ஹிக்ஸ் போஸானுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு?

 

படித்தவர், பாமரர் பேதமின்றி; அறிந்தவர், அறியாதவர் வித்தியாசமின்றி; ஆன்மீகவாதி, பகுத்தறிவுவாதி வேறுபாடின்றி அனைவராலும் அண்மையில் உச்சரிக்கப்படும் சொல் என்று ‘ஹிக்ஸ் போஸானை’ கூறினால் அது மிகையல்ல. கடவுள் துகள் என்று வேடிக்கையாக குறிப்பிடப்படும் அந்த துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கடவுள் உண்டு என்பதை அறிவியல் ரீதியாக மெய்ப்பித்து விட்டதாகவும், அறிவியல் யூகம் என்ற நிலையில் இருந்த பெருவெடிப்புக் கொள்கையை அறிவியல் உண்மை என்ற நிலைக்கு உயர்த்தி விட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அறிவியலாளர்களோ ‘ஹிக்ஸ் போஸான்’ துகள் இருக்கிறது என்பதை உண்மைப்படுத்தும் சான்றுகள் இருப்பதை 99.9 விழுக்காடு வரை உறுதி கூறமுடியும் என்ற நிலையை ஆய்வின் மூலம் வந்தடைந்திருப்பதாக மிகுந்த எச்சரிக்கையுடன் கூறுகிறார்கள். கடவுள் துகள் குறித்த மக்களின் பரவசத்திற்கும், அறிவியலாளர்களின் எச்சரிக்கைக்கும் இடையில் என்ன இருக்கிறது? ஹிக்ஸ் போஸான் எனும் இயற்பியல் கலைச் சொல்லுடன் கடவுள் எந்த விதத்தில் தொடர்பு கொண்டிருக்கிறார்?

 

இந்த பேரண்டம் எப்படி தொடங்கியது எனும் கேள்விக்கு பெருவெடிப்பு என்பதே இப்போதைய பதில். இந்த பெருவெடிப்பு என்பது கொள்கை தான் அறுதியான ஒன்றல்ல. அலைவுக் கொள்கை, நிலைக் கொள்கை உள்ளிட்டு பேரண்டத் தொடக்கம் குறித்த சில கொள்கைகளில் பெருவெடிப்புக் கொள்கையே சரியானது என்று பெரும்பாலான அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அண்டம் முழுவதும் பரவியிருக்கும் வெப்பம், பருப் பொருட்களின் விரைவு போன்ற சான்றுகளையும் காட்டுகிறார்கள். இந்த பெருவெடிப்பு நிகழ்வின் ஆதிக் கணத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதற்கும் ஒரு அணுவின் கட்டமைப்பில் என்ன இருக்கிறது என்பதற்கும் தொடர்பு இருக்கிறது. அதாவது, ஓர் அணுவிற்குள் இருக்கும் நுண்ணிய அணுக்கூறுகள் பெருவெடிப்பின் பரமாணுவிற்கும் ஒத்திசைவு இருக்கக்கூடும் என்பது அறிவியலாளர்களின் முடிவு. எப்படியென்றால், அண்டம் முழுதும் பரவியிருக்கும் பொருட்கள் அனைத்திற்கும் அடிப்படை அணுவே. அணுவிற்குள் இருக்கும் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியூட்ரான்களின் எண்ணிக்கைகளைக் கொண்டே பொருட்களின் தன்மைகள் மாறுபடுகின்றன. அதேநேரம் மொத்த பேரண்டம் என்பது பருப் பொருட்களால் மட்டுமே ஆனது அல்ல. பருப்பொருட்கள் அல்லாத அறியப்படாத ஆற்றல்களால் சூழப்பட்டதே பேரண்டம். இவைகளை அறிய வேண்டுமென்றால் ஒரு அணுவுக்குள் என்ன இருக்கிறது என்பது அறியப்பட்டாக வேண்டும்.

 

அணுவின் கட்டமைப்பில் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான்கள் அல்லாத வேறு பொருட்களை கண்டறியும் முயற்சியில் அவைகளை அசுர வேகத்தில் மோதவிட்டுப்பார்க்கும் கொலைட்ரான் வகை சோதனைகள் எழுபதுகளின் பிற்பகுதியில் அமெரிக்காவில் தொடங்கின. அணுக்களுக்கு நிறையை அளிக்கும் ஒரு துகளைத்தேடும் பயணத்தில் அமெரிக்காவின் பெர்மி ஆய்வகத்தில் குவார்க்குகளும் பாரியான்களும் கண்டுபிடிக்கப்பட்டாலும், சில கணங்களில் தன்மை மாறிவிடும் போஸான் வகையைச் சேர்ந்த துகள் உறுதிப் படுத்தப்படவில்லை. பீட்டர் ஹிக்ஸ் என்பவர் யூகித்துச் சொன்னதால் அவர் பெயரைக் கொண்டு ஹிக்ஸ் போஸான் துகள் என்றழைக்கப்படுகிறது. பின்னர் அந்த ஆய்வகம் கைவிடப்பட்டது.

 

எண்பதுகளின் இறுதியில் பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில் அமைக்கப்பட்ட செர்ன் ஆய்வகத்தில் நிலைப்படுத்தப்பட்ட மாதிரி (ஸ்டாண்டர்ட் மாடல்) உறுதி செய்யப்பட்டது. மூலாதாரத் துகள்களில் ஆறு குவார்க்குகள், ஆறு லெப்டான்கள், ஐந்து போஸான்களுடன் ஆறாவது போஸானாக ஹிக்ஸ் போஸானும் சேர்க்கப்பட்டு அதைக் கண்டடைந்தே தீர்வதென்று எலக்ட்ரான்களையும் புரோட்டான்களையும் ஒளி வேகத்தில் மோதவிட்டு, அதன்மூலம் சூரியனை விட ஒரு லட்சம் மடங்கு அதிக வெப்பத்தில் பெருவெடிப்பின் துவக்க கணங்களை ஆய்வகத்தில் உண்டாக்கி ஹிக்ஸ் போஸான் துகள் வெளிப்படுகிறதா என சோதித்தறிவது தான் ஆய்வகத்தின் நோக்கம். இங்கிருந்து தான் ஹிக்ஸ் போஸானை கண்டடைந்து விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். இரண்டாயிரத்தின் துவக்க ஆண்டுகளில் ஹிக்ஸ்போஸானை யார் முதலில் கண்டுபிடிப்பது செர்ன் ஆய்வுக் கூடமா? பெர்மி ஆய்வுக் கூடமா? என்றொரு போட்டியே நடந்தது. மட்டுமல்லாது, தாங்கள் அந்த துகளை கண்டுபிடித்துவிட்டோம் என்று பெர்மி ஆய்வுக்கூட இத்தாலிய அறிவியலாளர்கள் பொய்யாக அறிவிக்கவும் செய்தார்கள்.

 

அறிவியலாளர்களை அதிகம் அலைக்கழிக்கும் துகள் எனும் கருத்தில் நாசமாய்ப் போன துகள் எனும் பெயரில் ‘Goddamn particle’ ஒரு நூலை வெளியிட நோபல் பரிசு பெற்ற அறிவியலாளரான லியான் லாடர்மேன் விரும்பினார். ஆனால் அந்நூலின் பதிப்பகத்தார், நூலின் தலைப்பு ஒரு வசைச் சொல்லாக இருப்பதா எனும் எண்ணத்தில் நூலின் தலைப்பை ‘God particle’ என்று மாற்றினார். நூலின் விற்பனைக்காகவும், பரபரப்பிற்காகவும் சூட்டப்பட்ட ‘கடவுள் துகள்’ எனும் பெயர் இன்று கடவுள் இருப்பதை அறிவியல் உறுதி செய்துவிட்டது என்று பிதற்றும் அளவிற்கு சென்றிருக்கிறது.

 

பொதுவாக அறிவியல், மக்களுக்காக மக்கள் நலம், மக்கள் முன்னேற்றம் என்ற திசையில் பயணப்பட வேண்டும். ஆனால் தற்போது அறிவியல் முன்னேற்றம் மட்டுமல்ல, சமூக முன்னேற்றம் என்பதும் முதலாளிகளின் முன்னேற்றம் மட்டுமே. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு புதுவிதமான ஆயுதங்களை கண்டுபிடித்தாக வேண்டிய அவசியத்தில் இருந்து இயற்பியலிலிருந்து துகள் இயற்பியல் என்றொரு தனித்துறை உருவாக்கப்பட்டு அசுர வளர்ச்சியடைந்தது. இதன் தொடர்ச்சியாகவே அணு குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்தப்பயணம் இன்னும் நுணுக்கமாகவும், இன்னும் விரைவாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதன் பொருள், உலகை ஒரே வர்த்தக குடையின் கீழ் கொண்டுவரும் ஏகாதிபத்திய நோக்கத்திற்கு இந்த ஆய்வுகள் ஏதோ வகையில் உதவிக் கொண்டிருக்கின்றன என்பதைத் தவிர வேறொன்று இருக்க முடியாது.

 

இதை அறிவியலுக்கு எதிரான கருத்து என்று திரிக்க முடியாது. என்னதான் ஆக்கபூர்வமான பயன்பாடு, இராணுவப் பயன்பாடு என்று அணு அறிவியலை இரண்டாக பிரித்திருந்தாலும்; அது பரந்துபட்ட மக்களுக்கு அழிவு சக்தியாகவும், முதலாளிகளுக்கு ஆக்க சக்தியாகவுமே இன்றுவரை அணு அறிவியல் பயன்பட்டிருக்கிறது என்பது கண்கூடு. ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு குறித்து பரவசப்படும் ஒரு கூலித் தொழிலாளிக்கு அதனால் கிடைத்த பலன்கள் என்ன? அணுவைப் பிளந்தால் அபரிதமான சக்தி உருவாகும் என்பதில் ஒரு விவசாயிக்கு என்ன பயன் கிடைத்திருக்கிறது? ஆனால் முதலாளிகளுக்கு .. ..? மூடி மறைப்பதற்காக செய்யப்படும் வெகு மக்கள் பயன்களை பட்டியலிடுவதை விட அறிவியல் வளர்ச்சிகள் எந்த நோக்கில் பயணப்படுகிறது என்பதை சிந்தித்துப் பார்ப்பதே சரியானதாக இருக்கும்.

 

இப்பேரண்டம் எப்படித் தோன்றியது என்பதில் தொடங்கி பருப் பொருட்களின் அடிப்படைத் துகள்களின் தன்மைகளை ஆராய்வது வரை அறிவியலின் தேவை மனித குலத்தின் பயணத்திற்கு அவசியமானது தான். ஆனால் எல்லாவற்றிலும் லாபம் ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும் ஏகாதிபத்தியங்களின் கைகளில் அறிவியல் மட்டும் மக்களுக்கு பயனுள்ள வழியில் மட்டுமே செல்லும் என்று யாரால் உறுதி கூற முடியும்? செவ்வாயில் நுண்ணுயிரிகள் இருக்கிறதா என்பதை ஆளில்ல்லா விண்கலங்கள் மூலம் ஆராயும் அறிவியல் கேவலம் கொசுக்களை ஒழிப்பதை நோக்கி ஏன் பயணப்பட முடியவில்லை? அறிவியலை வியப்பதற்கான ஒன்றாக கருதாமல் வாழ்க்கைக்கானதாக மாற்ற வேண்டுமானால் சமூகம் மாற வேண்டும், அரசியல் மாற வேண்டும். அந்த மாற்றம் நேரும் போது தான் அறிவியல் மக்களின் கைகளில் இருக்கும்.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

7 பதில்கள்

 1. கொசுக்களைகூட ஒழிக்க, சமூகம் மாற வேண்டும், அரசியல் மாற வேண்டும். அந்த மாற்றம் நேரும் போது தான் இந்த கொசுக்களையும் உற்பத்தி செய்யும் இடங்களையும் ஒழிக்க முடியும்.

 2. //பீட்டர் ஹிக்ஸ் என்பவர் யூகித்துச் சொன்னதால் அவர் பெயரைக் கொண்டு ஹிக்ஸ் போஸான் துகள் என்றழைக்கப்படுகிறது. பின்னர் அந்த ஆய்வகம் கைவிடப்பட்டது.//

  ஹிக்ஸ் சரி! போஸானை ‘மறந்துட்டீங்களே’.

 3. நன்றி சீனு, மறந்து விட்டேன்.

  சத்தியேந்திர போஸின் நினைவாகவே போஸான் என்று அழைக்கப்படுகிறது.

 4. kudika kanju illanalum kadavula kandu pudichatha solli santhosama irukalam annachiyo

 5. நல்லதொரு பதிவு தோழரே தங்களின் பதிவை துபாயில் பார்வையிட தடையாக உள்ளதே என்ன காரணம்?

  இனியவன்…

 6. இந்தத் துகள் இருப்பதாக முதலில் சொன்னவர் பீட்டர் ஹிக்ஸ். அந்தப் பெயரில் பாதியை ஹிக்ஸ் என்றும், இந்தத் துகள்களில் இரண்டு வகை இருக்கிறது என பல ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டின் இயற்பியல் அறிஞர் சத்யேந்திர நாத் போஸும், விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் தெரிவித்திருந்தனர். அதனால் அவர்கள் பெயரை இணைத்து ஹிக்ஸ் போஸான் என இந்தக் ‘கடவுளுக்கு’ நாமகரணம் சூட்டிவிட்டனர்!

 7. நண்பர் இனியவன்,

  மெய்யாகவா? நீங்கள் தான் உறுதி செய்து, இயன்றால் காரணம் கேட்டும் சொல்ல முடியும். செய்யலாமா?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: