பொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்

உக்ரைன் செக்கோஸ்லாவாக்கியாவிடம் இருக்கும் போது ஏற்பட்ட பஞ்சத்தால் 15 000 குழந்தைகள் மரணமடைந்ததை சொல்லும் பத்திரிக்கை செய்தி

உக்ரைன் உண்மைகளை மறைக்கும் தமிழ் இந்துதொடர் – 2

தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க 

இத் தொடரின் முதல் பகுதியில் சோவியத் புரட்சியை, இந்தியாவில் சர்தார் வல்லபபாய் படேல் பல குறுநில மன்னர்களை இராணுவ பலத்தின் மூலம் மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்ததைப் போன்ற தோற்றம் கொண்டு வருவதற்கு பகீரதப் பிரயத்தனம்செய்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டியிருந்தோம். இதற்கு மேலும் வலு கூட்டுவதற்காக அத் தொடரின் இரண்டாவது பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்கள், \\\ரஷ்யப் புரட்சியின்போது (அதாவது சோவியத் யூனியன் உருவாகும் கால கட்டத்திலேயே) உக்ரைன் பகுதியினர் தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்று போராடினர். சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக விளங்க தங்களுக்கு சம்மதமில்லையென்று கூறினர். ஆனால் சோவியத் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பிரம் மாண்ட செம்படைக்கு முன் எண்ணிக்கையில் குறைந்த கிழக்கு உக்ரைனியர் எம்மாத்திரம்? அடக்கு முறையில் துவண்டனர். இணைப்பில் சேர ஒத்துக் கொண்டனர்/// அதாவது, சோவியத் யூனியன் தன்னுடைய படை வலிமையால் உக்ரைனை பணிய வைத்து தன்னுடன் இணைத்துக் கொண்டது என்று கூசாமல் எழுதியிருக்கிறார்கள். நோக்கியா நாடு என்று நினைவில் கொள்ளப்படும் பின்லாந்து சோவியத் யூனியனிலிருந்து எப்படி பிரிந்து தனிநாடானது எனும் வரலாறு தெரியுமா இவர்களுக்கு?

 

ஜார் மன்னனின் ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாகத் தான் பின்லாந்து இருந்தது. ஆனாலும், புரட்சிக்குப் பின் சோவியத் யூனியனுடன் இணைந்திருக்க பின்லாந்து விரும்பவில்லை. காரணம், சோவியத்தின் அடிப்படையான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, தோழர் லெனின் ரஷ்ய பேரினவாதிகளின் எதிர்ப்பையும் மீறி, பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பின்லாந்து தனிநாடாக ஆவதற்கான அனுமதியை கொண்டு வந்தார். இந்த சுய நிர்ணய உரிமை உக்ரைனுக்கு பொருந்தியிருக்காதா? ‘பிரம்மாண்ட செம்படைக்குமுன்னால் பின்லாந்து பெரும்படையை கொண்டிருந்தது என்று தமிழ் இந்து கருதுகிறதா? அல்லது நோக்கியா மோகத்தில் இருந்த தமிழர்கள் பின்லாந்து வரலாற்றை அறிந்திருக்க மாட்டார்கள் என்று நினைத்ததா?

 

ஒரு பொய்யைக் கூறினால் மட்டும் போதாது. வாசகர்கள் அந்தப் பொய்யை அறிந்திடா வண்ணம் திசை மாற்றி கொண்டு சென்றாகவும் வேண்டும் எனும் அவசியம் இருக்கிறதல்லவா? அதனால் தான் தமிழ் இந்து ஒரு கேள்வியை எழுப்பி அதற்கான பதிலின் மூலம் நகர்த்திச் செல்கிறது. உலகின் போக்கை தீர்மானிக்கவல்ல ஒரு வல்லரசின் பகுதியாக இருப்பது நல்லது தானே, பின் ஏன் உக்ரைனிய மக்கள் சோவியத் யூனியனிடமிருந்து பிரிந்து செல்ல விரும்பினார்கள்? எனும் கேள்வியை முன்வைக்கிறது. இது முன்பின் காலப் பகுதிகளை பொருத்தமற்று குழப்பும் நோக்கில் எழுப்பப்பட்ட கேள்வி. எப்படியென்றால், முதலாம் உலகப் போர் காலகட்டத்தில் தான் ரஷ்யாவில் புரட்சி நடந்தது. இந்த காலகட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு தலைமை தாங்கிய இங்கிலாந்து அதன் தகுதியை அமெரிக்காவிடம் இழந்த காலகட்டம். இதற்கு முந்திய ஜாரின் ரஷ்யப் பேரரசோ, புரட்சிக்குப் பின்னான லெனின் தலைமையிலான சோசலிச அரசோ பொருளாதாரத்தில் தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில் இருந்தது. சோவியத்தை ஆக்கிரமிக்க துடித்துக் கொண்டிருந்த ஜெர்மனியுடன் தன்னுடைய நலனை விட்டுக் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு பலவீனமான நிலையில் இருந்த நாடு. இந்த நிலையைத் தான் உலகின் போக்கைத் தீர்மானிக்கும் வல்லரசுஎன்னும் சொல்லால் குறிப்பிடுகிறது தமிழ் இந்து. சோவியத் யூனியன் அமெரிக்காவிக்கு நிகரான வல்லரசாக மாறியது பின்னர். இந்த இரண்டு வெவ்வேறு காலப் பகுதிகளை ஒன்றிணைத்து தான் அந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறது தமிழ் இந்து. இதைக் கூட பிரித்தறிந்து கொள்ள இயலாதவர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதினால் அது என்ன தரத்தில் இருக்கும்?

 

சரி, அந்தக் கேள்விக்கான பதில் என்ன? \\\உலகின் போக்கை தீர்மானிக் கவல்ல ஒரு சூப்பர் பவரின் பகுதியாக இருப்பது நல்லது தானே. பிறகு எதற்காக உக்ரைன் மக்கள் சோவியத் யூனியனிலிருந்து விடுபட விரும்பினார்கள்? இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அவர்கள் கலாச்சாரப் பின்னணி ரஷ்யப் பகுதியிலிருந்து மிக மிக வேறுபட்டிருந்தது/// இப்படித் தொடங்கும் தமிழ் இந்துவின் பதில் படிப்படியாக உக்ரைனில் பஞ்சம், இனப் படுகொலை என்று முதலாளித்துவத்தின் கம்யூனிசத்துக்கு எதிரான அவதூறில் சென்று தஞ்சமடைகிறது. அதாவது, உக்ரைன் பகுதி விவசாயம் செழித்த பகுதி, அங்கு நிறைய பணக்கார விவசாயிகள் இருந்தார்கள். அவர்களின் செல்வாக்கு அதிகரித்தால் அவர்கள் தனிநாடு கேட்பார்கள். அவர்கள் தனிநாடு கேட்டால் சோவியத் யூனியனே சிதறிப் போகுமே என்று கவலைப்பட்ட ஸ்டாலின், பணக்கார விவசாயிகள் பதுக்கி வைக்காமல் கண்காணிக்கிறோம் எனும் போர்வையில் இராணுவத்தை அனுப்புகிறார். இராணுவம் பணக்கார விவசாயிகளை சைபீரியப் பகுதிக்கு கடத்திவிட அங்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். இதைத்தான் இனப் படுகொலை என்று சரித்திர ஆசிரியர்கள் வர்ணிக்கிறார்கள். இதுதான் தமிழ் இந்து வர்ணிக்கும் உக்ரைன் மக்கள் பிரிந்து போக விரும்பியதற்கான கலாச்சார பின்னணி.

 

indian famine
இந்தியப் பஞ்சம்

 

வாசகர்கள் இதை தெளிவாக கவனிக்க வேண்டும். ரஷ்யாவில் புரட்சி நடந்து சோவியத் யூனியன் அமைகிறது. இந்த சோவியத் யூனியனில் அங்கம் வகிக்க விரும்பாத உக்ரைனியர்கள் தனிநாடு கோருகிறார்கள். இதை செம்படை தன் வலிமை மூலம் அடக்குகிறது. வேறு வழியில்லாமல் சோவியத் யூனியனில் நீடிக்கிறார்கள். ஏன் அவர்கள் சோவியத் யூனியனுடன் இணைந்திருக்க விரும்பவில்லை என்றால் லெனினுக்கு பின் வந்த ஸ்டாலின் விவசாயிகளை விவசாயிகளை சைபீரியாவுக்கு கடத்தி பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தி உக்ரைனிய மக்களை கொன்று குவித்ததனால் ரஷ்யாவின் மீது வெறுப்புற்ற உக்ரைனிய மக்கள் லெனின் தலைமையிலான சோவியத் யூனியனுடன் இணைய விரும்பவில்லை. எப்படி இருக்கிறது? காதில் பூச்சுற்றுவது என்பதையெல்லாம் தாண்டி காதில் பூந்தோட்டமே வளர்த்துப் பாரமரிப்பது என்று சொல்லலாமா? பொய்யைக் கூட ஒழுங்காக சொல்லத் தெரியாத இவர்கள் வரலாறு எழுத வந்தது ஏன்? வேறென்ன, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கம்யூனிசத்துக்கு எதிரான அவதூறுகளை பரப்புவதான்,

 

1930 களில் உக்ரைனில் நடந்தது என்ன? அகண்ட ஜெர்மனி கனவுடன் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக குறிப்பாக உக்ரைனுக்கு எதிராக நாஜி ஹிட்லர் நடத்திய உளவியல் பிரச்சாரம் தான் சோவியத் யூனியனில் பஞ்சம், லட்சக்கணக்கான மக்கள் படுகொலை என்பதெல்லாம். அது அமெரிக்க உதவியுடன் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் என்ன? கேரத் ஜோன்ஸ், ராபர்ட் கான்குவெஸ்ட், ஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல், சோல்சனிட்சன், வில்லியம் ஹெர்ஸ்ட், தாமஸ் வாக்கர் போன்ற எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும், பத்திரிக்கை அதிபர்களும் எழுதிய, வெளியிட்டவை தான் இன்றுவரை முதலாளித்துவ அடிவருடிகளாலும், மதவாதிகளாலும் ஆதாரமாக எடுத்துக் காட்டப்படுகின்றன. இவர்களில்,

 

கேரத் ஜோன்ஸ் ஹிட்லரால் சோவியத் யூனியனுக்குள் கட்டுக்கதைகளை உருவாக்கும் நோக்கத்தில் அனுப்பப்பட்டவர். இதை அவரே பின்னாளில் ஒப்புக் கொண்டார்.

 

ராபர்ட் கான்குவெஸ்ட் கலிப்போர்னிய பல்கலைகழகத்தின் பேரசிரியர். பிரிட்டன் ரகசிய உளவுத் துறையிலிருந்து பணம் பெற்று வரும் ஒரு உளவாளி, எழுத்தாளர் என்று 1978 ஜனவரி 27ந் தேதியிட்ட பிரெஞ்சு கார்டியன் பத்திரிக்கை அம்பலப்படுத்தியது.

 

ஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல் இவர்கள் மூவரும் பிரிட்டன் உளவுத்துறையிடம் பணம் பெற்றுக் கொண்டு எழுதிய கைக்கூலி எழுத்தாளர்கள் என்பது 1996ல் பிரிட்டிஷ் ஆவணக் காப்பகத்தை திறந்து காட்டிய போது அம்பலமானது.

 

சோல்சனிட்சன் நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர். நோபல் பரிசு எதற்காக வழங்கப்படுகிறது, நோபல் பரிசு வழங்கப்படுவதன் அரசியல் என்ன என்பது இன்று எல்லோருக்கும் அறிந்த உண்மை. அமெரிக்கா மீண்டும் வியட்நாமை தாக்க வேண்டும், அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகமான பீரங்கி மற்றும் போர் விமானங்களை சோவியத் யூனியன் வைத்திருக்கிறது, அதே போல அணு ஆயுதங்களையும் வைத்திருக்கிறது. அதாவது அமெரிக்காவில் இருப்பதை விட மூன்று அல்லது ஐந்து மடங்கு அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோவியத் யூனியன் வைத்துள்ளது. ஆகவே அதற்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்த சோவியத் யூனியன் எழுத்தாளர் பிரச்சாரம் செய்தார். எழுத்தாளருக்கு எதற்கு ஆயுதங்களை பற்றிய கவலை? வேறென்ன கம்யூனிச எதிர்ப்பும், அமெரிக்க அடிவருடித்தனமும் தான். இது போன்ற கைக்கூலித்தனங்களுக்காகத்தான் சோல்சனிட்சனுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

 

வில்லியம் ஹெர்ஸ்ட் அமெரிக்க பத்திரிக்கை அதிபர். உலகளாவிய தன்னுடைய பத்திரிக்கை மூலம் ஹிட்லருக்கு ஆதரவாக சோவியத் யூனியனுக்கு எதிராக மேற்பட்டவர்களின் கட்டுரைகளையும் எழுத்துகளையும் உலகமெங்கும் பரப்பியவர். இவைகள் அனைத்தும் கட்டுக் கதைகள் என்று கனடா நாட்டு பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் தன்னுடைய பித்தலாட்டம், பஞ்சம் மற்றும் பாசிசம் இட்லர் முதல் ஹார்வார்டு வரையிலான உக்ரைன் படுகொலைகள் என்கிற புனை கதைஎனும் நூலில் அம்பலப்படுத்தினார்.

 

தாமஸ் வாக்கர் உக்ரைனிய கட்டுக்கதைகளுக்கு புகைப்படங்கள் வழங்கியவர். இவர் உக்ரைனில் ஒருபோதும் கால் வைத்ததே கிடையாது. மாஸ்கோவில் கூட ஐந்து நாட்கள் மட்டுமே தங்கி இருந்தார். இந்த உண்மையை தி நேசன் என்ற அமெரிக்கப் பத்திரிக்கையின் மாஸ்கோ நிருபர் லூயிஸ் பிஷர் நிரூபித்தார்.

 

இந்த கைக்கூலிகளின் கட்டுக்கதைகள் தான் உலகமெங்கும் கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைப் பொழிகின்றன. சோவியத் யூனியனும், கம்யூனிசத்தோடு தொடர்பற்ற நேர்மையான எழுத்தாளர்களாலும், ஆய்வாளர்களாலும் இவைகள் அனைத்தும் பொய் என்றும், உள்நோக்கத்துடன் புனையப்பட்டவை என்றும் அப்பட்டமாக அம்பலப்படுத்தப் பட்டிருக்கின்றன. சோவியத் மீதான புனைவுகளுக்கு எதிராக உண்மைகளை வெளிக் கொண்டுவந்த முதலாளித்துவ ஊடகவியலாளர்களின் பட்டியல் டக்ளஸ் டோட்டில், லூயிஸ் பிக்ஷர், டி.என்.பிரீத், அன்னா லூயி ஸ்ட்ராங், மைக்கேல் சேயர்ஸ், ஆல்பர்ட் ஐ கான், ஹெச்.ஜி. வெல்ஸ், ஹென்றி பார்பஸ். இதன் பின்னரும் அதே அவதூறுகளை தூக்கிபிடிக்கிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் என்ன என்பது தான் இங்கு எழுப்ப வேண்டிய கேள்வியே தவிர உக்ரைன் பிரச்சனை ஒரு முகாந்திரம். அவ்வளவு தான்.

 stalin ukraine

1930 களில் உக்ரைனில் நடந்தது என்ன? ஸ்டாலின் காலத்தில் பல ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. தொழிற்துறை, விவசாயத்துறை முன்னேற்றத்திற்காக தன்னிறைவை எட்டும் வண்ணம் திட்டமிட்ட உற்பத்தி பெருக்கப்பட்டது. அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பஞ்சம் தொடர் கதையாக இருந்தது. பஞ்சத்தினால் பாதிக்கப்படாத ஐரோப்பிய நாடுகள் எதுவுமில்லை எனலாம். நோர்வே முதல் இத்தாலி வரையில், அயர்லாந்து முதல் ரஷ்யா வரையில், பஞ்சம் எல்லா நாடுகளிலும் தலைவிரித்தாடியது. இந்தியாவும் இந்த பஞ்சத்துக்கு தப்பவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சம், இரண்டு மில்லியன் மக்களை பட்டினிச் சாவுக்குள் தள்ளியது. ஆனால் சோவியத் யூனியனில் ஏற்பட்ட பஞ்சத்துக்கு மட்டும் தோழர் ஸ்டாலினும், கம்யூனிசமும் பொறுப்பாக்கப்பட்டன. இந்த பஞ்சத்துக்கு எதிராக ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை தான் பதுக்கல்காரர்களை கைது செய்தது, உக்ரைனின் பணக்கார விவசாயிகளோ தங்களின் கோதுமை சோவியத் அரசுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக வயல் வெளிகளை தீயிட்டு எரித்தார்கள். இந்த பதுக்கல்காரர்களையும், அக்கிரமக்காரர்களையும் கைது செய்ததை தான் வெள்ளை அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களை அந்தமானுக்கு கைது செய்து அனுப்பியதோடு ஒப்பிடுகிறது தமிழ் இந்து. இப்படிப்பட்ட கொடூரர்களை ஒரு அரசுத் தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் தோழர் ஸ்டாலின் செய்தார்.

