முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2

satan_tempting

முகம்மது தன்னுடைய தேவைகளுக்காக அவ்வப்போது மாற்றியும் திருத்தியும் தான் குரானை வடிவமைத்திருக்கிறார் என்பதற்கான ஒரு சோற்றுப் பதமாக சாத்தானிய வசனங்கள் இருக்கின்றன. ஆனால் மதவாதிகள் சாத்தானிய வசங்கள் என்று கருதப்படுவதற்கு ஏற்கனவே மறுப்பளித்திருக்கிறார்கள். அதாவது, அவை திருத்தப்படவில்லை. இப்போதிருந்ததைப் போலவே தான் முதலிலும் வசனங்கள் இருந்தன என்று விளக்கமளிக்கிறார்கள்.

 

முதலில் குரான் குறித்த அடிப்படைத் தகவல் ஒன்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அல்லாவிடம் தாய் ஏடு என்று ஒன்று இருக்கிறது. அதிலுள்ள விபரங்களைத்தான் தேவைக்கேற்ப வேதங்களாக அவன் வெளிப்படுத்துகிறான். ஸபுர், தோரா, இஞ்ஜீல் போன்ற குரானுக்கு முந்திய வேதங்கள் அந்த தாய் எட்டிலிருந்து தான் எடுத்து அந்தந்த தூதர்களுக்கு வழங்கப்பட்டது. அவை பின்னர் மனிதர்களால் திருத்தத்திற்கு உள்ளாகி களங்கப்பட்டதாலேயே, மீண்டும் குரான் எனும் புதிய வேதத்தை முகம்மதின் மூலம் அனுப்புகிறான். அதாவது, முன்னர் நடந்ததைப்போல் மனிதர்களால் குரானும் களங்கப்படாதிருக்க அல்லாவே அதனை காக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு முகம்மதுவுக்கு கொடுக்கிறான். இது தான் குரான் குறித்த அடிப்படையான முஸ்லீம்களின் நம்பிக்கை. இதன்படி குரான் வசனங்களுக்கு மாற்றமோ, திருத்தமோ தேவைப்படாது என்பது உறுதி. ஆனால், குரான் வசனங்கள் இன்னோரு குரான் வசனத்தால் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு குரானிலேயே சான்றுகள் இருக்கின்றன. காட்டாக, வசனம் 6:92 குரான் மக்காவிலுள்ளவர்களுக்காகவே இறக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது. இதற்கு மாற்றமாக வசனம் 68:52 குரான் அகிலத்திலுள்ள அனைவருக்கும் என்கிறது. இது முரண்பாடல்லவா? இல்லை என்பார்கள். எப்படியென்றால் முதலில் மக்காவுக்கு மட்டும் எனும் வசனம் வந்தது பின்னர் அகிலத்தாரனைவருக்கும் எனும் வசனம் முதல் வசனந்த்தை தகுதி நீக்கம் செய்து விட்டது என்பார்கள். தாய் ஏட்டிலிருந்து பிய்த்தெடுத்தே வேதங்கள் கொடுக்கப்பட்டன என்றால் முதலில் ஒன்றைக் கூறி பின் வேறொரு வசனத்தினால் அதை தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட வசனம் என்றால் குறைந்தபட்சம் அதை குரானிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால் இரண்டுமே குரானில் இருக்கிறது. இதில் புரித்து கொள்ள வேண்டியது என்னவென்றால் முகம்மது தன்னுடைய தேவைகளுக்கு ஏற்ப வசனங்களை மாற்றியிருக்கிறார் என்பது தான். இந்த அடிப்படையில் தான் சாத்தானிய வசனங்களையும் பார்க்க வேண்டும்.

 

சாத்தானிய வசனங்களை பொருத்தவரை அதை இஸ்லாமிய மதவாதிகள் ஏற்பதில்லை. அதற்கு அவர்கள் இப்னு இஸாக், தபரி போன்றவை ஆதாரபூர்வமற்ற ஹதீஸ் தொகுப்புகள். அவைகள் ஏற்றுக் கொள்ளக் கூடாதவைகள் என்று பதில் கூறுகிறார்கள். பொதுவாக ஹதீஸ்களை ஆதாரபூர்வமனவை, ஆதாரபூர்வமற்றவை என்று பிரித்திருப்பது மதவாத நோக்கங்களுக்காகத் தானேயன்றி வேறில்லை. ஹதீஸ்களின் இந்த தன்மை குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறோம் என்றாலும் தேவை கருதி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

 

ஹதீஸ்கள் என்பவை கிட்டத்தட்ட முகம்மதின் வாழ்க்கை வரலாற்றை கூறுபவை. அவைகளில் பொய்யான செய்திகள் கலந்து விட்டன என்றுகூறி அவ்வாறான ஹதீஸ்களில் 99 சதவீதத்தை நீக்கி விட்டார்கள். அதாவது மதப் புனிதத்தை கேள்விக்குள்ளாக்கும் அனைத்தையும் பொய்யான ஹதீஸ், இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ் என்று கூறி நீக்கம் செய்து விட்டார்கள். இன்றும் கூட மதப்புனிதத்திற்கு எதிராக எடுத்து வைக்கப்படும் சான்றுகள் அதாரபூர்வமற்றவை என்று தள்ளப்படுகின்றன. இப்படி தள்ளுவதற்கு இரண்டு அளவுகோல்களை வைத்திருக்கிறார்கள். 1. அறிவிப்பாளர்களின் வரிசை, நம்பகத் தன்மை 2. குரானுடன் முரண்படுவது. ஹதீஸ்கள் தொகுக்கப்பட வேண்டும் எனும் எண்ணம் உதித்ததே முகம்மது இறந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தான், அதிலும் ஆதாரபூர்வ தொகுப்புகள் என்று கருதப்படும் ஆறு தொகுப்புகளும் தொகுக்கப்பட்டது முகம்மது இறந்து தோராயமாக 250 ஆண்டுகளுக்குப் பிறகு. இதில் அறிவிப்பாளர்களின் நம்பகத்தனமை எப்படி அறிந்தார்கள்? அதிலும் முகம்மது இறந்த பிறகான முதல் நூறு ஆண்டுகால அறிவிப்பாளர்களை.. ..? முகம்மது உயிருடன் இருக்கும் போதே ஹதீஸ்களில் கலப்படம் வந்து விட்டது. அதனால் தான் முகம்மது அவ்வாறு கலப்படம் செய்யாதீர்கள் என்று எச்சரித்திருக்கிறார்.  ஆக முகம்மது உயிருடன் இருக்கும் போதே கலப்படமாகத் தொடங்கிய ஹதீஸ்களை, அவர் இறந்து 250 ஆண்டுகளுக்குப் பிறகு தொகுக்கப்பட்ட நூல்களை வைத்துக் கொண்டு இன்று மதப் புனிதத்துக்கு பங்கம் வரும் போது இது ஆதாரமில்லாத ஹதீஸ், இதுதான் ஆதாரபூர்வமானது என்று கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.

 

எடுத்துக்காட்டாக ஒன்றை பார்க்கலாம். பால்குடி குறித்த வசனம் முன்னர் குரானில் இருந்து ஓதப்பட்டு வந்தது, பின்னர் நீக்கப்பட்டு விட்டது என முகம்மதின் விருப்பத்திற்குறிய மனைவியான ஆய்ஷா அறிவிக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒன்று புஹாரியில் இடம் பெற்றிருக்கிறது. குரானின் தகவலோடு இது முரண்படுவதால் இது ஆதாரமற்ற ஹதீஸ் என்று இப்போது கூறுகிறார்கள். இதில் ஒரு விசயத்தைக் கவனிக்க வேண்டும். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை நம்பகமானதாகவும் சரியான அறிவிப்பாளர்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. அதேநேரம் ஹதீஸ்கூறும் தகவல் பொய்யானதாக இருக்கிறது. அப்படியானால் பொய்யான ஒரு ஹதீஸ்கூட சரியான, நம்பகமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டிருக்க முடியும் அல்லவா? இதிலிருந்து தெரிவது என்ன? சரியான, நம்பகமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டிருக்கும் ஹதீஸும் கூட சரியான ஹதீஸ் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. வரலாற்றியல் போக்கில் பார்த்தால் ஹதீஸ்கள் எனப்படுபவை அனைத்தும் குப்பைகளே. அதேநேரம் அந்த நேரத்தின் நடப்புகளை அறிந்து கொள்ள ஹதீஸ்களை விட்டால் வேறு வழியில்லை. இந்த அடிப்படையில் தான் ஹதீஸ்கள் முக்கியத்துவம் பெறுகின்றனவேயன்றி வேறெதற்காகவும் அல்ல.

