முகம்மதும் ஆய்ஷாவும்

child marriage

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 55

முகம்மது புரிந்த மூன்றாவது திருமணம் விவகாரமானதும், இதை சரி காண முஸ்லீம்கள் திணறிக் கொண்டிருக்கும் திருமணமாகவும் அமைந்து விட்டது. அது தான் ஆய்ஷாவுடனான திருமணம். இந்த திருமணம் நடக்கும் போது முகம்மதின் வயது ஐம்பதுக்கும் அதிகம். ஆனால், ஆய்ஷாவின் வயதோ வெறும் ஆறு தான். இந்தத் திருமணம் தான் இஸ்லாத்தை விமர்சிக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மட்டுமல்லாது முகம்மதின் வாழ்க்கை முஸ்லீம்களுக்கு ஒரு முன்மாதிரி என்பதாலும் குழந்தத் திருமணம் கூடாது என்று குரான் வசனங்கள் எதுவும் தடுக்கவில்லை என்பதாலும் இன்றும் முஸ்லீம்கள் இது போன்று குழந்தைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு குழந்தையைத் திருமணம் செய்து கொள்ள மத ரீதியாக இஸ்லாமியர்களுக்கு தடை ஒன்றும் இல்லை.

 

முகம்மதின் மக்கா வாழ்வின் இறுதியில் நடந்த இந்த திருமணம் முகம்மதினுடைய ஆசையின் பேரிலேயே நடந்திருக்கிறது என்பதை ஒரு ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. தன்னுடைய நெருங்கிய நண்பரும், தனக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவருமான அபூபக்கரின் மகள் தான் ஆய்ஷா. ஆய்ஷா குழந்தையாக இருக்கும் போது தன்னுடைய ஆசையை அபூபக்கரிடம் வெளிப்படுத்துகிறார் முகம்மது.

 

நபி அவர்கள் அபூபக்ர் அவர்களிடம் ஆயிஷா அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு ஹலால் – மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம் என்று சொன்னார்கள். புஹாரி 5081

 

சிறுமியின் தந்தையான அபூபக்கருக்கு விருப்பமில்லை என்றாலும் முகம்மதின் வற்புறுத்தலினாலேயே சம்மதிக்கிறார் அதும் சிறுமியாக இருப்பதால் மூன்று ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என்கிறார். முகம்மது பெருந்தன்மையுடன்(!) அதனை ஏற்று ஆறு வயதில் புறத் திருமணம் முடிந்தாலும் ஒன்பது வயதிலேயே மெய்யான திருமண வாழ்வை தொடங்குகிறார்.

 

நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரீஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்கு காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் அவர்கள் என்னிடம் வந்து என்னை சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் நன்மையுடனும் அருள் வளத்துடனும் வருக! நற்பேறு உண்டாகட்டும் என்று கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க அவர்கள் என்னை அலங்கரித்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன். புஹாரி 3894

 

மேலுள்ள ஹதீஸ்கள் முகம்மதின் விருப்பத்தினால் ஆறு வயதில் திருமணம் செய்யப்பட்டு ஒன்பது வயதில் முதலிரவு (முதல் பகல்) நடந்திருக்கிறது என்பதை தெரிவிக்கின்றன. இந்த மூன்று ஆண்டு இடைவெளி கூட அபூபக்கர் விதித்த நிபந்தனையினால் தான். ஆனால் முகம்மது குழந்தைத் திருமணம் செய்ததன் வீரியத்தை நீர்த்துப்போகச் செய்ய முஸ்லீம்கள் பல காரணங்களை அடுக்குகிறார்கள். இப்படி குழந்தத் திருமணம் செய்வது கூடாது என்று பின்னாளில் தடுக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். ஆனால் அப்படியான தடை எதுவும் குரானிலோ ஹதீஸ்களிலோ இல்லை. இன்றும் இது போன்ற திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மட்டுமல்லாது முகம்மதின் பேத்தி உம்மு குல்ஸுமை உமர் திருமணம் செய்யும் போது அவள் சிறுமி தான்.

 

இஸ்லாமிய மதவாதிகள் இந்தத் திருமணம் குறித்து வாதிடும் போது முதன்மையானதாக இரண்டு விசயங்களை முன்வைக்கிறார்கள். 1. குழந்தைத் திருமணம் என்பது அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒன்று தான் 2. புத்திக் கூர்மை கொண்ட ஆய்ஷாவை திருமணம் செய்ததன் மூலம் இஸ்லாமின் இல்லற வாழ்வியல் குறித்த நுணுக்கமான தகவல்கள் தெரியவந்தன. இந்த இரண்டுமே பொருத்தமற்றவை.

 

குழந்தைத் திருமணம் பழங்காலத்தில் நடைமுறையில் இருந்தது தான் என்றாலும் முகம்மது புரிந்தது வழக்கத்தில் இருந்த குழந்தைத் திருமணத்துடன் இணைக்க முடியாதது. வழக்கத்தில் இருந்த குழந்தைத் திருமணம் என்பது ஒரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே நடத்தி வைக்கும் அல்லது ஒப்பந்தம் செய்யும் திருமணம். இன்னும் ஒரு வழக்கம் கூட இருந்தது. வயது முதிர்ந்த கிழவர்கள் தங்கள் பொருளாதார பலம் கொடுக்கும் திமிரினால் இளவயது கன்னிப் பெண்களை திருமணம் புரிந்தார்கள். ஆனால் முகம்மதுவின் திருமணம் ஐம்பதுக்கும் அதிகமான வயதுடைய கிழவராக இருக்கும் போது ஆறு வயதாக இருந்த சிறுமியை மணந்த திருமணம். இது வழக்கத்தில் இருந்திராதது. எனவே, இதை வழக்கத்தில் இருந்தது தான் என கடந்து போக முடியாது. அல்லது முகம்மதுக்கு முன்பு இவ்வாறான திருமணம் நடந்திருக்கிறது அரபு இலக்கியங்களிலிருந்து எதையாவது எடுத்துக்காட்ட முடியுமா இஸ்லாமிய மதவாதிகளால்? அது யுக முன்மாதிரியான முகம்மதுதின் தகுதிக்கு ஏற்றதா?

 

ஆய்ஷா எனும் பெண்ணுக்கு மிகுந்த புத்திக் கூர்மை இருக்கும், அது இஸ்லாமிய இல்லற விழுமியங்களுக்கு பயன்படும் என்று ஆறு வயதேயான சிறுமியை கண்டு முகம்மது தெரிந்து கொண்டாரா? என்றொரு கேள்வியை எழுப்பினால் இஸ்லாமிய மதவாதிகள் இப்போது கூறிக் கொண்டிருக்கும் காரணங்கள் எவ்வளவு அபத்தமானவை என்பது புரியும். ஆய்ஷா அறிவித்த ஹதீஸ்களில் இஸ்லாமிய இல்லறவியலுக்கான என்ன நுணுக்கமான தகவல்கள் இருக்கின்றன? ஆய்ஷ அறிவித்த ஹதீஸ்களை அறிவிக்க புத்திக் கூர்மை இருக்க வேண்டியது அவசியமா? அப்படி ஒன்றுமில்லை. ஆய்ஷா அறிவித்த ஹதீஸ்களின் கருத்துக்கள் வெகு சாதாரணமானவை. எந்தப் பெண்ணும் எளிதில் அறிவிக்க முடிந்தவை. தவிரவும் ஒரே செய்திய கூறும் போது கூட தவறான தகவல்களை கூறக் கூடிய நிலைமையிலேயே ஆய்ஷா இருந்திருக்கிறார். எடுத்துக்காட்டு புஹாரி 4912 மற்றும் புஹாரி 5268 (இந்த இரண்டு ஹதீஸ்களைப் பற்றிய விபரம் அடுத்த தலைப்பில் விரிவாக இடம்பெறவிருக்கிறது) ஆகவே, அந்தக் கால வழக்கம், ஆய்ஷாவின் புத்திக்கூர்மை இஸ்லாத்துக்கு பயன்பட்டிருக்கிறது என இஸ்லாமிய மதவாதிகள் செய்யும் பரப்புரைகள் நடந்த தவறை நியாயப்படுத்தும் சமாளிப்புகள் என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை.

 

அந்தக் கால வழக்கம், புத்திக் கூர்மை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முகம்மது திருமணம் செய்த பெண்களிலேயே கன்னிப் பெண் ஆய்ஷா மட்டும் தான். முகம்மதின் விருப்பத்திற்குறிய மனைவியும் ஆய்ஷா தான். எந்த அளவுக்கு என்றால் ஆய்ஷாவுடனிருக்கும் நாளை அதிகம் விரும்பியவராகவும், மரண வேளையில் ஆய்ஷாவின் மடியிலேயே என் உயிர் பிரிய வேண்டும் என விரும்பியவராகவும் இருந்திருக்கிறார். இவ்வளவு நேசத்துக்குறிய மனைவியான ஆய்ஷா ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்ட போது முகம்மது சராசரிக்கும் கீழான ஒரு மனிதராக நடந்து கொண்டார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

 

ஒரு போரை முடித்து விட்டு மதீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் முகம்மதும் அவரது படையினரும். முகம்மதுவுடன் ஆய்ஷாவும் இருக்கிறார். ஒரு இடத்தில் ஓய்வுக்காக தங்குகிறார்கள். அங்கு ஆய்ஷா தன்னுடைய நகை ஒன்றை காணாமல் தேடிச் செல்ல, திரும்பி வருவதற்குள் இராணுவக் கூட்டம் கிளம்பி விடுகிறது. திரும்பி வந்து பார்த்து கூட்டத்தைக் காணாததால் யாரேனும் தேடி வரக் கூடும் என எண்ணி அங்கேயே இருந்து தூங்கி விடுகிறார் ஆய்ஷா. பின்னர் தாமதமாக வந்த ஸுப்வான் பின் முஅத்தல் என்பவர் ஆய்ஷாவைக் கண்டு தன் ஒட்டகத்தில் ஏற்றிக் கொண்டு வருகிறார். மதிய உணவிற்காக வேறொரு இடத்தில் தங்கியிருந்த போது ஆய்ஷாவும் ஸுப்வான் பின் முஅத்தலும் இராணுவக் கூட்டத்தோடு சென்று சேர்கின்றனர். இதை காரணமாக வைத்து ஆய்ஷாவுக்கும் ஸுப்வான் பின் முஅத்தலுக்கும் இடையே முறைகேடான உறவுகள் இருப்பதாக கதை கட்டப்பட்டு வதந்திகள் உலா வந்தது. இதை முகம்மதுவும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பத் தொடங்குகிறார். அதனால் ஆய்ஷாவை விவாகரத்து செய்வதற்கும் எண்ணுகிறார். இந்த நிலையில் தான் குரான் வசனங்கள் ஆய்ஷா குற்றமற்றவர் எனக் கூறுகிறது அதன்பிறகே முகம்மது நிம்மதியடைகிறார்.  நீளமான ஹதீஸான புஹாரி 2661 ன் சுருக்கம் இது.

 

இந்த விசயத்தில் முகம்மது நடந்து கொண்ட முறை எப்படிப்பட்டதாக இருந்தது? ஒரு யுக முன்மாதிரி மனிதர் நடந்து கொள்ள வேண்டிய தன்மையில் இருந்ததா? முகம்மதின் நண்பர்கள், ஒரு மனைவி, ஒரு பணிப்பெண் இவர்களெல்லாம் திடமாக ஆய்ஷா அப்படிப்பட்டவர் இல்லை. என்று கூறும் போது தன் காதல் மனைவி மீது அப்படியான எண்ணம் ஏன் முகம்மதுவுக்கு இல்லாமல் போயிற்று? ஆய்ஷாவிடம் சென்று நீ பாவம் செய்தவளாக இருந்தால் அல்லாவிடம் பாவ மன்னிப்பு தேடிக் கொள் என்று கூறுவது எத்தனை வன்மமானது? குரூரமானது? இந்த விவகாரத்தில் வெளிப்பட்ட குரான் வசனங்கள் மக்களைப் பார்த்து கீழ்க்கண்டவாறு கேள்விகளை எழுப்புகிறது. தொடர்ச்சியாக பதினோரு வசனங்களில் அன்றைய மக்களைப் பார்த்து அல்லா கேள்விகளை எழுப்புகிறான்.

 

முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் இதைக் கேள்வியுற்ற போது தங்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டு “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” எனக் கூறியிருக்க வேண்டாமா? குரான் 24:12

 

அவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில் அவர்கள் தாம் அல்லாவிடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள். குரான் 24:13

 

இன்னும் இதை நீங்கள் செவியுற்றபோது “இதைப்பற்றி பேசுவது நமக்கு இல்லை. நீயே தூயவன். இது பெரும்பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா? குரான் 24:16

 

என்றெல்லாம் அன்றைய மக்களை நோக்கி குரான் வினவுகிறது. ஆனால் மக்களை நோக்கி குரான் இப்படி கேள்வி எழுப்புவதில் ஏதாவது நேர்மை இருக்கிறதா? நேர்மை இருந்திருந்தால் இந்தக் கேள்விகள் முகம்மதை நோக்கியல்லவா எழுப்பப் பட்டிருக்க வேண்டும். ஒரு பெண்ணின் மீது அவதூறு கொண்டு வருபவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும் என்று குரான் கூறியிருந்த விதியை முகம்மது மறந்து விட்டாரா? முகம்மது ஒரு சராசரி மனிதராகவாவது இருந்தால் அவதூறு கூறியவர்களை நோக்கி நீங்கள் கூறுவதற்க்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு எதையுமே செய்யாமல் மாதக்கணக்காய் குழம்பிக் கொண்டிருந்துவிட்டு, விவாகரத்து எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டு, (இந்த நேரத்தில் இறைச் செய்தி வருவதும் தற்காலிகமாக நின்று போனது என்பது தான் வேடிக்கை – அல்லாவுக்கே குழப்பம் வந்து விட்டது போலும்) கடைசியில் நீங்கள் அவதூறு என்று கூறியிருக்க வேண்டாமா? என்று மக்களைப் பார்த்து கேள்வி கேட்பது எந்த விதத்தில் சரி? இதில் என்ன முன்மாதிரி இருக்கிறது?

 

சொந்த மனைவி மீது சிலர் அவதூறு பேசும் போது அதில் உண்மை இருக்கிறதா? இல்லையா? என்பதை அலசிப் பார்த்து  உறுதியாக நின்று சரியான முடிவு எடுக்க இயலாத வெகு சதாரணமான ஒரு மனிதர், லேசான நெருக்குதல் வந்த உடனேயே உடைந்து போய் விட்ட ஒரு மனிதர் தானா இனி உலகம் உள்ளவரை வரும் அனைத்து பிரிவினருக்கும், சந்ததிகளுக்கும் வழிகாட்டக் கூடியவர்? முஸ்லீம்கள் பரிதாபமானவர்கள் தாம்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

54. முகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்

53. முகம்மதின் மக்கா வாழ்வும் அவரின் புலப்பெயர்வும்

52.  தன்னுடன் தானேமுரண்பட்ட முகம்மது

51. முகம்மது நல்லவரா? கெட்டவரா?

50. முகம்மது அனுப்பிய கடிதங்கள் மதமா? ஆட்சியா?

49. முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?

48. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2

47. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

46. இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை

45. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

44. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 1. மணச்சட்டம்

43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3

42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்களே! நீங்கள் டி.என்.டி.ஜே வுக்கு பணம் அனுப்பவில்லையா?

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 4

saudi workers

உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பகுதி நான்கை படிக்க இங்கே சொடுக்குங்கள்.  4.1, 4.2

 

கற்பனை உரையாடலின் மூன்றாவது பகுதியைப் போலவே நான்காவது பகுதியிலும் கம்யூனிஸ்டின் வாதங்களே இடம் பிடித்திருக்கின்றன. என்றாலும், அதில் அரச பயங்கரவாதத்துக்கு துணை போகும் டி.என்.டி.ஜேவின் உளக்கிடையும் வாழைப் பழத்தில் ஏற்றப்படும் ஊசி போல் ஏற்றப்பட்டிருக்கிறது. அதை முஸ்லீம்கள் அடையாளம் கண்டு கொள்வது அவசியம். அதெப்படி, அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லீம்கள் அரச பயங்கரவாதத்துக்கு துணை போக முடியும்? பார்ப்பனிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்டவர்கள் அதே பார்ப்பனிய பயங்கரவாதத்துக்கு துணை போவதைக் கண்டதில்லையா?

 

முதலில் தலைப்பை கவனித்து விட்டு பின்பு அரச பயங்கரவாதத்துக்குள் செல்லலாம். அவர்களின் கற்பனை உரையாடல் நான்காவது பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்கள், \\\நாங்க பள்ளிவாசல் கட்ட நிதி கேட்டுப் போனா, தவ்ஹீத் ஜமாத்தா அவங்கள் உள்ளே விடாதேன்னு சொல்லுவாங்க .. .. .. உள்நாட்டிலே எங்களுக்கு இந்தக் கதியின்னா வெளிநாட்டிலிருந்து யார் நிதி கொடுப்பா?/// நாம் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறோம். முழுப் பொய்யைவிட குறை உண்மைகள் ஆபத்தானவை. முதல் பகுதியில் எழுதப்பட்டிருந்த டி.என்.டி.ஜே குறித்தான அறிமுகத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சற்றேறக் குறைய எண்பதுகளின் மத்தியில் தமிழகத்தில் தொடங்குகிறது ஜாக் எனும் பெயரிலான இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு. ஒப்பீட்டளவில் தென்னிந்தியாவை விட வடவிந்தியாவில் முஸ்லீம்கள் அதிகம். இஸ்லாமிய அறிஞர்களும் அதிகம். எண்பதுகளுக்கு முன்பு இஸ்லாமிய கொள்கை விளக்க நூல்களென்றால் அது வடவிந்தியாவில் எழுதப்பட்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாகத் தான் இருக்கும். இந்த நிலையில் வடவிந்தியாவில் தோன்றியிருக்காத இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தோன்றியது எங்கணம்?

 

இஸ்லாமிய மீட்டுருவாக்கம் என்பது துருக்கி, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் பரவிக் கொண்டிருந்த கம்யூனிஸத்தை தடுப்பதற்காக அமெரிக்காவின் சிந்தனையில் தோன்றி துருக்கியின் செய்யத் குதூப் மூலம் சௌதியின் பணபலத்தின் பின்னணியில் உருவான கருவி. எழுபதுகளின் இறுதியில் சௌதியின் உட்கட்டமைப்புக்கு அமெரிக்கா பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தேவைப்பட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனர். வடவிந்தியாவில் அதிகம் முஸ்லீம்கள் இருந்தாலும், வளைகுடா நாடுகளுக்கு தமிழக முஸ்லீம்களே அதிகம் சென்றனர். அதனால் தான் அந்த தொழிலாளர்களின் வழியாகத் தான் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் தமிழகத்தில் நுழைகிறது. அதனால் தான் வடவிந்தியாவை விட விரைவாய் தமிழகத்தில் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் தோன்றியது. தொடக்க கால ஜாக் குழுவினர் சௌதி அரேபியாவுக்கு அதிகம் பயணப்பட்டிருக்கின்றனர்.

 

அந்த இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு பலவாறாக பிரிந்து நிற்கும் இன்றைய நிலையில், அவ்வாறான பிளவு அனைத்திலும் பொருளாதாரம் அடிநாதமாக இருந்திருக்கிறது. இந்த வரலாற்றுப் பின்னணியுடன் தான் டி.என்.டி.ஜே வின் அந்தக் கூற்றை பார்க்க வேண்டும். இந்த மீட்டுருவாக்க குழுக்களின் தொடக்க காலத்தில் ஏற்கனவே தமிழகத்தில் இருந்த ஜமாஅத்கள் நிலப்பிரபுத்துவ தன்மை கொண்டவை. தர்ஹாக்களோடு உறவாடியவை. எல்லா ஊர்களிலும் பலம் வாய்ந்தவையாக இருந்தவை. இந்த தன்மைகளுக்கு எதிராகத்தான் இஸ்லாமிய மீட்டுருவாக்க குழுக்கள் தற்ஹாக்களுக்கு எதிராக, தொப்பி அணிய வேண்டியதில்லை, கூட்டுத் துஆ தேவையில்லை என கலகம் புரிந்து இளைஞர்களை ஈர்த்தன. இதனால் பழைய ஜமாஅத்கள் தங்கள் பள்ளிவாசல்களில் இவர்கள் நுழைய தடை விதித்தன. இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட மீட்டுருவாக்கக் குழுக்கள், தாங்களே சொந்தமாக நிலம் வாங்கி அதில் நவீன பள்ளிவாசல்களைக் கட்டிக் கொண்டன. இந்த வகையில் தமிழகம் முழுவதும் சில நூறு பள்ளிவாசல்கள் இந்தக் குழுக்கள் வசம் அசையா சொத்துகளாக இருக்கின்றன. மட்டுமன்றி, அசையும் சொத்துகளாக தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்தக் குழுக்களின் சார்பில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மிகக் குறுகிய காலகட்டத்தில், இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் பொருளாதார ரீதியில் இந்தக் குழுக்கள் வளர்ந்தது எப்படி?

 

பழைய ஜமாஅத்களில் நோன்பு காலங்களில் மாலையில் நோன்புக் கஞ்சி ஊற்றுவதற்க்குக் கூட அவ்வளவு சிரமப்படுவார்கள். ஆனால் இன்று இந்த மீட்டுருவாக்க குழுக்களின் பள்ளிவாசல்களில் நோன்பு காலங்களில் தினமும் பிரியாணி போடுகிறார்கள். பல்வேறு பெயர்களில் வட்டியில்லாக் கடன்கள் வழங்குகிறார்கள், வார இதழ் நடத்துகிறார்கள், ஒவ்வொரு கிளையிலும் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை பொதுக்கூட்டம், மாதத்தில் இரண்டு தெருமுனைக் கூட்டங்கள், ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். சராசரியாக மாதம் ஒரு சுவரொட்டி வண்ணத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் ஒட்டுகிறார்கள். இவைகளுக்கெல்லாம் இந்த மீட்டுருவாக்க குழுக்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது? இந்த மீட்டுருவாக்க குழுக்கள் பொது மக்களிடம் வசூல் செய்து கண்டிருக்கிறீர்களா? பின் எப்படி?

 

இந்த இடத்தில் ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம். இந்த மீட்டுருவாக்கக் குழுக்கள் அன்னிய நிதியில் செயல்படுகின்றன என்றோ, நிதி முறைகேடுகளில் ஈடுபடுகின்றன என்றோ நிரூபிப்பது என்னுடைய வேலை இல்லை. மாறாக, யதார்த்தத்தில் தாராள நிதியில் புழங்கிக் கொண்டு இந்தியாவிலேயே ஏழ்மையான குழு நாங்கள் தாம் என்று எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துவது மட்டும் தான். அந்த வகையில் இவர்களின் நிதிப் பின்னணி வளைகுடாவிலிருக்கும் தமிழக முஸ்லீம் உழைக்கும் மக்கள் தாம். எடுத்துக்காட்டுக்காக ஒன்றை குறிப்பிடலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கடையநல்லூர் எனும் ஊரில் நம்மை தொழுகைப் பள்ளியில் அனுமதிக்க மறுக்கிறார்கள். எனவே, நமக்கென்று ஒரு பள்ளிவாசல் வேண்டும். அதைக் கட்ட நிதி தாருங்கள் என்று கேட்டார்கள். நாற்பதே நாட்களில் நாற்பது லட்ச ரூபாய் குவிந்தது. அல்லது குவிந்ததாக  காட்டப்பட்டது. இந்தப் பின்னணியில் இருந்து பார்த்தால் தான் ‘உணர்வில்’ எழுதப்பட்டிருக்கும் \\\நாங்க பள்ளிவாசல் கட்ட நிதி கேட்டுப் போனா, தவ்ஹீத் ஜமாத்தா அவங்கள் உள்ளே விடாதேன்னு சொல்லுவாங்க .. .. .. உள்நாட்டிலே எங்களுக்கு இந்தக் கதியின்னா வெளிநாட்டிலிருந்து யார் நிதி கொடுப்பா?/// என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்பது புரியும். வளைகுடாவில் வேலைபார்க்கும் தமிழக மூஸ்லீம்களே நீங்கள் சொல்லுங்கள், நீங்கள் டி.என்.டி.ஜே வுக்கு பணம் அனுப்பியதே இல்லையா? அனுப்பியிருக்கிறீர்கள் என்றால் உங்கள் கேள்விகளால் துளைத்தெடுங்கள், உணர்வு தலைமையையும், அதன் தலையையும்.

 feb14 tntj poster

அடுத்து அரச பயங்கரவாதத்துக்கு துணை போவதை குறித்து பார்ப்போம். ரஷ்யாவில் நடந்த சோசலிச புரட்சி குறித்து பேசியிருக்கும் இந்த நான்காவது பகுதியில் ஆங்காங்கே செருகப்பட்டிருக்கும் சில வாக்கியங்களில் ஒளிந்து கொண்டிருக்கிறது டி.என்.டி.ஜே வின் அரசியல். \\\இந்த மாதிரி அப்பாவிகளை முஸ்லீமா மாத்துறீங்களே ஒரு ஆளுக்கு எத்தனை லட்சம் கொடுப்பீர்கள் என்று கடுமையாக கேட்டார்/// \\\நாங்களும் ரிசர்வ் பேங்க் நடத்துறதா கற்பனை செய்யாதீர்கள் என்றேன். அவர் சிரித்துக் கொண்டு கேட்டதிலிருந்தே நான் சொன்னதை அவர் நம்பவில்லை என்று புரிந்தது/// \\\சில தனிநபர் நல்லொழுக்கம் மிக்க உயர்ந்த சிந்தனையை தனிச்சு சொல்றதை விட பாட்டாளி மக்களின் அணியில் சேர்ந்து வர்க்கப் போராட்டத்துக்கு ஆயுதங்களை பயன்படுத்தனும்னு மார்க்ஸ் சொன்னார் என்றார். மார்க்ஸ் சொன்ன தத்துவம் எவ்வளவு தவறு என்று புரிந்தது///

 

மேற்கண்ட வாக்கியங்களிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள்? இதில் முதலிரண்டு வாக்கியங்கள் ஒரு தளத்திலிருந்தும் மூன்றாவது வாக்கியம் வேறொரு தளத்திலிருந்தும் அரச பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது. பார்பனிய பயங்கரவாதம் யாரை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறதோ அந்த ஒடுக்கப்பட்ட மக்களை தங்களுக்கு ஆதரவாக செயல்படவைக்க பார்ப்பனியம் கடைப்பிடிக்கும் உத்தி தான் முஸ்லீம்களை பொது எதிரியாக காட்டுவது என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். முஸ்லீம்களை பொது எதிரியாக காட்டுவதற்கு பார்ப்பனியம் பயன்படுத்தும் பல உத்திகளில் ஒன்று முஸ்லீம்கள் அரபுநாட்டு பணத்தில் புரள்கிறார்கள் என்பது. இதைத்தான் அரசு பல்வேறு வடிவங்களில் பரப்புகிறது. பார்ப்பனிய புரட்டல்தனங்களையும் அதற்கு அரசு எந்திரம் துணை போவதையும் அதன் எல்லா வடிவங்களிலும் மக்களிடம் அம்பலப்படுத்தி அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியைச் செய்வது புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் தாம். இதை தடுக்கும் வழி தெரியாமல் தான் புரட்சிகர இடது சாரி இயக்கங்கள் மீது அரசு பயங்கரவாதத்தை ஏவி விடுகிறது. இந்த அடிப்படையிலிருந்து மேலே குறிப்பிடப்பட்ட முதலிரண்டு வாங்கியங்களைப் பாருங்கள். பார்ப்பனியம் பரப்பும் அரபுநாட்டுப் பணம் எனும் உத்தியை அதை எதிர்த்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கும் புரட்சிகர இடதுசாரிகள் மீது சுமத்த விரும்புகிறது ‘உணர்வு’ கும்பல். அதனால் தான் அவர்களின் கற்பனை உரையாடல் கம்யூனிஸ்டாக பேசுபவரை பார்ப்பனிய கருத்தைக் கொண்டவராக உருவகித்திருக்கிறது.

 

மூன்றாவது வாக்கியத்தைப் பார்க்கலாம். இதில் இரண்டு அம்சங்கள் இருக்கிறது. மார்க்ஸ் சொல்லும் தத்துவம் எவ்வாறு தவறாக தெரிகிறது? 1. ஆயுதங்களைப் பயன்படுத்தச் சொல்வதன் மூலம், 2. தனி மனிதராக நல்லெண்ணம் பேசுவதை மறுத்து மக்களை ஓர் அணியாக திரட்டச் சொல்வதன் மூலம். மதவாதிகள் அரசு என யாராக இருந்தாலும் தனி நபராக நின்று பேசுவதைத்தான் விரும்புகின்றன. அதாவது வர்க்க அடிப்படையில் ஒன்று சேராமல் அதற்கு எதிராக ஒன்று சேர்வதில் அரசுக்கும் மதவாதிகளுக்கும் பெரிதாக பிரச்சனை ஒன்றுமில்லை. ஜாதிச் சங்கங்களில் ஒன்று சேர்வதை அரசு ஊக்குவிக்கத்தான் செய்கிறது. மதவாதிகளும் தங்களின் அமைப்புகளில் மதரீதியாக ஒன்று சேர்வதை விரும்புகிறார்கள் ஆனால் வர்க்க அடிப்படையில் ஒன்றுசேர்ந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஏன் வர்க்க அடிப்படையில் ஒன்று சேரக் கூடாது? என்ற கேள்வி முக்கியமானது.

 

இதுவரையான மனித வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அரசு என்பதின் தோற்றமே ஒரு வர்க்கத்தின் சார்பில் பிற வர்க்கங்களை ஒடுக்குவது என்பதிலிருந்து தான் தொடங்குகிறது. முடியாட்சியாக இருந்தாலும், குடியாட்சியாக இருந்தாலும் அல்லது நல்லாட்சி, சமதர்ம ஆட்சி, நீதி நேர்மையான ஆட்சி எனும் பெயர்களில் அழைக்கப்படும், அன்று முதல் இன்று வரையிலான எந்த ஆட்சியானாலும் அதில் இதன் கூறுகளைக் காணலாம். எப்போதெல்லாம் வர்க்க அடிப்படையை தவிர்த்து பிற அடிப்படைகளில் மக்கள் திரண்டிருக்கிறார்களோ அப்போதெல்லாம் அரசு தன்னுடைய அதிகாரத்தை மிக பலமாக தக்க வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் மக்கள் வர்க்க அடிப்படையில்மக்கள் ஒன்றிணைகிறார்களோ அப்போதெல்லாம் அப்போதெல்லாம் மக்களை ஒடுக்கும் அரசுகள் தூக்கி வீசப்பட்டு அங்கு சமூக மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

 

கம்யூனிசத்தின் அடிப்படையே மக்கள் வர்க்க அடிப்படையில் ஒன்றிணைவதற்கு பாடுபடுவது தான். அதனால் தான் அரசு எந்திரம் தொடங்கி, பாஸிஸ்டுகள், நாஸிகள், முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள், மக்கள் விரோதிகள், மதவாதிகள் என அத்தனை பேரும் கம்யூனிசத்தை எதிர்ப்பதில், ஒழிப்பதில் மும்முரம் காட்டுகிறார்கள். அதனால் தான் ‘உணர்வு’ கும்பலும் கம்யூனிசத்தை தன் அணிகளிடம் கொண்டு சென்று விடக்கூடாது என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது. கற்பனைக் கதைகளை உண்மை போல் விளம்புகிறது. அரசும் இது போன்ற அமைப்புகளும் ஒன்றிணையும் புள்ளி இது தான்.

 

அடுத்து ஆயுதப் போராட்டம். மக்கள் விரோதிகள் அனைவரும் மக்களை ஏய்ப்பதற்கு இந்த ஆயுதப் போராட்டம் என்பதைத் தான் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். மக்கள் யாருக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும்? இந்தக் கேள்வியை ஆராய்ந்து பார்த்தால் மதவாதிகள் உட்பட அத்தனை மக்கள் விரோதிகளும் மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பது புலப்படும்.

 

தண்ணீர் வரவில்லை என்று மக்கள் போராடுகிறார்கள். கிலோ கணக்கில் மனுக் கொடுத்துப் பார்த்துவிட்டு முடியாமல் சாலையை மறிக்கிறார்கள். என்ன நடக்கிறது? போலீசு லத்தி எனும் ஆயுதத்தோடு வருகிறது. மக்கள் கூட்டத்தையும் உறுதியையும் பொருத்து இந்த ஆயுதம் வஜ்ரா வாகனம், கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கி என்று ஆயுதங்கள் மாறுகின்றன அதிகரிக்கின்றன. இவர்களுக்கு எதிராக மக்கள் நிராயுதபாணியாக மட்டும் தான் நிற்க வேண்டுமா?

 

ஒவ்வொரு ஆண்டும் அரசின் வரவு செலவுத் திட்டத்தில் லட்சக் கணக்கான கோடி ஆயுதம் வாங்குவதற்காக செலவு செய்யப்படுகிறது. யாரைக் காப்பாற்றுகின்றன இந்த ஆயுதங்கள்? அறுநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்ததற்காக குண்டடி பட்டு செத்திருக்கிறார்களே. அவர்களுக்கு ஆதரவாக இந்த ஆயுதங்கள் திரும்பியிருக்கிறதா?

 

இவை எடுத்துக் காட்டுகள் தாம். அரசின் ஒவ்வொரு செயலிலும் மக்களுக்கு எதிராக ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நுணுக்கமாக ஆராய்பவர்கள் எவரும் எளிதில் கண்டு கொள்ளலாம். மக்கள் குடிநீருக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் போது அரசு பாதுகாப்புடன் கொகோகோலா தினமும் லட்சக் கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கிறது. அரசின் கையிலிருக்கும் ஆயுதங்கள் கொகோகோலாவை பாதுகாக்கின்றன. உலகின் நடைபெற்ற அத்தனை போர்களும் முதலாளிகளின் முதலீடுகளைப் பாதுகாப்பதற்கே நடந்திருக்கின்றன. மறுக்க முடியுமா? என்றால் யாரிடம் ஆயுதம் இருக்கிறது யாரிடம் ஆயுதங்கள் இல்லை.

 

சமதர்மம் பேசுகிறோம் என்று முகமூடி அணிந்திருக்கும் அற்பவாத மதம்பேசிகளே! எது சமதர்மம்? எந்த ஆயுதங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ அந்த மக்களிடமே ஆயுதப் போராட்டம் தவறு என்பதிலா சமதர்மம் இருக்கிறது? யார் ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கிறார்களோ, யார் ஆயுதங்களை மக்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்களோ அவர்களிடம் ஆயுதம் தவறு என்று கூற முடியுமா? அல்லாவைத் தவிர எவனுக்கும் அஞ்ச மாட்டோம் என்று வீர வசனம் பேசுபவர்கள் அரசுக்கு எதிராக இதைக் கூற முடியுமா? ஆனால் அரசோடு உடன்பட்டு மக்களிடம் ஆயுதப் போராட்டம் கூடாது என்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? மக்களை ஏய்க்கிறார்கள் என்பதல்லவா பொருள். கம்யூனிசத்தை எதிர்ப்பவர்கள் அத்தனை பேரின் ஒட்டு மொத்த அடையாளம் இது தான்.

 

அரச பயங்கரவாதம் என்பது இது தான். தன் அதிகாரத்தை முதலாளிகளுக்கு எதிராக போராடும் மக்கள் மீது ஆயுதங்கள் மூலம் செலுத்துவது தான் அரச பயங்கரவாதம். டி.என்.டி.ஜே வின் செயல்பாடுகள் எதை நிரூபிக்கின்றன. எந்த அரச பயங்கரவாதத்தால் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ அந்த அரச பயங்கரவாதத்துக்கு ஆதரவாக முஸ்லீம்களை வளைப்பது தான் அல்லா கற்றுத் தந்த அமைதி மார்க்கத்தின் வேலையா? அந்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பவர்கள் மீதே ஆயுதப்போராட்டம் எனும் அவதூறைப் பொழிவது தான்சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்க வந்ததாக கூறிக் கொள்ளும் மதத்தின் அர்த்தமா?

 

முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. உங்கள் யதார்த்த வாழ்வு உங்கள் கண்முன்னே இருக்கிறது. அதில் சிறப்பான வாழ்வதற்கு கம்யூனிச சித்தாந்தம் சரியா? இந்த மதவாதிகளின் சித்தாந்தம் சரியா? பதிலை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சிந்தித்துப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

இத்தொடரின் முந்திய பகுதிகள்:

1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்

2. கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே

3.  பதில்சொல்ல முடியாத டி.என்.டி.ஜே

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்

உக்ரைன் செக்கோஸ்லாவாக்கியாவிடம் இருக்கும் போது ஏற்பட்ட பஞ்சத்தால் 15 000 குழந்தைகள் மரணமடைந்ததை சொல்லும் பத்திரிக்கை செய்தி

உக்ரைன் உண்மைகளை மறைக்கும் தமிழ் இந்துதொடர் – 2

தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க 

இத் தொடரின் முதல் பகுதியில் சோவியத் புரட்சியை, இந்தியாவில் சர்தார் வல்லபபாய் படேல் பல குறுநில மன்னர்களை இராணுவ பலத்தின் மூலம் மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்ததைப் போன்ற தோற்றம் கொண்டு வருவதற்கு பகீரதப் பிரயத்தனம்செய்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டியிருந்தோம். இதற்கு மேலும் வலு கூட்டுவதற்காக அத் தொடரின் இரண்டாவது பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்கள், \\\ரஷ்யப் புரட்சியின்போது (அதாவது சோவியத் யூனியன் உருவாகும் கால கட்டத்திலேயே) உக்ரைன் பகுதியினர் தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்று போராடினர். சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக விளங்க தங்களுக்கு சம்மதமில்லையென்று கூறினர். ஆனால் சோவியத் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பிரம் மாண்ட செம்படைக்கு முன் எண்ணிக்கையில் குறைந்த கிழக்கு உக்ரைனியர் எம்மாத்திரம்? அடக்கு முறையில் துவண்டனர். இணைப்பில் சேர ஒத்துக் கொண்டனர்/// அதாவது, சோவியத் யூனியன் தன்னுடைய படை வலிமையால் உக்ரைனை பணிய வைத்து தன்னுடன் இணைத்துக் கொண்டது என்று கூசாமல் எழுதியிருக்கிறார்கள். நோக்கியா நாடு என்று நினைவில் கொள்ளப்படும் பின்லாந்து சோவியத் யூனியனிலிருந்து எப்படி பிரிந்து தனிநாடானது எனும் வரலாறு தெரியுமா இவர்களுக்கு?

 

ஜார் மன்னனின் ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாகத் தான் பின்லாந்து இருந்தது. ஆனாலும், புரட்சிக்குப் பின் சோவியத் யூனியனுடன் இணைந்திருக்க பின்லாந்து விரும்பவில்லை. காரணம், சோவியத்தின் அடிப்படையான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, தோழர் லெனின் ரஷ்ய பேரினவாதிகளின் எதிர்ப்பையும் மீறி, பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பின்லாந்து தனிநாடாக ஆவதற்கான அனுமதியை கொண்டு வந்தார். இந்த சுய நிர்ணய உரிமை உக்ரைனுக்கு பொருந்தியிருக்காதா? ‘பிரம்மாண்ட செம்படைக்குமுன்னால் பின்லாந்து பெரும்படையை கொண்டிருந்தது என்று தமிழ் இந்து கருதுகிறதா? அல்லது நோக்கியா மோகத்தில் இருந்த தமிழர்கள் பின்லாந்து வரலாற்றை அறிந்திருக்க மாட்டார்கள் என்று நினைத்ததா?

 

ஒரு பொய்யைக் கூறினால் மட்டும் போதாது. வாசகர்கள் அந்தப் பொய்யை அறிந்திடா வண்ணம் திசை மாற்றி கொண்டு சென்றாகவும் வேண்டும் எனும் அவசியம் இருக்கிறதல்லவா? அதனால் தான் தமிழ் இந்து ஒரு கேள்வியை எழுப்பி அதற்கான பதிலின் மூலம் நகர்த்திச் செல்கிறது. உலகின் போக்கை தீர்மானிக்கவல்ல ஒரு வல்லரசின் பகுதியாக இருப்பது நல்லது தானே, பின் ஏன் உக்ரைனிய மக்கள் சோவியத் யூனியனிடமிருந்து பிரிந்து செல்ல விரும்பினார்கள்? எனும் கேள்வியை முன்வைக்கிறது. இது முன்பின் காலப் பகுதிகளை பொருத்தமற்று குழப்பும் நோக்கில் எழுப்பப்பட்ட கேள்வி. எப்படியென்றால், முதலாம் உலகப் போர் காலகட்டத்தில் தான் ரஷ்யாவில் புரட்சி நடந்தது. இந்த காலகட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு தலைமை தாங்கிய இங்கிலாந்து அதன் தகுதியை அமெரிக்காவிடம் இழந்த காலகட்டம். இதற்கு முந்திய ஜாரின் ரஷ்யப் பேரரசோ, புரட்சிக்குப் பின்னான லெனின் தலைமையிலான சோசலிச அரசோ பொருளாதாரத்தில் தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில் இருந்தது. சோவியத்தை ஆக்கிரமிக்க துடித்துக் கொண்டிருந்த ஜெர்மனியுடன் தன்னுடைய நலனை விட்டுக் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு பலவீனமான நிலையில் இருந்த நாடு. இந்த நிலையைத் தான் உலகின் போக்கைத் தீர்மானிக்கும் வல்லரசுஎன்னும் சொல்லால் குறிப்பிடுகிறது தமிழ் இந்து. சோவியத் யூனியன் அமெரிக்காவிக்கு நிகரான வல்லரசாக மாறியது பின்னர். இந்த இரண்டு வெவ்வேறு காலப் பகுதிகளை ஒன்றிணைத்து தான் அந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறது தமிழ் இந்து. இதைக் கூட பிரித்தறிந்து கொள்ள இயலாதவர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதினால் அது என்ன தரத்தில் இருக்கும்?

 

சரி, அந்தக் கேள்விக்கான பதில் என்ன? \\\உலகின் போக்கை தீர்மானிக் கவல்ல ஒரு சூப்பர் பவரின் பகுதியாக இருப்பது நல்லது தானே. பிறகு எதற்காக உக்ரைன் மக்கள் சோவியத் யூனியனிலிருந்து விடுபட விரும்பினார்கள்? இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அவர்கள் கலாச்சாரப் பின்னணி ரஷ்யப் பகுதியிலிருந்து மிக மிக வேறுபட்டிருந்தது/// இப்படித் தொடங்கும் தமிழ் இந்துவின் பதில் படிப்படியாக உக்ரைனில் பஞ்சம், இனப் படுகொலை என்று முதலாளித்துவத்தின் கம்யூனிசத்துக்கு எதிரான அவதூறில் சென்று தஞ்சமடைகிறது. அதாவது, உக்ரைன் பகுதி விவசாயம் செழித்த பகுதி, அங்கு நிறைய பணக்கார விவசாயிகள் இருந்தார்கள். அவர்களின் செல்வாக்கு அதிகரித்தால் அவர்கள் தனிநாடு கேட்பார்கள். அவர்கள் தனிநாடு கேட்டால் சோவியத் யூனியனே சிதறிப் போகுமே என்று கவலைப்பட்ட ஸ்டாலின், பணக்கார விவசாயிகள் பதுக்கி வைக்காமல் கண்காணிக்கிறோம் எனும் போர்வையில் இராணுவத்தை அனுப்புகிறார். இராணுவம் பணக்கார விவசாயிகளை சைபீரியப் பகுதிக்கு கடத்திவிட அங்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். இதைத்தான் இனப் படுகொலை என்று சரித்திர ஆசிரியர்கள் வர்ணிக்கிறார்கள். இதுதான் தமிழ் இந்து வர்ணிக்கும் உக்ரைன் மக்கள் பிரிந்து போக விரும்பியதற்கான கலாச்சார பின்னணி.

 

indian famine

இந்தியப் பஞ்சம்

 

வாசகர்கள் இதை தெளிவாக கவனிக்க வேண்டும். ரஷ்யாவில் புரட்சி நடந்து சோவியத் யூனியன் அமைகிறது. இந்த சோவியத் யூனியனில் அங்கம் வகிக்க விரும்பாத உக்ரைனியர்கள் தனிநாடு கோருகிறார்கள். இதை செம்படை தன் வலிமை மூலம் அடக்குகிறது. வேறு வழியில்லாமல் சோவியத் யூனியனில் நீடிக்கிறார்கள். ஏன் அவர்கள் சோவியத் யூனியனுடன் இணைந்திருக்க விரும்பவில்லை என்றால் லெனினுக்கு பின் வந்த ஸ்டாலின் விவசாயிகளை விவசாயிகளை சைபீரியாவுக்கு கடத்தி பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தி உக்ரைனிய மக்களை கொன்று குவித்ததனால் ரஷ்யாவின் மீது வெறுப்புற்ற உக்ரைனிய மக்கள் லெனின் தலைமையிலான சோவியத் யூனியனுடன் இணைய விரும்பவில்லை. எப்படி இருக்கிறது? காதில் பூச்சுற்றுவது என்பதையெல்லாம் தாண்டி காதில் பூந்தோட்டமே வளர்த்துப் பாரமரிப்பது என்று சொல்லலாமா? பொய்யைக் கூட ஒழுங்காக சொல்லத் தெரியாத இவர்கள் வரலாறு எழுத வந்தது ஏன்? வேறென்ன, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கம்யூனிசத்துக்கு எதிரான அவதூறுகளை பரப்புவதான்,

 

1930 களில் உக்ரைனில் நடந்தது என்ன? அகண்ட ஜெர்மனி கனவுடன் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக குறிப்பாக உக்ரைனுக்கு எதிராக நாஜி ஹிட்லர் நடத்திய உளவியல் பிரச்சாரம் தான் சோவியத் யூனியனில் பஞ்சம், லட்சக்கணக்கான மக்கள் படுகொலை என்பதெல்லாம். அது அமெரிக்க உதவியுடன் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் என்ன? கேரத் ஜோன்ஸ், ராபர்ட் கான்குவெஸ்ட், ஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல், சோல்சனிட்சன், வில்லியம் ஹெர்ஸ்ட், தாமஸ் வாக்கர் போன்ற எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும், பத்திரிக்கை அதிபர்களும் எழுதிய, வெளியிட்டவை தான் இன்றுவரை முதலாளித்துவ அடிவருடிகளாலும், மதவாதிகளாலும் ஆதாரமாக எடுத்துக் காட்டப்படுகின்றன. இவர்களில்,

 

கேரத் ஜோன்ஸ் ஹிட்லரால் சோவியத் யூனியனுக்குள் கட்டுக்கதைகளை உருவாக்கும் நோக்கத்தில் அனுப்பப்பட்டவர். இதை அவரே பின்னாளில் ஒப்புக் கொண்டார்.

 

ராபர்ட் கான்குவெஸ்ட் கலிப்போர்னிய பல்கலைகழகத்தின் பேரசிரியர். பிரிட்டன் ரகசிய உளவுத் துறையிலிருந்து பணம் பெற்று வரும் ஒரு உளவாளி, எழுத்தாளர் என்று 1978 ஜனவரி 27ந் தேதியிட்ட பிரெஞ்சு கார்டியன் பத்திரிக்கை அம்பலப்படுத்தியது.

 

ஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல் இவர்கள் மூவரும் பிரிட்டன் உளவுத்துறையிடம் பணம் பெற்றுக் கொண்டு எழுதிய கைக்கூலி எழுத்தாளர்கள் என்பது 1996ல் பிரிட்டிஷ் ஆவணக் காப்பகத்தை திறந்து காட்டிய போது அம்பலமானது.

 

சோல்சனிட்சன் நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர். நோபல் பரிசு எதற்காக வழங்கப்படுகிறது, நோபல் பரிசு வழங்கப்படுவதன் அரசியல் என்ன என்பது இன்று எல்லோருக்கும் அறிந்த உண்மை. அமெரிக்கா மீண்டும் வியட்நாமை தாக்க வேண்டும், அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகமான பீரங்கி மற்றும் போர் விமானங்களை சோவியத் யூனியன் வைத்திருக்கிறது, அதே போல அணு ஆயுதங்களையும் வைத்திருக்கிறது. அதாவது அமெரிக்காவில் இருப்பதை விட மூன்று அல்லது ஐந்து மடங்கு அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோவியத் யூனியன் வைத்துள்ளது. ஆகவே அதற்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்த சோவியத் யூனியன் எழுத்தாளர் பிரச்சாரம் செய்தார். எழுத்தாளருக்கு எதற்கு ஆயுதங்களை பற்றிய கவலை? வேறென்ன கம்யூனிச எதிர்ப்பும், அமெரிக்க அடிவருடித்தனமும் தான். இது போன்ற கைக்கூலித்தனங்களுக்காகத்தான் சோல்சனிட்சனுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

 

வில்லியம் ஹெர்ஸ்ட் அமெரிக்க பத்திரிக்கை அதிபர். உலகளாவிய தன்னுடைய பத்திரிக்கை மூலம் ஹிட்லருக்கு ஆதரவாக சோவியத் யூனியனுக்கு எதிராக மேற்பட்டவர்களின் கட்டுரைகளையும் எழுத்துகளையும் உலகமெங்கும் பரப்பியவர். இவைகள் அனைத்தும் கட்டுக் கதைகள் என்று கனடா நாட்டு பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் தன்னுடைய பித்தலாட்டம், பஞ்சம் மற்றும் பாசிசம் இட்லர் முதல் ஹார்வார்டு வரையிலான உக்ரைன் படுகொலைகள் என்கிற புனை கதைஎனும் நூலில் அம்பலப்படுத்தினார்.

 

தாமஸ் வாக்கர் உக்ரைனிய கட்டுக்கதைகளுக்கு புகைப்படங்கள் வழங்கியவர். இவர் உக்ரைனில் ஒருபோதும் கால் வைத்ததே கிடையாது. மாஸ்கோவில் கூட ஐந்து நாட்கள் மட்டுமே தங்கி இருந்தார். இந்த உண்மையை தி நேசன் என்ற அமெரிக்கப் பத்திரிக்கையின் மாஸ்கோ நிருபர் லூயிஸ் பிஷர் நிரூபித்தார்.

 

இந்த கைக்கூலிகளின் கட்டுக்கதைகள் தான் உலகமெங்கும் கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைப் பொழிகின்றன. சோவியத் யூனியனும், கம்யூனிசத்தோடு தொடர்பற்ற நேர்மையான எழுத்தாளர்களாலும், ஆய்வாளர்களாலும் இவைகள் அனைத்தும் பொய் என்றும், உள்நோக்கத்துடன் புனையப்பட்டவை என்றும் அப்பட்டமாக அம்பலப்படுத்தப் பட்டிருக்கின்றன. சோவியத் மீதான புனைவுகளுக்கு எதிராக உண்மைகளை வெளிக் கொண்டுவந்த முதலாளித்துவ ஊடகவியலாளர்களின் பட்டியல் டக்ளஸ் டோட்டில், லூயிஸ் பிக்ஷர், டி.என்.பிரீத், அன்னா லூயி ஸ்ட்ராங், மைக்கேல் சேயர்ஸ், ஆல்பர்ட் ஐ கான், ஹெச்.ஜி. வெல்ஸ், ஹென்றி பார்பஸ். இதன் பின்னரும் அதே அவதூறுகளை தூக்கிபிடிக்கிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் என்ன என்பது தான் இங்கு எழுப்ப வேண்டிய கேள்வியே தவிர உக்ரைன் பிரச்சனை ஒரு முகாந்திரம். அவ்வளவு தான்.

 stalin ukraine

1930 களில் உக்ரைனில் நடந்தது என்ன? ஸ்டாலின் காலத்தில் பல ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. தொழிற்துறை, விவசாயத்துறை முன்னேற்றத்திற்காக தன்னிறைவை எட்டும் வண்ணம் திட்டமிட்ட உற்பத்தி பெருக்கப்பட்டது. அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பஞ்சம் தொடர் கதையாக இருந்தது. பஞ்சத்தினால் பாதிக்கப்படாத ஐரோப்பிய நாடுகள் எதுவுமில்லை எனலாம். நோர்வே முதல் இத்தாலி வரையில், அயர்லாந்து முதல் ரஷ்யா வரையில், பஞ்சம் எல்லா நாடுகளிலும் தலைவிரித்தாடியது. இந்தியாவும் இந்த பஞ்சத்துக்கு தப்பவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சம், இரண்டு மில்லியன் மக்களை பட்டினிச் சாவுக்குள் தள்ளியது. ஆனால் சோவியத் யூனியனில் ஏற்பட்ட பஞ்சத்துக்கு மட்டும் தோழர் ஸ்டாலினும், கம்யூனிசமும் பொறுப்பாக்கப்பட்டன. இந்த பஞ்சத்துக்கு எதிராக ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை தான் பதுக்கல்காரர்களை கைது செய்தது, உக்ரைனின் பணக்கார விவசாயிகளோ தங்களின் கோதுமை சோவியத் அரசுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக வயல் வெளிகளை தீயிட்டு எரித்தார்கள். இந்த பதுக்கல்காரர்களையும், அக்கிரமக்காரர்களையும் கைது செய்ததை தான் வெள்ளை அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களை அந்தமானுக்கு கைது செய்து அனுப்பியதோடு ஒப்பிடுகிறது தமிழ் இந்து. இப்படிப்பட்ட கொடூரர்களை ஒரு அரசுத் தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் தோழர் ஸ்டாலின் செய்தார்.

 

சோவியத் யூனியனை இரும்புத்திரை நாடு என்று இன்றளவும் கூறி வருகிறார்கள். ஆனால் மாபெரும் சதி வழக்குநடந்த போது உலகின் அனைத்து நாடுகளுக்கும் சோவியத் யூனியன் சார்பில் வழக்கை பார்வையிட பிரதிநிதியை அனுப்புமாறு கோரிக்கை அனுப்பப்பட்டது. அமெரிக்கா உப்பட பல நாடுகள் பிரதிநிதிகளை அனுப்பின. அத்தனை பேரும் இது போன்று வெளிப்படையான ஒரு விசாரணையை நாங்கள் கண்டதில்லை என்றனர். அதற்கு முன்பும் பின்பும் இப்படி ஒரு வெளிப்படையான விசாரணை உலகின் எந்த நாட்டிலும் நடந்ததில்லை. ஆனாலும் சோவியத் யூனியன் என்றால் இரும்புத்திரை நாடு என்று தான் இன்றும் அழைக்க விரும்புகிறார்கள். என்றால் கம்யூனிசத்தைக் கண்டு அவர்கள் முதலாளித்துவவாதிகள் என்றாலும் மதவாதிகள் என்றாலும் அஞ்சுகிறார்கள் என்பதே இதன் பொருள்.

 

இந்த அச்சம் தமிழ் இந்துவுக்கும் இருக்கிறது. அதனால் தான் அது பொய்களின் மேல் பொய்களாக அடுக்கிக் கொண்டே செல்கிறது. \\\சோவியத் யூனியன் உழைப்பாளிகளின் சொர்க்கம் என்ற இமேஜ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் உக்ரைனில் நடந்த அராஜகம் எப்படியோ வெளியில் கசிய அது வெளி உலகுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. சோவியத் யூனியன் அரசு அவசர அவசரமாக உக்ரைனில் யாரும் பசியால் இறக்கவில்லை. நோய்களால்தான் இறந்தனர் என்று சாதித்தது/// சோவியத் யூனியன் சர்வாதிகாரமும் கொடூரங்களும் நிறைந்திருக்கும் இரும்புத்திரை நாடு என்று தான் ஊடகங்க்ளை கையில் வைத்திருக்கும் முதலாளிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் பொய்களுக்கு விளக்கம் கொடுப்பது தான் சோவியத் யூனியன் செய்திப் பிரிவின் முழுநேர வேலையாக இருந்தது. இதைத்தான் உழைப்பாளர்களின் சொர்க்கமெனும் இமேஜ் இருந்ததாகவும், உண்மை வெளிவந்து மக்கள் அதிர்ச்சியடைந்ததாகவும், அதை சமாளிக்க நோய்களால் தான் இறந்தனர் என்று சாதித்ததாகவும் திரித்து எழுதுகிறது தமிழ் இந்து.

 

உக்ரைன் குறித்த முந்திய அவதூறுகளைப் போலவே இன்றைய பிரச்சனை குறித்தும் உண்மைகளை மறைத்து அவதூறு செய்துவருவதை தொடர்ந்து பார்ப்போம்.

இத் தொடரின் முந்திய பகுதி

1. உக்ரைன் உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்

periyar

சுவனப்பிரியனுக்கு மறுப்புரை – பகுதி 4

எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவுகள் 1. குரைஷி குலம் உயர்ந்ததாக நபிகள் நாயகம் சொன்னார்களா? 2. ஆண் பெண் பற்றிகம்யூனிசம் கூறிய கருத்துகளுக்கு மறுப்பு

தள்ளாத வயதிலும் நீங்கள் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், கடவுள் பக்தி குறையவில்லையேஇது ஒருமுறை பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்வி. இதற்கு பெரியாரின் பதில் என்ன தெரியுமா? ரோஷம் இருப்பவர்கள் தான் புரிந்து கொள்வார்கள், மாற்றமடைவார்கள். ரோஷமில்லாதவர்களுக்கு புரியவும் செய்யாது, மாறவும் மாட்டார்கள் பெரியாரின் இந்தக் கூற்றைத்தான் சுவனப்பிரியன் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார். எப்படி என்பதைத்தான் இந்தப் பதிவு விளக்குகிறது.

 

தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன் எனும் பதிவுக்குப் பிறகு அதற்கான பதில் அல்லது மறுப்பு எனும் போர்வையில் இரண்டு பதிவுகளை வெளியிட்டிருக்கிறார் சுவனப்பிரியன். இந்த இரண்டு பதிவுகளின் தன்மை எப்படி இருக்கிறது என்று அறிய வேண்டுமானால், நான் என்னுடைய பதிவில் என்னென்ன கேள்விகளை எழுப்பியிருந்தேனோ அதற்கான பதில்கள் அந்த இரண்டு பதிவுகளில் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். நான் எழுப்பியிருந்த கேள்விகள்,

1. கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள் எனும் பதிவில் நேரடியாகவும், சுவனப்பிரியனின் உதாரணம் வாயிலாகவும் விளக்கியிருந்ததுக்கான பதில்.

2. சுவனப்பிரியன் நெருப்புக்கோழி பதிவில் இருக்கும் குறிப்பான அம்சங்களான இஸ்லாம் பரவுகிறது என்பதற்கான விளக்கம், மறு உலகம் இருந்து விட்டால் ஆத்திகர்களுக்கு ஒன்றுமில்லை நாத்திகர்களுக்குத்தான் இழப்பு என்பதற்கான விளக்கம் ஆகியவைகளுக்கான பதில்,

3. தானே சிக்கிக் கொண்ட பதிவில் இருக்கும் குறிப்பான அம்சங்களான கம்யூனிசம் செத்த கொள்கையா என்பதற்கான விளக்கம், இஸ்லாமிய உடை குறித்தான விளக்கம், பெண்கள் வேலை செய்வது சரியா என்பதற்கான விளக்கம், கம்யூனிஸ்டுகள் வன்முறையாளர்களா என்பதற்கான விளக்கம், இஸ்லாத்தில் தீண்டாமை குறித்த விளக்கம் ஆகியவைகளுக்கான பதில். இவை தவிர போதிய முக்கியத்துவம் இல்லாதவைகள் என நான் கருதியவற்றை தவிர்த்திருக்கிறேன். இவைகளுக்கான பதில் விளக்கமோ மறுப்போ சுவனப்பிரியனின் பதிவுகளில் இருக்கிறதா?

 

கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள் எனும் பதிவுக்கும், தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன் எனும் பதிவுக்கும் அவரிடம் பதில் இல்லை. அதாவது அவர் கூறியிருகும் பதில், “கிடைக்கும் ஓய்வு நேரத்தை எனக்கு பதில் கூறி வீணாக்க வேண்டாம் என அவர் எண்ணுவதால் பதில் கூறவில்லைதெளிவாக இதை புரிந்து கொள்வோம். முதலிரண்டு பதிவுகளுக்கு பதில் கூறினால் அவர் நேரம் வீணாகி விடுமாம். மூன்றாவது பதிவுக்கான பதில் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக வருமாம். இதன் பொருள் என்ன? மூன்றாவது பதிவுக்கு பதில் கூறினால் நேரம் வீணாகாது, முதலிரண்டு பதிவுகளுக்கு பதில் கூறினால் நேரம் வீணாகி விடும். இதிலிருந்தே தெரியவில்லையா? பதிவர் சுவனப்பிரியனுக்கு எங்கு பிரச்சனை இருக்கிறது என்பது. பதில் கூறமுடியவில்லை என்றால் அதை வெளிப்படையாக கூறிவிடுவதில் அவருக்கு என்ன தயக்கம்? தன்னுடைய அறியாமையை வெளிப்படையாக கூறாமல் முடிந்தவரை சமாளிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறியிருக்கிறதா? இதற்கு ஒரு குரான் ஆயத்தையோ, இரண்டு ஹதீஸ்களையோ எடுத்துக்காட்ட முடியுமா பதிவர் சுவனப்பிரியனால்?

 

ஆனால், பதில் வேண்டுமல்லவா? ஏனென்றால் பலநூறு பேர் இந்த விவாதத்தை தங்கள் நேரங்களை ஒதுக்கி படித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் நிலையில் எனக்கு நேரம் வீணாகும் என்றும் பின்னால் வாய்ப்பு கிடைக்கும் போது பதில் கூறுகிறேன் என்பதும் எப்படி பொருந்தும்? அதேநேரம் இணையம் எனும் பொது வெளியில் ஒருவர் எழுதுகிறார் என்றால், அப்படி எழுதும் உரிமை அவருக்கு எங்கிருந்து வருகிறது? தான் எழுதியவற்றுக்கு தானே பொறுப்பேற்க வேண்டும் எனும் கடமையிலிருந்து வருகிறது அந்த உரிமை. மாறாக எனக்கு சாதகமாக இருப்பவற்றை நான் எழுதிக் கொண்டே செல்வேன். யாரும் மேம்போக்காக கேள்வி கேட்டால் வரிந்து வரிந்து பதிலெழுதுவேன். தீர்க்கமாக கேள்வி கேட்டாலோ பதில் சொல்லாமல் நழுவுவேன் என்பது என்ன விதமான பண்பாடு? இந்த பண்பாட்டைத்தான் இஸ்லாம் இவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதா? முரண்பாடுகளின் மொத்த உருவம் என்றால் அது சுவனப்பிரியன் தானா?

 

மீண்டும், மீண்டும் பதிவர் சுவனப்பிரியன் நேரடி விவாதம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், தொடர்பில்லாமல் பேசிக் கொண்டிருக்கும் ஒருவருடன் எந்த வடிவில் விவாதம் செய்தால் முடிவு எட்டப்படும்? ஏற்கனவே நான் தெளிவாக விளக்கியிருக்கிறேன், விவாதத்தில் முடிவு காணப்பட வேண்டும் என்றால் அங்கு விவாத நேர்மை இருக்க வேண்டும் தேடல் நோக்கில் அந்த விவாதம் இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு விவாதத்தில் முடிவை எட்ட முடியும். அவ்வாறு இல்லாத சுவனப்பிரியன் போன்றவர்களுடன் விவாதம் செய்தால், அது நேரடியாக என்றாலும் எழுத்து விவாதம் என்றாலும் முடிவை எட்ட முடியாது. இவ்வளவு தெளிவாக விவ்ளக்கியிருக்கும் இதற்கு பதிலேதும் சொல்லாமல் இருந்து விட்டு நேரடி நேரடி என்று பஜனை பாடுவது ஏன்? அல்லது பதில் கூற முடியாத போது இப்படித்தான் குழப்ப வேண்டும் என்று குரான் சொல்லியிருக்கிறதா?

 

குரான் விமர்சிக்கப்படும் இடத்தில் நீங்கள் இருக்காதீர்கள் என்றொரு வசனம் குரானில் இருக்கிறது. சுவனப்பிரியன் இதன்படி செயல்படுவதாக இருந்தால், “நான் உங்களுடன் விவாதிக்கத் தயாராக இல்லைஎன்று கூறியிருக்க வேண்டும். அப்படி சுவனப்பிரியன் கூற விரும்பவில்லை. ஏனென்றால், அநேகரின் கேள்விகளுக்கு அவர்களின் பெயரோடு வெளியிட்டு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதில் எனக்கு பதில் கூற முடியாது என்றால் அவரின் இமேஜ் என்னாவது? அதேநேரத்தில் பதிலும் கூற முடியவில்லை. என்ன செய்வது? அதனால் தான் வெண்டைக்காயை விளக்கெண்ணையில் ஊற வைத்தது போன்ற மொழிநடையில், கொஞ்சம் ஆதாரமற்ற கம்யூனிச அவதூறுகளைக் கலந்து பதிவுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார். இதனால் யாருக்கு என்ன பயன்? அவருக்காவது பலன் இருக்கிறதா? இஸ்லாத்தை நிரூபிக்கவும் முடியாமல், இஸ்லாத்துக்கு எதிராகவும் நடந்து (மேலே மூன்றாவது ஐந்தாவது பத்திகளில் சொல்லியிருப்பது போல் குரான் ஹதீஸுக்கு மாற்றமாக நடக்கிறார் என்பதால்) தன்னை ஒரு நாத்திகவாதியாக வெளிக்காட்டிக் கொண்டது தான் நடந்திருக்கிறது.

 

இது தான் பதிவர் சுவனப்பிரியன் எழுதிய பதிவுகளின் தன்மையாக இருக்கிறது. மேலும் அந்தப் பதிவுகளின் மூலம் ஒரு நெருக்கடிக்குள்ளும் அவர் சிக்கிக் கொண்டிருக்கிறார். முதலில் அவர் விவாதிக்க விரும்புகிறாரா இல்லையா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். “வரும்.. .. ஆனா வராதுபாணியில் குழப்பக் கூடாது. விவாதத்துக்கு வந்தால் விவாத நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இதற்கு தெளிவான குழப்பமில்லாத பதிலைக் கூறாவிட்டால் தொடர்ந்து என்னால் அவருக்கு பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு நேர்மையற்ற விவாதத்துக்காக என்னுடைய நேரத்தை வீணாக்க முடியாதல்லவா? அப்படி நான் பதிலளிப்பதிலிருந்து விலகிக் கொண்டால், அதன் குற்றம் பதிவர் சுவனப்பிரியனைச் சேர்ந்ததேயன்றி என்னைச் சேர்ந்ததல்ல. இனி அவரின் பதிவுகளுக்குள் கடக்கலாம்.

 

பதிவர் சுவனப்பிரியன் தன்னுடைய முதல் பதிவில், முகம்மது குரைஷி குலத்துக்கு முதன்மைத்தனம் அளிக்கவில்லை என்று பல ஹதீஸ்களை எடுத்துக் காட்டி விளக்கியிருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் முகம்மது குரைஷி குலத்துக்கு முதன்மைத்தனம் அளித்தாரா? எனும் நோக்கில் தான் அந்தப் பதிவு நகர்த்தப்பட்டிருக்கிறதே தவிர இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை எனும் நோக்கில் நகர்த்தப்படவில்லை. அதாவது இஸ்லாத்தில் தீண்டாமை இருக்கிறது என்பதை மூன்று அம்சங்கள் மூலம் நான் விளக்கியிருந்தேன். இந்தியப் பகுதிகளில் வழக்கத்தில் இருக்கும் அதே வடிவில் அரேபியத் தீண்டாமை இருக்கவில்லை என்றும், அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாமிய சட்டங்களே கோலோச்சும் அரேபியாவில் இன்னும் நடை முறையில் இஸ்லாமியத் தீண்டாமை இருக்கிறது என்றும், முகம்மதே அரேபியத் தீண்டாமையை ஹதீஸில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் எடுத்துக் காட்டி இஸ்லாத்தில் இருக்கும் தீண்டாமையை வெளிப்படுத்தியிருந்தேன். இதற்கு மறுப்பு என்று கூறி முதலிரண்டு அம்சங்களைத் தவிர்த்து விட்டு முகம்மதை மட்டும் எடுத்துக் கொண்டு நீட்டி முழக்கியிருக்கிறார் பதிவர் சுவனப்பிரியன். அதுவும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை. எப்படி?

 

பதிவர் சுவனப்பிரியன் இரண்டு அம்சங்களில் முகம்மது குரைஷி குலத்துக்கு முதன்மைத்தனம் அளிக்கவில்லை என்று மறுத்திருக்கிறார். 1. குரைஷி குலத்துக்கு முதன்மைத்தனம் இல்லை என்று பல ஹதீஸ்களில் முகம்மது குறிப்பிட்டிருக்கிறார். எனவே, அதை குரைஷிகளுக்கான உரிமை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. 2. குரானின் கருத்துக்கு மாற்றமாக இருக்கும் ஹதீஸ்கள் யூதர்கள் திணித்த பொய் ஹதீஸ் என்று தான் கொள்ள வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் நான் மறுக்கிறேன்.

 

முகம்மது பல ஹதீஸ்களில் குரைஷிகளை அவர்கள் தங்களை முதன்மைப்படுத்தும் பழக்கங்களுக்காக கண்டித்திருக்கிறார். இதற்கு மாற்றமாக குரைஷிகளை முதன்மைப்படுத்துவது போல் முகம்மது கூறியிருந்தால் அது முரண்பாடு அல்லவா? என்கிறார் பதிவர் சுவனப்பிரியன். ஆனால் முகம்மது முரண்பட்டுக் கூறவே இல்லையா? ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். புஹாரி 587ல் முஆவியா அறிவிக்கிறார், அஸர் தொழுகைக்கு பின் 2 ரக் அத் சுன்னத் தொழுகை இல்லை, முகம்மது தடுத்திருக்கிறார். புஹாரி 591ல் ஆய்ஷா அறிவிக்கிறார். அஸருக்குப் பின்2 ரக் அத் சுன்னத் தொழுகையை முகம்மது தவறவிட்டதே இல்லை. நேரெதிரான பொருள் கொண்ட இந்த இரண்டு ஹதீஸ்களில் எது சரி எது தவறு? இன்னும் அனேக இடங்களில் முகம்மது இது போன்று முரண்பாடான ஹதீஸ்களை கூறியிருக்கிறார். இந்த அடிப்படையில் தான் குரைஷிகள் குறித்த ஹதீஸ்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக முகம்மது முரண்பட்டு கூறியிருப்பாரா? என்று புளகமடைவதெல்லாம் விவாதத்தில் போதுமானவையல்ல. குரைஷிகள் குறித்து கண்டிக்கும் ஹதீஸ்களில் இருப்பதென்ன? ஹஜ் சடங்குகளில் குரைஷிகள் ஒரு இடத்திலிருந்தும், ஏனையோர் வேறிடத்திலிருந்தும் கிளம்புவார்கள். இதை மாற்றி அனைவரும் ஒரே இடத்திலிருந்து கிளம்ப வேண்டும் என முறைப்படுத்துகிறார். அராபியர் என்றாலும் அராபியரல்லாதோர் என்றாலும், கருப்பர் என்றாலும், சிவப்பர் என்றாலும் அவர்களிடையே இறையச்சத்தைத் தவிர வேறு வித்தியாசம் ஒன்றுமில்லை எனும் குறிப்பாக இல்லாத பொதுவான தத்துவம், அடிமையாக இருந்தவரை படைத் தளபதியாக நியமிக்கிறார். திருடினால் என் மகளாக இருந்தாலும் தண்டனை உண்டு. போன்றவை தான். ஆனால் இவைகளெல்லாம் ஒரு ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு இருப்பவை தானேயன்றி சுவனப்பிரியன் விதந்தோதுவது போல் குரைஷிகளின் குல ஆதிக்கத்தை அடித்து நொருக்கும் நோக்கத்திலானவை அல்ல.

 

குரைஷிகளின் குல ஆதிக்கம் குறித்து மிகை மதிப்பு ஏற்படுத்துவதற்காக ஒரு தவறான வரலாற்றுத் தகவலையும் சுவனப்பிரியன் சொல்லியிருக்கிறார், \\\குறைஷிக் குடும்பத்தார் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித் தோன்றல்கள். இதன்படி கஅபாவை நிர்வகிக்கும் பொறுப்பைக் குரைஷிகள் தலைமுறை தலைமுறையாகப் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பங்களை தனித்துவமிக்க குடும்பங்களாக ஆக்கிக் கொண்டனர்/// இது தவறான தகவல். மக்கா நகரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வணிகத் தடங்களின் சந்திப்பு. இங்கு பல்வேறு கலாச்சாரங்களும், பலதரப்பட்ட மனிதர்களும் கலந்து பழகும் வாய்ப்புள்ள நகரம். ஆனால், இங்கு அரசமைப்பு என்று எதுவுமில்லை. அதற்கு மாறாக மாலாஎனும் அமைப்பு இருந்தது. இந்த மாலாதான் சச்சரவுகளைத் தீர்க்கும் அமைப்பாக இருந்தது. இந்த மாலாவுக்கு யார் தலைவராக இருக்கிறார்களோ அவர்களிடமே கஆபா ஆலயத்தின் பொறுப்பும் இருக்கும். இந்தப் பொறுப்பு எந்த குலத்துக்கும் மரபு வழியாக நீண்டகாலம் இருந்ததில்லை. யார் படை வலிமை கொண்டிருக்கிறார்களோ அவர்களிடமே இருக்கும். இதை கைப்பற்றுவதற்காக போர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த வகையில் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வேறு குலத்தினரிடம் இருந்த காஅபாவை குஸை என்பவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். இந்த குஸைக்குப் பிறகு அவருடைய பேரன் ஹாஷிம் அந்தப் பதவியைப் பெறுகிறார். இந்த ஹாஷிம் தான் முகம்மதின் பாட்டனார். (பார்க்க நூல் இஸ்லாத்தின் தோற்றம் ஒரு சமூக பண்பாட்டியல் ஆய்வு. ஆசிரியர் எம்.எஸ். முகம்மது அனஸ்) ஆக இஸ்மாயில் வழித்தோன்றல்கள் எனும் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாக கஆபாவின் ஆதிக்கம் குரைஷிகளிடம் இருந்ததில்லை. அதேநேரம் தாங்களே கஆபாவின் பொறுப்பாளர்கள் எனும் ஆதிக்க எண்ணத்தில் சில பழக்கங்களைக் கொண்டிருந்த குரைஷிகளை முகம்மது தன்னுடைய நோக்கத்துக்காக ஒழுங்குபடுத்துகிறார்.

 

முகம்மதின் இந்த ஒழுங்குபடுத்துதலை தீண்டாமைக்கு எதிராக முன்மொழிய முடியுமா? அதை எப்படி அறிந்து கொள்வது? நடைமுறை வாயிலாகத்தான் அறிந்து கொள்ள முடியும். முகம்மது அதுவரை ஹிஜாஸ் பகுதியில் இல்லாதிருந்த அரசை புதிதாக நிறுவி அதன் மன்னனாகிறார். இந்த அரசின் மன்னராகத்தான் குரைஷிகளைத் தவிர வேறு யாரும் வர முடியாது என்று கூறுகிறார். அப்படியென்றால் முகம்மதுக்குப் பிறகு அந்த அரசுக்கு மன்னராக ஆனவர்கள் யாவர்? குரைஷிகளைத் தவிர வேறு யாருமில்லை. முகம்மதுக்குப் பிறகு அது உத்மானியப் பேரரசாக மிகப்பரந்த அளவில் விரிவடைகிறது. அந்த உத்மானியப் பேரரசுக்கு எத்தனை அன்ஸாரிகள் மன்னர்களாக இருந்துள்ளனர்? முதன்முதலாக அரசராக ஆன அன்ஸாரி யார்? எப்போது? பதில்கூற முடியுமா பதிவர் சுவனப்பிரியனால்? ஆகவே முகம்மது தன்னுடைய குலமான குரைஷி குல மேலாதிக்கத்தை விரும்பியிருக்கிறார் என்றும், அதேநேரம் ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவருவதற்காக சில கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறார் என்பதைத்தான் முரண்பாடான ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இதை மறுக்க முடியுமா சுவனப்பிரியனால்? அன்ஸாரிகள் யாருமே மன்னராகவில்லை என்பதே முகம்மது கூறிய அந்த ஹதீஸ் குரைஷிகளின் மேலாதிக்கத்தை நோக்கமாக கொண்டிருக்கிறது என்பதற்கும், இஸ்லாத்தில் தீண்டாமை இருக்கிறது என்பதற்கும் சாட்சியாக இருக்கிறது.

 

ஹதீஸ்களில் ஏற்கப்பட்டவை ஏற்கக்கூடாதவை என்று பிரிவுகள் உண்டு. சன்னிகள் முக்கியமான தொகுப்புகளாக கருதும் புஹாரி, முஸ்லீம் போன்றவற்றை ஷியாக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை. ஏன், ஹதீஸ்களையே ஏற்றுக் கொள்ளாத அஹ்லே குர் ஆனிகளும் உண்டு. இந்த இவர்களின் இலக்கணங்களுக்குள் புகுந்து ஏற்றுக் கொள்ளலாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஹதீஸ்களை நான் பகுத்துப் பார்ப்பதில்லை. ஹதீஸ்கள் என்பவை வரலாற்றுத் தகவல்கள். அதில் கலப்படங்கள் பல்லாயிரம் மடங்கு கலந்திருக்கிறது. எது சரியானது எது தவறானது என்று பிரித்தறிய முடியாதபடி அவை கலந்திருக்கின்றன. ஆனால் முகம்மதின் வாழ்வை அறிந்து கொள்ள தோராயமான நம்பகத்தன்மை மட்டுமே கொண்டவை என்றாலும் ஹதீஸ்களைத் தவிர வேறு வழியில்லை. இதில் இஸ்லத்தின் ஒரு பிரிவான சன்னிகளின் தொகுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் ஏனையவர்களின் தொகுப்புகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் என்னிடம் பாகுபாடு இல்லை. பலவிதமான ஹதீஸ்களில் எது பொருத்தமாக இருக்கிறது என்றுதான் பார்க்க முடியும். இதுதான் ஹதீஸ்கள் குறித்த என்னுடைய பார்வை. ஆனால், பதிவர் சுவனப்பிரியன் இந்த பேதங்களை சன்னிகளின் பார்வையில் இருந்து மட்டுமே பார்த்து முடிவுகளை வந்தடைகிறார். அதனால்தான் அவை தவறாக இருக்கின்றன.

 

விசயத்துக்கு வருவோம், முகம்மது குரைஷிகளின் ஆதிக்கத்தை விரும்பி கூறிய ஹதீஸை யூதர்களின் சதி என்கிறார் சுவனப்பிரியன். குரானின் கருத்துக்கு மாற்றமாக இருக்கிறது என்று அதற்கு காரணமும் கூறுகிறார். தன்னுடைய சொந்த முயற்சியால் ரஷ்யாவிலிருந்து அராபியாவுக்கு வந்து ஏழு லட்சம் ஹதீஸ்களுக்கு மேல் சேகரித்து, அவைகளை அலசிப்பார்த்து ஏழாயிரம் ஹதீஸ்களைத் தவிர ஏனையவற்றை பொய் என ஒதுக்கித் தள்ளிய இஸ்மாயில் புஹாரி என்பவருக்கு குறிப்பிட்ட அந்த ஹதீஸ் குரானின் கருத்துக்கு மாற்றமாக இருக்கிறது என்பது தெரியாதா? தெரியாமல் எப்படி தன்னுடைய தொகுப்பில் சேர்த்தார்? அல்லது குரானின் கருத்துக்கு மாற்றமாக இருந்தால் அந்த ஹதீஸை ஏற்கக்கூடாது என்று புஹாரிக்கு பிறகு தான் முடிவெடுக்கப்பட்டதா? யார் அந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தது? இப்போது எது சரியான ஹதீஸ் எது தவறான ஹதீஸ் என்பதற்கு விதிமுறைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவைகளைப் பயன்படுத்தி சரியான ஹதீஸ்களை மட்டும் வடிகட்டி தொகுத்து விடலாம் அல்லவா? ஏன் செய்ய மறுக்கிறார்கள்? ஏனென்றால் மதவாதிகள் விதிமுறைகள் என்று கூறுவதே குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.

 

ஒரு ஹதீஸ் சரியானது தானா என்று அறிவதற்கு முக்கியமான மூன்று விதிமுறைகளைக் கூறுகிறார்கள். அறிவிப்பாளர்கள் வரிசை சரியாக இருக்க வேண்டும். தவறான அறிவிப்பாளர்கள் என்று வகைப்படுத்தப் பட்டிருப்பவர்கள் யாரும் அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கக் கூடாது. குரானின் கருத்துக்கு எதிராக இருக்கக்கூடாது. இந்த மூன்று விதிகளுள் ஏதேனும் ஒரு விதி மீறப்பட்டிருந்தால் அது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று கூறுகிறார்கள். இந்த விதி முறைகள் எவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்று பார்ப்போம். எடுத்துக்காட்டாக, ஒரு ஹதீஸ் குரானின் கருத்துக்கு எதிராக இருக்கிறது என்று கொள்வோம். குரானின் கருத்துக்கு எதிராக இருக்கும் ஹதீஸ் சரியான அறிவிப்பாளர் வரிசையையும், தவறான அறிவிப்பாளர்களைக் கொண்டதாக இல்லாமலும் இருக்கிறது. அதாவது, சரியான அறிவிப்பாளர் வரிசையையும், தவறான அறிவிப்பாளர்களைக் கொண்டதா இல்லாமலும் இருக்கும் ஒரு ஹதீஸ் பொய்யான ஹதீஸாக இருக்க முடியும் என்றால், சரியான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டிருக்கிறது என்பதோ, அல்லது தவறான அறிவிப்பாளர்களைக் கொண்டிருக்கவில்லை என்பதோ அது சரியான ஹதீஸ் என்பதற்கு சான்றாகிவிட முடியுமா? இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலுக்குள் ஹதீஸ் தொகுப்புகள் மாட்டிக் கொண்டிருப்பதால் தான். தூய்மையான ஹதீஸ்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்து தொகுக்க முடியவில்லை. மேலும், அது மதவாதிகளுக்கு பதில்கூற முடியாத இடங்களில் தப்பிப்பதற்கும் உதவியாக இருக்கிறது. எனவே, முகம்மது கூறிய குரைஷிகளின் ஆட்சியதிகாரம் குறித்த ஹதீஸை அவ்வளவு எளிதாக பொய்யான ஹதீஸ் என்று ஒதுக்கித் தள்ள முடியாது. ஆகவே, இஸ்லாத்தில் தீண்டாமை இருக்கிறது என்பதை யூதர்களின் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று கூறி மறுக்க முடியாது. அதேநேரம் அது இந்தியப் பகுதியிலுள்ள தீண்டாமை வடிவத்தில் இல்லை என்பதே சரியான, பொருத்தமான முடிவு. மறுப்பு சொல்ல முடியுமா பதிவர் சுவனப்பிரியனால்?

 

சுவனப்பிரியனின் அடுத்த பதிவு பெண்களை உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்துவது குறித்து. இதில் பதிவர் சுவனப்பிரியன் இரட்டை வேடம் போடுகிறார் என்று தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறேன். கள்ளத்தனமாக அதற்கு பதில் கூற மறுக்கும் சுவனப்பிரியன் தன் பதிவில் இப்படி எழுதியுள்ளார், \\\கம்யூனிஷத்தின் அடிப்படைகளையே ஆட்டம் காணச் செய்யும் செயல்களை இவர் ஒதுக்கி விடுவாராம். கம்யூனிஷம் பெண்களை உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்தது. அதனை பார்த்து நமது மக்களும் பெண் விடுதலை என்று ஆண்கள் பார்க்கும் வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர். அதன் முடிவு என்னவாக இருந்தது? தினத் தந்தியின் வேலைக்குச் சென்ற பெண்களின் உள்ளக் குமுறலை பதிவாகக் கொடுத்திருந்தேன். இதற்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார்/// யார் ஓடி ஒழிவது? எது கம்யூனிசத்தின் அடிப்படை? இன்றைய முதலாளித்துவ உலகில் முதலாளித்துவ சுரண்டலுக்கு ஆளாகியும், முதலாளித்துவ சமூகத்தின் ஆணாதிக்க நுகத்தடியில் சிக்கி வதைபடும் ஒரு பெண்ணின் பேட்டி தினத்தந்தியில் வெளியாகியிருக்கிறதாம். இது கம்யூனிசத்தின் அடிப்படையை ஆட்டம் காணச் செய்கிறதாம். என்ன கேலிக்கூத்து இது? மூளையை ஒரு விழுக்காடேனும் பயன்படுத்தும் ஒருவரால் இவ்வாறு கூற முடியுமா? இதற்கு பதில் கூற வேண்டியது யார்? முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களும், ஆணாதிக்கத்தை ஆதரிப்பவர்களும், இந்த இரண்டின் வடிவமாகவும் இருக்கும் மதவாதிகளும் பதில் கூற வேண்டிய இடம் இது.

 

நான் கடந்த பதிவில் மிகத் தெளிவாக இது குறித்து எழுதியிருக்கிறேன். அதற்கு பதில் கூற முடியாமல், செலக்டிவ் அம்னீஷியா வந்தவரைப் போல் நடிக்கும் பதிவர் சுவனப்பிரியனின் காரியவாத மறதியை முன்னிட்டு மீண்டும் ஒரு முறை அதைக் கூறுகிறேன். ஓடி ஒழியாமல் பதில் கூறுவாரா சுவனப்பிரியன்.

 

இஸ்லாம் பெண்கள் வேலைக்குச் செல்வதை அனுமதிக்கிறதா? இல்லையா? ஆம் அனுமதிக்கிறது என்றால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. இதை இஸ்லாம் உணர்ந்திருக்கிறது என்பதன் பொருள் என்ன? சுவனப்பிரியன் என்ன சொல்ல வருகிறார்? ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வித்தியாசம் இருக்கிறது. எனவே, பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்கிறாரா? அன்றிலிருந்து இன்று வரை கிராமப்புறங்களில் பெண்கள் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்ன பாதிப்பை பெற்று விட்டனர்? இன்று தொழிற்சாலை உற்பத்திகளிலும் பெண்கள் பெருமளவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்ன பாதிப்பை பெற்று விட்டனர்? மெய்யாகவே பதிவர் சுவனப்பிரியன் இரட்டை வேடம் போடவில்லை என்றால் பதில் கூறட்டும். பெண்கள் வேலைக்குச் செல்வது சரியா? தவறா? சரி என்றால் கம்யூனிசம் பெண்களை வேலை செய்யச் சொன்னது தவறில்லை என்றாகும். தவறு என்றால் இஸ்லாம் பெண்களுக்கு வேலை செய்ய அனுமதி அளித்தது சரியில்லை என்றாகும். பதிவர் சுவனப்பிரியன் தான் இரட்டை வேடம் போடவில்லை என்று இங்கு நிரூபிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

பெண்கள் வேலைக்குச் செல்வது குறித்து கம்யூனிசம் என்ன சொல்கிறது? பெண்கள் ஆண்களைப் போலவே உற்பத்தி வேலைகளில் ஈடுபடாதவரை அரசியல் ரீதியாகவும் சமூக குடும்ப ரீதியாகவும் பெண்கள் விடுதலையடைய முடியாது என்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மனரீதியாக வித்தியாசம் இருக்கிறது என்பது பொய். இதை எந்த அறிவியலாளரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் உடல் ரீதியாக சில வித்தியாசங்கள் இருக்கின்றன. இது ஆணைவிட பெண் உடல் வலுவிலோ, திறனிலோ அறிவிலோ எந்த வித குறையையும் ஏற்படுத்தாது. தவிரவும், ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் இடையே கூட உடல் ரீதியாக வித்தியாசங்கள் இருக்கின்றன. அப்படி என்றால் அந்த இன்னொரு ஆண் வேலை செய்யக் கூடாது என்று கூறுவார்களா? உற்பத்தி, உற்பத்திக் கருவிகள், உற்பத்தி உறவுகள், உற்பத்தி உறவுகளுக்கிடையேயான பகிர்மானம் இவைதான் உலகம் இயங்குவதின் அச்சாணி. இதில் உலகின் சரிபாதியினரான பெண்களை உற்பத்தியிலிருந்து அன்னியப்படுத்தியதன் மூலமே பெண்களை அடிமைகளாக்கி வைத்திருக்கின்றனர் ஆண்கள். ஆதியில் சமூகத்துக்கும் உற்பத்திக்கும் தலைமை தாங்கியது பெண்களே என்பது தான் வரலாறு. இதை மாற்றி ஆண்கள் உற்பத்திக்கும் பெண்கள் வீட்டு குடும்ப பராமரிப்புக்கும் என்று மாற்றியதன் மூலமே ஆண் பெண்ணை பலவீனப்படுத்தினான். இதை மீளத் திருத்தி ஆணும் பெண்ணும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் ஈடுபட வேண்டும். குடும்பம் சார் வேலைகளிலிருந்தும் குழந்தை வளர்ப்பிலிருந்தும் பெண்ணை விடுவித்து அதை அரசின் கடமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று கம்யூனிசம் கூறுகிறது. இது தான் சரியானது, மதவாதிகள் கூறுவதெல்லாம் பெண்ணை அடிமைத்தளையில் கட்டி வைப்பது. அவ்வாறல்ல என பதிவர் சுவனப்பிரியன் கருதினால் கம்யூனிசம் குறித்தும் இஸ்லாம் குறித்தும் இன்னும் கொஞ்சம் ஆழமாக கற்றுக் கொண்டு வரட்டும். நான் ஆயத்தமாக இருக்கிறேன்.

 

எல்லாம் சரி இப்போது ஏன் கம்யூனிஸ்டுகள் பெண்களை குறிப்பாக தங்கள் மனைவிகளை உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் குடும்ப பராமரிப்பிலேயே விட்டு வைத்திருக்கின்றனர்? பெண்களும் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்பது சமூகத்திலிருந்து தனிநபருக்கு வர வேண்டியது. தனிநபரிலிருந்து சமூகத்துக்கு அல்ல. அதாவது பெண்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்றால் குடும்பப் பராமரிப்பு குழந்தை வளர்ப்பு போன்ற வேலைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட வேண்டும். அதாவது இந்த வேலைகளை அரசு ஏற்றுக் கொள்வது வரை பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுவது அவர்களுக்கு இரட்டைச் சுமையாகவே இருக்கும். இன்று வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலையும் செய்துவிட்டு குடும்பப் பராமரிப்பிலும் குழந்தை வளர்ப்பிலும் ஈடுபடும் கொடுமையை உலகம் கண்டு கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாத்திலும் இதில் விதிவிலக்கு இல்லை. ஆனால் கம்யூனிஸ்டுகள் எதை மேலிருந்து கீழாக செய்ய வேண்டும், எதை கீழிருந்து மேலாக செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதனால் தான், கம்யூனிஸ்டுகள் இன்றைய சமூகத்தில் பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்துவதில்லை. இது கம்யூனிஸ்டுகளின் இரட்டை நிலையல்ல, சரியான நிலை. மட்டுமல்லாது எந்த கம்யூனிஸ்டும் ஆணாதிக்கமாக பெண்களை அடிமைப்படுத்துவதில்லை. கடந்த பதிவில் சுவனப்பிரியன் குறிப்பிட்டாரே, என் மனைவி கூட கம்யூனிசக் கொள்கையில் இல்லை என்று. ஆணின் முடிவை பெண்மீது என்றுமே கம்யூனிஸ்டுகள் திணிப்பதில்லை என்பதற்கு இதுவே சான்று. புரிந்து திருந்தும் வரை விளக்கமளிக்கிறோம், காத்திருக்கிறோம். அவர்கள் உண்மைகளைக் கண்டு திரும்புகிறார்கள். ஆனால் இஸ்லாமிய மதவாதிகளோ பெண்களை அடிமைப்படுத்த எண்ணுகின்றனர். தங்கள் முடிவை வலிந்து திணிக்கின்றனர். இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவே இதற்குச் சான்று. இதை சரியான கோணத்தில் புரியாவிட்டால் இப்படித்தான் பதிவர் சுவனப்பிரியனைப் போல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் நிலையை அடைய வேண்டியதிருக்கும்.

 

அடுத்ததாக இரண்டாம் பதிவில் இன்னொன்றையும் கூறியிருக்கிறார் சுவனப்பிரியன், உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி கூறியதை எடுத்துப் போட்டு ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே மனரீதியாக வேறுபாடு இருக்கிறது என்று கூறியதாக சூடம் அணைத்து சத்தியம் செய்கிறார் சுவனப்பிரியன். பாவம், இந்து நாளிதழில் வந்ததை படித்துக்கூடப் பார்க்காமல் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து விட்டார் சுவனப்பிரியன். \\\ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மனரீதியாக வித்தியாசம் இருக்கிறது என்பது பொய். இதை எந்த அறிவியலாளரும் ஏற்றுக் கொள்வதில்லை/// என்று நான் எழுதியிருந்ததையே பேராசிரியர் எட்வர்ட் காஃபி யும் கூறியிருக்கிறார். அவர் தெளிவாக இப்படி கூறியிருக்கிறார், \\\இந்த உடற் கூறு ரீதியான வேறுபாடு ஆண் பெண்களின் சமுதாய நிலையினாலும் தோன்றி இருக்கலாம். சமூகத்தில் ஆண்கள் தேடக் கூடியவர்களாகவும் (hunter) அனைத்தையும் திரட்டக் கூடியவர்களாகவும் (gatherer), பெண்கள் குழந்தைகளை சுமக்கக் கூடியவர்களாகவும் குடும்பத்தை வீட்டை கவனிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கும் என பேராசிரியர் காஃபி குறிப்பிடுகின்றார்/// நான் என்ன கூறியிருந்தேன், \\\உற்பத்தி, உற்பத்திக் கருவிகள், உற்பத்தி உறவுகள், உற்பத்தி உறவுகளுக்கிடையேயான பகிர்மானம் இவைதான் உலகம் இயங்குவதின் அச்சாணி. இதில் உலகின் சரிபாதியினரான பெண்களை உற்பத்தியிலிருந்து அன்னியப்படுத்தியதன் மூலமே பெண்களை அடிமைகளாக்கி வைத்திருக்கின்றனர் ஆண்கள். ஆதியில் சமூகத்துக்கும் உற்பத்திக்கும் தலைமை தாங்கியது பெண்களே என்பது தான் வரலாறு. இதை மாற்றி ஆண்கள் உற்பத்திக்கும் பெண்கள் வீட்டு குடும்ப பராமரிப்புக்கும் என்று மாற்றியதன் மூலமே ஆண் பெண்ணை பலவீனப்படுத்தினான். இதை மீளத் திருத்தி ஆணும் பெண்ணும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் ஈடுபட வேண்டும். குடும்பம் சார் வேலைகளிலிருந்தும் குழந்தை வளர்ப்பிலிருந்தும் பெண்ணை விடுவித்து அதை அரசின் கடமையாக மாற்றியமைக்க வேண்டும்/// என்ன சொல்வார் சுவனப்பிரியன்? என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று படித்து புரிந்து கொள்ளக் கூட முடியாத நிலையிலா பதிவர் சுவனப்பிரியன் இருக்கிறார். பரிதாபம் தான்.

 

பதிவர் சுவனப்பிரியனுக்கு நான் கூறிக் கொள்ள விரும்புவது இதைத்தான், ஒரு விசயம் கூறப்பட்டால் அதை உள்வாங்கி அதை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? என்பதை தெளிவாக முன்வைத்து வாதிடுங்கள். உங்களுக்கு சாதகமான அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு பாதகமானவற்றை கண்டுகொள்ளாமல் விடுவீர்கள் என்றால் அது விவாதமாக இருக்காது. எந்த ஒன்றையும் அது சரியா தவறா என்று தான் பார்க்க வேண்டும். அப்படி பார்த்திருந்தால் உங்கள் பதிவுகள் இப்படி தெளிவில்லாமல் இருந்திருக்காது. மீண்டும் கூறுகிறேன், என்னுடன் விவாதிக்க விருப்பமில்லை என்றால் வெளிப்படையாக கூறிவிடுங்கள். உங்களுடன் விவாதித்தே ஆக வேண்டும் என்று எனக்கு எந்த வித நிர்ப்பந்தமும் இல்லை. ஆனால் விவாதம் என்று வந்து விட்டால் நான் விடுவதில்லை. இந்த அடிப்படையில் தான் அந்த சவாலை நான் உங்களிடம் விடுத்தேன். எனக்கு உறுதிமொழி தாருங்கள். உங்களை நான் கம்யூனிஸ்டாக மாற்றிக் காட்டுகிறேன். அல்லது உங்களுக்கு நான் உறுதிமொழி தருகிறேன் என்னை மீண்டும் முஸ்லீமாக மாற்றிக் காட்டுங்கள். அவ்வளவு தான். இந்தத் தெளிவு இருந்தால் தான் எந்த விவாதமும் முடிவை எட்டும். நீங்கள் முடிவை எடூம் விவாதம் நடத்த விரும்புகிறீர்களா? தெளிவுபடுத்தி விடுங்கள். அப்படியில்லாமல் தினத்தந்தியில் பெண் பேட்டி, வாரத்தந்தியில் ஆண் பேட்டி என்று ஏதாவது எழுதிக் கொண்டிருந்தால் அதனால் எந்தப் பலனும் இல்லை. இனி நீங்கள் எழுத நினைப்பதை அது கம்யூனிச அவதூறு என்றாலும் தாராளமாக எழுதிக் கொள்ளலாம். ஏனென்றால் இலவசமாய் இணையமும், நேரமும் கிடைக்கிறது, ஏதாவது எழுதி விட்டுப் போவோம் என்று பொழுது போக்கிக் கொண்டிருக்கும் உங்களோடு நான் ஏன் பொருதிக் கொண்டிருக்க வேண்டும்ஆகவே, நான் இனி உங்களுக்கு  எழுதுவதும், எழுதாமல் இருப்பதும் உங்கள் கைகளில்.

முந்திய பதிவுகள்

1. கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்

2.  சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி

3. தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

மார்ச் 8 உலக உழைக்கும் பெண்கள் தினம்

women-day

1908 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி எட்டு மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம், பெண்களுக்கும் வாக்குரிமை என அடிப்படை உரிமைகளுக்காக போராடி, அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இரத்தம் சிந்தி வென்றார்கள். இதன் மூலம் சாமானியப் பெண்களும் போராடி உரிமைகளை வென்றெடுக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய நாள் மார் 8. அதன்பிறகு 1910ல் கோபன்ஹேகனில் இரண்டாவது அகிலத்தில் மார்ச் 8 ஐ உலக உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார் சோசலிச பெண்ணுரிமைப் போராளியான கிளாரா ஜெட்கின்.

 

இன்று மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம். ஆனால் பெண்கள் தினம் என்ற பெயரில் தன்னார்வக் குழுக்கள், இந்த நாளின் அரசியல் சாரத்தை உருவி எடுத்துவிட்டு, சக்கையைப் போல் அடையாள நாளாக கொண்டாடுகிறது, கொண்டாடத் தூண்டுகிறது. நகைக்கடை, துணிக்கடை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பவை வாழ்த்துக் கூறி பெண்களை தங்கள் வாடிக்கையாளர்களாக வளைக்கின்றன. தொலைக்காட்சிகளில் நடிகைகள் வாழ்த்துக் கூறி குத்தாட்டம் போடுகிறார்கள்.

 

இன்று பெண்கள் நிலை எவ்வாறு இருக்கிறது?

பெண் குழந்தைகள் பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்து கொன்றார்கள் அன்று. இன்றோ, ஸ்கேனிங் மூலம் கண்டறிந்து பெண் குழந்தைகளை கருவிலேயே கொன்று விடுகிறார்கள் ஆணாதிக்கவாதிகள்.

 

பெண் குழந்தைகள் தப்பிப் பிழைத்து வந்தால் படிக்கின்ற, பணி புரிகின்ற இடத்தில் ஆண்கள் காதல் கடிதங்களோடு காத்து நிற்கிறார்கள். ஏற்க மறுத்தால் ஆசிட் பாட்டலோடு வருகிறார்கள்.

 

பெண் தான் விரும்பிய ஆணைக் காதலித்தால், திருமணம் செய்தால் வன்மத்துடன் பழிவாங்க காப் பஞ்சாயத்துகளும், ஆதிக்க சாதி, மத வெறியர்களும் அரிவாளோடும், ஆண்குறியோடும் களம் இறங்குகிறார்கள் .

 

ஆறு மாதக் குழந்தையைக் கூட வல்லுறவு கொள்ளும் கொடிய விலங்குகள் உலவும் காடாக சமூகத்தை மாற்றி வருகிறது ஏகாதிபத்திய சீரழிவுப் பண்பாடு.

 

தனியார்மயம் தாராளமயம் புகுத்தப்பட்ட பின் பெண்கள் அன்றாட அத்தக் கூலிகளாக நகர்ப்புறங்களுக்கு விரட்டப்பட்டுள்ளார்கள். வீட்டு வேலைக்காரர்களாக, கார்மெண்ட்ஸ் கம்பனி தொழிலாளர்களாக, பெட்ரோல் பங்க், நகைக்கடை, ஜவுளிக்கடைகளில் சேல்ஸ் வுமன்களாக, பஞ்சாலைத் தொழிலாளர்களாக பணி புரிகிறார்கள். பஞ்சாலை முதல் ஐ.சி கம்பனிகள் வரை எல்லா துறைகளிலும் பெண்களுக்கு அற்ப கூலி, நிர்ணயமில்லா வேலை நேரம், உத்திராவாதமில்லாத வேலை என ஓய்வு இல்லாமல், நிம்மதி இல்லாமல் கடும் மன உழைச்சலுக்கு ஆளாகி தற்கொலை வரையிலும் தள்ளப்படுகிறார்கள்.

 

அறியாக் குழந்தை முதல், முடியா மூதாட்டி வரை உழைத்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தம், அன்றாடம் விலைவாசி உயர்வு, குறைந்த வருமானத்திற்குள் வாழ்க்கையை சுருங்கிக் கொள்ள வேண்டியதிருப்பதால் ஊட்டச்சத்தில்லாத உணவு, அதனால் ஏற்படும் நோய்கள் போன்றவை பெண்களை உள்ளிருந்தே அரிக்கின்றன.

 

வீட்டில் சலிப்பூட்டும், ஓய்வு ஒழிச்சலில்லாத சமையல் வேலை, துணி துவைக்கும் வேலை, பொதுக் குழாயிலிருந்து சமயங்களில் பல கிலோமீட்டர் கூட தண்ணீர் சுமக்கும் முதுகெலும்பை ஒடிக்கும் வேலை; குடிகார கணவனால், ஊதாரி பிள்ளைகளால் அடி, உதை அவமானப் பட்டும், பொறுப்பற்ற கணவர்களால் குடும்பத்தை பராமரிக்கும் முழுச் சுமையும், ஊதாரிப் பிள்ளைகளால் வளர்க்கத் தெரியாதவள் எனும் அவலப்பட்டமும் அனைத்தும் பெண்கள் தலையில் தான் விழுகிறது.

 

உழைக்கும் பெண்கள் தினம் வந்து நூறு ஆண்டுகளைக் கடந்த பின்பும் பெண்களின் இந்த அவல நிலை இன்னும் மாறவில்லை. இதற்கெதிராக, வன்கொடுமை தடுப்புச் சட்டம், வரதட்சனை கொடுமை தடுப்புச் சட்டம், பெண்கள் பாதுகப்புச் சட்டம், பெண்கள் வாழ்வுரிமைச் சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம் என பல்வேறு சட்டங்களை இயற்றியிருப்பதாக பீற்றிக் கொள்கிறது அரசு. அத்தனையும் அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக ஏவப்படும் குற்றங்களில் பெரும்பாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. தவிரவும் இதை தடுக்கவும், தண்டிக்கவும் பொறுப்பேற்றிருக்கும் காவல்துறை, நீதித்துறை, இராணுவம் ஆகியவை வாச்சாத்தியிலும், மணிப்பூரிலும், காஷ்மீரிலும், பெண்கள் மீது ஏவிய வன்கொடுமைகளை உலகமே அறியும்.

 

இதற்கிடையே மதவாதிகள் ஆணும் பெண்ணும் சமமல்ல, ஆணைவிட உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெண் தாழ்ந்தவள் என்று தங்களின் பாலின ஆதிக்க வெறியை அறிவியலை துணைக்கழைத்து கூத்தாடுகிறார்கள். ஒரு பக்கம் எங்கள் மதம் விருப்பப்பட்டால் வேலை செய்யலாம் என பெண்களை அனுமதித்திருப்பது பெண் விடுதலை என்று இறுபூறெய்துகிறார்கள். மறுபக்கம் பெண்ணை நிர்வகிப்பவனாக ஆணே இருக்கிறான் என்று அடிமைத் தனத்தை போதிக்கிறார்கள். ஆடைக்குமேல் ஆடை என்று ஆடைக்குள் பெண்ணை பூட்டி வைத்து விட்டு அது தான் பெண்ணைக் காக்கும் என்று வசனம் பேசுகிறார்கள்.

 

பெண்களின் இந்த நாயினும் கீழான வாழ்வுக்குக் காரணம் இந்த சமூக அமைப்பு தான். பெண்கள் முதலில் மூலதனத்தால் வேட்டையாடப்படுகிறர்கள். இரண்டாவதாக பெண்கள் தங்கள் வாழ்வின் அவலம் குறித்து சிந்திப்பதை தடுக்கின்ற வீட்டு வேலை என்கிற அடிமைத்தனத்தால் குதறப்படுகிறார்கள். இதை ஒழிக்காமல் பெண்களுக்கு ஜனநாயக உரிமையோ, சுதந்திரமோ சத்தியம் இல்லை.

 

மதம், சமூகம், அரசு என அனைத்தும் பெண்களுக்கு எதிராகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை புரிந்து கொள்வது மட்டுமே பெண் விடுதலைக்கான முதல் எட்டை எடுத்து வைக்கும். செத்த பிறகு உரிமை கிடைக்கும் என்று மதப் போர்வைக்குள் பெண்கள் இளைப்பாற முடியுமா? ஆணுக்கு கீழ் இருப்பதே நீதி என்று தடித்தனத்தில் இருக்கும் சமூகத்தின் எருமைத் தோலை பெண்கள் வருடிக் கொடுக்க முடியுமா? பெண் நீதிபதியைக் கூட விட்டு வைக்காத அரசின் அங்கத்திடம் பெண்கள் நீதி பெற முடியுமா? இவை அனைத்தையும் தாங்கி நிற்கு அரசு எனும் அமைப்பை பெண்கள் தாங்கி நிற்கத்தான் முடியுமா?

 ma 8

நிமிர்ந்த மனிதன் தோன்றி தோராயமாக 3 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என்கிறது அறிவியல். இதில் தனியுடமையும் ஆணாதிக்கமும் தோன்றி வலுத்த கடைசி 10 ஆயிரம் ஆண்டுகளைக் கழித்தால் மீதமுள்ள 2 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள் சமூகத்துக்கு தலைமை தாங்கி வழி நடத்தியவள் பெண். இந்தப் பெருமிதம் தொலைக்காட்சித் தொடர்களில் கரைந்து போகலாகாது.

 

பெண்ணுக்கு ஆண் எதிரியில்லை. மறுகாலனியாக்கத்தின் கொடுங்கரங்களுக்குள் சிக்குண்டு வாழ்விழந்து நிற்கும் ஆண்களையும் பெண்களையும் கட்டிவைத்திருக்கும் அரசின் அத்தனை கட்டமைப்பும் மீள்முடியாத நெருக்கடியில் சிக்கி நொறுங்கி விழக் காத்திருக்கும் நிலையில் பெண்கள் ஓரணியில் திரள்வதன் மூலம் ஆண்களையும் சேர்த்து விடுதலை செய்ய வேண்டும். அதற்கு சோசலிசத்தை நோக்கிய நகர்வைத் தவிர வேறு தீர்வு ஒன்றுமில்லை.

 

சோசலிசத்தில் தான் உழைப்பை சுரண்டுகின்ற மூலதனத்தை ஒழித்து, உற்பத்தி சாதங்கள் பொது உடமையாக்கப்படுகிறது. குழந்தை வளர்ப்பு நிலையங்கள், பொது உணவு விடுதிகள், பொது துணி துவைக்கும் ஆலைகள் ஏற்படுத்தி தனிப்பட்ட வீட்டு வேலைகள் ஒழிக்கப்படுகிறது.

 

அதற்குரிய விரைவான, நேரான, நேர்மையான புரட்சியும் சமூக மாற்றமும் தான். புரட்சி இல்லாமல் விடுதலையும் இல்லை, உரிமைகளும் இல்லை. இதைப் பெற பெண்களுக்கு இருக்கு ஒரே ஆயுதம் அமைப்பாக அணி திரள்வது தான்.

 

அணிதிரள்வோம்! போராடுவோம்! வென்றெடுப்போம்! என இந்த உலக உழைக்கும் பெண்கள் தினத்தில் உறுதியேற்போம்.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: