ஈழம்: 80களின் எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்

 

ilangai

2009 ல் இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள பாசிச அரசால் கொல்லப்பட்டட்து அறிந்ததே. இது குறித்து ராஜபக்சே கூறிக் கொண்டிருந்தவை பொய் என்பதை சேனல் 4 நிறுவனம் அண்மையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு அம்பலப்படுத்தியது. தொடர்ந்து அமெரிக்காவும் இலங்கையை எதிர்த்து ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று சில கட்சிகளும் இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று வேறு சில கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இதனிடையே இலங்கையின் போர்க்குற்றங்களைக் கண்டித்து சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். நாண்கு நாட்களுக்குப் பிறகு இரவோடிரவாக காவல்துறை அவர்களை கைது செய்து அப்புறப்படுத்த, தற்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடங்கி தமிழகம் முழுவதும் கலை, சட்ட, பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே போராட்டம் பரவி வருகிறது.

 

மெய்யாக அங்கு நடந்தது இனப்பேரழிவு என்பதிலோ, ராஜபக்சே கும்பல் அதை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையாக சித்தரித்து வருகிறார்கள் என்பதிலோ யாருக்கும் ஐயம் இல்லை. ஆனால் அதற்கு தீர்வு என்ன என்பதில் அமெரிக்க தீர்மானத்தின் பின்னே ஒழிந்து கொள்கிறார்கள். அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தோ எதிர்த்தோ ஆன நிலைபாடுகளில் தான் இந்தப் போராட்டங்கள் எழுந்திருக்கின்றன. தன்னுடைய ஏகாதிபத்திய நலன்களுக்கு எந்த நாடு ஆதரவாக இருக்கிறதோ அந்த நாடு என்ன விதமான கொடூரங்களைப் புரிந்தாலும் அதை கண்டு கொள்ளாமலிருப்பதும், எதிரான நாடுகள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அதன் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி நாசம் செய்வதும் அதை உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதும். நாடுகளைப் பணிய வைப்பதற்காக எந்த விதமான எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதும் யாருக்கும் தெரியாத இரகசியங்களல்ல. இப்போது அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் இந்த வகைப்பாட்டில் அடங்காது மெய்யான அக்கரையினால் தயாரிக்கப்பட்ட தீர்மானம் என்று யாரேனும் கூற முடியுமா? அல்லது ராஜபக்சே கும்பலை இதனால் தண்டித்து விட முடியுமா?

 

அத்தனை ஓட்டுக் கட்சிகளும் காங்கிரஸ் அரசு இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோருவதையே அல்லது இன்னும் கடுமையாக்க வேண்டும் என்பதையே ஈழத் தமிழர்களுக்கான மீட்சியாக கருதிக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. திமுக ஆட்சியில் இருக்கும் போது இவாறாக நடிக்க முடியாமல் போனதற்கான பிராயச்சித்தமாக டெசோ, வேலைநிறுத்தம் என்று ‘ரன்’ சேர்க்க முயன்று கொண்டிருக்கிறது. மட்டுமல்லாது தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால் ஆதரவு வாபஸ் ஏண்றோறு சிக்ஸரையும் அடித்திருக்கிறது. ஏனைய கட்சிகளின் போக்குகளோ இந்த எழுச்சியின் பயனை திமுக அறுவடை செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன. ஆம். அத்தனை ஓட்டுக் கட்சிகளின் கவலையும் அது தான். மக்கள் எழுச்சியை தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதும், வேறொரு கட்சி அதை பயன்படுத்திக் கொள்ளாமல் எப்படி தடுப்பது என்பதும் தான் எப்போதும் அவர்களின் கவலை.

 

இந்த விவகாரத்தில் திமுக முழுதாக அம்பலப்பட்டு நிற்கிறது. ஆட்சியில் இருக்கும் போது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றும், “ஒரு அடிமை என்ன செய்துவிட முடியும்?” என்றும் பிலாக்கானம் பாடி விட்டு இப்போது ஆதரவு வாபஸ் என்பது சவடால் தான். அதிமுகவோ ஆட்சியில் இல்லாத போதே, காங்கிரசுடன் கூட்டணியில் இல்லாத போதே “போர் என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றதும் தொடர்ந்து புலிப்பூச்சாண்டி காட்டியே தன்னுடைய அரசியலை செய்து கொண்டிருக்கிறது என்பதும் வெளிப்படை. இப்போதும் கூட மாணவர்கள் போராட்டம் பரவத் தொடங்குகிறது என அறிந்ததும் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விமுறை அறிவித்ததன் மூலம்ஆனாலும் ஜெயலலிதா இன்றும் ஈழத்தாயாக தன்னை பராமரித்துக் கொண்டிருக்கிறார். இடது வலது போலிகளோ அரசை எதிர்த்து போராடும் தேசிய இனம், அந்த இனத்தை இனவழிப்பு செய்ததில் இந்திய அரசின் பாத்திரம் எனும் அடிப்படையில் பார்க்காமல் ஈழமக்களின் துயரம் எனும் எல்லையில் நின்று கொண்டு மார்க்சியச் சொல்லாடல்களில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். வைகோ, சீமான், நெடுமாறன் போன்ற புலி அபிமான தமிழ் தேசிய வியாதிகள் பாலச் சந்திரன் மரணத்தை மட்டும் போர்க்குற்றம் என்று ஓங்கிக் கூறி பிரபாகரனை இதோ வருகிறார், அதோ வருகிறார் என்று சுவிசேச பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன், நடேசன், கரும்புலிகள் உள்ளட்ட அனைத்துமே போர்க்குற்றங்கள் தாம் என்பதைப் பேச மறுக்கிறார்கள். பேசினால் புலிகளின் சரணடைவுக்கான அரசியல், இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த பிம்பங்கள் குறித்து பேச வேண்டியதிருக்கும். ஆக இவர்கள் அனைவரின் நாடகங்களும் தங்களின் நலன் எனும் ஒற்றைப் புள்ளியிலிருந்து கிளைத்தவை தானேயன்றி ஈழ மக்களுக்குக்கான தீர்வு எனும் தாகமோ, ஊக்கமோ இதில் இல்லை.

 

இந்த நிலையில் தான் தன்னெழுச்சியாக கல்லூரி மாணவர்கள் திரண்டு போராட்டங்களை தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளும் அமெரிக்க தீர்மானத்தைச் சுற்றியே இருக்கின்றன. இந்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்கிறார்கள், கடுமைப்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஈழ மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவழிப்பின் கொடூரங்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அவர்களின் உரிமைகள் மீளக் கிடைக்க வேண்டும் எனும் மெய்யான உந்துதலிலிருந்து நடத்தப்படும் இந்தப் போராட்டங்களில் சரியான அரசியலும் சேர்ந்து கொள்ளும் போது மட்டுமே ஈழமக்களுக்கான உரிமையில் இப்போராட்டங்கள் சரியான பங்களிப்பைச் செலுத்த முடியும்.

 

முதலில் இதில் இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது கள்ளனிடமே சாவியைக் கொடுப்பது போன்றது. ஏனென்றால்  ஈழ இனவழிப்பில் இலங்கை அரசைப் போலவே இந்திய அரசும் போர்க் குற்றவாளி தான். இராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றங்களை ராஜபக்சே விசாரிப்பது எப்படி அயோக்கியத்தனமானதோ, அது போலவே இந்தியாவை ராஜபக்சேவுக்கு எதிராக விசாரிக்கக் கோருவதும் அயோக்கியமானதே. இந்தியா தீர்மானம் கொண்டுவருவதற்கு தகுதியற்றது என்றால் அமெரிக்கா போர்க்குற்றம் எனும் சொல்லை உச்சரிக்கவே அறுகதையற்றது. ஏனென்றால் உலகில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் அத்தனை போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறலிலும் அமெரிக்காவின் பங்களிப்பு இருக்கிறது. அதாவது அத்தனை மனித உரிமை மீறலும் அமெரிக்காவின் நலனுக்காகவே நடத்தப்படுகிறது. ஐ.நா. அவையோ அமெரிக்காவின் இன்னொரு நாட்டில் அத்துமீறுவதற்கான மனித உரிமை அனுமதி வாங்கித்தரும் ஏஜென்ஸியாக செயல்படுகிறது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும்போது, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்பதும், இந்தியா திருத்தங்கள் செய்து மேலும் கடுமையாக்க வேண்டும் என்பதும் அந்த அயோக்கியத்தனத்தை மறைக்கவே பயன்படும்.

 

எனவே இந்த அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவதே தமிழக தமிழர்களின் முதல் பணியாக இருக்க வேண்டும். ஓர் ஒடுக்கும் நாட்டின் உழைக்கும் மக்களுக்கு சொந்த நாடு இன்னொரு நாட்டை ஒடுக்குவதை எதிர்த்து குரல் கொடுப்பதும் போராடுவதுமே முதன்மையான பணியாக இருக்க முடியும். அந்த வகையிலும் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதும், இந்தியாவை திருத்தம் செய்யக் கோருவதும் தவறான முடிவாகவே இருக்கும். தமிழினவாதிகள் இப்போதே இந்தியாவும் இந்த இனவழிப்பில் பங்கெடுத்திருப்பதை கூறினாலும் அது மாத்திரைக் குறைவாகவே ஒலிக்கிறது. ஏனென்றால், அவ்வாறு அவர்கள் கூறும் போதே காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் அவர்களின் நினைவில் வந்தாடுகிறது. எனவே அடக்கி வாசிக்கிறார்கள். எனவே உரக்கச் சொல்வோம், ஈழ இனவழிப்பில் இந்தியாவும் போர்க்குற்றவாளியே.

 

 

ராஜபக்சேவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் பல வண்ண கோரிக்கைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கப் போவதில்லை. ஆனால் யார் அதை முன்னெடுப்பது? அமெரிக்காவுக்கோ அதன் தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கோ அறுகதை இல்லை, இந்தியாவுக்கோ தகுதியில்லை. பின் யார் முன்னெடுப்பது? மக்கள் தாம். இலங்கையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நாடோ இந்த விசாரணையை நடத்தாமல் ஹிட்லரின் நாஜி படைகளுக்கு எதிராக நடந்த நூரம்பர்க் போர்க்குற்ற விசாரணையைப் போல உலக நாடுகள் அனைத்தும் பொறுப்பேற்று நடத்த வேண்டும். இதை அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களும் தம் சொந்த அரசை இதற்கு நிர்ப்பந்தம் செய்வதன் மூலம் சாதிக்க வேண்டும். அன்றைய உலகம் முதலாளித்துவ முகாம், சோசலிச முகாம் என்று இரண்டு பிரிவாக இருந்ததனால் ஓரளவுக்கு சரியாக நூரம்பர்க் விசாரணையின் போக்கு இருந்ததது. ஆனால் இன்று சோசலிச முகாம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுவிட்ட பின்னால் முதலாளித்துவ முகாம் மட்டுமே நிலவும் இன்றைய உலகில் அத்தகைய விசாரணை சாத்தியமா என்பது கேள்விக்குறி தான் என்றாலும். அயோக்கியத்தன அம்மணங்களை மூடி மறைக்கும் கோமணத் துணியாக பயன்படுவதைக் காட்டிலும் காரிய சித்தியுள்ள வழி இது தான்.

 

எனவே, இந்த திசை வழியில் தமிழகத்தில் 80களில் ஏற்பட்ட எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்.

One thought on “ஈழம்: 80களின் எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்

  1. மாணவர்களின் உணர்வு பூர்வமான, ஆனால் அரசியல் புரிதலற்ற மாணவர்களின் தன்னெழுச்சியைஅ அரசியல் படுத்தி மாணவர்களை ஒருங்கினைக்க வேண்டிய தேவை புரட்சிகர அமைப்புகளின் பணி என்பதை இந்த கட்டுரை உணர்த்துகிறது.
    மிக்க நன்றி!

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s