தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்

 

 

 

 

 

 

2011 தேர்தலின் போது எழுதப்பட்ட பதிவு இது.  காலம் கடந்திருக்கிறது. ஆனால், நிலமை இன்னும் அது தானே. எனவே, மீள்பதிவு.

************************************************************

வந்துவிட்டது தேர்தல் திருவிழா. சோம்பிக்கிடந்த தமிழகம் உதறி எழுந்து திரிகிறது. எல்லா இடங்களிலும் அரசியல்(!) அலசி உலர்த்த‌ப்படுகிறது. அணி மாற்றங்கள், கூட்டணிக் கணக்குகள், தொகுதி இழுபறிகள், வாக்காளர் புள்ளிவிபரங்கள், கட்சிக் கணிப்புகள் என எல்லோரும் தம் மனதுக்குகந்த கணக்குகளில் ஆழ்ந்திருக்கிறார்கள். கடந்து சென்ற இடைத்தேர்தல்களின் புண்ணியத்தில் பொதுத்தேர்தலை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள் பணநாயக ஓட்டுத்தலைவர்கள். நாங்களும் செயல்படுகிறோம் என அங்கொன்றும் இங்கொன்றுமாய் பணத்தையும், பொருட்களையும் பறிமுதல் செய்யும் தேர்தல் கமிசன் மீது ‘குடி’மக்கள் தாக்குதல் தொடுக்க நினைக்குமளவுக்கு இடைத்தேர்தல் பிரியாணிகள் மக்களை பணருசியில் கட்டிவைத்திருக்கின்றன.

தேர்தல் என்றால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனநாயக(!) முறையில் தங்களை ஆள்வதற்கு யாருக்கு உரிமை உண்டு என்பதை தேர்ந்தெடுப்பது என்று நினைப்பதை பழம்பஞ்சாங்கமாக்கி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்னென்ன பொருட்களை இலவசமாய் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெரிந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதாக மாற்றி வைத்திருக்கின்றன ஓட்டுக்கட்சிகள். மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு மிக்ஸி அல்லது கிரைண்டர், இலவச அரிசி, வயதானவர்களை தேடி மருத்துவர்கள் இன்னும் ஏராளம் என திமுக. நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்று அதிமுகவும் செல்போன் உட்பட வரப்போகும் அவர்களின்  அட்டவணையை நாளிதழ்களுக்கு கசியவிட்டிருக்கிறது. வீசப்படும் எலும்புத்துண்டை கவ்விக்கொண்டு குலைக்காமல் திருடனுக்கு வாலாட்டும் நாயைப் போல் மக்களை மாற்றி வைத்திருக்கின்றன இந்த ஓட்டுக் கட்சிகள்.

இன்னொருபக்கம் இந்தக் கட்சிகள் தங்களுக்குள் நடக்கும் பங்கீட்டுச் சண்டைகளையே அரசியலாக பேசவைத்திருக்கின்றன. 63 வேண்டுமாம் அதுவும் அவர்கள் கேட்பது வேண்டுமாம் என்று முறுக்கிக்கொண்டு இரண்டு மணி நேர உண்ணாவிரதம் நடத்திய அனுபவத்தில் இரண்டு நாள் ஆதரவு வாபஸ் நாடகத்தை நடத்திய‌ கருணாநிதி. ஸ்பெக்ட்ரம் என்னும் ஆலமர ஊழலில் ஒன்றிரண்டு இலைகளை எடுத்துக்காட்டி அதை நமுத்துப்போன ஓலைவெடியாக மாற்றிய சோனியா. பேசுகிறோம், பேசுகிறோம் என்று கூறிக்கொண்டே பார்ப்பன முகம் காட்டி 160க்கு ஆளை நிறுத்திய ஜெயலலிதா. கண் சிவந்து கொண்டே மூன்றாம் அணி போக்கு காட்டிய விசயகாந்து, காமெடி பீஸ் கம்மூனுஸ்டுகள். தன்மான சீன் காட்டிக்கொண்டே அழுவேன் என்று கோமாளி வேசம் கட்டி வெளிவந்த வைக்கோ. இந்த நாய்ச் சண்டைகளை மாற்றி மாற்றியோ; கூட்டிக் குறைத்தோ பேசுவது தான் அரசியலா?

அய்யா வந்தாலும் அம்மா வந்தாலும் நம்ம வயிற்றை நாம தானே பாத்துக்கணும் என்று நடப்பது நம‌க்கு தொடர்பில்லாத ஒன்று என நினைக்கும் மக்களின் அறியாமை ஒருபக்கம். ஏஸி காரில் அமர்ந்து எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு அந்தக் காலத்துல அரசியல் நேர்மை திராவிடக் கட்சிகள் வந்து கெடுத்துட்டான்க‌ள் என்று ரிட்டையர்டு பார்ப்பனியம் பேசும் காரியவாதிகள் மறுபக்கம். இரண்டுக்கும் இடையில் எல்லாவித தகிடுதத்தங்களுக்கும் தயாராக இருக்கும் ஓட்டுக் கட்சிகள். இது தான் அரசியலா? எது அரசியலோ அதை தவிர்த்து விட்டு அரசியலற்ற ஆரவாரங்களையும் சண்டைகளையும் பேசிக்கொண்டிருந்துவிட்டு அரசியலே சாக்கடை என்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

திமுக ஆளும் கட்சி, அதிமுக எதிர்க்கட்சி இரண்டும் மாற்றி மாற்றி ஆளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுவருகின்றன. இரண்டின் கொள்கைகளும் வேறு வேறு. ஒரு கட்சி போட்ட திட்டங்களை இன்னொரு கட்சி செயல்படுத்துவதில்லை என்று பேசிக் கொள்கிறார்கள். சட்டசபைகளில் காராசாரமாக விவாதித்துக்கொள்கிறார்கள். பல்பொடி கொடுக்கும் திட்டத்தை ஒரு ஆட்சி கொண்டு வந்தது என்பதற்காக ரத்து செய்துவிடுகிறது மறு ஆட்சி. ஆனால், பெருநிறுவனங்களுக்கு செய்து கொடுக்கும் சலுகைகளை மட்டும் ரத்து செய்வதில்லையே ஏன்? ஒரு ஆட்சிக்கு தேவைக்க அதிகமாக சற்று நெருக்கம் காட்டினாலும் ஆட்சி மாறியதும் அந்த அதிகாரியை டப்பா துறைக்கு தூக்கியடிக்கும் கட்சிகள்; பன்னாட்டு நிறுவன அதிகாரிகள் ஒரு ஆட்சியோடு குழைந்தாலும் மறு ஆட்சி வந்ததும் அவர்களை தூக்கி வீசாமல் இவர்களும் ஓடிப்போய் ஒட்டிக்கொள்கிறார்களே எப்படி? அரைக்கால் பைசா உதவித்திட்டம் என்றாலும் போட்டோ பிடித்து நாளிதழ்களில் போட்டுக்கொள்ளும் கட்சிகள், முதலாளிகளுக்கு கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் வெளிக்காட்டிக் கொள்வதில்லையே ஏன்? ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்களிடம் வந்து ஓட்டு வாங்க வேண்டியதிருக்கிறது என்பதால் “ஆட்ரா ராமா, ஆட்ரா ராமா” என்று குரங்காட்டம் போட்டுக் காட்டும் ஓட்டுக் கட்சிகள்; ஓட்டு வாங்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லாத முதலாளிகளிடம் “பொட்டிப் பாம்பு” போல் அடங்கி விடுகிறார்களே எதற்கு?

ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள் என கூறிக்கொண்டாலும், ஓட்டு வாங்கவேண்டியதிருக்கிறது என்பதைத் தவிர மற்றெல்லா விதத்திலும் மக்களை அலட்சியம் செய்கிறார்கள். எந்தத்தேவையும் இல்லாவிட்டாலும் முதலாளிகளை எல்லாவித வசதிகளையும், சலுகைகளையும் செய்து கொடுத்து எஜமானர்களாக கொண்டாடுகிறார்கள். என்றால் இதை மக்களாட்சி என்று கூறுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமல்லவா? வெளிப்படையாக முதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளையும், வரித் தள்ளுபடிகளையும், மானியங்களையும் எதிர்த்து யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்பது ஒரு புறமிருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் என்று கூறப்படுபவையும் உள்ளடக்கத்தில் முதலாளிகளுக்கான திட்டங்களாகவே இருக்கின்றன.

விவாசாயக் கடன்கள் என அறிவிக்கிறார்கள், ஆனால் அது விதைகளுக்காகவும், இடுபொருட்களுக்கவும் செலவிடப்படுவதால் அந்த நிறுவனங்களுக்குத்தான் அதன் பலன் போய்ச் சேர்கிறது. உரக்கம்பனிகளின் லாபம் குறையும் நேரத்தில் உர மானியம் என்று அறிவித்து விவசாயிகளை கடனாளிகள் ஆக்கிவிட்டு உரக்கம்பனிகள் லாபமடைய உதவுகிறார்கள். வீடு கட்ட உதவிக்கடன் என்கிறார்கள் அது போய்ச் சேர்வதோ ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு. மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்கிறார்கள், ஆனால் அது ஏழை மக்களுக்கு இலவச மருத்துவசேவை என்ற பெயரில் மக்களிடமிருந்து வரிகளாக பிடுங்கப்படும் பணம் தனியார் மருத்துவமனைகளுக்கு அள்ளிவிடப்படுவதாக இருக்கிறது. தனியார் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கு வசதியாக சாலைகளை அமைத்துவிட்டு கிராமப்புற மக்கள் மேம்பாடு என்கிறார்கள்.

மக்கள் குடி நீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது ஆறுகளையும் ஏரிகளையும் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள். தரகு முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு எத்தனை சைபர் என்று எண்ணமுடியாமல் திணரும் அளவுக்கு அலைக்கற்றை என்றும் எஸ் பேண்ட் என்றும் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையடித்து மறைத்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவர முடியாது என முதலாளிகளை காப்பவர்கள் புழுத்த அரிசியைக்கூட பட்டினி கிடக்கும் ஏழைக்கு கொடுக்க முடியாது என்று திமிராக பேசுகிறார்கள்.

ஆக சட்டபூர்வமாக திட்டங்கள் தீட்டினாலும், சட்டவிரோதமாக கொள்ளையடித்தாலும் அது முதலாளிகளுடன் முதலாளிகளுக்கு சாதகமாக என்றானபின் ஓட்டை மட்டும் ஏன் நம்மிடம் கேட்கிறார்கள்? ஓட்டு போடுவதைத்தவிர உங்களுக்கு எங்களுக்கும் வேறு எந்த உறவும் இல்லை என்று தெளிவாக அறிவிக்க முடியுமா இவர்களால்? அல்லது இது ஜனநாயகம் என்றால், நடப்பது மக்களாட்சி என்றால் தைரியமாகச் சொல்லுங்கள்,

“எந்த நாய்க்கும் ஓட்டு கிடையாது” என்று.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

2 thoughts on “தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்

  1. இந்தியாவின் சமூக அரசியல் நிலையை உண்மையாகவே பிரதிபலிக்கின்றது தங்களது கட்டுரை. ஆனாலும் இம்முறை நான் மோடிக்கு வாக்களிக்கப்போகின்றேன்.அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு அளிக்கலாம்.நிச்சயம் முஸ்லீம்விரோத அரசாக யாரும் செயல்பட முடியாது. உலக அரங்கில் வீண் வேலைகளில் அரசு நிர்வாகம் வீணாகிவிடும். ஆனால் இந்துக்களுக்கு ஒரு வாழ்க்கை பயிற்சி அளிக்க வேண்டும். முறையான சமய பயிற்சி அளிக்க வேண்டும். அமைதியான முறையில் மனச்சாந்தி பெறும் வகையில் வழிபாடு முறைகள் திருத்தி அமைக்க வேண்டும். சிறு தெய்வ வழிபாடு முற்றிலும்-இன்னும் 100 ஆண்டுக்குள் -இந்தியாவில் இருக்கக் கூடாது.இது போன்ற திட்டங்கள் இந்துக்களுக்கு தேவை.

    மனித வளம் பெருக்கும் திட்டங்கள் கோவில் நிர்வாகத்தில் தேவை.சமய கல்வியின் நோக்கம் மனித வள மேம்பாடுதான்.
    மேற்படி திட்டங்கள் 100 கோடி இந்துக்களை மனித வளம் குறித்து சமூக இணக்கம் குறித்து பயிற்சி பெறுவதாக அமைய வேண்டும்.

    100 கோடி இந்துக்களின் மனஓட்டத்தில் மாற்றம் கொண்டு வராமல் சிறந்த ஆட்சியை நடத்த முடியாது.

  2. கேரளாவில் ஈழவர்கள் மத்தியில் ஸ்ரீநாராயண குரு என்பவர் மகத்தான வளர்ச்சியை ஏற்படுத்தினார்.தீண்டாமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்து நொந்து போயிரந்த மக்களை அற்புதமாக திருத்தி அளாக்கி தலை நிமிர்ந்து வாழ வழிகாட்டினார. ஈழவர்களின்கோவிலில் 39 தெய்வ சிலைகளை வைத்து வழிபாடு செய்து வந்தார்கள்.கோவிலுக்கு வந்த குரு ”கோவிலில் இருந்த ஸ்ரீ விநாயகர் ஆலயத்தை மட்டும் வழிபாட்டுக்கு வைத்துக் கொண்டு மீதி சிலைகளை அடித்து நொறுக்கி விடச் சொன்னார்கள்.அம்மக்களும் செய்து முடித்தார்கள். கோவில் நிர்வாகத்தில் சிக்கனம் வந்தது. 3 ஆண்டுகளில் அம்மக்கள் பள்ளிக்கூடம் மற்றும் நூலகம் ஏற்படுத்தினார்கள். பின் தொழில் கல்வி பள்ளியை உருவாக்கினார்கள். அற்புத் நிகழ்ந்தது. கடவுள் அள்ளிக் கொடுக்கவில்லை.மனிதன் திட்டமிடல் சிறப்பாக இருந்ததால் பணத்தை முறையாக செலவு செய்ய -மனித வளமான பணிகளில் செலவு செய்ததன் விளைவு மேற்படி முன்னேற்றம். இதுபோன்ற மாற்றம் இந்துக்களில் கோவில்களில ஏற்படவேண்டும்.
    அனைவருக்கும் சங்கீதம் மற்றும் யோகா கற்றுக் கொடுக்க வேண்டும்.இதுபோல பல திட்டங்கள் இந்துக்களுக்கு தேவை. இந்துக்கள் இதுபோன்ற திட்டங்களை விரும்புகின்றார்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s