அண்மையில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும், மத்திய அமைச்சர் வயலார் ரவியும் சௌதி அரேபியா சென்று வந்தார்கள். அரேபியாவில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் திரும்பி வந்துவிடப்போவதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 20 லட்சம் தொழிலாளர்கள் இன்னும் இரண்டு மாதத்தில் திரும்பி வரவிருப்பதாக செய்தி ஊடகங்கள் பீதியூட்டுகின்றன. கேரளத்தைப் போல் தமிழகத்தில் இது மிகப்பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கவில்லை என்றாலும் இதை அறிந்திருப்பவர்கள் சௌதி அரசு சொந்த நாட்டு தொழிலாளர்களுக்கு சாதகமாக எடுத்த முடிவு என்றும், அதற்காக இந்திய அரசு செய்யும் முயற்சிகள் இந்தியத் தொழிலாளர்கள் மீது இந்திய அரசு கொண்டிருக்கும் அக்கரை என்றும் இதனைக் கருதுகிறார்கள். இரண்டுமே தவறான எண்ணங்கள்.
சௌதியின் தொழிலாளர்களுக்கான சட்டம் என்பதை விட இருபது லட்சம் தொழிலாளர்கள் திடீரென இந்தியாவுக்கு திரும்பினால் அதனால் ஏற்படப்போகும் விளவுகள் குறித்தே அரசுகள் கவலைப்படுகின்றன. அதாவது அரசுகள் ஏற்கனவே கைக்கொண்டிருக்கும் மறுகாலனியாக்க கொள்கைகளால் அனைத்து தரப்பு மக்களும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு இயல்பாக அரசுகளின் மீது ஏற்படும் கோபத்தை மடைமாற்றவே இலவசப் பொருட்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி திசைதிருப்ப முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இருபது லட்சம் பேர் வேலையிழந்து வந்து குதித்தால் .. .. ..? அதுமட்டுமா, சௌதியைத் தொடர்ந்து ஏனைய வளைகுடா நாடுகளும் இது போன்ற முடிவுகளை எடுத்து சட்டமியற்றினால் .. ..? மெய்யாகவே இந்தியாவுக்கு அது நெருக்கடியாகவே இருக்கும். ஆனால் இந்த நிலையை இதுவரை இந்தியர்களை வைத்து தங்கள் வேலைகளை செய்து கொண்டார்கள் தற்போது அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள் என்பதாக புரிந்து கொள்ள முடியுமா?
பணக்கார நாடான சௌதி அரேபியா பற்றாக்குறை பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை முழுமையாக புரிந்து கொள்வதற்கு சௌதி குறித்து அறிந்து கொள்வது அவசியம். எரிஎண்ணெய் கண்டுபிடிப்பதற்கு முன்புவரை அது ஓர் ஏழை நாடு. ஒரு ரொட்டிக்காக கொலை செய்வது என்பது சாதாரணமாக இருந்தது. எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகோ அமெரிக்க இறக்குமதி கார்களில் பறந்தார்கள். உள்கட்டமைப்பு வசதிகள் மிகவிரைவாக ஏற்படுத்தப்பட்டன. அதற்கான உடலுழைப்புத் தொழிலாளர்கள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனர். இன்று ஆசியாவின் ஏனைய நாட்டு மக்களைவிட வாழ்க்கைத்தரம் சற்றே மேம்பட்ட நிலையில் சௌதி மக்கள் இருக்கிறார்கள்.
சிறிய திருட்டுக்குக் கூட கையை வெட்டுவது போன்ற கடுமையான சட்டங்கள் இருக்கும் இங்கு அண்மை ஆண்டுகளில் திருட்டும் வழிப்பறியும் மிக அதிக அளவில் நடக்கின்றன. குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்களை குறிவைத்து சௌதிகளால் நடத்தப்படும் இந்த திருட்டுகள் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவைகளை எப்படி புரிந்து கொள்வது?
எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில் அமெரிக்காவின் அராம்கோவின் கட்டுப்பாட்டிலேயே மொத்த எண்னெய் வளமும் இருந்தது. பின்னர் அது தேசியமயமாக்கப்பட்டு சௌதி அராம்கோ என்று மாற்றப்பட்டு விட்டது என்றாலும் பெரும்பாலான எண்ணெய் வயல்கள் அமைச்சர்களுக்கும், மன்னர் குடும்பத்தினருக்கும் தனிச் சொத்தாக இருக்கின்றன. அமிதமாக வந்த வருவாயினாலும், தனிச் சொத்தாக எண்ணைய் வயல்களை வளைத்துக் கொண்டிருப்பதை மறைப்பதற்காகவும் மக்களுக்கு ஏராளமான சலுகைகளும் மானியங்களும் வழங்கப்பட்டன. இதற்கான ஊடுபாவாக மதமும் தாராளமாக பயன்படுத்தப்பட்டது. மணமாகும் அனைவருக்கும் வீடுகட்ட நிலமும் மானியக் கடனும் வழங்கப்பட்டது. திருமண உதவி, கல்வி உதவி, படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் விரும்பும் அனைவருக்கும் வேலை, முதியோர் உதவித்தொகை, மாதாந்திர உதவி என ஏராளமான சலுகைகள் சவுதிகளுக்கு வழங்கப்பட்டதால் வேலை செய்யாமலேயே ஓரளவு நிறைவுடன் வாழ்ந்தார்கள். மறுபக்கம் உலகெங்கும் மதரசாக்கள் ஏற்படுத்துவதற்கும், மதத்தை பரப்புவதற்கும் நிதி வழங்குதல், உள்நாட்டில் தொழுகை நேரங்களில் கட்டாயம் கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்றும், மக்கள் தொழுகை வேளைகளில் ஒழுங்காக வணக்கத்திற்கு செல்கிறார்களா எனக் கண்காணிக்க தனி போலிஸ் படை(முத்தவ்வா) என்றும், மன்னர் தன்னை மன்னர் என அழைத்துக் கொள்ளாமல் இரண்டு புனிதப்பள்ளியின் பாதுகாவலர் என அழைத்துக் கொள்வது போன்றவை மதவாத நோக்கில் மக்களை திருப்திப்படுத்த மக்களின் சொத்தான எண்ணெய் வளம் வகைதொகையற்று சூரையாடப்பட்டது.
இந்த நிலையில் தான் இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சனை வந்தது. மதம் எனும் அடிப்படையில் பலஸ்தீனத்திற்கு உதவுவது தார்மீகக் கடமையாக, அமெரிக்கா இன்றி அனுவும் அசையமுடியாத வளைகுடா நாடுகள், அமெரிக்காவை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தாலும், மக்களுக்காக எதையாவது செய்தாக வேண்டிய நிலையில் எகிப்தின் முன்முயற்சியால் இஸ்ரேலுடனான உறவை முறித்துக் கொள்ளாவிட்டால் எண்ணெய் தரமாட்டோம் என்று அமெரிக்காவுக்கு எதிராக எழுபதுகளின் தொடக்கத்தில் போராட்டம் நடத்தின. சில நாட்களிலேயே இந்த போராட்டத்தை தெனாவட்டாக முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்கா வளைகுடா நாடுகளின் மீது குறிப்பாக சௌதியின் மீது இரண்டு நிபந்தனைகளை விதித்தது. எதிர்காலத்தில் இனி எப்போதும் இதுபோல் எண்ணெய் தாரா போராட்டம் நடத்தக் கூடாது. எண்ணெய் மூலம் கிடைக்கும் பணத்தை அமெரிக்காவிலும், அமெரிக்க நிறுவனனங்களிலும் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இதற்கு பகரமாக மக்கள் போராட்டம் வெடித்தால் மன்னர் குடும்பத்தை பத்திரமாக காப்பற்றி சொத்துகளை மீட்டுத் தரவேண்டிய பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும். இதன்பின்னர் அமெரிக்க பகாசுர நிறுவனங்கள் சௌதியை தங்கள் விருப்பத்துக்கு எடுத்துக் கொண்டன. சௌதியின் எந்த பெரிய ஒப்பந்தமும் அமெரிக்க நிறுவனங்களுக்கே கிடைத்தன. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சில ஆண்டுகளாகத்தான் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சௌதியிலோ சில பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே அமெரிக்க நிறுவனங்களின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உலகெங்கும் அமெரிக்க நிறுவனங்கள் என்ன செய்தனவோ அதையே சௌதியிலும் செய்தன. விளைவு, மக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மானியங்களும் சலுகைகளும் படிப்படியாக வெட்டிக் குறைக்கப்பட்டன. உதவிகள் பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் படிப்படியாக புகுத்தப்பட்டன. சலுகை பெற்ற பாட்டாளி வர்க்கம் போல் இருந்த சௌதி மக்கள், ஏகாதிபத்திய சுரண்டலால் தங்கள் மானியங்கள் குறைக்கப்பட ஆத்திரம் கொள்கிறார்கள். ஆனால் தங்களை சுரண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் மீதும், தங்களை ஏய்க்கும் ஆளும் வர்க்கங்கள் மீதும் ஏற்பட வேண்டிய ஆத்திரம் தவறாக தேசிய உணர்வு கிளரப்பட்டு மூன்றாமுலக நாடுகளின் தொழிலாளர்கள் மீது திருப்பி விடப்பட்டிருக்கிறது. அதனால் தான் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களும் வழிப்பறிக் கொள்ளைகளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
மற்றொருபுறம் கடந்த சில ஆண்டுகளாக அரபுலகில் நடந்த வானவில் புரட்சிகள். தங்களை ஆண்ட சர்வாதிகளை எதிர்த்து வெகுண்டெழுந்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி அரசுகளை திகைக்க வைத்தார்கள். அடக்குமுறைகளை எதிர்கொண்டு வீதிகளில் இறங்கி அரசை தூக்கியெறிந்தார்கள். இதே போன்றொரு கிளர்ச்சி சௌதியிலும் முன்னெடுக்கப்பட்டது. சௌதியின் மூன்றாவது பெரிய நகரமான தம்மாம் நகரும் அதனைச் சுற்றிலும் அதிகமாக வாழும் ஷியாக்கள் ஆளும் இனமான ஷன்னிகளை எதிர்த்து போராட்டத்தில் குதித்தார்கள். ஆனால் அப்போராட்டம் கடுமையான ஒடுக்குமுறையால் அடக்கப்பட்டது. ஷியாக்களின் போராட்டம் அடக்கப்பட்டு விட்டாலும் இன்னும் அது கனன்று கொண்டு தான் இருக்கிறது.
இந்த இரண்டு காரணங்களால், அதாவது தொடரும் மானியக் குறைப்பால் மக்களின் ஆத்திரமும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள்; ஷியாக்கள் மீண்டும் போராட்டம் நடத்தினால் அது ஷியாக்களை மட்டுமின்றி ஷன்னிகளிடமும் பரவும். இந்த இரண்டு அபாயங்களையும் களைவதற்கு சௌதி ஆளும் வர்க்கம் கண்டுபிடித்திருக்கும் குறுக்கு வழி தான் நிடாகத் சட்டம்.
இந்தச் சட்டத்தின்படி, சட்டவிரோதமாக யாரும் சௌதிக்குள் தங்கியிருக்கவோ வேலை செய்யவோ முடியாது. அதாவது முறைப்படியான ஆவணங்கள் மூலம் வந்து வேலை செய்யாமல், புனிதப் பயணத்திற்காக வந்து திரும்பாமல் இங்கேயே தங்கி வேலை செய்பவர்கள் கண்பிடித்து தண்டிக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள். வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் குறைந்தது பத்து விழுக்காடு அளவுக்கு சௌதிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும். இதை குறித்த காலத்திற்குள் செய்ய மறுக்கும் நிறுவனங்களின் அனுமதி இரத்து செய்யப்படும். இவைதான் நிடாகத் சட்டத்தின் முக்கியமான அம்சங்கள். இதன் மூலம் பெருவாரியாக சௌதி இளைஞர்கள் வேலை பெறுவார்கள் என்றும், நுகர்வு வெறியில் திளைக்கும் அவர்கள் வேலை சம்பளம் எனும் வட்டத்தில் சிக்கிக் கொண்டால் போராட்டம் போன்ற உணர்வுகளை மழுங்கடித்துவிடலாம் என்றும் சௌதி ஆளும் வர்க்கம் எண்ணுகிறது. தெளிவாகச் சொன்னால் தேவைப்பட்ட போது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உழைப்பாளிகளின் வியர்வையில் தங்களை பளபளப்பாக்கிக் கொண்ட சௌதி தேவை தீர்ந்ததும் கறிவேப்பிலையைப் போல் தூக்கி வீசிவிட எண்னுகிறது.
புரட்சிகார உணர்வுகள் மக்களிடம் கிளர்வதைக் கொண்டு ஏகாதிபத்தியங்கள் தங்கள் சுரண்டலை குறைத்துக் கொள்வதில்லை, அதிகரிக்கவே செய்யும். அது மேலும் மக்களை ஒருங்கிணைத்து போராட்டத்தின் வாயிலை அண்மிக்கும். ஆனால் இவைகளை துரிதப்படுத்த இதர அரபு நாடுகளைப் போலவே சௌதியிலும் புரட்சிகர இடதுசாரி கட்சிகள் செயல்படவில்லை. எப்போதும் இந்த நிலையே நீடிக்கும் என்று எண்ண முடியுமா? முடியாது என்பதை சௌதியின் கடந்தகால வரலாறே நிரூபிக்கிறது. முன்னர் நஜ்ரான் பகுதியில் இயங்கிய இடதுசாரி இயக்கத்தை அதன் உறுப்பினர்களை கடவுள் நிந்தனையாளர்கள் என்று கூறி மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து ஒழித்துக் கட்டியது சௌதி அரசு. இனி வரப்போகும் இடதுசாரி இயக்கங்களை அவ்வளவு சுலபமாக ஒழித்துவிட முடியாது. ஏனென்றால் அரசு என்பது முதலாளிகளுக்கானதேயன்றி மக்களுக்கானதல்ல என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். மாட்டுவண்டி சக்கரத்தை தொடர்வண்டியில் பூட்டி ஓட்டுகிறேன் என்று அவர்களை அதிக காலத்துக்கு ஏமாற்ற முடியாது அல்லவா.
Filed under: கட்டுரை |
ருசியாவில் அடக்கம் பண்ணின கம்யூனிஸ பிணம், இயேசுநாதர் உயிர்த்தெழுந்த மாதிரி சௌதில முழிச்சுக்க போகுதா? கம்யூனிஸ்ட்கள் காமடியனிஸ்ட்களாக மாறுவதில் நமக்கொரு ஆட்சோபனையும் இல்லை