பிதுங்கி வழியும் கூட்டமான ஒரு பேரூந்துப் பயணம். ஒரு பெரியவர் பையில் தன்னுட்டைய ஏதோ தேவைக்காக பணம் எடுத்துச் செல்கிறார். இதை அறிந்த ஒரு திருடன் கமுக்கமாக பையைக் கிழித்து பணத்தை திருடி விட்டான். பின்னர் இதை உணர்ந்த பெரியவர், பணம் திருடு போனதை விட்டு விட்டு “என் பையைக் கிழித்து விட்டான்” “என் பையைக் கிழித்து விட்டான்” கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் அவரை எப்படி புரிந்து கொள்வீர்கள்?
தன்னை காமெடியனாய் நினைத்துக் கொண்டு வடிவேலு செய்யும் உதார் தனங்களை, உலக நாயகனாய் கருதிக் கொண்டு கமல் செய்திருப்பது தான் விஸ்வரூபம். படத்தைப் பார்த்துவிட்டு இந்த காமெடிக் கூத்துக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களா என்றுதான் தோன்றியது. ஒருவேளை கமல் குஞ்சுகளைப் போல், கமல் படத்தில் ‘ஏதோ’ இருக்கும் என்று ஓவராய் எதிர்பார்த்து விட்டேனோ. வழக்கமாக இது போன்ற மசாலா படங்களின் நாயகர்கள் பெரும் தீரச் செயல்கள் செய்து நாட்டையும், மக்களையும்(!) காப்பார்கள். அப்படியான காட்சி சாகசங்கள் ஏதுமின்றி விஸ்வரூபம் வெகு சாதாரணமாய் இருக்கிறது.
தேர்ந்த கதக் கலைஞனாக இருக்கும் கமல் திடீரென ரப்பனா ஃபித்துன்யா என்று முஸ்லீமாய் மாறி அடித்துத் துவைத்து, காஷ்மீரியாக அல்காய்தாவுக்கும் தாலிபான்களுக்கும் பயிற்சியளித்து, இந்திய ரகசிய உளவளியாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பாராட்டுதல்களோடு அமெரிக்காவையையும் அமெரிக்க மக்களையும் அணுகுண்டு வெடிப்பிலிருந்து காத்து நான் சாக வேண்டும் அல்லது முல்லா உமர் சாக வேண்டும் என்று வஜனம் பேசுகிறார். இந்தியா அமெரிக்காவின் ஏவல் நாயாக ஆகியிருக்கிறது என்பதை சிம்பாலிக்காக உணர்த்தும் இந்தப்படத்தில் ஒரு பொழுது போக்கு மொக்கைப்படம் எனும் அடிப்படையில் திரைக்கதையில் இருக்கும் கேலிக் கூத்துகளையெல்லாம் ஒதுக்கி விடலாம். கதை எனும் பெயரில் கூறப்படும் அராஜகங்களை என்ன செய்வது?
கதையின்படி, அமெரிக்கர்கள் சிலரை கைதிகளாக பிடித்து வைத்திருக்க அவர்களை மீட்பதற்காக அமெரிக்கா ஆப்கானின் மீது போர் தொடுக்கிறது. அதிலும் பெண்கள் குழந்தைகள் மீது அமெரிக்கர்கள் குண்டு வீச மாட்டார்கள் என்று தாலிபான்களே கூறும் அளவுக்கு, தவறுதலாக ஒரு பெண் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து விடும் போது அமெரிக்க வீரன் வருந்தும் அளவுக்கு அந்தப் போர் நடந்து கைதிகளை மீட்டுச் செல்கிறது. இதற்காக தாலிபான்கள் அமெரிக்கா மீது கோபம் கொண்டு சீசியம் குண்டு வைத்து அமெரிக்க மக்களை அழித்து பழிவாங்க முயல்கிறார்கள். அதை மைக்ரோவேவ் அவனை கவித்து வைத்து காப்பாற்றுகிறார் கதாநாயகன். மெய்யாகவே தாலிபான், அல்காய்தா வுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள தொடர்பு இப்படித்தானா?
தாலிபான்களிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்றி விஸ்வரூபம் கண்டவர்கள் யாருக்காவது தெரியுமா? அமெரிக்க ஜனாதிபதி ரீகன் தாலிபான்களின் முன்னோடிகளான ஆப்கான் ஜிஹாதிகளை வெள்ளை மாளிகைக்கே அழைத்து கௌரவித்தார் என்று. அறுபதுகளின் இறுதியில் சோவியத்தின் உதவியுடன் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைச் செய்தது மன்னர் சாஹிர்ஷா தலைமையிலான ஆப்கானிஸ்தான். சோவியத்தின் நட்பு நாடாக எந்த ஒரு நாடும் இருந்து விடக்கூடாது என எண்ணிய அமெரிக்கா காபூல் பல்கலைக் கழகத்தில் ‘இஸ்லாமிய மாணவர் அமைப்பை’ உருவாக்கியது. இந்த அமைப்பின் உதவியுடன் தான் 1973ல் மன்னரின் ஆட்சி ஒரு சதிப்புரட்சி மூலம் கலைக்கப்பட்டது. பின்னர் 1979ல் ரஷ்ய சமூக ஏகதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு; அதை எதிர்ப்பதற்காக அல்காய்தாவும் அதன் பிறகு தாலிபான்களும் அமெரிக்க அரேபிய நிதியுதவியுடன் தேசியவாதம் பேசினார்கள். அமெரிக்கா உலகின் ஏகாதிபத்தியங்களுக்கு ஒற்றை தலைமையாய் உருவானபின் அல்காய்தா இனி தேவைப்படாது என்றான பின் முரண்பாடுகள் உருவாக்கப்பட்டன. இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பிறகும் கூட பின்லாடனின் குடும்பத்தினரை பத்திரமாக தனி விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றிய தகவலை ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார் ஜான் பெர்க்கின்ஸ். தேசியவாதமோ, மனிதநேயமோ, போர்க்குற்றமோ, இஸ்லாமிய மதவாதமோ எதுவானாலும் அமெரிக்க நலனுக்கு உகந்ததாக இருக்கும் வரைதான் இருக்க முடியும் அமெரிக்க நலனுக்கு எதிரானால் அடுத்த கணமே அது மனித குலத்துக்கு எதிரான குற்றமாகி அமெரிக்க விமானங்கள் குண்டு வீசும்.
அப்படி ஆப்கான் மீது, பெண்கள் குழந்தகள் என எதையும் பாராது அமெரிக்க குண்டு வீசியதைத்தான் தாலிபான்கள் பிடித்து வைத்திருந்த அமெரிக்க கைதிகளை மீட்பதற்குத்தான் குண்டு வீசியதாகவும் அதுவும் பெண்கள் குழந்தைகள் மீது படாமல் குண்டு வீசியதாகவும் அயோக்கியத்தனம் செய்திருக்கிறார் கமல். இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டு எந்த முஸ்லீமுக்கும் கோபம் வரவில்லை. ஒவ்வொரு காஷ்மீரி முஸ்லீமும் இந்திய குண்டுகளையே கல்வீசி எதிர்கொள்கிறான். அந்த அடிமை இந்தியாவின் ஆண்டை அமெரிக்கா ஆப்கான் முஸ்லீம்கள் மீது குண்டு வீசுவதற்கு ஒரு காஷ்மீரி முஸ்லீம் துணையாக இருக்கிறான். இந்த மோசடியைக் கண்டு எந்த முஸ்லீமுக்கும் கோபம் வரவில்லை. இந்த படத்தில் இருப்பது அரசியலா? மதமா? என்பது எந்த முஸ்லீமுக்கும் தெரியவில்லையா? அதிலிருக்கும் அரசியலை மறைத்து மதமாக காட்டியது தான் மதவாத இயக்க தலைவர்களின் அரசியல். விஸ்வரூபத்தை எதிர்த்து பெரும் போராட்டங்களை(!) நடத்திய முஸ்லீம்கள், தங்கள் தலைவர்களின் அரசியலையும் புரிந்து கொள்ளவில்லை, திரைப்படத்தின் அரசியலையும் புரிந்து கொள்ளவில்லை.
இஸ்லாம் எனும் மதத்துக்கு எதிராக விஸ்வரூபத்தில் என்ன இருக்கிறது? ஏழு வெட்டுகள், சில இடங்களில் ஒலியடக்கல், தொடக்கத்தில் இது கற்பனைக் கதை என்று எழுதிக் காண்பிப்பது. விஸ்வரூபம் வெளிவருவதற்கு இஸ்லாமிய மதவாத அமைப்புகள் விதித்த நிபந்தனைகள் இவை. முதலில் இந்தப் படத்தை இந்த தலைவர்களுக்கு போட்டுக் காட்டிய போது இந்த திருத்தங்களுடன் அனுமதிக்கிறோம் என்று எந்த மதவாத தலைவரும் கூறவில்லை. எந்த வெட்டையும் அனுமதிக்க மாட்டோம் என்று திரைப்பட தரப்பிலும் கூறவில்லை. படம்பார்த்துவிட்டு வெளியில் வந்த மதவாத தலைவர்கள் “இதுவரை இல்லாத அளவில் மிக மோசமாக இஸ்லாம் கேவலப்படுத்தப் பட்டிருக்கிறது. இப்படம் வெளிவர அனுமதிக்க மாட்டோம்” என்றார்கள். இதுவரை இல்லாத அளவில் கேவலப்படுத்தப்பட்டிருப்பதாக கூறியவர்கள் ஏழு வெட்டுக்கு உடன்பட்டு வெளியிட அனுமதித்திருக்கிறார்கள். அந்த வெட்டுகள் எவை? குரான் ஓதிவிட்டு குண்டு வைப்பது, தொழுதுவிட்டு வெடிப்பது, குரான் வசனங்களின் பின்னணியில் கொலை செய்வது, குரான் வசனங்களை ஓதிக் கொண்டே கொலை செய்வது போன்ற காட்சிகள் தான். இதில் இதுவரை இல்லாத ஆளவில் இஸ்லாம் எப்படி கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது? இவை திரைக் காட்சிகளாக அல்ல, நிஜக் காட்சிகளாகவே தாராளமாக இணையத்தில் காணக் கிடப்பவை தான். இவைகளை வெட்டியவுடன் இஸ்லாத்தின் மீது இந்தப்படம் சுமத்திய களங்கங்கள் போக்கப்பட்டு விட்டனவா?
இந்தப் படம் முஸ்லீம்களின் மனதை புண்படுத்துகிறது எனவே, வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று அறிக்கை விட்டவுடன் வரிசையாக மாவட்ட ஆட்சியர்களெல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று படத்துக்கு தடை விதித்து கூடவே 144 தடையுத்தரவும் போட்டிருந்தார்கள். அப்படியென்றால் இது மதவாத தலைவர்களின் விருப்பமா? ஜெயாவின் விருப்பமா?
இன்று மதவாதிகள் எண்ணக் கூடும் 24 அமைப்புகள் ஒற்றுமையாய் ஒரு குரலில் நின்று எதிர்த்ததனால் தங்களின் நிபந்தனைகள் ஏற்று படம் வெட்டப்பட்டிருக்கிறது இது எங்களின் வெற்றி என்று. மெய்யான வெற்றி கமலுக்குத்தான். ஒருவேளை படம் முடக்கப்பட்டிருந்தாலும் கமலுக்கு பெரிய அளவில் நட்டம் எதுவும் ஏற்பட்டிருக்கப் போவதில்லை. இது இல்லையென்றால் இன்னொன்று. ஆனால் அவ்வாறு நட்டம் ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்று தான் இஸ்லாமிய மதவாத அமைப்புகள் கவலைப் பட்டிருக்கின்றன. அதனால் தான் இந்தப்படம் வெளிவரவே கூடாது. இதுவரை இல்லாத அளவில் இஸ்லாம் இந்தப் படத்தில் இழிவுபடுத்தப் பட்டிருக்கிறது என்று கூறி படம் பார்க்கும் ஆவலை எல்லோரிடமும் ஏற்படுத்தியவர்கள். ஏன் இந்தப் படத்துக்கு நட்டம் ஏற்படக் கூடாது? இஸ்லாமிய மீட்டுருவாக்கத்திற்கு திட்டம் போட்டுக் கொடுத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த அமெரிக்காவை தூக்கிப்பிடிக்கும் படமல்லவா? அதனால் தான் இலவச விளம்பரம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
படம் வெளியாகிவிட்டது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். படத்தை மக்கள் ரசிக்கவில்லைபொல் தெரிகின்றது. அரேபிய கலாச்சாரம் மட்டும்தான் உண்மையானது.அல்லாவின்கலாச்சாரம். அரேபிய கலாச்சாரத்தைப் பின்பற்றாத மக்களுக்கு கொடும் நகரம் என்று உலகை ஏமாற்றும் அரேபிய சமய சமூக இலக்கிங்களை என்று உலகம் கைவிடப்போகின்றததோ அன்றுதான் பயங்கரவாதம் முடிவுக்கு வரும்.கலாச்சார வாழ்வு எப்படியிருந்தாலும் சத்தியம் தர்மம் ஒழுக்கம்தான் சமய வாழ்வு என்றது இந்திய-இந்துமதக் கோட்பாடு. சமபிராதயங்கள்,பழக்கவழக்கங்கள் தற்காலிகமானவை என்று கூறும் இந்துமதம் என்றும் உலகிற்கு நன்மையே செய்து வருகின்றது.தாலிகட்டினாலும்.கருகமணி கட்டினாலும், மோதிரம் போட்டாலும் கணவனும் -மனைவியும் உண்மையான அன்பு செலுத்துவதே இல்லறம் என்று சொல்வது இந்துமதம்.அரேபிய கலாச்சாரப்படி செய்யா திருமணம் ஷிர்க், என்று போதிப்பவர்களைக்குறித்து தங்கள் கருத்து என்ன ?
செங்கொடிக்கு மேலா கமல் திருக்குரானை இழிவு செய்துவிட்டார்?. அப்படியே ஆனாலும், செங்கொடி சந்தோஷப்பாடாமல் ஏன் எதிர்க்க வேண்டும்?
காபிரெனும் முகமூடி அணிந்த முஸ்லிமா?.
செங்கொடியின் ஆழ்மனதில் பறப்பது பச்சைக்கொடியே.