வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்களே! நீங்கள் டி.என்.டி.ஜே வுக்கு பணம் அனுப்பவில்லையா?

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 4

saudi workers

உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பகுதி நான்கை படிக்க இங்கே சொடுக்குங்கள்.  4.1, 4.2

 

கற்பனை உரையாடலின் மூன்றாவது பகுதியைப் போலவே நான்காவது பகுதியிலும் கம்யூனிஸ்டின் வாதங்களே இடம் பிடித்திருக்கின்றன. என்றாலும், அதில் அரச பயங்கரவாதத்துக்கு துணை போகும் டி.என்.டி.ஜேவின் உளக்கிடையும் வாழைப் பழத்தில் ஏற்றப்படும் ஊசி போல் ஏற்றப்பட்டிருக்கிறது. அதை முஸ்லீம்கள் அடையாளம் கண்டு கொள்வது அவசியம். அதெப்படி, அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லீம்கள் அரச பயங்கரவாதத்துக்கு துணை போக முடியும்? பார்ப்பனிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்டவர்கள் அதே பார்ப்பனிய பயங்கரவாதத்துக்கு துணை போவதைக் கண்டதில்லையா?

 

முதலில் தலைப்பை கவனித்து விட்டு பின்பு அரச பயங்கரவாதத்துக்குள் செல்லலாம். அவர்களின் கற்பனை உரையாடல் நான்காவது பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்கள், \\\நாங்க பள்ளிவாசல் கட்ட நிதி கேட்டுப் போனா, தவ்ஹீத் ஜமாத்தா அவங்கள் உள்ளே விடாதேன்னு சொல்லுவாங்க .. .. .. உள்நாட்டிலே எங்களுக்கு இந்தக் கதியின்னா வெளிநாட்டிலிருந்து யார் நிதி கொடுப்பா?/// நாம் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறோம். முழுப் பொய்யைவிட குறை உண்மைகள் ஆபத்தானவை. முதல் பகுதியில் எழுதப்பட்டிருந்த டி.என்.டி.ஜே குறித்தான அறிமுகத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சற்றேறக் குறைய எண்பதுகளின் மத்தியில் தமிழகத்தில் தொடங்குகிறது ஜாக் எனும் பெயரிலான இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு. ஒப்பீட்டளவில் தென்னிந்தியாவை விட வடவிந்தியாவில் முஸ்லீம்கள் அதிகம். இஸ்லாமிய அறிஞர்களும் அதிகம். எண்பதுகளுக்கு முன்பு இஸ்லாமிய கொள்கை விளக்க நூல்களென்றால் அது வடவிந்தியாவில் எழுதப்பட்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாகத் தான் இருக்கும். இந்த நிலையில் வடவிந்தியாவில் தோன்றியிருக்காத இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தோன்றியது எங்கணம்?

 

இஸ்லாமிய மீட்டுருவாக்கம் என்பது துருக்கி, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் பரவிக் கொண்டிருந்த கம்யூனிஸத்தை தடுப்பதற்காக அமெரிக்காவின் சிந்தனையில் தோன்றி துருக்கியின் செய்யத் குதூப் மூலம் சௌதியின் பணபலத்தின் பின்னணியில் உருவான கருவி. எழுபதுகளின் இறுதியில் சௌதியின் உட்கட்டமைப்புக்கு அமெரிக்கா பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தேவைப்பட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனர். வடவிந்தியாவில் அதிகம் முஸ்லீம்கள் இருந்தாலும், வளைகுடா நாடுகளுக்கு தமிழக முஸ்லீம்களே அதிகம் சென்றனர். அதனால் தான் அந்த தொழிலாளர்களின் வழியாகத் தான் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் தமிழகத்தில் நுழைகிறது. அதனால் தான் வடவிந்தியாவை விட விரைவாய் தமிழகத்தில் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் தோன்றியது. தொடக்க கால ஜாக் குழுவினர் சௌதி அரேபியாவுக்கு அதிகம் பயணப்பட்டிருக்கின்றனர்.

 

அந்த இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு பலவாறாக பிரிந்து நிற்கும் இன்றைய நிலையில், அவ்வாறான பிளவு அனைத்திலும் பொருளாதாரம் அடிநாதமாக இருந்திருக்கிறது. இந்த வரலாற்றுப் பின்னணியுடன் தான் டி.என்.டி.ஜே வின் அந்தக் கூற்றை பார்க்க வேண்டும். இந்த மீட்டுருவாக்க குழுக்களின் தொடக்க காலத்தில் ஏற்கனவே தமிழகத்தில் இருந்த ஜமாஅத்கள் நிலப்பிரபுத்துவ தன்மை கொண்டவை. தர்ஹாக்களோடு உறவாடியவை. எல்லா ஊர்களிலும் பலம் வாய்ந்தவையாக இருந்தவை. இந்த தன்மைகளுக்கு எதிராகத்தான் இஸ்லாமிய மீட்டுருவாக்க குழுக்கள் தற்ஹாக்களுக்கு எதிராக, தொப்பி அணிய வேண்டியதில்லை, கூட்டுத் துஆ தேவையில்லை என கலகம் புரிந்து இளைஞர்களை ஈர்த்தன. இதனால் பழைய ஜமாஅத்கள் தங்கள் பள்ளிவாசல்களில் இவர்கள் நுழைய தடை விதித்தன. இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட மீட்டுருவாக்கக் குழுக்கள், தாங்களே சொந்தமாக நிலம் வாங்கி அதில் நவீன பள்ளிவாசல்களைக் கட்டிக் கொண்டன. இந்த வகையில் தமிழகம் முழுவதும் சில நூறு பள்ளிவாசல்கள் இந்தக் குழுக்கள் வசம் அசையா சொத்துகளாக இருக்கின்றன. மட்டுமன்றி, அசையும் சொத்துகளாக தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்தக் குழுக்களின் சார்பில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மிகக் குறுகிய காலகட்டத்தில், இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் பொருளாதார ரீதியில் இந்தக் குழுக்கள் வளர்ந்தது எப்படி?

 

பழைய ஜமாஅத்களில் நோன்பு காலங்களில் மாலையில் நோன்புக் கஞ்சி ஊற்றுவதற்க்குக் கூட அவ்வளவு சிரமப்படுவார்கள். ஆனால் இன்று இந்த மீட்டுருவாக்க குழுக்களின் பள்ளிவாசல்களில் நோன்பு காலங்களில் தினமும் பிரியாணி போடுகிறார்கள். பல்வேறு பெயர்களில் வட்டியில்லாக் கடன்கள் வழங்குகிறார்கள், வார இதழ் நடத்துகிறார்கள், ஒவ்வொரு கிளையிலும் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை பொதுக்கூட்டம், மாதத்தில் இரண்டு தெருமுனைக் கூட்டங்கள், ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். சராசரியாக மாதம் ஒரு சுவரொட்டி வண்ணத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் ஒட்டுகிறார்கள். இவைகளுக்கெல்லாம் இந்த மீட்டுருவாக்க குழுக்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது? இந்த மீட்டுருவாக்க குழுக்கள் பொது மக்களிடம் வசூல் செய்து கண்டிருக்கிறீர்களா? பின் எப்படி?

 

இந்த இடத்தில் ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம். இந்த மீட்டுருவாக்கக் குழுக்கள் அன்னிய நிதியில் செயல்படுகின்றன என்றோ, நிதி முறைகேடுகளில் ஈடுபடுகின்றன என்றோ நிரூபிப்பது என்னுடைய வேலை இல்லை. மாறாக, யதார்த்தத்தில் தாராள நிதியில் புழங்கிக் கொண்டு இந்தியாவிலேயே ஏழ்மையான குழு நாங்கள் தாம் என்று எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துவது மட்டும் தான். அந்த வகையில் இவர்களின் நிதிப் பின்னணி வளைகுடாவிலிருக்கும் தமிழக முஸ்லீம் உழைக்கும் மக்கள் தாம். எடுத்துக்காட்டுக்காக ஒன்றை குறிப்பிடலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கடையநல்லூர் எனும் ஊரில் நம்மை தொழுகைப் பள்ளியில் அனுமதிக்க மறுக்கிறார்கள். எனவே, நமக்கென்று ஒரு பள்ளிவாசல் வேண்டும். அதைக் கட்ட நிதி தாருங்கள் என்று கேட்டார்கள். நாற்பதே நாட்களில் நாற்பது லட்ச ரூபாய் குவிந்தது. அல்லது குவிந்ததாக  காட்டப்பட்டது. இந்தப் பின்னணியில் இருந்து பார்த்தால் தான் ‘உணர்வில்’ எழுதப்பட்டிருக்கும் \\\நாங்க பள்ளிவாசல் கட்ட நிதி கேட்டுப் போனா, தவ்ஹீத் ஜமாத்தா அவங்கள் உள்ளே விடாதேன்னு சொல்லுவாங்க .. .. .. உள்நாட்டிலே எங்களுக்கு இந்தக் கதியின்னா வெளிநாட்டிலிருந்து யார் நிதி கொடுப்பா?/// என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்பது புரியும். வளைகுடாவில் வேலைபார்க்கும் தமிழக மூஸ்லீம்களே நீங்கள் சொல்லுங்கள், நீங்கள் டி.என்.டி.ஜே வுக்கு பணம் அனுப்பியதே இல்லையா? அனுப்பியிருக்கிறீர்கள் என்றால் உங்கள் கேள்விகளால் துளைத்தெடுங்கள், உணர்வு தலைமையையும், அதன் தலையையும்.

 feb14 tntj poster

அடுத்து அரச பயங்கரவாதத்துக்கு துணை போவதை குறித்து பார்ப்போம். ரஷ்யாவில் நடந்த சோசலிச புரட்சி குறித்து பேசியிருக்கும் இந்த நான்காவது பகுதியில் ஆங்காங்கே செருகப்பட்டிருக்கும் சில வாக்கியங்களில் ஒளிந்து கொண்டிருக்கிறது டி.என்.டி.ஜே வின் அரசியல். \\\இந்த மாதிரி அப்பாவிகளை முஸ்லீமா மாத்துறீங்களே ஒரு ஆளுக்கு எத்தனை லட்சம் கொடுப்பீர்கள் என்று கடுமையாக கேட்டார்/// \\\நாங்களும் ரிசர்வ் பேங்க் நடத்துறதா கற்பனை செய்யாதீர்கள் என்றேன். அவர் சிரித்துக் கொண்டு கேட்டதிலிருந்தே நான் சொன்னதை அவர் நம்பவில்லை என்று புரிந்தது/// \\\சில தனிநபர் நல்லொழுக்கம் மிக்க உயர்ந்த சிந்தனையை தனிச்சு சொல்றதை விட பாட்டாளி மக்களின் அணியில் சேர்ந்து வர்க்கப் போராட்டத்துக்கு ஆயுதங்களை பயன்படுத்தனும்னு மார்க்ஸ் சொன்னார் என்றார். மார்க்ஸ் சொன்ன தத்துவம் எவ்வளவு தவறு என்று புரிந்தது///

 

மேற்கண்ட வாக்கியங்களிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள்? இதில் முதலிரண்டு வாக்கியங்கள் ஒரு தளத்திலிருந்தும் மூன்றாவது வாக்கியம் வேறொரு தளத்திலிருந்தும் அரச பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது. பார்பனிய பயங்கரவாதம் யாரை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறதோ அந்த ஒடுக்கப்பட்ட மக்களை தங்களுக்கு ஆதரவாக செயல்படவைக்க பார்ப்பனியம் கடைப்பிடிக்கும் உத்தி தான் முஸ்லீம்களை பொது எதிரியாக காட்டுவது என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். முஸ்லீம்களை பொது எதிரியாக காட்டுவதற்கு பார்ப்பனியம் பயன்படுத்தும் பல உத்திகளில் ஒன்று முஸ்லீம்கள் அரபுநாட்டு பணத்தில் புரள்கிறார்கள் என்பது. இதைத்தான் அரசு பல்வேறு வடிவங்களில் பரப்புகிறது. பார்ப்பனிய புரட்டல்தனங்களையும் அதற்கு அரசு எந்திரம் துணை போவதையும் அதன் எல்லா வடிவங்களிலும் மக்களிடம் அம்பலப்படுத்தி அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியைச் செய்வது புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் தாம். இதை தடுக்கும் வழி தெரியாமல் தான் புரட்சிகர இடது சாரி இயக்கங்கள் மீது அரசு பயங்கரவாதத்தை ஏவி விடுகிறது. இந்த அடிப்படையிலிருந்து மேலே குறிப்பிடப்பட்ட முதலிரண்டு வாங்கியங்களைப் பாருங்கள். பார்ப்பனியம் பரப்பும் அரபுநாட்டுப் பணம் எனும் உத்தியை அதை எதிர்த்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கும் புரட்சிகர இடதுசாரிகள் மீது சுமத்த விரும்புகிறது ‘உணர்வு’ கும்பல். அதனால் தான் அவர்களின் கற்பனை உரையாடல் கம்யூனிஸ்டாக பேசுபவரை பார்ப்பனிய கருத்தைக் கொண்டவராக உருவகித்திருக்கிறது.

 

மூன்றாவது வாக்கியத்தைப் பார்க்கலாம். இதில் இரண்டு அம்சங்கள் இருக்கிறது. மார்க்ஸ் சொல்லும் தத்துவம் எவ்வாறு தவறாக தெரிகிறது? 1. ஆயுதங்களைப் பயன்படுத்தச் சொல்வதன் மூலம், 2. தனி மனிதராக நல்லெண்ணம் பேசுவதை மறுத்து மக்களை ஓர் அணியாக திரட்டச் சொல்வதன் மூலம். மதவாதிகள் அரசு என யாராக இருந்தாலும் தனி நபராக நின்று பேசுவதைத்தான் விரும்புகின்றன. அதாவது வர்க்க அடிப்படையில் ஒன்று சேராமல் அதற்கு எதிராக ஒன்று சேர்வதில் அரசுக்கும் மதவாதிகளுக்கும் பெரிதாக பிரச்சனை ஒன்றுமில்லை. ஜாதிச் சங்கங்களில் ஒன்று சேர்வதை அரசு ஊக்குவிக்கத்தான் செய்கிறது. மதவாதிகளும் தங்களின் அமைப்புகளில் மதரீதியாக ஒன்று சேர்வதை விரும்புகிறார்கள் ஆனால் வர்க்க அடிப்படையில் ஒன்றுசேர்ந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஏன் வர்க்க அடிப்படையில் ஒன்று சேரக் கூடாது? என்ற கேள்வி முக்கியமானது.

 

இதுவரையான மனித வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அரசு என்பதின் தோற்றமே ஒரு வர்க்கத்தின் சார்பில் பிற வர்க்கங்களை ஒடுக்குவது என்பதிலிருந்து தான் தொடங்குகிறது. முடியாட்சியாக இருந்தாலும், குடியாட்சியாக இருந்தாலும் அல்லது நல்லாட்சி, சமதர்ம ஆட்சி, நீதி நேர்மையான ஆட்சி எனும் பெயர்களில் அழைக்கப்படும், அன்று முதல் இன்று வரையிலான எந்த ஆட்சியானாலும் அதில் இதன் கூறுகளைக் காணலாம். எப்போதெல்லாம் வர்க்க அடிப்படையை தவிர்த்து பிற அடிப்படைகளில் மக்கள் திரண்டிருக்கிறார்களோ அப்போதெல்லாம் அரசு தன்னுடைய அதிகாரத்தை மிக பலமாக தக்க வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் மக்கள் வர்க்க அடிப்படையில்மக்கள் ஒன்றிணைகிறார்களோ அப்போதெல்லாம் அப்போதெல்லாம் மக்களை ஒடுக்கும் அரசுகள் தூக்கி வீசப்பட்டு அங்கு சமூக மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

 

கம்யூனிசத்தின் அடிப்படையே மக்கள் வர்க்க அடிப்படையில் ஒன்றிணைவதற்கு பாடுபடுவது தான். அதனால் தான் அரசு எந்திரம் தொடங்கி, பாஸிஸ்டுகள், நாஸிகள், முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள், மக்கள் விரோதிகள், மதவாதிகள் என அத்தனை பேரும் கம்யூனிசத்தை எதிர்ப்பதில், ஒழிப்பதில் மும்முரம் காட்டுகிறார்கள். அதனால் தான் ‘உணர்வு’ கும்பலும் கம்யூனிசத்தை தன் அணிகளிடம் கொண்டு சென்று விடக்கூடாது என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது. கற்பனைக் கதைகளை உண்மை போல் விளம்புகிறது. அரசும் இது போன்ற அமைப்புகளும் ஒன்றிணையும் புள்ளி இது தான்.

 

அடுத்து ஆயுதப் போராட்டம். மக்கள் விரோதிகள் அனைவரும் மக்களை ஏய்ப்பதற்கு இந்த ஆயுதப் போராட்டம் என்பதைத் தான் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். மக்கள் யாருக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும்? இந்தக் கேள்வியை ஆராய்ந்து பார்த்தால் மதவாதிகள் உட்பட அத்தனை மக்கள் விரோதிகளும் மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பது புலப்படும்.

 

தண்ணீர் வரவில்லை என்று மக்கள் போராடுகிறார்கள். கிலோ கணக்கில் மனுக் கொடுத்துப் பார்த்துவிட்டு முடியாமல் சாலையை மறிக்கிறார்கள். என்ன நடக்கிறது? போலீசு லத்தி எனும் ஆயுதத்தோடு வருகிறது. மக்கள் கூட்டத்தையும் உறுதியையும் பொருத்து இந்த ஆயுதம் வஜ்ரா வாகனம், கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கி என்று ஆயுதங்கள் மாறுகின்றன அதிகரிக்கின்றன. இவர்களுக்கு எதிராக மக்கள் நிராயுதபாணியாக மட்டும் தான் நிற்க வேண்டுமா?

 

ஒவ்வொரு ஆண்டும் அரசின் வரவு செலவுத் திட்டத்தில் லட்சக் கணக்கான கோடி ஆயுதம் வாங்குவதற்காக செலவு செய்யப்படுகிறது. யாரைக் காப்பாற்றுகின்றன இந்த ஆயுதங்கள்? அறுநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்ததற்காக குண்டடி பட்டு செத்திருக்கிறார்களே. அவர்களுக்கு ஆதரவாக இந்த ஆயுதங்கள் திரும்பியிருக்கிறதா?

 

இவை எடுத்துக் காட்டுகள் தாம். அரசின் ஒவ்வொரு செயலிலும் மக்களுக்கு எதிராக ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நுணுக்கமாக ஆராய்பவர்கள் எவரும் எளிதில் கண்டு கொள்ளலாம். மக்கள் குடிநீருக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் போது அரசு பாதுகாப்புடன் கொகோகோலா தினமும் லட்சக் கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கிறது. அரசின் கையிலிருக்கும் ஆயுதங்கள் கொகோகோலாவை பாதுகாக்கின்றன. உலகின் நடைபெற்ற அத்தனை போர்களும் முதலாளிகளின் முதலீடுகளைப் பாதுகாப்பதற்கே நடந்திருக்கின்றன. மறுக்க முடியுமா? என்றால் யாரிடம் ஆயுதம் இருக்கிறது யாரிடம் ஆயுதங்கள் இல்லை.

 

சமதர்மம் பேசுகிறோம் என்று முகமூடி அணிந்திருக்கும் அற்பவாத மதம்பேசிகளே! எது சமதர்மம்? எந்த ஆயுதங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ அந்த மக்களிடமே ஆயுதப் போராட்டம் தவறு என்பதிலா சமதர்மம் இருக்கிறது? யார் ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கிறார்களோ, யார் ஆயுதங்களை மக்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்களோ அவர்களிடம் ஆயுதம் தவறு என்று கூற முடியுமா? அல்லாவைத் தவிர எவனுக்கும் அஞ்ச மாட்டோம் என்று வீர வசனம் பேசுபவர்கள் அரசுக்கு எதிராக இதைக் கூற முடியுமா? ஆனால் அரசோடு உடன்பட்டு மக்களிடம் ஆயுதப் போராட்டம் கூடாது என்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? மக்களை ஏய்க்கிறார்கள் என்பதல்லவா பொருள். கம்யூனிசத்தை எதிர்ப்பவர்கள் அத்தனை பேரின் ஒட்டு மொத்த அடையாளம் இது தான்.

 

அரச பயங்கரவாதம் என்பது இது தான். தன் அதிகாரத்தை முதலாளிகளுக்கு எதிராக போராடும் மக்கள் மீது ஆயுதங்கள் மூலம் செலுத்துவது தான் அரச பயங்கரவாதம். டி.என்.டி.ஜே வின் செயல்பாடுகள் எதை நிரூபிக்கின்றன. எந்த அரச பயங்கரவாதத்தால் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ அந்த அரச பயங்கரவாதத்துக்கு ஆதரவாக முஸ்லீம்களை வளைப்பது தான் அல்லா கற்றுத் தந்த அமைதி மார்க்கத்தின் வேலையா? அந்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பவர்கள் மீதே ஆயுதப்போராட்டம் எனும் அவதூறைப் பொழிவது தான்சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்க வந்ததாக கூறிக் கொள்ளும் மதத்தின் அர்த்தமா?

 

முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. உங்கள் யதார்த்த வாழ்வு உங்கள் கண்முன்னே இருக்கிறது. அதில் சிறப்பான வாழ்வதற்கு கம்யூனிச சித்தாந்தம் சரியா? இந்த மதவாதிகளின் சித்தாந்தம் சரியா? பதிலை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சிந்தித்துப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

இத்தொடரின் முந்திய பகுதிகள்:

1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்

2. கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே

3.  பதில்சொல்ல முடியாத டி.என்.டி.ஜே

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

2 thoughts on “வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்களே! நீங்கள் டி.என்.டி.ஜே வுக்கு பணம் அனுப்பவில்லையா?

  1. இஸ்லாமிய மக்கள்மீதான செங்கொடியின் கவலைகள் நியாயமானவை. தங்கள் பணிசிறக்கவும் தொடரவும் வாழ்த்துக்கள்

  2. முழுப் பொய்யைவிட குறை உண்மைகள் ஆபத்தானவதான்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s