தண்ணீர்: நாசமாக்கினால் பரிசு, குடித்தால் காசு.

 

சில பத்தாண்டுகளுக்கு முன் தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கு காசு கொடுக்க வேண்டும் என்று மக்களிடம் கூறினால் வயிறு வலிக்கச் சிரித்திருப்பார்கள் அல்லது கண் சிவக்க கோபப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று அது தான் யதார்த்தம். இதில் ஒரு அடி மேலே எடுத்து வைத்து ஏழையை மிதித்து இன்னும் கீழே தள்ளுவதற்கு அரசு தயாராகி விட்டது. அதன் அடையாளம் தான் ”தேசிய நீர் கொள்கை 2012” இதன் முதன்மையான ஒரு அம்சம் நிலத்திலிருந்து கிடைக்கும் நீர் அந்த நிலத்தின் உரிமையாளனுக்கு சொந்தமல்ல என்பது. அதாவது ஒரு விவசாயி தன் நிலத்தில் தன் சொந்த செலவில் வெட்டிய கிணற்றிலிருந்து அவன் விருப்பப்படி வயலுக்கு நீர் பாய்ச்ச முடியாது.  அதற்கும் மீட்டர் வைத்து அளந்து காசு கொடுக்க வேண்டும். அரசு யாருக்காக செயல்படுகிறது என்பதை தன் ஒட்டுக் கோமணத்தையும் அவிழ்த்துப் போட்டு அம்மணமாகக் காட்டி  ஆண்டுகள் பல கடந்து விட்டன. இந்த வரைவுச் சட்டத்தின் மூலன் தன் கோரைப் பற்களையும் இளித்துக் காட்டியிருக்கிறது.

 

”விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் விவசாயி தேவையின்றி நீரை வீணாக்குகிறான். அதனால் தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதற்கு விலை வைத்தால் தான் தண்ணீர் வீணாவது குறையும் தட்டுப்பாடும் நீங்கும்” இது இறக்குமதி செய்யப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங். ”இந்தியாவில் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம் தண்ணீர் தான். இதை மாற்றியமைக்க வேண்டும்” இது அமெரிக்க கைக்கூலி மாண்டேக் சிங் அலுவாலியா. மக்களைப் பற்றி கவலைப்படாத இந்த சாவி கொடுத்த பொம்மைகள் தான் மண்ணின் புதையல் எப்படி மக்களுக்கு சொந்தமில்லையோ அதேபோல் நிலத்தடி நீரும் அந்த மக்களுக்கு சொந்தமில்லை என்று ஒப்பிக்கின்றன. 

 

மேலோட்டமாகப் பார்த்தால் இது சரியானது போல் சிலருக்கு தோன்றலாம். ஆண்டாண்டு காலமாக குடியிருந்து கொண்டிருந்தாலும் அந்த நிலத்தின் அடியில் கனிம வளம் கண்டுபிடிக்கப்பட்டால் மக்கள் பணத்தில் இயங்கும் இராணுவத்தைக் கொண்டே அந்த மக்களை விரட்டிவிட்டு அந்த கனிம வளத்தை முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு கொடுக்கும். அதாவது மண்ணின் அடியிலிருக்கும் புதையல் அந்த மண்ணை உடைய மக்களுக்கு சொந்தமில்லை, அது முதலாளிகளுக்கே சொந்தம். அதுபோலத்தான் நிலத்தடி நீரும், அது முதலாளிகளுக்கே சொந்தம். இதை சுற்றி வளைத்து சட்டத்தனமான சொற்களால் கூறுவது தான் “தேசிய நீர் கொள்கை 2012”

 

பூமியின் ஒட்டு மொத்த நீர் வளத்தில் 99 நூற்றுமேனி நேரடியாக குடிக்க முடியாத கடல்நீர். மீதமுள்ள நன்னீரில் 96 நூற்றுமேனி துருவங்களில் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கிறது. எஞ்சிய 4 நூற்றுமேனியைத்தான் மொத்த மக்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உலக மக்கட் தொகையுடன் ஒப்பிட்டால் இந்த நீரே உலக மக்கள் அனைவருக்கும் தாராளமாக போதுமானது. என்றால் ஏன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது? ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை முறையாக பராமரிக்காமல் பாழ்படுத்தியது, நிலத்தடி நீரை கணக்கின்றி தனியார் பயன்படுத்த அனுமதித்தது, வரன்முறையின்றி காடுகளை அழித்து மழை பொழிவை கெடுத்தது, முன்னேற்றம் என்ற பெயரில் தொழிற்சாலைக் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டி மாசுபடுத்தியது போன்ற காரணங்களினால் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இவைகளைச் செய்தது யார்? எந்தவித ஐயத்திற்கும் இடமின்றி முதலாளிகளும், அவர்களுக்கு பக்க மேளம் வாசிக்கும் அரசுகளும் தான்.

 

1990களில் செய்யப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளின் முடிவால் அதுவரை அரைகுறையாக செய்துவந்த பாசனத்திற்கு நீர்வழங்குவது நீர்நிலைகளை பராமரிப்பது உள்ளிட்டவைகளை அரசு கைகழுவியது. 1960களின் பிற்பகுதியில் கொண்டுவரப்பட்ட பசுமைப்புரட்சியோ வேதி உரங்களைக் கொட்டி மண்ணை மலடாக்கி விவசாயிகளை தண்ணீர் தாகமெடுத்து அலைய வைத்தது. அதனுடன் நீர்நிலைகள் பராமரிப்பு கைவிடப்பட்டதும், பணப்பயிரை ஊக்குவித்ததனால் அது அதிக தண்ணீரை கோரியதும் சேர்ந்துகொள்ள வேறு வழியின்றி கினறுகளையும் ஆழ்துளைக் கிணறுகளையும் விவசாயிகள் நாடினர். இப்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது என்றதும் அரசும் அறிவுத் துறையினரும் ஒருசேர விவசாயிகளை நோக்கி கை நீட்டுகின்றனர் இரக்கமின்றி.

 

தண்ணீர் தனியார்மயம் என்ற பெயரில் ஆறுகளை தனியாருக்கு தாரை வார்த்தது. அவர்கள் புட்டிகளில் அடைத்து, வறட்சியைப் பயன்படுத்தி விற்பனையை எகிறச்செய்து, இராட்சத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் புவியின் அடியாளம் வரை நிலத்தடி நீரை துரத்திச் சென்றது யார், விவசாயிகளா? முதலாளிகளா?

 

தொழிற்துறை முன்னேற்றம் என்ற பெயரில் ஆலைக் கழிவுகளை ஆறுகளிலும் நீர்நிலைகளிலும் கொட்டி அவைகளை நஞ்சாக்கியது யார் விவசாயிகளா? முதலாளிகளா?

 

புதுப்புது ஆலைகளையும் கேளிக்கை விடுதிகளையும் கட்டுவதற்கென்று காடுகளை வெட்டியழித்து மழையளவை குறைத்தது யார் விவசாயிகளா? முதலாளிகளா?

 

ரியல் எஸ்டேட் பெருக்கத்திற்காக பல்லாயிரக் கணக்கான ஏரிகளையும்,  குளங்களையும் காணாமல் போக்கி அவற்றில் காங்கிரீட் காடுகளை உருவாக்கியது யார் விவசாயிகளா? முதலாளிகளா?

 

எந்திரக் கரங்களால் சுரண்டிச் சுரண்டி மணலள்ளி ஆற்றங்கரைகளை புண்களாக்கி ஆறுகளை வறண்டு போகச் செய்தது யார் விவசாயிகளா? முதலாளிகளா?

 

விவசாயி தண்ணீரை நிலத்தில் தான் பாய்ச்சினான். முதலாளிகளோ தன் தனிப்பட்ட லாபத்திற்காக எல்லா நீர் நிலைகளையும் அழித்து நாசமாக்கினார்கள்.  நாசமாகிய முதலாளிகளின் கைகளிலேயே நீர்வளத்தை தூக்கிக் கொடுத்து மக்களைச் சுரண்ட வழி செய்து கொடுப்பது தான் தேசிய நீர் கொள்கை. ஏற்கனவே குடிநீர் பகிர்வில் தனியாரை நுழைத்து, புட்டிகளில் அடைத்து விற்கப்படுவது தான் தூய்மையானது ஏனைய மூலங்களிலிருந்து கிடைப்பது அனைத்தும் தூய்மையற்றது என்று அவதூறு பிரச்சாரம் செய்து கோடிகளில் குளித்துவருகிறார்கள் முதலாளிகள். தற்போது எல்லாவகையிலும் தண்ணீர் ஒரு வியாபாரப் பண்டமே என வெளிப்படையாக அறிவித்து, இருப்பவன் காசு கொடுத்துக் குடி இல்லாதவன் தொண்டை வறண்டு செத்துப்போ என்று அந்த முதலாளிகளுக்கு மேலும் வசதி செய்து கொடுப்பது தான் தேசிய நீர் கொள்கை.

 

மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு முற்றாக விலக வேண்டும். அனைத்து வகைகளிலும் தண்ணீருக்காக வழங்கப்படும் மானியங்களை ரத்து செய்ய வேண்டும். இதற்கு மாற்றாக சமூகக் குழுக்களுக்கும், தனியார் துறையினருக்கும் அவற்றை கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் தேவையின்றி தண்ணீரை வீணாக்குவது குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என்பது தான் தேசிய நீர் கொள்கை வரைவுத் திட்டத்தின் சாராம்சம். அதாவது, குடிக்கும் நீரில் சிறு குழந்தை கையை நுழைத்தாலே அடித்துத் தடுக்கும் மக்கள் தண்ணீரை வீணாக்குகிறார்கள். அதை சரி செய்ய, புவியின் நீர் வளங்களையெல்லாம் நாசமாக்கிய முதலாளிகளின் கையில் கொடுக்க வேண்டும். பின்னும் அந்த அறிக்கை கூறுகிறது, மாநில, உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று. இதன் பொருள் இருக்கும் தண்ணீர் வளங்களையெல்லாம் முதலாளிகளிடம் கொடுத்துவிட்டு, மக்களே தண்ணீர் தாரளமாக இருக்கிறது தேவைப்படும் போது காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று அந்த முதலாளிகளுக்கு விளம்பரம் செய்வது மாநில உள்ளாட்சி அமைப்புகளின் வேலை. அல்லது முதலாளிகளிடம் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி அதை மக்களுக்கு கொடுக்க வேண்டும். மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலிருந்து அரசு விலகி, தனியாரிடமிருந்து வாங்கி மக்களுக்கு கொடுக்கிறோம் எனும் அரசின் கொள்கையால் இன்று மக்கள் மின்வெட்டினாலும் மின் கட்டண உயர்வினாலும் அவதியுற்று வருகிறார்கள். இதே போன்ற நிலையில் தண்ணீரையும் தள்ளுவதற்குத்தான் துடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

 

விவசாயத்தை வாழவைப்பதற்கு இலவச மின்சாரம் வழங்கிக் கொண்டிருப்பதாகவும், அதனால் அதிக நிதிச் சுமை ஏற்படுவதாகவும், அதை நீக்கினால் தான் நாடு முன்னேறும் என்றும் அரசுகள் பிதற்றிக் கொண்டிருக்கின்றன. மின்சாரம் கண்டு பிடிப்பதற்கு முன் விவசாயம் நடைபெறவில்லையா? விவசாயத்திற்கு பாசன வசதி செய்து தருவது அரசின் கடமை. அந்த அடிப்படையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருவாக்கி, பராமரித்து, பாதுகாத்து வந்த ஆறு, ஏரி,குளங்களை முதலாளிகளின் லாபத்துக்காக நாசமாக்கி விட்டு பாசனச் செலவுகளை தனிப்பட்ட விவசாயியின் தலையில் கட்டி, அதை மறைத்து ஏய்ப்பதற்குத்தான் இலவச மின்சாரம் என்றார்கள். இப்போது அதையும் ரத்து செய்வதற்கு நாட்டு முன்னேற்றம் என்று பசப்புகிறார்கள் இந்த அயோக்கியர்கள்.

 

இதை தடுப்பதற்கு வீதியில் இறங்கி போராடுவது அல்லது நாக்கு உலர்ந்து செத்துப்போவது என்ற இரண்டே வழிகள் தான் மக்கள் முன் இருக்கிறது. எந்த வழியைதேர்ந்தெடுக்கப் போகிறோம் நாம்?

தொடர்புடைய பதிவுகள்:

காவிரிச் சிக்கலும், கருணா ஜெயாவின் விக்கலும்

திருப்பூர் மிரட்டும் சாயப்பட்டரை முதலாளிகள்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

4 பதில்கள்

  1. ///இந்த நீரே உலக மக்கள் அனைவருக்கும் தாராளமாக போதுமானது. என்றால் ஏன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது? ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை முறையாக பராமரிக்காமல் பாழ்படுத்தியது, நிலத்தடி நீரை கணக்கின்றி தனியார் பயன்படுத்த அனுமதித்தது, வரன்முறையின்றி காடுகளை அழித்து மழை பொழிவை கெடுத்தது, முன்னேற்றம் என்ற பெயரில் தொழிற்சாலைக் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டி மாசுபடுத்தியது போன்ற காரணங்களினால் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இவைகளைச் செய்தது யார்? எந்தவித ஐயத்திற்கும் இடமின்றி முதலாளிகளும், அவர்களுக்கு பக்க மேளம் வாசிக்கும் அரசுகளும் தான்////

    மேலே சொன்னதுதான் உண்மை. குடிநீரை வியாபாரமாக்க முடிவு செய்து அதை நோக்கி செல்கிறார்கள். மக்களை கட்டுப்படுத்த அதை பயன்படுத்துவார்கள். விழிப்பாக இருந்து போராடவிட்டால் நாக்கு உலர்ந்து போய் சாவதுதான் மிச்சம். நீர் என்பது மக்களின் அடிப்படை வாழ்வாதாரம். அதை அழிக்கும் அரசியல்வாதிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது மக்களின் குற்றம்.

  2. நாக்கு உலர்ந்து செத்துப்போவது என்ற வழிக்குத்தான தற்போது மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்

  3. good sharing. best moving with water philosophy

  4. சிந்திதீரா! இவை அனைத்தும் நிர்வாக திறனற்ற,தொலை நோக்கு பார்வையற்ற, மக்கள் விரோத திராவிட கட்சிகள் மாறி..மாறி ஆண்ட காலங்களில் விதை போட்டு இன்று ஆலமரமாய் அனைவரும் அனுபவித்து கொண்டிருக்கும் அவலங்களில் ஒன்று தான்!!! நாம் அனைத்தையும் பொறுத்துக்கொள்ள கற்று கொண்ட மரங்கள்… மனிதர்களல்ல!!!

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: