மார்ச் 8 உலக உழைக்கும் பெண்கள் தினம்

women-day

1908 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி எட்டு மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம், பெண்களுக்கும் வாக்குரிமை என அடிப்படை உரிமைகளுக்காக போராடி, அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இரத்தம் சிந்தி வென்றார்கள். இதன் மூலம் சாமானியப் பெண்களும் போராடி உரிமைகளை வென்றெடுக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய நாள் மார் 8. அதன்பிறகு 1910ல் கோபன்ஹேகனில் இரண்டாவது அகிலத்தில் மார்ச் 8 ஐ உலக உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார் சோசலிச பெண்ணுரிமைப் போராளியான கிளாரா ஜெட்கின்.

 

இன்று மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம். ஆனால் பெண்கள் தினம் என்ற பெயரில் தன்னார்வக் குழுக்கள், இந்த நாளின் அரசியல் சாரத்தை உருவி எடுத்துவிட்டு, சக்கையைப் போல் அடையாள நாளாக கொண்டாடுகிறது, கொண்டாடத் தூண்டுகிறது. நகைக்கடை, துணிக்கடை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பவை வாழ்த்துக் கூறி பெண்களை தங்கள் வாடிக்கையாளர்களாக வளைக்கின்றன. தொலைக்காட்சிகளில் நடிகைகள் வாழ்த்துக் கூறி குத்தாட்டம் போடுகிறார்கள்.

 

இன்று பெண்கள் நிலை எவ்வாறு இருக்கிறது?

பெண் குழந்தைகள் பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்து கொன்றார்கள் அன்று. இன்றோ, ஸ்கேனிங் மூலம் கண்டறிந்து பெண் குழந்தைகளை கருவிலேயே கொன்று விடுகிறார்கள் ஆணாதிக்கவாதிகள்.

 

பெண் குழந்தைகள் தப்பிப் பிழைத்து வந்தால் படிக்கின்ற, பணி புரிகின்ற இடத்தில் ஆண்கள் காதல் கடிதங்களோடு காத்து நிற்கிறார்கள். ஏற்க மறுத்தால் ஆசிட் பாட்டலோடு வருகிறார்கள்.

 

பெண் தான் விரும்பிய ஆணைக் காதலித்தால், திருமணம் செய்தால் வன்மத்துடன் பழிவாங்க காப் பஞ்சாயத்துகளும், ஆதிக்க சாதி, மத வெறியர்களும் அரிவாளோடும், ஆண்குறியோடும் களம் இறங்குகிறார்கள் .

 

ஆறு மாதக் குழந்தையைக் கூட வல்லுறவு கொள்ளும் கொடிய விலங்குகள் உலவும் காடாக சமூகத்தை மாற்றி வருகிறது ஏகாதிபத்திய சீரழிவுப் பண்பாடு.

 

தனியார்மயம் தாராளமயம் புகுத்தப்பட்ட பின் பெண்கள் அன்றாட அத்தக் கூலிகளாக நகர்ப்புறங்களுக்கு விரட்டப்பட்டுள்ளார்கள். வீட்டு வேலைக்காரர்களாக, கார்மெண்ட்ஸ் கம்பனி தொழிலாளர்களாக, பெட்ரோல் பங்க், நகைக்கடை, ஜவுளிக்கடைகளில் சேல்ஸ் வுமன்களாக, பஞ்சாலைத் தொழிலாளர்களாக பணி புரிகிறார்கள். பஞ்சாலை முதல் ஐ.சி கம்பனிகள் வரை எல்லா துறைகளிலும் பெண்களுக்கு அற்ப கூலி, நிர்ணயமில்லா வேலை நேரம், உத்திராவாதமில்லாத வேலை என ஓய்வு இல்லாமல், நிம்மதி இல்லாமல் கடும் மன உழைச்சலுக்கு ஆளாகி தற்கொலை வரையிலும் தள்ளப்படுகிறார்கள்.

 

அறியாக் குழந்தை முதல், முடியா மூதாட்டி வரை உழைத்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தம், அன்றாடம் விலைவாசி உயர்வு, குறைந்த வருமானத்திற்குள் வாழ்க்கையை சுருங்கிக் கொள்ள வேண்டியதிருப்பதால் ஊட்டச்சத்தில்லாத உணவு, அதனால் ஏற்படும் நோய்கள் போன்றவை பெண்களை உள்ளிருந்தே அரிக்கின்றன.

 

வீட்டில் சலிப்பூட்டும், ஓய்வு ஒழிச்சலில்லாத சமையல் வேலை, துணி துவைக்கும் வேலை, பொதுக் குழாயிலிருந்து சமயங்களில் பல கிலோமீட்டர் கூட தண்ணீர் சுமக்கும் முதுகெலும்பை ஒடிக்கும் வேலை; குடிகார கணவனால், ஊதாரி பிள்ளைகளால் அடி, உதை அவமானப் பட்டும், பொறுப்பற்ற கணவர்களால் குடும்பத்தை பராமரிக்கும் முழுச் சுமையும், ஊதாரிப் பிள்ளைகளால் வளர்க்கத் தெரியாதவள் எனும் அவலப்பட்டமும் அனைத்தும் பெண்கள் தலையில் தான் விழுகிறது.

 

உழைக்கும் பெண்கள் தினம் வந்து நூறு ஆண்டுகளைக் கடந்த பின்பும் பெண்களின் இந்த அவல நிலை இன்னும் மாறவில்லை. இதற்கெதிராக, வன்கொடுமை தடுப்புச் சட்டம், வரதட்சனை கொடுமை தடுப்புச் சட்டம், பெண்கள் பாதுகப்புச் சட்டம், பெண்கள் வாழ்வுரிமைச் சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம் என பல்வேறு சட்டங்களை இயற்றியிருப்பதாக பீற்றிக் கொள்கிறது அரசு. அத்தனையும் அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக ஏவப்படும் குற்றங்களில் பெரும்பாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. தவிரவும் இதை தடுக்கவும், தண்டிக்கவும் பொறுப்பேற்றிருக்கும் காவல்துறை, நீதித்துறை, இராணுவம் ஆகியவை வாச்சாத்தியிலும், மணிப்பூரிலும், காஷ்மீரிலும், பெண்கள் மீது ஏவிய வன்கொடுமைகளை உலகமே அறியும்.

 

இதற்கிடையே மதவாதிகள் ஆணும் பெண்ணும் சமமல்ல, ஆணைவிட உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெண் தாழ்ந்தவள் என்று தங்களின் பாலின ஆதிக்க வெறியை அறிவியலை துணைக்கழைத்து கூத்தாடுகிறார்கள். ஒரு பக்கம் எங்கள் மதம் விருப்பப்பட்டால் வேலை செய்யலாம் என பெண்களை அனுமதித்திருப்பது பெண் விடுதலை என்று இறுபூறெய்துகிறார்கள். மறுபக்கம் பெண்ணை நிர்வகிப்பவனாக ஆணே இருக்கிறான் என்று அடிமைத் தனத்தை போதிக்கிறார்கள். ஆடைக்குமேல் ஆடை என்று ஆடைக்குள் பெண்ணை பூட்டி வைத்து விட்டு அது தான் பெண்ணைக் காக்கும் என்று வசனம் பேசுகிறார்கள்.

 

பெண்களின் இந்த நாயினும் கீழான வாழ்வுக்குக் காரணம் இந்த சமூக அமைப்பு தான். பெண்கள் முதலில் மூலதனத்தால் வேட்டையாடப்படுகிறர்கள். இரண்டாவதாக பெண்கள் தங்கள் வாழ்வின் அவலம் குறித்து சிந்திப்பதை தடுக்கின்ற வீட்டு வேலை என்கிற அடிமைத்தனத்தால் குதறப்படுகிறார்கள். இதை ஒழிக்காமல் பெண்களுக்கு ஜனநாயக உரிமையோ, சுதந்திரமோ சத்தியம் இல்லை.

 

மதம், சமூகம், அரசு என அனைத்தும் பெண்களுக்கு எதிராகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை புரிந்து கொள்வது மட்டுமே பெண் விடுதலைக்கான முதல் எட்டை எடுத்து வைக்கும். செத்த பிறகு உரிமை கிடைக்கும் என்று மதப் போர்வைக்குள் பெண்கள் இளைப்பாற முடியுமா? ஆணுக்கு கீழ் இருப்பதே நீதி என்று தடித்தனத்தில் இருக்கும் சமூகத்தின் எருமைத் தோலை பெண்கள் வருடிக் கொடுக்க முடியுமா? பெண் நீதிபதியைக் கூட விட்டு வைக்காத அரசின் அங்கத்திடம் பெண்கள் நீதி பெற முடியுமா? இவை அனைத்தையும் தாங்கி நிற்கு அரசு எனும் அமைப்பை பெண்கள் தாங்கி நிற்கத்தான் முடியுமா?

 ma 8

நிமிர்ந்த மனிதன் தோன்றி தோராயமாக 3 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என்கிறது அறிவியல். இதில் தனியுடமையும் ஆணாதிக்கமும் தோன்றி வலுத்த கடைசி 10 ஆயிரம் ஆண்டுகளைக் கழித்தால் மீதமுள்ள 2 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள் சமூகத்துக்கு தலைமை தாங்கி வழி நடத்தியவள் பெண். இந்தப் பெருமிதம் தொலைக்காட்சித் தொடர்களில் கரைந்து போகலாகாது.

 

பெண்ணுக்கு ஆண் எதிரியில்லை. மறுகாலனியாக்கத்தின் கொடுங்கரங்களுக்குள் சிக்குண்டு வாழ்விழந்து நிற்கும் ஆண்களையும் பெண்களையும் கட்டிவைத்திருக்கும் அரசின் அத்தனை கட்டமைப்பும் மீள்முடியாத நெருக்கடியில் சிக்கி நொறுங்கி விழக் காத்திருக்கும் நிலையில் பெண்கள் ஓரணியில் திரள்வதன் மூலம் ஆண்களையும் சேர்த்து விடுதலை செய்ய வேண்டும். அதற்கு சோசலிசத்தை நோக்கிய நகர்வைத் தவிர வேறு தீர்வு ஒன்றுமில்லை.

 

சோசலிசத்தில் தான் உழைப்பை சுரண்டுகின்ற மூலதனத்தை ஒழித்து, உற்பத்தி சாதங்கள் பொது உடமையாக்கப்படுகிறது. குழந்தை வளர்ப்பு நிலையங்கள், பொது உணவு விடுதிகள், பொது துணி துவைக்கும் ஆலைகள் ஏற்படுத்தி தனிப்பட்ட வீட்டு வேலைகள் ஒழிக்கப்படுகிறது.

 

அதற்குரிய விரைவான, நேரான, நேர்மையான புரட்சியும் சமூக மாற்றமும் தான். புரட்சி இல்லாமல் விடுதலையும் இல்லை, உரிமைகளும் இல்லை. இதைப் பெற பெண்களுக்கு இருக்கு ஒரே ஆயுதம் அமைப்பாக அணி திரள்வது தான்.

 

அணிதிரள்வோம்! போராடுவோம்! வென்றெடுப்போம்! என இந்த உலக உழைக்கும் பெண்கள் தினத்தில் உறுதியேற்போம்.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

One thought on “மார்ச் 8 உலக உழைக்கும் பெண்கள் தினம்

  1. சோசலிசத்தில் தான் உழைப்பை சுரண்டுகின்ற மூலதனத்தை ஒழித்து, உற்பத்தி சாதங்கள் பொது உடமையாக்கப்படுகிறது. குழந்தை வளர்ப்பு நிலையங்கள், பொது உணவு விடுதிகள், பொது துணி துவைக்கும் ஆலைகள் ஏற்படுத்தி தனிப்பட்ட வீட்டு வேலைகள் ஒழிக்கப்படுகிறது.

    அதற்குரிய விரைவான, நேரான, நேர்மையான புரட்சியும் சமூக மாற்றமும் தான். புரட்சி இல்லாமல் விடுதலையும் இல்லை, உரிமைகளும் இல்லை. இதைப் பெற பெண்களுக்கு இருக்கு ஒரே ஆயுதம் அமைப்பாக அணி திரள்வது தான்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s