கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்ரக கல்வி வரை அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும்!
நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!
அன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே,
குறைந்த கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்கின்ற அரசுப் பள்ளிகளையும் ஒழித்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக புகுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் (நமது நாட்டை ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு மீண்டும் அடிமை நாடாக மாற்றும்) கொள்கையின் ஒரு பகுதியே கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டிருப்பதாகும். இது கல்வியை கடைச் சரக்காக மாற்றிவிட்டது என்ற உண்மையை உரக்க ஒலிக்கவும்,
எனவே, எல்லா தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களையும் அரசுடமையாக்க வேண்டும். அவற்றில் எல்லா மாணவர்களுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஒரே பாடத் திட்டம், ஒரே பயிற்றி மற்றும் ஒரே தேர்வு முறை, நல்ல வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி – அருகாமைப் பள்ளி முறைமையை (Common – neibourhood school system) அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த நாங்கள் நூற்றூக்கணக்கான பெற்றோர்களுடன் இணைந்து, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை 28.06.2012 அன்று காலை 11 மணியளவில் நடத்தினோம்.
பள்ளிக் கல்வி இயக்குனரைச் சந்தித்து எங்களது கோரிக்கைகளை வலியுறுத்த அனுமதி தராத போலீசு, எங்கள் மீது வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டது. போலிசின் கொலைவெறித் தாக்குதலையும், அதை எதிர்த்து எவ்வித அச்ச உணர்வுமின்றி, ஒருவர்கூட பின்வாங்காமல் எங்கள் தோழர்கள் போர்க்குணத்துடன் போராடியதையும் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அடி வாங்காதவர்கள் என்று யாரும் இல்லை. 3 பெண்கள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் சேர்க்குமளவுக்கு தாக்கப்பட்டனர். எங்களில் 250க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசு, 77 தோழர்கள் மீது 6 பிரிவுகளில் பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைத்தது. இதற்கெல்லாம் நாங்கள் கிஞ்சிற்றும் அஞ்சப் போவதில்லை. போராட்டத்தை தொடர்ந்து நடத்தத்தான் போகிறோம். இதோ, தோழர்கள் சிலர் சிறையில் உள்ள போதும் உங்களிடையே பிரச்சாரத்திற்கும், உங்களை அணி திரட்டுவதற்கும் வந்துள்ளதே இதற்குச் சாட்சி.
கல்வி வள்ளல்கள், கல்வித் தந்தைகள் என்று பட்டம் சூட்டிக் கொண்டுள்ள முன்னாள் சாராய ரவுடிகள், இன்னாள், முன்னாள் ஓட்டுப் பொறுக்கி அரசியலயோக்கியர்கள், சாதி வெறியர்கள், மதவாதிகள், அம்பானி டாடா போன்ற கார்ப்பரேட் திருடர்கள் (முதலாளிகள்) பன்னாட்டு பண முதலாளிகள் ஆகியோரிடமிருந்து கல்வித்துறையை மீட்டு, அரசால் இலவசமாக வழங்கப்படும் சேவைத்துறையாக மாற்றும் வரை எங்களது போராட்டம் ஓயாது.
இந்த பகற் கொள்ளையர்கள் கல்வித்துறையில் மட்டுமல்ல, மருத்துவம், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து உட்பட எல்லா சேவைத் துறைகளிலும் ஏறி உட்கார்ந்து கொண்டு மக்களை கசக்கிப்பிழிகிறார்கள். நாட்டின் எல்லா கனிவளங்களையும், மக்களின் உழைப்பு சக்தியையும், அரசுப் பணத்தையும் படிப்படியாக தங்களது உடமையாக்கி மொத்தத்தையும் உறிஞ்சி கொழுத்துக் கொண்டே போகிறார்கள்.
மக்களையும் நாட்டையும் பகற்கொள்ளையடிக்கும் இவர்களின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமாகவே நடக்கின்றன. இவைகள் மத்திய மாநில் அரசுகளின் கொள்கை முடிவுகளாக அறிவிக்கப்பட்டு நடக்கின்றன. பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் – தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் என்ற பெயரில் – நடந்து வருகின்றன.
மத்தியிலும் மாநிலங்களிலும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற எல்லா வண்ண முன்னணிகளும் கட்சிகளும் இந்த மறுகாலனியாக்க கொள்கையை அமல்படுத்துவதில் ஒரே அணியில் நிற்கின்றன. போட்டி போட்டுக் கொண்டு நடைமுறை படுத்துகின்றன.
எனவே, ஓட்டுப் போட்டு நமக்கு மேலே இருக்கின்ற சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதன் மூலம் இந்த மறுகாலனியாக்க கொள்கையை முறியடிக்க முடியாது. ஏனென்றால் இவைகள் சட்டங்களை மட்டுமே இயற்றக் கூடிய பழைய வகை ஜனநாயகக் கருவிகள். இந்த பழைய வகை ஜனநாயகத்தில் சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரம் போலீசு, கலெக்டர்கள், நீதிபதிகளிடம் மட்டுமே உள்ளது. இவர்கள் எல்லாம் மருகாலனியாக்க கொள்கையின் பாதுகாவலர்கள் தான். கல்விக் கொள்ளையர்களின் எடுபிடிகள் தான்.
எனவே, மக்களே உள்ளூர் அளவில் கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும், நக்சல்பாரி பாதையில் நமக்கான புதிய ஜனநாயக அரசை நிருவுவதன் மூலமே மறுகாலனியாக்க கொள்கையையும், அதன் ஒரு பகுதியாக உள்ள கல்வியில் தனியார்மயத்தையும் ஒழிக்க முடியும். கட்டணக் குறைப்பு, 25 சதவீதம் ஒதுக்கீடு போன்ற சீர்திருத்த சட்டங்களையெல்லாம் தனியார் கல்வி முதலாளிகள் எவனும் மயிரளவுக்குக் கூட மதிப்பதில்லை. அரசாங்கம், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றநீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் இவர்களின் முன் கைகட்டி நிற்கிறார்கள்.
ஆமாம். இது உண்மை தான். இருந்தாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் தான் தரமான உயர் ரக கல்வியைத் தருகின்றன. எனவே இங்கே நம் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் நல்ல வேலைக்குப் போக முடியும்; அதிக சம்பளம் கிடைக்கும். அதற்காக கடனையோ உடனையோ வாங்கி படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஆங்கில கான்வெண்டுகளில் சேர்க்கிறார்கள். சில லட்சங்களைக் கொடுத்து ‘தரமான’ தனியார் பள்லி கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.
எங்களது மதிப்பிற்குறிய சகோதர சகோதரிகளே, பெற்றோர்களே, பெரியோர்களே..! நீங்கள் கடுமையாக உழைத்து, பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்; அவர்களை நல்ல வேலையில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற உங்களது பாசத்திற்கு நாங்கள் தலை வணங்குகிறோம். அதே வேளையில், கீழே நாங்கள் சொல்கின்ற உண்மை நிலவரங்களை அதே பாசத்தோடும் பரிவோடும் பரிசீலித்துப் பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
தொழில் திறமையை விட வரி ஏய்ப்பு, அந்நிய செலவாணி மோசடி போன்ற பல தகிடுதத்தங்களின் மூலமே பெரும் கோடீஸ்வரர்களாக உப்பிவரும் டாடா அம்பானி போன்ற முதலாளிகள், முன்னாள் இன்னாள் கிரிமினல்கள்,ஓட்டுப் பொறுக்கித் தலைவர்கள், அரசு பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்றோர்கள் தான் தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை நடத்துகிறார்கள்.
இவர்களின் நோக்கம் தரமான கல்விச் சேவையை வழங்குவதல்ல, கொள்ளை லாபம் அடிப்பது தான். எனவே அவர்களுக்கே உரிய ‘தொழில் முறைப்படி’ புறம்போக்கு நிலங்கள் ஏரிகளை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவர் போட்டுக் கொள்கிறார்கள். சில கட்டுமான வசதிகளை மட்டும் செய்து வைத்துக் கொண்டு, காண்ட்ராக்ட் முறையில் தகுதியற்ற ஆசிரியர்களை அமர்த்திக் கொண்டு நவீன கட்டுமான வசதிகள், ஆய்வுக் கூடங்கள், கற்பிக்கும் முறைகள் இருப்பதாக விளம்பரம் செய்கின்றனர். அந்தத் துறை படிப்பு இந்தத் துறைப் படிப்பு என்றும், அதுவும் உலகத் தரத்தில் இருப்பதாகவும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், அந்தத் துறைக்கான கட்டிடங்களோ, ஆசிரியர்களோ இருக்க மாட்டார்கள். அந்தக் கட்டணம் இந்தக் கட்டணம் என்று பில்லே கொடுக்காமல் காசு பறிக்கிறார்கள். தங்கள் கல்லூரிகளில் படிக்கும் ஒருசிலருக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைப்பதை வைத்துக் கொண்டு 100 சதவீதம் பிளேஸ்மெண்ட் என்று பொய்யாக விளம்பரம் செய்கிறார்கள்.
இன்னும் ஒருபடி மேலே போய் சில லட்சங்களைக் கொடுத்தால் படிக்காமலே எம்பிஏ, பிஎச்டி போன்ற எந்த பட்டங்களையும் கொடுக்கிறார்கள். தாங்கள் நடத்தும் இப்படிப்பட்ட கலை அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் வேலை செய்யும் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி டாக்டர்களாகவும் நோயாளிகளாகவும் நடிக்க வைத்து புதிய மருத்துவக் கால்லூரி நடத்த அனுமதி பெற்றுக் கொள்கின்றனர்.
இப்படி நினைத்துப் பார்க்க முடியாத விதவிதமான மோசடிகளை, அயோக்கியத்தனங்களை இவர்கள் செய்கிறார்கள். இவை போதாதென்று இப்போது அமெரிக்கா இங்கிலாந்து போற நாடுகளிலுள்ள மோசடி பல்கலைக் கழகங்களும் இங்கே கடைகளைத் திறந்து வருகின்றன. எனவே, இப்படிப்பட்ட பல்கலைக் கழகங்கள் தரமான கல்வி தருகின்றன என நம்புவது, சிட்பண்டுகளில் பணத்தைப் போட்டு சேமிப்பைப் பறிகொடுப்பதற்கு சமமானது. இது ஓட்டுக் கட்சிகளை நம்பி ஏமாறுவது போன்றது.
தமிழ்நாட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இன்னும் கலை அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என பலநூற்றுக் கணக்கான கல்லூரிகள் பணம் பறிக்க வாய் பிளந்து காத்திருக்கின்றன. இவைகளில் ஒரு சில கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைகள் கிடைக்கலாம். மற்றப்படி இந்த பள்ளி கல்லூரிகளில் 80சதவீத மக்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் விருப்பப்படி படிக்க வைப்பது என்பது சாத்தியமே இல்லை.
இன்னொரு பக்கம், கல்விச் சேவையை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையின் ஒரு பகுதியாக அரசாங்கம் கொள்கை ரீதியாக இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நோக்கத்திற்காக, இருக்கின்ற அரசு பள்ளி கல்லூரிகளும் சீரழிய அரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கும் பலகோடி ரூபாய் ஊழல்கள் மோசடிகள் இதற்கொரு எடுத்துக்காட்டு.
இவைகளின் மூலம் தரமான கல்வி பெற தனியார் பள்லி கல்லூரிகள் தான் ஒரே புகலிடம் என பெற்றோர்களை கல்வி முதலாளிகளிடம் அரசே தள்ளி விடுகின்றது. இதை மறைக்கவும் ஊக்குவிக்கவும் தான் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு என்ற ஏற்பாடாகும். இப்படி சேர்க்கப்படும் மாணவர்களுக்கான் கல்விக் கட்டணத்தை அரசே தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொடுக்கும் என்பதும் 14 வயது வரை மட்டும் தான் இலவசகட்டாயக் கல்வி என்பதும் தனியார்மயத்தை ஊக்குவிக்கவே என்று நாங்கள் சொல்வதை நிரூபிப்பதாகவே உள்ளது.
எப்படிப் பார்த்தாலும் இன்றுள்ள பழையவகை ஜனநாயக அமைப்பில் 80 சதவீத மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வி பெறும் உரிமை கூட வலுக்கட்டாயமாக மறுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த அமைப்பையே ஒழித்துக் கட்டி நமக்கான புதிய ஜனநாயக அரசை அமைத்து, அதன் கீழ் எங்கும் பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறைமையைக் கொண்ட அரசாங்கக் கல்வி நிறுவனங்களை மட்டும் நிறுவுவதன் மூலமே, நமது பிள்ளைகளுக்கு கல்வியையும் வேலைகளையும் நாம் நினைத்தபடி பெற முடியும். ஒரு பகுதியிலுள்ள எல்லோருக்கும் அங்குள்ள ரேசன் கடைகளில் மட்டுமே பொருளைப் பெற முடியும். இதைப்போல ஒரு பகுதியில் குடியிருக்கும் அனைவரின் பிள்ளைகளும் ஒரே பள்ளி கல்லூரிகளில் தான் படிக்க வேண்டும். இந்த பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி, கல்லூரிகளில் ஒரே மாதிரியான உயர்தர விஞ்ஞானபூர்வமான கல்வி இலவசமாக வழங்கப்படும். இதற்கான போராட்டப் பாதையில் எங்களுடன் இணைந்து போராட முன்வருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்குவோம்!
ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி தேர்வுமுறை, ஒரே வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி முறைமையை நிலைநாட்டுவோம்!
ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு நாட்டை மறுகாலனியாக்கும் தனியார்மயம், தாராளம்யம்,உலகமயக் கொள்கைகளுக்கு கொள்ளி வைப்போம்!
நக்சல்பாரி பாதையில் மக்களே கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம்!
மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே தவறாமல் கலந்து கொள்வீர், கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடுகளில்
கடலூர் ஜூலை 15ல்
சென்னை ஜூலை 17ல்
திருச்சி ஜூலை 19ல்
விழுப்புரம் ஜூலை 22ல்
////குறைந்த கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்கின்ற அரசுப் பள்ளிகளையும் ஒழித்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே. ////
உண்மைதான். ஊக்குவிக்காமல் தரத்தை கெடுத்து பாதி ஒழித்து விட்டனர். மீதிதான் இவ்வழி.
///இந்த பகற் கொள்ளையர்கள் கல்வித்துறையில் மட்டுமல்ல, மருத்துவம், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து உட்பட எல்லா சேவைத் துறைகளிலும் ஏறி உட்கார்ந்து கொண்டு மக்களை கசக்கிப்பிழிகிறார்கள். நாட்டின் எல்லா கனிவளங்களையும், மக்களின் உழைப்பு சக்தியையும், அரசுப் பணத்தையும் படிப்படியாக தங்களது உடமையாக்கி மொத்தத்தையும் உறிஞ்சி கொழுத்துக் கொண்டே போகிறார்கள்.////
உண்மைதான், எதையும் செய்யாமல் மவுனமாக இருக்கும் மன்மோகன் சிங், ONGC எதிராக அம்பானிக்கு சாதகமாக விழுந்து விழுந்து அசுரவேகத்தில் செயல்படுகிறார். நிலக்கறி விஷயத்தில் அவரின் நேரிடை பங்கு இருக்கிறது.
///இன்னொரு பக்கம், கல்விச் சேவையை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையின் ஒரு பகுதியாக அரசாங்கம் கொள்கை ரீதியாக இந்த முடிவை எடுத்துள்ளது.////
கல்வி சேவையை வழங்குவதுதான் அரசின் கடமை. அதை வழங்காமல் இருந்தால் அரசு எதற்கு.
சகோ, முடிந்தவுடன் மாநாட்டின் நிகழ்ச்சிகளை தொகுத்து எழுதங்கள்