் சுமத்துகிறது. மீறினால் ஆயிரக்கணக்கில் தண்டத்தொகை வசூலிக்கவும், படகை பறிமுதல் செய்யவும் வழிவகை செய்யும் அதேநேரம் பன்னாட்டு கப்பல்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி கடலை வழித்தெடுக்க துணை நிற்கிறது. கடலோர மீனவர்களிடையே தொண்டு நிறுவனங்களை, சுய உதவிக் குழுக்களை களமிறக்கி மெழுகுதிரி செய்தல், பொம்மை செய்தல் என்று மாற்றுத் தொழில்களை பயிற்றுவித்து மீன்பிடித்தலிலிருந்து வெளியேற ஊக்குவிக்கிறது. நீளமான கடற்பரப்பை பெற்றிருக்கும் இந்தியா, பல்லாயிரக்கணக்கான மீனவ குடிமக்களுக்கு எதிராகவும், சில பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இவைகளைச் செய்திருக்கிறது. என்றால் இது குடியரசா?
மீன்பிடி தொழிலில் மட்டுமல்ல, உழவு, நெசவு உட்பட மக்களின் வாழ்வாதரமாக இருக்கும் அனைத்து தொழில்களிலும் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு எதிராகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவுமே அரசு செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், நாட்டின் கனிம வளங்கள் உள்ளிட்ட அனைத்திலும் அரசின் செயல்பாடு மக்கள் விரோதமாகத்தான் இருக்கிறது. மக்களுக்கு புதுப்புது வரிகளை அமல்படுத்துவதிலிருந்து இருக்கும் மானியங்களை வெட்டிக் குறைப்பது வரை, முதலாளிகளுக்கு வரிச்சலுகையிலிருந்து லாபத்திற்கான உத்திரவாதம் வரை மக்களுக்கு எதிராகவே அரசுகள் பொதுநிதியை கையாளுகின்றன. இவைகள் ஒன்றும் கமுக்கமான செய்திகளல்ல.
எப்படி மக்களை பட்டினி போடும் மசோதவுக்கு உணவு பாதுகாப்பு மசோதா என்று பெயர்சூட்டி மக்களை ஏமாற்ற எண்ணுகிறதோ அது போன்றே முதலாளிகளின் நலனில் மட்டுமே அக்கரை கொண்டு செயல்படும் அரசுக்கு குடியரசு என்று பெயர் சூட்டப்பட்டிருகிறது. மக்கள் சிந்திக்க வேண்டும், இப்படி தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்வதற்கு கொண்டாட்டம் ஒரு கேடா என்று.
தொடர்புடைய பதிவுகள்
கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்
புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன் ஹண்ட், புரியாதவர்களுக்கு குடியரசு தினம்
தமிழக மீனவர்களை கொல்லச் சொல்வது இந்திய அரசு தான்.
மின்னூலாக(PDF) தரவிறக்க
பீஜே அவர்களுடன் இன்று கிறித்தவ பாதிரிமார்கள் இன்று விவாதத்துக்கு வராமல் ஓடிவிட்டார்கள்.
ஒப்புக் கொண்டதற்கு மாறாக காரணத்தை காட்டி மறுத்துவிட்டார்கள் செங்கொடி ,இதற்காகவே நேரடி விவாதத்திற்கு வரமறுக்கிறார் போலும்.