 

சோவியத் யூனியனை இரும்புத்திரை நாடு என்று இன்றளவும் கூறி வருகிறார்கள். ஆனால் மாபெரும் சதி வழக்குநடந்த போது உலகின் அனைத்து நாடுகளுக்கும் சோவியத் யூனியன் சார்பில் வழக்கை பார்வையிட பிரதிநிதியை அனுப்புமாறு கோரிக்கை அனுப்பப்பட்டது. அமெரிக்கா உப்பட பல நாடுகள் பிரதிநிதிகளை அனுப்பின. அத்தனை பேரும் இது போன்று வெளிப்படையான ஒரு விசாரணையை நாங்கள் கண்டதில்லை என்றனர். அதற்கு முன்பும் பின்பும் இப்படி ஒரு வெளிப்படையான விசாரணை உலகின் எந்த நாட்டிலும் நடந்ததில்லை. ஆனாலும் சோவியத் யூனியன் என்றால் இரும்புத்திரை நாடு என்று தான் இன்றும் அழைக்க விரும்புகிறார்கள். என்றால் கம்யூனிசத்தைக் கண்டு அவர்கள் முதலாளித்துவவாதிகள் என்றாலும் மதவாதிகள் என்றாலும் அஞ்சுகிறார்கள் என்பதே இதன் பொருள்.

 

இந்த அச்சம் தமிழ் இந்துவுக்கும் இருக்கிறது. அதனால் தான் அது பொய்களின் மேல் பொய்களாக அடுக்கிக் கொண்டே செல்கிறது. \\\சோவியத் யூனியன் உழைப்பாளிகளின் சொர்க்கம் என்ற இமேஜ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் உக்ரைனில் நடந்த அராஜகம் எப்படியோ வெளியில் கசிய அது வெளி உலகுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. சோவியத் யூனியன் அரசு அவசர அவசரமாக உக்ரைனில் யாரும் பசியால் இறக்கவில்லை. நோய்களால்தான் இறந்தனர் என்று சாதித்தது/// சோவியத் யூனியன் சர்வாதிகாரமும் கொடூரங்களும் நிறைந்திருக்கும் இரும்புத்திரை நாடு என்று தான் ஊடகங்க்ளை கையில் வைத்திருக்கும் முதலாளிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் பொய்களுக்கு விளக்கம் கொடுப்பது தான் சோவியத் யூனியன் செய்திப் பிரிவின் முழுநேர வேலையாக இருந்தது. இதைத்தான் உழைப்பாளர்களின் சொர்க்கமெனும் இமேஜ் இருந்ததாகவும், உண்மை வெளிவந்து மக்கள் அதிர்ச்சியடைந்ததாகவும், அதை சமாளிக்க நோய்களால் தான் இறந்தனர் என்று சாதித்ததாகவும் திரித்து எழுதுகிறது தமிழ் இந்து.

 

உக்ரைன் குறித்த முந்திய அவதூறுகளைப் போலவே இன்றைய பிரச்சனை குறித்தும் உண்மைகளை மறைத்து அவதூறு செய்துவருவதை தொடர்ந்து பார்ப்போம்.

இத் தொடரின் முந்திய பகுதி

1. உக்ரைன் உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

4 thoughts on “பொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்

  1. அச்சம் தமிழ் இந்துவுக்கும் இருக்கிறது. அதனால் தான் அது பொய்களின் மேல் பொய்களாக அடுக்கிக் கொண்டே செல்கிறது

  2. சரி சோவியத் ஏன் சிதறுச்சு அதக்கொஞ்சம் எழுதுங்களேன்

  3. நண்பர் துரை,

    உங்கள் கேள்விக்கு விரிவான விளக்கமளிக்கும் வெளியீடு ஒன்று இருக்கிறது. உங்கள் மின்னஞ்சலிலிருந்து எனக்கு ஒரு அஞ்சல் அனுப்புங்கள் அவ்வெளியீடை அனுப்பி வைக்கிறேன். சுருக்கமாக பதிலளிக்க வேண்டுமென்றால், ஸ்டாலினுக்கு பிறகு வந்தவர்கள் சோசலிசத்தை முன்னெடுப்பவர்களாக இல்லை. மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்யுமளவுக்கு சென்றார்கள். சோவியத் யூனியன் சோசலிச நாடாக இல்லாமல் சமூக ஏகாதிபத்தியமாக மாறியது. பொருளாதாரம் முதலாளித்துவ பொருளாதாரமாக மாறி விட்டது, வெறும்கூடாக இருக்கும் சோசலிச வடிவம் மட்டும் எப்படி நீடிக்கும்? தெளிவாகச் சொன்னால் சோசலிசமாக இருந்தவரை பலமாக இருந்தது, முதலாளித்துவமாக மாறிய பிறகு நீடிக்க முடியாமல் பின்னடைவை சந்தித்தது.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s