செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 20

கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

தன்னுடைய மறுப்புக் கட்டுரையின் தொடக்கத்தில் நண்பர் இஹ்சாஸ் கயமைத்தனம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, குரானின் சொற்களுக்கு அக்காலத்தில் முழுமையாக பொருள் விளக்கம் தெரியாது. பின்னர் அறிவியல் ஒவ்வொரு விசயத்திலும் நுணுகி விளக்கமளித்தபின் தற்போது தான் குரானின் சொற்களுக்கு முழுமையான பொருள் விளங்குகிறது. அவ்வாறு அறிவியல் வளர்ந்து குரானின் சொற்களுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கு முன்னர் உள்ள மொழி பெயர்ப்புகளை எடுத்துக் காட்டுவது கயமைத்தனம் என்று குறிப்பிட்டிருக்கிறார் நண்பர் இஹ்சாஸ். இந்த விளக்கத்தை மூன்று விதங்களில் கேள்விக்கு உள்ளாக்கலாம்.
1. குரானின் ஆரம்ப காலத்தை விட தற்போது தான் அதன் பொருள் முழுமையாக புரிகிறது என்றால், குரான் தன்னில் குறிப்பிடும் இதை நீங்கள் புரிந்து கொள்வதற்காக எளிமையானதாகவும், முழுமையானதாகவும் ஆக்கியிருக்கிறோம் என்பதன் பொருள் என்ன?
2. நாளை அறிவியல் மேலதிக விபரங்களை கண்டுபிடிக்கும் போது, குரான் வசனங்களின் இன்றைய பொருளும் பிழையுள்ளதாகும் என்றால் காலந்தோறும் குரான் மாறிக் கொண்டே இருக்கும் என்று பொருளாகிறதே?
3. அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்தில் கூறப்படுவது தான் குரான் வசனங்களுக்கான சரியான, சிறந்த பொருள் என்றால், ஒரு வசனத்திற்கு முகம்மது பொருள் கூறிவிட்டால் அதை விடுத்து வேறொரு பொருளை அந்த வசனத்திற்கு கூறுவது முகம்மதை மீறும் செயல் என ஹதீஸ்களில் கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறதே இதை எப்படி புரிந்து கொள்வது?

கருத்து முதல்வாதம் என்பதின் தெளிவான பொருள் இது தான். ஒரு சொல் சொல்லாக அப்படியே இருக்கும் ஆனால் அதன் பொருள் மட்டும் காலத்திற்கு தகுந்தாற்போல் மாறிக் கொண்டிருக்கும். அதாவது மாம்பழம் என்றொரு சொல் 1400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கிறது. அன்று அதன் பொருள் மாமரத்திலிருந்து விளையும் கனி என்பதாக இருந்தது. ஆனால் தற்போது மாம்பழம் எனும் சொல் அப்படியே இருக்கிறது ஆனால் அதன் பொருள் மட்டும் ஆப்பிள் மரத்திலிருந்து விளையும் கனி என்று மாறிவிடுகிறது என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வோமோ அப்படித்தான் குரானின் சொற்களுக்கான பொருளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

‘அலக்’ எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம். இந்தச் சொல்லுக்கான பொருள் என்ன? இந்த வசனத்திற்கு முகம்மது என்ன விளக்கம் கூறினார்? முகம்மதின் காலத்தில் இந்தச் சொல்லுக்கு என்ன பொருள் வழங்கப்பட்டு வந்தது? அல்லது முகம்மதின் காலத்தில் இந்தச் சொல் பொருளற்ற, பயன்படுத்தப்படாத சொல்லா? ஒவ்வொரு வசனமும் சொல்லும்போது அதன் பொருள் என்ன? என்பதை முகம்மது கூறியிருக்கிறார், அவ்வாறு கூறாத வசனங்கள் விளக்கம் கூற வேண்டிய அளவுக்கு கடினமானதாக இல்லாமல் நடைமுறையில் இருக்கும் ஒன்றை பழக்கத்திலுள்ள சொற்களைக் கொண்டு எளிதாகக் கூறப்பட்டிருக்கிறது என்பது பொருள். இந்த அலக் எனும் சொல்லுக்கு முகம்மது விளக்கம் கூறவில்லை என்றால் அது நடைமுறையில் இருந்த சொல் என்றாகும். அப்படி நடைமுறையில் இல்லாத சொல்லாக இருந்து அதை முகம்மது விளக்காமலும் விட்டிருந்தால் உடனிருந்தவர்கள் அது குறித்து விளக்கம் கேட்டிருப்பார்கள். அப்படி விளக்கம் கேட்டு விளக்கமளித்த கதைகள் ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த அலக் எனும் சொல்லுக்கு முகம்மது விளக்கமளித்ததாகவும் இல்லை, உடனிருந்தவர்கள் கேட்டதாகவும் இல்லை, அந்தக் காலத்தில் இந்தச் சொல்லை வேறு எங்கும் பயன்படுத்தியதாகவும் தெரியவில்லை என்றால் இந்தச் சொல்லை எப்படி புரிந்து கொள்வது?

பிஜே என்பவர் கூறியுள்ள விளக்கத்தை எடுத்து மேற்கோள் காட்டியிருக்கிறார் நண்பர் இஹ்சாஸ். அந்த விளக்கம் எப்படி இருக்கிறது என்றால் அலக் எனும் சொல்லுக்கான பொருளாக நடைமுறையில் பயன்படுத்தப்படும் சொற்கள் பொருத்தமற்று இருக்கின்றன. எனவே நான் புதிதாக ஒரு சொல்லை, பொருளை பயன்படுத்தியிருக்கிறேன். அது தான் சரியானது என்கிறார். ஆனால் கட்டுரையில் நான் என்ன கூறியிருந்தேனோ அதையே அவரும் கூறுகிறார். அதாவது நடைமுறையில் அந்தச் சொல்லுக்கு பொருளாக கூறப்பட்டு வந்தவைகள் பொருத்தமற்றுப் போய்விட்டன. எனவே புதிய பொருள் தேவைப்படுகிறது. இதைத்தான் நானும் கூறியிருக்கிறேன். நடைமுறையில் இருந்த சொற்கள் ஏன் பொருத்தமற்றுப் போயின? ஏன் புதிய சொற்கள் தேவைப்பட்டன? ஏனென்றால் அறிவியல் முன்னேற்றம் காண்கிறது. அந்த முன்னேற்றத்தின் ஒளியில் வேதங்கள் மதிப்பிழக்கின்றன. அதனால் தான் புதிய சொற்களை கொண்டு வந்து முட்டுக் கொடுத்து தூக்கி நிருத்துகிறார்கள். இரத்தக்கட்டி என்பதில் தொடங்கி அந்தச் சொல்லின் நேரடிப் பொருள் என்று பிஜே கூறும் இரண்டு பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது வரை இவை தான் அந்தச் சொல்லின் பொருள் என்பதை எப்படி அறிந்து கொண்டார்கள்? முகம்மதின் காலத்தில் புழக்கத்தில் இல்லாத சொல் என்றாலே “நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதை லேசாக்கி வைத்துள்ளேன்” என்பது பொய் என்றாகிவிடும். அல்லது முகம்மதின் சம காலத்தின் இலக்கியங்களில் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருந்ததற்கான அத்தாட்சி வேண்டும். இரண்டில் எதையாவது செய்யமுடியுமா இந்த மதவாதிகளால்? அதிலும் பிஜே கொடுக்கும் விளக்கத்தைப் பாருங்கள், எல்லாம் நாம் சொல்வதை சிந்திக்காமல் ஏற்றுக் கொள்ளும் கூட்டம் இருக்கிறது எனும் தைரியம் தான். \\\ஆணின் உயிரணு மட்டுமோ, பெண்ணின் சினை முட்டை மட்டுமோ மனிதனின் முதல் நிலை அல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொள்வதால் உருவாகும் பொருளிலிருந்துதான் மனிதன் படைக்கப்பட்டான்/// என்று பிஜே விளக்கம் கூறுகிறார். ஆனால் குரானோ \\\சொட்டுச்சொட்டாக ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?/// என்று கேடெகிறது. அதாவது ஆணின் உயிரணுவையே கருவாக உருவகப்படுத்தித்தான் குரானே கூறுகிறது. பாவம் இஹ்சாஸ், மதவாதியாகிவிட்டால் மூளையை கழற்றி வைத்துவிட வேண்டும் போலிருக்கிறது.

அதிலிருந்து ஆண், பெண் .. .. .. பின்னர் வேறு ஒரு படைப்பாக்குதல் போன்ற வசனங்களைக் கொண்டு குரான் கூறும் இது அறிவியலுக்கு புறம்பானது என்று காட்டியிருந்தேன். நண்பர் இஹ்சாஸோ வேறு ஒரு படைப்பாக்குதல் என்பதை வசதியாக மறந்து விட்டு வழக்கம் போல் அதிலிருந்து என்று மொழி பெயர்த்து விட்டார்கள், அவனிலிருந்து என்பது தான் சரியான மொழிபெயர்ப்பு என்று போகிறபோக்கில் கூறிச் செல்கிறார். குரான் வசனங்களிலிருந்து கரு ஆணா பெண்ணா என்பது எப்போது நிர்ணயிக்கப்படுகிறது என்பதற்கு என்ன வரையறுப்புகள் இருக்கின்றன? ஹதீஸ்களில் முகம்மது என்ன உளறி வைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொண்டால் மொழிபெயர்ப்புகளின் மேல் பழியை துடைத்து விட்டு ஒதுங்க முடியாது என்பது எளிதில் விளங்கும்.

குரான் கூறும் கரு வளர்ச்சியும் அறிவியல் கூறும் கரு வளர்ச்சியும் கொஞ்சமும் பொருந்தாதவை என்று காட்டியிருக்கிறேன். மட்டுமல்லாது மாமிசம் சதை என்று வெகு சாதாரணமான விபரணங்கள் தான் குரானில் இருப்பது என்றும் காட்டியிருக்கிறேன். அதை கடந்து செல்லும் நண்பர் இஹ்சாஸ் வழக்கம் போலவே உள்ளங்கள் என்று மொழிபெயர்க்க வேண்டிய இடத்தில் இதயங்கள் என்று மொழி பெயர்த்து விட்டார்கள் என்று மொழி பெயர்ப்பின் மீது பழி போடுகிறார். ஒரு வாதத்திற்காக அப்படியே கொள்வோம். செவிப்புலன் என்றால் அது காது எனும் உறுப்பைக் குறிக்கும், பார்வைப்புலன் என்றால் அது கண் எனும் உறுப்பைக் குறிக்கும் அந்த வரிசையில் உள்ளங்கள் என்று வருகிறதே உள்ளம் என்பது உறுப்பை குறிக்குமா? சரி அப்போதும் உள்ளங்கள் என்று ஏன் பன்மையில் வர வேண்டும்? உங்கள் சமாளிப்புகேஷனுக்கு அளவே இல்லையா?

சொந்த இனத்தின் எதிர்பாலின உயிரணு ஒரு பெண்ணின் உடலுக்கு அன்னியப் பொருள் ஆகுமா? அது அன்னியப் பொருளானால் மனித குலமே உயிர்த்திருக்காது. தன்னை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளவே கருவை உடலில் பாதுகாக்கிறது. அந்த வசனம் குறிப்பது கர்ப்ப காலம் குறித்தா? அன்னியப் பொருள் குறித்தா? வாய்க்கு வந்தது கீரைப்பாட்டு என்றொரு பழமொழி கூறுவார்கள் எங்கள் ஊரில். அது தான் நினைவுக்கு வருகிறது.

கால்நடைகளில் எட்டு ஜோடியைத்தான் மனிதன் புசிப்பதற்கும் பலியிடுவதற்கும் பயன்படுத்தியிருக்கிறானா? ஆடு, மாடு, ஒட்டகம், நாய், பன்றி, குதிரை உள்ளிட்டு யானை வரை ஏராளமான விலங்குகளை மனிதன் கொன்று தின்னவும் பலியிடவும் பயன்படுத்தியிருக்கிறான். இதிலென்ன கணக்கு எட்டு? குரான் எட்டு தான் விதித்திருக்கிறது என்று என்று அந்த எட்டு என்னென்ன என்று நண்பர் இஹ்சாஸ் கூற முன்வர வேண்டும். அப்போது நாம் உணர்த்தலாம் அது எவ்வளவு போலித்தனமாக இருக்கிறது என்று.

இந்த மறுப்பில் நண்பர் இஹ்சாஸ் கூறியிருப்பதெல்லாம் மொழிபெயர்ப்பு தவறு என்றதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. மதவாத சமாளிப்புகளைக் கடந்து இனியாவது அவர் நல்ல பதிவுகளைத் தர வேண்டும் என்று அந்த எல்லாம் வல்ல அல்லாவிடம் நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.

ஈழம்: 80களின் எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்

 

ilangai

2009 ல் இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள பாசிச அரசால் கொல்லப்பட்டட்து அறிந்ததே. இது குறித்து ராஜபக்சே கூறிக் கொண்டிருந்தவை பொய் என்பதை சேனல் 4 நிறுவனம் அண்மையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு அம்பலப்படுத்தியது. தொடர்ந்து அமெரிக்காவும் இலங்கையை எதிர்த்து ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று சில கட்சிகளும் இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று வேறு சில கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இதனிடையே இலங்கையின் போர்க்குற்றங்களைக் கண்டித்து சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். நாண்கு நாட்களுக்குப் பிறகு இரவோடிரவாக காவல்துறை அவர்களை கைது செய்து அப்புறப்படுத்த, தற்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடங்கி தமிழகம் முழுவதும் கலை, சட்ட, பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே போராட்டம் பரவி வருகிறது.

 

மெய்யாக அங்கு நடந்தது இனப்பேரழிவு என்பதிலோ, ராஜபக்சே கும்பல் அதை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையாக சித்தரித்து வருகிறார்கள் என்பதிலோ யாருக்கும் ஐயம் இல்லை. ஆனால் அதற்கு தீர்வு என்ன என்பதில் அமெரிக்க தீர்மானத்தின் பின்னே ஒழிந்து கொள்கிறார்கள். அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தோ எதிர்த்தோ ஆன நிலைபாடுகளில் தான் இந்தப் போராட்டங்கள் எழுந்திருக்கின்றன. தன்னுடைய ஏகாதிபத்திய நலன்களுக்கு எந்த நாடு ஆதரவாக இருக்கிறதோ அந்த நாடு என்ன விதமான கொடூரங்களைப் புரிந்தாலும் அதை கண்டு கொள்ளாமலிருப்பதும், எதிரான நாடுகள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அதன் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி நாசம் செய்வதும் அதை உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதும். நாடுகளைப் பணிய வைப்பதற்காக எந்த விதமான எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதும் யாருக்கும் தெரியாத இரகசியங்களல்ல. இப்போது அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் இந்த வகைப்பாட்டில் அடங்காது மெய்யான அக்கரையினால் தயாரிக்கப்பட்ட தீர்மானம் என்று யாரேனும் கூற முடியுமா? அல்லது ராஜபக்சே கும்பலை இதனால் தண்டித்து விட முடியுமா?

 

அத்தனை ஓட்டுக் கட்சிகளும் காங்கிரஸ் அரசு இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோருவதையே அல்லது இன்னும் கடுமையாக்க வேண்டும் என்பதையே ஈழத் தமிழர்களுக்கான மீட்சியாக கருதிக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. திமுக ஆட்சியில் இருக்கும் போது இவாறாக நடிக்க முடியாமல் போனதற்கான பிராயச்சித்தமாக டெசோ, வேலைநிறுத்தம் என்று ‘ரன்’ சேர்க்க முயன்று கொண்டிருக்கிறது. மட்டுமல்லாது தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால் ஆதரவு வாபஸ் ஏண்றோறு சிக்ஸரையும் அடித்திருக்கிறது. ஏனைய கட்சிகளின் போக்குகளோ இந்த எழுச்சியின் பயனை திமுக அறுவடை செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன. ஆம். அத்தனை ஓட்டுக் கட்சிகளின் கவலையும் அது தான். மக்கள் எழுச்சியை தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதும், வேறொரு கட்சி அதை பயன்படுத்திக் கொள்ளாமல் எப்படி தடுப்பது என்பதும் தான் எப்போதும் அவர்களின் கவலை.

 

இந்த விவகாரத்தில் திமுக முழுதாக அம்பலப்பட்டு நிற்கிறது. ஆட்சியில் இருக்கும் போது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றும், “ஒரு அடிமை என்ன செய்துவிட முடியும்?” என்றும் பிலாக்கானம் பாடி விட்டு இப்போது ஆதரவு வாபஸ் என்பது சவடால் தான். அதிமுகவோ ஆட்சியில் இல்லாத போதே, காங்கிரசுடன் கூட்டணியில் இல்லாத போதே “போர் என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றதும் தொடர்ந்து புலிப்பூச்சாண்டி காட்டியே தன்னுடைய அரசியலை செய்து கொண்டிருக்கிறது என்பதும் வெளிப்படை. இப்போதும் கூட மாணவர்கள் போராட்டம் பரவத் தொடங்குகிறது என அறிந்ததும் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விமுறை அறிவித்ததன் மூலம்ஆனாலும் ஜெயலலிதா இன்றும் ஈழத்தாயாக தன்னை பராமரித்துக் கொண்டிருக்கிறார். இடது வலது போலிகளோ அரசை எதிர்த்து போராடும் தேசிய இனம், அந்த இனத்தை இனவழிப்பு செய்ததில் இந்திய அரசின் பாத்திரம் எனும் அடிப்படையில் பார்க்காமல் ஈழமக்களின் துயரம் எனும் எல்லையில் நின்று கொண்டு மார்க்சியச் சொல்லாடல்களில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். வைகோ, சீமான், நெடுமாறன் போன்ற புலி அபிமான தமிழ் தேசிய வியாதிகள் பாலச் சந்திரன் மரணத்தை மட்டும் போர்க்குற்றம் என்று ஓங்கிக் கூறி பிரபாகரனை இதோ வருகிறார், அதோ வருகிறார் என்று சுவிசேச பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன், நடேசன், கரும்புலிகள் உள்ளட்ட அனைத்துமே போர்க்குற்றங்கள் தாம் என்பதைப் பேச மறுக்கிறார்கள். பேசினால் புலிகளின் சரணடைவுக்கான அரசியல், இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த பிம்பங்கள் குறித்து பேச வேண்டியதிருக்கும். ஆக இவர்கள் அனைவரின் நாடகங்களும் தங்களின் நலன் எனும் ஒற்றைப் புள்ளியிலிருந்து கிளைத்தவை தானேயன்றி ஈழ மக்களுக்குக்கான தீர்வு எனும் தாகமோ, ஊக்கமோ இதில் இல்லை.

 

இந்த நிலையில் தான் தன்னெழுச்சியாக கல்லூரி மாணவர்கள் திரண்டு போராட்டங்களை தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளும் அமெரிக்க தீர்மானத்தைச் சுற்றியே இருக்கின்றன. இந்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்கிறார்கள், கடுமைப்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஈழ மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவழிப்பின் கொடூரங்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அவர்களின் உரிமைகள் மீளக் கிடைக்க வேண்டும் எனும் மெய்யான உந்துதலிலிருந்து நடத்தப்படும் இந்தப் போராட்டங்களில் சரியான அரசியலும் சேர்ந்து கொள்ளும் போது மட்டுமே ஈழமக்களுக்கான உரிமையில் இப்போராட்டங்கள் சரியான பங்களிப்பைச் செலுத்த முடியும்.

 

முதலில் இதில் இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது கள்ளனிடமே சாவியைக் கொடுப்பது போன்றது. ஏனென்றால்  ஈழ இனவழிப்பில் இலங்கை அரசைப் போலவே இந்திய அரசும் போர்க் குற்றவாளி தான். இராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றங்களை ராஜபக்சே விசாரிப்பது எப்படி அயோக்கியத்தனமானதோ, அது போலவே இந்தியாவை ராஜபக்சேவுக்கு எதிராக விசாரிக்கக் கோருவதும் அயோக்கியமானதே. இந்தியா தீர்மானம் கொண்டுவருவதற்கு தகுதியற்றது என்றால் அமெரிக்கா போர்க்குற்றம் எனும் சொல்லை உச்சரிக்கவே அறுகதையற்றது. ஏனென்றால் உலகில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் அத்தனை போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறலிலும் அமெரிக்காவின் பங்களிப்பு இருக்கிறது. அதாவது அத்தனை மனித உரிமை மீறலும் அமெரிக்காவின் நலனுக்காகவே நடத்தப்படுகிறது. ஐ.நா. அவையோ அமெரிக்காவின் இன்னொரு நாட்டில் அத்துமீறுவதற்கான மனித உரிமை அனுமதி வாங்கித்தரும் ஏஜென்ஸியாக செயல்படுகிறது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும்போது, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்பதும், இந்தியா திருத்தங்கள் செய்து மேலும் கடுமையாக்க வேண்டும் என்பதும் அந்த அயோக்கியத்தனத்தை மறைக்கவே பயன்படும்.

 

எனவே இந்த அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவதே தமிழக தமிழர்களின் முதல் பணியாக இருக்க வேண்டும். ஓர் ஒடுக்கும் நாட்டின் உழைக்கும் மக்களுக்கு சொந்த நாடு இன்னொரு நாட்டை ஒடுக்குவதை எதிர்த்து குரல் கொடுப்பதும் போராடுவதுமே முதன்மையான பணியாக இருக்க முடியும். அந்த வகையிலும் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதும், இந்தியாவை திருத்தம் செய்யக் கோருவதும் தவறான முடிவாகவே இருக்கும். தமிழினவாதிகள் இப்போதே இந்தியாவும் இந்த இனவழிப்பில் பங்கெடுத்திருப்பதை கூறினாலும் அது மாத்திரைக் குறைவாகவே ஒலிக்கிறது. ஏனென்றால், அவ்வாறு அவர்கள் கூறும் போதே காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் அவர்களின் நினைவில் வந்தாடுகிறது. எனவே அடக்கி வாசிக்கிறார்கள். எனவே உரக்கச் சொல்வோம், ஈழ இனவழிப்பில் இந்தியாவும் போர்க்குற்றவாளியே.

 

 

ராஜபக்சேவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் பல வண்ண கோரிக்கைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கப் போவதில்லை. ஆனால் யார் அதை முன்னெடுப்பது? அமெரிக்காவுக்கோ அதன் தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கோ அறுகதை இல்லை, இந்தியாவுக்கோ தகுதியில்லை. பின் யார் முன்னெடுப்பது? மக்கள் தாம். இலங்கையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நாடோ இந்த விசாரணையை நடத்தாமல் ஹிட்லரின் நாஜி படைகளுக்கு எதிராக நடந்த நூரம்பர்க் போர்க்குற்ற விசாரணையைப் போல உலக நாடுகள் அனைத்தும் பொறுப்பேற்று நடத்த வேண்டும். இதை அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களும் தம் சொந்த அரசை இதற்கு நிர்ப்பந்தம் செய்வதன் மூலம் சாதிக்க வேண்டும். அன்றைய உலகம் முதலாளித்துவ முகாம், சோசலிச முகாம் என்று இரண்டு பிரிவாக இருந்ததனால் ஓரளவுக்கு சரியாக நூரம்பர்க் விசாரணையின் போக்கு இருந்ததது. ஆனால் இன்று சோசலிச முகாம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுவிட்ட பின்னால் முதலாளித்துவ முகாம் மட்டுமே நிலவும் இன்றைய உலகில் அத்தகைய விசாரணை சாத்தியமா என்பது கேள்விக்குறி தான் என்றாலும். அயோக்கியத்தன அம்மணங்களை மூடி மறைக்கும் கோமணத் துணியாக பயன்படுவதைக் காட்டிலும் காரிய சித்தியுள்ள வழி இது தான்.

 

எனவே, இந்த திசை வழியில் தமிழகத்தில் 80களில் ஏற்பட்ட எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்.

இஸ்லாமிய மதவாத அமைப்புகள் + கமல் = விஸ்வரூப ஆட்டங்கள் .. .. .. ?

 

பிதுங்கி வழியும் கூட்டமான ஒரு பேரூந்துப் பயணம். ஒரு பெரியவர் பையில் தன்னுட்டைய ஏதோ தேவைக்காக பணம் எடுத்துச் செல்கிறார். இதை அறிந்த ஒரு திருடன் கமுக்கமாக பையைக் கிழித்து பணத்தை திருடி விட்டான். பின்னர் இதை உணர்ந்த பெரியவர், பணம் திருடு போனதை விட்டு விட்டு “என் பையைக் கிழித்து விட்டான்” “என் பையைக் கிழித்து விட்டான்” கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் அவரை எப்படி புரிந்து கொள்வீர்கள்?

 

தன்னை காமெடியனாய் நினைத்துக் கொண்டு வடிவேலு செய்யும் உதார் தனங்களை, உலக நாயகனாய் கருதிக் கொண்டு கமல் செய்திருப்பது தான் விஸ்வரூபம். படத்தைப் பார்த்துவிட்டு இந்த காமெடிக் கூத்துக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களா என்றுதான் தோன்றியது. ஒருவேளை கமல் குஞ்சுகளைப் போல், கமல் படத்தில் ‘ஏதோ’ இருக்கும் என்று ஓவராய் எதிர்பார்த்து விட்டேனோ. வழக்கமாக இது போன்ற மசாலா படங்களின் நாயகர்கள் பெரும் தீரச் செயல்கள் செய்து நாட்டையும், மக்களையும்(!) காப்பார்கள். அப்படியான காட்சி சாகசங்கள் ஏதுமின்றி விஸ்வரூபம் வெகு சாதாரணமாய் இருக்கிறது.

 

தேர்ந்த கதக் கலைஞனாக இருக்கும் கமல் திடீரென ரப்பனா ஃபித்துன்யா என்று முஸ்லீமாய் மாறி அடித்துத் துவைத்து, காஷ்மீரியாக அல்காய்தாவுக்கும் தாலிபான்களுக்கும் பயிற்சியளித்து, இந்திய ரகசிய உளவளியாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பாராட்டுதல்களோடு அமெரிக்காவையையும் அமெரிக்க மக்களையும் அணுகுண்டு வெடிப்பிலிருந்து காத்து நான் சாக வேண்டும் அல்லது முல்லா உமர் சாக வேண்டும் என்று வஜனம் பேசுகிறார். இந்தியா அமெரிக்காவின் ஏவல் நாயாக ஆகியிருக்கிறது என்பதை சிம்பாலிக்காக உணர்த்தும் இந்தப்படத்தில் ஒரு பொழுது போக்கு மொக்கைப்படம் எனும் அடிப்படையில் திரைக்கதையில் இருக்கும் கேலிக் கூத்துகளையெல்லாம் ஒதுக்கி விடலாம். கதை எனும் பெயரில் கூறப்படும் அராஜகங்களை என்ன செய்வது?

 

கதையின்படி, அமெரிக்கர்கள் சிலரை கைதிகளாக பிடித்து வைத்திருக்க அவர்களை மீட்பதற்காக அமெரிக்கா ஆப்கானின் மீது போர் தொடுக்கிறது. அதிலும் பெண்கள் குழந்தைகள் மீது அமெரிக்கர்கள் குண்டு வீச மாட்டார்கள் என்று தாலிபான்களே கூறும் அளவுக்கு, தவறுதலாக ஒரு பெண் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து விடும் போது அமெரிக்க வீரன் வருந்தும் அளவுக்கு அந்தப் போர் நடந்து கைதிகளை மீட்டுச் செல்கிறது. இதற்காக தாலிபான்கள் அமெரிக்கா மீது கோபம் கொண்டு சீசியம் குண்டு வைத்து அமெரிக்க மக்களை அழித்து பழிவாங்க முயல்கிறார்கள். அதை மைக்ரோவேவ் அவனை கவித்து வைத்து காப்பாற்றுகிறார் கதாநாயகன். மெய்யாகவே தாலிபான், அல்காய்தா வுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள தொடர்பு இப்படித்தானா?

 

தாலிபான்களிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்றி விஸ்வரூபம் கண்டவர்கள் யாருக்காவது தெரியுமா? அமெரிக்க ஜனாதிபதி ரீகன் தாலிபான்களின் முன்னோடிகளான ஆப்கான் ஜிஹாதிகளை வெள்ளை மாளிகைக்கே அழைத்து கௌரவித்தார் என்று. அறுபதுகளின் இறுதியில் சோவியத்தின் உதவியுடன் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைச் செய்தது மன்னர் சாஹிர்ஷா தலைமையிலான ஆப்கானிஸ்தான். சோவியத்தின் நட்பு நாடாக எந்த ஒரு நாடும் இருந்து விடக்கூடாது என எண்ணிய அமெரிக்கா காபூல் பல்கலைக் கழகத்தில் ‘இஸ்லாமிய மாணவர் அமைப்பை’ உருவாக்கியது. இந்த அமைப்பின் உதவியுடன் தான் 1973ல் மன்னரின் ஆட்சி ஒரு சதிப்புரட்சி மூலம் கலைக்கப்பட்டது. பின்னர் 1979ல் ரஷ்ய சமூக ஏகதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு; அதை எதிர்ப்பதற்காக அல்காய்தாவும் அதன் பிறகு தாலிபான்களும் அமெரிக்க அரேபிய நிதியுதவியுடன் தேசியவாதம் பேசினார்கள். அமெரிக்கா உலகின் ஏகாதிபத்தியங்களுக்கு ஒற்றை தலைமையாய் உருவானபின் அல்காய்தா இனி தேவைப்படாது என்றான பின் முரண்பாடுகள் உருவாக்கப்பட்டன. இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பிறகும் கூட பின்லாடனின் குடும்பத்தினரை பத்திரமாக தனி விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றிய தகவலை ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார் ஜான் பெர்க்கின்ஸ். தேசியவாதமோ, மனிதநேயமோ, போர்க்குற்றமோ, இஸ்லாமிய மதவாதமோ எதுவானாலும் அமெரிக்க நலனுக்கு உகந்ததாக இருக்கும் வரைதான் இருக்க முடியும் அமெரிக்க நலனுக்கு எதிரானால் அடுத்த கணமே அது மனித குலத்துக்கு எதிரான குற்றமாகி அமெரிக்க விமானங்கள் குண்டு வீசும்.

 

அப்படி ஆப்கான் மீது, பெண்கள் குழந்தகள் என எதையும் பாராது அமெரிக்க குண்டு வீசியதைத்தான் தாலிபான்கள் பிடித்து வைத்திருந்த அமெரிக்க கைதிகளை மீட்பதற்குத்தான் குண்டு வீசியதாகவும் அதுவும் பெண்கள் குழந்தைகள் மீது படாமல் குண்டு வீசியதாகவும் அயோக்கியத்தனம் செய்திருக்கிறார் கமல். இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டு எந்த முஸ்லீமுக்கும் கோபம் வரவில்லை. ஒவ்வொரு காஷ்மீரி முஸ்லீமும் இந்திய குண்டுகளையே கல்வீசி எதிர்கொள்கிறான். அந்த அடிமை இந்தியாவின் ஆண்டை அமெரிக்கா ஆப்கான் முஸ்லீம்கள் மீது குண்டு வீசுவதற்கு ஒரு காஷ்மீரி முஸ்லீம் துணையாக இருக்கிறான். இந்த மோசடியைக் கண்டு எந்த முஸ்லீமுக்கும் கோபம் வரவில்லை. இந்த படத்தில் இருப்பது அரசியலா? மதமா? என்பது எந்த முஸ்லீமுக்கும் தெரியவில்லையா? அதிலிருக்கும் அரசியலை மறைத்து மதமாக காட்டியது தான் மதவாத இயக்க தலைவர்களின் அரசியல். விஸ்வரூபத்தை எதிர்த்து பெரும் போராட்டங்களை(!) நடத்திய முஸ்லீம்கள், தங்கள் தலைவர்களின் அரசியலையும் புரிந்து கொள்ளவில்லை, திரைப்படத்தின் அரசியலையும் புரிந்து கொள்ளவில்லை.

 

இஸ்லாம் எனும் மதத்துக்கு எதிராக விஸ்வரூபத்தில் என்ன இருக்கிறது? ஏழு வெட்டுகள், சில இடங்களில் ஒலியடக்கல், தொடக்கத்தில் இது கற்பனைக் கதை என்று எழுதிக் காண்பிப்பது. விஸ்வரூபம் வெளிவருவதற்கு இஸ்லாமிய மதவாத அமைப்புகள் விதித்த நிபந்தனைகள் இவை. முதலில் இந்தப் படத்தை  இந்த தலைவர்களுக்கு போட்டுக் காட்டிய போது இந்த திருத்தங்களுடன் அனுமதிக்கிறோம் என்று எந்த மதவாத தலைவரும் கூறவில்லை. எந்த வெட்டையும் அனுமதிக்க மாட்டோம் என்று திரைப்பட தரப்பிலும் கூறவில்லை. படம்பார்த்துவிட்டு வெளியில் வந்த மதவாத தலைவர்கள் “இதுவரை இல்லாத அளவில் மிக மோசமாக இஸ்லாம் கேவலப்படுத்தப் பட்டிருக்கிறது. இப்படம் வெளிவர அனுமதிக்க மாட்டோம்” என்றார்கள். இதுவரை இல்லாத அளவில் கேவலப்படுத்தப்பட்டிருப்பதாக கூறியவர்கள் ஏழு வெட்டுக்கு உடன்பட்டு வெளியிட அனுமதித்திருக்கிறார்கள். அந்த வெட்டுகள் எவை? குரான் ஓதிவிட்டு குண்டு வைப்பது, தொழுதுவிட்டு வெடிப்பது, குரான் வசனங்களின் பின்னணியில் கொலை செய்வது, குரான் வசனங்களை ஓதிக் கொண்டே கொலை செய்வது போன்ற காட்சிகள் தான். இதில் இதுவரை இல்லாத ஆளவில் இஸ்லாம் எப்படி கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது? இவை திரைக் காட்சிகளாக அல்ல, நிஜக் காட்சிகளாகவே தாராளமாக இணையத்தில் காணக் கிடப்பவை தான். இவைகளை வெட்டியவுடன் இஸ்லாத்தின் மீது இந்தப்படம் சுமத்திய களங்கங்கள் போக்கப்பட்டு விட்டனவா?

 

இந்தப் படம் முஸ்லீம்களின் மனதை புண்படுத்துகிறது எனவே, வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று அறிக்கை விட்டவுடன் வரிசையாக மாவட்ட ஆட்சியர்களெல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று படத்துக்கு தடை விதித்து கூடவே 144 தடையுத்தரவும் போட்டிருந்தார்கள். அப்படியென்றால் இது மதவாத தலைவர்களின் விருப்பமா? ஜெயாவின் விருப்பமா?

 

இன்று மதவாதிகள் எண்ணக் கூடும் 24 அமைப்புகள் ஒற்றுமையாய் ஒரு குரலில் நின்று எதிர்த்ததனால் தங்களின் நிபந்தனைகள் ஏற்று படம் வெட்டப்பட்டிருக்கிறது இது எங்களின் வெற்றி என்று. மெய்யான வெற்றி கமலுக்குத்தான். ஒருவேளை படம் முடக்கப்பட்டிருந்தாலும் கமலுக்கு பெரிய அளவில் நட்டம் எதுவும் ஏற்பட்டிருக்கப் போவதில்லை. இது இல்லையென்றால் இன்னொன்று. ஆனால் அவ்வாறு நட்டம் ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்று தான் இஸ்லாமிய மதவாத அமைப்புகள் கவலைப் பட்டிருக்கின்றன. அதனால் தான் இந்தப்படம் வெளிவரவே கூடாது. இதுவரை இல்லாத அளவில் இஸ்லாம் இந்தப் படத்தில் இழிவுபடுத்தப் பட்டிருக்கிறது என்று கூறி படம் பார்க்கும் ஆவலை எல்லோரிடமும் ஏற்படுத்தியவர்கள். ஏன் இந்தப் படத்துக்கு நட்டம் ஏற்படக் கூடாது? இஸ்லாமிய மீட்டுருவாக்கத்திற்கு திட்டம் போட்டுக் கொடுத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த அமெரிக்காவை தூக்கிப்பிடிக்கும் படமல்லவா? அதனால் தான் இலவச விளம்பரம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

மார்ச் 8 – உலக உழைக்கும் பெண்கள் தினம்!

working woman

அன்பார்ந்த உழைக்கும் பெண்களே !

     முதன் முதலில் மார்ச் 8 படைத்த பெண்கள் ஏதோ வேலைக்கு சம ஊதியம் என்ற கூலி உயர்வு பிரச்சனைக்காக போரடிய நாள் மட்டும் அல்ல. ஆண்களுக்கு இணையான ஊதியம், நிர்ணயித்த வேலை நேரம், வாக்குரிமை என தங்கள் அரசியல் உரிமைக்காக போரடிய நாள் தங்களுடைய உரிமைகளைப் பெற போராட வேண்டும், அமைப்பாக திரள வேண்டுமென பெண்கள் தங்களே உணைர்ந்த நாள். உலகிற்கும் உணர்த்திய நாள்.

     டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹெகனில் 1910ம் ஆண்டு நடைபெற்ற சோசலிசத்துக்கான இரண்டாவது அனைத்துலக மாநாட்டில், ஜெர்மனியின் தொழிலாளர் தலைவர் தோழர் கிளாரா ஜெட்கின் முன்மொழிந்ததன் அடிப்படையில், மார்ச்-8ம் நாள் அனைத்துலக பெண்கள் தினமாக பிரகடனம் செய்யப்பட்டு 1911-ம் ஆண்டிலிருந்து பின்பற்றப்படுகிறது.

     இந்நாளில் தான் சமூக அமைப்பினாலும், குடும்ப நிறுவனத்தாலும் அடிமைப்படுத்தபட்ட பெண்கள் தங்கள் விடுதலைக்கான கடந்த கால போரட்டங்களின் தோல்விகளிலிருந்து பாடம் பெறவும், காயங்களை ஆற்றிக்கொள்ளவும், பெற்ற வெற்றிகளிலிருந்து வீரம் பெறவும், புத்துணர்வு பெறவும், விடுதலைக்கான திசைவழியைத் தீர்மானிக்கவும், தங்களை புதுப்பித்துக் கொள்ளவுமான நாள் தான் மார்ச்-8.

     சமூக வரலாற்றில் கால்நடை வளைப்பு, விவசாயத்தைக் கண்டரிந்த்தது, முதன்முதலில் நெருப்பை உருவாக்கியது போன்றவற்றை பெண்கள் கண்டறிந்து தந்ததால்தான். மனித குலம் இன்றைய நாகரீக கட்டத்திற்கு வந்துள்ளோம். ஒவ்வொரு சமூகக் கட்ட உழைப்பில் மட்டுமல்லை, வரலாற்றில் பெண் வாடையில்லாத போரட்டம் ஏதுமில்லை.. பெண் கை கொடுக்காமல் புரட்சிகள் ஜெயித்ததுமில்லை. அனைத்திற்கும் மேலாக பெண்கள் மனிதகுலத்தை பேணிகின்ற மறுஉற்பத்தித் திறனை தனக்குள் கொண்டுள்ள பெண்ணினத்தை சமூகம் கொண்டாட வேண்டும்.

     ஆனால் ”இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப் படுகிறார். ஒவ்வொரு 7வது நிமிடத்திலும் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறார். ஒவ்வொரு 42 நிமிடத்திலும் ஒரு வரதட்சிணை சாவு நடக்கிறது. பெண்கள் மீதான வன்முறைக் குற்றங்களாக பதிவாகியுள்ள ஏறத்தாழ 93,000 வழக்குகள் இன்னமும் விசாரனைக்கு வரவில்லை”-இது தான் இந்தியத் தாய் நாடு. நமது தாய்மார்களை நடத்தும் விதம்.

     காலம் காலமாக வீட்டு வேலை, குடும்ப பராமரிப்பு என சமூகத்திற்கு தங்களது உழைப்பை செலுத்தி வந்த பெண்களை தனியார்மயம் – தாராளமயம் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது.

     கூடுதலான வேலை, குறைவான கூலி, சங்கமாக திரளமாட்டார்கள் போன்ற காரணங்களால் உருவான புதிய வேலைவாய்ப்புகள் பெண்களை வீடுகளிலிருந்து வீதிக்கு இழுத்து வந்தது.

     ஹோட்டல் சப்ளையர்களாக, நகை, ஜவுளிக்கடை விற்பனையாளர்களாக, பஞ்சலை, ஆயத்த ஆடை தொழிலாளர்களாக, நோக்கியா போன்ற மின்னணுத் தொழிலகங்களில் ஒப்பந்த கூலிகளாக, I.T. நிறுவனத்தில், வங்கிகளில் ஊழியர்களாக, மருத்துவமனை நர்சுகளாக, பெட்ரோல் பல்கிலும், வீட்டிலும் வேலைகாரர்களாக என எங்கெங்காணினும் பெண் உழைப்பாளர்களால் தான் தற்போதைய நவீன உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

     ஒருபுறம் சலிப்பூட்டும் வீட்டு வேலை, குழந்தைப் பராமரிப்பு என்றால், மறுபுறம் உடலையும், மனதையும் சக்கையாக பிழியும் மூலதனச் சுரண்டல். மறுகால்ணியாக்கம் பெண்களின் உழைப்புச் சுரண்டலை மட்டுமில்லை அவர்களின் உடலையும் விற்பனைச் சரக்காக்கி உள்ளது.

     பெண்களின் அங்கங்களை கடைபரப்பும் தகவல் தொப்ழில் நுட்பம். தொலைபேசி நிறுவனங்கள் பெண்களை வைத்து நடத்தும் சரச சல்லாப உரையாடல் “சேவைகள்”. அந்நிய செலாவணிக்காக சுற்றுலா பொருளாதாரம் என்ற பெயரில் நடக்கும் விபச்சாரம்.

     குத்துப்பாட்டையும், பொறுக்கித்தனத்தையும் கொண்டாடும் சினிமாக்கள், “ஆண்டிகளை மடக்கும்” வக்கிரங்களை எழுதி இளைஞ்சர்களையும், மாணவர்களையும் சீரழிக்கும் ”டைம்பாஸ்” மஞ்சள் பத்திரிக்கைகள், கள்ளக்காதல் சீரியல்கள், “மானாட மயிலாட” என “குத்தாட்ட” நடனங்களால் ஆண்களை உசுப்பேற்றும் சேனல்கள், இவற்றால் வெறியூட்டப்பட்ட ஆண்கள் பொது இடம், வீடு என்று எல்லா இடங்களிலும் பெண்களை பாய்ந்து குதறுகிறார்கள்.

     ஒருபுறம் பன்னாட்டு நிறுவனங்கள் லாபவெறிக்காக அம்பிகாக்களின் இரத்தத்தை, உயிரை உறிஞ்சினால், மறுபுறம் ஆணாதிக்கம் தனது காமவெறிக்கு நிர்பயாக்களையும், வினோதினிகளையும் கடித்து குதறுகிறது.

     பாலியல் வல்லுறவு குற்றங்கள் மட்டும் அதிகரிக்கவில்லை. ஆசிட் வீச்சு, வரதட்சனை கொலை, “கெளரவக்” கொலைகளும், பெண் கருக்கொலை பெண் சிசுக் கொலைகளும் அதிகரித்துள்ளது என மக்கள் தொகை கணக்கெடுப்பு அமல்படுத்தியுள்ளது.

     ஒரு பெண் எந்த குற்றமும்செய்ய வேண்டியதில்லை.அவள் ஒரு பெண்ணாக இருக்கிறாள் என்பத்ற்காகவே வன்முறை குற்றங்கள் ஏவிவிடப்படுகின்றன.

 பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்கள் சிவில் சமூகத்தின் உதிரி கிரிமினல்களால் தான் ஏற்படுகிறது என பலரும் கருதுகின்றார்கள். ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறப்படும் அரசு எந்திரமே பெண்களுக்கு எதிராகத்தான் உள்ளது.

வாச்சாத்தி, சின்னாம்பதி, சிதம்பரம் பத்மினி என போலீசின் யோக்கியதைக்கு எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம்.

காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இராணுவம் நடத்திய காமவெறி – கொலைவெறி அட்டூழியங்களை மணிப்பூர் தாய்மார்கள் “எங்களையும் வல்லுறவு கொள் இந்திய இராணுவமே!” என நிர்வாணமாக போராடி இராணுவத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். இராணுவத்தின் பாலியல் குற்றம் அம்பலமானாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பாலியல் குற்றத்தில் ஈடுபடும் இராணுவத்தினரை சிவில் கோர்ட்டுகளில் கிரிமினல் சட்டங்களின் கீழ் தண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரைத்த முக்கியமான சில சீர்த்திருத்தங்களை கூட அரசு ஏற்கவில்லை.

நீதித்துறையோ பன்வாரிதேவி என்ற ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த பெண்ணை ஆதிக்க சாதி வெறியர்களால் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் “தாழ்த்தப்பட்ட பெண்ணை மேல் சாதி மக்கள் தீண்டவே மாட்டார்கள் எனவே வல்லுறவு நடந்தது என்பது பொய்” என தீர்ப்பு கூறி ஆதிக்க சாதி காமவெறியர்களை விடுதலை செய்தது, பின் அடுத்த வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. அடுத்த 15 ஆண்டுகளில் அந்த வழக்கு ஒரே ஒரு முறைதான் விச்சரனைக்கு வந்தது. ஒரு பாலியல் வல்லுறவு வழக்கு 20,25 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் ஒரே தேசம் இந்தியாவாகத்தான் இருக்கும்.

wwday

பெண்கள் காதலித்தால் இந்துவ பரிவாரங்கள், ஜாட், யாத்வ், வன்னிய, தேவர், கவுண்டர் சாதிய அரசியல்வாதிகள் அரிவாளோடும் தீவெட்டியோடும் நிற்கிறார்கள்.

ஓட்டுக்கட்சிகளில் பெரும்பாலும் ஆணாதிக்க வாதிகளாகவே இருக்கின்றனர். காமவெறி காளியாட்டங்களில், சின்னவீடு சமாசாரங்களில், பாலியல் புற்றங்களில் சட்டமன்ற – நாடாலுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் வெளிவந்து அம்பலமானது. கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர்கள் செல்போனில் ஆபாசபடம் பார்த்தது மீடியாக்களில் அம்பலமாகி நாறியது.

இவை அனைத்தும் இது ஜனநாயக அரசு அல்ல, பெண்களை சமத்துவமாக நடத்தும் அரசியல் அமைப்பும் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன. வேலை வாய்ப்பில், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு, பெண் போலீசு, பெண் நீதிபதிகள், மகளிர் காவல் நிலையங்கள் போன்றவற்றால் இன்றைய அரசியல் அமைப்பின் கீழ் தொடரும் பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்துவிடத்தான் முடியுமா ? முடியாது !

நிலபிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பு, மறுகாலணியாக்கம் என இரு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்காமல் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த முடியாது. இவ்விரு நுகத்தடிகளையும் கட்டி காத்து வருகின்ற இன்றைய சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார அமைப்பை அடியோடு மாற்றியமைக்க வேண்டும். அந்த திசையில் குடும்பத்தில், கல்வியில், அரசியல், கலாச்சார நிறுவனர்களில், தொழிலகங்களில் என சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிர்ணயிக்கும் போராட்டங்களை கட்டியமைப்போம். இன்றைய அரசியல் அமைப்பு முறையை வீழ்த்தி விட்டு புதிய ஜனநாயக அரசியல் அமைப்பு போரட்டங்களை வளர்த்தெடுப்போம்! பெண்களின் உரிமைகளை, விடுதலையை உறுதி செய்வோம்.

பெண்களை போகப்பொருளாய் ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் நடத்தும் ஆணாதிக்க நிலவுடைமைப் பண்பாட்டை அறுத்தெறிவோம்!

 ஆபாச வக்கிரங்களை கடைவிரித்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தூண்டும் ஏகாதிபத்திய சீரழிவுக் கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

மனித இனத்தை உருவாக்கிப் பேணுகின்ற பெண்ணினத்தின் மேன்மையை உயர்த்திப் பிடிப்போம்!

பாலியல் துன்புறுத்தல்களை அவமானமாக கருதி ஆணாதிக்க பொறுக்கிகளை அடையாளம் காட்டுவோம்! அடித்து நொறுக்குவோம்!

மறுகாலணியாக்க சதிக்கு  எதிராக போராடும் அனைத்து பிரிவு மக்களோடும் கரம் சேர்ப்போம்!

புதிய ஜனநாயக புரட்சியை வென்றெடுப்போம்!

%d bloggers like this: