எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு
மலை குறித்து குரானில் கூறப்படுபவைகள் என்ன? பூமி உங்களை அசைத்து விடாதிருப்பதற்காக மலைகள் முளைகளாக அமைக்கபட்டிருக்கின்றன. மலையின் உயரம் அளவுக்கு பூமிக்குள் மனிதனால் செல்ல முடியாது. குரானின் இந்த இரண்டு கூற்றுகள் தான் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இவைகளை நண்பர் இஹ்சாஸ் எப்படி மறுத்திருக்கிறார்? ஒன்றுமே இல்லை. சொல்லப்போனால் மறுக்கவே இல்லை, கேலி செய்திருக்கிறார் அவ்வளவு தான். முதலில் எழுதப்பட்டிருந்ததை விளங்கிக் கொண்டாரா என்பதே ஐயமாக இருக்கிறது.
மலைகள் முளைகளாக செயல்படுகின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். எவ்வாறென்றால், இருக்கும் எந்த அடுக்கையும் மலைகள் கடந்து செல்லவே இல்லை. இருக்கும் அடுக்குகளில் எந்த அடுக்கையும் கடந்து சென்றிருக்காத போது; பூமியின் மேற்பரப்பில் இருக்கும் அடுக்கில் மட்டுமே மலைகள் அமைந்துருக்கும் போது அதை முளை என்று கூறுவதே பொருட்பிழையானது.
பூமியின் அடுக்குகள் ஒரே சீரான ஆழத்தில் அல்லது அளவில் அமைந்திருக்கவில்லை. ஒவ்வொரு அடுக்கும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான அளவில் இருந்தால் தான் சுழல் வேகம் வெவ்வேறாக இருக்க சாத்தியம் ஏற்படும். ஆனால் பூமியின் மேலோட்டின் எந்த அடுக்கும் சீரான அளவில் இல்லை. அப்படி சீரான அளவில் இல்லாமல் ஏற்றத்தாழ்வாக இருப்பதே தனித்தனி வேகம் பெற்றுவிடாமல் ஒன்றை ஒன்று பிடித்துக் கொண்டு ஒத்த வேகத்தில் சுழல்கிறது. இதில் மலையின் பங்களிப்பு எதுவுமில்லை. இது அறிவியல்.
நண்பர் இஹ்சாஸ் பூமி எனும் ஓர் நூலைப் பற்றி குறிப்பிடுகிறார், ஃப்ரான்க் பிரஸ் என்பவர் (இவர் மருத்துவரா? முனைவரா?) அந்த நூலில் என்ன கூறியிருக்கிறார்? குறிப்பாக பக்கம் 435 ல் இது குறித்து அவர் எழுதியிருப்பதை எடுத்துக் கூறினால் அதை பரிசீலிக்கலாம். ஆனால் நான் ஒரு கேள்வியை அந்த பதிவில் எழுப்பியிருந்தேன், மலைகள் தான் சுழல் வேகம் வெவ்வேறாகாமல் தடுக்கிறது என்று இஸ்லாமிய பரப்புரையாளர்களான விதந்தோதிகள் பலரும் திரும்பத் திரும்ப கூறுகிறார்கள். ஆனால் அந்த வேலையை மலைகள் எப்படி செய்கின்றன? என்றால் அதற்கு பதில் கூற யாருமில்லை. கேட்டால் அந்த விஞ்ஞானி கூறியிருக்கிறார், இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது என்கிறார்கள். ஐயா, அந்த விஞ்ஞானி என்ன கூறினார்? எப்படி விளக்கினார்? புத்தகத்தில் விளக்கப்பட்டிப்பது எப்படி? இதை யாராவது கூறியிருக்கிறார்களா? முதலில் அதைக் கூறுங்கள் பார்த்து விடலாம் அந்த விஞ்ஞ்ஞ்ஞ்ஞான விளக்கத்தை.
குறிப்பிட்ட அந்த வசனம் என்ன கூறுகிறது? பூமி உங்களை அதாவது மனிதர்களை அசைத்துவிடாதிருக்க மலைகளை அமைத்திருப்பதாக அல்லா அல்லது குரான் கூறுகிறது. பூமியின் அசைவுகளாக மூன்றுவித அசைவுகளை குறிப்பிட்டிருந்தேன் அந்த பதிவில். 1. நில நடுக்கம், 2. கண்ட நகர்வுகள், 3. பூமியின் சுழற்சி இந்த மூன்றுவிதமான பூமியின் அசைவில் எந்த அசைவை மலைகள் கட்டுப்படுத்துகின்றன? அதன் மூலம் எப்படி மனிதர்களை காக்கின்றன? சும்மா யாரோ சொன்னார்கள் என்பதற்காக ‘டப்பா’ அடித்து ஒப்பிக்காமல் என்ன கேட்கப்பட்டிருக்கிறது என்பதை கொஞ்சம் புரிவதற்கு முயற்சிக்கலாம். இதற்கிடையில் நண்பர் இப்படி சலித்துக் கொள்கிறார், \\\இவரது வாதங்களுக்கு விரிவாக பதிலளிக்கும் வகையில் எந்த சரக்குமில்லை.அதனால் மிகச்சுருக்கமாக் பதிலளிக்கப்பட்டுள்ளது/// எதில் சரக்கில்லை? கேள்வியில் சரக்கிருக்கிறது, பதில் கூற முனைந்தவருக்குத்தான் சரக்கில்லை என்பதை அவரது பதிவு உணர்த்தி நிற்கிறது.
அறிவியல் வளர வளர அதற்கு தோதாக வசனங்களின் பொருளை மாற்றிக் கொள்வது அல்லது வளைத்து நெளித்துக் கொள்வது என்பது தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்றுதான். அப்படியான வசனம் தான் இது.
.. .. .. நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது. மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது – ஜான் டிரஸ்ட்
.. .. .. நீ பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தை அடையவே மாட்டாய் – பிஜே
.. .. .. that you will never reach (the) end (of)/tear apart the earth/Planet Earth, and you will never reach the mountains (in) height/length (be as tall as the mountains). – லிடரல்
.. .. .. certainly thou wilt never tear the earth open, nor attain the mountains in height. – அர்பெர்ரி
.. .. .. for thou canst not rend the earth asunder, nor reach the mountains in height. – யூசுஃப் அலி
இது போன்று இன்னும் பல மொழிபெயர்ப்புகளைக் காட்ட முடியும். இவைகளை படிக்கும் போது என்ன புரிந்து கொள்ள முடிகிறது? பூமியைப் பிளந்து விட முடியாது, மலையின் உச்சிக்கு உயர்ந்துவிட முடியாது. இது தான் பொருள் ஆனால் பூமியைப் பிளந்து மலையின் அளவுக்கு என்பது அடைப்புக் குறிகளுக்குள் எழுதப்பட்டதோடு சேர்த்துப் படித்தால் வரும் பொருள். அடைப்புக்குறிக்குள் இருப்பது குரான் அல்ல என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது. என்றால் அடைப்புகுறி இல்லாமல் படிக்கும் போதும் அடைப்புக்குறியோடு படிக்கும் போதும் ஏன் இரு வேறு பொருள் தருகிறது அந்த வசனம்? அதில் கிடைக்கும் ‘எக்ஸ்ட்ரா’ பொருளுக்கு பொறுப்பேற்பது யார்? இதில் இருக்கும் இன்னொருஅபாயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனையவர்கள் தாம் நினைக்கும் கருத்தை அடைப்புக் குறிக்குள் போட்டுத்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பிஜேவோ தாம் நினைப்பதை நேரடியாக குரானாகவே போட்டு வைத்திருக்கிறார். இதை மறுக்க விரும்பும் அரபு மொழியில் புலமை பெற்றவர்கள் அந்த வசனத்தில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றனவோ அதை எழுதி அவற்றுக்கான பொருளை தனித்தனியாக தமிழில் எழுதட்டும் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். மொத்தமாக வாக்கியத்துக்கு பொருள் கூறும் போது தான் தகிடுதத்தம் செய்து விடுகிறார்கள்.
சரி, அந்த வசனத்துக்கு பூமியைப் பிளந்து மலையின் உச்சியளவுக்கு என்றே பொருள் கொள்வோம். எந்த மலையின் உச்சியளவுக்கு? ஏனென்றால் பூமியில் நிலத்திலும் கடலிலும் பல்வேறு உயரங்களில் மலைகள் இருக்கின்றன. இதில் எந்த மலையின் உயரத்தின் அளவுக்கு பூமியை பிளக்க முடியாது. ஏனுயரமான மலையின் அளவை எடுத்துக் கொள்ள வேண்டும் குறைந்த மலையின் அளவை எடுத்துக் கொண்டால் என்ன? உயரமான மலையளவு தான் என்பதற்கு வழிகாட்டல் ஏதும் இருக்கிறதா? குரானில் ஒரு புள்ளியும் மாறாது என்கிறார்கள். ஆனால், அவர்களே அவர்கள் விரும்பும் கருத்தை குரானாக எழுதி வைக்கிறார்கள். அல்லாவும் அவன் தூதரும் சொல்லாத ஒன்று இஸ்லாம் அல்ல என்கிறார்கள். ஆனால், அவர்களே குரானின் வசனங்களுக்கு முகம்மது சொல்லாத பொருளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பிஜே இந்த வசனத்தின் பொருளை மேலும் விளக்கும் போது ஒன்றைக் குறிப்பிடுகிறார். மனிதன் வானத்தில் சந்திரனுக்கு சென்று வந்து விட்டான், செவ்வாய் கோளுக்கு இயந்திரங்களை அனுப்பி, எட்டு கோடி கிலோ மீட்டர் தூரத்தை அடைந்து விட்டான் .. .. .. .. என்று கூறிச் செல்கிறார். அதாவது வானில் எட்டு கோடி கிமீ தூரத்தை எட்டி விட்டான் ஆனால் பூமியில் மலையின் அதிக பட்ச உயரமான 9 கிமீ ஆழத்தை அடையவில்லை என்று குரானில் அவர் கூறும் பொருளுக்கு விளக்கம் கூறுகிறார். ஆனால் பூமியின் ஆழத்தில் 12 கிமீ வரை குழாய் இறக்கியிருக்கிறார்கள். என்றால் குரானின் கூற்று பொய்யாகி விட்டதா இல்லையா?
குரானின் மொழிபெயர்ப்புகள் குறித்தும் நண்பர் கூறியிருக்கிறார். ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பு ஒன்றும் ஒதுக்கப்பட்ட மொழிபெயர்ப்பு அல்ல. இன்னும் சொல்லப்போனல் பிஜே மொழிபெயர்ப்பு வெளிவரும் வரையில் ஜான் டிரஸ்ட் மொழி பெயர்ப்பு தான் சரியானது என்று தான் பிஜேவினர் மேற்கோள் காட்டிக் கொண்டிருந்தார்கள் என்பதும் நண்பர் கவனத்திற்கு. இதில் முதன்மைத்தனம் வாய்ந்த ஒரு கேள்வியும் இருக்கிறது. ஏன் கலத்திற்கு காலம் குரான் மொழிபெயர்ப்புகள் மாறிக் கொண்டே இருக்கின்றன? குரான் எக்காலத்திற்கும் மாறாதது என்றால் பொருள் மட்டும் ஏன் மாற வேண்டும். அரபு மொழியின் இலக்கணம் மாறும் போது இலக்கண கூறுகளை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பொருள்.. ..? அதே குரான், அதே மொழி பின் ஏன் பொருள் மாறுபட வேண்டும்? ஏனென்றால் புதுபுது அறிவியல் கண்டு பிடிப்புகள் வர வர தோதுப்படும் வசனங்களில் அறிவியலை இணைத்து பொருள்கொள்வதால் தான் பிற்பாடு வரும் மொழிபெயர்ப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இது சரி என்றால் குரான் காலாகாலத்திற்கும் மாறாது என்பது எப்படி சரியாகும்? குட்டிக்கரணம் அடித்தேனும் குரானைக் காப்பாற்ற முயல்கிறார்கள் என்பது புரிகிறது. ஆனால், பாவம்! குரான் தான் கிழிந்து கொண்டிருக்கிறது.
இதுவரை
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௧ செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨ செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩ செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௪ செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫ செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8