ரொகிங்கியா இனப்படுகொலைகளை முன்னிட்டு .. .. ..

rohingya1

உலக ஊடகங்கள் கண்களை மூடிக் கொண்டனவா? கடந்த பத்து நாட்களாக சமூக வலைத்தளங்களில் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் கேள்வி இது தான். ஊடகங்கள் ஜநாயகத்தை காக்கின்ற தூண்களில் ஒன்று என்றும், உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அவைகளை உலக மக்களின் முன் வைக்கும் கடமை ஊடகங்களுக்கு  இருக்கிறது என்றும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உண்மையான தகவல்களை மக்களிடம் சேர்க்கும் முனைப்புடன் இருப்பவையே ஊடகங்கள் என்றும் மூடநம்பிக்கையில் இருப்பவர்கள் மட்டுமே மேற்கண்ட கேள்வியை எழுப்ப முடியும். அரசு கட்டுமானங்களான சட்டம், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், இராணுவம், சட்டமன்ற, பாராளுமன்ற சபைகள் உள்ளிட்டவை எப்படி மக்களுக்கு எதிரானவைகளோ அதே போன்று தான் ஊடகங்களும் மக்களுக்கு எதிராக செயல்படக் கூடியவை. எனவே அவை தொடராக நடந்து கொண்டிருக்கும் ரொகிங்கியா இனப் படுகொலைகளை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லாது.

 

இது போல் தான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சுகி, அமைதியே உருவான தலாய்லாமா, இத்யாதிகள் இந்த இனப்படுகொலைகளை கண்டித்து குரல் கொடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும். சர்வதேச பட்டங்களும், தீரர்களாக கொண்டாடப் படுவதும் அவர்கள் மக்களின் அமைதியாக இருக்கும் நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதற்காக கொடுக்கப்படுவன அல்ல. மாறாக, ஏகாதிபத்திய நலன்களை மக்களின் நலனாக உருமாற்றும் கலையில் வல்லவர்களாக, விற்பன்னர்களாக இருக்கிறார்கள் என்பதற்காகவே வழங்கப்பட்டன, வழங்கப்படுகின்றன. எனவே, அவர்கள் குரல்கொடுக்க மாட்டார்கள், கொடுத்தாலும் அது தாங்கள் அம்பலப்பட்டு விடாமலிருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளாகவே இருக்கும்.

 

இந்த இரண்டு அம்சங்களை விட ஆபத்தானது, அங்கு முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது. அதாவது முஸ்லீம்கள் என்பதாலேயே கொல்லப்படுகிறார்கள் என்பது. மியான்மரில் முஸ்லீம்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என்பது எவ்வளவு அபத்தமாக இருக்கிறதோ, அதைவிட சிலர், ஈரான் ஈராக்கில் குண்டு வெடிக்கும் போது தெரியவில்லையா? ஷியாக்கள் கொல்லப்பட்டால் இப்படி குரலெழுப்புவார்களா? என்று கேள்வி கேட்பதும் அபத்தமாக இருக்கிறது. மியான்மரில் இருக்கும் அனைத்து முஸ்லீம்களும் இந்த இனப்படுகொலை கொடுமைக்குள் சிக்கிக் கொண்டிருக்கவில்லை. ரொகிங்கியா முஸ்லீம்கள் மீது தான் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இது குறித்து மியான்மரில் வாழு ஏனைய முஸ்லீம்கள் மதம் எனும் அம்சத்தை நீக்கிவிட்டு பார்த்தால் என்ன கருதுகிறார்கள் என்பது தெரியவில்லை. மட்டுமல்லாமல், ரொகிங்கிய முஸ்லீம்களை அகதிகளாக ஏற்க மறுக்கும் பங்களாதேஷ், இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளும் இஸ்லாமிய நாடுகளே. எனவே இந்த இனப் படுகொலைகளை மதவாத கண்ணாடியால் பார்ப்பது அபத்தமானதும், ஆபத்தானதும் ஆகும்.

 

ரொகிங்கியா முஸ்லீகள் பர்மிய பூர்வகுடிகளா? வங்காள வந்தேறிகளா? என்பதெல்லாம் பிரச்சனையின் ஆணிவேரை விட்டு நம்மை மறக்கடிக்கும் அலகுகளே. ஏனென்றால், தேசிய இனம் என்பது இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. தூய தேசிய இன மக்கள் என்று எந்த இனமும் இன்று உலகில் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒரு தேசிய இன மக்கள் எனும் சிந்தனை யாரிடமும் இருந்ததில்லை. காலனி நாடுகளில் இனியும் நீடிக்க முடியாது எனும் நெருக்கடியை உணர்ந்து பிரிட்டன் தன்னுடைய காலனி நாடுகளில் எல்லை பிரிப்பதில் தந்திரத்துடன் நடந்து கொண்டது. ஒரே தேசிய இனமக்களை எல்லைகளால் பிரித்துப் போட்டு, எப்போதும் பிரச்சனை தீராமலிருக்க வெறுப்புகளையும் விதைத்துச் சென்றது. அதனை இன்று அமெரிக்கா தக்கவைத்து அறுவடை செய்து கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய நலனுக்கு பிரச்சனை ஏற்படாதவரை எந்த ஒரு நாட்டிலும் தேசிய இனப்பிரச்சனைகள் ஏற்படாது. எந்த ஒரு நாட்டின் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளும் தங்கள் மீதான மக்களின் கோபத்தை மடைமாற்ற இனச் சிக்கலை விசிரி விடுவதையே பாலபாடமாக கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இவ்வாறான விசிரி விடல்கள் புதிய எல்லையை தொட்டிருப்பதை இந்த பின்னணியிலிருந்தே புரிந்து கொள வேண்டும்.

 

மியான்மரைப் பொருத்தவரை, எகாதிபத்திய நலனுக்கு அமெரிக்கா விரும்பும் ‘ஜனநாயகம்’ தேவைப்பட்ட போது, இரானுவத்தால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆங்சாங் சுகி அடக்குமுறையில் குறியீடாக உலகமெங்கும் முன்னிருத்தப்பட்டார். இப்போது ‘ஜனநாயகம்’ வந்து விட்டது. ரொகிங்கியா முஸ்லீம்கள் பூர்வகுடிகளல்ல என்று ஆய்வு சொல்லும் சுகி, அதுவரை இருந்து வந்த உரிமைகள் பறிக்கப்பட்டு, 1982ல் தானே குடிமக்களல்ல என்று அறிவிக்கப்பட்டார்கள். ‘ஜனநாயக’ சுகி ஏன் அவர்கள் இழந்த உரிமையை மீட்டுக் கொடுக்கக் கூடாது? 1950க்கு முன் ரொகிங்கியா எனும் சொல்லே பர்மிய வரலாற்றில் இல்லை என்கிறார்கள். 82ல் அவர்கள் குடிமக்கள் அல்ல என்று அறிவிக்கப்படுகிறார்கள். இடைப்பட்ட 32 ஆண்டுகளில் எப்போது அவர்கள் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டார்கள்? ஆய்வு செய்து சொல்ல முடியுமா இவர்களால்?

 

இது பௌத்தர்கள் இஸ்லாமியர்கள் இடையிலான பிரச்சனை என்பதன் சூக்குமம் இதில் தான் அடங்கியிருக்கிறது. தன் நாட்டில் வாழும் மக்களை காக்கும் கடமை யாருக்கு உண்டு? தன் நாட்டில் வசிக்கும் மக்களில் ஒரு பகுதியினரை குடிமக்களல்ல என்று அறிவிக்கும் அதிகாரம் அரசுகளுக்கு எங்கிருந்து வருகிறது? இந்தக் கேள்வி எழுந்தால் மியான்மரின் ஏனைய முஸ்லீம்கள் சும்மா இருப்பார்களா? பௌத்தர்கள் சும்மா இருப்பார்களா? அரசு எனும் பிம்பம் குறித்த மாயை இன்னும் கலைக்கப்படவில்லை. கலைக்கும் வாய்ப்பை வழங்கி விடக்கூடாதே என்பதற்காகத் தான் வங்காள வந்தேறிகள் என்று கூறி பௌத்த பிக்குகள் கொன்று குவிக்கிறார்கள். ஏகாதிபத்தியங்கள் உலகின் தேசிய இனங்களுக்கு இடையில் பகைமைத் தீயை மூட்டிக் கொண்டிருக்கும் வரை இது போன்ற பிரச்சனைகள் ஓயப் போவதில்லை. இன்னொரு பெண் வன்புணர்ச்சி செய்யப்படும் வரையிலோ, காசில்லாமல் ரொட்டி சாப்பிட்டு தகராறு செய்யும் வரையிலோ தன்னை மறைத்திருக்கும், அவ்வளவு தான்.

 

தமிழக முஸ்லீம்கள் இந்தப் பிரச்சனையை அணுகும் விதம் அயர்ச்சியைத் தருகிறது. அதிர்ச்சியூட்டும் படங்களை தேடிப்பிடித்து முஸ்லீம்களை பௌத்தர்கள் கொல்கிறார்கள் என்று பரப்புரை செய்வதிலேயே இவர்களின் வீரியம் அடங்கி விடுகிறது. குஜராத்தில் முஸ்லீம்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்ட போதும் இது தான் நடந்தது. பார்ப்பன வெறி, பௌத்த வெறி போன்ற மதவெறிகள் அரசியல் அதிகாரத்தோடு இணையும் போது கொலை வெறியாட்டம் போடுகின்றன. இஸ்லாமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனவே, மதம் என்ற அடிப்படையில் மட்டுமே நின்று கொண்டிருந்தால் தீர்வுகளை நோக்கி அடியெடுத்து வைக்க முடியாது. இதன் பொருள் இந்த இனப்படுகொலையில் பௌத்த மதவெறியின் பங்கை மறைப்பது அல்லது இஸ்லாமிய மத வெறியுடன் சமனப்படுத்துவது என்பதல்ல. இந்த இனப் படுகொலைகளில் பௌத்த மதவெறி தான் களமாக இருக்கிறது. குஜராத் இனப்படுகொலைகளில் இருந்த பார்ப்பனிய மத வெறிக்கு சற்றும் குறைந்ததல்ல பௌத்த மதவெறி. ஆனால் இதை மத அடிப்படையில் மட்டும் நின்று பார்ப்பது குறைபாடுடையதாக இருக்கும் என்பதே வலியுறுத்தப்படுகிறது.

 

அகதிகள் பிரச்சனையை உலக நாடுகள் கையாளும் விதமும் அப்பட்டமாக அரசியல் நோக்கிலேயே இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளையும், திபத்திய அகதிகளையும் ஒப்பு நோக்கினாலேயே இது புரியும். நடுக்கடலில் தத்தளிக்கும் அகதிகளை ஒவ்வொரு நாடாக எட்டி உதைப்பது கொடூரத்தின் உச்சம். எந்த ஏகாதிபத்திய நலனுக்காக அவர்கள் சொந்த நாட்டில் கொல்லப்படுகிறார்களோ, அதே ஏகாதிபத்திய நலனுக்காகவே எந்த நாடும் அவர்களை ஏற்க மறுக்கிறது.

 

ஏகாதிபத்திய நலனே அனைத்தையும் தீர்மானிக்கும் என்றால், மதங்கள் இதில் என்ன பாத்திரத்தைப் பெறும்? எந்த ஒரு பிரச்சனையையும் அரசியல் ரீதியாக அணுகுவது மட்டுமே சரியானதாக இருக்கும். நடப்பது அனைத்தும் ஏகதிபத்திய நலன் சார்ந்த அரசியல் என்றால், நடப்பதை ஏற்க முடியாத நம்முடைய அரசியல் எது? இது தான் முதன்மையான கேள்வி.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பெண்ணாக பிறந்துவிட்டால் மக்களின் பிரச்சனைக்கான போராட்டங்களுக்கு வரவே கூடாதா?

penniyam

அண்மையில் நடைபெற்ற கலை இலக்கிய முகாமொன்றில் பெண்ணியச் செயற்பாட்டாளரான பிரேமா ரேவதி அவர்கள், “பாலினமற்ற சொல்லடல்களை நோக்கி” எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் சுருக்கமான வரிவடிவம் கீழே உள்ளது. பெண்ணியம் எனும் சொல்லின் பொருளை, அதன் விரிவான தளங்களில் அறிமுகம் செய்யும் சிறப்பான உரை. படியுங்கள், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

பாலினமற்ற செயல்பாடுகளை நோக்கிச் செல்லும் ஒரு சமூகம் தான் உலகின் அனைவருக்குமான விடியலை நோக்கிச் செல்லும் சமூகமாகவும், அது பற்றிய ஆய்வுகளை ஆக்கங்களைச் செய்யும் அறிவுச் சமூகம் தான் பூரண அறிவுத்தள ஆய்வுப் பார்வை கொண்ட அறிவுச் சமூகமாகவும் இருக்க முடியும். இது இந்திய துணைக் கண்டத்தில் சாதியற்ற அல்லது சாதி எதிர்ப்பு சொல்லடல்களுக்கும் பொருந்தும்.

 

எனினும் அத்தகைய ஒரு நிலையில் கால கட்டத்தில் நாம் வாழ்கிறோமோ என்றால் இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டிவரும். எனவே பலினமற்ற சொல்லடலுக்காக பெண்ணியல் சொல்லாடல் ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், தாங்கள் பால் பேதம் எல்லாம் பார்ப்பதில்லை, நாங்க சாதிக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என சொல்பவர்களின் சொல்லாடல்கள் அல்லது கருத்தியல் செயல்பாடுகள் பெரும்பாலும் பெண் நீக்கம் செய்யப்பட்ட சாதியை இன்விசிபிள் ஆக்குகிற சொல்லாடல்களாகவே இருக்கின்றன. அவை குறித்து நான் அதிகம் பேச எடுத்துக் கொள்ளவில்லை. எனெனில் அது ஒரு ஆத்திரமும் புலம்பலுமான எதிர் வினையாக மட்டுமே இருக்க முடியும். அந்த கோபமும் அயர்ச்சியும் தவிர்க்க முடியாதது என்றாலும் அவற்றை மீறி செயலாற்றுவதற்கான தேவையும் இருக்கிறது என்பதாலேயே அதை விடுத்து முன் செல்கிறேன். ஆனால் அது பற்றி ஆண்கள் பேசவேண்டும் என்று நான் எதிர்ப் பார்க்கிறேன். அதன் கயமையை அறிவு நாணயமற்ற தனத்தை சுட்டிக்காட்டுவது என்பது கூட ஒரு ஆழமான தீவிர (in the sense of serious and not extreme) சொல்லாடலை கட்டமைப்பதின் வாயிலாகவே சாத்தியம் என்று கருதுகிறேன்.

 

பெண்ணிய சொல்லாடல் என்பதே நம் தமிழ்ச் சமூகத்தில் பரவலாக பெண்களின் உடை பற்றியும் பெண்களின் உடல் காட்டும் ஆபாசத்தைப் பற்றிய மிகப் பிற்போக்குத்தனமான விவரணைகள் மற்றும் விவாதங்களின் மூலமே கட்டமைக்கப்படுகிறது என்பதிலிருந்து தான் நாம் பெண்ணிய சொல்லாடல் நோக்கிய நமது பயணத்தை தொடங்க வேண்டியுள்ளது. ஆய்வுத் தளங்களில் இதற்கான விதிவிலக்குகள் இருக்கலாம். அதுகுறித்த முழுமையான வாசிப்பு எனக்கு இல்லை. தமிழ்ச் சமூகத்தில் மிகப் பெரும் எண்ணிக்கையில் திடீரென்று தோன்றியுள்ள lay அறிவுஜீவிகள் – இவர்கள் organic intellectuals க்கு எதிரான நிலையில் இருப்பவர்களாக நான் பார்க்கிறேன், இவர்களே உரத்த உரையாடல்களை உணர்வுமிகுந்து கொதிக்கும் வடிவத்தில் அழிக்கை செய்துவரும் நிலையில் தான் பெண்ணிய செயல்பாடுகளை – அது புனைவு உள்ளிட்ட எழுத்துப் பணிகளாக இருந்தாலும், வன்முறைகளுக்கு எதிரான செயல்பாடுகளாக இருந்தாலும், பெண்கள் கூடி தமக்குள் பகிர்ந்து கொள்வதற்க்கான வெளிகளை ஏற்படுத்திக் கொள்ளும் விசயங்களாக இருந்தாலும் – நாம் நடத்த வேண்டியுள்ளது. கருத்தியல் தளத்திலும் மேலதிக்கம் வேறு வகைகளில் நடத்தப்படுகிறது.

 

எது முக்கியம்? எது முதன்மை? எது முதன்மைக்குள் முக்கியம்? எது சரியான தருணம்? எப்போது அது எதிராளிகளுக்கு ஆதரவாகப் போகாது? எது புலம்பல்? எது மனித குல விடுதலை பற்றிய பொதுப் பார்வை கொண்டுள்ளது? போன்ற கேள்விகள் பெரும்பாலும் சாதி மற்றும் பாலினம் குறித்த சொல்லாடல்களின் மீதுதான் ஒரு குற்றசாட்டாக வைக்கப்படுகிறது.

 

இப்படியெல்லாம் சொல்வதன்மூலம் நான் பெண்ணிய செயல்பாடுகள் என்பவை ஏதோ ஒரு தனித்த பிரச்சனை என்றும் அதற்கு யாரும் இடமளிப்பதில்லை எனவும் புலம்புவதாக நினைக்க வேண்டாம். வர்க்கப் போராட்டம், சாதி ஒழிப்புப் போராட்டம் ஆகியவற்றோடு பெண்ணிய போராட்டமும் மிக முக்கியமான அளவில் பிரிக்க முடியாத வகையில் பிணைந்து இருக்கிறது என்ற புரிதலோடுதான் இதைக் கூறுகிறேன்.

 

வரலாற்றின் பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல கோடிப் பெண்களின் பங்களிப்புக்கு என் செவ்வணக்கத்தை செலுத்திவிட்டு சமகால வரலாற்றிலிருந்து இதை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

 

சமகாலத்தில் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்துள்ள சில முக்கியமான போராட்டங்களைப் பார்ப்போம்.

கூடங்குளம்

சுயசாதி மறுத்து திருமணம் செய்யும் இளைஞர்களின் கொலைகள்

 

கூடங்குளம் பிரச்சனை அடிப்படையில் ஒரு வர்க்கப்போராடம் தான். உழைக்கும் மீனவ மக்கள் தாங்களின் உழைப்புக்கு ஆதாரமான கடல்வளத்தையும் அதனுடன் இணந்து இருக்கும் தங்கள் வாழிடத்தையும் (எங்கு வாழ்ந்தால் மட்டும் அவர்கள் தமது வேலையைச் செய்ய முடியுமோ அந்த வாழிடத்தை) காப்பாற்றிக் கொள்ள நடத்திய போராட்டம்.

 

கூடங்குளம் அனு உலை எதிர்ப்புப் போராட்டம் என்பது வாழ்வாதாரத்தின் மீது உழைபாளிகளின் உரிமையைக் கோரும் வர்க்கப் போரட்டம் மட்டுமல்ல. அது எகாதிபத்தியங்களுக்கு எதிராக லத்தீன் அமெரிக்கா மற்றும் பிற மூன்றாம் உலக நாடுகளில் தீவிரமாக எழுந்துள்ள இயற்கை வளங்களை காப்பாற்றுவதற்கான, மொத்தத்தில் நாம் வாழும் அகிலத்தை காப்பாற்றுவதற்கான போராட்டமும் ஆகும்.

 

இயற்கை வளம் என்பது அரசுகளின் சொத்தல்ல அது ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் சொத்து என்ற கருதுகோளை பாட்டாளி வர்க்க அரசுகளை அமைக்க யத்தனிக்கும் தம் திட்டத்தால் கட்சி சார் வர்க்கப் போராளிகன் எதிர்க்கலாம். அதை நாம் விவாதிக்கலாம். எனது வாதம் அது பற்றியது அல்ல.

 

நாம் போராட்டக் குழுவின் கோரிக்கையை நிலைப்பாட்டை எற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டலும், அந்த போராட்டமானது நாம் வாழும் காலத்தில் நடந்த ஒரு மகத்தான மக்கள் போராட்டம் என்பதை மறுக்க முடியாது.

 

இந்த போரட்டதின் மிக முக்கிய விசயங்களில் ஒன்று அதில் மிக அதிக எண்ணிக்கையில் பங்கெடுத்த பெண்கள். பரப்புரையாளர்களாக, கிளர்ச்சியாளர்களாக தலைவர்களாக, சிறை செல்பவர்களாக, என அவர்கள் நிகழ்த்திய செயல்கள் வரலாற்றில் இடம் பெற வேண்டியவை.

 

முக்கியமாக சுந்தரி எழுதிய புத்தகம். இதை நான் ஒரு முக்கியமான பெண்ணிய நூலாகப் பார்க்கிறேன். அவர் பெண்ணியம் பாலினம் என்ற கோட்பாடு சார்ந்த மொழியிலோ, தொனியிலா அதை எழுதவில்லை. ஆனால் ஒரு போரட்ட அனுபவம், ஒரு பொது செயல்பாடு எற்படுத்தும் அரசியலாக்கத்தையும், அப்படிப்பட்ட அரசியலாக்கம் பெண்களுக்கு ஏற்படும் போது அவர்கள் தாங்கள் போராட வேண்டிய பிரச்சனை பற்றிய புரிதல்களோடு நின்று விடுவதில்லை, அவர்கள் பெண்களாக தங்கள் வாழ்வையும், குடும்ப அமைப்பையும், பொது வெளிகளில் இருக்கும் பிற பெண்களைப் பற்றியுமான புரிதல்களை அடைகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

 

நேரிடையாக அவர் குடும்பம் பற்றி பேசவில்லை என்றாலும், இப்படி பொதுவெளிகளில் சென்று இயங்கும் பெண்கள் சந்திக்க வேண்டி இருக்கும் அவதூறுகளை, காவல் துறையின் கடினமான வார்த்தைகளை பதிவு செய்கிறார். பஞ்சாயத்து தற்காலிக வேலையை வேண்டாம் என்று சொல்லி போரட்டத்திற்க்கு போராட்டத்திற்கு போகும் சுந்தரியிடம், சில உறவினர்கள், சில ஊரார் வைக்கும் கேள்வியும், கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்படும் போது அவரிடம் காவல்துறை இழிவாக முன்வைக்கும் கேள்வியும் சாரம்சத்தில் ஒன்றாகவே இருக்கிறது. ”புருசனோடு படுத்தமா வீட்ட பாத்தமான்னு இல்லாம உனக்கு எதுக்கு இந்த போராட்டம்?” என்பது தான் அது.

 

குழந்தைகள் மீது அன்பும் அவர்களை பேண வேண்டிய கடமையில் இருந்து தான் வழுவுகிறோமோ என்ற குற்ற உணர்வை பல இடங்களில் பதிவு செய்யும் சுந்தரி அதற்கான பதிலையும் தனக்கே உரிய முறையில் பதிவு செய்கிறார், “பெண்ணாக பிறந்துவிட்டால் பொதுவாக மக்களின் பிரச்சனைக்கான, சமூகப் பிரச்சனைகளுக்கான போராட்டங்களுக்கு வரவே கூடாதா? சிறைக்கு செல்லவே கூடாதா? சிறையில் இருக்கும் காலத்தில் குழந்தையைப் பராமரிப்பது என்ற பணியைத் தவற விடுவது அவ்வளவு பெறிய குற்றமா?”

 

இது குடும்பத்தை பற்றிய விவாதமல்லாமல் வேறென்ன? குடும்பம் பற்றிய விவாதம் என்பது ஏதோ பத்துப் பதினைந்து மேல்தட்டு பெண்கள் கட்டற்ற பாலியல் விளைவுக்காக பேசப்படும் ஒன்று என்று முற்போக்கு ஆண் அறிவுஜீவிகள் கூட பலசமயம் பேசும் ஒன்றை சுந்தரியின் பதிவுகள் தவிர்க்கின்றன. அதே சமயம் இன்னொரு புறம் ஆண் இலக்கியவாதிகள் குடும்ப அமைப்புக்குள் வாழ்ந்து கொண்டு தங்கள் ஆக்கங்களில் கட்டற்ற பாலியல் விழைவை, அலைதலை, ஏக்கத்தை எழுதி வரும் போது அது பத்தனிமை/பரத்தை என்ற ஆணாதிக்கத்தின் ஆக மோசமான இருமையை கட்டமைக்கிறது என்று பதறுவோர் யாரும் உளரா தெரியவில்லை.

 

இன்னொரு முக்கியமான கூற்றையும் இடிந்தகரை அணு உலை எதிர்ப்புப் போராட்டம் முன்நிறுத்தியது. அது பெண்களின் தலைமை பற்றியதாகும். அணுவுலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர்களாக சு.ப. உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்ட பலர் இருந்தாலும், கட்டுக் கோப்பான மக்கள் திரள் போராட்டத்தின் தலைமை பெண்கள் தான் என்பதை அரசு ஒடுக்கு முறையால் உதயகுமாரையும் புஷ்பராயனையும் கூட படகில் ஏற்றி கடலுக்குள் அனுப்பிவிட்டு காவல்துறையினரின் வெறித் தாக்குதல்களை எதிர் கொண்டமையும், கைதாகி சிறை சென்று சுமார் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தமையும் காட்டுகிறது.

 

சுந்தரி, செல்வி சேவியர் அக்கா இன்னமும் ஏராளமான உழைக்கும் பெண்கள் போரடியது அதனளவில் அவர்கள் ஊரைக் கப்பாற்றும் போராட்டமாக முன்நிறுத்தப்பட்டாலும் அது ஒட்டு மொத்தாமாக அந்த பிரதேசத்தின் பிர அனைத்து மக்களின் நலன்களை பாதுகாக்கும் போராட்டமே. இன்னமும் தமிழகத்தின் பல கிராமங்களின் நிகழ்ந்து வரும் வாழ்வாதார உரிமைக்கான போரட்டங்களிலும் பெண்களின் பங்களிப்பும் முன் முனைப்பும் அமைப்பாவதற்கான மிகப் பெரிய சக்தியாக இருப்பதை களச்செயல்பாட்டாளர்கள் அறிந்தே இருப்பார்கள்.

 

 

சாதி மறுப்பு திருமண எதிர்ப்புக் கொலைகள்

 

இந்தக் கொலைகளுக்கு கௌரவக் கொலை என்ற மோசமான பெயரை ஏற்க எனக்கு ஒப்பவில்லை. அதற்கு ஒரு மாற்றுப் பெயரை உருவாக்குவதிலிருந்து தான் நாம் பெண்ணிய சொல்லாடல்களை கட்டமைக்கும் பணியைச் செய்யவேண்டியிருக்கிறது எனப்படுகிறது.

 

இந்தியாவில் உள்ளவர்களின் சுயம் சாதியால் கட்டமைக்கப்படுகிறது. சாதி ஒரு சாராருக்கு அதீத அதிகாரம் கொண்ட அடிமைப்படுத்தும் சுயத்தை அளிப்பதன் மூலம் மீதியுள்ள சாராருக்கான சுயத்தை மறுக்கிறது. இந்துக்களின் மனசாட்சி சாதியால் வரையருக்கப்பட்ட ஒன்று என்று அண்ணல் அம்பேத்கர் தான் வாழ்நாள் பணிகளூடாக திட்டவட்டமாக நிறுவியிருக்கிறார். உண்மையான ஜனாயகத்தை உருவாக்குவதற்கு ஒரு மக்கள் கூட்டம் நேர்மையான மனசாட்சி கொண்டோராய் கருத்தளவிலாவது இருக்க வேண்டியது முன் நிபந்தனையாகிறது. கருத்தியல் சமர்கள், அரசியல் போராட்டங்கள், களச்செயல்பாடுகள் என இதற்கான பாதை தொடர்ந்து வருகிறது. இதில் தன்னியல்பான மீறல்களும் வரலாற்றில் நிறைந்து கிடக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று சாதி மறுத்த உறவுகள். அகமண முறைக்கும் சாதிக்கும் உள்ள தொடர்களை அம்பேத்கர் மிகத் தெளிவாக முன் வைத்திருக்கிறார். இங்கு நாம் அகமண முறையை உடைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. அகமண முறை என்பது திருமணம் என்ற அர்த்தத்தில் வந்தாலும் அது பெண்ணின் உடல் மீது சமூகம் செலுத்தும் அதிகாரத்தை, சொத்து வாரிசு உரிமை மீது பொருளுடைய ஆண்கள் செலுத்தும் கட்டுப்பாட்டை, இனத் தூய்மை, குலத் தூய்மை சாதித் தூய்மை என சாதியம் பெண்ணுடலின் மீது செலுத்தும் கட்டும் அதிகாரத்தை குறிக்கிறது.

 

தமிழ்செல்வியோ, சுதாவோ, திவ்யாவோ தம்மளவில் காதல் மற்றும் பிடித்தமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் விழைவு ஆகியவற்றால் செய்திருந்தாலும் அவர்களின் காதல்-திருமண செயலானது இம்மூன்று அதிகாரங்களையும் கேள்விக்குள்ளாக்கும் செயலாகிறது. தலித் பெண்களோ அல்லது தலித் ஆண்களை மணக்கும் பிற சமூகப் பெண்களோ இப்படியாக சாதிய எதிர்ப்பு பெண்ணிய செயல்பாட்டாளர் ஆகிறார்கள்.

 

ஆனால் துயரம் என்னெவெனில் இக் கொலைகள் குறித்த விவாதங்கள் பெரும்பாலும் சாதி, இரு குறிப்பிட்ட சாதிகளிடையே உள்ள பகைமை அரசின் தலித் விரோதக் கயமை எனும் அளவிலே முடிவடைந்து விடுவது தான். இத்தகைய நிலைப்பாடுகளும் போராட்டங்களும் கன அளவில் மிகத் தேவை என்பதும் முக்கியமானவை என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் அதைத் தாண்டி கருத்தியல் தளத்திலான கேள்விகளும் தர்க்கங்களும் பொதிந்து நிற்கின்றன. அவற்றை நாம் பாரா முகமாக இருப்பது மீண்டும் invisibility ஐ ஏவி விட்ட ஒடுக்குமுறைக்கு அப்பாற்பட்டவர்களக நம்மை நிறுத்திக் கொள்ளும் போலிச் செயல்பாடாகவே இருக்கும்.

 

பொருளாதார அடிப்படையில் சமூகத்தை ஆய்வு செய்யும் மார்க்சியராக இருந்தாலும், பெண்களின் சுயாதீனத்தை தம் உடல் மீது அவர்க்குள்ள அதிகாரத்தை பேசும் பெண்ணிய வாதிகளாக இருந்தாலும்,

இங்கு அவர்கள் தமது கருத்தியலை கொன்று வீசப்படும் தமிழ்ச்செல்விகளின், இளவரசன்களின்,

அச்சுருத்தல்களுக்கு இடையே அனுதினமும் வாழும் சுதாக்களின்,

சாதிக்கோட்டையின் இருண்ட சிறைக்குள் கயவாளிகளால் அடைக்கப்பட்டுள்ள திவ்யாக்களின் வாழ்க்கைகள் சொல்லும் கூற்றுகளின்

மீது செலுத்தி பரிசோதிக்க வேண்டியவைகளாகிறார்கள்.

 

இன்னொரு புறம், தலித் அமைப்புகளும் சிந்தனையாளர்களும் தலித் பெண்களின் மானம், உயிர் கற்பு அனைத்தையும் காபாற்ற வேண்டியவர்களாக தம்மைத் தாமே நிற்ணயித்துக் கொள்ளவது எந்த ஒடுக்குமுறையின் ஆணி வேரை களைய நினைக்கிறார்களோ, எந்த சமத்துவத்தை அவர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்களோ அதையே மறுதலித்து மீண்டும் பெண்கள் ஆண்களின் உலைமை என்ற சனாதன கருத்தை ஏற்ப்பவர்களாக ஆகிவிடும் என்பதை உணர வேண்டும். தலித் பெண்களின், தலித் பெண்களாக வாழ முற்படும் பிற சாதிப் பெண்களையும் பலியானவைகளாக மட்டும் பாதிக்கப்பட்டவர்களாகவே பார்பபதை நிறுத்தி அவ்ர்களை தமது வழ்க்கையை சுயதீனமாகவாழ முற்படும் பெண்களாக பார்க்க வேண்டிய கருத்தியல் தேவை இருக்கிறது.

 

முக்கியமாக ஒரு பெண் தனது படிப்பு, வேலையைத் தெர்ந்தெடுப்பது, யாரைத் திருமணம் செய்வது அல்லது திருமணம் செய்யாமல் வாழும் உரிமை அகியவை மதிக்க்கப்பட வேண்டும். பெண்களின் இலக்கு திருமனம் மட்டுமே என்பது கீழ்மையான ஆணாதிக்க கருத்தியல் என்பது உரத்து சொல்லப்பட வேண்டும். திருமணம் செய்யாமல் தனித்து வாழும் பெண்களின் வாழ்கைக் கதைகள் எழுதப்பட்டால் திருமணம் எனும் இந்த ஆயிரம் காலத்துப் பயிரின் லட்சணம் தெரியவரும்.

 

இப்படிப் பல போராட்டங்களை சமூக நிகழ்வுகளையும் விழிகளால் அவர்கள் கால் தடத்தில் நின்று பார்த்தால் பல அரசியல் கருத்தியல் புரிதல்கள் கிடைக்கும். பாலினமற்ற சொல்லடல்களை நோக்கிச் செல்வதற்கு நாம் ஒரு பரந்துபட்ட பெண்ணிய சொல்லாடலை / சாதிய சொல்லாடலை கட்ட வேண்டியுள்ளது. அதற்கு முன் நிபந்தனையாக இப்போதுள்ள பாலினம் மறைக்கப்பட்ட, சாதியம் மறைக்கப்பட்ட சொல்லடல்களை தோலுரிக்க வேண்டியிருக்கிறது. ஒற்றைத் தேர்வுகளிலிருந்தும், மாவீரர்களின் மீசை முறுக்கல்களிலிருந்தும், மொசையாக்களின் – கடவுளர்களின் – தொல்லைகளிடமிருந்தும் நாம் விடுபட வேண்டியுள்ளது. வர்க்கப் போராட்டம் பற்றிய இந்தியப் புரிதல் சாதியிலிருந்து துவங்க வேண்டியிருக்கிறது. சாதி எதிர்ப்புப் போரின் புரிதல்கள் பெண்ணுடலில் கட்டமைக்கப்படும் அதிகாரத்தை கட்டுடைப்பதிலிருந்து துவங்க வேண்டியுள்ளது. இவை தனியாக ஒன்றோடு ஒன்று முரண்பட்டு சாதிக்கவல்ல கோரிக்கைகள் அல்ல என்பதை நான் உணர வேண்டியுள்ளது. இதில் சாதியால் பயன்பட்டோர் அதிகமாக உளச் சோதனைகளுக்கு தயாராக வேண்டியுள்ளது. பெண் விடுதலை பெறாமல் சாதியை ஒழிக்க முடியாது என்பதை தலித் இயக்கங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

 

முக்கியமாக பெண்ணிலைவாதிகள் பாலியல் வன்முறை, பாதிக்கப்பட்ட பெண்களை பேணுதல் ஆகிய களங்களில் சீரிய பங்களிப்பை அளித்துள்ளார்கள். சட்டத்தின் பார்வையிலாவது பெண்களும் மனிதர்களே என நிறுவப் பல போராட்ட்ங்களை நடத்தியுள்ளார்கள். அதே போன்ற ஆழமான புரிதலோடு சாதி ஒழிப்புப் போராட்டத்திலும் அது சாலையில் இறங்கிப் போவதாக இருந்தாலும், நாம் வாழும் குடும்பம் – சமூகம் என்ற தனி உலகத்திலும் முன்னெடுக்கவேண்டும். பெண்களின் சுயத்தை முன் வைப்பது என்பது சுய மோகத்தை குறிப்பதல்ல என்பதையும், அது ஒட்டுமொத்த கூட்டுச் சுயமான போரட்ட உணர்வையும், பேணுதலையும், அம்பேத்கர் மிக அழகாக விளக்கும் மைத்ரி – யாவும் யவற்றுடனும் கொள்ளும் அன்பு – மைத்ரியை உணர்வதுதான் சரியான சுயதீனமாக இருக்கும்.

 

இறுதியாக நான் ஏப்ரல் மாதப் பனுவலில் நடைபெற்ற சமூக நீதி நிகழ்வுகளில் கலந்துகொண்ட எழுத்தாளர் தோழர். சிரிதர கணேசன் தனது கட்டுரையில் முன்வைத்த ஒரு பத்தியுடன் முடிக்கிறேன். மிகுந்த மன எழுச்சியையும் உத்வேகத்தையும் எனக்கு அவரது உரை அளித்தது.

 

தலித்தாகப் பிறந்த பெண் கதாபாத்திரங்களை கையாளும் போது, படைப்பு மனம் தடுமற்றம் இல்லாமல் இருக்க வேண்டியக் கட்டாயமும் ஏற்படுகிறது. அதற்காக யாரும் கருணையை எதிர்பார்க்கவில்லை, பெண்கள் படும் துயரத்தை கோபத்தோடு பார்க்கிற போது கருணையும் ஒட்டிக் கொள்ளும். அவர்களின் வீரம் செறிந்த வரலாறும் எழுச்சியும் போராட்டமும் எழுத்தாய் புறப்பட்டு வரும் தூக்கலான செயல்பாட்டோடு தடுமாற்றமின்றி கடைசிவரை களத்தில் நிற்ப்பவர்கள் பெண்கள். அவர்களைக் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. கற்பது, பார்ப்பது, கேட்ப்பதும், நேசிப்பதும் பெண்களால் தான் முடியும். அந்த முகங்களின் விஸ்தாரங்கள் தான் எனது படைப்புகளின் பெண் கதாப்பாத்திரங்கள். அடிக்கு அஞ்சாமல், இறுக்கத்துக்கு பயப்படாமல், ஆழத்தைக் கண்டுப் பின் வாங்காமல் ஓரடி முன்னே போகத் துணிகிற தலித் பெண்களுக்கு இடதுசாரித் தன்மை இருப்பதென்பது ஆச்சரியப்படுகிற விஷயமோ வியப்புக்குரிய செய்தியோ அல்ல. இது தலித் எழுச்சியின் இன்னொரு முகம்.

‘தமிழ் இந்து’வின் விசமத்தனம்

nato warsaw

உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் – 4

தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க  

உக்ரைன் தொடர் நான்காம் பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையத்தை, வழக்கம் போல உண்மைக்கு எதிரான தன்மையிலிருந்து அலசியிருக்கிறது ‘தமிழ் இந்து’ உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்கா ஏன் தலையிட வேண்டும் என்பதற்கு ரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது என்று பதிலளித்திருந்தது ‘தமிழ் இந்து’ இந்த அறுவறுப்பான பொய்யை புரிந்து கொள்ள உக்ரைன் பிரச்சனையை பல கோணங்களிலிருந்து அணுக வேண்டும். அப்போது தான் ‘தமிழ் இந்து’வின் அமெரிக்க அடிவருடித்தனத்தின் உச்சம் விளங்கும்.

 

ஏற்கனவே கூறப்பட்டிருக்கிறது என்றாலும் மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டு கூறிவிடுவது அவசியம். ரஷ்யா ஒரு சோசலிச நாடல்ல, முதலாளித்துவ நாடு தான். புதின் உட்பட அதன் தலைவர்கள் யாவரும் கம்யூனிசத்தை எதிர்க்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் தாம் என்பதை மறந்து விடலாகாது.

 

\\\பிரிந்த நாடுகளை எல்லாம் ஒன்று சேர்ப்பது இப்போதைக்கு நடைமுறை சாத்தியமில்லை. என்றாலும் முடிந்த வரை முயற்சிக்கிறார் புதின். முடிந்தவரை என்றால்? பிரிந்த நாடுகளின் கொஞ்சூண்டு பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கும் வாய்ப்பு உண்டு என்று தெரிந்தாலே அதில் முழு மூச்சுடன் இறங்கிவிடுகிறார்/// இப்படி எழுதியிருப்பதும் ‘தமிழ் இந்து’ தான். அதாவது  சோவியத் யூனியன் பிரிவை ஏற்க முடியாத புதின், பிரிந்து போன நாடுகளை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ள கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விடுவதில்லை. அதனால் அது உக்ரைனை [கிரீமியாவை] அபகரித்துக் கொள்ள, ரஷ்யாவின் அதிகாரம் விரிவடைவதை விரும்பாத, மக்கள் அனைவரும் சம உரிமையுடன் வாழ்வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கும்  அமெரிக்கா ஜனநாயகம் பரவ வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் உக்ரைன் பிரச்சனையில் தலையிடுகிறது. இது தான் ‘தமிழ் இந்து’வின் பார்வை. இது உண்மை தானா?

 

ஒரு தேசிய இனத்துக்கு மொழி அடிப்படையான ஒன்று. உக்ரைனிய மொழி தனி மொழியா? அதை தனி மொழியாக ஏற்காமல் ரஷ்ய மொழியின் வட்டார வழக்கு மொழியாக கருதும் ரஷ்ய தேசியவாதிகள் இன்னும் உண்டு. தமிழ்நாட்டில் சென்னைத் தமிழ் என்றொரு வட்டார வழக்கு உண்டு. தமிழுடன் உருது மொழியை கலந்து பேசிய சென்னை உழைக்கும் மக்களின் மொழியே சென்னைத் தமிழ் என்று வழங்கப்படுகிறது. இது பார்ப்பனியத்தால் இழிவுபடுத்தப்படுகிறது. தென் மாவட்டங்களிலிருந்து முதன்முறையாக சென்னை செல்லும் யாரும் சென்னைத் தமிழை புரிந்து கொள்ள சிரமப்படுவார்கள். இது போல ரஷ்ய மொழியுடன் உக்ரைனுக்கு இன்னொரு பக்கம் இருக்கும் போலிஷ் மொழியை கலந்து பேசப்படுவது தான் உக்ரைனிய மொழி. 1917 புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட சோசலிச அரசு தான் ரஷ்ய வட்டார வழக்கு மொழியாக இருந்த மொழியை தனிமொழியாக அங்கீகரித்து தனி வரிவடிவமும் ஏற்படுத்திக் கொடுத்தது.

 

உக்ரைன் எனும் நாடு வரலாற்றில் எப்போது உருவானது? 1917 புரட்சிக்கு முன்னர் உக்ரைன் என்றொரு நாடு இருக்கவே இல்லை. இன்றைய உக்ரைனின் கிழக்குப் பகுதி ஜார் ரஷ்யாவின் கீழும், மேற்கின் ஒரு பகுதி ஆஸ்திரியாவின் கீழும், இன்னொரு பகுதி ஹங்கேரியின் கீழும் இருந்தன. புரட்சிக்குப் பிறகான சோசலிச அரசு அந்தப் பகுதிகளில் பேசப்படும் ரஷ்ய வட்டார வழக்கு மொழியின் அடிப்படையில் மூன்று பகுதிகளையும் ஒன்றிணைத்து உக்ரைன் எனும் தனி நாடாக ஏற்படுத்தி, அதற்குறிய அந்தஸ்துடனும், தனி மொழியுடன் கூடிய தேசிய இனமாகவும் அங்கீகரித்தது. உக்ரைன் எனும் சொல்லுக்கு எல்லைப்புற நாடு என்பது பொருள்.

 

1991 ல் உக்ரைன் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடான பிறகு சில ஆட்சிக் கலைப்புகளைக் கண்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட மேற்குலக ஆதரவுடன் நடந்த கலகத்தில் அமெரிக்க ஆதரவாளரான டிமோசென்கோ பிரதமராக்கப்பட்டார். இது வரையில் உக்ரைனில் நடந்த எந்த குழப்பத்திலும் ரஷ்யா தலையிடவே இல்லை. சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க கிடைக்க எந்த வாய்ப்பையும் ரஷ்யா தவற விடுவதில்லை என ‘தமிழ் இந்து’ எழுதியிருப்பது உண்மையானால் இந்த நிகழ்வுகளிலெல்லாம் ஏன் ரஷ்யா வாய்ப்பை தவற விட்டது?

 

உண்மையில், டிமோசென்கோ பிரதமரான பிறகு தான் பிரச்சனைகள் தொடங்குகின்றன. அமெரிக்க ஆதரவாளரான டிமோசென்கோவுடன் அமெரிக்க இராணுவ தளத்தை கிரீமியாவில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்குகிறது அமெரிக்கா. இதை ரஷ்யா விரும்பவில்லை. இந்த இடத்தில் முக்கியமான இன்னொரு ‘பிளாஷ் பேக்’கை பார்த்து விடுவது பொருத்தமானது.

 

இரண்டாம் உலகப்போர் காலத்தில் அச்சு நாடுகள், நேச நாடுகள் என்று உலகம் இரண்டாக பிரிந்திருந்தது. இது போலவே அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போர் காலகட்டத்திலும் நோட்டோ நாடுகள், வார்ஷா நாடுகள் எனப் பிரிந்திருந்தன. நோட்டோவை அமெரிக்காவும், வார்ஷாவை சோவியத் யூனியனும் வழிநடத்தின. இதன்படி அந்தந்த நாடுகளைக் காக்கும் பொருட்டு நோட்டோ நாடுகளில் அமெரிக்காவும், வார்ஷா நாடுகளில் சோவியத் யூனியனும் தங்கள் இராணுவங்களை நிறுத்தியிருந்தன. சோவியத் யூனியனின் கடைசி அதிபர் கோர்ப்பச்சேவும் அமெரிக்க அதிபர் ரீகனும் செய்து கொண்ட ‘சுய ஆயுதக் களைவு’ ஒப்பந்தத்தின் படி வார்ஷா நாடுகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தை சோவியத் யூனியன் விலக்கிக் கொண்டது. மட்டுமல்லாது அணு ஆயுதங்களை யூரல் மலைகளுக்கு அப்பால் நகர்த்தியது. முறைப்படி வார்ஷா கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா எப்படி நடந்து கொண்டது? நோட்டோ கலைக்கப்படவில்லை, நோட்டோ நாடுகளில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இரானுவம் சில நாடுகளிலிருந்து விலகினாலும் பல நாடுகளில் தொடர்ந்து இருந்து வருகிறது, மட்டுமல்லாது, முன்னாள் வார்ஷா நாடுகளான போலந்து, ஸெகோஸ்லாவாக்கியா, ருமேனியா போன்ற நாடுகளையும் நோட்டோவில் சேர்த்துக் கொண்டு இராணுவ தளங்களை நிறுவி வருகிறது. இதுமட்டுமின்றி முன்னாள் சோவியத் குடியரசுகளான எஸ்டோனியா, லாட்வியா போன்ற நாடுகளையும் இணைத்துக் கொண்டு அந்த நாடுகளில் அணு ஆயுதங்களைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா. இதன் தொடர்ச்சியாகத் தான் கிரீமியாவில் இராணுவ தளம் அமைக்கும் அமெரிக்காவின் முயற்சிகளை பார்க்க வேண்டும்.

 

அமெரிக்காவின் இந்த அத்துமீறல்களை விரும்பாத ரஷ்யா தனது காலடி வரை வந்து விட்ட அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கைகளை தொடங்கியது. முதல்கட்டமாக உக்ரைனுக்கு வழங்கிவந்த எரிவாயுவின் விலையை உயர்த்தியது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் குளிர் பிரதேச நாடுகள் என்பதால் கணப்பு அடுப்புகள் இல்லாமல் இருக்க முடியாது. கணப்பு அடுப்புகளில் பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கு ரஷ்யாவையே பெரிதும் சார்ந்திருக்கின்றன மேற்கு ஐரோப்பிய நாடுகள். இந்த எரிவாயுவை முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு மானிய விலையில் வழங்கி வந்தது ரஷ்யா. அப்படி மானிய விலையில் எரிவாயு பெற்று வந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. இந்த மானியத்தை ரத்து செய்த ரஷ்யா உக்ரைனும் சர்வதேச அளவில் விற்கும் சந்தை விலையையே உக்ரைனும் தர வேண்டும் என்று வற்புறுத்தியது. இதனால் பிரதமர் டிமோசென்கோ அமெரிக்க உதவியை நாட அமெரிக்கா ஐரோபிய யூனியனைக் கைகாட்டியது. இந்த நெருக்கடி முற்றியதோடு ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் சேர்ந்து கொள்ள, அடுத்து வந்த தேர்தலில் ரஷ்ய ஆதரவு பெற்ற யனுகோவிச் மீண்டும் வெற்றி பெற்றார்.

 

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது என்று எற்கனவே இருந்த டிமோசென்கோ அரசு எடுத்திருந்த முடிவின்படி ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளை ரஷ்ய ஆதரவு யனுகோவிச் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். இதனால் உலக நியதிப்படி[!] கலகக்காரர்களால் கலகம் மூண்டு யனுகோவிச் தூக்கி வீசப்பட்டார். இது தான் உக்ரைன் பிரச்சனையின் மையம்.

 

இப்போது ‘தமிழ் இந்து’ எழுதியிருப்பதோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எவ்வளவு வன்மத்தோடும், எவ்வளவு விசமத்தனத்தோடும் அந்தத் தொடர் எழுதப்பட்டிருக்கிறது என்பது புரியும். ஏன் இப்படி எழுத வேண்டும்? வேறென்ன கம்யூனிச எதிர்ப்பு மனோபாவம் தான் காரணம். ரஷ்யா சீனா போன்றவை சோசலிச நாடுகள் அல்ல என்றபோதிலும் தங்களது கம்யூனிச எதிர்ப்பை தீர்த்துக் கொள்ள ரஷ்யா சீனாவை கம்யூனிசத்தின் குறியீடாக பாவிக்கின்றன. அதனால் தான் இது போன்ற அபத்தங்களை கூசாமல் அவிழ்த்து விடுகின்றன. தனக்கு உகந்த முறையில் மட்டுமே உலகம் இயங்க வேண்டும் என்று கருதிக் கொண்டு எந்த நியதிக்கும் உட்படாமல் அடாவடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவை வெட்கமின்றி தாங்கிப் பிடிக்கும் ‘தமிழ் இந்து’ வேறு என்ன தான் செய்யாது?

 

உக்ரைன் பிரச்சனையின் வேறு சில விளைவுகளை அடுத்த தொடரில் பார்ப்போம்.

இத் தொடரின் முந்திய பகுதி

1. உக்ரைன் உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’

2.  பொய் சொல்லக்கூட தெரியாத தமிழ் இந்து நாளிதழ்

3. தமிழ் இந்துவின் அமெரிக்க ஆவர்த்தனம்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

எவனடா புலியைக் காப்பது?

merku2

அடுத்த பசுமை வேட்டை – கிரீன் ஹண்ட் – தமிழ் நாட்டிலா?

நாட்டின் பல்வேறு இடங்களில் புலிகள் காப்பகம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வனங்களைக் காப்பது, வன விலங்குகளைக் காப்பது என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திட்டங்கள் பலவாக இருந்தாலும், செயல்படுத்தப்படும் இடங்கள் பலவாக இருந்தாலும் அனைத்திலும் பாதிக்கப்படுவது அங்கு வாழும் பழங்குடியின மலைவாழ் மக்களே. தெளிவாகச் சொன்னால் வனம், காடுகள் மலைகள் தொடர்பாக தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தும் அங்கு கிடைக்கும் மரம் உள்ளிட்ட வனச் செல்வங்களையும், கனிம வளங்களையும் பெரு முதலாளிகள் சூறையாடுவதற்காகவே கொண்டுவரப்படுகின்றன.

 

அருவிகள், ஆற்றோர தரிப்பிடங்கள் போன்றவற்றில் உல்லாச விடுதிகளை கட்டுவதற்கும், அதற்கான சாலைகள் அமைப்பதற்கும் வனங்களை குறுக்கும் நெடுக்குமாக பிளந்து போடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படும் வன விலங்குகள் மலை கிராமங்களுக்குள் புகுந்து மக்களையும் விளை நிலங்களையும் தாக்கி சேதப்படுத்துகின்றன.

 

வங்களில், மலைகளில் கிடைக்கும் கனிம வளங்களைக் கொள்ளையிடுவதற்காக அங்கு வாழும் மக்களை இரக்கமே இல்லாமல் துடைத்தழிக்கிறார்கள். இதை எதிர்த்துப் போராடுவதால் தான் மலை வாழ் மக்களை மாவோயிஸ்டுகள் என்று சொல்லி அவர்களை அழிப்பதற்காக பசுமை வேட்டை நடத்தப்படுகிறது.

 

அண்மையில் ஆந்திராவில் செம்மரங்களை கடத்தி கோடிகளில் புரள்பவர்களுக்கு சலாம் போட்டு, அப்பாவி உழைக்கும் மக்கள் இருபது பேரை சுட்டுக் கொன்றார்கள்.  பல்லாயிரம் ஆண்டுகளாக அந்த வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாத்து வந்த பழங்குடியின மலைவாழ் மக்களை துரத்தியடிப்பதை நோக்கமாகக் கொண்டு தான் வனங்களைக் காப்பது, வன விலங்குகளைக் காப்பது என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

 

அவ்வாறான திட்டங்களில் ஒன்று தான் திடீரென அறிவிக்கப்பட்ட குமரி மாவட்ட புலிகள் வனச் சரணாலயம். இது களியல், குலசேகரம், வேளிமலை, அழகியபாண்டியபுரம், கடையல், பேச்சிப்பாறை, பொன்மனை, சுருளோடு, தடிக்காரன்கோணம் ஆகிய வனப்பகுதிகளை உள்ளடக்கியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திற்பரப்பு அருவி இந்தப் பகுதிக்குள் அடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதிக்களுக்குள் காணி என்றழைக்கப்படும் பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். புலிகள் காப்பகம் அமைப்பதற்காக இவர்களிடம் எந்தக் கருத்துக் கேட்பும் நடத்தவில்லை யாரும்.

 

இவர்களை அப்புறப்படுத்துவதற்கு அவர்களை பார்ப்பன நீரோட்டத்தில் இணைப்பதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. மறுபுறம் காட்டு விலங்குகளை வேட்டையாடி கொன்று தின்று விட்டு அந்தப்பழியை காணி இன மக்கள் மீது சுமத்தி வழக்குப் போட்டு கைது செய்து அச்சுறுத்தி இடம்பெயர்ந்து செல்லுமாறு நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்து வரும் இடத்தை விட்டு அவர்கள் எங்கு செல்வார்கள்? வனங்களை, வன விலங்குகளை பாதுகாப்பதையும் தங்கள் வாழ்வையும் பிரிக்க முடியாதபடி இயைந்திருக்கும் அந்த மக்களை விரட்டி விட்டு கொள்ளையர்களுக்கு வழி திறந்துவிடும் இந்த அரசை என்ன செய்வது?

 

அந்தக் காணி இனமக்கள் தங்களை விழிப்பூட்டிக் கொள்ளவும், ஒன்றிணையவும் பாடும் பாடல் ஒன்றிருக்கிறது. தங்கள் நம்பிக்கைகளையும், யதார்த்தத்தையும் எளிய சொற்களில் தெறித்தாற்போல் கூறும் இந்தப் பாடல் நிச்சயம் உங்களை ஈர்க்கும். அவர்களோடு இணைந்து, உளுத்துப் போன இந்த அரசை உலுக்கிப் போடுவது நம்முடைய கடமை,

 

[இந்த பாடலை தந்தவர் திரைப்பட நடிகர், பாடலாசிரியர் என்.டி. ராஜ்குமார்]

 

மலையரசன் கோட்டைக்குள்ள

மதவாதக் கூட்டம் வந்து

ஏதேதோ சொல்லுறானே மலையம்மா – எங்களை

குத்தம் செய்யத் தூண்டுறானே மலையம்மா .. .. .. மலையரசன்

 

மலவாகக் காட்டாளன் காலாட்டுப் பேயெல்லாம்

ஆடும் குலம் எங்க குலம் மலையம்மா

இங்கு ஏதேதோ சாமியின்னு

என்னென்னமோ பேச அந்த

கள்ளத்தனம் புரியுதே மலையம்மா – நம்ம

காணிகுலம் வீணாப் போகுது மலையம்மா .. .. .. மலையரசன்

 

தெங்கு நட்டோம் கமுகு நட்டோம்

சின்னச் சின்ன தோட்டமிட்டோம்

பாரஸ்டுகாரனப் போல் மலையம்மா அந்த

தெம்மாடிப் பாட்டக்காரன்

கண்டிருந்து தட்டிப் பறிச்சான்

குடும்பமும் அடகு போகுது மலையம்மா

எங்களோட கும்பி காந்துது மலையம்மா .. .. .. மலையரசன்

 

புலிகள் சரணாலம் கொண்டுவர வேணுமுண்டு

பண்ணிகள எருமகள வேட்டையாடி திண்ணுறான்

யானைகள கொண்ணுபுட்டு

தந்தங்கள திருடிப்புட்டு

எங்க மேல பழிய தூக்கிப் போடுறானே அவனே

எப்படி புலியக் காக்கப்போறான் மலையம்மா

 

மலையரசன் கோட்டைக்குள்ள

மதவாதக் கூட்டம் வந்து

ஏதேதோ சொல்லுறானே மலையம்மா – எங்களை

குத்தம் செய்யத் தூண்டுறானே மலையம்மா

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

மக்களின் சமாதியே நீதிமன்றங்கள்

jaya-acquited-cartoon

மண்சோறு, தீமிதி, அலகு குத்தல் காட்சிகள் எவ்வளவு ஆபாசமாக இருந்ததோ, அதைவிட பலமடங்கு ஆபாசமாக இருக்கிறது இன்றைய ஜெயா விடுதலைக்கு பின்னான நீதி வென்றது என்பன போன்ற அலட்டல்கள். இது போன்றே முடிச்சுகள் அவிழ்ந்து விட்டனவா? வாங்கப்பட்ட தீர்ப்பு, கருப்பு நாள் போன்றவையும் ஆபாசமாகவே தெரிகின்றன. இன்று மகிழ்ச்சியில் கூத்தாடும், அல்லது கூத்தாடுவது போல் நடித்துக் கொண்டிருக்கும் அனைவருக்குமே தெரியும் ஜெயா ஊழல் குற்றவாளிதான் என்பது. ஜெயா கும்பலும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிக்க செய்த முயற்சிகளும், குன்ஹா தீர்ப்பின் பிறகு நான் வயது முதிர்ந்தவராக, நோய்வாய்ப்பட்டவராக இருப்பதினால் தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜெயா மேல்முறையீட்டு மனுவில் கூறியதுமே இதற்கான ஆதாரங்கள். பின் குமாரசாமியின் இந்த தீர்ப்பில் வெளிப்படுவது என்ன?

 

சட்டம் என்றால் என்ன? நீதி என்பது எத்தன்மை கொண்டது? நீதி மன்றங்கள் யாருக்கானவை? என்பனவற்றை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துவதே இந்தத் தீர்ப்பு. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று பொதுவாகச் சொல்வார்கள். சட்டத்தின் கடமை என்ன எனும் கேள்வி யாருக்கும் எழாது. பெருமுதலாளிகளையும் அவர்களின் சொத்தையும், ஆளும் வர்க்கத்தினரையும் அவர்களின் அதிகாரங்களையும் பாதுகாப்பது தான் சட்டத்தின் கடமை. மக்களைக் காப்பதற்காக அது ஒருபோதும் முன்னின்றதில்லை.

 

கீழ்வெண்மணி, கயர்லாஞ்சி வேதனைகளின் போது இந்த நீதி மன்றங்கள் கூறிய தீர்ப்பு நினைவில் இருக்கிறதா? உயர்ஜாதியை சேர்ந்தவர்கள் இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்று தீர்ப்பு கூறியது. அப்சல்குரு விவகாரத்தில் வந்த தீர்ப்பு நினைவிருக்கிறதா? எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் தேசத்தின் மனசாட்சியை காப்பதற்காக மரண தண்டனை விதிக்கிறோம் என்று தீர்ப்பு கூறியது. கடந்த வாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எடுத்துப்பார்க்கலாமா? ஹாஸிம்புரா, மலியானா கிராமங்களில் நடந்த படுகொலைகளை அரசுத்தரப்பு நிரூபிக்கவில்லை, ஆதாரமில்லை என்று தள்ளுபடி செய்து குற்றவாளிகளை விடுவித்திருக்கிறது. சல்மான்கான் பணக்கொழுப்பெடுத்து குடித்துக் காரோட்டி ஒருவரை கொன்று பலரை படுகாயமாக்கிய பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த வழக்கில் சிறைக்குச் செல்லாமலேயே இரண்டே நாளில் ஜாமீன் வழங்கியது. சத்யம் ராஜுவுக்கு ஜாமீன். அத்தனையிலும் வெளிப்படுவது என்ன? மக்கள் எங்கள் மயிருக்கு சமானம் என்பது தான் நீதிமன்றங்கள் சொல்லும் செய்தி.

 

இந்தச் செய்தியிலிருந்து மக்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? நீதிமன்றங்களையும் அதன் தீர்ப்புகளையும் யார் மதித்து நடந்திருக்கிறார்கள்? யார் குப்பைக் கூடையில் வீசி எறிந்திருக்கிறார்கள்? காவிரி முல்லைப் பெரியாறுகளில் வழங்கிய நீதி மன்ற தீர்ப்புகள் என்னானது? ஆளும் அதிகாரவர்க்கங்கள் தமக்கெதிரான தீர்ப்புகளை எங்கேனும் செயல்படுத்தி இருக்கிறதா? காலங்களை புறட்டிப் பார்த்தால் ஆயிரமாயிரம் சான்றுகள் உறைந்து கிடக்கின்றன.

 

யாரை பாதுகாப்பதை தன்னுடைய கடமையாக கொண்டுள்ளதோ அவர்களுக்கு எதிராக தவிரக்க முடியாத பொழுதுகளில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பைக்கூட கழிப்பறை காகிதமாகத்தான் அந்த ஆளும் அதிகார வர்க்கங்கள் பயன்படுத்துகின்றன. நாமோ இரண்டு நாள் பேசிவிட்டு களைத்துப் போய் மறந்து விடுகிறோம்.

 

மக்கள் நீதி மன்றங்களின் மீது வைத்திருக்கும் மூடநம்பிக்கையை குலைத்து விடக்கூடாது என்பதற்காகக் கூட சில நேரங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. அப்படியான தீர்ப்புகளும் கூட லல்லூ போன்றவர்களைத்தான் குறிவைக்குமேயன்றி ஜெயா போன்றவர்களை நெருங்காது. அது அரசு எந்திரங்களின் உயிர்நாடியாக இருக்கும் பார்ப்பனிய பாசம். கீழ்வெண்மணி, கயர்லாஞ்சி தீர்ப்புகளில் வழியும் கொழுப்பை உற்று நோக்குங்கள், அதில் தெரிவது தான் பார்ப்பனிய பாசம்.

 

எனவே, இங்கு நாம் பேச வேண்டியது ஜெயா கும்பல் தமிழகத்தை கொள்ளையடித்ததா இல்லையா? என்பது குறித்தல்ல. அது அடிமைகள் கழக தொண்டர்களுக்கும் கூட நன்கு தெரிந்த ஒன்றுதான். தீர்ப்பில் என்ன சட்ட நுணுக்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பன குறித்தும் அல்ல. சட்டத்தின் சந்து பொந்துகள் எங்கெல்லாம் சென்று திரும்பும் என்பது உப்புமா நீதிமன்றங்களின் தேங்காய் மூடி வழக்குறைஞர்களுக்குக் கூட தெரியும். நாம் பேச வேண்டிய விசயம் ஒன்றே ஒன்றுதான். சட்டம் நமக்கானதாக இல்லை எனும் போது அதற்கெதிராக நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது தான். பதில் மிக எளிமையானது,

நம்மை மதிக்காத சட்டத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும்?

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்! மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

may day

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

 

இந்த ஆண்டின் மே நாள் மிகவும்முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கடமையை உழைக்கும் வர்க்கத்தின் முன்வைக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்துக்கு சவால் விட்டு, தனது சொந்த அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான போராட்டங்களைத் தொடுக்குமாறு கோருகிறது.

 

ஆம், நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டுமானங்கள் அனைத்தும் தீராத, மீளமுடியாத, நிரந்தரமான, மிக மிக அசாதாரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் கட்டுமான உருப்புகள் அனைத்தும், அவற்றுக்கு உரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, திவாலாகி, தோற்றுப் போய், எதிர்நிலை சக்திகளாக [Bankrupted, Failed, Collapsed and Opposite force] மாறிவிட்டன. அவை மேலும் முன்னோக்கி நகர முடியாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகி, சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டன. ஒட்டுமொத்தக் கட்டமைப்பும், நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத சுமையாகிப் போய்விட்டன. அவற்றை இனியும் நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்? இது தான் இப்போது நாட்டு மக்கள் எதிர்கொள்லும் கேள்வியாகும்.

 

மத்தியில் பிரதமர், மாநிலத்தில் முதலமைச்சர், மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மாநிலத் தலைமை போலீசு அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினராகிய உயர் பதவி வகிப்பவர்களே கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அல்லது நியமிக்கப்படுகிறார்கள். இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட இந்தக் கிரிமினல் குற்றவாளிகளிடமே இரகசிய ஆவணங்களையும், அதிகாரத்தையும் கொடுத்து நாட்டை ஆளும் நிலை நிலவுகிறது.

 

உளவுத்துறை, போலீசு, நீதிமன்றங்கள் ஆகிய குற்றத்தடுப்பு அரசு அதிகார அமைப்புகளை இந்த கிரிமினல் குற்றவாளிகளே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். நாட்டின் குடிமக்கள் அனைவரது வாக்ஷ்ழ்க்கையிலும் தலையிட்டு ஒடுக்குவதாக, எங்கும் நீக்கமற நிறைந்து வரைமுறையற்ற அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துவதாக அரசு நிர்வாக அமைப்புகள், குறிப்பாக அவற்றின் அடக்குமுறை நிறுவனங்கள் உள்ளன. இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள், அதிகார வர்க்க அமைப்புகள் கிரிமினல் குற்றமிழைத்தால் அவர்களைத் தண்டிப்பதற்கு உச்சநீதிமன்றமே அஞ்சுகிறது. நீதிபதிகளோ பாலியல் கிரிமினல் குற்றவாளிகளாக, ஊழல் கிரிமினல் கும்பல்களின் எடுபிடிகளாக, நீதியே விற்பனைச் சரக்காக என்று நிர்வாணமாகி நிற்கிறது நீதித்துறை.

 

எங்கும் எதிலும் சட்டவிதிகள், நீதியின் படியான அரசு நிர்வாகம் கிடையாது. சட்டவிதிகளும் நீதியும் மக்களுக்கு எதிரானவையாக உள்ளன. அரசு நிர்வாகம் முழுவதிலும் லஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகள் நிரம்பி வழிகின்றன. அரசுஅமைப்புகள் முழுவதும் கிரிமினல்மயமானதாகி விட்டது. கிரிமினல் குற்றக் கும்பல்கள் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு சிவில் சமூகத்தின் மீது ஏறி மிதித்து முற்று முழுதான ஆதிக்கம் செலுத்துகிறது.

 

நாட்டின் பொருளாதாரமோ ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளாக உற்பத்திப் பின்னடைவு, தேக்கவீக்க்கம், அன்னியச் செலவாணி பற்றாக்குறை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி என்று மீளமுடியாத கடும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டது. அனைவருக்கும் கல்வி, குழந்தை உழைப்பு ஒழிப்பு, அடிப்படை பொதுச் சுகாதாரம், மருத்துவம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு ஆகியவை எல்லாம் கானல் நீராகவே உள்ளன. இவை இன்று கார்ப்பரேட் கொள்ளக் கும்பல்களின் மற்றும் கிரிமினல் குற்றக் கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டன. கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக விவசாயிகள், மீனவர்கள் பழங்குடி மக்கள், நெசவாளிகள், கைவினைஞர்கள், சிறு வர்த்தகர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. காடுகள், மலைகள், கடல், நிலம் நீர்நிலைகள், ஆகாயம் ஆகிய எல்லா வளங்களும் நாட்டின் பொருளுற்பத்திக்கு பயன்படுவதை விட பன்னாட்டு, உள்நாட்டு ஏகபோகங்களின் கொள்ளையின் பொருட்டு சூறையாடப்படுகின்றன. உழைக்கும் மக்களோ கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றப்படுகிறார்கள்.

 

ஒடுக்கப்படும் சாதியினர், மதச் சிறுபான்மையினர், பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள், வன்கொடுமைப் படுகொலைகள் கொஞ்சமும் சகிக்கமுடியாதவையாகி, கட்டுப்படுத்த முடியாதவையாகி, அநாகரீகத்தின் உச்ச நிலையை எட்டி விட்டன. நாட்டின் சமூகப் பண்பாட்டு விழுமியங்கள், அமைப்புக் கட்டுமானங்கள் முழுவதும் நொறுங்கி விழும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு விட்டன. சாதிவெறி, மதவெறி, பாலியல் தாக்குதல்கள் காரணமாக மக்கள் தொகையில் முக்கால் பங்குக்கும் மேலானவர்கள் வாழத் தகுதியற்றதாக நாடு மாறி விட்டது. ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச் சிறுபான்மையினர் மீது பார்ப்பன பாசிச பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரீகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் என்று நாடே தலை குனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன. சாதி மதவெறி அமைப்புகள் பார்ப்பன பாசிசத்தின் தலைமியிலான இணை அதிகார மையங்களாக வளர்ந்து வருகின்றன.

 

ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு, மேலும் விரிவாக ஆய்வு செய்தால், நாட்டின் ஒட்டு மொத்த சமூக, அரசியல், பண்பாட்டு கட்டமைப்பு முழுவதும் தீராத நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளதை எவரும் எளிதில் காண முடியும். ஆளும் வர்க்கங்களும், அரசும், ஆட்சியாளர்களும் இவை எவற்றையும் தீர்க்க முடியாமல் தணறுவதையும் சிக்கித் தவிப்பதையும் காண முடியும். அவர்களின் கையாலாகாத் தனத்தையும், தோல்வியையுமே இவை காட்டுகின்றன.

 

இந்தக் கட்டமைப்பைத் தாங்கிப்பிடிக்கின்ற, மக்களிடம் நியாயப்படுத்தி அங்கீகாரம் பெற்றுத் தந்து வந்த சித்தாந்தங்களும், அரசியல் கொள்கைகளும், பண்பாட்டு நெறிமுறைகளும், நீதிநெறிமுறைகளும், அரசியல் சட்டங்களும், விதிமுறைகளும், ஒழுங்கு முறைகளும் கூட திவாலாகி தோற்றுப் போய்விட்டன என்பதையும், சித்தாந்த, பண்பாட்டு, அரசியல், ஆயுதங்கள், கருவிகள் எல்லாவற்றையும் பிரயோகித்துப் பார்த்தும் நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் நாடு மென்மேலும் நெருக்கடி எனும் கருந்துளைக்குள்[Black hole] போய்க் கொண்டிருக்கும் பரிதாப நிலையையுமே இவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

 

இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும் ஆயுதங்கள், கருவிகள் எதுவுமின்றி நிற்கின்ற ஆளும் வர்க்கங்களும் அதன் பல்துறை வல்லுனர்களும், சித்தாந்தவாதிகளும், அரசியல்வாதிகளும் இனி ஆளத் தகுதியற்றவர்களாக, நிர்வாகம் நடத்த வக்கற்றவர்களாக, சித்தாந்த அரசியல் ஒட்டாண்டிகளாக ஆகிவிட்டனர் என்பதையும், ஆள்வதற்கு மக்களிடமிருந்து பெற்ற நியாய்வுரிமைகளை அவர்கள் தக்கவைக்க முடியாமல் முற்றிலும் அம்பலமாகி நிற்கிறார்கள் என்பதையும் தான் இது தெளிவாகப்படம் பிடித்துக் காட்டுகிறது.

 

இவை அனைத்தும் கூறுகின்ற செய்தி இது தான். நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஓர் உச்சநிலையை எட்டி விட்டன. அரசும், ஆளும் வர்க்கங்களுமாளும் தகுதியை இழந்து விட்டன.இனித் தனித்தனிச் சிக்கல்களுக்கு தனித்தனி தீர்வுகளும் கோரிக்கைகளும் முழக்கங்களும் முன்வைத்து தனித் தனி இயக்கங்கள் நடத்தி தீர்வு காண முடியாது. இந்தக் கட்டுமானங்கள் எவையொன்றையும் சீர்திருத்தவும் முடியாது.

 

நமது பிரச்சனைக்கான தீர்வுகள் தற்போதைய அரசியல் கட்டமைப்புக்கு வெளியே தான் உள்ளன!

அரசு மற்றும் ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தை தட்டிக் கேட்க வேண்டும்!

அவர்களின் அதிகாரத்துக்கு சவால்விட வேண்டும்!

தங்களுக்கான அதிகார அமைப்புகளை மக்களே தாமே கட்டியெழுப்ப வேண்டும்!

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: