கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 2

M_Id_230158_FP

உணர்வு இதழ் வெளியிட்டு வரும் கற்பனை உரையாடல் தொடரின் இரண்டாவது பகுதியில் அவர்கள் செய்திருப்பது கருத்து பயங்கரவாதம். அந்த கற்பனை உரையாடலை எப்படி அமைத்திருக்கிறார்கள் என்றால் கம்யூனிஸ்ட் தன்னிடம் விவாதம் செய்ய வந்திருக்கும் முஸ்லீமைப் பார்த்துக் கேட்கிறார் நீங்கள் எங்கே தீவிரவாத முகாம் வைத்திருக்கிறீர்கள் என்று. அதாவது இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்று பார்ப்பனிய மயமான அரசும், ஊடகங்களும் பரப்பி வைத்திருக்கிறதே ஒரு கருத்து; அதே கருத்தில் நின்று அந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் கேட்கிறாராம். அதற்கு அந்த முஸ்லீம் அமைதியாக அவர்களின் ஆன்மீக இயக்கம் பற்றி விளக்குகிறாராம். இதில் போகிறபோக்கில் நாங்களும் சில முகாம் நடத்துகிறோம் என்று கம்யூனிஸ்ட் கூறுவது போலவும், படித்து முடித்து விட்டு எரித்துவிடும் நோக்கில் தாக்குதல் திட்டங்கள் அடங்கிய ரகசிய புத்தகங்களை படிப்பது போலவும் கூறிச் சென்றிருக்கிறார்கள். தெளிவாகச் சொன்னால், இஸ்லாமியர்களாகிய நாங்கள் தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ அல்லர். கம்யூனிஸ்டுகள் தான் அவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால் தான் என்ன வேலை செய்கிறார்கள் என்று சொல்வதற்கு கூட தயங்குகிறார்கள் என்றெல்லாம் சொல்வது தான் உணர்வு கும்பலின் அந்த கற்பனை உரையாடலின் இரண்டாவது பகுதியின் நோக்கம். இது தான் கருத்து பயங்கரவாதம் என்பது. அதாவது, தனக்கு நன்கு தெரிந்த ஒரு செய்தியை, அதற்கு எதிர்மறையாக திரித்து – அப்போது தான் தன்னை நம்பியிருக்கும் அணியினரை கம்யூனிசத்தின் பக்கம் சாய்ந்து விடாமல் தக்கவைக்க முடியும் என்பதற்காக – பரப்பியிருக்கிறார்கள்.

 

அன்றிலிருந்து இன்றுவரை, அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அரசு எந்திரம் பார்ப்பனியமய மாக்கப்படுவதற்கு எதிராகவும் அனைத்து தளங்களிலும் புரட்சிககர கம்யூனிஸ்டுகள் போராடி வந்திருக்கிறார்கள். அரசு பயங்கரவாதத்தின் ஒரு பகுதி செயல் திட்டம் தான் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக, வெடிகுண்டு வைப்பவர்களாக சித்தரித்து வெகு மக்கள் மத்தியில் பரப்பி வைத்திருப்பது. இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்தியச் சூழலில் இஸ்லாம் எனும் மதம் குறித்த, முஸ்லீம்கள் குறித்த பார்ப்பன பாசிசங்களின் பார்வையை விளங்க வேண்டும்.

 

இந்தியாவில் பார்ப்பன பாசிசங்கள் தாம் குண்டு வெடிப்பை நிகழ்த்துகின்றன என்பதற்கு அசீமானந்தா தொடங்கி ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. ஆனாலும் எந்த இடத்தில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் அரசும், ஊடகங்களும் உடனே மொழிவது இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களத்தான். இது ஏன்? ஏன் இந்த அரசும் ஊடகங்களும் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்கின்றன? இதனால் அவைகளுக்கு கிடைக்கும் லாபம் என்ன? பல இஸ்லாமிய இளைஞர்கள் இது போன்ற செயல்களெல்லாம் பாபரி பள்ளிவாசல் இடித்து தகர்க்கப்பட்டதற்கு பிறகான நிகழ்வுகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காந்தியைக் கொன்ற கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டும், விருத்த சேதனம் செய்தும் இருந்தான். அன்றைய பிரதமர் நேரு வானொலியில் காந்தியைக் கொன்றது முஸ்லீம் அல்ல, இந்து தான் என அறிவித்திருக்காவிட்டால், 2002ல் குஜராத்தில் நடந்ததைப் போல் திட்டமிட்ட படுகொலைகள் நாடுமுழுதும் நடந்து முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள். பாபரி பள்ளிவாசல் பிரச்சனைகூட அண்மையில் ஏற்பட்ட பிரச்சனையில்லை. நாற்பதுகளின் தொடக்கத்தில் தொழுகை நடந்து கொண்டிருந்த பள்ளியில் இரவோடு இரவாக திருட்டுத்தனமாக ராமர் பொம்மை வைக்கப்பட்டு, அந்தப் பிரச்சனை ஊதிப் பெருக்கப்பட்டது. இவைகளையெல்லாம் வெறும் மதமோதல்கள் என்றா நினைக்கிறீர்கள் முஸ்லீம்களே,

 

இந்தியாவில் பௌத்தம், சமணம், சாங்கியம் என பல மதங்களும் கொள்கைகளும் மேலோங்கி இருந்தன. இவைகளையெல்லாம் நேர்மையற்ற வழிகளில் தனது அரசியல் மேலாதிக்கத்திற்காக சிதைத்திருக்கிறது பார்ப்பனிய மதம். ஈராயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மை உழைக்கும் மக்களை தீண்டாமை அடிமைகளாக அடக்கியாண்டு கொண்டிருந்தது. ஆங்கிலேயர் வரவு, பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு தம் மீது திரும்பி விடக்கூடாது என்பதற்காக இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்தங்களை கொண்டு வர வைத்தது. இதனால் தம்முடைய அரசியல் மேலாதிக்கம் குலைந்து விடக் கூடாது என்பதற்காக பார்ப்பனியம் அதுவரை தீண்டத்தகாதவர்களாக சேரிகளில் ஒடுக்கி வைத்திருந்தவர்களையும் இந்துவாக அடையாளம் காட்டி பெரும்பான்மை காட்டிக் கொள்ளும் உத்தியை கையாண்டது. ஆனால் யார் தம்மை இதுகாறும் இழிவுபடுத்தி வைத்திருந்தார்களோ அந்த பார்பனர்களின் பின்னே இந்துவாக அணிதிரள முடியுமா அம்மக்களால்? இதற்கு பயன்பட்டது தான் பொது எதிரியை கட்டியமைக்கும் உத்தி.

 

இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பான்மையினர் இன்று இந்துக்களாக கருதப்படுகின்ற உழைக்கும் மக்கள். அரசியல் பலத்துடன் அவர்களை ஒடுக்கிக் கொண்டிருந்தவர்கள் பார்ப்பனிய சிறுபான்மையினர். இவர்களுக்கு வெளியே முஸ்லீம்களும் கிருஸ்தவர்களும். கிருஸ்தவர்கள் இந்துக்களின் பொது எதிரியாக காட்ட முடியாத அளவுக்கு சிறுபான்மையினராக இருந்தனர். முஸ்லீம்களோ ஒதுக்கித்தள்ள முடியாத அளவுக்கு கணிசமாக தொகையினராக இருந்தனர். இவர்களை பொது எதிரியாக கட்டமைத்தால் பார்ப்பனியத்துக்கு கடினமான போட்டியை ஏற்படுத்துவர். அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தாக் கூடும். இந்த நிலையில் தான் ஆர்.எஸ்.எஸ் முன்னோடியான சாவர்கர் இஸ்லாமியர்களை தனிநாடு கொடுத்து ஒதுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். கவனிக்கவும் முஸ்லீம்களே, பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை முகம்மது அலி ஜின்னாவால் கொண்டு வரப்பட்டதல்ல. ஜின்னா கோரிய சமஸ்டி கோரிக்கையை காங்கிரஸ் பிடிவாதமாக ஏற்க மறுத்ததால் வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை ஜின்னா முன்னெடுத்தார். இந்த அடிப்படையில் தான் இந்தியாவில் மேற்கிலும், கிழக்கிலும் இருந்த முஸ்லீம்களில் பெரும்பான்மையினரை பாகிஸ்தான் என்ற பெயரில் தனிநாடாக ஆக்கி விட்டு மீதமுள்ள முஸ்லீம்களை பொது எதிரியாக காட்டி சிறு தெய்வ வழிபாட்டு முறைகளை கொண்டிருந்த அனைவரையும் இந்துக்களாக ஒருங்கிணைக்கும் வேலையை செய்தார்கள்.

 

இந்திய முஸ்லீம்களை பிளவுபடுத்த வேண்டுமென்றால் அரசு எந்திரத்தை பார்ப்பனமயமாக்கி வைத்திருக்கும் சூழலில் வெகு எளிதாக செய்துவிட முடியும். ஆனால், இந்திய ஆளும் வர்க்கம் ஒருபோதும் அதை செய்யவில்லை. மாறாக, கவனத்துடன் அதை தவிர்த்தும் வந்திருக்கிறது. ஏற்கனவே, பல குழுக்களாக பிளவுபட்டு இருந்த முஸ்லீம்களை (தமிழ்நாட்டில் இருக்கும் ஜாக் கிலிருந்து பிரிந்த குழுக்களை குறிப்பிடவில்லை. இந்தியா முழுவதும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்ட கலாச்சாரங்களுடன் தனித்தனி தீவுகளாக வாழ்ந்து கொண்டிருந்த உழைக்கும் மக்களாகிய முஸ்லீம்களைக் குறிப்பிடுகிறேன்) ஒன்றிணைக்க முடிந்தால், அவர்களை இஸ்லாமிய மத உணர்வுடனேயே எப்போதும் இருத்தி வைக்க முடிந்தால்; அதைக் காட்டி ஆண்டாண்டு காலமாய் தம்மால் தீண்டத்தகாதோராய் ஒதுக்கி வைத்திருந்தவர்களையே ஒருங்கிணைத்து தம் ஆயுதமாய் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த திட்டத்துடன் தான் அன்றிலிருந்து இன்றுவரை அரசு எந்திரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குத்தான் வெடிகுண்டு கலாச்சாரத்தை இஸ்லாமியர்கள் மீது திணித்து இந்துக்களின் பொது எதிரியாகவும், இந்திய அளவில் பயங்கரவாதிகளாகவும் கட்டமைத்து கட்டிக் காத்து வருகிறது.

 

1992ல் பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்டது என்பது மேற்கண்ட நிகழ்ச்சி நிரலுக்கு மட்டும் உட்பட்டதல்ல. கிட்டத்தட்ட பெரிய எதிர்க்கட்சிகளே இல்லை எனும் நிலையில் இருந்த காங்கிரசுக்கு எதிராக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் கட்சியாக இருந்தது பா.ஜ.க. பாபரி பள்ளிவாசல் இடிப்பை பயன்படுத்தி காங்கிரஸ் செயல்பட்டிருந்தால் பா.ஜ.க எனும் கட்சியையே இல்லாமல் செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறன்றி பாபரி பள்ளிவாசல் இடிப்பு விசயத்தில் அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் பா.ஜ.க வுக்கு செய்தது. ஏன்? மக்களை மறுகாலனியாக நுகத்தடிக்குள் சிக்க வைக்கும் டங்கல், காட் ஒப்பந்தங்கள் பாரளுமன்றத்துக்கூட தெரியாமல் கொல்லைப்புறமாக இந்தியாவுக்குள் நுழைந்த நேரம் அது. இதிலிருந்து வெற்றிகரமாக மக்களை திசை திருப்ப கிடைத்த வாய்ப்பு தான் பாபரி பள்ளிவாசல் இடிப்பு. மக்களை மதவாத சாக்கடையில் தள்ளிவிட்டுத்தான் ஏகாதிபத்தியங்கள் இந்தியாவின் மீது ஆக்டபஸ் போல கவிந்து கிடக்கின்றன.

 

பார்ப்பன பயங்கரவாதிகளின் இந்த திட்டத்தை முறியடிக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி முஸ்லீம்கள் வர்க்க அடிப்படையில் மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து, பாட்டாளிகளாக ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியம். இதற்கான கதவை அடைத்து அந்த பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு உதவும் வேலையை செய்வது தான் தவ்ஹீத் என்ற பெயரில் இருக்கும் பல வண்ண அமைப்புகளின் நோக்கமாக இருக்கிறது. இது இந்திய நிலமை என்றால் சர்வதேச நிலமையும் இதில் செயல்படுகிறது.

 

ஜிஹாத் என்ற தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தாலிபான், ஐ.எஸ் உள்ளிட்ட பல அமைப்புகள் இன்று பயங்கரவாத குழுக்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நாளொரு காணொளி வெளிவந்து உலக மக்களிடம் வெறுப்பையும், அதேநேரம் அமெரிக்க ஏகாதிபத்தியம் அவைகளை தாக்கி அழிக்கும் சர்வதேச கடமையையும் இந்த அமைப்புகள் சம்பாதிருக்கின்றன. ஆனால், இந்த அமைப்புகள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக உருவாக்கப்பட்டவை என்பதும், அந்த நலனுக்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, அல்லது அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதும் சிந்திக்கும் திறனுள்ள அனைவருக்கும் தெரிந்தது தான். அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்குமான பனிப்போர் காலகட்டத்தில் பரவிவரும் சோசலிச மக்கள் நல அரசுகளை கலைக்கவும், ரஷ்யாவைத் தோற்கடிக்கவும் பல்வேறு உத்திகளைக் கையாண்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதிர்ப்புரட்சி சதிகள் மூலம் ஆட்சிகளைக் கவிழ்ப்பதும், தலைவர்களைக் கொல்வதுமான உத்தி என்றால், அரபு நாடுகளுக்கு இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எனும் உத்தியைக் கையாண்டது. இதன் தொடர்ச்சியாக தூய இஸ்லாமியவாதம் பேசும் பல குழுக்களை கட்டியமைத்து சோசலிச மக்கள் நல அரசுகளுக்கு எதிரான சதிகளில் இறக்கியது அமெரிக்கா. ஈரானில் மன்னர் ஷா வை தன் கைப்பாவையாக அதிகாரத்தில் அமர வைத்ததும், ஆப்கானில் மக்கள் சனநாயகக் கட்சியின் தலைவரும், அதிபருமான‌ நூர் முகம்மது தரக்கி சுட்டுக் கொல்லப்பட்டதும் இவ்வாறு தான். பனிப்போர் முடிந்து தேவை தீர்ந்ததும் இக்குழுக்களில் பல சிதைந்தும், இணைந்துமாய் மதவாதம் பேசிக் கொண்டிருக்கின்றன. அன்று தன் வணிக நலன்களுக்கு தடையாய் இருந்த ஒட்டாமன் பேரரசை (உஸ்மானிய பேரரசு) வீழ்த்த மதப் போர்வையில் சிலுவைப் போர்களை நடத்தியது முதலாளித்துவம். இன்றும் அதே கதை தான், தன்னுடைய ஒற்றைத் துருவ மேலாதிக்கத்துக்கும், எண்ணெய் மேலாதிக்கத்துக்கும் எதிராக இருக்கும் நாடுகளை வீழ்த்த இன்று அக்குழுக்கள் அந்தந்த நாடுகளில் தூய இஸ்லாமியவாதம் பேசி உள்நாட்டுப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள். அந்த முகாந்திரத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கிறேன் என்று கூறிக் கொண்டு அந்தந்த நாடுகளின் அரசுக்கு எதிராக குண்டு வீசுகிறது. எங்கெங்கெல்லாம் அமெரிக்காவுக்கு எதிராக குரல் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் புதிது புதிதாய் தூய இஸ்லாமியவாதம் பேசும் குழுக்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. சிரியாவுக்கு எதிராக ஐ.எஸ் அமைப்பு புதிதாக முளைத்தது இப்படித்தான். இது தான் சர்வதேச அளவில் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் கதை.

 

இதன் பின்னாலிருக்கும் அரசியலை உருவி விட்டு மதப்பிரச்சனையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பது தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விருப்பம். அந்த விருப்பத்தை சற்றும் பிசகாமல் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன இங்கிருக்கும் இஸ்லாமிய மதவாத அமைப்புகள். சிந்தித்துப் பாருங்கள் இஸ்லாமிய சகோதரர்களே! அமெரிக்காவின் கோரப்பிடிக்குள் சிக்காத நாடுகள் சொற்பம் எனும் நிலையில், ஊடகங்கள் முதல் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களை மீறி செயல்பட முடியாத நிலையில், இந்திய அரசு எந்திரமே பார்ப்பனமயமாகியிருக்கும் நிலையில், வெறும் மதவாதம் பேசி இதை உங்களால் எதிர் கொள்ள முடியுமா?

 

முக்கியமான கேள்விக்கு திரும்புவோம். இஸ்லாம் என்றாலே தீவிரவாதம் என்று பார்ப்பது யார்? புரட்டுத்தனமான ஓட்டரசியல் கட்சிகளா? புரட்சிகர கம்யூனிச அமைப்புகளா? இந்தப் பிரச்சனையில் எங்களின் சரியான நிலைபாட்டை எல்லாவித ஊடகங்களிலும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறோமே; இது அந்த உணர்வு கும்பலுக்கோ, அந்த கற்பனை உரையாடலை எழுதிய ஃபாசிலுக்கோ, வெளியிட அனுமதித்த பி.ஜேவுக்கோ தெரியாதா? தெரியாது என்றால்; தெரிந்து கொள்ளாமல் எழுதியது எந்த விதத்தில் சரி? இஸ்லாம் குறித்து கேள்வி எழுப்பினால் பதில் கூறி சமாளிக்க முடியாமல் இஸ்லாத்தைப் பற்றி தெரியாமல் எப்படி எழுதலாம் என்று எகிறி குதிக்கும் இந்த கும்பல், எதையும் அறிந்து கொள்ளாமல் எப்படி எல்லாம் தெரிந்தது போல் எழுதினார்கள்? தெரியும் என்றால் தெரிந்து கொண்டே ஏன் மறைத்து திரித்து எழுதினார்கள்? விடை எளிமையானது தான்.

 

உணர்வு கும்பலின் நோக்கம், தன்னை நம்பியிருக்கும் அணிகளுக்கு சமூக அரசியல் பயிற்சியளிப்பதோ, மக்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழி தேடுவதோ அல்ல. வெறுமனே மதவாதம் பேசி மக்களை ஏமாற்றி, நடப்பு பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்புவதன் மூலம் இந்திய அளவில் பார்ப்பன பாசிசங்களுக்கும், சர்வதேச அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் தொண்டூழியம் செய்வதைத் தவிர வேறொன்றுமில்லை. இஸ்லாமியர்கள் எதிர் கொண்டிருக்கும் பிரச்சனை என்ன? அதிலிருந்து எப்படி விடுபடுவது? எனும் எண்ணம் உணர்வு கும்பலுக்கு இருந்திருந்தால் இந்தப் பின்னணியை அலசியிருப்பார்கள், இதில் எந்த அமைப்பு தமக்கு உதவி செய்யும்? எந்த அமைப்பு தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும்? என்று பரிசீலித்துப் பார்த்திருப்பார்கள். நேரடியாக பார்ப்பன பாசிசத்தை ஆதரிக்கும் ஜெயாவுடனும், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து குலாவிய தி.மு.க வுடனும் மாறி மாறி கூட்டு வைத்துக் கொண்டு அதையே முஸ்லீம்களுக்கான நன்மையாக பசப்பித் திரிகிறார்களே, அந்த அ.தி.மு.கவும், தி.மு.கவும் இஸ்லாம் என்றாலே தீவிரவாதம் என்ற எண்ணம் கொண்டவர்களா இல்லையா? அவர்களுடன் கூட்டு வைக்கத் தயங்காத உணர்வு கும்பல்; பார்பன பாசிசங்களையும், ஏகாதிபத்தியங்களையும் விரட்டியடித்து உழைக்கும் மக்கள் சம வாய்ப்புகளோடும் வசதிகளோடும் வாழவைக்கத் துடிக்கும் புரட்சிகர இடதுசாரி இயக்கங்களின் மீது ‘தீவிரவாத முகாம் எங்கு நடத்துகிறீர்கள்?’ என்று கேட்பது போல் கற்பனை உரையாடலை அமைத்துப் பரப்புகிறார்கள் என்றால், இதன் மர்மம் என்ன? கம்யூனிச ஒளி முஸ்லீம்கள் மீது படர்ந்து விடக் கூடாது என்பதில், பார்ப்பன பாசிசங்களைப் போல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் போல் அவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியுமா? மக்களை வாட்டி வதைக்கும் நடப்பு பிரச்சனைகளை தீர்க்க வழி காணாமல் ‘இஸ்லாம் இனிய மார்க்கம் கேள்வி பதில்’ நிகழ்சிகளிலேயே காலத்திற்கும் மதி மயங்கிக் கிடப்பார்கள் முஸ்லீம்கள் என்று உணர்வு கும்பல் கனவு கண்டால், இனி அது பலிக்கப் போவதில்லை.

 ara paya

கற்பனை உரையாடலின் இரண்டாவது பகுதியில் மேற்கண்டது தான் முக்கிய அம்சம் என்றாலும், வேறு சில ‘பில்ட் அப்’ களையும் செய்திருக்கிறார்கள். அவைகளையும் பார்க்கலாம். “எங்க மார்க்கம் பொய் சொல்ல அனுமதிப்பதில்லை” என்று போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்கள். இதுவே ஒரு பொய் தான். ஒரு ஹதீஸைப் பார்க்கலாம்,

 

நபி அவர்கள், கஅப் இப்னு அஷ்ரபைக் கொல்வது யார்? எனக் கேட்டார்கள். முகம்மத் இப்னு மஸ்லமா, நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? என்று நபி அவர்களிடம் கேட்க, அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள் என்று கேட்க, நபி அவர்கள் அனுமதித்து விட்டேன் என்று பதிலளித்தார்கள். புஹாரி 3032

 

அதாவது, தனக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று தன் சீடரிடம் சொல்கிறார் முகம்மது. அதற்கு அந்தச் சீடர், அப்படியானால் பொய்யாக உங்கள் மீது குறை சொல்லி நடிக்க எனக்கு அனுமதியளியுங்கள் என்று கேட்கிறார். முகம்மது அவருக்கு அனுமதியளிக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் பொய் சொல்ல அனுமதி அளிக்கிறார். ஹதீஸில் தெளிவாக இப்படி பொய் சொல்வதற்கு அனுமதியளித்திருக்க இந்த மதத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள் பொய் சொல்வதற்கு எங்கள் மார்க்கத்தில் அனுமதி இல்லை என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 

அடுத்ததாக அந்த கற்பனை உரையாடலில் அப்பாவியாக, “.. .. மூட நம்பிக்கையை வளர்க்கிறார்கள் என்று எடுத்துச் சொன்னால் அது பாசிசமா?” என்று கேட்கிறார்கள். எது மூட நம்பிக்கை, பகிரங்கமாக விபச்சாரம் செய்யும் ஒருவன் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. திருடிக் கொண்டு ஒருவன் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. வட்டி வாங்கிக் கொண்டு ஒருவன் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. கொலை செய்தவன், கொடும்பாதகன் என எவனும் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவ்வளவு ஏன்? ஐவேளை தொழுகை செய்யாத, நோன்பு வைக்காத, ஜக்காத் கொடுக்காத இன்னும் இஸ்லாம் கூறும் நடைமுறைகள் எதையும் செய்யாத எவனும் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் தர்ஹாவுக்கு சென்றால் மட்டும் அவன் இஸ்லாத்தில் இருக்கக் கூடாது என்பதில் ஏதாவது நேர்மை இருக்கிறதா? தர்ஹாவுக்கு செல்வதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு தாருங்கள் என்று இவர்கள் ஜெயலலிதாவிடம் கேட்கலாம், அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் என்னைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள் என்று முஹைதீன் அப்துல் காதிர் ஜெய்லானியை கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால் இஸ்லாத்தை விட்டே வெளியில் சென்று விட வேண்டும் என்றால் அதில் என்ன நியாயம் இருக்கிறது? ஆனால், இதன் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. அந்த அரசியலைப் புரிந்து கொள்ள, இஸ்லாம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கையை முஸ்லீம்களுக்கும் சேர்த்துத்தான் கூறுகிறேன்.

 

இஸ்லாம் என்பது அல்லா வழங்கி முகம்மது ஏற்படுத்தியது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லா என்பது முகம்மதுவின் கற்பனை என்பது வேறு விசயம். முகம்மது இஸ்லாம் எனும் மதத்தை ஏற்படுத்தவே இல்லை என்பதும் வேறு விசயம். ஆனால் முகம்மது கூறியது தான் இந்த உணர்வு கும்பல் கூறிக் கொண்டிருக்கும் இஸ்லாமா? நிச்சயம் இல்லை. முகம்மதின் கடைசிக் காலத்தில் இருந்து முகம்மது ஏற்படுத்திய அதிகாரத்தில் அமர்வது யார்? எனும் போட்டி தொடங்குகிறது. இதில் முகம்மதின் மருமகன் அலி தான் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று ஒரு குழு போராடுகிறது. ஆனால் அந்தக் குழு ஓரம் கட்டப்பட்டு அபூபக்கர் ஆட்சியில் அமர்கிறார். பின்னர் உமர், உஸ்மான் வந்து சென்ற பின் நான்காவதாகத்தான் அலி ஆட்சியில் அமர முடிந்தது. பின் அலி கொல்லப்பட்ட பிறகு அலிக்கு ஆதரவான குழு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. இது தான் ஷியா, சன்னி பிரிவின் தொடக்கம் இதற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஹதீஸ்கள் தொகுக்கப்படுகின்றன. தொகுக்கப்படும் ஹதீஸ்களில் கூட அலி பற்றிய எதிர்மறையான செய்திகளுக்கு முக்கியத்துவமும், அலி குழுவினர் கூறும் ஹதீஸ்கள் புறக்கணிக்கப்படுவதும் நடக்கிறது. இதனால் தான் ஷியா பிரிவினர் தங்களுக்கென்று தனியான ஹதீஸ் தொகுப்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். பின்னர் ஆட்சியதிகாரத்தில் சன்னிகளே ஆதிக்கம் செலுத்தியதால் இஸ்லாம் என்றாலே சன்னிகள் தான் என்ற தோற்றம் ஏற்பட்டது. ஷியாக்கள் ஈரான், ஈராக் பகுதிகளில் சுருங்கிப் போயினர். இந்த ஷியாக்காளின் கலாச்சாரம் தான் தர்ஹா கலாச்சாரம். இது இந்தியாவில் பரவிய போது எளிமையான இந்த வடிவம் சன்னி பிரிவினர்களாக இருந்தாலும் இஸ்லாமிய உழைக்கும் மக்களை தொற்றிக் கொண்டது. ஆனால் இதை அல்லாவுக்கு இணை வைக்கிறார்கள் என்று கூறி அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று விலக்குகிறார்கள். ஆட்சியதிகாரத்தில் யார் இருப்பது? என்பதற்கும் தர்ஹாவாதிகள் முஸ்லீம்களல்ல என்பதற்கும் பொருள் வித்தியாசம் ஒன்றுமில்லை. இந்த நுண்ணரசியல் விசயத்தை தான் இஸ்லாத்தில் மாற்றுமத கலாச்சாரம் நுழைந்து விட்ட்து என்றும் இந்த மூடநம்பிக்கையை எதிர்த்தால் நாங்கள் பாசிசம் செய்கிறோமா? என்று கேள்வியெழுப்பியும் மடைமாற்றுகிறார்கள். மட்டுமல்லாமல், இதன் மூலம் அவர்களின் பாசிச நடவடிக்கைகளையும் மறைத்துக் கொள்கிறார்கள்.

 

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் தோழர் துராப்ஷாவுக்கு நிகழ்ந்தது இவர்களின் பாசிச முகத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு. தஜ்ஜால் என்பவர் எழுதிய “லூத் ஒரு லூஸு” எனும் கட்டுரையை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார் என்பதற்காக அவர் முஸ்லீம் அல்ல என்று திருட்டுத்தனமாக ஃபத்வா கொடுத்து அவரை தொழில் நடத்த விடாமல் அடித்து விரட்டி, மனைவியை விவாகரத்து கோரும் அளவுக்கு மிரட்டிய இவர்கள் நடவடிக்கை பாசிசமில்லாமல் வேறென்ன? தஞ்சை மிமிசல் அருகே தோழர் ஃபாத்திமா தன் குடும்ப நண்பருடன் பேருந்தில் பயணம் செய்ததற்காக ரவுடிகளைத் திரட்டி வந்து பேருந்தை நடுவழியில் நிருத்தி தகாத வார்த்தைகளால் அர்சித்து மிரட்டியது பாசிசமில்லாமல் வேறென்ன? இதுமட்டுமா? முஸ்லீம்கள் அதிகம் உள்ள ஊர்கள் அனைத்திலும் அன்னிய ஆடவருடன் பேசினார், சிரித்தார், செல்போனில் பேசினார் என்று பொருந்தாக் காரணங்களைக் கூறி பெண்களைத் தாக்கியுள்ளனர். இதில் கொலைகளும் அடக்கம். இதற்கெல்லாம் இந்தக் கும்பல்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? புர்கா போடாமல் வெளியில் வந்தாள் என்ற ஒரே காரணத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இவைகளெல்லாம் பாசிச நடவடிக்கைகள் இல்லையா? கலாச்சார போலீசாக வேடம் போட்டு பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பது தொடங்கி, கல்லூரிகளில் படிக்கக்கூடாது என்பது வரை பல கூடாதுகளை பட்டியலிட்டு பிரசுரமாக அடித்து வினியோகித்திருக்கிறார்கள். இவைகளெல்லாம் பாசிசமாக தெரியவில்லையா? இவைகளுக்கு என்ன பதில் கூறும் உணர்வு கும்பல்? இவைகளில் சில நாங்கள் நடத்தியவையல்ல என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் அனைவரும் நேற்றுவரை ஒன்றாக இருந்தவர்கள் என்பதும் அந்தந்த நிலைபாடுகளில் இவர்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை.

 

அடுத்து கற்பனை உரையாடலின் இரண்டாவது பகுதியில் முத்தாய்ப்பாக அவர்கள் கூறியிருப்பது நக்சலைட், மாவோயிஸ்ட் போல இவர்களும் தீவிரவாதக் குழு தான் என்றும், இரகசியமாக புத்தகங்கள் வெளியிட்டுப் படித்து எரித்து விடுகிறார்கள் என்றும் மேலெழுந்தவாரியாக எழுதியிருக்கிறார்கள். இப்படி எழுதியிருப்பதன் மூலம் இரண்டு விசயங்களை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். ஒன்று கம்யூனிசம் குறித்து ஒரு சுக்கும் இந்தக் கும்பலுக்கு தெரியாது. இரண்டு, அரசு எந்திரம் முஸ்லீம்கள் மீது திணித்திருக்கும் தீவிரவாத முத்திரையை அகற்ற அரசே முதல் பயங்கரவாதி என்று அம்பலமாக்கிவரும் புரட்சிகர கம்யூனிஸ்ட்களை ஏனைய ஓட்டுக் கட்சிகளைப் போல இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக கருத்து பயங்கரவாதம் செய்யும் இந்த உணர்வு கும்பல்; அதே அரசு எந்திரம் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் மீது திணிக்க நினைக்கும் தீவிரவாத முத்திரையை ஏற்று அதை தன் அணிகளிடம் பரப்புரை செய்கிறார்கள். தெளிவாக சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு தெள்ளெனப் புரியும் உணர்வு கும்பல் போன்ற மதவாத அமைப்புகளின் அரசியல் பாத்திரம் என்ன என்பது. சந்தேகத்துக்கு இடமின்றி அது அரசு எந்திரத்திற்கு அதாவது பார்ப்பன பயங்கரவாதத்துக்கு துணை போவதையும், உதவி செய்வதையும் தவிர வேறொன்றுமில்லை.

 

புரட்சிகர கம்யூனிஸ்டுகள் ஏன் இரகசியமாக செயல்பட வேண்டும்?

இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் எந்த அளவுக்கு வெளிப்படையாக செயல்பட வேண்டிய தேவை இருக்கிறதோ, அதே அளவுக்கு இரகசியமாக செயல்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஏனென்றால் கம்யூனிஸ்டுகளின் நோக்கம் ஓட்டுச் சாக்கடையில் ஐக்கியமாகி, ஓட்டுப் பொறுக்கி அரசியல் எத்துவானிகளிடம் பலத்தைக் காட்டி சில்லரை லாபங்களை, சீர்திருத்தங்களைப் பெற்றுக் கொள்வதல்ல. அரசு என்பதன் முழுமையான பொருளை உணர்ந்து, சமூக மாற்றங்களை வரலாற்று ரீதியிலும், இயங்கியல் ரீதியிலும் ஆராய்ந்து, அரசு என்பது ஒரு வர்க்கத்தில் சார்பில் பிற வர்க்கங்களை அடக்கியாளும் அமைப்பு என்பதால் அதை மக்கள் பலத்தால் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அமர வைப்பது. இந்த நோக்கத்தை வெளிப்படையாக மட்டும்இருந்து செயல்படுத்திவிட முடியுமா? அரசு தன்னை எதிர்ப்போரை என்ன செய்யும் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் ஹதீஸ்களில் தேடிப் பார்க்கட்டும். முகம்மது, தன்னுடைய ஆட்சிக்கு எதிராக சதி செய்தார்கள் என்று கூறி 600 க்கும் மேற்பட்டவர்கள் தலையை வெட்டி வீசிய கதை கிடைக்கும். என்றால் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் அரசைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்களா? இல்லை. சுவரொட்டி ஒட்டியதற்கு கூட குண்டர் சட்டம் பாய்ந்த கொடுமையையும் கூட எதிர் கொண்டு நிற்கிறார்கள். ஆளும் வர்கங்களின் தடைகள் அனைத்தையும் தாண்டி போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் தங்களுடைய நடவடிக்கைகள் அரசுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது மட்டும் தான். இதைத் தான் இரகசிய நடவடிக்கை, தீவிரவாத நடவடிக்கை என்று அவதூறு செய்கின்றன ஆளும் வர்க்கங்கள். அதனால் தான் தீவிரவாத முத்திரை குத்திடத் துடிக்கிறது. ஆளும் வர்க்கங்களின் அந்த துடிப்பைத்தான் உணர்வு கும்பல் செயல்படுத்தியிருக்கிறது.

 

அரசின், ஆளும் வர்க்கங்களின், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின், பார்ப்பன பாசிசத்தின் நோக்கங்கள் வேறு வேறு அல்ல. ஒன்றுதான். அது உழைக்கும் மக்களை அவர்களின் மேய்யான பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பி மறக்கடித்து அவர்களை ஒட்டச் சுரண்டி வாழ விடாமல் செய்வது. உணர்வு கும்பல் உள்ளிட்ட மதவாதம் பேசும் அமைப்புகளின் நோக்கமும் அதுவே தான். எல்லா விசயங்களையும் கடவுளிடம் முறையிட முடியுமா? முறையிட்டு தீர்த்துக் கொள்ள முடியுமா? சாக்கடை அடைப்பை சரி செய் என்று கடவுளிடம் வேண்டி விட்டு சும்மா இருந்து விடுவீர்களா? அடைப்பை சரி செய்யாதவரை நாற்றம் இருக்கத்தானே செய்யும். நீங்கள் இறங்கி சரி செய்யாத வரை பிரச்சனை தீராது. இந்த உலகில் மதம் தவிர்த்த வேறு பிரச்ச்னைகளே இல்லையா? உலகம் இரண்டாக பிரிந்திருக்கிறது. ஒன்று சுரண்டும் வர்க்கம், மற்றது சுரண்டப்படும் வர்க்கம். ஒன்றுக்கொன்று தீராப் பகைமை கொண்ட இந்த இரண்டு வர்க்கங்களில் நீங்கள் எந்தப் பக்கம்? நீங்கள் சுரண்டும் வர்க்கம் என்றால் தோற்கடிக்கப்பட்டே தீருவீர்கள், நீங்கள் சுரண்டப்படும் வர்க்கம் என்றால் உங்களை சுரண்டுபவர்களை எதிர்த்துப் போராடாமல் உங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. இதில் உங்கள் பங்களிப்பு என்ன? என்பது மட்டுமே கேள்வி. நீங்கள் அல்லாவை நம்பிக்கொள்ளுங்கள், தொழுது கொள்ளுங்கள், நோன்பு வைத்துக் கொள்ளுங்கள் அதில் பிரச்சனை ஒன்றுமில்லை. உங்கள் சமூக வாழ்க்கைக்காக என்ன செய்யப் போகிறீர்கள்? அது மட்டுமே கேள்வி. உங்கள் பதில் என்ன?

இத்தொடரின் முந்திய பகுதிகள்:

1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

4 thoughts on “கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே

  1. நல்ல கட்டுரை. குர்திஸ் pkk போராளிகள் இஸ்லாமிய பயன்கரவதிகளுடன் நடக்கும் போரை பற்றி எழுத வேண்டும். நன்றி

  2. எனக்கென்னவோ இது மங்காத்தா அஜித் அர்ஜுன் போல அரசை எதிர்க்கும் முஸ்லீம்களையும் அரசே தயார் செய்து இருக்கும்போல.. அதனால் தான் அவர்கள் அரசை எதிர்ப்பது போல தம் மக்களுக்கு காட்டி அரசமைப்பு வளர வாய்ப்பளிக்கின்றரர். மேலும் புரட்சிகர அமைப்பு பக்கம் மக்கள் சேராமலும் செய்கின்றனர்.

  3. \\ஜின்னா கோரிய “சமஷ்டி”\\ கோரிக்கையை காங்கிரஸ்
    ஏற்க அது என்ன சமஷ்டி கோரிக்கை நண்பர் அதை
    கொஞ்சம் விளக்க முடியுமா?

  4. நண்பர் ஹாஜா,

    தனிநாடு கோரிக்கையை ஜின்னா எழுப்பவில்லை. அது ஆர்.எஸ்.எஸ் முன்னோடிகளின் திட்டம். பின்னர் இதை பிரிட்டனில் இயங்கி வந்த சில இஸ்லாமிய குழுக்கள் முன்னெடுத்தன. அவர்கள் தான் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாநிலங்களின் பெயரை இணைத்து பாகிஸ்தான் என்ற பெயரைக் கொடுத்தது. அப்போதும் ஜின்னா அதை ஆதரிக்கவில்லை. அவர் கோரியதெல்லாம் சமஷ்டி முறை அதாவது முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும்மாநிலங்களில் நிதி, இராணுவம், வெளியுறவு ஆகியவற்றைத் தவிர ஏனைய அனைத்து பொறுப்புகளும் மாநில அரசிடமே இருக்க வேண்டும் என்பதைத்தான். ஆனால் காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் எவரும் ஜின்னவின் கோரிக்கை குறித்து பேச பிடிவாதமாக மறுத்தனர். வேறு வழியில்லாமல் தான் ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை முன்னெடுத்தார்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s