மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?

சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்டு கொரில்லாக்களால் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம், அரசு மற்றும் ஆளும் வர்க்க ஊடகங்களிடம் ஆத்திரத்தையும் வெறியையும் கிளப்பியிருக்கிறது. “அரசாங்கம் இனிமேலாவது முதுகெலும்புடன் நடந்து கொள்ளவேண்டும்” என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நரைத்த மீசைகளின் ஊடாக ஆங்கில சானல்களில் உருமுகிறார்கள்.

“தங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லையென்று மாவோயிஸ்டுகள் நிரூபித்துவிட்டதால், எதிரி நாட்டுப் படையாகக் கருதி மாவோயிஸ்டுகளை ஒடுக்கவேண்டும்” என்று தலையங்கம் தீட்டியிருக்கிறது தினமணி. இத்தகைய வழிமுறையைக் கையாண்டிருப்பதன் மூலம், உன்னதமான இலட்சியத்துக்குப் பாடுபடுபவர்கள் என்று கூறிக்கொள்வதற்கான அருகதையை மாவோயிஸ்டுகள் இழந்துவிட்டதாக கூறுகிறது, இந்து நாளேடு.

இதுகாறும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு காட்டி வந்ததைப் போலவும், இந்தக் கடத்தல் நடவடிக்கை காரணமாக மேற்படி ஆதரவை திரும்பப் பெறுவது போலவும் நடிக்கின்றன ஊடகங்கள். நேற்று வரை மாவோயிஸ்டுகளிடம் அரசு மிகுந்த இரக்கம் காட்டியதைப் போலவும், இனி மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவர்களை ஒடுக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதாகவும் ஒரு பொய்ச்சித்திரம் தீட்டப்படுகிறது.

இந்தக் கடத்தலுக்கான காரணம் விளங்கிக் கொள்ள முடியாததல்ல. பல்வேறு பொய்வழக்குகளின் கீழ் ஆண்டுக் கணக்கில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பழங்குடி மக்களையும் தமது தோழர்களையும் விடுவிக்கவேண்டும் என்பதுதான் மாவோயிஸ்டுகளின் கோரிக்கை. பிணை மனு, வாய்தா, வழக்கு என்று அலைந்து சட்டபூர்வமான வழிகளில் நிவாரணம் பெறவேண்டுமேயன்றி, இப்படி ஆள்கடத்தலில் ஈடுபடுவது ஜனநாயக முறையல்ல என்பது ஊடகங்கள் மாவோயிஸ்டுகளுக்கு கூறும் அறிவுரை.

“அக்யூஸ்டை பிடிக்க முடியாவிட்டால், அவன் பெண்டாட்டியை, பிள்ளையைக் கடத்து” என்பதுதான் போலீசு ஆத்திச்சூடியின் ‘அறம் செய விரும்பு’. ஆள்கடத்தல் என்பது போலீசின் அன்றாடப்பணி. இந்தியாவில் ஆள்கடத்தலே நடக்காத ஒரு போலீசு நிலையத்தைக் ‘கடவுளாலும் ‘ காட்ட முடியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட எல்லா புனிதச் சட்டங்களையும், அவற்றை மீறியதற்காக மாண்புமிகு நீதிமன்றங்கள் தெரிவித்துள்ள கடும் கண்டனங்களையும் கால் தூசாகக் கருதி, கடத்தல், சித்திரவதை, வன்புணர்ச்சி, கொலை போன்ற குற்றங்களை போலீசும் இராணுவமும் தொடர்ந்து செய்து வருகின்றன.

ஆள் கடத்தல் என்பதை போலீசின் இயல்பாக அங்கீகரித்து, அத்தகைய கடத்தல் நடவடிக்கைகளுக்குச் சட்டம் போட்டிருக்கும் கடிவாளமல்லவோ ‘ஹேபியஸ் கார்ப்பஸ்’ எனப்படும் ஆட்கொணர்வு மனு. இந்திய உயர் நீதிமன்றங்களின் நாட்குறிப்புகளில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்யப்படாத நாள் ஒன்றை யாரேனும் காட்ட இயலுமா? “இந்த ஜனநாயகத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை, இல்லை, இல்லவே இல்லை” என்று யர் நீதிமன்ற நீதிபதிகளின் ‘தலையில் அடித்து’ சத்தியம் செய்ததே சென்னை போலீசு, அதைத் தொலைக்காட்சிகளில் இந்த நாடே காணவில்லையா?

மக்களுக்கும்கூட இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லைதான். தங்களுக்கு எதிராக அடுக்கடுக்காக அநீதி இழைக்கப்பட்ட போதிலும், இந்த நாட்டின் மக்கள் கலகம் செய்யாமலிருப்பதற்குக் காரணம் சட்டத்தின் காவலர்கள் எனப்படுவோர் மீது அவர்கள் கொண்டிருக்கும் அச்சமேயன்றி, ஜனநாயகத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையல்ல. நீதி பெறுவதற்கு வேறு வழியறியாத காரணத்தினால் அடங்கிப் போகும் மக்களின் முன், இந்த அரசைப் பணிய வைப்பதற்கான வழியை மாவோயிஸ்டுகள் காட்டியிருக்கிறார்கள்.

ஜனநாயகத்தில் மாவோயிஸ்டுகளுக்கு நம்பிக்கை இல்லாததால், அவர்கள் மீது போர் தொடுக்கவேண்டும் என்கிறது தினமணி. ஜார்கண்டு மாநிலச் சிறைகளில் 6000 பழங்குடி மக்கள் விசாரணைக் கைதிகளாக அடைபட்டிருக்கிறார்கள். சட்டீஸ்கரின் ஜகதால்பூர் சிறையில் மட்டும் 612 பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் வேறெந்த கிரிமினல் குற்றத்துக்காகவும் சிறையில் இல்லை. டாடா, ஜின்டால் போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு தங்களது நிலத்தைத் தாரைவார்க்க மறுத்த குற்றத்துக்காகப் பொய் வழக்குகளில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மக்களெல்லாம் ‘ஜனநாயகத்தின் மீது தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை’ நிரூபிக்க வேண்டுமானால், நிலத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிடவேண்டும். அல்லது ராம் ஜெத்மலானி போன்ற வழக்குரைஞர்களை அமர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வெளியே வந்து, அதன் பின்னர் ‘ஜனநாயக முறைப்படி’ வாய்தாவுக்கு அலைய வேண்டும். காஷ்மீரில் போலீசின் மீது கல்லெறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 20,000 சிறுவர்கள் ஆண்டுக்கணக்கில் வாய்தாவுக்கு அலைவதாக சமீபத்திய பி.பி.சி. செய்தி கூறுகிறது.

கூடங்குளத்தில் அமைதி வழியில் தமது எதிர்ப்பை தெரிவித்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது சுமார் 180 பொய் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஓரிரு வழக்குகளில் மட்டும் கைது செய்யப்பட்ட 200 பேர், ஒரு மாதம் சிறையிலிருந்து, பின்னர் பிணையில் வெளியே வந்து தற்போது அன்றாடம் போலீசு நிலையத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். போராட முனைந்தால் பொய்வழக்குகள் இருநூறும் உயிர்த்தெழும்.

பொய் வழக்கு என்பது மக்களுடைய நெற்றிப் பொட்டில் அழுத்தப்படும் துப்பாக்கி. ‘சத்தம்போடாமல் நிலத்தைக் கொடு, காட்டைக் கொடு, அணு உலையை ஒப்புக்கொள்’ என்று வாயில் துணி அடைத்துப் பணிய வைக்கும் வன்புணர்ச்சி. இந்த அரசு சொல்கிறது மாவோயிஸ்டுகளின் கடத்தல் என்பது அரசை மிரட்டிப் பணியவைப்பதாம், அது ஜனநாயக வழிமுறை இல்லையாம்!

ஆயுதப் போராட்டப் பாதையைக் கைவிட்டு நாடாளுமன்ற அரசியல் நீரோட்டத்தில் கலக்குமாறு மாவோயிஸ்டுகளுக்கு வேண்டுகோள் விடுபவர்களும், இந்த ஜனநாயகத்தின் மீது பெருமதிப்பும், ஜனநாயக வழிமுறைகளின் மீது பெரும்பக்தியும் கொண்டவர்களுமான வலது கம்யூனிஸ்டு கட்சியினருக்கு நேர்ந்திருப்பது என்ன? மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சட்டீஸ்கரில் அவர்களும் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சல்வா ஜூடும் என்ற கூலிப்படையினரும் போலீசும் இணைந்து மக்களுக்கு எதிராக நிகழ்த்திய படுகொலைகளையும் வன்முறைகளையும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த கர்தம் ஜோகா என்ற வலது கம்யூனிஸ்டு தலைவர் மீது “மாவோயிஸ்டு கொரில்லாக்களுடன் சேர்ந்து மத்திய ரிசர்வ் போலீசு படையினர் மீது தாக்குதல் தொடுத்ததாக” வழக்கு போட்டுச் சிறை வைத்திருக்கிறது போலீசு.

வலது கம்யூனிஸ்டு தலைவர்களான ஏ.பி.பரதன், டி.ராஜா போன்றோர் ஜனநாயக முறைப்படி பல தடவை கண்டனம் தெரிவித்தும், நீதிமன்றங்களில் மனுச்செய்தும் சட்டீஸ்கர் அரசு இவரை விடுவிக்கவில்லை. தற்போது மாவோயிஸ்டுகள் வெளியிட்டிருக்கும் விடுவிக்கவேண்டியவர்கள் பட்டியலில் கர்தம் ஜோகாவும் வலது கம்யூனிஸ்டு கட்சியினரும் இருக்கின்றனர். ஜனநாயகப் பூர்வமற்ற வழியில் தனக்குக் கிடைக்கக்கூடிய இந்தப் பிணையில் கர்தம் ஜோகா வெளியே வரலாமா, அல்லது ஜனநாயக வழிமுறையின் மீது தான் கொண்டிருக்கும் விசுவாசத்தை நிரூபிப்பதற்காக அவர் சிறையிலேயே காத்திருக்க வேண்டுமா?

“இந்திய மக்களைக் கண்டு அந்நியர்களான பிரிட்டிஷார் அஞ்சியதைக் காட்டிலும் அதிகமாக, சுதந்திர இந்தியாவின் அரசு அஞ்சுகிறது. தங்களது ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டுமென்று போராடிய இந்தியர்கள் மீது, அரசியல் ரீதியான வழக்குகள் அன்றி வேறு பொய் வழக்குகளை பிரிட்டிஷ் அரசாங்கம் கூடப் போட்டதில்லை” என்கிறார் அவுட்லுக் (19.12.2011) கட்டுரையாளர் நீலப் மிஸ்ரா.

போஸ்கோவுக்கு எதிராக அமைதி வழியில் போராடி வரும் வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் அபய் சாஹூவின் மீது பாலியல் வன்முறை, தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை, வரதட்சிணைக் கொலைக்கு தூண்டுதல், திருட்டு முதலான 50 பொய்வழக்குகளைப் போட்டிருக்கிறது ஒடிசா போலீசு. போஸ்கோ எதிர்ப்பு போராட்டத்தின் முன்னணியாளர்கள் 800 பேர் மீது மட்டும் 200 பொய்வழக்குகள் ஒடிசாவில் போடப்பட்டிருக்கின்றன.

சென்ற ஆண்டு சட்டீஸ்கர் சென்ற சுவாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்கு, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சட்டீஸ்கர் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் மீது, சட்டீஸ்கர் துணைப்படை (பெயர் மாற்றப்பட்ட சல்வா ஜுடும்) துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. சுமார் 2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடத்தி மத்திய ரிசர்வ் போலீசு படையினர் தங்கள் உயிரைக் காப்பாற்றியதாகவும், இனிமேல் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் தாங்கள் விசாரணைக்குச் செல்ல இயலாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர் சி.பி.ஐ அதிகாரிகள். (டைம்ஸ் ஆப் இந்தியா, 14.3.2012) ஆயுதப்படைப் பாதுகாப்பு இல்லாமல் சி.பி.ஐ. அதிகாரிகளே நடமாட முடியாத இடத்தில், சாதாரண பழங்குடி மக்களுக்கு கிடைக்கும் நீதி எத்தகையதாக இருக்கும்?

நிலைமை இவ்வாறிருக்க, இந்தக் கடத்தல் நடவடிக்கையையே அரசுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகச் சித்தரித்திருக்கிறார் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். அலெக்ஸைப் போன்ற இளம் அதிகாரிகளின் அர்ப்பணிப்புமிக்க செயல்பாட்டினால் ஈர்க்கப்படும் மக்கள், தங்களைப் புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் மாவோயிஸ்டுகள் அவரைக் கடத்தியிருக்கிறார்களாம்! அமைச்சர் சொல்வதுதான் உண்மையென்றால், மாவோயிஸ்டுகள் தம் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விட்டுவிட வேண்டியதுதானே! எதற்காக மீட்பு நடவடிக்கைகள், கண்டனங்கள், வேண்டுகோள்கள்?

“பழங்குடி மக்களுக்காகப் போராடுவதாக கூறிக்கொள்ளும் மாவோயிஸ்டுகள், அவர்களுக்கு வளர்ச்சித்திட்ட உதவி வழங்கச் சென்ற அதிகாரியைக் கடத்தலாமா? ஆயுதம் ஏந்தாத ஒரு ஆட்சியரைக் கடத்தலாமா?”என்று கேள்வி எழுப்புகின்றன ஊடகங்கள். ஏதோ ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை அரசு அங்கீகரித்திருப்பதைப் போலவும், யுத்த தருமம் வழுவி நிராயுதபாணியைக் கடத்தியதுதான் பிரச்சினை என்பது போலவும் வெட்கமே இல்லாமல் பேசுகின்றன. தோழர் ஆசாத்தோழர் கிஷன்ஜி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டு முன்னணியாளர்களையும், சாதாரணப் பழங்குடி மக்களையும், மோதல் என்ற பெயரில் நிராயுதபாணியாக நிற்க வைத்து சுட்டுக் கொன்றிருப்பதுதான் இந்த அரசின் யோக்கியதை. சல்வா ஜுடும் செய்த நூற்றுக்கணக்கான கொலைகள், வழக்குகளாக நீதிமன்றங்களில் உறங்குகின்றன. காஷ்மீரிலோ தோண்டுமிடத்திலெல்லாம் பிணங்கள் ஊற்றெடுக்கின்றன. காஷ்மீர் மாநில அரசே அதிகாரபூர்வமாக ஒப்புக் கொள்ளும் கணக்கின்படி, இராணுவம் அழைத்துச் சென்று அதன்பின் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1200 க்கும் மேல்!

போலீசு நடத்தியிருக்கும் ஆள் கடத்தல்களையும் போலி மோதல் கொலைகளையும் மறுக்க முடியாதென்பதால், “அரசைப் போலவே நீங்களும் நடந்து கொள்ளலாமா?” என்று நைச்சியமாக கேள்வி எழுப்புகிறது இந்து நாளேடு. மாவோயிஸ்டுகள் அப்படி நடந்து கொள்ள எண்ணியிருந்தால் ஆட்சியர் அலெக்ஸை தண்டகாரண்ய காடுகளில் ‘காணாமல் போக‘ச் செய்திருக்கலாம். மாறாக, அவரைப் பிணைக்கைதியாக வைத்துக் கொண்டு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

கைதிகளை விடுவிக்கக் கோரும் அவர்களது கோரிக்கைகளில் நீதி இருக்கிறது. “எனினும் அவ்வாறு விடுவிப்பது சட்டத்துக்கு விரோதமானது” என்கிறார்கள் வல்லுநர்கள். உண்மைதான். ‘நீதி’ சட்டவிரோதமானதாகவும், அநீதிகள் சட்டபூர்வமானவையாகவும் நிலைநாட்டப்பட்டிருக்கும் நாட்டில், சட்டப்படி நீதியைப் பெறுவது கடினம்தான்.

காடுகள், மலைகள், ஆறுகள் அனைத்தும் சமூகத்தின் பொதுச்சொத்துகள் என்பதே, மனிதகுலம் இதுகாறும் கடைப்பிடித்துவரும் நீதி. அந்த நீதியை இன்று சட்டவிரோதமாக்கி விட்டது தனியார்மயக் கொள்கை. அதனால்தான் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதே சட்டவிரோத நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

பழங்குடிகளை, அவர்களது பாரம்பரிய வாழ்விடத்திலிருந்து விரட்டியடிப்பதன் மூலம், சொத்து என்ற சொல்லையே கேள்விப்பட்டிராத அம்மக்களின் மீது தனிச் சொத்தின் ஆவி இறக்கப்படுகிறது. வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்துவதன் வாயிலாக கற்பின் மேன்மை அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. நாகரிகத்தின் பொருளையும் நல்லாட்சியையும் (கிராம சுரக்ஷா அபியான்) அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க உலகவங்கி நிதி ஒதுக்குகிறது.

சாலை, மின்சாரம், கல்வி, மருத்துவம் போன்ற பரிசுப் பொதிகளை மோட்டார் சைக்கிளில் சுமந்து கொண்டு முதலில் அலெக்ஸ் பால் மேனன் வருகிறார். அடுத்து தானியங்கித் துப்பாக்கிகளைச் சுமந்தபடி சி.ஆர்.பி.எஃப். விஜயகுமார் வருகிறார். “யாரை முதலில் அனுப்புவது, விஜயகுமாரையா, அலெக்ஸையா? எது முதலில், காட்டு வேட்டையா, வளர்ச்சித் திட்டமா?” என்ற விவாதத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாததால், சில இடங்களுக்கு அவரும், சில இடங்களுக்கு இவரும் முதலில் அனுப்பப்படுகிறார்கள்.

இரண்டையும் அக்கம்பக்கமாகவே பயன்படுத்தி கூடங்குளம் போராட்டத்தை முடக்கிவிட்டதாக டில்லி முதல்வர்கள் மாநாட்டில் பெருமையடித்துக் கொண்டார் ஜெயலலிதா. “500 கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டத்தில் புறங்கையை நக்க வேண்டும். மறுத்தால், 200 பொய் வழக்குகளில் சிறை செல்லத் தயாராக வேண்டும். இரண்டில் எது மக்களின் தெரிவாக இருப்பினும், அணு உலை மட்டும் இயங்கியே தீரும்.” — இதுதான் கூடங்குளம் தந்திரம்.

அலெக்ஸ் பால் மேனனின் சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் ஜெ அரசு எதைச் செய்து வருகிறதோ, அதைத்தான் ராமன் சிங் அரசு சட்டீஸ்கரில் செய்கிறது. நலத்திட்டத்தைக் கடை விரித்து அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை உடைக்கின்ற கைக்கூலிகளான ஊராட்சி மன்ற உறுப்பினர்களை இடிந்தகரை மக்கள் தாக்கியிருக்கின்றனர். அங்கே அலெக்ஸ் கடத்தப்பட்டிருக்கிறார்.

அவர் நேர்மையாளர், சேவை மனப்பான்மை கொண்டவர் என்கிறார்கள். இருக்கலாம், அவையெல்லாம் அவரது தனிப்பட்ட விழுமியங்கள். அவ்வளவுதான். நேர்மையற்ற ஒரு அரசமைப்பை அவர் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை, அவருடைய தனிப்பட்ட நேர்மை ரத்து செய்துவிடுவதில்லை. இந்த உண்மை அவர் அறியாததுமல்ல. மக்களை நாற்புறமும் சுட்டெரிக்கும் இந்த அநீதிகளின் மத்தியில், குற்றவுணர்வின்றி ஆட்சியராகப் பணியாற்றும் மனவலிமையை அவருக்கு வழங்கியிருப்பது அவருடைய தனிப்பட்ட நேர்மைதான் என்றால், அந்த நேர்மை ஆபத்தானது.

அவர் இந்தக் கொலைகார அரசின் கோரைப்பற்களை மறைக்கும் மனித முகம். அறம் கொன்று அம்மணமாய் நிற்கும் ஆளும் வர்க்கத்தின் மானத்தை மறைக்கக் கிடைத்த கோவணம். முழு நிர்வாணப் பாசிசமாய் மக்கள் முன் காட்சியளிப்பதற்கு ஆளும் வர்க்கம் இப்போதைக்கு விரும்பவில்லை என்பதால், ‘கோவணம்’ காப்பாற்றப்படும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

வேறொரு கோணத்தில், ஆளும் வர்க்கத்தின் இந்த அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது தினமணியின் தலையங்கம். “ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் கைவிடும் நிலையில், மக்களின் பிரச்சினைக்காகக் குரலெழுப்ப ஒரு மாற்றுக் கட்சியும் இல்லாமல் போனால், அந்த வெற்றிடத்தை நிரப்ப மாவோயிஸ்டுகள் போன்ற தீவிரவாதிகள் நுழைந்து விடுவார்கள் என்கிற ஆபத்து இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே இருக்கிறது”

ஆபத்துதான். என்ன செய்வது? பாரதிய ஜனதாவும் காங்கிரசும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டினால், மாவோயிஸ்டுகளிடமிருந்து பழங்குடிகளை மீட்டுவிடலாம். முதலாளி வர்க்கம் சொத்துடைமையைத் துறந்து விட்டால் கம்யூனிசத்தையே ஒழித்துவிடலாம். நடப்பதில்லையே!

‘குறைகுடம்’ எனும் தன்னுடைய வலைப்பூவில் செப்டம்பர், 4, 2008 அன்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார் அலெக்ஸ் பால் மேனன்.

எம் அடிமைத்தனம் பெரிது ,
எமைப் பிணைத்திருக்கும் விலங்குகளோ வலிது,
பின்
உடைத்தெடுக்கும் அடிகள் மட்டும் ,
எப்படி
மெதுவாய்?
வலிக்காமல் ?

_________________________________________
– புதிய ஜனநாயகம், மே-2012
_________________________________________

முதல் பதிவு: வினவு

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

7 thoughts on “மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?

  1. கலக்டரை கடத்தலாம் தப்பில்லை. மதவாதம் குண்டு வைக்கலாம் தப்பில்லை. பிறகு எது தான் தப்பு. போலீஸ் இவனுகளை என்கவுண்டர் பண்ணா அது தப்பு. சரி தானா ஸ்டாலின் தம்பி.

  2. நாலு பேருக்கு நல்லது நடக்கணுமுனா எதுவும் செய்யலாம் எசமான்..தப்பில்ல! தொடர்ந்து கடத்துங்க!

    சிறை மீட்கவே இக்கடத்தல் நாடகம் உதவுமே அன்றி, மக்களுக்கு பயனேதும் இல்லை என்று சொல்!

  3. என்ன காரணங்களினால் கடத்தல் தவறில்லை என்பதையே கட்டுரை பேசுகிறது. அதை பேசுவதற்கு நீங்கள் தயாரா?

  4. மாமியாரு உடைச்சா மண்குட‌ம் மருமக உடைச்சா பொண்குடம்.
    கரப்பான் பூச்சியை கொல்றததை விட்டுட்டு ஏம்பா புல்லபூச்சியை கொல்றீங்க.
    இத சொன்னா முதலாலிதுவம், கம்ம்யூனிசம், லெனினிஸம்னு கொடிய புடிசிட்டு வந்துருவாங்க!!!!!!!!!!

  5. ஒய்யால, உங்கள் வீட்டுல இருக்கிற யாரையாவது கடத்தி இருந்தா தெரியும்.

  6. அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டது சரியா தவறா என்ற கேள்விகளுக்கு நடுவில் எவரும் அதன் பின்னணியை ஆராயாமல் ,தமிழர் என்பதற்காகவும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.சிலர் என்ன நிலைப்பாடு எடுப்பது என்று தெரியாமல் குழம்புகின்றனர். இத்தகைய சூழலில் வந்த மிக தெளிவான, தேவையான கட்டுரை.

  7. தனிப்பட்ட ஒரு மனிதனுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எந்த பன்றியும் , ஒட்டு மொத்த மக்கள் அரசாங்க படையால் மிருகங்களை போல் கொலை செய்யப்படும்போதும் , வன்கொடுமைகளுக்குள்ளாகும் போதும் வாயை திறப்பதில்லை. கண்டும் காணதது போல் கிரிக்கட்டில் மூழ்கிவிடுகின்றனர்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s