கடந்த 7ம் தேதி செம்மரக் கட்டைகளைக் கடத்தினார்கள் என்று கூறி ஆந்திர காவல்துறை ரவுடிகள் 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்றார்கள். இந்தக் கொலைகள் போலியாக நடத்தப்பட்ட மோதல் கொலைகள் தாம் என்பது ஐயத்துக்கு இடமற்ற வகையில் தகவல்கள், ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. இது குறித்து சமூக வலைதளங்களில் பொங்கித் தீர்த்து விட்டார்கள் மக்கள். பழைய செம்மரக் கட்டைகளைக் கிடங்குகளிலிருந்து கொண்டுவந்து பழைய பதிவு எண்களை அழித்துவிட்டு காட்டியிருப்பது தொடங்கி, உடல்களில் தீக்காயங்கள் இருப்பது வரை பல்வேறு ஆதாரங்கள் இவ்வளவு முட்டாள்களா காவல்துறை ரவுடிகள் என்று யோசிக்க வைத்தன. ஆனால், நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், பொருத்தமே இல்லாமல் எதை வேண்டுமானாலும் சொல்வேன் அதை மக்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும் எனும் திமிர் தான் இதில் தெரிகிறது. காஷ்மீர் தொடங்கி, குஜராத் ஈறாக இது போன்ற போலி மோதல் கொலைகளுக்கு வரலாறுகளும் உண்டு. அரச பயங்கரவாதம் என்பதற்கும், அரசு என்றால் என்ன என்பதற்கும் இந்த 20 தொழிலாளர்களின் கொலை இன்னுமொரு சான்றாக அமைந்து விட்டது.
இன்று கல்யாணி நகை கடை திறப்பு விழா போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களுக்கு சமூகத்தளங்கள் எளிதாக நகர்ந்து விட்டன. என்றாலும் பொங்கிக் கொண்டிருந்த போது வெளிப்பட்ட கருத்துகள் பல அபாயகரமாக இருந்தன. குறிப்பாக மூன்று கருத்துகள் தொழிலாளர்களைத் துளைத்த குண்டுகளை விட கொடிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவைகளாக இருந்தன. அவை 1. ஆந்திர அரசு தமிழ் மக்களைக் கொன்று விட்டது. 2. போராடிக் கொண்டிருப்பதெல்லாம் பல்வேறு இயக்கங்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களில்லை. 3. மக்களைக் கொன்றது பழைய சோசலிச பாணி கட்டுப்பாடுகள் தாம், செம்மரங்களை யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம், விற்கலாம் என்று அனுமதித்திருந்தால் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்காது என்பன.
மார்க்சியம் எனும் பெயரிலும் இன்னும் பல்வேறு தளங்களிலும் தமிழ் தேசிய முனைப்பு இயக்கங்கள் தமிழகத்தில் பல காலமாக செயல்பாட்டில் இருக்கின்றன. ஆனால் அண்மைக் காலமாக திராவிட எதிர்ப்பு நடவடிக்கைகள் பார்ப்பனியத்துடன் இணைந்து அல்லது அதற்கு இசைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அடிப்படையிலிருந்து 20 தொழிலாளர்கள் பிரச்சனை தமிழர் தெலுங்கர் பிரச்சனையாக மடை மாற்றம் செய்யப்பட்டது. வடுக வந்தேறி என்ற சட்டகத்துக்குள் அனைத்தும் அடக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழர் என்பதும், இதுபோல முன்பும் தமிழர்கள் சிலர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதும் அவர்களுக்கு சாதகமானதாக அமைந்து விட்டது. இதனால் இணையப் பரப்பெங்கும் அவர்கள் தமிழர்கள் என்பதால் கொல்லப்பட்டனர் என்ற கோணத்தில் மட்டுமே விவாதிக்கப்பட்டது. ஆனால், செம்மரக் கடத்தல் பெரும்புள்ளிகளில் தமிழர்களும் இருக்கிறார்கள். அவர்கள் கொல்லப்படவில்லை. இதில் தெலுங்கு தமிழ் கடத்தல்காரர்கள் கூட்டாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதும், தமிழர்களைப் போலவே தெலுங்கர்களும் மரம் வெட்ட கூலித் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதும் மறக்கடிக்கப்பட்டது. செம்மரக் கட்டைகளைக் கடத்துவது என்பது நீண்ட செயல்பாட்டைக் கோரும் ஒன்று. அரசின் துணையில்லாமல் இது ஒருபோதும் நடைபெற முடியாது. அரசுக்குத் தெரிந்து அரசின் உதவியுடன் நடைபெறும் இந்த செம்மரக் கடத்தலில் தமிழ், தெலுங்கு கடத்தல்காரர்களும் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு கூலித் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். தமிழர்கள் மீதான விரோதம் தான் காரணமென்றால் பெரும்புள்ளிகளான தமிழர்கள் என்ன செய்யப்பட்டிருக்கிறார்கள்? இனியும் அந்த தமிழர்கள் செம்மரக்கடத்தலில் ஈடுபடுவார்கள். அதற்கு தெலுங்கு அரசு உதவத்தான் செய்யும். இதை தமிழ், தெலுங்கு பிரச்சனையாக குறுக்குவது இதை மறைப்பதற்குத் தான் உதவுமேயன்றி தீர்ப்பதற்கு உதவாது. பிரச்சனையை துல்லியமாக இனங்காணாமல் தேசிய இனப் பிரச்சனையாக மட்டுமே இதைப் பார்ப்பது மேலும் ஆந்திர தமிழக கூலித் தொழிலாளர்கள் கொலை செய்யப்படுவதில் தான் முடியுமேயல்லாது தமிழர்களையோ தெலுங்கர்களையோ காப்பதற்கு உதவாது.
எந்த ஒன்றிலுமே பாதிக்கப்பட்டவர்கள் போராட வேண்டும் என்பது, அல்லது அவர்கள் மட்டுமே போராட வேண்டும் என்பது முதலாளித்துவ வர்க்க கண்ணோட்டம். பொதுத்தன்மையில் மக்கள் ஒன்றிணைவது என்பது முதலாளித்துவத்திற்கு, அரசுக்கு என்றுமே பிரச்சனைக்குறியது தான். பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே அதற்கான எதிர்ப்புகளைச் செய்ய வேண்டுவது மக்களை பிரித்தாளும் தந்திரம். சிலருக்கான பாதிப்பு என்பது அதன் தன்மையில் எல்லோருக்குமான பாதிப்பு தான். 20 பேர் கொல்லப்பட்டது 20 குடும்பங்களுக்கு மட்டுமேயான பாதிப்பா? பௌதிக பாதிப்பு மட்டும் தான் அந்த 20 குடும்பங்களுக்கானது. ஆனால் உள்ளார்ந்த நிலையில் அரச பயங்கரவாதம் என்பது அனைவரையும் பாதிக்கக் கூடியது. இதில் உள்ளார்ந்து நிற்கும் அம்சத்தை விலக்கி விட்டு 20பேர் கொல்லப்பட்டதை மட்டும் முன்னிலைப் படுத்தினால் அரச பயங்கரவாதம் தொடரும் என்பதோடு மட்டுமல்லாது இன்றைய 20 நாளை 40ஆக மாறலாம். இந்த வகையில் இந்தக் கருத்து அரசின் கருத்தாக இருக்கிறதேயன்றி மக்களின் கருத்தாக இல்லை.
மூன்றாவது கருத்தை எனக்குத் தெரிந்து அதியமான் எனும் மேதாவி மட்டுமே கூறியிருக்கிறார். மார்க்சியத்துக்கு எதிராக வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் மூக்கை நுழைப்பது இவரது வேலை என்பது இணையப் பரப்பில் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். நேரு கடைப்பிடித்தது சோசலிச பொருளாதாரம் என்பது மத மதநம்பிக்கையைப் போல இவரிடம் இருக்கும் மூடநம்பிக்கை. இந்த வகையில் நேரு காலத்திய தவறுகளெல்லாம் கம்யூனிசத்தின் தவறுகள் என்று சொல்லும் அளவுக்கு செல்லக் கூடியவர். இவர் கூறுவதென்ன? நேரு பாணி சோசலிசம் தான் இது போன்று மரங்கள் வளர்ப்பதற்கு விற்பதற்கு எல்லாம் தடை போட்டிருக்கிறது[லைசன்ஸ்ராஜ்] இதை நீக்கி விட்டால் இது போன்ற கொலைகள் நிகழாது என்கிறார். எல்லோரும் தத்தமது வீடுகளில் அல்லது இடங்களில் செம்மரங்களை வளர்த்தால் எல்லோராலும் தேவைப்படும் இடங்களுக்கு ஏற்றுமதி செய்ய இயலுமா? யாரோ ஒருவர் சேகரித்து ஏற்றுமதி செய்வார். அவரின் லாபத்தைப் பொருத்து விலை நிர்ணயிக்கப்படும். தன்னுடைய லாபத்துக்காக அந்த முதலாளி எந்த எல்லை வரை செல்வார்? மான்சாண்டோ, கார்கில் போன்ற நிறுவனங்கள் தங்கள் லாபத்துக்காக இந்தியாவில் மூன்று லட்சம் விவசாயிகள் வரை கொல்லவில்லையா? அல்லது சீனா ஜப்பான் போன்ற நாடுகளும் அங்குள்ளவர்கள் செம்மரங்களை வளர்த்துக் கொண்டால் ஏற்றுமதிக்கு அவசியம் இருக்குமா? என்றால் பலனில்லாத மரத்தை மக்கள் ஏன் வளர்க்க வேண்டும்? இன்று செம்மரத்துக்கு இருக்கும் மதிப்பு அது கிடைப்பதில் இருக்கும் சிரமம் தானே. ஆக இவர் சுற்றி வளைத்து சொல்ல வருவதின் பொருள் என்ன? கால் வயிற்றுக் கஞ்சிக்காக செம்மரங்களை வெட்டச் சென்று பலியாகாதே, அதை விட பட்டினி கிடந்து செத்து விடு என்பது தான்.
இது போன்ற கருத்துகள் ஏன் அபாயமானவைகளாக இருக்கின்றன? எந்த ஒரு பிரச்சனையிலும் அதன் மையப் புள்ளியை இனங்கண்டு அதை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் மட்டுமே அந்தப் பிரச்சனையை தீர்க்க முடியும். மாறாக எதனால் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதோ அதனைக் காண விடாமல் திசை திருப்பும் வல்லமையுள்ள எதுவும் அபாயமானதே. அந்த வகையில் இந்த 20 பேர் கொலை செய்யப்பட்டதன் மையச் சரடு செம்மரக் கடத்தல் அரசு, அரசு அதிகாரிகளின் துணையுடன் நடந்து கொண்டிருக்கிறது அது நிற்கப் போவதில்லை என்பதும், அரசு எந்திரங்கள் மக்களுக்கு எதிராகவே கட்டமைக்கப் பட்டிருகின்றன என்பதும் தான். மேற்கண்ட மூன்று கருத்துகளும் இந்த மையத்தை அடைய உதவியிருக்கின்றனவா? இல்லையென்றால் அவை மக்களுக்கு விரோதமான கருத்துக்களே.
செம்மரக் கடத்தல் மட்டுமல்ல, நாட்டின் இயற்கை வளங்களும், கனிம வளங்களும் ஒட்டு மொத்தமாக கொள்ளை போய்க் கொண்டிருகின்றன. அதற்கு எதிராக போராடும் மக்கள் பல்வேறு நடவடிக்கைகளில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் எதனையும் சுதந்திரம் என்று பீற்றிக் கொண்ட இத்தனை ஆண்டுகளிலும் செய்து கொடுக்கத் துப்பில்லாத அரசாக இருக்கிறது. ஆக செம்மரக் கடத்தல் என்பது செல்லரித்துப் போன அரசின் ஒரு முனை மட்டுமே. எல்லா முனைகளிலுமே அழுகிப் போன அரசு கட்டமைப்பின் சீழ் மக்களின் மீது வடிந்து கொண்டே இருக்கிறது. மேற்கண்ட கருத்தாளர்கள் அந்த சீழ் குளத்தில் எப்படி நீச்சலடிக்க வேண்டும் என்று நமக்கு கற்றுத்தர விரும்புகிறார்கள். நமக்கோ னம்மை அழுத்திக் கொண்டிருக்கும் அந்த செத்த மிருகத்தை அகற்றி விட்டு நமக்கான அதிகார மையத்தை அமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. இனி அதை நோக்கியயே நம்முடைய பயணம்.