இடிந்தகரை மக்களின் கம்யூனிசப் பண்பாடு

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் மீண்டும் உச்ச நிலைக்கு வந்திருக்கிறது. கடந்த மே 1 உழைப்பாளர் தினத்திலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்பட்டிருக்கிறது. இன்றிலிருந்து ஐநூறு பெண்களையும் உள்ளடக்கி நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது. மக்கள் எந்த சஞ்சலமும் அற்று போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். போராடும் மக்கள் மீது, அரசுக்கு எதிராக போர் தொடுத்தது, ராஜதுரோகம் செய்தது போன்ற கருப்புச் சட்டங்களை வீசி மிரட்டிப் பார்த்தது அரசு; ஐநூறு கோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என்று எலும்புத் துண்டுகளை வீசி  ஆசை காட்டிப் பார்த்தது அரசு; போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு வந்தால் தகுந்த அரசு வேலை வேண்டிய உதவிகள், சலுகைகள் என்று தனித்தனியாக லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து கருங்காலிகளை உருவாக்க நினைத்தது அரசு; எதற்கும் மசியாமல் மக்கள் தங்கள் போராட்டப் பண்பை இறுகப்பற்றி உரத்து நிற்கிறார்கள்.

 

அணு உலைக்கு எதிராக அந்த மக்கள் ஏன் போராடுகிறார்கள்? அதன் அபாயங்கள், அரசியல், அடிமைத்தனம் உள்ளிட்ட அனைத்து கூறுகளையும் விளக்கி பலரும் எல்லா ஊடகங்களிலும் எழுதிக் குவித்திருக்கிறார்கள், தேவைப்படும் விதத்தில் அவை தொடரவும் செய்யும். எனவே அவைகளை தவிர்த்துவிட்டு அந்த மக்கள் தங்களுக்குள் எப்படி இருக்கிறார்கள்? போராட்டம் அவர்களை எப்படி மாற்றியிருக்கிறது? என்பதை அறிவதும் அவசியப்படுகிறது. மட்டுமல்லாது போராட்டம் என்றாலே அது தனிப்பட்ட இழப்புகளின் கூட்டுக் கலவை, தேவையில்லாதது, சொந்த விசயங்களை கவனிக்க விடாமல் முடக்கி வைத்துவிடும், முன்னேற விருப்பமில்லாதவர்களின் கையாலாகாத்தனம் என்றெல்லாம் மத்தியதர வர்க்க முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் பொதுப்புத்தியை புனைந்து வைத்திருக்க, போராடும் மக்களோ பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை இயல்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிசம் சாத்தியமில்லை என்று தங்கள் ஆசையை ஆய்வாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை விலக்கிவிடுவோம், கம்யூனிச சமூகத்தில் வாழ்வதே பெரும் தண்டனையாக இருக்கும் என்பது போன்று மொழிந்து வைத்திருக்கும் அந்த முத்தண்ணாக்களுக்கு இடிந்தகரை மக்கள் தங்கள் போக்கில் லேசாக பதிலடி தந்திருக்கிறார்கள்.

 

எத்தனையோ இடையூறுகள், அரசின் அடக்குமுறைகள், அவதூறு பரப்புரைகள் அனைத்தையும் கடந்து பல மாதங்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடலுக்குள் சென்று மீன் பிடிப்பது தான் அவர்களின் ஒரே வாழ்வாதாரம். அவர்களுக்குள் பேதங்கள் இல்லாமலில்லை. பகுதிவாரி முரண்பாடுகள், பிற மீனவ கிராமங்களுக்கிடையான பிரச்சனைகள், மதச் சச்சரவுகள் என்று அனேகம் இருந்தன. உலகமயமாக்கல் நுகர்வுக் கலாச்சார சீரழிவுகள், அரசியலற்ற, சமூக அக்கரையற்ற தன்னலப் போக்குகள் என்று எல்லாமும் அவர்களுக்குள் இருந்தன, இருக்கின்றன. ஆனாலும் பொதுநோக்கான போராட்டம் அவர்களிடையே செலுத்தியிருக்கும் தாக்கம் சற்றே வீரியமானது தான்.

 

அப்படி என்ன செய்துவிட்டார்கள் அவர்கள்? தங்கள் ஊருக்கான பொறுப்பை தங்களே ஏற்றுக் கொண்டார்கள். அந்த ஊரை பிற பகுதிகளோடு இணைக்கும் இரண்டு சாலைகளையும் உளவாளிகள் ஊடாடி விடாமல் கண்காணிக்கிறார்கள். அரசு அத்தியாவசியப் பொருட்கள் கூட கொண்டு செல்ல முடியாமல் பொருளாதரத்தடை ஏற்படுத்திய போது பிற பகுதி மக்களுடன் தொடர்பு கொண்டு கடல் வழியாக தேவையான பொருட்களை தருவித்தார்கள். சின்னச் சின்ன சச்சரவுகளை தங்களுக்குளேயே தீர்த்துக் கொண்டார்கள். மக்கள் மன்றங்களை ஏற்படுத்தி, அந்தந்த ஊரின் பிரதிநிதிகளே அந்தந்த ஊரின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு காரியமாற்றுவது தானே உயர்ந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.

 

அவர்களுக்கிடையேயான பகைமைகள் அனைத்தும் மறைந்து போனது. மத, ஜாதி வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். எந்த இருவர் சந்தித்துக் கொண்டாலும் போராட்டம் குறித்து விசாரிக்கிறார்கள். தன்னால் செய்யக்கூடிய போராட்டப் பணிகள் ஏதாவது இருக்கிறதா என ஆர்வத்துடன் விசாரிக்கிறார்கள். சின்னக் குழந்தை முதல் கண் இடுங்கிய பாட்டி வரை தெளிவாக அணு அரசியல் பேசுகிறார்கள். அன்றைய செய்தி முதல் அணு உலை குறித்த செய்திகள் அனைத்தும் அறிந்து வைத்திருக்கிறார்கள், பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள். தங்களுக்கான தெரிதல் எது என்பதை தெரிந்து முன்னெடுத்துச் செல்லும் இடத்தில் தானே சமூகக் கல்வி இருக்க முடியும்.

 

தங்களின் வாழ்வாதரம் முதல் அனைத்தும் பறிபோகவிருக்கிறது என்பதற்காக பல மாதங்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களைச் சென்று சந்திக்கவோ, ஆதரவளிக்கவோ முன்வராத ஓட்டுக் கட்சிகள் மக்களுக்காக மெழுகாக ஒளி தருகிறோம் என்று இதுகாறும் ஏமாற்றிக் கொண்டிருந்ததை உணர்ந்து, அதற்கு பதிலடியாய் ஓட்டுக் கட்சிகளின் கொடிக்கம்பங்களை வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள். சுற்றியுள்ள பல ஊர்களில் அவர்கள் துடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுயத்தின் மீதான பற்று இற்றுப் போகாமல், சமூகத்தின் மீது அக்கரையில்லாமல் தார்மீகக் கோபம் வெடிக்குமா? யார் நண்பன்? யார் எதிரி? என்பதை தெளிவாக அறிந்து வைத்திருப்பது தானே முன்னேற்றத்தின் முதல் படி.

 

சமையல் வேலைகள் என்பது பெண்களை முன்னேற விடாமல் தடுத்து, வேறு சிந்தனைகள் தோன்ற விடாமல் முடக்கி வைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. ஒவ்வொரு குடும்பமும் பத்து நிமிடங்கள் உண்டு முடிப்பதற்கு ஒரு பெண் இரண்டு மணி நேரம் உழைக்க வேண்டியதிருக்கிறது. இடிந்தகரையில் கடந்த பல மாதங்களாக பொதுச் சமையல் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்றத் தாழ்வுகளற்று ஒரே மாதியான தட்டுகளில் ஒரே உணவை ஒரே இடத்தில் அமர்ந்து அனைவரும் சப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொழிலுக்குச் செல்லாமல் இருக்கும் நிலையில், அவர்களுக்கிடையேயான பொருளாதர ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவரை ஒருவர் தங்கிப்பிடிப்பது மட்டுமல்லாமல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வரும் அனைவரையும் ஒரு வேளையாவது சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்றும் உபசரிக்கிறார்கள். சமையல் வேலைகளிலிருந்து விடுதலை பெற்ற பெண்களும் ஆண்களுடன் போரட்டங்களுக்கான முனைப்புகளில் பங்கெடுக்கிறார்கள். இங்கிருந்து தானே ஆண் பெண் சமத்துவம் தொடங்க முடியும்.

 

போராட்டப் பந்தலுக்கு அருகே ஒரு தனியார் பள்ளி, தங்கள் பள்ளியில் இருப்பதாக நம்ப வைக்க முயலும் வசதிகளைப் பட்டியலிட்டு உங்கள் பிள்ளைகளை எங்கள் பள்ளியில் சேர்த்து உங்களைக் கொள்ளையடிக்க எங்களுக்கு உதவுங்கள் என்று பெரிய விளம்பரத் தட்டி ஒன்றை வைத்துவிட்டுச் சென்றிருந்தது. மக்களின் இந்த போராட்டம் குறித்து அந்த தனியார் பள்ளிக்கு ஏதேனும் கவலை இருக்குமா? அனைவரும் போராட்டத்திற்காக ஒன்றுகூடும் இடத்தில் தன் பள்ளியை விளம்பரம் செய்ய முயலும் எண்ணம்; உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் என் லாபத்துக்கு உத்திரவாதம் தர வேண்டும் எனும் எண்ணம் முதலாளிகளைத் தவிர வேறு யாருக்கு வரும்? இதைப் பார்த்து முகம் சுழித்த சில இளைஞர்கள் உடனே ஊர்க் குழுவை கண்டு தெரிவிக்க அங்கேயே அதற்கான முடிவு எடுக்கப்படுகிறது. விளம்பரத்தட்டி அகற்றப்பட்டு அதற்கு பொருத்தமான இடமான குப்பைக்குச் செல்கிறது.

 

இடிந்தகரைக்கு அருகிலுள்ள ஒரு ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் அந்த ஊரில் படித்து தகுதியுடன் இருக்கும் அனைவருக்கும் வேலை வழங்கி வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஐந்து ஆண்டுகள் காலம் அனுமதி. எந்த முன்பணமோ, லஞ்சமோ பெறாமல் வேலை வழங்குகிறார்கள். ஐந்து ஆண்டுகள் கழிந்ததும், அவர் விரும்பும் எந்த இடத்திலும் சென்று வேலை செய்து கொள்ளலாம். அந்த இடத்தில் வேறொரு புதியவருக்கு வேலை வழங்கப்படும். சுழற்சி முறையில் தகுதியுள்ள அனைவருக்கும் வேலை கிடைக்கிறது.

 

தங்களுக்கு ஆபத்தை விளைக்கும் எதையும், தாங்கள் விரும்பாத எதையும், தங்கள் மத்தியில் அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் அவர்கள். தங்கள் வீட்டில் பிறரால் வெடிகுண்டு வைக்கப்படுவதை விரும்பாத எவரும் அணு உலைக்கு எதிரான இந்த போராட்டத்தை ஆதரிக்க கடமையுள்ளவர்கள் அல்லவா? போராட்டம் மறந்து போன சிறப்பான பண்பாட்டு விழுமியங்களை எல்லாம் நமக்கு மீட்டித்தரும் என்பதற்கு இடிந்தகரை மக்கள் வாழும் சான்றாக இருக்கிறார்கள். அவர்களுக்கான நம்முடைய கடமையை நாம் எப்போது செய்யப் போகிறோம்?

தொடர்புள்ள பதிவுகள்:

கூடங்குளத்திடன் போர்தொடுத்திருக்கும் தமிழ்நாடு

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்

கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

One thought on “இடிந்தகரை மக்களின் கம்யூனிசப் பண்பாடு

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s