 

சாத்தானின் வசனங்களுக்குத் திரும்புவோம். இவைகளுக்கு மதவாதிகள் கூறும் முதல் மறுப்பு இபுன் இஸாக், தபரி போன்றவை நம்பகத் தன்மை இல்லாதவை என்பது தான். முகம்மதின் காலத்துக்கு நெருக்கமான இது போன்ற நூல்கள் நம்பகத் தன்மை இல்லாதவை என்பதற்கு மதவாதிகள் வைத்திருக்கும் சான்று என்று ஒன்றுமில்லை. மதவாதத்திற்கு ஆதரவாக மதவாதிகளின் தொகுப்பு மட்டுமே உண்மையானவை என்பதும், அதற்காக அவர்கள் பயன்படுத்திய விதிமுறைகள் மட்டுமே சரியானவை என்பதும் மதத்துக்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாம் வரலாற்றுக்கு அவை எடுபடாது. உண்மைக்கு எது அதிக சாத்தியக்கூறை வழங்குகிறது என்பதே கவனிக்கப்பட வேண்டியது. அந்த வகையில் சில கேள்விகளை எழுப்பி பதில் தேடினால் உண்மை விளங்கும்.

 

அந்த வசனத்திற்கு ஏன் முஸ்லீமல்லாதவர்களும் வணக்கம் செலுத்தினார்கள்? இதற்கு மதவாதிகள் கூறும் காரணம், அன்றைய காலத்தில் முஸ்லீமல்லாதவர்கள் தனித்தனியே கடவுளர்களை (லாத், உஸ்ஸா, மனாத் போல) வைத்திருந்தாலும் ஓரிறை என்பது அல்லா தான் என்பதை உணர்ந்திருந்தார்கள். ஆகவே அந்த வசனங்களின் இறுதியில் வரும் அல்லாவை துதிப்பதற்குத்தான் வணங்கினார்களே தவிர லாத், உஸ்ஸா, மனாத் போன்ற தெய்வங்களின் பெயர் உச்சரிக்கப்பட்டதற்காக வணங்கவில்லை என்கிறார்கள். இதைப் போன்ற அபத்தமான பதில் வேறொன்று இருக்க முடியாது. அல்லா என்பதை கடவுள் எனும் அடிப்படையில் தான் கொண்டிருந்தார்களேயன்றி அல்லா என்பது முஸ்லீம்களின் கடவுள் என்பதாக அந்த மக்கள் ஏற்கவில்லை. மட்டுமல்லாது, அல்லா என்பதற்காக அந்த வசனத்திற்கு வணங்கினார்கள் என்றால் மொத்த குரானுமே அந்த அல்லா தந்தது தானே. ஒவ்வொரு வசனமும் எனக்கு வழிபடுங்கள் என்று அல்லா கூறுவதாகத்தானே இருக்கிறது. என்றால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அவர்கள் முஸ்லீம்களாக அல்லவா மாறியிருக்க வேண்டும். அல்லா கூறியிருக்கிறார் என்றாலும் மொத்த குரானையும் நிராகரிக்கும் மக்கள். குறிப்பிட்ட ஒரு வசனத்தில் அல்லா கூறியதற்காக விழுந்து வணங்குவார்களா?

 

வசனம் மாற்றப்பட்டிருக்கிறது என்பதற்கு இசைவாக குரானின் வேறு சில வசனங்கள் இருக்கின்றன

 

.. .. எனினும் சைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கிய பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான்.. .. குரான் 22:52

 

வஹீ மூலம் உனக்கு அறிவிக்கப்பட்டதில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ .. .. .. உம் இதயம் இடுங்கியிருக்கவோ கூடும்.. .. .. குரான் 11:12

 

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அதுபோன்றதை நாம் கொண்டு வருவோம்.. .. .. குரான் 2:106

 

எனவே, அந்த இடத்தில் வசனம் மாற்றப்பட்டிருக்கிறது என்பது உறுதி. என்றால் மாற்றப்பட்ட வசனம் எது? இந்தக் கேள்விக்கு மதவாதிகள் ஆதாரபூர்வமானது என்று அறிவிக்கும் ஹதீஸ்களில் தடயங்கள் உண்டா? ஆனால் இவர்கள் நம்பகத் தனமையற்றது என ஒதுக்கும் இபுன் இஸாக், அல் தபரி போன்றவர்களின் நூல்களில் இந்நிகழ்ச்சிகள் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. முகம்மது வசனத்தை கூறியது, மக்கத்து குரைஷிகள் தங்கள் தெய்வங்களை அங்கீகரித்து விட்டதாய் மகிழ்ந்தது, விழுந்து வணங்கியது, ஒரே ஒரு முதியவர் மட்டும் வணங்க மறுத்து கல்லையோ, மண்ணையோ எடுத்து நெற்றியில் ஒற்றிக் கொண்டது (இது ஒரு தனி ஹதீஸாக புஹாரியில் இருக்கிறது) பின்னர் வானவர்கள் வந்து முகம்மதை கடிந்து கொண்டது பின்னர் அல்லா அந்த வசனத்தை மாற்றி வேறு வசனத்தை இறக்கியது என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஆதாரமானது என மதவாதிகள் கூறும் ஹதீஸ்களில் அனைவரும் வணங்கினர் என்பதும், ஒரு முதியவர் மட்டும் அவ்வாறு வணங்கவில்லை என்பதுமான தகவல்கள் மட்டுமே இருக்கிறது. என்றால் ஏன் வணங்கினார்கள் என்பதற்கு என்ன பதில்?

 

அனைவரும் வணங்கினர் என்பது நம்பகமான ஹதீஸ் என அவர்களே ஒப்புக் கொள்வதால் வசனம் மாற்றப்பட்டிருக்கிறது எனும் இஸாக், தபரி பதிவுகளே உண்மைக்கு நெருக்கமானவை என்பது உறுதியாகிறது. மட்டுமல்லாது, ஆதாரபூர்வமானவை என இன்று கூறப்படும் ஸஹீஹ் சித்தா எனப்படும் ஆறு தொகுப்புகளும் எப்படி உண்மையை மறைக்கின்றன என்பதும் தெளிவாகிறது.

 

ஆக முகம்மது தனக்கு தேவையான இடத்தில் தேவைப்பட்ட விதத்தில் குரான் வசனங்களை மாற்றிக் கொண்டார் எனும் அடிப்படையில் இந்த சாத்தானின் வசனங்கள் குரானை உருவாக்கியது முகம்மது தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

47. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

46. இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை

45. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

44. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 1. மணச்சட்டம்

43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3

42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

3 thoughts on “முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2

  1. என்னப்பா இது! இஸ்லாத்தை தாங்கிப் பிடிப்பவர்களெல்லாம் விவாதத்திலேயும், கேள்வி பதில்லேயும் போயி குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே இவ்வளவு தெளிவா எழுதியிருக்கு யாரும் மூச்சு விடக் காணோம். நெசமாவே அம்புட்டு தானா?

  2. muhmmathu eazluthiyaquran muhmmathuvrke muranpadumbotu allah vaam shaitthanam?? maulavgal vayatrilum ulavgal vayatrilum mathanigal vayatrilum adikkathir thozlare

  3. (என்னப்பா இது! இஸ்லாத்தை தாங்கிப் பிடிப்பவர்களெல் லாம் விவாதத்திலேயும், கேள்வி பதில்லேயும் போயி குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே இவ்வளவு தெளிவா எழுதியிருக்கு யாரும் மூச்சு விடக் காணோம். நெசமாவே அம்புட்டுதானா?) ஆனாலும் இவ்வளவு அப் பிராணியாக நீங்க இருக்கக்கூடாது மணி. எவனாவது, எந்த மதத்துக்காரனாவது நேர்மையாக இருந்ததாக நீங்க சொல்லுங்க? அவனவனுக்கு அவனவன் கடவுளும் மதமும் பெரிசு. பெரிய விஞ்ஞானியாக, சமூக ஆய்வாளனாக இருப்பான். மதம்னு வரும்போது மட்டும் மூளையை அடகு வெச்சுடறான்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s