அன்பார்ந்த உழைக்கும் பெண்களே !
முதன் முதலில் மார்ச் 8 படைத்த பெண்கள் ஏதோ வேலைக்கு சம ஊதியம் என்ற கூலி உயர்வு பிரச்சனைக்காக போரடிய நாள் மட்டும் அல்ல. ஆண்களுக்கு இணையான ஊதியம், நிர்ணயித்த வேலை நேரம், வாக்குரிமை என தங்கள் அரசியல் உரிமைக்காக போரடிய நாள் தங்களுடைய உரிமைகளைப் பெற போராட வேண்டும், அமைப்பாக திரள வேண்டுமென பெண்கள் தங்களே உணைர்ந்த நாள். உலகிற்கும் உணர்த்திய நாள்.
டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹெகனில் 1910ம் ஆண்டு நடைபெற்ற சோசலிசத்துக்கான இரண்டாவது அனைத்துலக மாநாட்டில், ஜெர்மனியின் தொழிலாளர் தலைவர் தோழர் கிளாரா ஜெட்கின் முன்மொழிந்ததன் அடிப்படையில், மார்ச்-8ம் நாள் அனைத்துலக பெண்கள் தினமாக பிரகடனம் செய்யப்பட்டு 1911-ம் ஆண்டிலிருந்து பின்பற்றப்படுகிறது.
இந்நாளில் தான் சமூக அமைப்பினாலும், குடும்ப நிறுவனத்தாலும் அடிமைப்படுத்தபட்ட பெண்கள் தங்கள் விடுதலைக்கான கடந்த கால போரட்டங்களின் தோல்விகளிலிருந்து பாடம் பெறவும், காயங்களை ஆற்றிக்கொள்ளவும், பெற்ற வெற்றிகளிலிருந்து வீரம் பெறவும், புத்துணர்வு பெறவும், விடுதலைக்கான திசைவழியைத் தீர்மானிக்கவும், தங்களை புதுப்பித்துக் கொள்ளவுமான நாள் தான் மார்ச்-8.
சமூக வரலாற்றில் கால்நடை வளைப்பு, விவசாயத்தைக் கண்டரிந்த்தது, முதன்முதலில் நெருப்பை உருவாக்கியது போன்றவற்றை பெண்கள் கண்டறிந்து தந்ததால்தான். மனித குலம் இன்றைய நாகரீக கட்டத்திற்கு வந்துள்ளோம். ஒவ்வொரு சமூகக் கட்ட உழைப்பில் மட்டுமல்லை, வரலாற்றில் பெண் வாடையில்லாத போரட்டம் ஏதுமில்லை.. பெண் கை கொடுக்காமல் புரட்சிகள் ஜெயித்ததுமில்லை. அனைத்திற்கும் மேலாக பெண்கள் மனிதகுலத்தை பேணிகின்ற மறுஉற்பத்தித் திறனை தனக்குள் கொண்டுள்ள பெண்ணினத்தை சமூகம் கொண்டாட வேண்டும்.
ஆனால் ”இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப் படுகிறார். ஒவ்வொரு 7வது நிமிடத்திலும் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறார். ஒவ்வொரு 42 நிமிடத்திலும் ஒரு வரதட்சிணை சாவு நடக்கிறது. பெண்கள் மீதான வன்முறைக் குற்றங்களாக பதிவாகியுள்ள ஏறத்தாழ 93,000 வழக்குகள் இன்னமும் விசாரனைக்கு வரவில்லை”-இது தான் இந்தியத் தாய் நாடு. நமது தாய்மார்களை நடத்தும் விதம்.
காலம் காலமாக வீட்டு வேலை, குடும்ப பராமரிப்பு என சமூகத்திற்கு தங்களது உழைப்பை செலுத்தி வந்த பெண்களை தனியார்மயம் – தாராளமயம் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது.
கூடுதலான வேலை, குறைவான கூலி, சங்கமாக திரளமாட்டார்கள் போன்ற காரணங்களால் உருவான புதிய வேலைவாய்ப்புகள் பெண்களை வீடுகளிலிருந்து வீதிக்கு இழுத்து வந்தது.
ஹோட்டல் சப்ளையர்களாக, நகை, ஜவுளிக்கடை விற்பனையாளர்களாக, பஞ்சலை, ஆயத்த ஆடை தொழிலாளர்களாக, நோக்கியா போன்ற மின்னணுத் தொழிலகங்களில் ஒப்பந்த கூலிகளாக, I.T. நிறுவனத்தில், வங்கிகளில் ஊழியர்களாக, மருத்துவமனை நர்சுகளாக, பெட்ரோல் பல்கிலும், வீட்டிலும் வேலைகாரர்களாக என எங்கெங்காணினும் பெண் உழைப்பாளர்களால் தான் தற்போதைய நவீன உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஒருபுறம் சலிப்பூட்டும் வீட்டு வேலை, குழந்தைப் பராமரிப்பு என்றால், மறுபுறம் உடலையும், மனதையும் சக்கையாக பிழியும் மூலதனச் சுரண்டல். மறுகால்ணியாக்கம் பெண்களின் உழைப்புச் சுரண்டலை மட்டுமில்லை அவர்களின் உடலையும் விற்பனைச் சரக்காக்கி உள்ளது.
பெண்களின் அங்கங்களை கடைபரப்பும் தகவல் தொப்ழில் நுட்பம். தொலைபேசி நிறுவனங்கள் பெண்களை வைத்து நடத்தும் சரச சல்லாப உரையாடல் “சேவைகள்”. அந்நிய செலாவணிக்காக சுற்றுலா பொருளாதாரம் என்ற பெயரில் நடக்கும் விபச்சாரம்.
குத்துப்பாட்டையும், பொறுக்கித்தனத்தையும் கொண்டாடும் சினிமாக்கள், “ஆண்டிகளை மடக்கும்” வக்கிரங்களை எழுதி இளைஞ்சர்களையும், மாணவர்களையும் சீரழிக்கும் ”டைம்பாஸ்” மஞ்சள் பத்திரிக்கைகள், கள்ளக்காதல் சீரியல்கள், “மானாட மயிலாட” என “குத்தாட்ட” நடனங்களால் ஆண்களை உசுப்பேற்றும் சேனல்கள், இவற்றால் வெறியூட்டப்பட்ட ஆண்கள் பொது இடம், வீடு என்று எல்லா இடங்களிலும் பெண்களை பாய்ந்து குதறுகிறார்கள்.
ஒருபுறம் பன்னாட்டு நிறுவனங்கள் லாபவெறிக்காக அம்பிகாக்களின் இரத்தத்தை, உயிரை உறிஞ்சினால், மறுபுறம் ஆணாதிக்கம் தனது காமவெறிக்கு நிர்பயாக்களையும், வினோதினிகளையும் கடித்து குதறுகிறது.
பாலியல் வல்லுறவு குற்றங்கள் மட்டும் அதிகரிக்கவில்லை. ஆசிட் வீச்சு, வரதட்சனை கொலை, “கெளரவக்” கொலைகளும், பெண் கருக்கொலை பெண் சிசுக் கொலைகளும் அதிகரித்துள்ளது என மக்கள் தொகை கணக்கெடுப்பு அமல்படுத்தியுள்ளது.
ஒரு பெண் எந்த குற்றமும்செய்ய வேண்டியதில்லை.அவள் ஒரு பெண்ணாக இருக்கிறாள் என்பத்ற்காகவே வன்முறை குற்றங்கள் ஏவிவிடப்படுகின்றன.
பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்கள் சிவில் சமூகத்தின் உதிரி கிரிமினல்களால் தான் ஏற்படுகிறது என பலரும் கருதுகின்றார்கள். ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறப்படும் அரசு எந்திரமே பெண்களுக்கு எதிராகத்தான் உள்ளது.
வாச்சாத்தி, சின்னாம்பதி, சிதம்பரம் பத்மினி என போலீசின் யோக்கியதைக்கு எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம்.
காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இராணுவம் நடத்திய காமவெறி – கொலைவெறி அட்டூழியங்களை மணிப்பூர் தாய்மார்கள் “எங்களையும் வல்லுறவு கொள் இந்திய இராணுவமே!” என நிர்வாணமாக போராடி இராணுவத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். இராணுவத்தின் பாலியல் குற்றம் அம்பலமானாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பாலியல் குற்றத்தில் ஈடுபடும் இராணுவத்தினரை சிவில் கோர்ட்டுகளில் கிரிமினல் சட்டங்களின் கீழ் தண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரைத்த முக்கியமான சில சீர்த்திருத்தங்களை கூட அரசு ஏற்கவில்லை.
நீதித்துறையோ பன்வாரிதேவி என்ற ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த பெண்ணை ஆதிக்க சாதி வெறியர்களால் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் “தாழ்த்தப்பட்ட பெண்ணை மேல் சாதி மக்கள் தீண்டவே மாட்டார்கள் எனவே வல்லுறவு நடந்தது என்பது பொய்” என தீர்ப்பு கூறி ஆதிக்க சாதி காமவெறியர்களை விடுதலை செய்தது, பின் அடுத்த வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. அடுத்த 15 ஆண்டுகளில் அந்த வழக்கு ஒரே ஒரு முறைதான் விச்சரனைக்கு வந்தது. ஒரு பாலியல் வல்லுறவு வழக்கு 20,25 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் ஒரே தேசம் இந்தியாவாகத்தான் இருக்கும்.
பெண்கள் காதலித்தால் இந்துவ பரிவாரங்கள், ஜாட், யாத்வ், வன்னிய, தேவர், கவுண்டர் சாதிய அரசியல்வாதிகள் அரிவாளோடும் தீவெட்டியோடும் நிற்கிறார்கள்.
ஓட்டுக்கட்சிகளில் பெரும்பாலும் ஆணாதிக்க வாதிகளாகவே இருக்கின்றனர். காமவெறி காளியாட்டங்களில், சின்னவீடு சமாசாரங்களில், பாலியல் புற்றங்களில் சட்டமன்ற – நாடாலுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் வெளிவந்து அம்பலமானது. கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர்கள் செல்போனில் ஆபாசபடம் பார்த்தது மீடியாக்களில் அம்பலமாகி நாறியது.
இவை அனைத்தும் இது ஜனநாயக அரசு அல்ல, பெண்களை சமத்துவமாக நடத்தும் அரசியல் அமைப்பும் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன. வேலை வாய்ப்பில், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு, பெண் போலீசு, பெண் நீதிபதிகள், மகளிர் காவல் நிலையங்கள் போன்றவற்றால் இன்றைய அரசியல் அமைப்பின் கீழ் தொடரும் பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்துவிடத்தான் முடியுமா ? முடியாது !
நிலபிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பு, மறுகாலணியாக்கம் என இரு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்காமல் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த முடியாது. இவ்விரு நுகத்தடிகளையும் கட்டி காத்து வருகின்ற இன்றைய சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார அமைப்பை அடியோடு மாற்றியமைக்க வேண்டும். அந்த திசையில் குடும்பத்தில், கல்வியில், அரசியல், கலாச்சார நிறுவனர்களில், தொழிலகங்களில் என சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிர்ணயிக்கும் போராட்டங்களை கட்டியமைப்போம். இன்றைய அரசியல் அமைப்பு முறையை வீழ்த்தி விட்டு புதிய ஜனநாயக அரசியல் அமைப்பு போரட்டங்களை வளர்த்தெடுப்போம்! பெண்களின் உரிமைகளை, விடுதலையை உறுதி செய்வோம்.
பெண்களை போகப்பொருளாய் ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் நடத்தும் ஆணாதிக்க நிலவுடைமைப் பண்பாட்டை அறுத்தெறிவோம்!
ஆபாச வக்கிரங்களை கடைவிரித்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தூண்டும் ஏகாதிபத்திய சீரழிவுக் கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!
மனித இனத்தை உருவாக்கிப் பேணுகின்ற பெண்ணினத்தின் மேன்மையை உயர்த்திப் பிடிப்போம்!
பாலியல் துன்புறுத்தல்களை அவமானமாக கருதி ஆணாதிக்க பொறுக்கிகளை அடையாளம் காட்டுவோம்! அடித்து நொறுக்குவோம்!
மறுகாலணியாக்க சதிக்கு எதிராக போராடும் அனைத்து பிரிவு மக்களோடும் கரம் சேர்ப்போம்!
புதிய ஜனநாயக புரட்சியை வென்றெடுப்போம்!