சுவனப்பிரியனுக்கு மறுப்புரை – பகுதி 4
எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவுகள் 1. குரைஷி குலம் உயர்ந்ததாக நபிகள் நாயகம் சொன்னார்களா? 2. ஆண் பெண் பற்றிகம்யூனிசம் கூறிய கருத்துகளுக்கு மறுப்பு
“தள்ளாத வயதிலும் நீங்கள் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், கடவுள் பக்தி குறையவில்லையே” இது ஒருமுறை பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்வி. இதற்கு பெரியாரின் பதில் என்ன தெரியுமா? “ரோஷம் இருப்பவர்கள் தான் புரிந்து கொள்வார்கள், மாற்றமடைவார்கள். ரோஷமில்லாதவர்களுக்கு புரியவும் செய்யாது, மாறவும் மாட்டார்கள்” பெரியாரின் இந்தக் கூற்றைத்தான் சுவனப்பிரியன் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார். எப்படி என்பதைத்தான் இந்தப் பதிவு விளக்குகிறது.
தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன் எனும் பதிவுக்குப் பிறகு அதற்கான பதில் அல்லது மறுப்பு எனும் போர்வையில் இரண்டு பதிவுகளை வெளியிட்டிருக்கிறார் சுவனப்பிரியன். இந்த இரண்டு பதிவுகளின் தன்மை எப்படி இருக்கிறது என்று அறிய வேண்டுமானால், நான் என்னுடைய பதிவில் என்னென்ன கேள்விகளை எழுப்பியிருந்தேனோ அதற்கான பதில்கள் அந்த இரண்டு பதிவுகளில் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். நான் எழுப்பியிருந்த கேள்விகள்,
1. கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள் எனும் பதிவில் நேரடியாகவும், சுவனப்பிரியனின் உதாரணம் வாயிலாகவும் விளக்கியிருந்ததுக்கான பதில்.
2. சுவனப்பிரியன் – நெருப்புக்கோழி பதிவில் இருக்கும் குறிப்பான அம்சங்களான இஸ்லாம் பரவுகிறது என்பதற்கான விளக்கம், மறு உலகம் இருந்து விட்டால் ஆத்திகர்களுக்கு ஒன்றுமில்லை நாத்திகர்களுக்குத்தான் இழப்பு என்பதற்கான விளக்கம் ஆகியவைகளுக்கான பதில்,
3. தானே சிக்கிக் கொண்ட பதிவில் இருக்கும் குறிப்பான அம்சங்களான கம்யூனிசம் செத்த கொள்கையா என்பதற்கான விளக்கம், இஸ்லாமிய உடை குறித்தான விளக்கம், பெண்கள் வேலை செய்வது சரியா என்பதற்கான விளக்கம், கம்யூனிஸ்டுகள் வன்முறையாளர்களா என்பதற்கான விளக்கம், இஸ்லாத்தில் தீண்டாமை குறித்த விளக்கம் ஆகியவைகளுக்கான பதில். இவை தவிர போதிய முக்கியத்துவம் இல்லாதவைகள் என நான் கருதியவற்றை தவிர்த்திருக்கிறேன். இவைகளுக்கான பதில் விளக்கமோ மறுப்போ சுவனப்பிரியனின் பதிவுகளில் இருக்கிறதா?
கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள் எனும் பதிவுக்கும், தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன் எனும் பதிவுக்கும் அவரிடம் பதில் இல்லை. அதாவது அவர் கூறியிருகும் பதில், “கிடைக்கும் ஓய்வு நேரத்தை எனக்கு பதில் கூறி வீணாக்க வேண்டாம் என அவர் எண்ணுவதால் பதில் கூறவில்லை” தெளிவாக இதை புரிந்து கொள்வோம். முதலிரண்டு பதிவுகளுக்கு பதில் கூறினால் அவர் நேரம் வீணாகி விடுமாம். மூன்றாவது பதிவுக்கான பதில் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக வருமாம். இதன் பொருள் என்ன? மூன்றாவது பதிவுக்கு பதில் கூறினால் நேரம் வீணாகாது, முதலிரண்டு பதிவுகளுக்கு பதில் கூறினால் நேரம் வீணாகி விடும். இதிலிருந்தே தெரியவில்லையா? பதிவர் சுவனப்பிரியனுக்கு எங்கு பிரச்சனை இருக்கிறது என்பது. பதில் கூறமுடியவில்லை என்றால் அதை வெளிப்படையாக கூறிவிடுவதில் அவருக்கு என்ன தயக்கம்? தன்னுடைய அறியாமையை வெளிப்படையாக கூறாமல் முடிந்தவரை சமாளிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறியிருக்கிறதா? இதற்கு ஒரு குரான் ஆயத்தையோ, இரண்டு ஹதீஸ்களையோ எடுத்துக்காட்ட முடியுமா பதிவர் சுவனப்பிரியனால்?
ஆனால், பதில் வேண்டுமல்லவா? ஏனென்றால் பலநூறு பேர் இந்த விவாதத்தை தங்கள் நேரங்களை ஒதுக்கி படித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் நிலையில் எனக்கு நேரம் வீணாகும் என்றும் பின்னால் வாய்ப்பு கிடைக்கும் போது பதில் கூறுகிறேன் என்பதும் எப்படி பொருந்தும்? அதேநேரம் இணையம் எனும் பொது வெளியில் ஒருவர் எழுதுகிறார் என்றால், அப்படி எழுதும் உரிமை அவருக்கு எங்கிருந்து வருகிறது? தான் எழுதியவற்றுக்கு தானே பொறுப்பேற்க வேண்டும் எனும் கடமையிலிருந்து வருகிறது அந்த உரிமை. மாறாக எனக்கு சாதகமாக இருப்பவற்றை நான் எழுதிக் கொண்டே செல்வேன். யாரும் மேம்போக்காக கேள்வி கேட்டால் வரிந்து வரிந்து பதிலெழுதுவேன். தீர்க்கமாக கேள்வி கேட்டாலோ பதில் சொல்லாமல் நழுவுவேன் என்பது என்ன விதமான பண்பாடு? இந்த பண்பாட்டைத்தான் இஸ்லாம் இவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதா? முரண்பாடுகளின் மொத்த உருவம் என்றால் அது சுவனப்பிரியன் தானா?
மீண்டும், மீண்டும் பதிவர் சுவனப்பிரியன் நேரடி விவாதம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், தொடர்பில்லாமல் பேசிக் கொண்டிருக்கும் ஒருவருடன் எந்த வடிவில் விவாதம் செய்தால் முடிவு எட்டப்படும்? ஏற்கனவே நான் தெளிவாக விளக்கியிருக்கிறேன், விவாதத்தில் முடிவு காணப்பட வேண்டும் என்றால் அங்கு விவாத நேர்மை இருக்க வேண்டும் தேடல் நோக்கில் அந்த விவாதம் இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு விவாதத்தில் முடிவை எட்ட முடியும். அவ்வாறு இல்லாத சுவனப்பிரியன் போன்றவர்களுடன் விவாதம் செய்தால், அது நேரடியாக என்றாலும் எழுத்து விவாதம் என்றாலும் முடிவை எட்ட முடியாது. இவ்வளவு தெளிவாக விவ்ளக்கியிருக்கும் இதற்கு பதிலேதும் சொல்லாமல் இருந்து விட்டு நேரடி நேரடி என்று பஜனை பாடுவது ஏன்? அல்லது பதில் கூற முடியாத போது இப்படித்தான் குழப்ப வேண்டும் என்று குரான் சொல்லியிருக்கிறதா?
குரான் விமர்சிக்கப்படும் இடத்தில் நீங்கள் இருக்காதீர்கள் என்றொரு வசனம் குரானில் இருக்கிறது. சுவனப்பிரியன் இதன்படி செயல்படுவதாக இருந்தால், “நான் உங்களுடன் விவாதிக்கத் தயாராக இல்லை” என்று கூறியிருக்க வேண்டும். அப்படி சுவனப்பிரியன் கூற விரும்பவில்லை. ஏனென்றால், அநேகரின் கேள்விகளுக்கு அவர்களின் பெயரோடு வெளியிட்டு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதில் எனக்கு பதில் கூற முடியாது என்றால் அவரின் இமேஜ் என்னாவது? அதேநேரத்தில் பதிலும் கூற முடியவில்லை. என்ன செய்வது? அதனால் தான் வெண்டைக்காயை விளக்கெண்ணையில் ஊற வைத்தது போன்ற மொழிநடையில், கொஞ்சம் ஆதாரமற்ற கம்யூனிச அவதூறுகளைக் கலந்து பதிவுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார். இதனால் யாருக்கு என்ன பயன்? அவருக்காவது பலன் இருக்கிறதா? இஸ்லாத்தை நிரூபிக்கவும் முடியாமல், இஸ்லாத்துக்கு எதிராகவும் நடந்து (மேலே மூன்றாவது ஐந்தாவது பத்திகளில் சொல்லியிருப்பது போல் குரான் ஹதீஸுக்கு மாற்றமாக நடக்கிறார் என்பதால்) தன்னை ஒரு நாத்திகவாதியாக வெளிக்காட்டிக் கொண்டது தான் நடந்திருக்கிறது.
இது தான் பதிவர் சுவனப்பிரியன் எழுதிய பதிவுகளின் தன்மையாக இருக்கிறது. மேலும் அந்தப் பதிவுகளின் மூலம் ஒரு நெருக்கடிக்குள்ளும் அவர் சிக்கிக் கொண்டிருக்கிறார். முதலில் அவர் விவாதிக்க விரும்புகிறாரா இல்லையா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். “வரும்.. .. ஆனா வராது” பாணியில் குழப்பக் கூடாது. விவாதத்துக்கு வந்தால் விவாத நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இதற்கு தெளிவான குழப்பமில்லாத பதிலைக் கூறாவிட்டால் தொடர்ந்து என்னால் அவருக்கு பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு நேர்மையற்ற விவாதத்துக்காக என்னுடைய நேரத்தை வீணாக்க முடியாதல்லவா? அப்படி நான் பதிலளிப்பதிலிருந்து விலகிக் கொண்டால், அதன் குற்றம் பதிவர் சுவனப்பிரியனைச் சேர்ந்ததேயன்றி என்னைச் சேர்ந்ததல்ல. இனி அவரின் பதிவுகளுக்குள் கடக்கலாம்.
பதிவர் சுவனப்பிரியன் தன்னுடைய முதல் பதிவில், முகம்மது குரைஷி குலத்துக்கு முதன்மைத்தனம் அளிக்கவில்லை என்று பல ஹதீஸ்களை எடுத்துக் காட்டி விளக்கியிருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் முகம்மது குரைஷி குலத்துக்கு முதன்மைத்தனம் அளித்தாரா? எனும் நோக்கில் தான் அந்தப் பதிவு நகர்த்தப்பட்டிருக்கிறதே தவிர இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை எனும் நோக்கில் நகர்த்தப்படவில்லை. அதாவது இஸ்லாத்தில் தீண்டாமை இருக்கிறது என்பதை மூன்று அம்சங்கள் மூலம் நான் விளக்கியிருந்தேன். இந்தியப் பகுதிகளில் வழக்கத்தில் இருக்கும் அதே வடிவில் அரேபியத் தீண்டாமை இருக்கவில்லை என்றும், அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாமிய சட்டங்களே கோலோச்சும் அரேபியாவில் இன்னும் நடை முறையில் இஸ்லாமியத் தீண்டாமை இருக்கிறது என்றும், முகம்மதே அரேபியத் தீண்டாமையை ஹதீஸில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் எடுத்துக் காட்டி இஸ்லாத்தில் இருக்கும் தீண்டாமையை வெளிப்படுத்தியிருந்தேன். இதற்கு மறுப்பு என்று கூறி முதலிரண்டு அம்சங்களைத் தவிர்த்து விட்டு முகம்மதை மட்டும் எடுத்துக் கொண்டு நீட்டி முழக்கியிருக்கிறார் பதிவர் சுவனப்பிரியன். அதுவும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை. எப்படி?
பதிவர் சுவனப்பிரியன் இரண்டு அம்சங்களில் முகம்மது குரைஷி குலத்துக்கு முதன்மைத்தனம் அளிக்கவில்லை என்று மறுத்திருக்கிறார். 1. குரைஷி குலத்துக்கு முதன்மைத்தனம் இல்லை என்று பல ஹதீஸ்களில் முகம்மது குறிப்பிட்டிருக்கிறார். எனவே, அதை குரைஷிகளுக்கான உரிமை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. 2. குரானின் கருத்துக்கு மாற்றமாக இருக்கும் ஹதீஸ்கள் யூதர்கள் திணித்த பொய் ஹதீஸ் என்று தான் கொள்ள வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் நான் மறுக்கிறேன்.
முகம்மது பல ஹதீஸ்களில் குரைஷிகளை அவர்கள் தங்களை முதன்மைப்படுத்தும் பழக்கங்களுக்காக கண்டித்திருக்கிறார். இதற்கு மாற்றமாக குரைஷிகளை முதன்மைப்படுத்துவது போல் முகம்மது கூறியிருந்தால் அது முரண்பாடு அல்லவா? என்கிறார் பதிவர் சுவனப்பிரியன். ஆனால் முகம்மது முரண்பட்டுக் கூறவே இல்லையா? ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். புஹாரி 587ல் முஆவியா அறிவிக்கிறார், அஸர் தொழுகைக்கு பின் 2 ரக் அத் சுன்னத் தொழுகை இல்லை, முகம்மது தடுத்திருக்கிறார். புஹாரி 591ல் ஆய்ஷா அறிவிக்கிறார். அஸருக்குப் பின்2 ரக் அத் சுன்னத் தொழுகையை முகம்மது தவறவிட்டதே இல்லை. நேரெதிரான பொருள் கொண்ட இந்த இரண்டு ஹதீஸ்களில் எது சரி எது தவறு? இன்னும் அனேக இடங்களில் முகம்மது இது போன்று முரண்பாடான ஹதீஸ்களை கூறியிருக்கிறார். இந்த அடிப்படையில் தான் குரைஷிகள் குறித்த ஹதீஸ்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக முகம்மது முரண்பட்டு கூறியிருப்பாரா? என்று புளகமடைவதெல்லாம் விவாதத்தில் போதுமானவையல்ல. குரைஷிகள் குறித்து கண்டிக்கும் ஹதீஸ்களில் இருப்பதென்ன? ஹஜ் சடங்குகளில் குரைஷிகள் ஒரு இடத்திலிருந்தும், ஏனையோர் வேறிடத்திலிருந்தும் கிளம்புவார்கள். இதை மாற்றி அனைவரும் ஒரே இடத்திலிருந்து கிளம்ப வேண்டும் என முறைப்படுத்துகிறார். அராபியர் என்றாலும் அராபியரல்லாதோர் என்றாலும், கருப்பர் என்றாலும், சிவப்பர் என்றாலும் அவர்களிடையே இறையச்சத்தைத் தவிர வேறு வித்தியாசம் ஒன்றுமில்லை எனும் குறிப்பாக இல்லாத பொதுவான தத்துவம், அடிமையாக இருந்தவரை படைத் தளபதியாக நியமிக்கிறார். திருடினால் என் மகளாக இருந்தாலும் தண்டனை உண்டு. போன்றவை தான். ஆனால் இவைகளெல்லாம் ஒரு ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு இருப்பவை தானேயன்றி சுவனப்பிரியன் விதந்தோதுவது போல் குரைஷிகளின் குல ஆதிக்கத்தை அடித்து நொருக்கும் நோக்கத்திலானவை அல்ல.
குரைஷிகளின் குல ஆதிக்கம் குறித்து மிகை மதிப்பு ஏற்படுத்துவதற்காக ஒரு தவறான வரலாற்றுத் தகவலையும் சுவனப்பிரியன் சொல்லியிருக்கிறார், \\\குறைஷிக் குடும்பத்தார் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித் தோன்றல்கள். இதன்படி கஅபாவை நிர்வகிக்கும் பொறுப்பைக் குரைஷிகள் தலைமுறை தலைமுறையாகப் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பங்களை தனித்துவமிக்க குடும்பங்களாக ஆக்கிக் கொண்டனர்/// இது தவறான தகவல். மக்கா நகரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வணிகத் தடங்களின் சந்திப்பு. இங்கு பல்வேறு கலாச்சாரங்களும், பலதரப்பட்ட மனிதர்களும் கலந்து பழகும் வாய்ப்புள்ள நகரம். ஆனால், இங்கு அரசமைப்பு என்று எதுவுமில்லை. அதற்கு மாறாக ‘மாலா’ எனும் அமைப்பு இருந்தது. இந்த ‘மாலா’ தான் சச்சரவுகளைத் தீர்க்கும் அமைப்பாக இருந்தது. இந்த ‘மாலா’வுக்கு யார் தலைவராக இருக்கிறார்களோ அவர்களிடமே கஆபா ஆலயத்தின் பொறுப்பும் இருக்கும். இந்தப் பொறுப்பு எந்த குலத்துக்கும் மரபு வழியாக நீண்டகாலம் இருந்ததில்லை. யார் படை வலிமை கொண்டிருக்கிறார்களோ அவர்களிடமே இருக்கும். இதை கைப்பற்றுவதற்காக போர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த வகையில் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வேறு குலத்தினரிடம் இருந்த காஅபாவை குஸை என்பவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். இந்த குஸைக்குப் பிறகு அவருடைய பேரன் ஹாஷிம் அந்தப் பதவியைப் பெறுகிறார். இந்த ஹாஷிம் தான் முகம்மதின் பாட்டனார். (பார்க்க நூல் இஸ்லாத்தின் தோற்றம் ஒரு சமூக பண்பாட்டியல் ஆய்வு. ஆசிரியர் எம்.எஸ். முகம்மது அனஸ்) ஆக இஸ்மாயில் வழித்தோன்றல்கள் எனும் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாக கஆபாவின் ஆதிக்கம் குரைஷிகளிடம் இருந்ததில்லை. அதேநேரம் தாங்களே கஆபாவின் பொறுப்பாளர்கள் எனும் ஆதிக்க எண்ணத்தில் சில பழக்கங்களைக் கொண்டிருந்த குரைஷிகளை முகம்மது தன்னுடைய நோக்கத்துக்காக ஒழுங்குபடுத்துகிறார்.
முகம்மதின் இந்த ஒழுங்குபடுத்துதலை தீண்டாமைக்கு எதிராக முன்மொழிய முடியுமா? அதை எப்படி அறிந்து கொள்வது? நடைமுறை வாயிலாகத்தான் அறிந்து கொள்ள முடியும். முகம்மது அதுவரை ஹிஜாஸ் பகுதியில் இல்லாதிருந்த அரசை புதிதாக நிறுவி அதன் மன்னனாகிறார். இந்த அரசின் மன்னராகத்தான் குரைஷிகளைத் தவிர வேறு யாரும் வர முடியாது என்று கூறுகிறார். அப்படியென்றால் முகம்மதுக்குப் பிறகு அந்த அரசுக்கு மன்னராக ஆனவர்கள் யாவர்? குரைஷிகளைத் தவிர வேறு யாருமில்லை. முகம்மதுக்குப் பிறகு அது உத்மானியப் பேரரசாக மிகப்பரந்த அளவில் விரிவடைகிறது. அந்த உத்மானியப் பேரரசுக்கு எத்தனை அன்ஸாரிகள் மன்னர்களாக இருந்துள்ளனர்? முதன்முதலாக அரசராக ஆன அன்ஸாரி யார்? எப்போது? பதில்கூற முடியுமா பதிவர் சுவனப்பிரியனால்? ஆகவே முகம்மது தன்னுடைய குலமான குரைஷி குல மேலாதிக்கத்தை விரும்பியிருக்கிறார் என்றும், அதேநேரம் ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவருவதற்காக சில கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறார் என்பதைத்தான் முரண்பாடான ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இதை மறுக்க முடியுமா சுவனப்பிரியனால்? அன்ஸாரிகள் யாருமே மன்னராகவில்லை என்பதே முகம்மது கூறிய அந்த ஹதீஸ் குரைஷிகளின் மேலாதிக்கத்தை நோக்கமாக கொண்டிருக்கிறது என்பதற்கும், இஸ்லாத்தில் தீண்டாமை இருக்கிறது என்பதற்கும் சாட்சியாக இருக்கிறது.
ஹதீஸ்களில் ஏற்கப்பட்டவை ஏற்கக்கூடாதவை என்று பிரிவுகள் உண்டு. சன்னிகள் முக்கியமான தொகுப்புகளாக கருதும் புஹாரி, முஸ்லீம் போன்றவற்றை ஷியாக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை. ஏன், ஹதீஸ்களையே ஏற்றுக் கொள்ளாத அஹ்லே குர் ஆனிகளும் உண்டு. இந்த இவர்களின் இலக்கணங்களுக்குள் புகுந்து ஏற்றுக் கொள்ளலாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஹதீஸ்களை நான் பகுத்துப் பார்ப்பதில்லை. ஹதீஸ்கள் என்பவை வரலாற்றுத் தகவல்கள். அதில் கலப்படங்கள் பல்லாயிரம் மடங்கு கலந்திருக்கிறது. எது சரியானது எது தவறானது என்று பிரித்தறிய முடியாதபடி அவை கலந்திருக்கின்றன. ஆனால் முகம்மதின் வாழ்வை அறிந்து கொள்ள தோராயமான நம்பகத்தன்மை மட்டுமே கொண்டவை என்றாலும் ஹதீஸ்களைத் தவிர வேறு வழியில்லை. இதில் இஸ்லத்தின் ஒரு பிரிவான சன்னிகளின் தொகுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் ஏனையவர்களின் தொகுப்புகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் என்னிடம் பாகுபாடு இல்லை. பலவிதமான ஹதீஸ்களில் எது பொருத்தமாக இருக்கிறது என்றுதான் பார்க்க முடியும். இதுதான் ஹதீஸ்கள் குறித்த என்னுடைய பார்வை. ஆனால், பதிவர் சுவனப்பிரியன் இந்த பேதங்களை சன்னிகளின் பார்வையில் இருந்து மட்டுமே பார்த்து முடிவுகளை வந்தடைகிறார். அதனால்தான் அவை தவறாக இருக்கின்றன.
விசயத்துக்கு வருவோம், முகம்மது குரைஷிகளின் ஆதிக்கத்தை விரும்பி கூறிய ஹதீஸை யூதர்களின் சதி என்கிறார் சுவனப்பிரியன். குரானின் கருத்துக்கு மாற்றமாக இருக்கிறது என்று அதற்கு காரணமும் கூறுகிறார். தன்னுடைய சொந்த முயற்சியால் ரஷ்யாவிலிருந்து அராபியாவுக்கு வந்து ஏழு லட்சம் ஹதீஸ்களுக்கு மேல் சேகரித்து, அவைகளை அலசிப்பார்த்து ஏழாயிரம் ஹதீஸ்களைத் தவிர ஏனையவற்றை பொய் என ஒதுக்கித் தள்ளிய இஸ்மாயில் புஹாரி என்பவருக்கு குறிப்பிட்ட அந்த ஹதீஸ் குரானின் கருத்துக்கு மாற்றமாக இருக்கிறது என்பது தெரியாதா? தெரியாமல் எப்படி தன்னுடைய தொகுப்பில் சேர்த்தார்? அல்லது குரானின் கருத்துக்கு மாற்றமாக இருந்தால் அந்த ஹதீஸை ஏற்கக்கூடாது என்று புஹாரிக்கு பிறகு தான் முடிவெடுக்கப்பட்டதா? யார் அந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தது? இப்போது எது சரியான ஹதீஸ் எது தவறான ஹதீஸ் என்பதற்கு விதிமுறைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவைகளைப் பயன்படுத்தி சரியான ஹதீஸ்களை மட்டும் வடிகட்டி தொகுத்து விடலாம் அல்லவா? ஏன் செய்ய மறுக்கிறார்கள்? ஏனென்றால் மதவாதிகள் விதிமுறைகள் என்று கூறுவதே குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.
ஒரு ஹதீஸ் சரியானது தானா என்று அறிவதற்கு முக்கியமான மூன்று விதிமுறைகளைக் கூறுகிறார்கள். அறிவிப்பாளர்கள் வரிசை சரியாக இருக்க வேண்டும். தவறான அறிவிப்பாளர்கள் என்று வகைப்படுத்தப் பட்டிருப்பவர்கள் யாரும் அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கக் கூடாது. குரானின் கருத்துக்கு எதிராக இருக்கக்கூடாது. இந்த மூன்று விதிகளுள் ஏதேனும் ஒரு விதி மீறப்பட்டிருந்தால் அது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று கூறுகிறார்கள். இந்த விதி முறைகள் எவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்று பார்ப்போம். எடுத்துக்காட்டாக, ஒரு ஹதீஸ் குரானின் கருத்துக்கு எதிராக இருக்கிறது என்று கொள்வோம். குரானின் கருத்துக்கு எதிராக இருக்கும் ஹதீஸ் சரியான அறிவிப்பாளர் வரிசையையும், தவறான அறிவிப்பாளர்களைக் கொண்டதாக இல்லாமலும் இருக்கிறது. அதாவது, சரியான அறிவிப்பாளர் வரிசையையும், தவறான அறிவிப்பாளர்களைக் கொண்டதா இல்லாமலும் இருக்கும் ஒரு ஹதீஸ் பொய்யான ஹதீஸாக இருக்க முடியும் என்றால், சரியான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டிருக்கிறது என்பதோ, அல்லது தவறான அறிவிப்பாளர்களைக் கொண்டிருக்கவில்லை என்பதோ அது சரியான ஹதீஸ் என்பதற்கு சான்றாகிவிட முடியுமா? இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலுக்குள் ஹதீஸ் தொகுப்புகள் மாட்டிக் கொண்டிருப்பதால் தான். தூய்மையான ஹதீஸ்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்து தொகுக்க முடியவில்லை. மேலும், அது மதவாதிகளுக்கு பதில்கூற முடியாத இடங்களில் தப்பிப்பதற்கும் உதவியாக இருக்கிறது. எனவே, முகம்மது கூறிய குரைஷிகளின் ஆட்சியதிகாரம் குறித்த ஹதீஸை அவ்வளவு எளிதாக பொய்யான ஹதீஸ் என்று ஒதுக்கித் தள்ள முடியாது. ஆகவே, இஸ்லாத்தில் தீண்டாமை இருக்கிறது என்பதை யூதர்களின் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று கூறி மறுக்க முடியாது. அதேநேரம் அது இந்தியப் பகுதியிலுள்ள தீண்டாமை வடிவத்தில் இல்லை என்பதே சரியான, பொருத்தமான முடிவு. மறுப்பு சொல்ல முடியுமா பதிவர் சுவனப்பிரியனால்?
சுவனப்பிரியனின் அடுத்த பதிவு பெண்களை உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்துவது குறித்து. இதில் பதிவர் சுவனப்பிரியன் இரட்டை வேடம் போடுகிறார் என்று தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறேன். கள்ளத்தனமாக அதற்கு பதில் கூற மறுக்கும் சுவனப்பிரியன் தன் பதிவில் இப்படி எழுதியுள்ளார், \\\கம்யூனிஷத்தின் அடிப்படைகளையே ஆட்டம் காணச் செய்யும் செயல்களை இவர் ஒதுக்கி விடுவாராம். கம்யூனிஷம் பெண்களை உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்தது. அதனை பார்த்து நமது மக்களும் பெண் விடுதலை என்று ஆண்கள் பார்க்கும் வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர். அதன் முடிவு என்னவாக இருந்தது? தினத் தந்தியின் வேலைக்குச் சென்ற பெண்களின் உள்ளக் குமுறலை பதிவாகக் கொடுத்திருந்தேன். இதற்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார்/// யார் ஓடி ஒழிவது? எது கம்யூனிசத்தின் அடிப்படை? இன்றைய முதலாளித்துவ உலகில் முதலாளித்துவ சுரண்டலுக்கு ஆளாகியும், முதலாளித்துவ சமூகத்தின் ஆணாதிக்க நுகத்தடியில் சிக்கி வதைபடும் ஒரு பெண்ணின் பேட்டி தினத்தந்தியில் வெளியாகியிருக்கிறதாம். இது கம்யூனிசத்தின் அடிப்படையை ஆட்டம் காணச் செய்கிறதாம். என்ன கேலிக்கூத்து இது? மூளையை ஒரு விழுக்காடேனும் பயன்படுத்தும் ஒருவரால் இவ்வாறு கூற முடியுமா? இதற்கு பதில் கூற வேண்டியது யார்? முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களும், ஆணாதிக்கத்தை ஆதரிப்பவர்களும், இந்த இரண்டின் வடிவமாகவும் இருக்கும் மதவாதிகளும் பதில் கூற வேண்டிய இடம் இது.
நான் கடந்த பதிவில் மிகத் தெளிவாக இது குறித்து எழுதியிருக்கிறேன். அதற்கு பதில் கூற முடியாமல், செலக்டிவ் அம்னீஷியா வந்தவரைப் போல் நடிக்கும் பதிவர் சுவனப்பிரியனின் காரியவாத மறதியை முன்னிட்டு மீண்டும் ஒரு முறை அதைக் கூறுகிறேன். ஓடி ஒழியாமல் பதில் கூறுவாரா சுவனப்பிரியன்.
இஸ்லாம் பெண்கள் வேலைக்குச் செல்வதை அனுமதிக்கிறதா? இல்லையா? ஆம் அனுமதிக்கிறது என்றால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. இதை இஸ்லாம் உணர்ந்திருக்கிறது என்பதன் பொருள் என்ன? சுவனப்பிரியன் என்ன சொல்ல வருகிறார்? ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வித்தியாசம் இருக்கிறது. எனவே, பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்கிறாரா? அன்றிலிருந்து இன்று வரை கிராமப்புறங்களில் பெண்கள் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்ன பாதிப்பை பெற்று விட்டனர்? இன்று தொழிற்சாலை உற்பத்திகளிலும் பெண்கள் பெருமளவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்ன பாதிப்பை பெற்று விட்டனர்? மெய்யாகவே பதிவர் சுவனப்பிரியன் இரட்டை வேடம் போடவில்லை என்றால் பதில் கூறட்டும். பெண்கள் வேலைக்குச் செல்வது சரியா? தவறா? சரி என்றால் கம்யூனிசம் பெண்களை வேலை செய்யச் சொன்னது தவறில்லை என்றாகும். தவறு என்றால் இஸ்லாம் பெண்களுக்கு வேலை செய்ய அனுமதி அளித்தது சரியில்லை என்றாகும். பதிவர் சுவனப்பிரியன் தான் இரட்டை வேடம் போடவில்லை என்று இங்கு நிரூபிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பெண்கள் வேலைக்குச் செல்வது குறித்து கம்யூனிசம் என்ன சொல்கிறது? பெண்கள் ஆண்களைப் போலவே உற்பத்தி வேலைகளில் ஈடுபடாதவரை அரசியல் ரீதியாகவும் சமூக குடும்ப ரீதியாகவும் பெண்கள் விடுதலையடைய முடியாது என்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மனரீதியாக வித்தியாசம் இருக்கிறது என்பது பொய். இதை எந்த அறிவியலாளரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் உடல் ரீதியாக சில வித்தியாசங்கள் இருக்கின்றன. இது ஆணைவிட பெண் உடல் வலுவிலோ, திறனிலோ அறிவிலோ எந்த வித குறையையும் ஏற்படுத்தாது. தவிரவும், ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் இடையே கூட உடல் ரீதியாக வித்தியாசங்கள் இருக்கின்றன. அப்படி என்றால் அந்த இன்னொரு ஆண் வேலை செய்யக் கூடாது என்று கூறுவார்களா? உற்பத்தி, உற்பத்திக் கருவிகள், உற்பத்தி உறவுகள், உற்பத்தி உறவுகளுக்கிடையேயான பகிர்மானம் இவைதான் உலகம் இயங்குவதின் அச்சாணி. இதில் உலகின் சரிபாதியினரான பெண்களை உற்பத்தியிலிருந்து அன்னியப்படுத்தியதன் மூலமே பெண்களை அடிமைகளாக்கி வைத்திருக்கின்றனர் ஆண்கள். ஆதியில் சமூகத்துக்கும் உற்பத்திக்கும் தலைமை தாங்கியது பெண்களே என்பது தான் வரலாறு. இதை மாற்றி ஆண்கள் உற்பத்திக்கும் பெண்கள் வீட்டு குடும்ப பராமரிப்புக்கும் என்று மாற்றியதன் மூலமே ஆண் பெண்ணை பலவீனப்படுத்தினான். இதை மீளத் திருத்தி ஆணும் பெண்ணும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் ஈடுபட வேண்டும். குடும்பம் சார் வேலைகளிலிருந்தும் குழந்தை வளர்ப்பிலிருந்தும் பெண்ணை விடுவித்து அதை அரசின் கடமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று கம்யூனிசம் கூறுகிறது. இது தான் சரியானது, மதவாதிகள் கூறுவதெல்லாம் பெண்ணை அடிமைத்தளையில் கட்டி வைப்பது. அவ்வாறல்ல என பதிவர் சுவனப்பிரியன் கருதினால் கம்யூனிசம் குறித்தும் இஸ்லாம் குறித்தும் இன்னும் கொஞ்சம் ஆழமாக கற்றுக் கொண்டு வரட்டும். நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
எல்லாம் சரி இப்போது ஏன் கம்யூனிஸ்டுகள் பெண்களை குறிப்பாக தங்கள் மனைவிகளை உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் குடும்ப பராமரிப்பிலேயே விட்டு வைத்திருக்கின்றனர்? பெண்களும் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்பது சமூகத்திலிருந்து தனிநபருக்கு வர வேண்டியது. தனிநபரிலிருந்து சமூகத்துக்கு அல்ல. அதாவது பெண்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்றால் குடும்பப் பராமரிப்பு குழந்தை வளர்ப்பு போன்ற வேலைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட வேண்டும். அதாவது இந்த வேலைகளை அரசு ஏற்றுக் கொள்வது வரை பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுவது அவர்களுக்கு இரட்டைச் சுமையாகவே இருக்கும். இன்று வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலையும் செய்துவிட்டு குடும்பப் பராமரிப்பிலும் குழந்தை வளர்ப்பிலும் ஈடுபடும் கொடுமையை உலகம் கண்டு கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாத்திலும் இதில் விதிவிலக்கு இல்லை. ஆனால் கம்யூனிஸ்டுகள் எதை மேலிருந்து கீழாக செய்ய வேண்டும், எதை கீழிருந்து மேலாக செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதனால் தான், கம்யூனிஸ்டுகள் இன்றைய சமூகத்தில் பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்துவதில்லை. இது கம்யூனிஸ்டுகளின் இரட்டை நிலையல்ல, சரியான நிலை. மட்டுமல்லாது எந்த கம்யூனிஸ்டும் ஆணாதிக்கமாக பெண்களை அடிமைப்படுத்துவதில்லை. கடந்த பதிவில் சுவனப்பிரியன் குறிப்பிட்டாரே, என் மனைவி கூட கம்யூனிசக் கொள்கையில் இல்லை என்று. ஆணின் முடிவை பெண்மீது என்றுமே கம்யூனிஸ்டுகள் திணிப்பதில்லை என்பதற்கு இதுவே சான்று. புரிந்து திருந்தும் வரை விளக்கமளிக்கிறோம், காத்திருக்கிறோம். அவர்கள் உண்மைகளைக் கண்டு திரும்புகிறார்கள். ஆனால் இஸ்லாமிய மதவாதிகளோ பெண்களை அடிமைப்படுத்த எண்ணுகின்றனர். தங்கள் முடிவை வலிந்து திணிக்கின்றனர். இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவே இதற்குச் சான்று. இதை சரியான கோணத்தில் புரியாவிட்டால் இப்படித்தான் பதிவர் சுவனப்பிரியனைப் போல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் நிலையை அடைய வேண்டியதிருக்கும்.
அடுத்ததாக இரண்டாம் பதிவில் இன்னொன்றையும் கூறியிருக்கிறார் சுவனப்பிரியன், உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி கூறியதை எடுத்துப் போட்டு ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே மனரீதியாக வேறுபாடு இருக்கிறது என்று கூறியதாக சூடம் அணைத்து சத்தியம் செய்கிறார் சுவனப்பிரியன். பாவம், இந்து நாளிதழில் வந்ததை படித்துக்கூடப் பார்க்காமல் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து விட்டார் சுவனப்பிரியன். \\\ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மனரீதியாக வித்தியாசம் இருக்கிறது என்பது பொய். இதை எந்த அறிவியலாளரும் ஏற்றுக் கொள்வதில்லை/// என்று நான் எழுதியிருந்ததையே பேராசிரியர் எட்வர்ட் காஃபி யும் கூறியிருக்கிறார். அவர் தெளிவாக இப்படி கூறியிருக்கிறார், \\\இந்த உடற் கூறு ரீதியான வேறுபாடு ஆண் பெண்களின் சமுதாய நிலையினாலும் தோன்றி இருக்கலாம். சமூகத்தில் ஆண்கள் தேடக் கூடியவர்களாகவும் (hunter) அனைத்தையும் திரட்டக் கூடியவர்களாகவும் (gatherer), பெண்கள் குழந்தைகளை சுமக்கக் கூடியவர்களாகவும் குடும்பத்தை வீட்டை கவனிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கும் என பேராசிரியர் காஃபி குறிப்பிடுகின்றார்/// நான் என்ன கூறியிருந்தேன், \\\உற்பத்தி, உற்பத்திக் கருவிகள், உற்பத்தி உறவுகள், உற்பத்தி உறவுகளுக்கிடையேயான பகிர்மானம் இவைதான் உலகம் இயங்குவதின் அச்சாணி. இதில் உலகின் சரிபாதியினரான பெண்களை உற்பத்தியிலிருந்து அன்னியப்படுத்தியதன் மூலமே பெண்களை அடிமைகளாக்கி வைத்திருக்கின்றனர் ஆண்கள். ஆதியில் சமூகத்துக்கும் உற்பத்திக்கும் தலைமை தாங்கியது பெண்களே என்பது தான் வரலாறு. இதை மாற்றி ஆண்கள் உற்பத்திக்கும் பெண்கள் வீட்டு குடும்ப பராமரிப்புக்கும் என்று மாற்றியதன் மூலமே ஆண் பெண்ணை பலவீனப்படுத்தினான். இதை மீளத் திருத்தி ஆணும் பெண்ணும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் ஈடுபட வேண்டும். குடும்பம் சார் வேலைகளிலிருந்தும் குழந்தை வளர்ப்பிலிருந்தும் பெண்ணை விடுவித்து அதை அரசின் கடமையாக மாற்றியமைக்க வேண்டும்/// என்ன சொல்வார் சுவனப்பிரியன்? என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று படித்து புரிந்து கொள்ளக் கூட முடியாத நிலையிலா பதிவர் சுவனப்பிரியன் இருக்கிறார். பரிதாபம் தான்.
பதிவர் சுவனப்பிரியனுக்கு நான் கூறிக் கொள்ள விரும்புவது இதைத்தான், ஒரு விசயம் கூறப்பட்டால் அதை உள்வாங்கி அதை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? என்பதை தெளிவாக முன்வைத்து வாதிடுங்கள். உங்களுக்கு சாதகமான அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு பாதகமானவற்றை கண்டுகொள்ளாமல் விடுவீர்கள் என்றால் அது விவாதமாக இருக்காது. எந்த ஒன்றையும் அது சரியா தவறா என்று தான் பார்க்க வேண்டும். அப்படி பார்த்திருந்தால் உங்கள் பதிவுகள் இப்படி தெளிவில்லாமல் இருந்திருக்காது. மீண்டும் கூறுகிறேன், என்னுடன் விவாதிக்க விருப்பமில்லை என்றால் வெளிப்படையாக கூறிவிடுங்கள். உங்களுடன் விவாதித்தே ஆக வேண்டும் என்று எனக்கு எந்த வித நிர்ப்பந்தமும் இல்லை. ஆனால் விவாதம் என்று வந்து விட்டால் நான் விடுவதில்லை. இந்த அடிப்படையில் தான் அந்த சவாலை நான் உங்களிடம் விடுத்தேன். எனக்கு உறுதிமொழி தாருங்கள். உங்களை நான் கம்யூனிஸ்டாக மாற்றிக் காட்டுகிறேன். அல்லது உங்களுக்கு நான் உறுதிமொழி தருகிறேன் என்னை மீண்டும் முஸ்லீமாக மாற்றிக் காட்டுங்கள். அவ்வளவு தான். இந்தத் தெளிவு இருந்தால் தான் எந்த விவாதமும் முடிவை எட்டும். நீங்கள் முடிவை எடூம் விவாதம் நடத்த விரும்புகிறீர்களா? தெளிவுபடுத்தி விடுங்கள். அப்படியில்லாமல் தினத்தந்தியில் பெண் பேட்டி, வாரத்தந்தியில் ஆண் பேட்டி என்று ஏதாவது எழுதிக் கொண்டிருந்தால் அதனால் எந்தப் பலனும் இல்லை. இனி நீங்கள் எழுத நினைப்பதை – அது கம்யூனிச அவதூறு என்றாலும் – தாராளமாக எழுதிக் கொள்ளலாம். ஏனென்றால் இலவசமாய் இணையமும், நேரமும் கிடைக்கிறது, ஏதாவது எழுதி விட்டுப் போவோம் என்று பொழுது போக்கிக் கொண்டிருக்கும் உங்களோடு நான் ஏன் பொருதிக் கொண்டிருக்க வேண்டும்? ஆகவே, நான் இனி உங்களுக்கு எழுதுவதும், எழுதாமல் இருப்பதும் உங்கள் கைகளில்.
முந்திய பதிவுகள்
1. கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்
2. சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி
3. தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்
அஞ்ஞான் என்று ஒருவரோடி வருவாரே, ஆளைக் காணம்
இருக்கும் அறிவை கொண்டு பேசினால் அறிவற்றவன்,நாத்திகவாதி.
இல்லாததையும் அனுபவத்துக்கு எட்டாதவற்றையும் நம்பி புளுகினால் அறிவுடையவன் ,ஆன்மீக வாதி.
இது தான் இங்குள்ள அற்புதம்.
குடிக்க தண்ணீர் இருக்காது, உறங்க நல்ல இடம் இருக்காது, வாழ்வுக்கு,வேலைக்கு வழி இருக்காது, சுவாசிக்க நல்ல காற்று இருக்காது, இதெல்லாம் இருந்தால் கடவுள் எதற்கு ? புளுகு எதற்கு? இதை விடுத்து எங்கோ உள்ள கடவுள் வேண்டும் என்று கூச்சல் ,வெறி ..
கெட்டவன்,
அஞ்சான் அடிக்கடி வந்து கொண்டுதான் இருக்கிறார். உங்களுக்கும் கூட பதில் எழுதியிருக்கிறார். நான் தான் வெளியிடவில்லை. காரணம் இன்னும் அவர் அதே பாணி நரகல் நடையை தொடர்கிறார். நாகரீகமாக பேசுங்கள் விவாத நேர்மையோடு வாருங்கள் என்று கூறிய பிறகும் அவ்வாறேஅவர் தொடர்வதால் தான் தடுக்கப்பட்டுள்ளார். திருந்தினால் சரி. இல்லாவிட்டால் அவரின் மறுமொழிகள் வெளிவராது.