உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’

ukraine

தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க

உக்ரைன்.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக உலகின் முன் இருந்தது. இன்றைய செய்திகளின் நிகழ்ச்சி நிரலில் உக்ரைன் இப்போது இல்லை. என்றாலும் உக்ரைன் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த உக்ரைன் பிரச்சனை தொடர்பாக கடந்த இரண்டாம் தேதியிலிருந்து தமிழ் இந்து நாளிதழில் ஆறு நாட்கள் தொடராக ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரைத் தொடர் வாசகர்களுக்கு உக்ரைன் பிரச்சனை குறித்த செய்திகளை வழங்கவில்லை. மாறாக, ஒரு கண்ணோட்டத்தை வழங்கியது. சோவியத் யூனியனுக்கு எதிரான கண்ணோட்டம். அதன் வழியே கம்யூனிசத்துக்கு எதிரான கண்ணோட்டம். அதுமட்டுமல்லாமல் உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்காவின் பங்கு குறித்த எதையும் காட்சிப்படுத்தாமல் ரஷ்யாவையும் உக்ரைனையும் மட்டுமே பாத்திரங்களாகக் கொண்ட ஒரு ஓவியத்தையும் வாசகனின் மனக்கண் முன் தீட்டிக் காட்டியிருக்கிறது.

காட்சி ஊடகங்களானாலும் சரி, அச்சு ஊடகங்களானாலும் சரி வெளிநாட்டுச் செய்திகள் என்ற பெயரில் பாண்டாக் கரடி குட்டி போட்டதையும், அமெரிக்க மாநகராட்சி குப்பை வண்டிகள் பனிப்பொழிவை அள்ளி சாலைகளை சுத்தப்படுத்துவதையும் மட்டுமே செய்திகளாக கூறிக் கொண்டிருக்கின்றன. பற்றியெறிந்து கொண்டிருக்கும் பிரச்சனை குறித்த செய்திகள் கூட “ஈராக்கில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் இருவர் கொல்லப்பட்டனர்” என்பது போல் தான் செய்தி வெளியிடுகின்றன. ஈராக்கின் எண்ணெய் வளம் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக ஈராக்கிலிருந்த ஆட்சியை தூக்கியெறிந்து, குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று, இராணுவ முகாம்களுக்குள் இருப்பதைப்போல் சொந்த நாட்டில் மக்களை துப்பாகி முனையில் நிம்மதியில்லாமல் உலவவிட்டிருக்கும் அமெரிக்காவையும் அதன் கூலிப்படையினரையும் பாதுகாப்புப் படையினர் என்றும், அவர்களை எதிர்த்து போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்றும் குறிப்பிடுவதற்கு இந்த ஊடகங்களுக்கு கொஞ்சமும் வெட்கமில்லை. இந்த இலக்கணத்துக்கு கொஞ்சமும் விலகாமல், மாத்திரை குறையாமல் வந்திருப்பது தான் தமிழ் இந்துவின் உக்ரைன் பற்றிய “உருக்குலைகிறதா உக்ரைன்” எனும் கட்டுரைத் தொடர்.

அந்த தொடர் குறித்து பார்க்கும் முன் ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுவது பொருத்தமாக இருக்கும். இன்றைய ரஷ்யா ஒரு கம்யூனிச நாடல்ல, அதுவும் ஒரு முதலாளித்துவ நாடுதான். எனவே, இன்றைய ரஷ்யாவின் செயல்பாடுகளை கம்யூனிசத்தோடு பொருத்திப் பார்ப்பது முறையற்றதும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும்.

முதலில் அந்தத் தொடரின் சில வாக்கியங்களை மேற்கோளாக காட்டி அதன் மூலம் அவர்களின் விருப்பம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டிவிட்டு உக்ரைன் பிரச்சனைக்குள் புகுந்து பார்க்கலாம்.

“1905ல் ரஷ்யப் புரட்சி நடந்த பிறகு அங்கு முழுமையான முடியாட்சி என்பது அரசியல் சட்ட முடியாட்சியாக (constitutional monarchy) மாறியது. ஆனாலும் கூட மன்னர் அரசியலில் பலம் மிகுந்தவராகத்தான் இருந்தார். 1917-ல் நடைபெற்ற பிப்ரவரி புரட்சி, மன்னராட்சியை முற்றிலுமாக ஒழித்தது. ரஷ்ய பேரரசில் அன்று இருந்த நாடுகள் இணைந்து ஒரே நாடாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டன. யூனியன் ஆஃப் சோவியத் சோஷலிஸ்ட் ரிபப்ளிக்ஸ் என்று தங்களது ஒற்றுமையை ஒரே பெயரில் காட்டிக் கொண்டன. அதன் சுருக்கம்தான் சோவியத் யூனியன். மன்னராட்சி களையப்பட்டு சோவியத் யூனியன் உருவானதற்கு லெனின் தலைமையில் அமைந்த புரட்சிப் படை முக்கியக் காரணம். சோவியத் யூனியன் என்று ஆனவுடன் அங்கு கம்யூனிஸ அரசு அமைந்தது”

இது ரஷ்யாவில் மக்கள் புரட்சி மூலம் ஜார் ஆட்சி அகற்றப்பட்டு பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் சோசலிச அரசு அமைந்ததை குறிப்பிடும் அந்தத் தொடரின் ஒரு பத்தி. மேலோட்டமாக ரஷ்ய வரலாறு அறிந்தவர்களுக்கு கூட மேற்கண்ட இந்த பகுதியில் பெரும் பிழை இருப்பதாக தோன்றாது. அந்த அளவுக்கு முனைப்பெடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது அதன் வாக்கியங்கள். இதைப் படிக்கும்போது என்ன தோன்றுகிறது? இந்தியாவில் சர்தார் வல்லபபாய் படேல் தலைமையில் இந்திய இராணுவம் மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா என்றொரு நாட்டை கட்டியது போன்ற தோற்றம் வருகிறதா இல்லையா. இது தான் புரட்சியின் பாத்திரமா? 1905ல் ரஷ்யப் புரட்சி என்று குறிப்பிட்ட ஆசிரியர், 1917ல் பிப்ரவரிப் புரட்சி என்று குறிப்பிட்ட ஆசிரியர், மிகக் கவனமாக 1917 நவம்பர் புரட்சியைப் பற்றி கூறவில்லை. ஏன்? அதாவது அங்கு நடந்தது ஒரு அரசு மாற்றமே தவிர அரசியல் மாற்றமல்ல என்பது தான் அந்த இடத்தில் ஆசிரியர் குறிப்பிட விரும்புவது. உண்மையை மறைப்பவர்களை நாம் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஆனால் இது போன்ற மறைக்கவும் வேண்டும் அதேநேரம் மறைத்ததும் தெரியக்கூடாது என்று திட்டமிட்டு செயல்படுபவர்களிடம் நாம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

“சோவியத்தில் `அனைவரும் சமம்’ என்பதை அடிப்படையாகக் கொண்ட கம்யூனிஸ அரசு அமைந்தது. இதன் விளைவாக பல அடிப்படை மாற்றங்கள் அங்கு நிகழ்ந்தன. யாரும் தனிப்பட்ட சொத்துக்களை வைத்திருக்க முடியாது. எல்லாமே அரசினுடை யது”

கம்யூனிசம் வந்தால் எல்லோருடைய சொத்துகளையும் பிடுங்கிக் கொள்வார்கள் என்று வலதுசாரிகள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்களே, அதே பூச்சாண்டிதான் இதிலும் தொழிற்பட்டிருக்கிறது.

“ரஷ்யப் புரட்சியின்போது (அதாவது சோவியத் யூனியன் உருவாகும் கால கட்டத்திலேயே) உக்ரைன் பகுதியினர் தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்று போராடினர். சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக விளங்க தங்களுக்கு சம்மதமில்லையென்று கூறினர். ஆனால் சோவியத் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பிரம்மாண்ட செம்படைக்கு முன் எண்ணிக்கையில் குறைந்த கிழக்கு உக்ரைனியர் எம்மாத்திரம்? அடக்கு முறையில் துவண்டனர். இணைப்பில் சேர ஒத்துக் கொண்டனர்”

மீண்டும் படேலின் இந்தியாவைப் போன்று லெனின் தலைமையிலான சோவியத்தையும் பிம்பமாக்க்கும் முயற்சி. பின்லாந்து எப்படி தனிநாடாகியது என்பதை சிந்திப்பவர்களால் உக்ரைனை இப்படி பார்க்க முடியாது. அவதூறு கூற விரும்புகிறவர்கள் மட்டுமே இப்படி கூறத் துணிவார்கள்.

“சோவியத்தின் ஒரு பகுதியான சைபிரியா கடுங்குளிர் பிரதேசம். தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்களை அங்கு அனுப்பும் பழக்கத்தை சோவியத் யூனியன் வழக்கமாகவே கொண்டிருந்தது – அந்தமானுக்கு அனுப்பப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுக்கு வருகிறார்களா?”

அந்தமானுக்கு அனுப்பப்பட்டவர்கள் வெள்ளை காலனி ஆட்சியை எதிர்த்த இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள். சைபீரியாவுக்கு அனுப்பபட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்? ஒவ்வொரு நாடும் தண்டனையாக சில பகுதிகளுக்கு அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. ஆனால் இந்த சைபீரியாவை அந்தமானோடு ஒப்பிட வேண்டிய அவசியமென்ன? இந்தியாவை வெள்ளைக்காரர்கள் காலனிப்படுத்தி வைத்திருந்ததைப் போல ரஷ்யாவை ஸ்டாலின் காலனிப்படுத்தி வைத்திருந்ததாக குறிக்க விரும்புகிறார்கள். இதை அவதூறு என்றல்லாமல் வேறுஎன்ன சொல்லால் குறிப்பிடுவது?

“அப்படிப் பிரிந்தால் வேறு பல பகுதிகளும் பிரிந்துவிட வாய்ப்பு உண்டே! கவலைப்பட்ட ஸ்டாலின் திட்டங்கள் தீட்டினார் .. .. .. குருஷேவ் ரஷ்ய அதிபரானார். இவர் உக்ரைன் எல்லைப் பகுதிக்கு அருகிலிருந்த ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் ஸ்டாலின் உக்ரைனுக்கு எதிராக செய்த சதியில் இவரும் பங்கு கொண்டார். என்றாலும் உலகப் போரின்போதும் அதற்குப் பிறகு தனது ஆட்சியிலும் உக்ரைனில் உண்டான பாதிப்புகளைக் களைய முயற்சிகளை எடுத்துக் கொண்டார்”

அதாவது ஸ்டாலின் கெட்டவர், குருஷேவ் நல்லவர். இது யாருடைய கூற்று?

“அமெரிக்கா எதற்கு உக்ரைன் விஷயத்தில் இவ்வளவு குரல் கொடுக்க வேண்டும்? ஏதோ ஒரு சிறிய நாடு தொடர்பான பிரச்னை இது என்று அமெரிக்காவால் விடமுடியவில்லை. ரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது. தவிர ஆர்க்டிக், பசிபிக், ஈரான் என்று பல கோணங்களில் உக்ரைன் பிரச்னையை அணுகுகிறது அமெரிக்கா”

இது அப்பட்டமாக நரியைப் பரியாக்கும் முயற்சி. அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போக்கும் தன்னுடைய மறுகாலனிய நாடுகளாக உலகின் ஏனைய நாடுகள் அனைத்தும் இருக்க வேண்டும் என்று உலக போலீஸ்காரனாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் போக்கு உலகிற்கே தெரியும். தமிழ் இந்துவுக்கும், இத்தொடரின் ஆசிரியர் ஜி.எஸ்.எஸ் க்கும் தெரியாதா?

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு புரிதலுக்காக மாட்டுமே இதனைக் குறிப்பிடும்படி ஆனது என்பதால், எடுத்துக்காட்டுகளை முடித்து விட்டு உக்ரைன் பிரச்சனையை அதன் தொடக்கத்திலிருந்து பார்க்கலாம்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

One thought on “உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’

  1. மேற்கு – அமெரிக்க சார்பு ஊடகங்கள் வெளியிடும் செய்தியை அப்படியே மொழிப்பெயர்த்து தருவதைத்தான் இந்த ’செய்தி ஆய்வாளர்கள்’ செய்கின்றனர். பன்னாட்டு அரசியல் பற்றிய தெளிவான புரிதல் இல்லையெனில், இப்படித்தான் செய்திகள் வரும். தவறுகளைச் சரிபார்க்கும், அலசிப் பார்க்கும் திறன் கொண்டவர்கள் யாரும் அப்பத்திரிகையில் இல்லை.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s