சில ஆண்டுகளாக மேல்மட்டத்துக்கு வராமல் அடங்கியிருந்த காவிரிச் சிக்கல் இந்த ஆண்டு மீண்டு வந்திருக்கிறது. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக திறக்க வேண்டிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் எனும் விவசாயிகளின் குரல் எப்போதும் போல கன்னடத்தின் முறுக்கலாய் முடிந்திருக்கிறது. சில ஆண்டுகளாய் கூட்டப்படாமலிருந்த காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட வைப்பதற்கே நீதிமன்றத்தை நாட வேண்டிய அவலம் நேர்ந்தது.
காவிரி ஆணையத்தை அதிகாரம் இல்லாத அமைப்பு என்று கன்னடம் தாக்கல் செய்த பத்திரத்தில் குறிப்பிட்டிருந்ததற்காக நீதிமன்றம் பிரதமர் அலுவலகத்தை கேள்வி கேட்டிருந்தது. கிட்டத்தட்ட இதே போன்றதொரு கருத்தை முன்னர் ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார். இப்படி பல் இல்லாத அமைப்பு என்று கூறுவது மெய்யாகவே அது அதிகாரமில்லா அமைப்பாக இருக்கிறது என்பதாலோ, அதிகாரம் கொடுத்து மாற்றியமைக்கப்ப்பட வேண்டும் எனும் ஆவலினாலோ அல்ல. அதுமட்டுமன்றி இரண்டு மாநில அரசுகளும், ஓட்டுக் கட்சிகளும் காவிரி நதிநீர் பிரச்சனைக்காக குரல் கொடுப்பதே கூட விவசாய நலனுக்காகவோ, காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை காப்பதற்காகவோ அல்ல. நாட்டிலிருக்கும் எந்தக் கட்சியானலும், மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சனையானாலும் தங்கள் ஓட்டு வங்கியின் சாதக பாதகங்களைக் கொண்டே நிலையெடுக்கின்றனவேயன்றி மக்கள் மீதான அக்கரை ஒருபோதும் ஒரு ஒட்டுக் கட்சியிலும் தொழிற்படுவதில்லை. இதில் காவிரி சிக்கல் மட்டும் விலக்காகி விடுமா என்ன?
காவிரி நடுவர் மன்றம் தன் நீண்ண்ண்ண்ட விசாரணைக்குப் பிறகு 2007ல் தன் இறுதித்தீர்ப்பை வழங்கியது. ஓரளவு நியாயமான அந்தத் தீர்ர்பு சரிவர நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. அரசோ, ஆணையமோ, நீதி மன்றங்களோ அவற்றை கண்காணிக்கவும் இல்லை, கவலைப்படவும் இல்லை. கொஞ்சம் மழை பொழிந்து விட்டால் அனைவரும் மறந்து விடுவார்கள், பொய்த்தால் மட்டுமே கவலை. கன்னடத்தைப் பொருத்தவரை காவிரியில் தமிழ்நாட்டுக்கும் பங்குண்டு என்பதை ஏற்கவே மறுக்கிறார்கள். மிகையாக வரும் நீருக்கான வடிகாலாக மட்டுமே தமிழகம் அவர்களுக்குத் தெரிகிறது. அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்காகவே கன்னட தேசிய வெறியை வளர்த்து வருகிறார்கள். பயிர்கள் வாடுகின்றன என்று தமிழக விவசாயிகள் குரல் கொடுத்த உடனேயே இந்த கன்னட அமைப்புகள் தங்கள் வெறித்தனங்களைத் தொடங்கி விடுகின்றன. தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதும் போக்குவரத்தை நிறுத்தி பதட்டத்தை ஏற்படுத்தியதை வேறு எப்படி எடுத்துக் கொள்வது?
தேசிய ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் பீற்றீக் கொள்ளப்படும் நாட்டில் அண்டை மாநிலங்களுக்கிடையில் ஆற்று நீரைப் பகிர்வதில் பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், ஆண்டை நாடுகளுடன், சிந்து, கங்கை ஆற்றுநீரை பகிர்வதில் பெரிதாக குழப்பம் ஏதும் வந்ததில்லை. சிந்து கங்கையை விட காவிரி, பெரியாற்றில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? சிக்கல் ஆற்று நீரில் இல்லை, தேசிய, பிராந்திய அரசியலில் இருக்கிறது. பல்பொடியிலுருந்து ஆடுமாடுகள் வரை இலவசமாய் கொடுக்கப்படுவதற்கும், மாநிலங்களுக்கிடையேயான சிறிய அளவிலான சிக்கல்கள் கூட தீர்க்கப்படாமல் தொடர்வதற்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அரசு நடைமுறைப்படுத்தி வரும் பொருளாதாரக் கொள்கைகளால் மக்கள் எல்லா வகைகளிலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அது அரசுகளின் மீது திரும்பிவிடக் கூடாது என்பதை ஓட்டுக் கட்சிகள் மிகுந்த கவனத்துடனும், கவலையுடனும் பரிசீலிக்கின்றன. அதனால் தான் ஒருபக்கம் இலவசங்களைக் கொடுத்து அவர்களை ‘தாஜா’ பண்ண முயல்கிறது. மறுபக்கம் எந்த பிரச்சனையானாலும் அவைகளை எளிய முறையில் தீர்ப்பது குறித்து ஆலோசிக்காமல் அதை அப்படியே நீடிக்க வைத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்கின்றன.
நதிநீர் ஆணையத்தை கூட்டக் கோருவது, நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பது; எங்களுக்கே போதிய நீர் இருப்பு இல்லை என்பது, இனவெறி அமைப்புகளை தூண்டி விடுவது இவைகளெல்லாம் மாநில விவசாயிகள் மீது விவசாயத்தின் மீது கொண்ட அக்கரையினால் தமிழக, கன்னட அரசுகள் செய்யும் நடவடிக்கைகளா? இல்லை. விவசாயத்தின் மீதோ, விவசாயிகள் மீதோ அரசுகளுக்கு யாதொரு அக்கரையும் இருக்காது என்பதற்கு லட்சக் கணக்கில் தற்கொலை செய்து மாண்ட விதர்பா விவசாயிகள் சாட்சி. மெய்யாகவே அக்கரை இருந்திருந்தால் ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகளை ரியல் எஸ்டேட் முதளைகள் முழுங்கி ஏப்பம் விட அனுமதித்திருப்பார்களா? இருக்கும் நீர்நிலைகளை முறையாக மரமாத்து செய்யாமல் தூர்ந்து போக விட்டிருப்பார்களா? ஊக வணிகத்திலும் சூதாட்டத்திலும் முதலாளிகளை சுதந்திரமாய் கொள்ளையடிக்க அனுமதித்திருக்கும் அரசு, விளைவிக்கும் விவசாயிடமே விலையைத் தீர்மானிக்கும் உரிமையை வழங்கியிருக்க வேண்டும்.மாறாக போராடிய பிறகும் கூட ஆதார கொள்முதல் விலையை உயர்த்த மறுக்கின்றன அல்லது சொற்பமாக உயர்த்துகின்றன. விவசாயத்தின் மீதோ விவசாயிகள் மீதோ அக்கரை இருப்பது போல் நடிக்க எண்ணியிருந்தால் கூட இவைகள் நடந்திருக்காது. என்றால் வீராவேசமாக அறிக்கை விடுவதும் வழக்குத் தொடுப்பதும் விவசாயிகளின் நலனுக்கா?
ஆண்டுக்கணக்காக நீளும் பேச்சு வார்த்தைகள், பின் நீதி மன்றங்களில் வழக்குத் தொடுப்பது, பாதகமான தீர்ப்பு வந்தால் அதை மாற்றி சட்டமியற்றுவது தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவது பின் முறையீடு பேச்சு வார்த்தை என செக்கு மாட்டுச் சுழலில் சிக்கிக் கொண்டு காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றன. மாநில அரசுகள் உள்நோக்கத்துடன் அட்டகத்தியுடன் சட்டப் போர் புரிகின்றன. மத்திய அரசோ அதே உள்நோக்கத்துடன் கள்ள மௌனம் சாதிக்கிறது. நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் கூட கிடைக்கும் தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்வது என்று விளக்குகிறதேயன்றி, பற்றாக்குறையை எப்படி பகிர்வது என்று விளக்குவதில்லை. இதை வசதியாக பயன்படுத்திக் கொண்டு தான் கன்னட அரசு தொடர்ந்து போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் திறந்து விடவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறது. அதாவது போதிய தண்ணீர் இருப்பு இருந்து மேலதிகமாக கிடைத்தால் தான் தமிழகத்துக்கு திறந்து விடுவோம் என்பதுதான் அதன் பொருள். தெளிவாகச் சொன்னால் காவிரியில் வெள்ளம் வந்தால் திறந்துவிடும் வடிகாலாக மட்டுமே தமிழகம் இருக்க வேண்டும் என்று கன்னடம் எதிர்பார்க்கிறது. உங்கள் மிகைக்கான வடிகாலாக நாங்கள் இருக்க முடியாது என்று எதிர் முயற்சிகள் எடுக்கும் நியாய உணர்ச்சியோ, புவியியல் அமைப்போ தமிழகத்திடம் இல்லை. ஆனால் இவர்களின் இந்த அக்கப்போர்களில் தமிழக கன்னட விவசாயிகளின் பங்களிப்பு என்ன?
இரு மாநில விவசாயிகளும், தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழகத்திலும், திறந்து விடக் கூடாது என்று கன்னடத்திலும் போராடுகிறார்கள். இதை தங்களுக்கு இசைவானதாக தமிழ் தேசியவாதிகளும், கன்னட தேசியவாதிகளும் கருதிக் கொண்டு காரியமாற்றுகிறார்கள். அரசுகளும் இதற்கு ஊக்கமூட்டும் வகையில் இரண்டு மாநில விவசாயிகளையும் எதிரெதிரே நிற்க வைத்து மோதவிடும் நிலைக்கு தள்ளி வருகின்றன கன்னட விவசாயிகள் போதிய நீரின்றி இருக்கும் போது தமிழகம் தண்ணீர் கேட்பதாகவும்; அணைகளில் 75 நூற்றுமேனி தண்ணீர் இருப்பு இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது என்றும் இரு மாநில அரசுகளும் விவசாயிகளிடம் பரப்புரை செய்து வருகின்றன. ஆனால், இரு மாநில அரசுகளும் கையாண்டு வரும் விவசாயக் கொள்கைகளில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதையும், அது விவசாயிகளை விவசாயத்தை விட்டே விரட்டியடிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது என்பதையும் விவசாயிகள் உணர வேண்டும். கன்னட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட்டு விட்டாலோ, அல்லது தண்ணீரை திறந்து விடாமல் அணைகளிலேயே தேக்கி வைத்து விட்டாலோ விவசாயம் செழித்து விடும் என்று கூறி விட முடியுமா? ஒட்டு மொத்தமாக எலிக்கறி திண்ணும் நிலையை நோக்கித்தான் விவசாயிகள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.
தான் பெற்ற பிள்ளையைப் போல் பயிரை பார்த்துப் பார்த்து வளர்க்கும் விவசாயி இன்னொரு விவசாயிக்கு தண்ணீர் இல்லை என்று ஒருபோதும் கூறமாட்டான். ஆனால் விவசாயத்திற்கு தண்ணீர் மட்டுமே பிரச்சனை இல்லை. அரசின் விவசாயக் கொள்கை விவசாயத்தையே சூரையாடுகிறது. அதை மறைப்பதற்குச் செய்யப்படும் அக்கப்போர்கள் தண்ணீர் பிரச்சனைகளை சூடேற்றுகிறது. இரண்டையும் இணைத்து மாநில எல்லைகளைக் கடந்து அரசுகளுக்கு எதிரான போராட்டங்களை வீரியத்துடன் முன்னெடுக்காதவரை விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் வாழ்வில்லை.
தொடர்புடைய கட்டுரைகள்:
காவிரிச் சிக்கலும், கருணா ஜெயாவின் விக்கலும்
தண்ணீர்: நாசமாக்கினால் பரிசு குடித்தால் காசு
காவிரி நடுவர் மன்றம் தன் நீண்ண்ண்ண்ட விசாரணைக்குப் பிறகு 2007ல் தன் இறுதித்தீர்ப்பை வழங்கியது. ஓரளவு நியாயமான அந்தத் தீர்ர்பு சரிவர நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. அரசோ, ஆணையமோ, நீதி மன்றங்களோ அவற்றை கண்காணிக்கவும் இல்லை, கவலைப்படவும் இல்லை. கொஞ்சம் மழை பொழிந்து விட்டால் அனைவரும் மறந்து விடுவார்கள், பொய்த்தால் மட்டுமே கவலை. கன்னடத்தைப் பொருத்தவரை காவிரியில் தமிழ்நாட்டுக்கும் பங்குண்டு என்பதை ஏற்கவே மறுக்கிறார்கள். மிகையாக வரும் நீருக்கான வடிகாலாக மட்டுமே தமிழகம் அவர்களுக்குத் தெரிகிறது. அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்காகவே கன்னட தேசிய வெறியை வளர்த்து வருகிறார்கள். பயிர்கள் வாடுகின்றன என்று தமிழக விவசாயிகள் குரல் கொடுத்த உடனேயே இந்த கன்னட அமைப்புகள் தங்கள் வெறித்தனங்களைத் தொடங்கி விடுகின்றன. தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதும் போக்குவரத்தை நிறுத்தி பதட்டத்தை ஏற்படுத்தியதை வேறு எப்படி எடுத்துக் கொள்வது?