விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே, கம்யூனிசம் நோக்கி .. .. ..

  1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்

is

இஸ்லாமிய மத பிழைப்புவாதிகளான பிஜே குழுவினர் நடத்தும் உணர்வு எனும் வார இதழில் கடந்த மே மாத இறுதியிலிருந்து ஒரு தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது. “இஸ்லாத்தை நோக்கி வா தோழா!” எனும் அந்த தொடருக்கு “கம்யூனிசத்திலிருந்து இஸ்லாத்துக்கு வந்த ஒருவர் கம்யூனிசவாதிகளோடு விவாதித்த அனுபவங்கள்” என்று விளக்கமளித்திருக்கிறார்கள்.

முதலில், அவர்களுக்கு இப்படி ஒரு தொடரை எழுத வேண்டும் எனும் எண்ணம் எப்படி ஏற்பட்டிருக்கும் எனும் கேள்வியை எழுப்புவோம். எண்பதுகளின் தொடக்கத்தில் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எனும் அமெரிக்க கள்ளக் குழந்தையின் மழலை மொழிகள் தமிழகத்தில் கேட்கத் தொடங்கின. அந்த கள்ளக் குழந்தையின் மழலைகளை எதிரொலித்த ஜாக் எனும் குழுவினர், அவர்கள் நடத்திய நஜாத் எனும் இதழின் வாயிலாக இன்றுவரை நஜாத்வாதிகள் என்றும் அறியப்படுகிறார்கள். இந்தக் குழுவில் பிரபலமான ஒருவர் தான் பி. ஜெய்னுலாப்தீன் எனும் பிஜே. மேடை விவாதம் எனும் வடிவத்தை, தன்னுடைய வாதத் திறமையைப் பயன்படுத்தி எளிமையாகக் கொண்டு சென்று இஸ்லாமிய மக்கள் மனதில் வெகுவாக இடம்பிடித்தார். குறிப்பாக நெல்லை ஜெபமணியுடன் மதுரையில் இவர் நடத்திய மூன்று நாள் விவாதம் இஸ்லாமிய இளைஞர்களை துல்லியமாக கவர்ந்தது. அன்றிலிருந்து இன்றுவரை பல்வேறு விவாதங்களை இவர் நடத்தியிருக்கிறார். மாறுபட்ட மதத்தினர்களோடு மட்டுமல்லாது, சொந்த மதத்திற்குள்ளே மாறுபட்ட பல்வேறு குழுக்களுடனும் கூட விவாதங்களை நடத்தியிருக்கிறார். இது இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் அவருக்கான தனிச் செல்வாக்கை வெகுவாக வளர்த்தது.

முதலில் இயங்கிய ஜாக் குழு இன்றுவரை பல்வேறு குழுக்களாக உடைந்திருக்கிறது. அப்படியான ஒவ்வொரு உடைவும் கூடுதலாகவோ குறைவாகவோ பிஜேவின் நிலைபாட்டை ஒட்டியே நிகழ்ந்திருக்கிறது. அதேநேரம் ஒவ்வொரு உடைவின் பிறகும் பிஜேவின் செல்வாக்கும் அதிகரித்தே வந்திருக்கிறது. இவரது மாற்றுக் குழுவினரால் தமிழகத்தின் கடைசி நபி என்று கிண்டலாக குறிப்பிடும் அளவுக்கு இவரது செல்வாக்கு இருக்கிறது (கடைசி நபி எனும் சொல்லின் பொருள் தெரியாதவர்கள் முஸ்லீம்களிடம் விளக்கம் கேட்டுக் கொள்ளவும்) இந்த அடிப்படையில் தற்போது டி.என்.டி.ஜே (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்) எனும் குழுவில் பிஜே இருக்கிறார். கருணாநிதி பாணியில் பொதுக்குழு செயற்குழு இருந்தாலும், காந்தி பாணியில் எந்தப் பொறுப்பில் இல்லாமலிருந்தாலும், டி.என்.டி.ஜேவைப் பொறுத்தவரை பிஜே கூறுவதை யாரும் மீறுவதில்லை.

ஆனால் அண்மைக் காலங்களில் நிலமை மாறிக் கொண்டிருக்கிறது. பிஜேயின் செல்வாக்கு அவரின் தடுமாற்றங்களால் சரிவைக் கண்டு வருகிறது. எடுத்துக்காட்டுகளாக, அல்லாவுக்கு உருவம் உண்டா எனும் விவாதத்தில் தெளிவான வாதங்களை வைக்க முடியாமல் ஆய்வுக்காக 6 மாத கால அவகாசம் எடுத்துக் கொள்வதாக அறிவித்தது. மனிதன் எனும் முறையில் முன்னர் செய்த தவறுகளை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன் என்று தன்னுடைய இணையதளத்தில் வெளிப்படையாக அறிவிக்க நேர்ந்தது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதலில் அதிமுக பின்னர் திமுக என்று தடுமாறியது, அதற்கு கூறிய பொய்யான காரணங்கள் என பலவற்றை கூறலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக வினவு தளத்துடனான பிரச்சனையில் அறுவறுக்கத்தக்க வகையில் நாராச நடையில் திட்டி வீடியோ வெளியிட்டது. இதற்கு டி.என்.டி.ஜே வினரே கடுமையான விமர்சனங்களை கணிசமாக அனுப்பினர். இதன் விளைவாக டி.என்.டி.ஜேவினர் யாரும் வினவு இணைய தளத்தைப் பார்க்கக்கூடாது என்று இரகசிய தகவல் அனுப்பப்பட்டதாகக் கூட அறிய நேர்ந்தது.

சட்டமன்றத் தேர்தல், வினவு ஆகிய நிலைபாடுகளில் டி.என்.டி.ஜே வின் செல்வாக்கு தன் சொந்த அணிகளாலேயே சிதிலப்பட்டதைக் கண்ட நிர்வாகம் அதை தூக்கி நிறுத்தும் விதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் அகோரி மணிகண்டனுடனான பில்லி சூனிய சவடால். அதேநேரம் வினவு தளத்தில் இஸ்லாமிய நிலைப்பாடுகள் குறித்து வெளிவந்த பல கட்டுரைகள் புதிய விழிப்புணர்வை நோக்கி முஸ்லீம்களை நகர்த்திச் சென்றது. இது நிச்சயம் பிஜேவின் இணையதளத்தில் கேள்விகளாக வெடித்திருக்கும். (அத்தளத்தில் வைக்கப்படும் கேள்விகள் வெளிப்படையாக தெரிவதில்லை, அவர்களால் சலித்தெடுத்து பதில் கூறும் போது பதில் கூறப்படும் கேள்விகள் மட்டுமே வெளியில் தெரியும். வெளிப்படையாக பின்னூட்டத்தை, கேள்விகளை வெளியிட்டால் நாம் கூறும் அவசியம் இன்றி இது யாவருக்கும் தெரிந்திருக்கும்) கம்யூனிசம் ஒரு விளக்கைப் போல் தம் அணிகளிடையே வெளிச்சத்தைப் பரப்புவதால் அதற்கு எதிராக எதையாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தன் அணிகளிடம் கம்யூனிசத்தை அவதூறு கூறி ஒரு வெறுப்பை ஏற்படுத்த வேண்டி ஒரு கற்பனையான உரையாடலின் வழியாக அதை செய்ய முன்வந்திருக்கிறது உணர்வு வார இதழ். தன்னை நம்பும் சொந்த அணிகளிடமே ஒரு கற்பனை உரையாடலை நடத்திக்காட்டி ஏமாற்ற வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கலாம். எம்மிடம் அதுபோன்ற அவசியம் எதுவும் இல்லை.

ஏன் இப்படி ஒரு உரையாடல் நடந்திருக்கக் கூடாதா? என்று அப்பாவியாக கேட்கும் சிலருக்கு முதலில் அதனை தெளிவு படுத்தி விடலாம். இந்தத் தொடருக்கு அவர்கள் கொடுத்திருக்கும் துணைத் தலைப்பு கம்யூனிசத்திலிருந்து இஸ்லாத்துக்கு வந்த ஒருவர் கம்யூனிசவாதிகளோடு விவாதித்த அனுபவங்கள் என்பது. அதாவது ஏற்கனவே கம்யூனிஸ்டாக இருந்து பின்னர் அதிலிருந்து விலகி இஸ்லாத்திற்கு வந்த ஒருவர் கம்யூனிஸ்டாக இருக்கும் ஒருவரோடு விவாதித்ததை தொடராக எழுதுகிறார்கள். ஆனால் தொடரின் முதல் பகுதியின் இரண்டாவது பத்தியிலேயே இப்படியும் எழுதியிருக்கிறார்கள் “கம்யூனிசத்தைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென எனக்கிருந்த நீண்ட நாள் ஆசையைப் பூர்த்தி செய்ய .. .. ..” அதாவது கம்யூனிசத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தனக்கிருந்த நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்ய அவர் செய்த முதல் நடவடிக்கையே புத்தகக் கடையில் சென்று புத்தகங்களைத் தேடியது தான். அப்படி புத்தகங்களைத் தேடிய போது அறிமுகமாகிய ஒரு கம்யூனிஸ்டோடு உரையாடுவது என்பது, கம்யூனிசத்தைப் பற்றி தெரியாத இஸ்லாமியர் ஒருவர் கம்யூனிஸ்டோடு உரையாடியதாகுமா? கம்யூனிசத்திலிருந்து விலகி இஸ்லாத்துக்கு வந்த ஒருவர் கம்யூனிஸ்டோடு உரையாடியதாகுமா? தொடக்கத்திலேயே ஏன் இந்த முரண்பாடு? ஆரம்பமே தில்லுமுல்லு தானா?

இந்த தொடரின் மூலம் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள்? இஸ்லாத்தின் மதக் கொள்கைகளை கம்யூனிச கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு இஸ்லாம் மதமே சிறந்தது என நிறுவ விரும்புகிறார்கள். அப்படியானால் அவர்கள் செய்திருக்க வேண்டியது என்ன? தலைப்புவாரியாக எடுத்துக் கொண்டு இரண்டின் நிலைப்பாடுகளையும் எடுத்து வைத்து எது சரியானது எனும் கேள்வியை எழுப்பி, அறிவியலோடு உரசிப்பார்த்து, யதார்த்தத்தின் வழியில் நிருவி அல்லதை தள்ளி நல்லதை ஏற்கச் செய்ய வேண்டும். இது நேர்மையாளர்கள் செய்வது. ஆனால், அந்த உணர்வு தொடரில் என்ன செய்யப்பட்டிருக்கிறது? பத்து பகுதிகள் வரை பார்த்த பின்பும், அப்படியான எதுவும் தென்படவில்லை. மாறாக, சில விதந்தோதல்கள், அரசியலற்ற முறையில் மார்க்ஸ் மீதான அவதூறுகள், தட்டையான புரிதலில் சில விளக்கங்கள், கேலிகள் அவ்வளவுதான். ஏனென்றால் அவர்களின் நோக்கம் தன் தொண்டரடிப்பொடிகளை தக்கவைப்பது தானே தவிர சரியான பாதையில் சமூகத்திற்காக செயல்பட வைப்பதல்ல. எம்மிடம் அந்த நோக்கம் உண்டு என்பதால் நேரிய பாதையில் பயணிப்போம்.

புத்தக கண்காட்சியில் அவரைப்போல யாரும் கம்யூனிசத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு புத்தகத்தை தேடி அலையவில்லையாம், இதன் மூலம் ஏன் கம்யூனிசம் தோற்றுப் போனது என்பது அவருக்கு புரிந்து போயிற்றாம். கம்யூனிசத்திற்கு எதிராக பேசுபவர்கள் எவரானாலும் வழக்கமாக செய்யும் அதே முதலாளித்துவ வாந்தியான கம்யூனிசம் செத்துப் போய்விட்டது என்பதைக் கூறி தங்களை அச்சுப்பிசகாமல் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். கம்யூனிசம் செத்துப் போய் விட்டதா? ஒரு கொள்கை சமூகத்தில் தேவையற்றதாகி விட்டது, மரித்து விட்டது என்று கூற வேண்டுமாயின் முதலில் அந்தக் கொள்கை உலகில் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். செயல்படுத்தும் போது எந்த நோக்கத்திற்காக அந்தக் கொள்கை உருவானதோ அதற்கு எதிர்மறையான விளைவுகளைத் தந்திருக்க வேண்டும். அப்போது தான் ஒரு கொள்கையை செத்துப் போன கொள்கை என்று கூற முடியும். ஆனால் இதுவரை உலகில் விஞ்ஞான கம்யூனிசம் செயல்பாட்டில் இருக்கவில்லை. தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்தவும் முடியாது. ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இது சாம்பார் வைக்க வேண்டும் கத்தரிக்காய் எங்கு கிடைக்கும் என்று கேட்பதைப் போல் கம்யூனிசம் கற்க வேண்டும் புத்தகம் எங்கு கிடைக்கும் கேட்டவருக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? அல்லது அறிந்து கொள்ளும் தேடல் இருக்குமா? கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை. அதைக் கொண்டு வரும் நோக்கிலான ஆயத்தங்கள் தான் சோசலிசம். அரசு என்றால் என்னவென்று புரியாமல், வரலாறு என்னவென்று தெரியாமல் கம்யூனிசம் ஒரு கட்சி என்றும், யாரோ ஆளும் ஆட்சி என்றும் பாமரத் தனத்தில் இருப்பவர்களிடம், அதிலும் அது குறித்து உணர்ந்து கொள்ளக் கூடாது என்ற மூடநம்பிக்கையில் இருப்பவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?

குழந்தைப் பருவத்திலிருந்த சோசலிசத்தை அதன் எதிரி வல்லூறுகள் கிழித்துப் போட்டதினால் அந்தந்த நாடுகளில் சோசலிசம் பின்னடைவைச் சந்தித்தது. சோசலிசத்தை தாக்கி வீழ்த்துவதற்கு முதலாளியம் செய்த சதிகளும் எத்தனங்களுமே அது சரியான திசையில் இலக்கை நோக்கிச் சென்றது என்பதற்கான கட்டியம். இன்று உலகமெங்கும் கம்யூனிச திசை வழியில் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கம்யூனிச நூல்களும் அதன் ஆய்வுகளும் பெருமளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன என்பதை முதலாளித்துவ ஊடகங்களால் கூட மறைக்க முடியவில்லை. இதன் பொருள் கம்யூனிசம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதையல்லவா குறிக்கிறது. உலகில் இஸ்லாம் போன்ற மதங்கள் உட்பட அனைத்துவித சுரண்டல்களும் இருந்து கொண்டிருக்கும் வரை கம்யூனிசத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கும். தீர்ந்து போகாது, மரித்தும் போகாது.

சமையலறைப் பக்கம் ஒதுங்காமல் சாம்பார் வைக்க கத்தரிக்காய் தேடிய ஃபாசிலோ, தொடரை வெளியிட்ட உணர்வோ, அல்லது எல்லாம் வல்ல பிஜேவோ இதற்கு பதில் கூறிப் பார்க்கட்டும்.

ரஷ்யா சீனாவில் சோசலிச ஆட்சி வீழ்ந்து விட்டது எனவே கம்யூனிசம் செத்து விட்டது என்பவர்களே, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி வீழ்ந்து விட்டது. எனவே, இஸ்லாம் செத்து விட்டது என நான் கூறுகிறேன், மறுக்க முடியுமா உங்களால்?

இஸ்லாமிய நாடு எனும் ஹோதாவில் இருக்கும் நூற்றுச் சொச்ச நாடுகளில் எந்த நாடும் முற்று முழுதாக இஸ்லாமிய கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க முடியவில்லை. எனவே, இஸ்லாம் செத்துப்போய் விட்டது என்று நான் கூறுகிறேன், மறுக்க முடியுமா உங்களால்?

இன்று உலகில் இருக்கும் கோடிக்கணக்கான முஸ்லீம்களில் ஒற்றை ஒருவரையாவது இஸ்லாத்தை நூறுசதம் பின்பற்றுபவர் என்று அடையாளம் காட்ட முடியுமா? என்றால் ஒருவரால் கூட பின்பற்றப்பட முடியாத, ஒருவர் கூட முழுமையாக பின்பற்றாத இஸ்லாம் செத்து விட்டது என்று நான் கூறுகிறேன். மறுக்க முடியுமா உங்களால்?

இஸ்லாம் தோன்றிய அன்றிலிருந்து இன்றுவரை 1400 ஆண்டுகளுக்கும் மேலாக சௌதியில் ஆட்சியில் இருக்கும் கொள்கை இஸ்லாம் தான். இஸ்லாத்தில் இருப்பதாக கூறப்படும் சமூக மேன்மையை(!), அமைதியை(!) இந்த 1400 கால ஆட்சியதிகாரத்தில் கொண்டுவர முடிந்திருக்கிறதா? என்றால் இஸ்லாம் செத்த மதமா? உயிருள்ள மதமா?

அவர்களின் இந்த கற்பனை உரையாடலில் பல விசயங்களை கிண்டல் தொனியில் கூறிச் செல்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்லும் அடுத்த கிண்டல் தான் மூலதனத்தை நான்கு பக்கம் கூட படிக்க முடியாது, படித்தாலும் புரியாது என்பது. எளிமையாக அவர்களிடம் இப்படி திருப்பிக் கேட்கலாம். ஒன்றாம் வகுப்பில் படிக்கும் மாணவனிடம் ஒரு ஆய்வுக் கட்டுரையை கொடுத்து படிக்கச் சொன்னால் படிக்க முடியுமா? புரிந்து கொள்ளக் கூடுமா? இது படிப்பவனின் தகுதி குறித்த விசயம் தானேயன்றி படைப்பின் தன்மை குறித்த விசயம் அல்ல. எந்த ஒரு ஆய்வையும் படித்து புரிந்து கொள்ள வேண்டுமானால் கவனமும்,தேடலும், முனைப்பும் அவசியம். அது இல்லை என்றால் ‘அ’னா ‘ஆ’வன்னா எழுதிய புத்தகம் கூட புரியாது, படிக்க முடியாது. இது ஒரு பக்கமென்றால் அந்த மூலதனம் நூலின் முன்னுரையில் இதுபோன்ற கத்தரிக்காய்களுக்கு புரியவேண்டும் என்பதற்காகவே பேராசான் இப்படி குறிப்பிட்டிருக்கிறார், “நான் பயன்படுத்தியிருப்பது பொருளாதார தத்துவஞானிகள் இதுவரை பயன்படுத்தாததுமான ஆய்வுமுறையின் காரணமாக எனது புத்தகத்தின் தொடக்க அத்தியாங்களை படிப்பதற்கு கொஞ்சம் சிரமம் ஏற்படும். ஆகவே தொடங்கியவுடன் இறுதி முடிவுக்கு வர ஆசைப்படுகிற பிரஞ்சு வாசகர்கள் தங்களை உடனடியாக அலட்டுகின்ற உடனடி பிரச்சனைகளை அடிப்படைத் தத்தவங்களுடன் பொருந்தும் அவசரத்தில் நம்பிக்கை இழந்து தொடர்ந்து வரக்கூடிய அத்தியாங்களுக்குப் போகாமல் இருந்து விடுவார்களோ என்று சந்தேகப்படுகிறேன். என்னால் தவிர்க முடியாத நிலை இது. ஆகவே உண்மையை கண்டறிய வேண்டும் என்று விரும்புகிற வாசகர்களுக்கு இது பற்றி எச்சரித்து அவர்களை தயார் செய்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய என்னால் முடியாது. அறிவியலுக்கு முன் எந்த ராஜபாதையும் இல்லை. அறிவியலின் செங்குத்தான பாதையில் களைப்புக்கு அஞ்சாமல் ஏறுகிறவர்கள் மட்டுமே அதன் ஒளிமயமான சிகரத்தை சென்றடைய முடியும்” இப்படி தெளிவாக குறிப்பிடப்பட்டிக்கும் பின்னரும் சிலரால் கிண்டல் செய்ய முடிகிறது என்றால் அவர்களின் நோக்கம் என்ன என்பதை அந்தக் கிண்டலிலிருந்து தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அவர்கள் கூறும் பொன்மொழி “இஸ்லாம் என்பது மதமல்ல. ஒரு நல்வழிகாட்டி, இனிய எளிய மார்க்கம்” இஸ்லாம் மதமல்ல மார்க்கம் என்று கூறுவது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம், பித்தலாட்டம். ஒரு வாதத்திற்க்காக இஸ்லாம் மதமல்ல மார்க்கம் என்று கொள்வோம். இஸ்லாமிய மதத்தின் கொள்கை என்ன? உலகின் முதல் மனிதன் தொடங்கி முடிவு நாள் வரை அனைத்து மனிதர்களுக்குமாக அல்லா உருவாக்கியது தானே இஸ்லாம் எனும் மதம். இந்த இஸ்லாத்தை தானே பல்வேறு வகையில் திரித்து பல்வேறு மதங்களாக மக்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுதானே இஸ்லாமிய மத நம்பிக்கை. இதன்படி பார்த்தால் இஸ்லாம் என்பது சுத்தமான மதம் ஏனையவை திரிக்கப்பட்ட மதம் என்பது தானே சரியாக இருக்கும். அல்லது இஸ்லாம் என்பது சுத்தமான மார்க்கம் ஏனையவை திரிக்கப்பட்ட மார்க்கம் என்பது தானே சரியாக இருக்கும். மாறாக இஸ்லாம் மட்டும் மார்க்கம், ஏனையவை மதம் என்று கூறுவது எப்படி சரியாகும்?

மதம் என்றால் என்ன? மார்க்கம் என்றால் என்ன? மதம் என்றால், சரி தவறை பரிசீலிக்கும் திறனற்று தன்னுடைய நிலைபாட்டில் மட்டுமே நின்று மூர்க்கமாக செயல்படுவது. மார்க்கம் என்றால் செல்லும் வழி. இந்த அளவுகோல்களில் இஸ்லாத்துக்கும் பிற மதங்களுக்குமிடையே என்ன வேறுபாடு இருக்கிறது? சரியோ தவறோ; கூடுதலோ குறைவோ இஸ்லாம் உட்பட அனைத்து மதங்களுமே வாழ்க்கைக்கான வழிகாட்டுதலைக் கொண்டிருக்கின்றன. இஸ்லாம் உட்பட அனைத்து மதங்களுமே உள்வருவோரை வரவேற்கவும் வெளியேறுவோரை எச்சரிக்கவும் செய்கின்றன. இஸ்லாம் உட்பட அனைத்து மதங்களுமே விதிக் கொள்கையை ஆதாரமாய் கொண்டிருக்கின்றன. இஸ்லாம் உட்பட எல்லா மதங்களுமே மரணத்தின் பிறகான வாழ்கையை உறுதி கூறுகின்றன. என்றால் என்ன வித்தியாசம் இஸ்லாத்துக்கும் ஏனைய மதங்களுக்கும்?

இஸ்லாம் மதமல்ல அது வாழ்க்கைக்கான வழி என்றால் அந்த வழியில் செல்வதற்கும் செல்லாமலிருப்பதற்குமான சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் அது மரபு ரீதியாக அல்லவா பின்பற்றப்படுகிறது. முஸ்லீமுக்குப் பிறந்தவன் முஸ்லீம் என்று எந்த அடிப்படையுமற்று பிறப்பு வழியாக கடைபிடிக்கப்படும் மதத்தில் என்ன சுதந்திரம் இருக்கிறது? அதுமட்டுமா, எவ்வளவு விருப்பமானதாக இருந்தாலும் இஸ்லாத்தில் இல்லாதவரை அல்லது இணையாதவரை திருமணம் செய்து கொள்ளாதே என்று கூறும் மதம் மார்க்கமாக இருக்க முடியுமா? பிறந்த குழந்தை ஏழு வயதுக்கு மேல் தொழச் செல்லாமலிருந்தால் அடித்து அழைத்துச் செல்லுங்கள் என்று கூறும் மதம் எப்படி மார்க்கமாக இருக்க முடியும்? ஆனால் கம்யூனிசத்தை ஏற்றுக் கொண்ட பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் கூட கம்யூனிசத்தை உணர்ந்து ஏற்றுக் கொள்ளாதவரை எவரும் கம்யூனிஸ்டாக முடியாது. எனவே இஸ்லாம் மதமல்ல மார்க்கம், வழிகாட்டி என்று கூறுவது பித்தலாட்டம்.

அடுத்து போகிறபோக்கில் செய்யும் அடுத்த கிண்டல் மொழி, புரட்சிகர கம்யூனிஸ்ட் என்றால் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், வினவு தவிர வேறெதையும் படிக்க மாட்டார்கள் என்பது. அதாவது, தங்களின் இயலாமையை எதிரியின் மேல் திணித்து விடும் உத்தி. பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு குரான் ஹதீஸை தவிர வேறெதுவும் தெரியாது. (குரான் ஹதீஸே சரியாகத் தெரியாது என்பது வேறு விசயம்) அதைத் தவிர வேறெதையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை, அதிலேயே அனைத்தும் இருக்கிறது, அதில் இல்லாதது எதுவும் இல்லை என்பது தான் இஸ்லாமியர்களின் நம்பிக்கை. அதை எம்மீது திணித்து விட முயற்சிக்கிறார்கள். அதுமட்டுமா? முஸ்லீம்களை வெறுப்பதில் உங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டு எம்மை புல்லரிக்க வைக்கிறார். இதையே நாமும் எதிர்க்கேள்வியாக அவர்களிடம் கேட்கலாம். கம்யூனிஸ்டுகளை எதிர்ப்பதில் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கும் உங்களுக்கும் அப்படி என்ன ஒற்றுமை? சுரண்டப்படுபவர்களை ஆதரிப்பதும் சுரண்டுபவர்களை எதிர்ப்பதும் எங்களின் ஆதார குணம். நீங்கள் சுரண்டுபவர்களாக இருந்தால் உங்களை விரட்டுவதும், நீங்கள் சுரண்டப்படபவர்களாக இருந்தால் உங்களை ஆதரித்து போராடுவதும் எங்கள் இயல்பு. இது நீங்கள் இஸ்லாமியரா என்று பார்த்து வருவதல்ல. மதம் எனும் அடிப்படையில் இஸ்லாமியர்களை விட பார்ப்பனீய அம்பிகளை நாங்கள் தீர்க்கமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவைப் பொருத்தவரை இஸ்லாம் ஓர் ஒடுக்கப்படும் மதம் எனும் அடிப்படையில் இஸ்லாமியர்களை ஆதரித்துக் கொண்டிருக்கிறோம், பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு எதிராக, பாலஸ்தீனியர்கள் கொல்லப்படும் இனவழிப்புக்கு எதிராக இஸ்ரேலை எதிர்த்து, ஈரான், ஈராக், சிரியா, எகிப்து என அரபு நாடுகளில் தலையிடும் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்கும் இவர்கள் இந்தோனேசியாவில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகளுக்காக குரல் கொடுப்பார்களா? சௌதியில் நஜ்ரான் பகுதியில் கானாமல் போன 70 கம்யூனிஸ்டுகள் எப்படி காணாமல் போனார்கள் என்று விசாரித்துச் சொல்வார்களா? என்றால், ஆதரிப்பதிலும் எதிர்ப்பதிலும் சரியான நிலைப்பாட்டினை கொண்டிருப்பது யார்? முஸ்லீம்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள் என்று ‘உணர்வு’ கும்பல் எண்னுகிறதா?

அவர்களின் அடுத்த கிண்டல் முஸ்லீமாக மாறிவிடுவோம் எனும் பயத்தினால் தான் குரானை படிக்காமல் இருக்கிறோமாம். என்ன சொல்வது? சுய சொரிதலின் உச்சம் என்று சொல்லலாமா? உலகில் சுரண்டல் நீடிக்கும் வரை அதன் வலியிலிருந்து ஆசுவாசம் கொள்ள மதங்களின் தேவை நீடிக்கும். சுரண்டல் தீர்க்கப்படும் போதும் காயத்தின் மீது இருக்கும் பொருக்கு உதிர்வதைப் போல் மதங்கள் உதிர்ந்து போகும், இஸ்லாமும் உதிர்ந்து போகும் என்பதில் எமக்கு எவ்வித ஐயமும் இல்லை. அப்புறம் எப்படி எல்லா நாடுகளிலும் இஸ்லாத்தை நோக்கி சாரை சாரையாய் மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்? இப்படி இஸ்லாமிய மதவியாபாரிகள் மட்டுமல்ல, கிருஸ்தவ வியாபாரிகளும் கூவிக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனிய இந்து மதத்தில் கூட அவ்வப்போது பாரதக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்ட பிரான்ஸ் தம்பதியர் என்று செய்தி போடுகிறார்கள். இதெல்லாம் மத பிரச்சார உத்தி என்பதை தாண்டி வேறெந்த முக்கியத்துவமும் இல்லாதவைகள். மெய்யாகவே எல்லா நாடுகளிலும் இஸ்லாத்தை நோக்கி மக்கள் சாரை சாரையாய் வந்து கொண்டிருந்தால் நீண்ண்ண்ண்ண்ண்ட காலமாக இஸ்லாம் இரண்டாம் இடத்திலேயே இருக்கிறதே எப்படி? அண்மையில் சௌதியில் தாயிப் நகரில் நூற்றுக்கணக்கான குரான் படிகள் சாக்கடையில் வீசப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு என்ன பதில் கூறுவார்கள் இந்த மதவியாபாரிகள்? இந்த ஏகாதிபத்திய உலகில் மக்கள் ஈவுஇரக்கமற்ற முறையில் சுரண்டப்படுகிறார்கள். மார்க்ஸ் “மதம் மக்களுக்கு அபினியைப் போன்றது” என்று மட்டும் கூறவில்லை. அதன் தொடர்ச்சியாக “அது இதயமற்ற உலகின் இதயமாகவும் இருக்கிறது” என்றும் கூறியிருக்கிறார். இரக்கமற்ற முறையில் கொடூரமாக சுரண்டப்படும் மக்கள் அதன் விளைவாக, அதிலிருந்து தப்பிக்கும் வழியாக சிலர் மதங்களை நாடுகிறார்கள், சிலர் மதங்களை விட்டு ஓடுகிறார்கள், சிலர் அராஜகவாதிகளாக மாறிப்போகிறார்கள், வெகு சிலரே சரியான பாதையான புரட்சிகர கம்யூனிசத்தின் பக்கம் வருகிறார்கள். இது தான் உலகில் காணும் எதிரும் புதிருமான காட்சிகளுக்கான சரியான பார்வை. இதைத்தான் மதவியாபாரிகள் சாரை சாரையாக வருகிறார்கள் என்று ஜல்லியடிக்கிறார்கள்.

ஆனால் எந்த ஏகாதிபத்திய சுரண்டலிலிருந்து தப்பிக்க மாற்றுப் பாதைகளை நாடுகிறார்களோ அந்த ஏகாதிபத்திய கொடுஞ் சுரண்டலிலிருந்து எப்போது அவர்களால் தப்பிக்க முடியும்? கடவுளை நாடினாலும், கடவுளைத் துறந்தாலும், அராஜகவாதியாகச் சீரழிந்தாலும் இரக்கமற்ற அந்த வலையிலிருந்து தப்பிக்க முடியாது. புரட்சிகர கம்யூனிசவாதியாக மாறி தன்னையும் மக்களையும் அணி திரட்டும் போது மட்டுமே ஏகாதிபத்திய வலையிலிருந்து தப்பிக்கும் வழி திறக்கும். ‘உணர்வு’ கும்பலோ கற்பனை உரையாடல்களைத் தீட்டி மதச் சகதிக்குள் மூழ்கடித்து அந்த வழியை மறிக்கிறார்கள். எறும்பின் கால்களை விட எங்கள் கால்கள் மென்மையானவை அல்ல, கற்பாறைகளை விட முஸ்லீம்கள் கடினமானவர்களும் அல்ல. நாங்கள் ஊறுவோம் பாறைகள் பிளக்கும்.

6 thoughts on “விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே, கம்யூனிசம் நோக்கி .. .. ..

  1. // எறும்பின் கால்களை விட எங்கள் கால்கள் மென்மையானவை அல்ல, கற்பாறைகளை விட முஸ்லீம்கள் கடினமானவர்களும் அல்ல. நாங்கள் ஊறுவோம் பாறைகள் பிளக்கும்..//

    பிளந்தே ஆகவேண்டும் வேறு வழியே அல்ல…!

  2. தொடர்ந்து எழுதுங்கள் தோழர், ஏன் இவ்வளவு நீண்ட இடைவெளி…

  3. சௌதி கம்முனிஸ்ட்ங்க, இந்தோணோசியா கம்முனிஸ்ட்ங்களுக்கு கவலைபடும் நீங்க கொல்லப்படும் செர்பிய, உய்க்குர் முஸ்லீம்கள் பத்தி பேசுறது இல்லையே.. ஏன். லெனின் சாமி கண்ணை குத்திடுவாரா.

  4. எம்.ஏ.கே பாய்,

    நாங்க எங்க கருத்த நேர்மையாக‌வும், வெளிப்படையாகவும் கூறிக் கொண்டு தான் இருக்கிறோம். நீங்கள் தான் குதிரைக்கு பக்கப்பட்டை அணிவித்தது போல் பாராமுகமாய் இருக்கிறீர்கள். போகட்டும் இந்தக் கட்டுரைக்கு உங்கள் பதில் என்ன?

  5. எறும்பின் கால்களை விட நம் கால்கள் மென்மையானவை அல்ல, கற்பாறைகளை விட நம் மக்கள் கடினமானவர்களும் அல்ல. நாம் ஊர்வோம் பாறைகள் பிளக்கும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s